மழை இலவசம்

rain

இன்று கடைத்தெரு பக்கம் போகிறபோது

மழை விற்றுக் கொண்டிருந்தது தெரு…

வாங்க மனசில்லாத பலர்

குடை கொண்டு போனார்கள்!

தெருவின் இருபுறத்திலும்

ஈரச் சாக்கின்மேல்

பரப்பி வைத்துக்

குளித்த காய்கறிகள் மேல்

குடை பிடித்துக்கொண்டிருந்தார்கள்;

விற்றுத்தீருமா எனும்

விசனம்  முகங்களில்…

பத்து ரூபாய் கொடுத்துக்

கொத்துமல்லி வாங்கிய எனக்கு

கை நிறைய கறிவேப்பிலை தந்தார்

வயதான மூதாட்டி.

வாங்கி திரும்புகையில்

என்னை

இருத்தி நிறுத்தியது இன்னொரு குரல்…

“ரெண்டு ரூபாய்க்கு கொத்துமல்லி கறிவேப்பிலை

குடும்மா… கறிக் கொழம்பு வைக்கணும்…”

“ரெண்டு ரூபாய்க்கு வராதும்மா…”

சட்டென்று முகம் சுருங்கித் திரும்பிய பெண்மணியின்

கெஞ்சிய குரல்

நாறும் குப்பையாய் நடுத்தெருவில் கிடக்க

சோ வென்று பெய்ய ஆரம்பித்தது மழை!

இலவசமாக விற்கிற இயற்கைக்கு முன்

மனிதர்கள்

தோற்றுத்தான் போகிறார்கள்!

நா.வே.அருள்

kothumalli

Image courtesy:

http://samaiyalattakaasam.blogspot.in/