22 இன் 1 – அசத்துது அவகடோ!

OLYMPUS DIGITAL CAMERA

மதுமிதா

ganze und halbe avocado isoliert auf weiss

பட்டர் ஃப்ரூட் என்றும் அறியப்படும் அவகடோ பழத்தின் சாறு, தொண்டையில் இறங்கும் போது வெண்ணெய் இறங்குவது போல இதம் தரும். அதனால் இதை வெண்ணெய் பழம் என்றும் கூறுவதுண்டு. பழம் கனிந்ததும் சாலட், ஜூஸ் செய்யலாம் என்பதைப் போல, காயாக இருக்கும்போதும் சமையலில் பயன்படுத்தலாம். மாங்காய் அல்லது குடைமிளகாய் போன்று தனித்த சுவையோ, மணமோ இதற்குக் கிடையாது. எனினும், இதன் சுவை அலாதியானது. பச்சை வண்ண சதைப் பகுதி மருத்துவ குணமுடையது. வெளிநாட்டிலிருந்து வந்த காய் என்பதாலும் பழமாக மட்டுமே பயன்படுத்தி வந்ததாலும் ஜூஸ், சாலடுக்கு மட்டுமே விதவிதமாகப் பயன்படுத்தினர். நம் சமையல் முறைப்படி பொரியல், சாம்பார், சாதமாகவும் முயற்சிக்கலாம்.

அவகடோ ஜூஸ்

அவகடோ பழத்தின் கனிந்த சதையை ஸ்பூனால் எடுத்து, மிக்ஸியில் தேவையான சர்க்கரை சேர்த்து, அரைத்து, நீர் கலந்து ஜூஸாக அருந்தலாம்.

அவகடோ மில்க் ஷேக்

Avocado milk shake

அவகடோ பழத்தின் கனிந்த சதையை ஸ்பூனால் எடுத்து, மிக்ஸியில் தேவையான சர்க்கரை சேர்த்து, அரைத்து, காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து மில்க் ஷேக் ஆகப் பருகலாம்.

அவகடோ சாலட்

Avocado Salad 1

கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, எலுமிச்சை பிழிந்து, உப்பு சேர்த்து, கொத்தமல்லி இலையை பொடியாக வெட்டிச் சேர்த்தால், சாலட் ரெடி.

பழத்தின் சதைப் பகுதியை எடுத்ததுமே, எலுமிச்சைச்சாறை சேர்த்துவிட்டால், நிறம் மாறாமல் இருக்கும்.

2வது முறை: கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, பொடியாக நறுக்கிய தக்காளியும் உப்பும் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சாலட்டாக உபயோகிக்கலாம். கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி, அதிக அளவில் சதைப் பகுதி எவ்வளவு எடுத்திருக்கிறோமோ அதே அளவுக்கு சேர்க்க வேண்டும்.

Avocado Salad 2

3வது முறை: 2வது முறைப்படி செய்த பின், அதோடு, துருவிய கேரட், வெள்ளரிக்காய் எனத் தனித்தனியாக சேர்க்கலாம்.

4வது முறை: காயைத் தோல் சீவி, துருவி எடுத்துக்கொண்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும். இதனுடன் துருவிய கேரட், வெள்ளரிக்காய் எனத் தனித்தனியாக சேர்க்கலாம். உப்பு சேர்த்து பரிமாறவும்.

அவகடோ தயிர் பச்சடி

Avocado thayir pachadi

காயைத் தோல் சீவி துருவி எடுத்துக்கொண்டு, அதனுடன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும். தயிரில் உப்பு சேர்த்து மேலே குறிப்பிட்ட கலவையையும் சேர்த்து பரிமாறலாம்.

அவகடோ ரைத்தா

Avocado Raitha

கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து இந்தக் கலவையை தயிரில் உப்பு கலந்து சேர்க்கலாம்.

2வது முறை: கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து இந்தக் கலவையை தயிரில் உப்பு கலந்து சேர்க்கவும். இதனுடன் துருவிய கேரட், வெள்ளரிக்காய் எனத் தனித்தனியாகவும் சேர்க்கலாம். தக்காளி அல்லது எலுமிச்சைச்சாறு தேவையெனில் சிறிது சேர்க்கலாம்.

அவகடோ மசால்

Aalu avacado masal

உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அவகடோ காயை தோல் சீவி, கொட்டை நீக்கி, ஒரு இஞ்ச் அளவில் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். அந்த வதக்கிய கலவையுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து, மஞ்சள் தூள், தனி வத்தல் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவகடோ மசால் தயார்.

அவகடோ மசால் தோசை

Avocado Dosai 3

தோசையின் நடுவில் அவகடோ மசால் வைத்து மசால் தோசையாகப் பரிமாறலாம்.

2வது முறை: அவகடோ பழ சாலட்டை தோசையின் நடுவில் வைத்துப் பரிமாறலாம்.

அவகடோ துருவல்

அவகடோ காயை தோல் சீவி, கொட்டையை விலக்கி எடுக்கவும். காயை துருவலாகத் துருவிக் கொள்ளவும். தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். துருவலைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து இறக்கவும்.

அவகடோ பொரியல்

அவகடோ காயை பொடியாக நறுக்கி, கேரட் அல்லது பீன்ஸ் பொரியல் செய்வது போல அவகடோ பொரியல் செய்யலாம்.

அவகடோ ஸ்டஃப்டு சப்பாத்தி

Avacado stuufed chappathi

தாளிக்காமல் அவகடோ துருவல் செய்து சப்பாத்திக்கு நடுவில் வைத்து ஸ்டஃப்டு சப்பாத்தியாகச் செய்யலாம்.

அவகடோ கறி

Avacado curry

அவகடோ காயை கத்தரிக்காய் நறுக்குவது போல நறுக்கிக் கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். காயை லேசாக வதக்கவும். சாம்பார் பொடி, உப்பு சேர்க்கவும். மிக்ஸியில் ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், சிறிது புளி, பாதி மூடி தேங்காய், 3 தக்காளி சேர்த்து அரைத்துச் சேர்க்கவும். வெந்ததும் கெட்டியாக எடுத்துப் பரிமாறவும்.

அவகடோ – கடலைப் பருப்பு கூட்டு

Avacado kadalaiparuppu kuuttu

கடலைப் பருப்புடன் நறுக்கிய கேரட் 2, அவகடோ காய் நறுக்கிச் சேர்க்கவும். சின்ன வெங்காயம் 5, ஒரு தக்காளி, இரண்டு சில்லு தேங்காய் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். சாம்பார் பொடி, பெரிய உப்பு சேர்க்கவும். இரண்டு தேங்காய் சில்லு, ஒரு பச்சை மிளகாய், சிறிது புளி, ஒரு தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு மிளகாய் வத்தல் போட்டு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.

அரைத்து விட்ட அவகடோ சாம்பார்

Avacado araithu vitta sambar

அவகடோ காயைத் தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து விடும் சாம்பாருக்குச் செய்வதைப் போல அனைத்தையும் சேர்த்து, அவகடோ லேசாக வதங்கும் போது அனைத்தையும் சேர்த்து வேக வைக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ – முருங்கைக்காய் சாம்பார்

Avocado Sambar

துவரம் பருப்பு சேர்த்து முருங்கைக்காய் சாம்பார் செய்யும்போது காய்கள் சேர்க்கும் அளவுக்கு, அவகடோ காய் சேர்க்கவும்.

அவகடோ துவையல்

Avocado Thuvaiyal

உளுத்தம் பருப்பு 5 டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 3, மிளகாய் வத்தல் 3, வெள்ளைப் பூண்டு 4, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அவகடோ காயை தோல் சீவி பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும். வதங்கும்போது புளி, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். விரும்பினால் தேங்காய் சிறிது சேர்க்கலாம்.

அவகடோ கொத்து பரோட்டா

Avocado Kothu parota

கொத்து பரோட்டா செய்யும் போது, கேரட், பீன்ஸுடன் அவகடோ காயை நீளமாக பொடியாக நறுக்கிச் சேர்த்து செய்யலாம்.

2வது முறை: 3 சப்பாத்தி மீதமாகி இருந்தால், அவற்றைத் துண்டுகளாக்கி அல்லது துண்டுகளை மிக்ஸியில் லேசாக பெரிய சைஸ் தூளாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, அவகடோ காயை நீளமாக பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். வதங்கும் போது மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி சேர்க்கவும். தக்காளி 2 பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். மிக்ஸியில் தூளாகச் செய்த அல்லது சப்பாத்தியை துண்டுகளாகப் பிய்த்து எடுத்ததை இதில் சேர்க்கவும். சிறிது உப்பு, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ – ஆலு – பட்டர் பீன்ஸ் குருமா

Avocado  aalu butter beans

எண்ணெய் விட்டு, பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, அவகடோ காயை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ் சேர்க்கவும். இவை லேசாக வதங்கும் போது மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, கொத்தமல்லி பொடி, கறிமசால் பொடி, உப்பு சேர்க்கவும். 2 தக்காளியை மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். அரை மூடித் தேங்காய், ஒரு பச்சை மிளகாய், 5 முந்திரிப் பருப்பு, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ பிரியாணி

Avocado Biriyani

பிரியாணி செய்வது போலவே, இஞ்சி – பூண்டு விழுது, கறிமசால் வகைகள், உப்பு அனைத்தையும் சேர்க்கவும். அவகடோ சேர்க்கவும். மிக்ஸியில் அரை மூடி தேங்காயுடன் கால் கட்டு கொத்தமல்லி இலை, கால் கட்டு புதினா இலை சேர்த்து அரைத்து அனைத்தையும் குக்கரில் வைத்து வேக விடவும். முந்திரி வறுத்து சேர்த்து பரிமாறவும்.

அவகடோ ஃப்ரைடு ரைஸ்

Avocado Fried Rice

சாதத்தை வேக வைத்து ஆற வைக்கவும். அவகடோ காயை பொடியாகத் துருவி வைத்துக்கொள்ளவும். எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வதக்கவும். துருவிய அவகடோ காயையும் சேர்த்து வதக்கவும். விரும்பினால், அரை டீஸ்பூன் சர்க்கரை, அரை தக்காளியை பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். வதங்கும் போது தேவையான அளவு மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, கறிமசால் பொடி சேர்க்கவும். உப்பு, கொத்தமல்லி இலை சேர்க்கவும். ஆறிய சாதத்தை இதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

2வது முறை: இதில் கேரட், பீன்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

அவகடோ தேங்காய்ப் பால் பிரியாணி Avocado Biriyani 1

பிரியாணி செய்யும் போது, தேங்காய் விழுதாக அரைத்து விடாமல் தேங்காய் சக்கையைப் பிழிந்து விட்டு, தேங்காய்ப் பாலை அரிசிக்கு அளவு நீராக வைத்து செய்தால் சுவை கூடும்.

அவகடோ – மட்டர் – ஆலு குருமா

எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, அவகடோ காயை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்க்கவும். இவை லேசாக வதங்கும் போது மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, கொத்தமல்லி பொடி, கறிமசால் பொடி சேர்க்கவும். பச்சைப் பட்டாணி சேர்க்கவும். ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி எனில் அப்படியே சேர்க்கலாம். இல்லையெனில் முதல் நாள் இரவு ஊற வைத்து சேர்க்கவும். 2 தக்காளி மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். அரை மூடித் தேங்காய், ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, 5 முந்திரிப் பருப்பு, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ – மட்டர் ரைஸ்

Avacado Muttar 2

எண்ணெய் அல்லது நெய்யில் பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும். இரண்டு தக்காளியை மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். தேவையான தனி மஞ்சள் பொடி, தனி வத்தல் பொடி, உப்பு, கறிமசால் பொடி அனைத்தையும் சேர்க்கவும். அவகடோ காயை தோலெடுத்து நறுக்கி சேர்க்கவும். பச்சைப் பட்டாணி சேர்க்கவும். நனைய வைத்த அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும். மிக்ஸியில் அரை மூடி தேங்காயுடன் கால் கட்டு கொத்தமல்லி இலை அரைத்து சேர்த்து குக்கரில் வைத்து வேக விடவும். முந்திரி வறுத்து சேர்த்து பரிமாறவும்.

இந்திய சமையல் கலையின் ராணிக்கு அஞ்சலி!

படம்

இந்திய சமையல் கலை ராணிக்கு அஞ்சலி!

பிரபல சமையல்கலை நிபுணர் தர்லா தலால் இன்று காலை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

அவரது கடைசி பத்திரிகை பேட்டி – குங்குமம் தோழி ஆகஸ்ட் 16 இதழில் (இரு மாதங்களுக்கு முன்) வெளியாகியிருந்தது.

சமையல் என்பது குடும்பத்தின் கூட்டு வேலை!

கிட்டத்தட்ட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலிருந்தும் விடுபட்டு, முழுமையாக ஓய்வு அனுபவிக்கிற வயது…. அந்த வயதிலும் 20ல் இருந்த அதே ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் 80ஐ நெருங்கும் போதும் உழைக்க முடியுமா ஒருவரால்?

‘முடியும்’ என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் தர்லா தலால். இந்தியாவின் முன்னணி சமையல்கலை நிபுணர்.
சமையலைப் பெண் அடிமைத்தனமாகப் பேசி மாய்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு மத்தியில், சமையலின் மூலமே சர்வதேசப் பிரபலமானவர் தர்லா தலால். சமையலில் ருசி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஆரோக்கியமும் அவசியம் என்பதைத் தனது சமையல் குறிப்புகளில் வலியுறுத்துபவர் இவர். சமையல் கலைக்காக ‘பத்மஸ்ரீ’ விருது வாங்கிய தர்லா தலாலை ‘இந்திய சமையல் கலையின் ராணி’ என உலகமே கொண்டாடுகிறது.

‘குங்குமம் தோழி‘ உணவு சிறப்பிதழுக்காக தர்லா தலால் அளித்த சிறப்புப் பேட்டி…

‘‘இன்னிக்கு நான் இருக்கிற இந்த இடம், எனக்குக் கிடைச்சிருக்கிற அங்கீகாரம், பெயர், பெருமை, பாராட்டுகள்னு எல்லாமே கனவு மாதிரி இருக்கு. இதுல எதுக்குமே நான் ஆசைப்பட்டதில்லை. புதுசா கல்யாணமாகிப் புகுந்த வீட்டுக்குப் போற எல்லாப் பெண்களுக்கும், தன் கணவரையும், புகுந்த வீட்டாரையும் தன் சமையலால கட்டிப் போடணுங்கிற ஆர்வம் இருக்கும். எனக்கும் அப்படித்தான்.
பூனாவுல ஒரு நடுத்தரக் குடும்பத்துல பிறந்தவள் நான். கல்யாணத்துக்குப் பிறகு மும்பைக்கு போனேன். கணவர் நிறைய பயணம் செய்வார். அவர் சரியான சாப்பாட்டுப் பிரியர். ஐம்பதுகள்லயே விதம் விதமான நூடுல்ஸை பத்தியும், பீட்சாவை பத்தியும் பேசுவார். எளிமையான சைவ உணவுகளால அவரைத் திருப்திப்படுத்த முடியாதுன்னு தெரிஞ்சது, சமையலறைக்குள்ள என் சாகசங்கள் அப்பதான் ஆரம்பமானது.

அசைவ உணவுகளைப் போலவே சைவ உணவுகளை சமைக்க ஆரம்பிச்சேன். இத்தாலியன், மெக்சிகன், சைனீஸ்னு எல்லாத்துலயும் உள்ள அசைவ அயிட்டங்களை சைவத்துல ட்ரை பண்ணினேன். பிரபல ரெஸ்டாரன்ட்டுகள்ல கிடைக்கிற அத்தனையையும் வீட்ல செய்து, தினம் தினம் என் கணவருக்கு விருந்து பரிமாறுவேன். அப்படித்தான் இந்தப் பயணம் தொடங்கினது. என் சமையலை ருசி பார்த்த சில ஃப்ரெண்ட்ஸ், அவங்களுக்கும் கத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. ஆனா என் மாமியார் அதுக்கு ஒத்துக்கலை. சமையலை ஒரு பிசினஸா பண்றதா…. கூடாதுன்னு சொல்லிட்டாங்க. என் கணவர்தான் கஷ்டப்பட்டு அவங்களை கன்வின்ஸ் பண்ணி, எனக்கு பர்மிஷன் வாங்கித் தந்தார். வெறும் 6 ஸ்டூடன்ட்ஸோட, 20 ரூபாய் ஃபீஸ்ல குக்கரி கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன்…” – நினைவுகள் கிளர்ந்தெழ, சுவாரசியமாக ஆரம்பிக்கிறது தர்லாவின் பேச்சு.

‘‘கத்துக்க வந்த பெண்களோட ஆர்வம் பிரமிக்க வச்சது. புதுசு, புதுசா கத்துக்கவும், ஆரோக்கியமா சமைக்கவும் தயாரா இருந்தாங்க. எது ஆரோக்கியமான சாப்பாடுங்கிற தெளிவே இல்லாம இருந்தாங்க பலரும். ஆரோக்கியமான சமையலைப் பத்தின புத்தகங்கள் எழுத எனக்கு அதுதான் தூண்டுதலா இருந்தது. டயட் என்கிற பெயரில் உணவைத் தவிர்க்கிறது மிக மோசமான பழக்கம். ஒருத்தரோட சாப்பாட்டுல சப்பாத்தி, சாதம், தால் அல்லது சாம்பார், முளைகட்டின தானியங்கள், தயிர் அல்லது மோர், கேழ்வரகு, கம்பு, ஓட்ஸ், நெல்லிக்காய், காய்கறிகள், வெங்காயம், பூண்டு (இந்த ரெண்டும் கொலஸ்ட்ராலை குறைச்சு, நுரையீரல் தொற்றைத் தவிர்க்கும்) எல்லாம் இருக்கணும். அதே போல சீரகம், தனியா, பெருங்காயம், வெந்தயம், கடுகு, மஞ்சள் இதெல்லாமும் கட்டாயம் சேர்த்து சமைக்கப்படணும். ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் போதுமானது. சரியான சாப்பாடும், உடற்பயிற்சியும்தான் ஒருத்தரை ஆரோக்கியமா வைக்கும். என்னோட ஒவ்வொரு சமையல் புத்தகத்தையும், சத்துணவு நிபுணர்களோட ஆலோசனைகளைக் கேட்ட பிறகே தயாரிக்கிறேன்…’’ என்கிற தர்லா, இதுவரை 110 புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அடுத்து celiac என்கிற நோய் குறித்த புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறாராம்.

‘‘செரிமானம் தொடர்பான ஒரு நோய் இது. கோதுமை, ஓட்ஸ், பார்லி மாதிரியான சில உணவுகள்ல உள்ள க்ளூட்டன் இவங்களுக்கு ஒத்துக்காது. க்ளூட்டன் இல்லாத உணவுக் குறிப்புகளைக் கொண்ட அந்தப் புத்தகம் நிச்சயம் பெரிய வரவேற்பைப் பெறும்’’ என்கிறவர், அடிக்கடி வெளியில் சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.

‘‘வீட்டுச் சமையல்தான் ஆரோக்கியமானது. கூடியவரைக்கும் வெளியில சாப்பிடறதைத் தவிர்த்துடுங்க. சமையலை குடும்பத்துல உள்ள எல்லா நபர்களும் சேர்ந்து செய்யற ஒரு கூட்டு வேலையா மாத்திக்கிட்டா, சிரமம் தெரியாது. ஃபாஸ்ட் ஃபுட்ஸை கூட இன்னிக்கு புத்தகங்களைப் பார்த்து வீட்லயே செய்ய முடியும். இன்னிக்குப் பெண்கள் வீடு, வேலைன்னு ரெண்டையும் திறமையா சமாளிக்கிறாங்க. வேலைக்காக சமையலை காம்பரமைஸ் பண்றதில்லை. ஆண்களைவிட அதிகம் உழைக்கிற பெண்கள், வீட்ல உள்ள ஒவ்வொருத்தருக்காகவும் பார்த்துப் பார்த்து சமைக்கிறாங்க. அஷ்டாவதானி அவதாரம் எடுக்கிறதுங்கிறது பெண்களோட டி.என்.ஏலயே இருக்கு போல…..‘‘ பெண்குலப் பெருமை பேசுகிற தர்லா, முறையான பயிற்சி ஏதுமின்றி, தாமாகவே சமையல் கலை ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாக ஆச்சரியத் தகவல் சொல்கிறார்.

‘‘நான் நிறைய சமையல் கலை புத்தகங்களைப் படிப்பேன். நிறைய ரெஸ்டாரன்ட் போய், புதுப் புது உணவுகளைப் பத்தி நிறைய ஆராய்ச்சி செய்வேன். என்னோட 25 வருஷ ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தின் விளைவா இன்னிக்கு எனக்கு 15 ஆயிரத்துக்கும் மேலான ரெசிபி அத்துப்படி. புதுசா சமைக்க ஆரம்பிக்கிற எல்லாருக்கும் ஒரு பயமும், தயக்கமும் இருக்கிறது இயல்புதான். அனுபவமின்றி சமைச்சுப் பழகறவங்க, ஆரம்பத்துல சுலபமான அயிட்டங்களை சமைச்சுப் பழகறதே பிற்காலத்துல சமையலை எளிதாக்கும்…’’ – அனுபவம் கலந்த அட்வைஸ் சொல்கிறவரிடம், கடைசியாக ஒரு கேள்வி…

சமையல் ருசிக்க ஒரே ஒரு டிப்ஸ் மேடம்….?
‘‘அன்பு கலந்து சமைச்சுப் பாருங்க. அது தரும் சுவைக்கு ஈடே இருக்காது.‘‘
ஆஹா!

– ஆர்.வைதேகி
……………..

தர்லா தலால் டிப்ஸ்…

* எந்த உணவுக்கு என்ன மசாலா சேர்க்கணுங்கிறதை சரியா தெரிஞ்சுக்கிட்டு சமையுங்க. சூப்லேருந்து, டெஸர்ட் வரைக்கும் ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு மசாலா இருக்கு. சரியான அளவுல, சரியான பக்குவத்துல அதைச் சேர்த்தாலே, உங்க சாப்பாடு பிரமாதம்னு பேர் வாங்கிடுவீங்க.

* பல முறை நீங்க கேட்ட அதே விஷயம்தான். சமைக்கிறதுக்கு முன்னாடி, சமையலுக்குத் தேவையான பொருள்களை தயாரா எடுத்து வச்சுக்கோங்க. சமையல் குறிப்பைப் படிச்சிட்டு சமைக்கிறதா இருந்தா, ஒண்ணுக்கு ரெண்டு தடவை முழுக்கப் படிச்சிட்டு ஆரம்பியுங்க.

* இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுதெல்லாம் எப்போதும் உங்க ஃப்ரிட்ஜ்ல இருக்கட்டும். அது உங்களோட சமையல் டென்ஷனை பாதியா குறைக்கும்.

……………………………..

‘‘ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் போதுமானது. சரியான சாப்பாடும் உடற்பயிற்சியும்தான் ஒருத்தரை ஆரோக்கியமா வைக்கும்…’’

14 இன் 1 – சத்துமாவு சர்ப்ரைஸ்!

மதுமிதா

 Image

சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!

சத்துமாவு தயார் செய்ய…

தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற வகை பதார்த்தங்கள் செய்ய மு.பருப்பு, பா.பருப்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டியதில்லை.

1. சத்துமாவு கஞ்சி  

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு, பனங்கற்கண்டு அல்லது வெல்லம், பால்.

எப்படிச் செய்வது?

சத்துமாவில், தூசி நீக்கிய வெல்லம் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து, மாவு அளவில் 4 மடங்கு நீர் சேர்த்துக் கிளறவும். நீர்க்க இருந்தது கஞ்சி போல கெட்டியாகும் போது,  தேவையான பால் விட்டு லேசாக கிளறி இறக்கவும். ஹார்லிக்ஸ் போல சூடாகக் குடிக்கலாம்.

* கூல் கஞ்சி: ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைத்தும் கூல் கஞ்சியாக ஸ்பூனில் எடுத்தும் சாப்பிடலாம்! 

2. சத்துமாவு உருண்டை 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு, வெல்லம், நெய் அல்லது நல்லெண்ணெய், ஏலக்காய் தூள் சிறிது.

எப்படிச் செய்வது?

இதை அடுப்பில் வைக்க வேண்டியதில்லை. மாவை வறுத்து அரைத்திருப்பதால் அப்படியே சாப்பிடலாம். பச்சை வாடை தெரியாது.

வெல்லத்தில் நீர்விட்டு தூசு எடுத்துவிட்டு சத்து மாவு, ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும். 

3. புட்டு

என்னென்ன தேவை?

சத்துமாவு, தேய்காய்த் துருவல், லேசாக வறுத்த வெள்ளை எள்.

எப்படிச் செய்வது?

சிறிது வெந்நீரை லேசாக மாவில் தெளித்து உதிரியாக பிசறிக்கொள்ளவும். வெள்ளை எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் வெந்நீர் விட்டு உதிரியாகப் பிசைந்து வைத்த மாவை வைக்கவும். தேங்காய்த் துருவலையும், வறுத்த எள்ளையும் மாவின் மேல் போட்டு வேக வைக்கவும்.

* இனிப்புப் புட்டு 

Image

வேக வைத்த புட்டுடன் தேவையான அளவு ஏலக்காய், சர்க்கரை கலந்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும்.

* வெல்லப் புட்டு 

Image

வேக வைத்த புட்டுடன் தேவையான அளவு வெல்லம், ஏலக்காய் கலந்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும்.

* காரப் புட்டு 

Image

கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், மிளகாய் வத்தல் தாளித்து, பெருங்காயத்தூள், தேவையான உப்புச் சேர்த்து, வேக வைத்து இறக்கிய புட்டை சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.

4. கார கொழுக்கட்டை 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு.

தாளிக்க…

நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தேங்காய் (பொடியாக நறுக்கியது), உப்பு.

எப்படிச் செய்வது?

இவை அனைத்தையும் சேர்த்து தாளித்ததும், சத்துமாவை சேர்த்து லேசாக நீர் தெளித்து கொழுக்கட்டை செய்ய வரும் அளவில் உருட்டி எடுத்துக் கொள்ளவும். இட்லித் தட்டில் கொழுக்கட்டை பிடித்து வைத்து வேக வைத்து எடுக்கவும்.

5. இனிப்பு கொழுக்கட்டை 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு,  வெல்லம், பொடியாக நறுக்கிய தேங்காய், நெய் அல்லது நல்லெண்ணெய்,  தேவையெனில் சிறிது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி.

எப்படிச் செய்வது?

வெல்லத்தில் நீர் விட்டு, தூசு எடுத்துவிட்டு, சத்துமாவு, சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசையவும். பொடியாக நறுக்கிய தேங்காய், வறுத்த முந்திரி சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து கொழுக்கட்டை பிடிக்கவும். இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

6. சத்துமாவு நிப்பட்டி 

Image

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தேங்காய் (பொடியாக நறுக்கியது), மிளகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு.

எப்படிச் செய்வது?

எண்ணெய் தவிர அனைத்தையும் லேசாக தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கவும். மாவு இனிப்பாக இருக்கும் என்பதால் கொஞ்சம் அளவு அதிகமாகவே காரம் சேர்க்கலாம். சப்பாத்தி உருண்டை செய்வது போல கொஞ்சம் பெரிய அளவில் எடுத்து, கையாலேயே தட்டி அப்படியே தோசைக்கல்லில் போட்டு, அதிலும் லேசாக தட்டி அளவை பெரிதாக்கலாம். இல்லையெனில் ஒரு டிபன் ப்ளேட்டை பின்பக்கமாகத் திருப்பி, லேசாக எண்ணெய் தடவி, உருண்டையை வைத்து கையாலேயே தட்டி தோசை போல வட்டமாக விரித்து தோசைக்கல்லில் போடலாம். நல்லெண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப்போட்டு நல்லெண்ணெய் விட்டு மறு பக்கமும் கொஞ்சம் வெந்து நிறம் மாறியதும் எடுக்கவும். சுவையான சத்துமாவு நிப்பட்டி அல்லது அடை தயார்.

7. சத்துமாவு தோசை 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு – 5 பங்கு, உளுந்தம் பருப்பு – 1 பங்கு, உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் நீர் சேர்த்து நைசாக அரைக்கவும். உப்புச் சேர்க்கவும். அரைத்த உளுந்த மாவுடன் சத்துமாவு சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். இப்போது தோசை சுடலாம்.

8. சத்துமாவு முறுக்கு 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு – 6 பங்கு, உளுந்தம் பருப்பு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு, பொரிக்க தேவையான எண்ணெய்.

எப்படிச் செய்வது?

உளுந்தம் பருப்பை நன்றாகக் கழுவி நைசாக வேக வைக்கவும். வெந்தவுடன் நன்றாக மசித்து, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முறுக்கு சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.

* முறுக்கு, சீவல், ஓமப்பொடி செய்யும்போது முதல் முறை செய்யும் அளவு சரி பார்த்து அளவு சேர்க்கவும். வேக வைத்த பருப்பின் அளவின்படி அதில் இருக்கும் நீர் அளவுக்கு தகுந்தாற்போல சத்துமாவு அளவைச் சேர்க்க வேண்டும். பிசையும் போது சிறிது எண்ணெய் சேர்க்கலாம்.

9. சத்துமாவு முள்முறுக்கு 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு –  6 பங்கு, பாசிப் பருப்பு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம்,  உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி நைசாக வேக வைக்கவும். வெந்தவுடன் நன்றாக மசித்து, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முள்முறுக்கு சில் போட்டு பிழிந்து எடுக்கவும்.

10. சத்துமாவு சீவல் 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு – 4 பங்கு, கடலை மாவு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.

எப்படிச் செய்வது?

எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீவல் சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.

 * பாசிப் பருப்பு முறுக்கு மாவு போலச் செய்தும் சீவல் பிழியலாம்.

11. சத்துமாவு ஓமப்பொடி 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு – 4 பங்கு, கடலை மாவு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.

எப்படிச் செய்வது?

எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், ஓமப்பொடி சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.

 * பாசிப் பருப்பு முறுக்கு மாவு போலச் செய்தும் ஓமப்பொடி பிழியலாம்.

12. சத்துமாவு வடை 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிது, வெங்காயம் – 1, தேங்காய் – கால் மூடி (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை, உப்பு – சிறிது.

எப்படிச் செய்வது?

பொடியாக நறுக்கிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது நீருடன் சத்துமாவும் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மாவை உருண்டை செய்து வடையாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.

 * பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்க்கலாம்.

13. சத்துமாவு பக்கோடா 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிது, வெங்காயம் – 2, தேங்காய் – கால் மூடி (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை, உப்பு – சிறிது.

எப்படிச் செய்வது?

பொடியாக நறுக்கிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, சிறிது நீருடன் சத்துமாவும் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மாவை எடுத்து சிறு உருண்டையாக உதிர்த்துப் பொரித்தெடுக்கவும்.

14. சத்துமாவு இடியாப்பம்

என்னென்ன தேவை?

சத்துமாவு, உப்பு.

எப்படிச் செய்வது?

தேவையான சத்துமாவில் சிறிது உப்புச் சேர்த்து, வெந்நீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும். இடியாப்ப சில்லில் பிழிந்து, இட்லி தட்டில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்

* இனிப்பு இடியாப்பம்

பிழிந்து வேக வைத்த இடியாப்பத்தை உதிர்த்து, தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்தால் இனிப்பு இடியாப்பம் தயார். பால், சர்க்கரையோடும் சாப்பிடலாம்.

* கார இடியாப்பம் 

தாளிக்க…

கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய் வற்றல் – 1, இஞ்சி – சிறிது, பெல்லாரி வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை சிறிது, எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து, பிழிந்து வேகவைத்த இடியாப்பத்தை உதிர்த்துச் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்புச் சேர்த்தால் சத்துமாவு கார இடியாப்பம் தயார்.

Image