அறிவியல் கற்றுத் தரும் தொழிற்சாலை

‘எதையும் புரிந்து படிப்பது நல்லது’… காலம் காலமாக வலியுறுத்தப்படும் வாசகம். அதைவிட முக்கியமானது படிப்பின் மேல் ஈடுபாடும் விருப்பமும் வருவது. எந்தப் பாடத்தையும் விரும்பிப் படித்தால் அதில் மாஸ்டர் ஆகிவிடலாம். ஆனால், பல மாணவர்களுக்கு அந்த ஈடுபாடு வருவதில்லை. காரணம், அதன் கடினத்தன்மை. அப்படி ஜுர மருந்து போல கசப்புத் தட்டும் பாடங்களில் ஒன்று அறிவியல்!அதையும் மாணவர்களுக்கு எளிமையாகக் கற்றுத் தருகிறது சென்னையில் உள்ள ‘சயின்ஸ் ஃபேக்டரி’ அமைப்பு. அதை நடத்தி வருபவர் சம்யுக்தா பாஸ்கர். பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர்… அறிவியலின் மேல் எழுந்த ஆர்வத்தின் காரணமாக வேலையை விட்டுவிட்டு முழு நேரத்தையும் ‘சயின்ஸ் ஃபேக்டரி’க்காக செலவழிப்பவர். தமிழகம் முழுக்க பல பள்ளிகளுடன் இணைந்து மாணவர்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். 

_MG_0733

‘‘மாணவர்களுக்கு சின்ன வயசுல அறிவியல் புரியறது கொஞ்சம் கஷ்டம் தான். அதை சரியான முறையில நாம கத்துக் கொடுத்துட்டா போதும். ஈசியா புரிஞ்சுக்குவாங்க… அதுக்கப்புறம் அறிவியல்லதிறமைசாலியாயிடுவாங்க’’ என்கிறார் சம்யுக்தா பாஸ்கர்.

சின்னச் சின்ன செய்முறைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் மாணவர்களின் மனதில் அறிவியலை அழகாகப் பதிய வைக்கிறது ‘சயின்ஸ் ஃபேக்டரி’. குழுவாக மாணவர்கள் இந்த ஆய்வுகளைச் செய்யும்போது தங்கள் சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. சென்னை மைலாப்பூரில் உள்ள சம்யுக்தா பாஸ்கரின் வீட்டில் அவரை சந்தித்தோம்.

‘‘ஸ்கூல்ல படிக்கிறப்பவே அறிவியல் பாடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அறிவியலை மனப்பாடமா படிக்கறதைவிட அர்த்தம் புரிஞ்சு படிக்கணும்னு நினைப்பேன். பள்ளிக்கூட சோதனைக் கூடத்துல மாணவர்களுக்கு கெடுபிடி அதிகமாக இருக்கும். ‘அதைத் தொடக்கூடாது’, ‘இதை எடுக்கக் கூடாது’ன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. நான் பிளஸ் ஒன் படிக்கிறப்போதான் லேபுக்குள்ளே போனேன். பியூரெட், வெர்னியர் காலிபர் இதையெல்லாம் கையால தொட்டுப் பார்த்தப்போ ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் அண்ணா பல்கலைக்கழகத்துல பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்ல சேர்ந்தேன். அதுக்கப்புறம் அகமதாபாத் ‘ஐஐஎம்’ல எம்.பி.ஏ. முடிச்சேன். ‘இன்ஃபோசிஸ்’, ‘மைக்ரோசாஃப்ட்’னு பெரிய நிறுவனங்கள்ல 14 வருஷம் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் சார்ந்த வேலைல இருந்தேன். இடையில என் பையன் ப்ரணவ் பிறந்தான். இப்போ அவனுக்கு 9 வயசு. அவனுக்கு வீட்டுல பாடம் சொல்லிக் கொடுக்குறது நான்தான்.

_MG_0757வளர வளர ப்ரணவோட கேள்விகள் அதிகமாகிட்டே போனது. நிறைய சந்தேகங்கள் கேட்டுட்டே இருப்பான். அவனோட சந்தேகத்தை தீர்த்து வைக்கறதுக்காக இன்டர்நெட்ல தேடவும்நிறைய புத்தகம் படிக்கவும் வேண்டியிருந்தது. அவனுக்கு ஒரு விஷயத்தை சரியா புரிய வைக்கறதுக்கான எல்லா முயற்சிகளையும் செஞ்சேன். சயின்ஸ்ல அவனுக்கு ஆர்வம் அதிகம். திடப்பொருள் திரவமாக மாறுவது, திரவம் திடப்பொருளாக மாறுவது எப்படிங்கறது உட்பட அறிவியல் தொடர்பான பல விஷயங்களை செயல்முறையாக கத்துக்க விரும்பினான். அதே நேரத்துல அறிவியலை எளிய முறையில அவனுக்குக் கத்துக் கொடுப்பது எனக்கு சிரமமாக இருந்தது. அப்போதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. இவனை மாதிரி அறிவியலை எளிமையாக புரிஞ்சுக்க முடியாத குழந்தைகள் எத்தனையோ பேர் இருப்பாங்க. அப்படிப்பட்டவங்கள்ல சில பேருக்காவது நாம கத்துக் கொடுக்கலாமேன்னு நினைச்சேன். ஐரோப்பிய நாடுகளில் அறிவியலை குழந்தைகளுக்குக் கத்துக் கொடுக்க ஏகப்பட்ட தனியார் மையங்களும் அமைப்புகளும் இருக்கு. சயின்ஸை விருப்பத்தோட கத்துக்கொடுக்கவும் கத்துக்கவும் நிறையபேர் ஆர்வமாக இருக்காங்க. அதே போல இங்கேயும் ஒரு முயற்சி செஞ்சு பார்க்கலாமேன்னு தோணிச்சு. என் ஃப்ரெண்ட் ரூபாவும் நானும் ‘சயின்ஸ் ஃபேக்டரி’ ஆரம்பிக்கறதுக்கான வேலைகளைத் தொடங்கினோம். அதற்கு என்னவெல்லாம் தேவைங்கிறதை பட்டியல் போட்டோம், அதையெல்லாம் சேகரிச்சோம், குழந்தைகளுக்குக் கத்துக் கொடுக்க எங்களையும் தயார்படுத்திக்கிட்டோம். அதோட பல சயின்டிஸ்ட்களை சந்திச்சு அவங்களோட அனுபவங்களையும் கேட்டோம். கெமிஸ்ட்ரி ஆய்வுகள் செய்ய தேவையான மூலப் பொருட்களை எங்கே வாங்கணும்? எந்தெந்த வயது மாணவர்களுக்கு என்னவெல்லாம் கத்துக் கொடுக்கலாம்?… இப்படி ஒரு நீளமான பட்டியல்… அதுக்கப்புறம்தான் சயின்ஸ் ஃபேக்டரி உதயமானது.

all kidsஎங்களோட முக்கியமான நோக்கம் அறிவியலை எளிமையாக மாணவர்களுக்குப் புரிய வைப்பது. பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடங்களை செயல்முறை மூலமாக விளக்கறது சயின்ஸ் ஃபேக்டரியின் வேலை. உதாரணமாக, மசித்த வாழைப்பழத்துல அசிட்டோன் மிக்ஸ் பண்ணினா பழத்தின் டி.என்.ஏ.வை கண்டுபிடிக்கலாம். அதை நேரடியாக செய்து காட்டி விளக்கும்போது மாணவர்களின் மனசுல பதியும். பாலில் புரோட்டீன் இருக்கறது எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதை நேரடியா பார்க்கறதுக்கு சிம்பிளான வழி ஒண்ணு இருக்கு. பாலில் வினிகரை கலந்து சில நிமிடங்கள் வைத்திருந்தால் புரோட்டீன் தனியாகப் பிரிந்து வரும். கிட்டத்தட்ட பனீர் மாதிரியே இருக்கும். இது மாதிரி சின்னச் சின்ன எக்ஸ்பரிமென்ட்டுகளை வீட்டுலயே செஞ்சு பார்க்குறப்போ மாணவர்களால ஈஸியா சயின்ஸை புரிஞ்சுக்க முடியும்.

Dry Ice Kids - 2இதுபோன்ற ஆய்வுகளை மாணவர்களின் வயது வாரியாக பிரிச்சு அவங்களோட கற்றல் திறனுக்கேற்ப கத்துக் கொடுக்கறோம். 4 வயசுல இருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கத்துத் தர்றோம். அறிவியல் அடிப்படையை கத்துக்கறதுக்கு இதுதான் ஏற்ற வயது. 4 -6 இடைப்பட வயசுள்ள குழந்தைகளுக்கு எளிமையான செயல்முறைகளை சொல்லித் தருவோம். ஒரு உடையாத பபிள்ஸ் எப்படி உருவாகுது, பலூனில் காற்று எப்படி நிற்குது? தண்ணீர் மற்றும் திரவங்களில் பொருட்கள் எப்படி மிதக்கின்றன?… இதையெல்லாம் சொல்லித் தர்றோம்.

10 வயசுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எலெக்ட்ரிகல் சர்க்யூட் இணைப்புகள், அவை செயல்படும் முறை என கத்துக் கொடுக்குறோம். குழந்தைகளுக்கு கத்துக்குற ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனா, அவங்களை இந்த மாதிரியான அறிவியல் பொருட்களை ஹேண்டில் பண்ண வைப்பது சுலபமான காரியமில்லை. சில குழந்தைகள் அளவுக்கதிகமான நுரை பொங்கி வந்தாலே பயந்துபோய் கையில வச்சிருக்கும் பொருளை கீழே போட்டுருவாங்க. பலூன் வெடிக்கும் சத்தத்தைக் கேட்டு பயப்படும் குழந்தைகளும் இருக்காங்க. குழந்தைகளுக்கு சயின்ஸ் கத்துக் கொடுப்பது சவாலான வேலை.

IMG_0395ஒரு சயின்ஸ் கிட்டை மாணவர்கள்கிட்ட கொடுத்துடுவோம். அதை வச்சு கிளாஸ்ல நாங்க கத்துக் கொடுக்கும் விஷயங்களை அவங்க வீட்டுலயும் செஞ்சு பார்த்துக்கலாம். மாணவர்களின் வயசுக்கேற்ற பொருட்கள் ஒவ்வொரு கிட்டிலும் இருக்கும். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற, பொருத்தமான கெமிக்கல்கள் இருக்கும். சின்னச் சின்ன ஆய்வுகள் செய்யத் தேவையான பொருட்கள் இருக்கும். சிட்ரிக் ஆசிட் தேவைப்பட்டா, அதுக்கு பதிலாக எலுமிச்சைப்பழசாற்றை பயன்படுத்தச் சொல்லுவோம். ஒவ்வொரு வகைக்கும் தகுந்த மாதிரி ரூ.300ல இருந்து ரூ.500 வரைக்குமான கிட் கிடைக்கும். பாதுகாப்பான அறிவியல் என்பது எங்களோட தாரக மந்திரம். சயின்ஸ் ஃபேக்டரி ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. தமிழகத்தின் முக்கியமான பள்ளிகளோட இணைந்து நாங்க வேலை பார்த்திருக்கோம். சென்னையில் டான்போஸ்கோ, வேலம்மாள் வித்யாலயா, எஸ்.பி.ஓ.ஏ. போன்ற பள்ளிகள்ல எங்க வகுப்புகளை நடத்தியிருக்கோம். பள்ளிகள்ல நிர்வாகத்தின் அனுமதியோட தினமும் ஒரு மணி நேரம் சொல்லித் தருகிறோம். இது தவிர கோடை விடுமுறையில ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கிறோம். இதற்கான அறிவிப்பை பள்ளி நிர்வாகத்தின் மூலம் கொடுத்து, மாணவர்களை ஒன்றிணைத்து வகுப்புகளை நடத்துவோம். பெற்றோர் ஒத்துழைப்புக் கொடுக்கறதால நிறைய மாணவர்கள் ஆர்வத்தோட கத்துக்கறாங்க. தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் எங்களிடம் அறிவியல் கத்துகிட்டு இருக்காங்க. ஏன்,எதுக்கு,எப்படிங்கிற கேள்விகளை கேட்க ஆரம்பிச்சாலே குழந்தைகளை அதிகப்பிரசங்கின்னு ஒதுக்கிடுறோம். அது தவறான விஷயம். கேள்வி கேட்கும் குழந்தைகள்தான் திறமை பெற்றவர்களாக வளர்ந்திருக்காங்க. குழந்தை கேள்வி கேட்டா பொறுமையாக பதில் சொல்லிப் பாருங்க. பதில் தெரியலன்னா தெரிஞ்சுக்கிட்டு விளக்குங்க. அது குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது’’என்கிறார் சம்யுக்தா.

‘சயின்ஸ் ஃபேக்டரி’ தொடர்பு கொள்ள…

செல்: 9884656600, 9884073425

இணையதளம்: http://www.facebook.com/pages/TheScienceFactory/130193843761340?fref=ts

– எஸ்.பி.வளர்மதி

படங்கள்: மாதவன்