அதிகம் படித்தால் குறைந்த சம்பளம்!

Image

‘‘அதிகம் படித்த பெண்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் வாங்கும் சம்பளத்துக்கும் ஆண்கள் வாங்குவதற்கும் நிச்சயம் அதிக வேறுபாடு இருக்கும். அதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ இப்படிச் சொல்லியிருப்பது யாரோ அல்ல… அகமதாபாத் ஐ.ஐ.எம். (Indian Institute of Management – Ahmedabad) கல்வி நிறுவனத்தில், இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட உறுப்பினர்கள் சொல்கிறார்கள்!

பெண் கல்வி வெகு அழுத்தமாக வலியுறுத்தப்படும் இந்தக் காலத்தில் இந்த ஆய்வு சொல்லியிருக்கும் கருத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அதிகம் படித்திருந்தாலும், பெண் என்கிற காரணத்துக்காகவே சம்பளம் குறைத்துக் கொடுக்கப்படுவதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அதிகம் படிக்காத பெண்கள் கூட, ஆண்களுக்கு சமமாகவோ, சில நேரங்களில் அவர்களை விட அதிகமாகவோ சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், படித்திருந்தாலோ நிலைமை தலைகீழ்!

அடிப்படைக் கல்வியோடு கொஞ்சம் கூடுதல் தகுதியோ, டிப்ளமோ படிப்போ படித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு சமமான கல்வித்தகுதி உடைய ஆண்களைவிட 10 சதவிகிதம் குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்கள். முதுகலைப் பட்டம் பெற்ற பெண்கள் நிலைமை இவர்களை விட மோசம். தங்களுக்கு சமமான தகுதியுடைய ஆண்களைவிட 40 சதவிகிதம் குறைந்த சம்பளம் வாங்குகிறார்கள். இந்த நிலைமை இந்தியாவில்தான் அதிகம். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, வீட்டு வேலை செய்வது, வீட்டைப் பராமரிப்பது, சமைத்துப் போடுவது போன்றவை இந்தியப் பெண்கள் எந்தச் சம்பளமும் பெற்றுக் கொள்ளாமல் செய்யும் மகத்தான வேலைகள். உண்மையில் இவையெல்லாம் விலை மதிப்பிட முடியாத பணிகள். அதுவும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தேதான் இருக்கிறது. இந்த உணர்வுபூர்வமான வேலைகள் பெண்களைப் பெரும்பாலும் கட்டிப் போட்டே வைத்திருக்கின்றன. இந்த வேலைகளின் அடிப்படையில் பார்க்கப்படுவதால்தான் பெண்கள் பணிக்குச் செல்லும் இடங்களிலும் அவர்களுக்கான நியாயமான சம்பளம் மறுக்கப்படுகிறது. ஆனால், அடிமட்டக் கூலித் தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஆண்களைவிட அதிகம் வருமானம் ஈட்டுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. உதாரணமாக, அடிப்படை கல்விகூட பெறாத பெண்கள் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதே தகுதியுடைய ஆண்கள் சம்பாதிப்பது வருடத்துக்கு சராசரியாக 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்தான்.

ஒரு பெரிய நிறுவனம்… அங்கே முக்கியமான பதவிக்குப் போட்டி. ஆண், பெண் இருவருமே விண்ணப்பம் செய்கிறார்கள். இது போன்ற நேரங்களில் நிறுவனத்தின் உரிமையாளர் பெண்களைவிட ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார். வேலை கிடைப்பதற்கு முன்பாகவே பெண்கள் வடிகட்டப்படுவதும் இப்படி நடக்கிறது.

முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பெண்ணின் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய். அதே முதுகலைப் பட்டம் பெற்ற ஆணாக இருந்தால், வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய். அதாவது சதவிகிதக் கணக்கில் ஆண், பெண்ணை விட 40.76% அதிகமாகப் பெறுகிறார்.

Image

இந்த ஆய்வு வேறொரு கோணத்திலும் பெண்களை அணுகியிருக்கிறது. பொதுவாக, பெண்கள் பயிற்சிகள் அதிகம் தேவைப்படும், நீண்ட நேரம் பணியாற்றும் வேலைகளை விரும்புவதில்லையாம். அந்த மாதிரியான பணிகளில் இருப்பவர்கள், திருமணம், தாய்மையடைதல் போன்ற காரணங்களால் சீக்கிரத்திலேயே வேலையை விட்டுவிடுகிறார்களாம். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக, வேலைகளுக்கு இடைவெளி விடுகிறார்கள் அல்லது பகுதி நேர வேலைகளில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். இது போன்ற காரணங்களால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநேரமாக வேலைக்கு வரும் பெண்களுக்குக் கிடைப்பது ஆண்களைவிட குறைந்த சம்பளமே!

சரி… தாய்மையடையாத பெண்கள்? அவர்களுக்கும் இதே நிலைமைதான். குழந்தை இல்லை என்பதற்காக அவர்களுக்கு சிறப்பாக எந்த முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை. அவர்களை, ‘சீக்கிரமே அம்மாவாகப் போகிறவர்கள்’ என்று முத்திரை குத்தி அடையாளப்படுத்தியிருக்கிறது சமூகம்.

அகமதாபாத் ஐ.ஐ.எம்.மின் ’பேசெக் இந்தியா’ (Paycheck India) என்கிற ஆய்வுப் பிரிவு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வுக்கு தன்னார்வத் தொண்டு அமைப்பான ‘வேஜ் இண்டிகேட்டர் ஃபவுண்டேஷன் அண்ட் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ம்ஸ்டர்டாம்’ (Wage Indicator Foundation and University of Armsterdam) உதவியிருக்கிறது. இந்தியா முழுக்க இந்த ஆய்வு 21,552 பேரிடம் நடத்தப்பட்டிருக்கிறது… அதுவும் கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகள்!

ஆய்வு கிடக்கட்டும்… ஆண்களைவிட பெண்கள் எவ்வளவு குறைவாக வருமானம் பெறுகிறார்கள் என்பது நம் மனசாட்சிக்குத் தெரியாதா?

 

Photo Courtesy: http://freeimagescollection.com

http://www.employeerightspost.com/

– பாலு சத்யா

உடற்பயிற்சி… அறிவாற்றலுக்கு உதவும்!

does-exercise-really-make_1

டற்பயிற்சி நல்லதா? நல்லது. மூளைக்கு நல்லதா? ஆம். மிகவும் நல்லது! இப்படித்தான் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். உடற்பயிற்சி எப்படி மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது, எப்படியெல்லாம் நன்மை செய்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது மூளையில் ‘ஐரிசின்’ (irisin) என்ற மூலக்கூறு உற்பத்தியாகிறது என்று அடையாளம் காட்டியிருக்கிறது அந்த ஆய்வு. அதோடு, அந்த மூலக்கூறு, நரம்புகளைப் பாதுகாக்கிறது என்றும் உறுதியாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.

இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்தியவர் டாக்டர் புரூஸ் ஸ்பீஜெல்மேன் (Dr.Bruce Spiegelman). அமெரிக்காவில் இருக்கும் டானா ஃபார்பர் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் பேராசிரியர். அவர் தலைமையிலான குழு, ஒரு எலியை வைத்து ஆராய்ச்சி செய்ததில்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது.

உடற்பயிற்சி செய்வதால், செயற்கை முறையில் ரத்தத்தில் இருக்கும் ‘ஐரிசின்’ அளவை அதிகரிக்க முடியும். அது, கற்றல் மற்றும் ஞாபகம் தொடர்பான மரபணுவை செயல்பட வைக்கும் என்றெல்லாம் பட்டியல் போடுகிறது இந்த ஆய்வு. சுருக்கமாக, ‘உடற்பயிற்சி, மூளையில் அறிவாற்றல் தரும் செயல்பாட்டை மேம்படுத்தும். நரம்புத் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அதாவது, மன அழுத்தம், பக்கவாதம், அல்ஜீமெர்ஸ் நோய் (Alzheimer’s disease) போன்ற நரம்பியல் நோய்கள் நெருங்குவதற்கான வாய்ப்பை உடற்பயிற்சி தடுத்துவிடும் என்கிறார்கள். இந்த ஆய்வு முடிவுகள், ‘செல் மெட்டாபோலிஸம்’ (Cell Metabolism) என்ற இதழில் வெளியாகி இருக்கின்றன.

அறிவாற்றல் கூடும்… நரம்பியல் நோய்கள் நெருங்காது என்பதே நல்ல செய்திதானே! உடற்பயிற்சியைக் கொண்டாடலாம்!

– பா. வினோதினி

பால் குடிங்க! – கர்ப்பிணிகளுக்கு ஓர் அறிவுரை!

Image

‘கர்ப்ப காலத்தில் பெண்கள் எது சாப்பிடுவது நல்லதோ, இல்லையோ போதுமான பால் குடிப்பது ரொம்ப நல்லது’. இதை தனி நபர்கள் சொல்லவில்லை. மருத்துவர்கள் சொல்லவில்லை. நிபுணர்கள் சொல்லவில்லை. முக்கியமான ஓர் ஆய்வு சொல்லியிருக்கிறது. கருவுற்ற காலத்தில் பெண்கள் சுத்தமான பாலை, தேவையான அளவு சாப்பிடுவதால் குழந்தையின் இளமைப் பருவம் வளமாக இருக்கும்… முக்கியமாக, பிறக்கும் குழந்தை உயரமாக வளரும்… என்கிறார்கள். ‘க்ளினிக்கல் நியூட்ரிஷன்’ என்ற ஐரோப்பியப் பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

கர்ப்ப காலத்தில் பெண்கள் 150 லிட்டருக்கும் அதிகமான பாலைக் குடித்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை வளர் இளம் பருவத்தில் (டீன் ஏஜ்), உயரமாக வளர்வார்களாம். இது, ஆண், பெண் இரு பாலினக் குழந்தைகளுக்கும் பொருந்தும். அதே நேரம், 150 லிட்டருக்குக் குறைவான பாலை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அந்த அளவுக்கு உயரமாக வளர்வதில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. அதாவது, ஒருநாளைக்கு 250 மி.லி. பாலாவது குடிக்க வேண்டும்.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் குழு ஒன்று ஈடுபட்டது. 1980ன் பிற்பகுதியில் பிறந்த குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். அந்தக் குழந்தைகளின் டீன் ஏஜ் பருவத்தில் அவர்களின் உயரம் கணக்கிடப்பட்டது. அவர்கள் கருவிலிருந்த காலத்தில், அவர்களின் தாய்மார்கள் எவ்வளவு பால் அருந்தினார்கள் என்பதையும் கணக்கிட்டார்கள். டென்மார்க்கில் இருக்கும் 809 பெண்கள், 1988லும் 1989ம் ஆண்டும் பிறந்த குழந்தைகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். ஆய்வின் முடிவில், குழந்தைகள் உயரமாக வளர்வார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த வருடம் இங்கிலாந்து விஞ்ஞானிகள் நடத்திய ஓர் ஆய்வில் இன்னொன்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கர்ப்ப காலத்தில் அதிகமாக பால் அருந்தும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஐக்யூ திறன் மிக அதிகமாக இருக்குமாம். அதற்குக் காரணம் பாலில் அயோடின் அதிகமாக இருப்பதுதானாம்.

***

Photo courtesy: http://admin.mommypage.com/

மேலும் பல கர்ப்ப கால செய்திகள், அரிய தகவல்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஆலோசனைகள் ‘குங்குமம் தோழி’ – செப்டம்பர் 16-31 (மகப்பேறு ஸ்பெஷல்) இதழில்…   

ஜூஸா… பழமா? எது நல்லது?

ImageImage 

பாட்டில் டிரிங்க்கா? வேண்டவே வேண்டாம். அதுக்கு ஜூஸா குடிக்கலாம்என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள். இன்றைக்கு அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல பெருகி வருகின்றன ஜூஸ் கடைகள். சிறு நகரங்கள் தொடங்கி, மாநகரம் வரை ஜூஸ் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. ஜூஸ் நல்லதா? நல்லது. அதைவிடப் பழம் நல்லது!   

‘எந்தப் பழமாக இருந்தாலும் ஃப்ரெஷ்ஷாக, அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியம். குறிப்பாக, ப்ளூபெர்ரி, திராட்சை, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை அப்படியே சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புக் குறையும். ஆனால் அதையே நீங்கள் ஜூஸாகக் குடித்தால் எதிர்மறையான விளைவுகள் வந்து சேரும் என்கிறது ஒரு புதிய ஆய்வு முடிவு.

இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அமெரிக்காவில் இதற்கான ஆய்வை நடத்தினார்கள். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பலரிடம் நடந்தது ஆய்வு. இந்த ஆய்வில் 1,87,000 பேர் கலந்து கொண்டார்கள். டாக்டர்கள், நர்ஸ், பிற துறைகளில் பணிபுரிவோர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். அவர்களுடைய உடல் ஆரோக்கியம் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் கண்காணிக்கப்பட்டது. அவர்களுடைய உணவுப் பழக்கம், உடல் எடை, புகைப்பிடிக்கும் பழக்கம், உடல் உழைப்பு, வாழ்வியல் முறை சார்ந்த நடவடிக்கைகள் உள்பட அனைத்தும் கேள்விகளாகக் கேட்கப்பட்டன. அதற்கு ஆய்வில் கலந்து கொண்டவர்கள் சொன்ன பதில்களின் அடிப்படையில் குறிப்புகள் தயாராயின. விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த ஆய்வின்போது, 6.5 சதவிகிதம் தன்னார்வலர்கள், நீரிழிவு நோய்த் தாக்குதலில் இருந்து தப்பித்தார்கள். அவர்களுக்கு வாரத்துக்கு இருமுறை ஆப்பிள், ப்ளூபெர்ரி, திராட்சை உள்ளிட்ட பழங்கள் கொடுக்கப்பட்டன. மாதத்துக்கு ஒருமுறைக்கும் குறைவாக பழங்களை சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடும்போது, இவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைந்த அளவில் (23%) இருந்தது.

‘‘சில பழங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும் தன்மை இருக்கிறது. இதை எங்கள் ஆய்வு நிரூபித்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ‘ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்நிறுவனத்தில் நியூட்ரிஷியன் துறை பேராசிரியராகப் பணியாற்றும் குய் சன் (Qi Sun). அதே நேரம், பழங்களை ஜூஸாக தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை குடித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 21 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

‘பழங்களை சாப்பிடுவதற்கும் ஜூஸ் ஆக குடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒன்று திரவம் மற்றொன்று திடப் பொருள். அவ்வளவுதான். திடப் பொருளை விட, திரவம் வெகு வேகமாக வயிற்றுக்குள் சென்றுவிடும்.  அதாவது, அந்த வேகம் குளுகோஸையும் இன்சுலினையும் ரத்தத்தில் உடனே கலக்கச் செய்து, பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். பழங்களை அப்படியே சாப்பிடும் போது, மெதுவாக வயிற்றுக்குள் செல்வதால் அந்த பிரச்னை இல்லை. சத்தும் முழுமையாகக் கிடைக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

– சாருலதா