காலத்தை வென்ற கதைகள் – 12

சிவசங்கரி 

Image

நாவல், சிறுகதை, பயணக்கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு என பல தளங்களில் இயங்கி வருபவர். 1942, அக்டோபர் 14ல் பிறந்தார். எந்த எழுத்துமே ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டுமேயன்றி, அழிவுப் பாதைக்கு அழைப்பதாக இருக்கக் கூடாது என்பதைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர். 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள்/குறுநாவல்கள், 36 நாவல்கள், 14 பயணக்கட்டுரைத் தொடர்கள், 7 கட்டுரைத் தொகுப்புகள், 2 வாழ்க்கை சரிதங்கள், பிற எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. 1933ம் ஆண்டிலிருந்து ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற செயல் திட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார். இவருடைய நாவல் ஒன்று ’47 நாட்கள்’ என்ற திரைப்படமாக வெளி வந்திருக்கிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூல்களுக்கான பரிசு உட்பட பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். மத்திய திரைப்படத் தணிக்கைக்குழுவின் நியமன உறுப்பினராக 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தனிமனித விழிப்புணர்வின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகோலும் ‘அக்னி’ (AGNI – Awakened Group for National Integration) என்ற அமைப்பின் நிறுவனர்.

போணி

மண்ணெண்ணைய் தீர்ந்து போய் நாலு நாட்களாகி விட்டன. காஸ் ‘இப்பபோ அப்பவோ’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. கெரசினை வாங்காமல் இருந்து, காஸும் தீர்ந்து, விருந்தாளியும் வந்து விட்டால் கேட்க வேண்டாம். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறு.

வழக்கமாய் தோட்டக்காரனை சைக்கிளில் கடைத் தெருவுக்கு அனுப்பி தேவைப்பட்டதை அவள் வாங்கி வரச் சொல்லுவாள். அவன் யாரோ ‘சகலை’க்கு காய்ச்சல் என்று இரண்டு நாள் லீவு வாங்கிக் கொண்டு போனவன். வாரம் ஒன்றாயிற்று, ஆளையே காணோம்.

டிரைவரைக் கார் எடுக்கச் சொல்லி டின் சகிதம் புறப்பட்டாள். அந்தக் கடைத் தெருவுக்குப் போவது என்பது அவளுக்கு அவ்வளவாகப் பிடிக்காத சமாசாரம். அது என்ன ஜனங்கள்! நூற்றுக்கணக்கில், ஆயிரக் கணக்கில், கும்பல கும்பலாய், சாரிசாரியாய், ஒவ்வொரு கடை முன்னாலும் பிதுங்கி வழியும் மனிதக் கூட்டம்; பாதிப்போர்கள் வேலையாய், மீதி பாதிப்பேர்கள் வெட்டி முறித்துக் கொண்டு, வம்பளந்து கொண்டு.

கார் அந்தத் தெருவில் போக எப்போதுமே ரொம்ப கஷ்டப்படும். காய்கறி, தேங்காய் இறக்கும் லாரிகள்; கட்டை வண்டிகள். சைக்கிள் ரிக்ஷாக்கள், சைக்கிள்கள், பாதசாரிகள், கூலிக்காரர்கள் – எதிரும் புதிருமாய் வந்து தெருவை இரவு இல்லை, பகல் இல்லை என்று சதா நிரப்பிக் கொண்டிருபபார்கள். இத்தனைக்கும் அது ஒருவழிச் சாலை!

அந்தத் தெருவில் மீன் மார்க்கெட்டும், காய்கறி மார்க்கெட்டும், அடுத்தடுத்து இருந்தன. காய்கறி, பழம் வாங்க வேண்டுமானால் சைவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் மார்க்கெட்டுக்குள் பிரவேசிக்க முடியும்.

பிளாட்பாரம் என்று ஒரு ஒழுங்கு இல்லாத அந்தத் தெருவில், இரண்டு பக்கமும் கடைகள் அடைத்துக் கொண்டு நின்றன. பட்டாணி, கடலைக் கடை, வெற்றிலைக்கடை, அரிசியை அம்பாரமாய் கொட்டிக் கொண்டு விற்கும் கடை, தேங்காய் மண்டி, புகையிலை, களிப்பாக்குக் கடை, வெல்ல மண்டி என்று நானாவிதமான கடைகளுக்கு நடுவில் நாலு கடைகளுக்கு ஒரு காபி கிளப் வேறு.

காய்கறி மார்க்கெட்டைத் தாண்டி கிடைத்த இடத்தில் வண்டியை எப்படியோ நிறுத்தினான் டிரைவர்.

‘டின்னை எடுத்துட்டுப் போயி அந்தக் கடையிலே ஒரு டின் கெரஸின் வாங்கிட்டுவா’ என்று பணித்தாள் அவள்.

அவன் போனான். கெரஸின் கடையில் கூட்டம் நெரிவது அவளுக்கு தெரிந்தது. இன்னும் குறைந்தபட்சம் கால்மணியாவது ஆகும் டிரைவர் திரும்ப.

காலை வெயில் சுள்ளென்று பின்பக்க கண்ணாடி வழியாக முதுகில் உறைத்தது. பலாப்பழ சீசன் ஆரம்பமாகி விட்டதால் ஈக்களின் தொல்லை சகிக்க முடியாமல் இருந்தது.

பின் இருக்கையில் சாய்ந்து கொண்டு கண்களை சுற்றிலும் ஓட்டினாள். அவளுக்கு நேர் எதிரில் வாழைப்பழ மண்டி. பச்சைப் பசேலென்று பூவன் தார்கள் வரிசையாய் கொலுவிருந்தன. பழுத்த பழங்களை ‘குடப்பு’ எடுத்து இன்னொரு பக்கமாய் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ரொம்பப் பழுத்துப் போன சில பழங்களை, அழுகிப் போனவற்றை ஒரு கூடைக்காரி மொத்தமாக விலை பேசிக் கொண்டிருந்தாள். அழுகின பழங்கள் மேல் நூற்றுக்கணக்கில் ஈ கூட்டம். இத்தனை அழுகலை எடுத்துப் போய் என்ன வியாபாரம் செய்ய போகிறாள் இந்தக் கிழவி?

அருகில் இருந்தது பட்டாணிக் கடை. மூக்கில் சளி வழிய, அம்மணமாய் நின்றிருந்த குழந்தைகள் இரண்டு கடலை வாங்கிக் கொறிப்பவர்கள் சொத்தை என்று தரையில் விசிறுவதை பொறுக்கித் தின்றன. மாட்டு வண்டி ஒன்று இழுத்து பிடித்துக் கொண்டு எதிர்பக்கம் வந்தது. வரிசையாய் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த வண்டி போக இடமில்லை. ‘ஹை-ஹ-ஹ-ஹட்ரு-ட்ரு’ என மாடுகளை இழுத்து நிறுத்தின வண்டிக்காரன், ‘சைக்கிளை கொஞ்சம் அப்பால நகத்து சாமி’ என்று வந்து போகும் ஆண் மகன்களையெல்லாம் கெஞ்சிப் பார்த்தான்.

ம்ஹூம். ஒருத்தரும் காதில் வாங்கவேயில்லை. வண்டிக்காரன் கீழே இறங்கி ஒவ்வொரு சைக்கிளாகப் பாதை ஓரமாய் நகர்த்தத் தொடங்கினான். இந்தப் பக்கத்தில் சரக்கை இறக்கி முடித்துவிட்ட லாரிக்காரனுக்கு அதற்குள் அவசரம். ‘பாம்…பாம்’ என விடாமல் ஹாரனை அடித்து ”வண்டியை நகத்துய்யா” எனக் கத்தியது தலைவேதனையாய் இருந்தது.

”யோவ்… வண்டிக்காரரே! இன்னா ஒரு ரோட்டிலே வண்டியை நிறுத்திட்டு? எடுய்யா” ஜன்னல் வழியாகத் தலையைவிட்டு லாரி டிரைவர் மீண்டும் கத்தி ஆர்ப்பரித்தான்.

”ஒனக்குத்தான் அவசரமாய்யா? எனக்குந்தான். பாதை உடாம சைக்கிளை நிறுத்திடறாங்க…” வண்டிக்காரன் அசிங்கமாய் வைது கொண்டே சீர் செய்த பாதை வழியாய் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான். லாரியும் தாண்டியது. சீ, என்ன கூட்டம்! என்ன கலாட்டா… அவளுக்கு வியர்த்து, கசகசத்து எரிச்சல் மூண்டது. என்ன பண்ணுகிறான் இந்த டிரைவர்? திரும்பிப் பார்த்தாள். கடையில் யாருடனோ அவன் சுவாரசியமாய்ப் பேசிக் கொண்டிருப்பது புரிந்தது.

எட்டி கார் ஹாரனைச் சப்தித்தாள். டிரைவர் வந்தான். ”என்னாப்பா இவ்வளவு நாழி?”

”நேத்து வந்த சரக்கு தீர்ந்து போச்சாம். புதுசு வந்திருக்கு. எடுத்து ஊத்தறாங்க. கும்பல் இருக்கு.”

”சரி, சரி. சுருக்க வா. இங்கே அவியுது.”

அவன் மறுபடி போனான்.

அவள் பார்வையைத் தனக்கு இடது பக்கம் ஓட்டினாள். காபி கிளப்; புகையிலை மண்டி; வெல்ல மண்டி; வெல்ல மண்டி வாசலில் அச்சு அச்சாய் கறுப்பு வெல்லக் குவியல். இந்தப் பக்கம் வெள்ளைப் பூண்டைச் கொட்டி வைத்துக் கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்தனர் இருவர். ஆண் வியாபாரத்தை கவனித்தால், பெண் பூண்டைப் புடைத்துச் சுத்தம் செய்து கூறு கட்டினாள். காற்றில் பூண்டு தோலி பறந்து வந்து ஜன்னல் வழியாய் அவள் மடிமேல் விழுந்தது. புகையிலை நெடி வேறு. ஜன்னலை மூடினாள்.

அப்போதுதான் அந்தப் பெண்மணி கூடையுடன் அவள் வண்டிக்கருகில் வந்து உட்கார்ந்தாள். கதவைத் திறந்தால் அவள் மேல் இடிக்கும்; அத்தனை நெருக்கத்தில் அமர்ந்தாள். சாணி பூசின கூடையைச் சாக்குப் போட்டு மூடியிருந்தாள். மொண மொணவென்று எதையோ முணுமுணுத்த வண்ணம் சாக்கை எடுத்து தரையில் பரப்பினாள். கூடையில் இருந்த கொய்யாப் பழங்களை அதில் கொட்டி பெரிசு, சிறிசு எனப் பிரிக்க முற்பட்டாள்.

நாட்டுக் கொய்யாப் பழங்கள். சற்றே நீளமாய், பச்சையாய், கிளிப் பச்சையாய் இருந்தன. இன்னும் நன்றாகப் பழுக்கவில்லை.

Image

அந்தப் பெண்மணிக்கு என்ன வயசு இருக்கும? அவளுக்குக் கணிக்கத் தெரியவில்லை. அழுக்கான மெலிந்த உடம்பு, சாயம் போன புடவை, ஜாக்கெட் இல்லாத வெற்று மேனி. அள்ளிச் செருகின செம்பட்டை முடி. மூக்கில் ஒரு சிவப்புக் கல் பித்தளை மூக்குத்தி, கழுத்தில் கறுத்துப் போன மஞ்சள் கயிறு, வாயில் வெற்றிலை.

‘‘காலையிலே கழுத்தை அறுக்கணும்னு இந்தச் சனியன் இருக்குது. எழுந்து பொழுதுதோட வேலைக்குக் கௌம்பினா தாவலை. தானும் கௌம்பாது; என்னையும் உடாது. பளத்தைப் பொளுதோட வாங்கிக் கடை போட்டா விக்கும். வெயிலு கொளுத்தத் தொடங்கிடுச்சு, இன்னா வியாபாரம் ஆவப் போவுதோ..?” இப்போது கொய்யாப் பழக்காரி பேசினது அவளுக்குத் தெளிவாய்க் கேட்டது.

‘‘இன்னா ஆண்டாளு… இன்னிக்குப் கொய்யாப் பளம் பிடிச்சிருக்கியா?.. இளநீ புடிக்கப் போறேன்னே… இன்னா விஸயம்?’’ புகையிலை மண்டிப் பையன் ஒருத்தன் அவளிடம் நெருங்கி வந்து பேச்சுக் கொடுத்தான்.

‘‘ஆங்… இளநீ யாபாரம் பண்ணி நா கீய்ச்சேன்… போவியா… நேத்து அது இருக்கிற பணத்தையெல்லாம் கொண்டு போய்க் குடிச்சிட்டு வந்திடுச்சி. காலையிலே எளுந்து ஒரே சண்டை, என்னாத்தை நான் இளநீ புடிக்கறது. துட்டு வாணாம்?”

”அப்ப இன்னிக்கி எங்காசை திருப்ப மாட்டேன்னு சொல்லு?”

கொய்யாப்பழக்காரி பதில் ஏதும் பேசவில்லை.

இவனிடம் கடன் வாங்கியிருக்கிறாளா?

”சரி… சரி… ரெண்டு பளம் கொடு… நா போகணும்…”

”இன்னும் போணி ஆவலையே. நீ ஒங்கடைக்குப் போ… நான் அப்பால கொணாந்து தாரேன்.”

”அட! இன்னாம்மே… டபாய்க்கிறே… எங்காசு குடு… நா போறேன்…”

தான் வகையாக மாட்டிக் கொண்டிருப்பது பழக்காரிக்குப் புரிய, இரண்டு பழங்களை எடுத்து அவன் கையில் போட்டாள்.

பழத்தை நகத்தால் விண்டு சுவைத்தான் அவன். உள்ளே பழம் சிவப்பாய் இருந்தது. ‘இந்தா பொயிலை’ அவன் எழுந்து போகு முன் ஒரு சின்ன காம்பு புகையிலையை அவள் மடியில் போட்டு விட்டுப் போனான்.

அவன் தலை மறைந்த பிறகு இவள் மொணமொணத்தாள்,  ‘‘பெர்…ய பொவயிலை கொடுத்துட்டாரு… பைசா பெறாத பொவயிலை கொடுத்துட்டு இருவது பைசா பலம் தின்னுட்டுப் போறதைப் பாரு. தூ! இன்னும் போணியே ஆவலை. அதுக்குள்ளவா இவனுக்கு ஆயிப்போச்சி… அவன் பேதிலே போக…” அவள் காரித் துப்பினாள்.

டிரைவர் வந்து விட்டான். டிக்கியில் டின்னை வைத்து விட்டு முன்னால் ஏற வந்தான்.

அவளுக்குத் திடீரென்று இந்த கொய்யாப் பழக்காரி யாரிடம் போணி செய்கிறாள் என்று பார்க்க ஆவலுண்டானது. ”வீட்டிலே முட்டை இல்லே போலிருக்குது. போய் ஆறு வாங்கிட்டு வாயேன்.” பணத்தைக் கொடுத்து டிரைவரை மீண்டும் அனுப்பினாள்.

கொய்யாப் பழக்காரி இப்போது கடையை நன்றாய் பரத்தி விட்டாள்.

ஒரு கிழவன் வருகிறான். கூடவே பேரனா? ‘‘தாத்தா கொய்யா பளம்’’ என்று பையன் சிணுங்க, கிழவன் குந்தி உட்கார்ந்து பழக்காரியிடம் பேரம் பேசினான்.

”ஓலை கட்டின பளம். ரூபாய்க்கு ஆறு. ஒரே விலை’’ அவள் கராறாய்ப் பேசினாள்.

”அங்கங்கே பத்து கொடுக்கறாங்க… இன்ன நீ..?”

”அப்ப அங்கியே போய் வாங்கிக்க… இங்கே ஒரே விலை. ஏளு வரும்…”

கிழவன் ஒன்பது பழம் பொறுக்கி பையில் போட்டு ஒரு ரூபாயை நீட்டினான்.

கொய்யாப் பழக்காரிக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘ஏழு பளம்தான்னு நான் சொல்றேன். ஒன்பது எடுத்தா எப்படி? போடுய்யா கீளே’’ கையை நீட்டி பழங்கள் கொண்ட பையைப் பிடித்தாள்.

”அட போம்மே. ஒன் பளம் இல்லாட்டா வேற கெடைக்காதா என்ன? வாடா தம்பி.” ரோஷம் வந்து பழங்களைக் கொட்டி விட்டு கிழவன் கிளம்பி விட்டான்.

போணி ஆவதற்கு முன் அபசகுனம் மாதிரி ஆகிறதே என்று கடைக்காரிக்கு கோபமான கோபம்.

முட்டைகளுடன் டிரைவர் வந்துவிட்டான்.

”போணி பண்ண துப்பில்லாததுகள்ளாம் கடைக்கு வந்திடுங்க… மானங்கெட்டதுக…’’ அவள் ஆக்ரோஷமாக வசைபாடுகையில் ஒரு இளைஞன் அவளிடம் வந்து நின்றான்.

போணி ஆகப்போகிறதா? என்ன சொல்லி டிரைவரை நிறுத்தி வைக்கலாம்?

”பச்சை மொளகாய், இஞ்சி இல்லேன்னாங்க. போய் இருபது காசுக்கு வாங்கி வா.” டிரைவருக்கு நினைத்து நினைத்து அவள் வேலை சொல்லுவது கோபத்தை எழுப்பியது. திறந்த கதவைப் படீரென ஒங்கிச் சாத்திவிட்டுப் போனான்.

”என்னம்மா பழம் எப்படி?”

கூடைக்காரி இன்னும் கோபம் தணியாத நிலையிலேயே இருந்தாள்.

”ரூபாய்க்கு ஆறு. வேணும்னா கை வை.”

”எட்டு வருமாம்மா?” என்று கேட்டுக் கொண்டே அந்த இளைஞன் பழங்களில் கையை வைக்கவும் அவள் சீறினாள்.

”தொடாதைய்யா, வெலையை கேக்க வேண்டியது. பளங்களை புரட்ட வேண்டியது. அப்புறம் வேணாங்கிறது. காசை வெச்சுட்டு தொடு. இன்னும் போணி ஆவலை. அதுக்குள்ளாற தொடாதேன்னா புரியாது?”

கொஞ்சம் ‘டீக்’ காக உடுத்தி, படித்தவன் மாதிரி தோற்றமளித்த இளைஞனுக்கு முகத்தில் அறைந்தாற் போல ஆகிவிட்டது.

”வார்த்தையை அளந்து பேசும்மா. விலை கொடுக்காமலா உன் பழத்தை எடுக்கப் போறேன்? மரியாதை இல்லாத பேச்சு என்கிட்டே வாணாம். ஆமாம்” கையை உதறிக் கொண்டு எழுந்து நடந்து போனான்.

அந்த வாடிக்கையும் போய் விட்டது. இவள் எப்போது போணி பண்ணி, எப்போது வியாபாரத்தை முடிக்கப் போகிறாள்? அவளுக்குப் பாவமாக இருந்தது.

பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த டிரைவர் அவளிடம் பேசாமலேயே இருக்கையில் அமர்ந்து ‘வீட்டுக்குத்தானே!’ என்றும் கேட்டுவிட்டு வண்டியைக் கிளப்பி விட்டான்.

கூடைக்காரி உரத்த குரலில் யாரையோ ‘‘பேமாணிப் பசங்க… ராஸ்கோல்’’ திட்டுவது அவளுக்குக் கேட்டது.

யாரைத் திட்டுகிறாள்? அவள் குடிகாரக் கணவனையா? கடன் கொடுத்த புகையிலைப் பையனையா? போணி செய்யாமல் போன நபர்களையா?

கூடைக்காரிக்கு எப்போது போணி ஆகும் என்ற கவலை அவள் நெஞ்சை அடைத்துக் கொண்டது.

– மார்ச் 1977.

காலத்தை வென்ற கதைகள் மற்றவை…

வாஸந்தி

வத்ஸலா

பா.விசாலம்

பூரணி

திலகவதி

அனுராதா ரமணன்

லட்சுமி

அம்பை

அநுத்தமா

ராஜம் கிருஷ்ணன்

ஆர்.சூடாமணி

காலத்தை வென்ற கதைகள் – 9

பா.விசாலம்

Image

நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். பெண் விடுதலையிலும் மனித நேயத்திலும் தீராத பற்றுக் கொண்டவர். இவருடைய ‘மெல்ல கனவாய் பழங்கதையாய்’ தமிழில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய நாவல். ‘நொய்’ என்கிற முதல் சிறுகதை சரஸ்வதி பத்திரிகையில் வெளியானது.  மார்க்ஸிய கருத்தியலின் பால் ஈடுபாடு கொண்டவர். 1952ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கம்யூனிஸ்டான ராஜு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சமூகப் பணியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 1973ல் இலங்கை, கொழும்புவில் நடந்த பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக பிரதிநிதியாகப் பங்கேற்றார். 1975ல் கிழக்கு பெர்லினில் நடந்த பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.  தலைக்கோல் என்ற நாடகக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ‘உண்மை ஒளிர்கவென்று பாடவோ’ நூல் முக்கியமான ஒன்று. தமிழகத்தின் தென்மேற்குப் பகுதியில் கிறிஸ்தவ மதம் வளர்ந்தவிதத்தையும் சொல்லப்படாத வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

****

அடிமைகள்                    

உளுந்தூர்பேட்டையில் நின்ற சில நபர்களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டபோது அநேகமாக எல்லோரும் தூக்கம் என்ற தேவதைக்கு அடிமையாகி இருந்தார்கள். சீதையின் பக்கத்து சீட் மாமி தூங்கி அவள் தோளில் அடிக்கடி சரியலானாள். பஸ் வேகம் எடுத்து முன்னேறியது. சீதையின் நினைவுகள் பின்னோடியது.

மாணிக்கவேலர் நாடகக் கம்பெனி என்றால் அன்று சாதாரணமா என்ன? குரூப்பில் ஒருவனை சோடை என்று விரல் மடக்க முடியுமா? சீதை அதில் தன்னுடைய திறமையைக் கொண்டு நேர்மையாக நாலு காசு சம்பாதித்து வயிற்றைக் கழுவிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் அதில் நடிகையாக சேர்ந்தாள். எவ்வித சலனத்துக்கும் ஆளாகாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டும் வந்தாள்.

ஆனால், சீதையின் உறுதியைக் குலைப்பவனே போல் நிர்மல். அவனின் அந்த அறிவாற்றல், எல்லாவற்றையும்விட ஒரு அனுதாபம்.

பந்தியில் அமர்ந்து எல்லோரும் சாப்பிடுகையில் நிர்மல் தலைகுனிந்தபடியே இருப்பான். மற்றவர்கள் அவனைக் கிண்டல் செய்வார்கள்.

விசாரித்தால் நாடகம் முடிந்து நேரே வீட்டிற்குப் போனானானால் ‘நாடகக்காரப் பயலே’ன்னு திட்டி ‘வீட்டு வாசப்படி ஏறாதலே நாயே’ன்னு அவன் அப்பா திட்டியது வெளிவரும். ஆயினும் இவன் தந்தையிடம் வைத்திருக்கும் மரியாதை, தம்பிமார்களை நேசிக்கும் அளவு கடந்த பாசம், பலரின் கிண்டலுக்கும் அவன் ஆளாவது தவிர்க்க முடியாதாயிற்று. தவிலு, ஆர்மோனியம், மிருதங்கம், எல்லாமே அவனவன் ரசனைக்குத் தகுந்தாற்போல் கிண்டல் செய்வதை நிர்மல் பொறுத்துக் கொள்வான். எல்லாவற்றுக்கும் ஒரு புன்சிரிப்புதான் பதில். எல்லோருமாகச் சேர்ந்து கொடுத்த பட்டம் ‘தசரத ராஜகுமாரன்!’ அப்பா சொன்னால் போதும், அதுதான் வேதவாக்கு.

சீதைக்கு நிர்மலிடம் ஏற்பட்ட அனுதாபம் முதலில் ‘சாப்பிட்டாச்சா’ன்னு குசலம் விசாரிப்பதில் தொடங்கி நாடக வசனங்களில் அவனுக்கு உதவுவது, பாட்டுக்களுக்கு மெட்டுகள் போடுவதில் உதவுவது, பாடிக் காட்டுவது இப்படியாக வளர்ந்தது. ஒருநாள் சாப்பிட்டு முடிந்ததும் கொட்டகையின் பரந்த தரைப் பகுதியில் நடிகர்களும், அம்மா நடிகைகளும், பலரும் வெற்றிலை குதப்பிக் கொண்டு இருக்கையில், ஒரு ஓரமாக சீதை உட்கார்ந்திருக்க, ஒரு இரண்டு அடி தள்ளி நிர்மல் உட்கார்ந்து கொண்டு முந்தைய இரவில், கோவலனாக நடித்தவன் ‘மாசறு பொன்னே, வலம்புரி முத்தே’ என்று பாடியது சரியில்லை இன்னும் எடுப்பாக இருந்திருக்க வேண்டும் என்று பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த மாணிக்கவேலர் ஒரு கணம் நின்று இருவரையும் மாறிமாறி பார்த்துவிட்டுச் சென்றார். ஏனோ நிர்மல் பாடுவதை நிறுத்திவிட்டான்.

மாணிக்கவேலர் தன்னை வந்து பார்க்கச் சொல்லி சீதையை வரவழைத்தார்.

”ஏன்மா, உன் தகப்பன் ஸ்தானத்திலிருந்து கேட்கிறேன். உனக்கு என்ன வயசு?”

”இருபத்திரண்டு ஐயா”.

”நீ கல்யாணம் பண்ணிக்கிறது நல்லதுன்னு எனக்குப்படுது. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம நாடகக் கம்பெனியிலே தொடர்ந்து இருக்கலாம். நிர்மல்கிட்டே நான் பேசிட்டேன். அவன் குடும்பத்துமேல் பாசம் உள்ளவன். உன்னையும் ரொம்ப நேசிக்கிறான். நானே அவன் அப்பாகிட்ட பேசிப் பார்க்கலாம்னு இருக்கேன்… நீ என்னம்மா சொல்ற?”

”நீங்கதான் அய்யா எனக்கு அப்பா மாதிரி. எனக்கு எது நல்லதோ நீங்க அதைச் செய்ங்க.”

மாணிக்கவேலர் சீதையின் வீட்டிற்கு வந்து சீதையின் அம்மாவிடம் நடந்தவற்றைச் சொல்லி நிர்மலின் அப்பாவிடம் தான் சென்று வந்ததையும் சொன்னார்.

நிர்மல் தன் வீட்டாரிடம் எதுவும் பேசத் தயாரில்லை. சீதையை இழக்கவும் தயாராயில்லை. தன் வீட்டிலிருந்து யாரும் வரமாட்டார்கள். அதனால் ரிஜிஸ்டர் கல்யாணம் போதும் என்றான்.

”எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவர் காது கொடுக்கிற மாதிரியே தெரியல்லைம்மா. ரொம்பத் தலைகனம் பிடிச்சவறாயிருப்பார் போல் தெரிகிறது. ஆனால் எதுக்கும் நீங்க கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்”.

சீதையின் அம்மா, ”அவர் வீட்டிலே யாரும் வரலேன்னா அதுக்காக பொண்ணைக் கூட்டிவிட்ட மாதிரி அனுப்ப முடியுமா?”ன்னெல்லாம் சொல்லிப் பார்த்தாள். மாணிக்கவேலரோ சீதையின் அம்மாவை சமாதானப்படுத்தி, தானே சாட்சியாயிருந்து ரிஜிஸ்டர் திருமணம் பண்ணி வைத்தார். அப்படியும் சீதையின் அம்மா நாலு பேர் அறிய ஒரு விருந்து ஏற்பாடு பண்ணி நிர்மலின் வீட்டிற்கும் சென்று விருந்துக்கழைத்தாள்.

விருந்துக்கு அவனது வீட்டிலிருந்து யாரும் வரவில்லை.

அழகிய பெண் குழந்தை. சீதையின் கற்பனையில் எத்தனை எத்தனையோ அழகழகான பெயர்கள். பிரசவம் பார்க்கவும், கஷ்டப்படவும் சீதையின் அம்மா. நிர்மலின் அம்மா வந்தாள். நாகரத்னம்ன்னு அவர் அம்மா பேரைத்தான் வைக்கணும்னு நிர்மலின் அக்கா திருவாய் மலர்ந்தருளினாள். பிறந்த குழந்தைக்கும் பெற்றவளுக்கும் எந்த சம்பந்தமுமில்லாத மாதிரி எல்லோரும் நடந்து கொண்டது சீதைக்கு அதிர்ச்சியாயிருந்தது.

”ஏண்டி, அவா குழந்தை. அவா இஷ்டம்போல பேரு வெச்சுட்டுப் போறா, ஒனக்கென்ன நஷ்டம்?” சீதையின் அம்மா கேட்டதும், ”எனக்கென்ன நஷ்டம்?” குழந்தை மேலே அப்பாவுக்குத்தான் உரிமையா? அம்மாவுக்கு இல்லையா? சரி போகட்டும், அவர்தானாகட்டும், எங்கிட்ட ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை ”உனக்கு இந்த பேரு பிடிச்சிருக்கா”ன்னு கேட்டிருந்தாகூட நான் முகத்துக்கு நேரா பிடிக்கலைன்னா சொல்வேன். அது கூட கேக்கல்லையேம்மா?’’.

”இதெல்லாம் பொறுத்துப் போகப்படாதா?” சீதையின் அம்மாவின் உபதேசம்.

தனிக்குடித்தனம் என்றாயிற்று. அன்று நிர்மல் நிலைகொள்ளாமல் அதைச் செய்வதும், இதைச் செய்வதும்! ”அக்கா வர்றா, முதல் முதலா அக்கா வர்றா. ஏய் சீதை, அதைச் செய்து வை. இதை இப்படி வை.’’ உற்சாகம் கொள்ளை போனதில் அந்த உற்சாக வெள்ளத்தில் சீதையும் இழுத்துச் செல்லப்பட்டாள். அக்கா வர்ற அன்னைக்கு இன்ன புடவை கட்டுவது, குழந்தைக்கு இந்தச் சட்டை போடணும், தான் வீட்டை நல்லா வச்சிருக்கிறதா அவர்கள் சர்டிபிகேட் தரணும்கிறதுக்காக சீதை பட்ட பாடு, வந்த அன்று மத்தியானம் வேலைக்காரியிடம் அக்கா கேட்ட கேள்வி.

”ஏண்டி, நீ இரண்டு வருஷமா இங்கேயே இருக்கியே. இந்தக் குழந்தை என் தம்பிக்குப் பிறந்ததுதானா”ன்னு கேட்டிருக்கிறாள். அக்காவிற்கு இவள் நாடகக்காரிதானேன்னு எண்ணம்.

இதை கேட்டதும் சீதை முதலில் அக்காவின் குணம் இத்தனை மோசமானதா என்று எண்ணினாள். இதை நிர்மலிடம் சொல்வதா? சொன்னால் அக்காவிடம் போய் ஏதாவது சண்டை போட்டால்? அல்லது மனம் இடிந்து போனால்? சொல்வதா வேண்டாமா? சொல்லாமலிருந்தாலும் தன் ஒருத்தியால் இந்த வேதனையை எப்படித் தாங்க முடியும்?

”ஏய், ஏன் அழற.”

”உங்க அக்கா என்ன கேட்டிருக்கா தெரியுமா? நாகரத்தினத்திற்கு அப்பா நீங்கதானான்னு கேட்டிருக்கா?” இருட்டில் நிர்மலின் முகம் என்ன காண்பித்தது என்று சீதைக்குத் தெரியவில்லை.

”இங்க பாரு உன்னைப் பற்றி யாரு என்ன சொன்னா என்ன? நீ என் உயிரல்லவா?” என்று சொல்லப் போகிறான். இதோ நிர்மலின் கைகள் தன்னை அணைக்கப் போகிறது. அவன் மார்பில் சாய்ந்து கொண்டால் தனக்கெல்லாமே மறந்துபோய், மனம் இதமாகி விடாதா? வினாடிகள், நிமிஷங்கள்… ஊஹும். நிர்மல் அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுப்பது உணர முடிந்தது. சீதை ஏமாந்தாள். தன் மனைவியை இழிந்துரைத்தும் மவுனம் சாதிப்பவனுக்கு இருப்பது ஆண்மையா?

***

Image

பஸ் ஒரு பரபரப்பான இடத்தில் வெளிச்சம் நிறைந்த இடத்தில் நிற்கிறது. கண்களைத் திறந்தாள். திருச்சி பஸ் நிலையம். 50 வயதானாலும் நடு இரவில் பஸ்ஸை விட்டிறங்கி காப்பி குடிக்கும் பொம்பிளையை எல்லோரும் விநோதமாகப் பார்க்கிறார்கள்.

நள்ளிரவு கடக்கும் 1 மணி அளவில் பஸ் புறப்பட்டது. சீதை திரும்பவும் கண்களை மூடிக் கொண்டாள். நாகரத்தினத்திற்கு வயது 16. அக்கா ஒரு நாள் வருகிறாள், மகனையும் அழைத்துக் கொண்டு. ‘ஒங்க அத்தான்தான் என்னை இப்படி விட்டு விட்டுப் போயிட்டாரே. அவனாவது ஒழுங்காகப் படிக்கிறானா? போன வருஷம் பி.யு.சி. பெயில். நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ அவனை உங்கிட்டே விட்டுப் போறேன்.’

சீதைக்குத் தெரியும். இது வயத்துல நெருப்பைக் கட்டிக்கிற வஷயம்னு. ஆனால், சீதையிடம் அபிப்ராயம் கேட்பதற்கு அவள் யார்?

அன்று நிர்மல் மத்தியானம் வீட்டிற்கு சாப்பிட வந்து கொண்டிருக்கிறான். கொஞ்ச அடிகளுக்கு முன்னாலேயே சீதையின் குரல் உச்சத்தில் கேட்கிறது. என்னவாயிருக்கும்…

”டேய் ராஸ்கல். இந்த விஷயத்திலே மாத்திரம் இந்த சீதை பொறுமையாயிருப்பான்னு நினைக்காதே. காளியா மாறி உன் குடலையே உருவிடுவேன் கேட்டுக்கோ. ஆட்டைக் கடிச்சு. மாட்டைக் கடிச்சு மனுஷாளைக் கடிக்க வந்த கதை மாதிரி ஒண்ணுமறியாத அந்த சின்ன குழந்தை, என் பச்சப்பசலை… நீ ஒளிஞ்சிருந்தா பாக்கிற? ஏண்டா ஒங்கம்மா முலப்பாலு குடிச்சுதானா வளர்ந்தே. டேய் அவ பாலக் குடிச்சு வளந்தவனுக்கு இந்தப் புத்திதாண்டா வரும். பொறுக்கி ராஸ்கல்.”

நிர்மல் இத்தனையும் கேட்டுக் கொண்டே உள்ளே வருகிறான். தொண்டையைக் கனைத்துக் கொண்டான். ஒன்றையுமே கவனிக்காமல் செருப்பைக் கழட்டிவிட்டு யாதுமறியாதவனைப் போல் குளியலறைக்குச் சென்றான். கதவைத் தாழிடும் சப்தம் கேட்டது. வெளியில் வர வழக்கத்திற்கும் மாறான நேரம் ஆயிற்று. மருமான் மெல்ல அங்கிருந்து நழுவி தன் அறைக்குச் சென்று விட்டான்.

சீதை தானும் மகளும் ஏதோ அனாதைகள் ஆகிவிட்டது போலுணர்ந்தாள். கண்ணீர் பொலபொலவென வடிய அடுக்களைக்குள் போய்விட்டாள். சீதைக்குப் புதிய பயம் பிடித்துக் கொண்டுவிட்டது. கண்டும் காணாததுபோல் நடக்கும் நிர்மலுக்கு அப்படியே நடந்தாலும் நடக்கட்டும், பெண்ணை அவனுக்கே கொடுத்து விடலாமென்றிருக்குமோ? தான் தலையிட்டால்தான் பழி? தானாகவே நிகழும்படி விட்டுவிட்டால்? அப்படியும் இருக்கலாமோ! சீதைக்கு அதன் பின்னர் தூக்கமுமில்லை. பசியுமில்லை.

அவன் ஒரு நாள் கஞ்சா அடிப்பதைச் சொன்னபோது கண்டு கொள்ளாத நிர்மல், அவன் வேலைக்காரியிடம் சில்மிஷம் பண்ணினான் என்று சொன்னால் மாத்திரம் கேட்டிருக்கவா போகிறான். எப்படியோ போகட்டும். தான் பிழைத்துக் கொண்டு விட வேண்டும் என்று கருதினாள் சீதை.

***

மறுபடியும் மாணிக்கவேலர் தன் வயதான காலத்திலும் சீதைக்கு உதவ முன்வந்தார்.

”ஏம்மா சீதை… குழந்தை இப்போதானே பி.ஏ.முதல் வருஷம் போறா முடிக்கட்டுமே?”

”இல்ல அய்யா. என் இக்கட்டான நிலமை உங்களுக்குப் புரியாது. நீங்க ஒருத்தர் சொன்னால் மாத்திரம்தான் இவர் தட்டமாட்டார். அதனாலே இந்தக் கல்யாணத்தை முடிச்சு வைச்சிருங்கோ.”

”சரி. நீ சொல்லிட்ட. இனி கவலைப்படாதே.”

நிர்மல் அன்று சற்று விச்ராந்தியாக இருந்தான். நாகுவின் கல்யாண விஷயமா சீதை அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

”உனக்கு எப்படி இந்த யோசனை வருது? இப்போ என்ன அவசரமாம் கல்யாணத்திற்கு. அதெல்லாம் எனக்குத் தெரியும். போ” என்று எரிந்து விழவே, ஒரு கணம் சீதைக்கு நிர்மல் மேல் வெறுப்புக்கூட ஏற்பட்டுவிட்டது.

மாணிக்கவேலர் நினைத்ததை முடித்துவிட்டார். நாகுவின் கல்யாணம் முடிந்து கணவனுடன் இனிதே அனுப்பி வைக்கப்பட்டாள்.

சீதை நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

”போஸ்ட்”.

சீதைதான் ஓடிப்போய் வாங்கி வந்தாள். சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் நிர்மல் கொஞ்சம் கண்ணயர்ந்திருந்தான். விழித்ததும் சீதை உடைக்காமலே வைத்திருந்த கடிதத்தை கொடுத்தாள்.

”அக்கா கடிதந்தான்.”

”என்னவாம்.”

”அதுதான் சொல்லியிருந்தேனே, அம்மாவுக்கு 80 வயது முடிகிறதினாலே அதை நாமெல்லாம் சேர்ந்து கொண்டாடணும்னு ஏற்கெனவே எழுதியிருந்தாங்களே… நானும், நாம இரண்டு பேரும் வர்றதா எழுதிப் போட்டிருந்தேன். எந்த தேதியில வருகிறோம்னு கேட்டு எழுதியிருக்கா.”

சீதை ”நான் வரல்ல”.

நிர்மல் முறைத்தான்.

”எனக்கு நெஞ்சு வலியிருக்கு. கால் வலி, கைவலி, நான் வரல்ல”.

”உனக்கு எப்போதான் எங்கேதான் வலியில்ல? அதெல்லாம் சரி கிடையாது. நாம போகாம இருக்கிறது சரியில்ல. அவ்வளதான் சொல்வேன்.”

”அதுசரி, எனக்குன்னு ஒரு விருப்பு அல்லது வெறுப்பு இருக்கக் கூடாதா? உங்கள நான் தடுக்கல. எனக்கு வர இஷ்டமில்லேன்னா இல்லதான்.”

… பதில் ஏதும் சொல்லாது முகம் கழுவப் போய்விட்டார் நிர்மல்.

சீதை பின்னாலேயே நடந்தாள். இத்தனை காலம், எத்தனையோ விஷயங்கள் எனக்கு விருப்பமில்லாம இருந்தப்பகூட நான் எவ்வளவோ செய்யலையா?

சீதை வாசல்படியில் கையை கன்னத்தில் ஊன்றியவாறு உட்கார்ந்து விட்டாள்.

அங்கே தனக்கு வரவிருப்பமில்லேன்னா அதைப் புரிந்து கொள்ளக் கூடாதா? சீதை காரணமில்லாமல் சொல்வாளான்னு கூடவா நினைத்துப் பார்க்கக் கூடாது? அத்தனைக்கும் மனைவி என்கிறவள் அல்பமா?

எல்லாவற்றையும் பொறுத்துத்தானே போற நீ. இதையும் பொறுத்துக்கோ என்று மாணிக்கவேலர் சொல்லியிருக்கா விட்டால் சீதை புறப்பட்டே இருக்கமாட்டாள்.

போனது போயாச்சு. அதற்குப் பிறகு எதிலும் பின்வாங்குவது சீதையின் குணமில்லை. சீதை எல்லாவற்றையும் மறந்துவிட்டு வேலைகளில் கலந்து கொண்டாள். பரிமாறுவதில் சேலையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு முழுமூச்சுடன் இறங்கிவிட்டாள். ஒரு சுற்று ஆட்கள் சாப்பிட்டு முடிந்ததும், பின் சென்று கைகால் முகம் கழுவிக் கொண்டு திரும்பியும் வந்தாள். தன் நாத்தனார், ஓர்ப்படிகள் எல்லாரும் உட்கார்ந்து விட்டனர்.

”நீயும் உக்காரு.”

”பரவாயில்ல. நான் கிளம்பறேன்” சாப்பாடு முடிந்தது. எல்லாரும் விடைபெறுவதும், அவர்கள் இவர்களை வழி அனுப்புவதிலும் நேரம் போய்க் கொண்டிருந்தது. வயது 50ஐ நெருங்குகிறதல்லவா? சீதைக்குப் பசியினால் சற்றே தலை சுற்றுவது தெரிந்தது. அடுக்களைக்குப் போனாள். வெஜிடபிள் பிரியாணி இரண்டு பாத்திரம் காலியாகக் கிடந்தது. சீதை என்ன செய்கிறாள் என்று பார்க்கவோ என்னவோ நிர்மலின் அக்கா அடுக்களைக்கு வந்தாள்.

கொஞ்சம் கிசுகிசுத்த குரலில் ”சீதா எல்லாம் ஆகிப்போச்சு போலிருக்கு. அதுதான் உன்ன முதல்லியே உக்காரச் சொன்னேன். நீ கேட்டாதானே. இரு, இரு” என்று சொல்லிக் கொண்டு, ”நீ பழைய சாதம் சாப்பிடுவேல்ல. கொஞ்சம் போல இருக்கு… வா, நான் எடுத்து வைக்கிறேன். இப்படித் தட்டுப்படும்னு நெனக்கல்ல”.

சீதைக்கு அந்நேரம் பழையது பார்த்த உடனே புரட்டுகிற மாதிரி இருந்தது. வைத்துவிட்டு நிர்மலின் அக்கா முன் கட்டிற்குப் போய் விட்டாள்.

சீதை ஒரு கவளம் வாயில் வைக்கப் போகும்போது விருந்தினரைத் தொல்லைப்படுத்திவிடக் கூடாதென்று பின் பக்கம் கட்டிப் போட்டிருந்த நாய் ”எனக்கொன்றுமில்லையா” என்று கேட்பதுபோல் செல்லமாக ஊளையிட்டது. சீதைக்கு பசி மந்திச்சாப்போய் வாந்தி வருகிற மாதிரி இருக்கவே இலையோடு மோர்விட்டு பிசைந்த சோற்றை நாயிடம் கொண்டு வைத்துவிட்டு, கைகழுவி விட்டு வரவும், நாய் திரும்பவும் ஊளையிடுவது மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தாள்.

ஐயோ! கடவுளே! என்ன இது? நாய் ஏன் இப்படிப் பண்ணுகிறது? என்ன ஆச்சு அதுக்கு?

குமரா, ஜோதி, மணி என்று எல்லா குழந்தைகளின் பேர்களையும் சொல்லி அழைத்தாள்.

”இங்க வந்து பாருங்களேன். ஐயோ நாய்க்கு என்னவோ செய்யுதே” இதற்குள் மைத்துனர்மார்களும், நிர்மலும் அந்த இடத்திற்கு வந்தனர்.

”என்னாச்சு? என்னாச்சு?”

இதற்குள் சுருண்டு விழுந்து நாய் தன் கடைசி மூச்சை விடவும் எல்லோரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். நிர்மலின் அக்காவும் அம்மாவும் அந்த இடத்திற்கு வரவேயில்லை. ரொம்ப முக்கியமானவர்களிடம் வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.

தான் இதைச் சாப்பிட்டு, தனக்கு இது நேர வேண்டியது என்று அவள் யாரிடம் சொல்ல முடியும்?

நிர்மலின் அருகில் சென்ற சீதை, ”ஏங்க, இந்தச் சோற்றை, என்னைச் சாப்பிடச் சொன்னார்கள். நான் திங்கப் பிடிக்காமல் நாய்க்குப் போட்டேன்,”

ஒரு நிமிட மவுனம் நிலவியது.

சீதையைத் திரும்பிப் பார்க்காமலேயே ”இதுக்குப் போய் இப்போ என்னை என்ன செய்யச் சொல்ற?” ஒன்றுமே நடக்காதது போல ஒரு பத்திரிகையைப் புரட்டலானான்.

சீதையின் மனதில் சூறாவளியும் புயலும் கொந்தளித்தது. ”உனக்குப் பிடிக்காவிட்டால் தூரத்தான போடணும். அந்த நாய்க்குப் போய் ஏன் போட்ட?”

சீதையின் காலடியில் பூமி நழுவியது. இரண்டாகப் பிளந்து அவளுக்கு வழிவிட்டது.

சீதை கண் விழித்துப் பார்க்கிறாள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறாள். தனக்கு தெரிந்த ஆடல் பாடல் கலைக்கு உயிரூட்டப் புறப்பட்டு விட்டாள். அது அவளால் முடியும்.

மதுரையில் வாங்கிய மல்லிகை நெல்லை பஸ் நிலையம் வரும்போது நன்றாக மலர்ந்து மணம் பரப்புவதை உணர்ந்தாள்.

(பிப்ரவரி, 1991 கணையாழியில் வெளியானது)

***

Painting Credit: http://asthoughi.wordpress.com/ 

காலத்தை வென்ற கதைகள் – 6

அனுராதா ரமணன்

Image

சமூகம், பெண்ணுரிமை, புதிய சிந்தனை இவற்றை மையக் கருத்துகளாகக் கொண்டு தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர். வெகுஜன இதழ்களில் அதிகமாக எழுதி வந்த இவருக்கு வாசகிகள் அதிகம். 1948 ஜனவரி 1ம் தேதி பிறந்தார். 18 வயதில் திருமணம். 28 வயதில் கணவர் ரமணன் இறந்து போனார். சுதா, சுபா என இரு மகள்கள். 1977ல் எழுதத் தொடங்கிய இவர் 1000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், எண்ணற்ற நாவல்களையும், தொடர்கதைகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய படைப்புகள், ‘சிறை’, ‘கூட்டுப்புழுக்கள்’, ‘ஒரு மலரின் பயணம்’, ‘ஒரு வீடு இரு வாசல்’ போன்ற திரைப்படங்களாகவும் மலர்ந்தன. தொலைக்காட்சித் தொடர்களாகவும் இவர் கதைகள் ஆக்கம் பெற்றன. சிறந்த ஓவியர். சென்னை, எழும்பூர் ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றவர். சில பத்திரிகைகளில் ‘லே அவுட்’ ஆர்டிஸ்டாக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. 2000ம் ஆண்டு, மே மாதம் இவருக்கு இதய மாற்றுவழி அறுவை சிகிச்சை (பைபாஸ் சர்ஜரி) செய்யப்பட்டது. தன் மரணத்துக்குப் பிறகு உடல் உறுப்புகளை தானமாகக் கொடுக்க விரும்பினார். ஆனால், பல ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் இறந்த பிறகு உடல் தானம் சாத்தியப்படவில்லை. கண்கள் மட்டும் தானமாக வழங்கப்பட்டன. தனது 62வது வயதில் மே 16, 2010 அன்று காலமானார்.

அக்னி              

யிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில் ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல…

காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது… மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் நாலு பேரும், தங்கள் தாயின் திதியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்பாவைப் பட்டினிப் போட்டுவிட்டு, எப்பொழுதோ செத்துப்போன அம்மாவுக்கு வடை பாயசத்தோடு பரிந்து பரிந்து சாப்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

இது என்ன அக்கிரமம்…?

‘இவர்கள் இப்படிப் போடும் சோற்றை அவ சீந்துவாளோ. புருஷன் சாப்பிடாம, கை நினைக்காதவடா அவ… நான் சாப்பிட்டு விட்டுப்போன எச்சில் இலையில்தான் உட்காருவா… இன்னிக்கு என்னைப் பட்டினி போடறேளே… நியாயமா?’ ராமநாதன் தனக்குள் கேட்டுக் கொள்கிறார்.

வயசு திட்டத்தட்ட எழுபத்தைந்து ஆகிறது அவருக்கு… போதாக்குறைக்கு வியாதிகள் வேறு… பட்டினி கிடக்க முடியுமா…?

”கிழத்துக்கு இருப்பே கொடுக்கலை.”

– உள்ளே மூத்த மருமகள் லட்சுமி, அடுத்தவளான சுசீலாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

”யார்பட்டினி கிடக்கச் சொன்னது? அப்பவே அவருக்கான கோதுமைச் சாதம் ஆயிடுத்து… தயிரைவிட்டுப் பிசைஞ்சு வாயில போட்டுக்க வேண்டியதுதானே? பிடிவாதம்… வடை பாயசத்தோடதான் சாப்பிடுவேன்கிற பிடிவாதம். கழுகுமாதிரி மூக்கு வியர்க்க உட்கார்ந்துண்டிருக்கார்… இவர் என்கிட்ட சொல்லிட்டார் – அப்பா அப்படித்தான் குழந்தை மாதிரி அடம் பிடிப்பார்… நீ எதையும் கொடுத்துடாதே… அப்புறம் அவஸ்தைப் படறது நாமதான்னு…”

இவர்களின் பேச்சு, ராமநாதனின் காதில் விழாது… பசியினால் காதடைக்கவில்லை… ஏற்கெனவே காது மந்தித்து வெகு காலமாகிறது. சர்க்கரை வியாதி முற்றியதில் கண்ணிரண்டும் சுத்தமாய் அம்பேலாகிவிட்டது.

சதை வற்றி, வெறும் எலும்புக் கூடாய்… ஈர்க்குச்சியை ஒடிப்பதுபோல நாலாய் ஒடித்து பொட்டலமாய் கட்டி விடலாம்… அப்படி ஒரு தேகம்…

Image

அறுபது வயசு வரையில் ராமநாதன், கஞ்சி போட்ட சட்டை போல எத்தனை விறைப்பாக இருந்தார்… அப்பொழுது மாத்திரம் இந்தச் சர்க்கரை வியாதியெல்லாம் இல்லையா…? இருந்ததே… ஆனால், அப்பொழுது மனைவி மங்களமும் இருந்தாள். இவருக்குச் சர்க்கரை கூடாது என்றான பின், தானும் இவர் சாப்பிடும் உணவையே சாப்பிட்டுக் கொண்டு…

அவள் இருந்தவரையில் அவருக்குச் சிரமம் தெரியவில்லை. அதே சமயத்தில் நாக்கை அடக்கியாளும் தெம்பும் இருந்தது.

சும்மா சொல்லக் கூடாது…

அந்தக் காலத்து ராமநாதன் மகா ஆசாரசீலராக இருந்தார். அதேபோல சரியான சாப்பாட்டு ராமனாகவும் இருந்தார்.

வீட்டில் கணபதி ஹோமமும், சத்ய நாராயண பூஜையும் அமர்க்களப்படும். ஒரு நாளைப்போல சாப்பிட பகல் ஒரு மணிக்கு மேலாகும்… பத்துப் பதினைந்து பேரோடு நுனி வாழையிலை போட்டு பாயசம் வடையுடன் சாப்பாடு.

ஓடி ஓடிச் செய்வாள் மங்களம். எல்லாவற்றையுமே ஒண்டியாய், தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள்.

இப்படி ரசித்துச் சாப்பிடும் ராமநாதன், செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, நாட்களில் பூரண உபவாசமும் இருந்திருக்கிறார். இவர் விரதமிருக்கும் தினங்களில், இவரெதிரில் எத்தனைதான் ருசியான பண்டத்தை வைத்தாலும் ஏறிட்டுப் பார்க்கமாட்டார்… அத்தனை வைராக்கியம்…

அப்படியெல்லாம் இருந்த மனுஷன் – இன்று அதிரசத்துக்கும் வடைக்கும் குழந்தைபோல அடம் பிடிக்கலாமோ…

ராமநாதன் உள்ளிருந்து வரும் வாசனையை நாசி நிறைய நிரப்பிக் கொள்கிறார். நாவில் நீர் ஊறுகிறது.

எத்தனை வேதம் படித்து என்ன… உபநிஷதத்தைக் கரைத்துக் குடித்து என்ன… நாக்குச் சபலத்துக்கு முன் எல்லாமே தூள் தூளாகிறதே…!

ராமநாதன் தூக்கம் பிடிக்காமல் எழுந்து உட்காருகிறார்.

பேசாமல் கோதுமைச் சோற்றை வாங்கித் தின்றுவிட்டு ‘சிவனே’யென்று படுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது.

அதே சமயத்தில் பிடிவாதத்தைவிட மனசு வரவில்லை.

இன்று நேற்றில்லை… என்றுமே அவர் வீம்புக்காரர்தான். மங்களம் இருந்தபோது கொஞ்சமாகவா திண்டாடியிருக்கிறாள்?

நினைத்தபோது சிநேகதிர்களைச் சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வந்து சமைத்துப்போடச் சொல்லுவார்.

”அடியே… நாளைக்கு வருஷப் பிறப்பாச்சே… போளி உண்டோல்லியோ…”

”உம்… பண்ணிட்டா போச்சு…”

”அப்ப, என் சிநேகிதன் சுப்புணியையும் பத்மனாபனையும் நம்ம வீட்டுல சாப்பிட வரச் சொல்லட்டா…?”

”சொல்லுங்களேன்…”

மங்களம் மறுத்துப் பேசமாட்டாள். இத்தனைக்கும் ராமநாதனுக்கு ஒன்றும் பணம் கொட்டிக்கிடக்கவில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வேலைதான். ஆனால், இவர் சாப்பிடும்போதும், சிநேகிதர்களுக்குப் பரிந்து பரிந்து உபசரிக்கும்போதும் இவரை ஸ்கூல் வாத்தியார் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.

பாவம், மங்களம்! அரிசியும் வெல்லமும் நெய்யும் அவள் எப்படித்தான் அலுக்காமல் வாங்கிப் போட்டுச் சமாளித்தாளோ! ஒருதடவை ரசம் சரியாய் அமையவில்லையென்று நாலு பேர் முன்னிலையில் மானத்தை வாங்கிவிட்டாரே…

”என்ன… வழக்கமான டேஸ்ட் இல்லையே… ரசத்தை ஈயச்சொம்புலதானே வச்சே?”

தலை குனிந்து நின்றாள் மங்களம்.

என்னவென்று சொல்லுவாள்.. ‘ஈயச் சொம்பை விற்றுத்தான் அன்றைய சமையலையே செய்தேன்’ என்று எப்படிச் சொல்லுவாள்…?

அன்றைக்கு அவள் வாங்கிய வசவு கொஞ்ச நஞ்சமில்லையே…

இன்று அதெல்லாம் நினைப்புக்கு வந்து, ஒளியேயில்லாத கண்களில் கசிவை உண்டு பண்ண…

ராமநாதன் மறுபடியும் சுருண்டு படுக்கிறார்.

உள்ளே –

மணக்க மணக்க திரட்டிப்பால் கிளறுவது…

அம்மாடீ…! என்ன வாசனை…!

‘சனியன், உடம்புல எல்லா அங்கங்களும் பழுதுபட்டுப் போயாச்சு… இந்த மூக்குக்கு ஏதாவது ஒரு கேடு வராதோ… வயசாக ஆக, இது மாத்திரம் ஏன் இப்படித் தீர்க்கமா வேலை செய்யறது…’ – ராமநாதன் அலுத்துக் கொள்கிறார்.

வாசனைகளை ருசி பார்த்தே இந்த பத்து பதினைந்து வருஷ வாழ்க்கையைத் தள்ளியாயிற்று அவர்.

”அடுப்புல என்ன முருங்கைக்கா சாம்பாரா…? உப்பு போடல போல இருக்கே… வாசனை சொல்றதே…”- இப்படிச் சொல்வார் ஒரு நாள்.

‘ரசத்துல கொத்துமல்லியைக் கிள்ளிப்போட்டு ரொம்ப நேரம் கொதிக்கவிடக் கூடாது… பொங்கி வர்றச்சேயே பார்த்து இறக்கிடணும்… இல்லைன்னா வாயில வைக்க வழங்காது…’

– இப்படிச் சில நாள் தனக்குள் முனகிக் கொள்வார்.

”எது எப்படியிருந்தா இவருக்கென்ன… இவர் சாப்பிடறது கோதுமைச் சாதம், தயிர், ஒரு கப் கீரை… மத்தவா எப்படிச் சாப்பிட்டா என்ன இப்போ…” – ஓரொரு சமயங்களில் நாட்டுப் பெண்கள் இவர் காதுபட இரைந்து சொல்வதும் உண்டு.

”லோகத்துல எதுக்காகப் பொறந்தோம்… எதுக்காக மாடா உழைக்கறோம்… எல்லாம் இந்தச் சோத்துக்காகத்தானே. அதை வக்கணையா சாப்பிடணும். சமைக்கற பண்டத்தை வீணாக்காம சாப்பிடணும். நாம சாப்பிடறது மட்டுமில்லாம மத்தவாளுக்கும் வயிறு நிரம்ப சாப்பாடு போடணும். உபநிஷத் சொல்றது… சாப்பாட்டை இகழக் கூடாது. அது விரதம். எதை நாம் சாப்பிடறோமோ அது அன்னம்; சாப்பிடற நாம் அன்னாதம்… இதையெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது…”

கிழவர் சடக்கென தன் பேச்சை நிறுத்திக் கொண்டு தமக்குள் ஆழ்ந்து போவார்…

மருமகள்களின் கையால் விதவிதமாய் சமைத்துப் போட்டுச் சாப்பிடும் பாக்கியம் அவருக்கு இருந்ததேயில்லை. தன் மங்களத்தை விடவும் இவர்கள் உயர்த்தியாய் சமைப்பார்கள் என்று அவர் நினைக்கவும் இல்லை… அதுதான் சமையலின் மணமே சொல்கிறதே… போதாதா?

அப்படிப்பட்ட சாப்பாட்டுக்கு இந்த நாக்கு இன்று, இப்படி விவஸ்தை கெட்டு அலைய வேண்டாம்.

‘என்ன செய்ய… எல்லா உயிர்க்கும் அன்னம்தான் ஆதாரம். அன்னத்தாலே பிறந்த ஜீவராசிகள், அன்னத்தாலேயே உயிர் வாழ்ந்து, கடைசியிலே அன்னத்தாலேயே நாசமாகி, மண்ணோடு மண்ணாய்ப் போறதுகள், செத்துக் கிடக்கிற நாக்கு ஏதாவது கிடைச்சா போதும் போல இருக்கே.”

இன்று எப்படியும் வகை தொகையாய்ச் சாப்பிட்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டது போல கொலைப் பட்டினி கிடக்கிறார் கிழவர்.

நல்லவேளை, மங்களம் போய்ச் சேர்ந்தாள். அவள் இப்படி கௌரவமாய் போனதினால்தானே – இன்றைக்கு அவள் பெயரைச் சொல்லி வீட்டில் பாயசமும் பட்சணமும் அமர்க்களப்படுகிறது… இதுவே அவள் உயிரோடு இருந்து, மருமகள்களிடம், ‘எனக்கு மொறு மொறுன்னு வடை பண்ணித் தா’ என்று கேட்டால் இவர்கள் செய்திருப்பார்களோ…

செத்தவளுக்கு வருஷத்தில் ஒரு நாளாவது சோறு போடாவிட்டால், எங்கே ஆவியாய் வந்து, குடும்பத்தை நடுங்க வைக்கப் போகிறாளோ என்கிற பயம்… அந்த பயம்தான் இப்படி சமையலறையில் அதிரசத்தையும் வடையையும் வேர்க்க விறுவிறுக்கச் செய்து கொண்டிருக்கிறது; அந்த பயம்தான், ‘மாமியாருக்கு கறிவேப்பிலைத் துவையல் பிடிக்கும்’ என்று மாங்கு மாங்கென்று அம்மியைக் கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறது; அந்த பயம்தான் பிள்ளைகளை ஆபீசுக்கு லீவு போட வைத்து, ஈர வேட்டியும் காய்ந்த வயிறுமாய், மந்திரங்களை உச்சரிக்க வைக்கிறது; அந்த பயம்தான் தங்களைவிட செல்வாக்கில் பல படிகள் கீழேயுள்ள புரோகிதரை பவ்யமாய் வணங்கி அவர் சொன்னபடி எல்லாம் ஆட வைக்கிறது…

‘நான் செத்தால், என் திதியின் போதாவது இவனுங்க எனக்குப் பிடிச்ச அயிட்டங்களைச் செய்வானுங்களோ…’

‘போறது… சர்க்கரை வியாதியில் செத்தவனுக்கு பாயசம், பட்சணம் வச்சு திவசம் பண்ணக் கூடாதுன்னோ, பிளட் பிரஷர்லே செத்தவனுக்கு உப்பே சேர்க்காம சமைச்சுப் போடணும்னோ யாரும் எழுதி வச்சுட்டுப் போகலை…’

‘ஆத்மாக்களிலேயும் இது மாதிரி டயபடீஸ் ஆத்மான்னும், கொலஸ்டிரால் ஆத்மான்னும் இல்லாமப் போச்சே… எல்லா எழவும் இந்த தேகத்துக்குத்தானே தவிர, ஆத்மாவுக்கு இல்லே போல இருக்கு…’

ராமநாதனின் வயிற்றில் தீ, ஜுவாலையாய்க் கொழுந்துவிட்டு எரிவது போல…

‘பெரிய இலை போட்டுண்டு சாப்பிடணும். சோத்தைக் கண்டதும் அல்பம் மாதிரி பறக்கக்கூடாது. இது என்ன மாசம்? சித்திரையா… முக்கனியும் கிடைக்குமே… இலையிலே மூணு பழமும் போட்டிருப்பான். அதெல்லாம் பெரியவன் இந்த மாதிரி சமயங்கள்லே நிறக்க செஞ்சு பேரைத் தட்டிண்டு போயிடுவான்…’

‘அது சரி… திங்கணும் திங்கணும்னு பறக்கறியே…பல் எங்கே இருக்கு…? மொத்தம் நாலு பல் இருந்தா அதிசயம். அதுவும் நீ, பலாச்சுளைய மெல்லறப்ப சேர்ந்து வயத்துக்குள்ளே போயிடும்…’

‘ஆ… பலாச்சுளைன்ன உடனே நினைப்புக்கு வர்றது… வீட்டுல தேன் இருக்கோ… பலாச்சுளைக்கும் தேனுக்கும்தான் ஏர்வை…’

இந்த நினைப்பு வந்தவுடன், உடனே எழுந்து போய் ஹாலில் பரிமாறப்பட்டிருந்த இலைகளில் பலாச்சுளைக்குத் தோய்த்துக் கொள்ள தேன் பரிமாறியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரவேண்டும் போல வேகம்…

எங்கே எழுந்திருப்பது… இங்கேதான் பாதத்தைத் தரையில் ஊன்றியிருக்கிறோமா, இல்லையா என்பதுகூடத் தெரியவில்லையே…

”அடேய்… எவன்டா அடேய்…!”

இங்கிருந்தபடியே குரல் கொடுக்கிறார்.

”என்ன?”

நாலு பிள்ளைகளில் எவனோ ஒருவன் மகா எரிச்சலுடன் எட்டிப் பார்க்கிறான்.

”பலாச்சுளைக்குத் தொட்டுக்க தேன் விட்டிருக்கியா…?”

”எல்லாம் விட்டிருக்கு. நீ சித்த சும்மாயிரு…” – அவன் கடுப்பு அவனுக்கு.

விடிகாலையிலிருந்து பகல் இரண்டு மணி வரையில் அவன் எத்தனை விஷயங்களை தியாகம் செய்திருக்கிறான்…!

நாலு கப் காபி… இரண்டு பாக்கெட் சிகரெட்… பத்து மணி சாப்பாடு… இன்னும் எத்தனையெத்தனை… இந்த மனிதருக்குத் தேன் இல்லையென்றுதான் கவலை.

மகனின் காய்ப்பு வருத்தத்தை உண்டு பண்ணினாலும், வீட்டில் தேன் இருக்கிறது என்பதே பரம சந்தோஷமாய்… ராமநாதன் மீண்டும் குருட்டுக் கண்களுக்குள் திருட்டுக் கனவுகளைக் காணத் துவங்குகிறார்…

‘இந்தப் பிள்ளைகள் – அம்மா கையாலே அத்தனை ருசியா சாப்பிட்டு, எப்படித்தான் இப்படி ரசனையில்லாமப் போனதுகளோ? எல்லாம் பெண்டாட்டிகள் செஞ்சு போடற அரை வேக்காட்டைத் தின்னு தின்னு நாக்கு மழுங்கிப் போயிருக்கும்…’

‘உஸ்… சும்மாயிரு. இன்னிக்கு அவனுங்க பெண்டாட்டிகள் சமைச்சிருக்கிற சமையலுக்குத்தான் நீ நாக்கை நொட்டை விட்டுண்டு காத்துண்டிருக்கே…’

‘ஆமா… அவா எனக்குப் போடமாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டா, என்ன பண்றது…?’

‘இன்னிக்கு ஒரு நாள் போட்டுடுங்கோ… தின்னுட்டு… சத்தியமா உங்க பிராணனை எடுக்க மாட்டேன். நானே செத்துடறேன்னு காரண்ட்டி லெட்டர் எழுதிக் கொடுத்துடலாமா?’

‘எழுதிக் கொடுத்துட்டாப்பல ஆச்சா… அப்படி சடார்னு கிளம்ப முடியும்னா இத்தனை நாள் எதுக்காக மண் மாதிரி இந்தக் கோதுமைச் சோத்தை தின்னுண்டு இருக்கணும்.’

‘சேச்சே…! கோதுமையானாலும் அதுவும் அன்னம்தான். ஆகாரம்தான். தூஷிக்கப்படாது. அப்புறம் அடுத்த பிறவியில இது கூட கிடைக்காமப் போயிடும்…’

‘அன்னம்தான் பூலோகத்துலேயே உசத்தி… அன்னத்தால பிராணனையும், பிராணனால பலத்தையும், பலத்தால தவத்தையும், தவத்தால சிரத்தையையும், சிரத்தையால புத்தியையும், புத்தியால மனசையும், மனசால சாந்தியையும், சாந்தியால சித்தத்தையும், சித்தத்தால நினைவையும், நினைவால ஸ்திர பிரக்ஞையையும், ஸ்திர பிரக்ஞையால விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால ஆன்மாவையும் பெறுவதால… உம்…அம்மாடி, மூச்சு வாங்கறது… அது என்ன வாசனை…? சேப்பங்கிழங்கு வறுவலா…!’

அவர் மீண்டும் பொறுமையிழக்கிறார்… அந்தப்பக்கம் ஓடிய பேரக் குழந்தைகளில் சற்றுப் பெரியவளான ஒருத்தியைத் தன்னருகில் அழைக்கிறார்.

”இந்தாம்மா… சாஸ்திரிகள் சாப்பிட்டாச்சா?”

”இன்னும் இல்லை… இப்பத்தான் இலை முன்னாடி உட்கார்ந்திருக்கா…”

எத்தனை நேரம்… எத்தனை நேரம்…

இவரது தவிப்பு இப்படியென்றால்… வாசற்புற ஹாலிலோ… ஒருத்தர் முகத்திலும் சுரத்தேயில்லை.

சாப்பிட வருகிற பேர்வழிகளுக்கு நன்றாய்ப் பசியெடுத்து, ஆர்வமாய்ச் சாப்பிட வேண்டாமோ…

ஒருத்தராவது ரசித்துச் சாப்பிடவே இல்லை. இந்த லட்சணத்தில் ஒருவர் பாதிச் சாப்பாட்டில் கையை உதறிவிட்டு எழுந்தே விட்டார்.

”ஐயையோ….! என்ன ஆச்சு…?”

மூத்த மருமகள் வாய்விட்டு அலற, மற்றவர்கள் பிரமை பிடித்தாற்போல நிற்க…

”என்னை மன்னிக்கணும். அது என்னவோ திடீர்னு வயித்தை வலிக்கிறது… ஒரு பருக்கை உள்ளே போகாது… உசிர் போயிடும் போல…”

என்ன செய்வது…? சகோதரர்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க, அத்தனை பேருமே தவித்துப் போய் விட்டார்கள்.

‘இத்தனை வருஷத்தில் இதுபோல நடந்ததில்லையே… இது என்ன விபரீதத்திற்கு அறிகுறியோ…?’

‘அம்மா ஏன் நம்முடைய உபசரிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை?’

‘இது ஏதோ சாமி குத்தம்…’

அவர்கள் தங்களுக்குள் புலம்பியபடி வயிற்று வலிக்காரரை வண்டியிலேற்றிவிட்டு, மற்றவர்களுக்கு சஞ்சலத்துடன் பரிமாற….

”ஏண்டா டேய்… இன்னுமா அவா சாப்பிட்டு முடிக்கல்லே…”

கிழவரின் குரலில் தெறித்த நெருப்பு, அத்தனை பேரையும் சுட்டுப் பொசுக்க…

‘அப்பாவுக்கு வேண்டியதைப் போடலைங்கறதே அம்மாவுக்கு வருத்தமாயிருக்குமோ…’

மூத்தவனின் மனசில் இந்த நினைப்பு ஓடியதும், மனைவியை அவசரமாய் அழைக்கிறான்.

”அப்பாவுக்கும் இலை போடு… அவரும் சாப்பிட்டும்…”

”என்னது… நாளைக்கு அவர்…”

”நாளைய பத்தின கவலை நாளைக்கு… இன்னிக்குப் போடு… நான் அவரை மெதுவா தூக்கிண்டு வந்து இலை முன்னாடி உட்கார்த்தி வைக்கிறேன்…”

அதற்குமேல் எதிர்த்துப் பேச வழியில்லாத பெண்கள், பரபரப்புடன் இலையைப் போட்டுப் பரிமாற…

பெரியவன், அப்பாவின் தோளைத் தொட்டு அழைக்கிறான்.

”அப்பா, சாப்பிட வாங்கோ…”

”கோதுமைச் சாதமா…? நேக்கு வேண்டாம்…”

அப்பா சிறு குழந்தையைப் போல முறுக்கிக் கொள்கிறார். பிள்ளைக்கே என்னவோ போல இருக்கிறது.

”இல்லேப்பா… இலை போட்டு எல்லாம் பரிமாறியிருக்கு…”

”நிஜமாவா?”

”நிஜமாத்தான்…!”

‘‘பாயசம், வடை எல்லாமா?’’

”எல்லாம்தான்.”

”பலாச்சுளை உண்டோல்லியோ.”

”உங்களுக்கில்லாததாப்பா…”

”தேன்…”

”நீங்க சாப்பிட வாங்கோ… வேண்டிய மட்டும்… தேனென்ன, எல்லாம் போடறேன்.”

கிழவர், பொக்கைவாய் மலர, அந்தரத்தில் கைகளை விரித்துக் குழந்தைபோலச் சிரிக்கிறார்.

”நான் எப்படிடா வருவேன்.. என்னைத் தூக்கிண்டு போயேன்.”

இளையவன் கொஞ்சம் ஆகிருதியான தேகமுடையவன். அப்பாவை பத்து வயசு பாலகனைத் தூக்குவது போல தூக்கிக் கொள்கிறான். தந்தை, மகனின் கழுத்தை இரு கைகளாலும் கெட்டியாய்ப் பின்னிக் கொள்கிறார்.

”மெள்ள… மெள்ள… பார்த்து இறக்குடா.”

கூடத்தில் அப்பாவுக்காக மணை போட்டபடி மூத்தவன் சகோதரனிடம் சொல்ல.

இலை முன் உட்கார வைக்கப்பட்ட ராமநாதனின் தலை, ஒரு பக்கமாய்த் தொய்ந்து சாய்கிறது. முகத்தில் நன்றாய்ச் சாப்பிடப் போகும் ஆனந்தமும், மூடிய இமைகளுக்குள் இலையில் பரிமாறப்பட்டுள்ள உணவுகளைப் பற்றிய கனவுகளுமாய்…

”அப்பா… அப்பா…!”

பிள்ளைகளும் மருமகள்களும் அவர் நிரந்தரமாய் கண் மூடிவிட்டதை அறியாமல் அவரைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இலையோரத்தில் பலாச்சுளையை நாலைந்து கறுப்பு எறும்புகள் மௌனமாய் சூழ்ந்து கொள்கின்றன.

‘உணவும் நானே… உண்பவனும் நானே… உணவுக்கும் உண்பவனுக்கும் உள்ள உறவை உண்டாக்கியவனும் நானே; உண்பவனை உண்ணும் உணவும் நானே; உலகனைத்துமாகி அதை அழிப்பவனும் நானே…’

கறுப்பு எறும்புகள் ரகசியமாய் தங்களுக்குள் உபநிஷத்தை முனகிக் கொள்கின்றனவோ.

ராமநாதனின் இதழ்கடையில் லேசான சிரிப்பு நிரந்தரமாக…

***

Painting Credit: Brad Schwede

காலத்தை வென்ற கதைகள்! – 5

லட்சுமி

Image

தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் லட்சுமிக்குத் தனி இடம் உண்டு. லட்சக்கணக்கான வாசகிகள் அவருக்கு. ‘புத்தகம் வாசிக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் லட்சுமியின் எழுத்தை நிச்சயம் படித்திருப்பார்’ என்பதை மெய்ப்பிப்பது போல இருந்தன அவர் எழுத்துகள்.இயற்பெயர் திரிபுரசுந்தரி. 1923, மார்ச் 21 அன்று திருச்சி மாவட்டம் தொட்டியம் என்கிற ஊரில் பிறந்தார். சிறு வயதில் பாட்டி சொன்ன கதைகள் மனதில் வேரூன்ற, எழுத்தின் மேல் வசீகரம் கொண்டவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். இரண்டாம் உலகப் போர் காரணமாக, நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக, தந்தை சீனிவாசன் இவருடைய படிப்பை நிறுத்த முடிவு செய்தார். லட்சுமியோ பத்திரிகைகளில் எழுதி, அதில் வரும் வருவாயைக் கொண்டு படிப்பைத் தொடரலாம் என்று எண்ணினார். தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். படித்து, அரசு மருத்துவராக வேலையில் சேர்ந்தார். கண்ணபிரான் என்பவரை காதலித்து, மணம் செய்து கொண்டார். கணவருடன் தென்னாப்பிரிக்காவில் சிறிது காலம் வாழ்ந்தார். தென்னாப்பிரிக்காவிலும் அரசு மருத்துவராகப் பணியாற்றினார். இந்தத் தம்பதிக்கு மகேஸ்வரன் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. 1968ல் கணவர் இறந்த பிறகு ஒன்பதாண்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தார். பிறகு, தமிழகம் திரும்பியவர் பகுதி நேரமாக மருத்துவம் பார்த்துக் கொண்டு, முழு நேர எழுத்துப் பணியில் ஈடுபட்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 150 நாவல்கள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 6 மருத்துவ நூல்களை எழுதியிருக்கிறார். தமிழக அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இவருடைய ‘ஒரு காவிரியைப் போல’ என்கிற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 1987ம் ஆண்டு காலமானார்.

*****

தகுந்த தண்டனையா?

Image

ல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து கொண்டு, சுமார் ஒரு மணி நேரமாக அதே தியானமாக நின்று கொண்டிருந்தான். சென்ற மூன்று நாட்களாக அவளிடம் ‘அந்த’ச் சங்கதியைச் சொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவோ முயன்று பார்த்தான். ஆனால், அவளைப் பார்த்தவுடன் அவனுடைய மனம் மாறிவிடும். இப்படி எத்தனை நாள்தான் காலந்தள்ளுவான்? எப்படியாவது ஒரு நாள் ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டாமா? இதையெல்லாம் யோசிக்க யோசிக்க அவன் தலை கிறு கிறுத்தது.

ராமகிருஷ்ணன், வைத்திய கலா சாலையில் மூன்றாவது வருஷ மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தான். கல்யாணியும் அவனுடைய வகுப்பில்தான் படித்தாள். இவ்விருவரும் வகுப்பில் கெட்டிக்காரர்கள் என்று பெயர் பெற்றவர்கள். சில சமயங்களில் பரீட்சைகளில் கல்யாணி, ராமகிருஷ்ணனைக் கூடத் தோற்கடித்து விட்டு, எல்லா மெடல்களையும் பரிசுகளையும் தானே வாங்கிக் கொண்டு விடுவாள்.

ஆனால், அவ்வளவு கெட்டிக்காரியான அவள் முகத்தில் எப்பொழுதும் துக்கமே தாண்டவமாடும். அதற்குக் காரணம் ராமகிருஷ்ணனுக்கு நன்கு தெரியும். அவள் ஒரு பால்ய விதவை. அதுவுமல்லாமல் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவள். உபகாரச் சம்பளம் பெற்றுப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாள். தான் ஒரு விதவை என்றும், ஏழை என்றும், தனக்கு உலகத்தில் மற்ற மாணவிகள் போல் உல்லாசமாக இருப்பதற்கு உரிமை இல்லையென்னும் எண்ணம் அவளிடம் பலமாக வேரூன்றியிருந்தது. அதன் பயனாக அவள் எப்பொழுதும் தலை குனிந்தவண்ணமாக இருப்பாள்.

இவளுடைய போக்கும், நடையும், சோகம் குடிகொண்ட வதனமும் மற்ற மாணவ மாணவிகளுக்குப் பிடிப்பதில்லை. அவளைப் ‘புஸ்தகப் புழு’ என் றும், ‘நடை பிணம்’ என்றும் சிரிப்பதும் பரிகசிப்பதும் சகஜமாயிருந்தது.

ஆனால், சில காலத்துக்கெல்லாம், நடை பிணம் போல் இருந்த கல்யாணி திடீரெனப் புத்துயிர் பெற்று உணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் விளங்கலானாள். அந்த மாறுதலுக்குக் காரணம் ராமகிருஷ்ணன்தான். ஒரு நாள் வகுப்பு முடிந்ததும் அவள் மாடியிலிருந்து இறங்கித் தனியாக வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது கால் செருப்பு தடுக்கி விடவே, புத்தகங்களைத் ‘தடதட’வென்று போட்டுக் கொண்டு கீழே விழுந்துவிட்டாள். வேறு யாராவது அப்பொழுது அங்கே இருந்திருந்தால், அவள் பாடு மிகவும் பரிகாசத்துக்கிடமாயிருந்திருக்கும். ஆனால், ராமகிருஷ்ணன் கீழே விழுந்த புத்தகங்களை எடுத்துக் கொடுத்து, ‘‘எங்கேயாவது அடிபட்டதா?’’ என்று மிகவும் பரிவுடன் அவளை விசாரித்தான். அவனை நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட அவளுக்கு வெட்கமாக இருந்தது. ஒன்றும் சொல்லாமல், ‘‘வந்தனம்’’ என்று மட்டும் கூறிவிட்டு, வேகமாகப் போய்விட்டாள்.

இப்படியாக ஆரம்பித்தது இவர்களுடைய சிநேகம். கொஞ்சங் கொஞ்சமாக, வாசக சாலையிலும் மற்றும் பல இடங்களிலும் சந்திக்கும் போதெல்லாம் ஒருவரையொருவர் யோக சேமங்கள் விசாரிக்க ஆரம்பித்தனர். இது நாளடைவில் நெருங்கிய நட்பில் முடிந்தது. அவனும் தன்னைப் போல் வறுமையில் அவதிப்படுபவன் என்பதைக் கல்யாணி தெரிந்து கொண்டாள். உபகாரச் சம்பளங்கூட வாங்காது, கலாசாலையில் சம்பளம் கொடுத்து எப்படித்தான் படிக்கிறானோ என்பதை நினைக்கும் போதெல்லாம் ஆச்சர்யமும் அனுதாபமும் அடைவாள். அவளுடைய அனுதாபத்தைப் பெறும்போதெல்லாம் ராமகிருஷ்ணன் தானும் ஓர் ஏழை என்பதை மறந்துவிடுவான். இப்படிப் பரஸ்பர அனுதாபம் காட்டி நண்பர்களாய் இருந்த இருவரும், தாங்கள் திடீரெனக் காதல் கடலில் இறங்கியிருப்பதை வெகு சீக்கிரத்தில் தெரிந்து கொண்டனர்.

‘‘கல்யாணி! உனக்காகத்தான் நான் இந்த வறுமைக் கொடுமைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு படித்து வருகிறேன். நீ இல்லாவிட்டால் எனக்கு இந்த உலகமே பாழ் போல் தோன்றும்’’ என்று பல தடவை அவளிடம் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறான். அவள் அதற்குப் பதில் ஒன்றும் சொல்ல மாட்டாள்.

இப்பொழுது கல்யாணி ஒரு புதுப் பெண்ணாக மாறிவிட்டாள். மௌன விரதம் பூண்டுகொண்டிருந்த அவள் எல்லா மாணவிகளிடமும் கலகலவென்று பேச ஆரம்பித்து விட்டாள். அவளிடம் ஏற்பட்ட இந்த மாறுதல்களைக் கவனித்த மற்ற மாணவ, மாணவிகள் பலவிதமாகப் பேச ஆரம்பித்தனர். பள்ளிக் கூட மாணவிகள் பேச ஆரம்பித்தால் கேட்க வேண்டுமா? ஆனால், ராமகிருஷ்ணனோ கல்யாணியோ அவற்றைக் காதில் போட்டுக் கொண்டவர்களாகத் தெரியவில்லை. இருவரும் தங்கள் பிற்கால சந்தோஷ வாழ்க்கையைப் பற்றிப் பல ஆகாயக் கோட்டைகள் கட்டி மகிழ்வதிலேயே முனைந்திருந்தனர்.

2

னால், ராமகிருஷ்ணனுடைய ஆகாயக் கோட்டைகள், ஒரு வாரத்திற்கு முன் அவன் தந்தையிடமிருந்து வந்த கடிதத்தினால் திடீரென இடிந்து மண்ணோடு மண்ணாய் விட்டன. அந்தக் கடிதத்தைக் கல்யாணியிடம் காண்பித்து ஒரு முடிவுக்கு வந்து விடவேண்டுமென்று, சென்ற மூன்று நாட்களாக மிகவும் பிர யாசைப்பட்டான். அவளை நேரில் கண்டதும் அவன் தைரிய மெல்லாம் மறைந்துவிடும். சாதாரண விஷயங்களைப் பேசிவிட்டுப் போய்விடுவான். இன்று எப்படியாவது ஒரு முடிவுக்கு வந்து விடுவது என்ற தீர்மானத்துடன், வழக்கமாகச் சந்திக்கும் வாசக சாலையின் வாசலில், யோசனையில் ஆழ்ந்து நின்றுகொண்டிருந்தான். அவன் மனதில் கல்யாணிக்கும் அவனுக்கும் ஏற்பட்ட நட்பிலிருந்து உண்டான பல சம்பவங்கள், திரையில் படங்கள் தோன்றி மறைவது போன்று ஒன்றன் பின் ஒன்றாய்த் தோன்றி மறைந்தன.

கல்யாணியும் கடைசியில் வந்து சேர்ந்தாள். தன்னைக் கண்டு புன்னகையுடன் வருகிறவளை ஒரு குற்றவாளியைப் போல் ராமகிருஷ்ணன் பார்த்தான். வேறு ஒன்றும் பேசாமல், ‘‘கல்யாணி! இந்தக் கடிதத்தை நீயே படித்துப் பார்!’’ என்று சொல்லி, அவளிடம் தன் தந்தையின் கடிதத்தை நீட்டினான். அவள் அதை வாங்கிப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். அப்பொழுது ராமகிருஷ்ணனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. முகத்தில் குப்பென்று வியர்க்க ஆரம்பித்துவிட்டது. அவளைப் பார்க்கச் கூடச் சகிக் காதவனாய் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். கல்யாணி தனக்குள் அக்கடிதத்தை வாசிக்கலானாள். அதில் எழுதியிருந்த தாவது…

‘‘சிரஞ்சீவி ராமுவுக்கு, அப்பா அநேக ஆசீர்வாதம். நீ பரீட்சையில் இவ்வருஷம் தேறிவிட்டதைப் பற்றி மிகவும் சந்தோஷம். சம்பளமும் புத்தகமும் சேர்ந்து ஐந்நூறு ரூபாய் ஆகிறதென்று எழுதியிருந்தாயே, அதைப் பார்த்ததும் எனக்குக் கவலை அதிகமாகிவிட்டது. உனக்கு நம் குடும்பத்தின் நிலைமை தெரியாது என்று சொல்லவில்லை. என்னால் அவ்வளவு பணம் அனுப்ப இப்பொழுது சக்தியே இல்லையே!

இருந்தாலும் நம் கஷ்டங்களுக் கெல்லாம் ஒரு வழி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நம்ப ஊர் தாசில் சேஷய்யர், போன வாரம் உன் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு போனார். உன் ஜாதகமும் அவர் பெண் சுசீலாவினுடைய ஜாதகமும் நன்றாகப் பொருந்தியிருப்பதாகச் சொல்கிறார். சித்திரையில் உன் லீவின்போது கல்யாணத்தைச் செய்துவிடலாம் என்றும், உன் மேல் படிப்பைத் தாமே கவனித்துக் கொள்வதாகவும் சொல்கிறார். பெண்ணை உன் அம்மா போய்ப் பார்த்தாள். நன்றாகத்தான் இருக்கிறாள். இப்படிப் பெரிய இடத்து சம்பந்தம் நம் போன்றவர்களுக்குக் கிடைப்பது துர்லபம். உன் படிப்புக்காக இனி எனக்கு ஒரு பைசாகூட அனுப்பச் சக்தி இல்லை. நீ பெரியவனாகப் போய்விட்டதால், உன்னை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. சீக்கிரத்தில் நம்மிஷ்டத்தை அவருக்குத் தெரிவிக்க வேண்டுமாதலால் உடனே உன் சம்மதத்தை அறிவிக்கவும்.

இப்படிக்கு அன்புள்ள, வேங்கடராமையர்.’’

இதைப் படித்ததும் கல்யாணிக்குத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. உலகமே இருண்டுவிட்டது போல் ஒரு நிமிஷம் தோன்றியது. அவள் எண்ணாததெல்லாம் எண்ணினாள். சற்று யோசித்துப் பார்த்துவிட்டு, ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அவள் தன் வருத்தத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மிகவும் பரிவுடன், ‘‘இதற்கு என்ன பதில் எழுதப்போகிறீர்கள்?’’ என்று கேட்டாள்.

அவள் இப்படிக் கேட்டதும், ராமகிருஷ்ணன் திடுக்கிட்டான். ஏனென்றால், அவள் கோப, தாபப்படாமல் இவ்வளவு அமைதியாக நடந்து கொள்வாளென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவன் சமாளித்துக்கொண்டு, ‘‘நீயே சொல். நான் என்ன செய்வேன்? என் மனம் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறது’’ என்றான்.

உடனே கல்யாணி, ‘‘அப்படியென்றால் நீங்கள் அப்பா சொல்வது போலவே செய்யுங்கள். சம்மதம் என்று உடனே பதில் எழுதிவிடுங்கள். நான் போய் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டுத் தலைகுனிந்த வண்ணம் உட்கார்ந்திருந்தாள். அவள் மனம் அப்பொழுது பட்டபாடு விவரிக்க முடியாதது.

‘‘கல்யாணி! அப்படியென்றால் என்னை ஒரு கோழையென்று நினைத்து வெறுத்துத்தானே இப்படிச் சொல்கிறாய்?’’ என்று தழுதழுத்த குரலில் ராமகிருஷ்ணன் கேட்டான்.

‘‘இல்லை. அப்படி நினைத்திருந்தால் நான் வேறு விதமாகப் பதில் சொல்லியிருப்பேன். நாம் இருவரும் இதுவரையில் கற்பனா உலகில் வசித்து வந்தோம். இன்று நிஜ உலகத்திற்கு வந்திருக்கிறோம்.

நடக்கமுடியாதவைகளைப் பற்றிப் பல ஆகாயக் கோட்டைகள் கட்டி மனம் புண்ணடைவதனால் என்ன பயன்? நீங்களே யோசித்துப் பாருங்கள்… என்னை மணந்து கொண்டால் உங்களுக்கு ஏதாவது உபயோகம் உண்டா? நானும் உங்களைப் போல் ஏழை. மேலும் நான் விதியின் கொடுமைக்கு ஆளானவள். சமூகத்தை எதிர்த்து இந்தக் காரியத்தைச் செய்ய நம்மிடம் அவ்வளவு சக்தி இல்லை. எனக்குத் தங்கை, தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களை முன்னுக்குக் கொண்டு வருவது என் பொறுப்பாயிருக்கிறது. அப்படியிருக்கையில் நம்முடைய சந்தோஷமே பெரிதென்று நினைத்து நான் உம்மைக் கட்டாயப்படுத்தினால், நான்தான் சுயநலக்காரியாவேன். நீங்கள் எங்கேயாவது சௌக்கியமாக இருந்தால், அதுவே எனக்குப் போதும். அவ்வளவுதான் நான் கொடுத்து வைத்த சந்தோஷம். நான் போய் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் ‘பொலபொல’வென்று கண்ணீர் உகுத்தாள். ராமகிருஷ்ணனும் தாங்கமுடியாத துக்கத்தினால் சிறு குழந்தையைப் போல் விம்மினான். இப்படியாக இவர்களின் காதல் கோட்டை தகர்ந்து, பொடியாய் விட்டது.

அந்த வருஷம் கோடை விடு முறையில், ராமகிருஷ்ணனுக்கும் சௌபாக்யவதி சுசீலாவுக்கும் விவாகம் இனிதாக நடந்தேறியது.

3

து நடந்து ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன. இப்பொழுது கல்யாணி, பாலூர் டிஸ்டிரிக்ட் போர்டு ஆஸ்பத்திரியில் லேடி டாக்டர். ஒரு கவலையுமில்லாமல் பொது ஜன சேவையிலே கருத்தாய் வேலை பார்த்து வந்தாள். ஐந்து வருஷங்களுக்கு முன் ஏற்பட்ட மனப்புண் இப்போது ஒருவாறு ஆறியிருந்தது.

ஒருநாள் பன்னிரண்டு மணி இருக் கும்… வீட்டின் வாசற் கதவை யாரோ ‘தடதட’வென்று தட்டினார்கள். கல்யாணிக்கு மிக்க அலுப்பாயிருந்தாலும் அதைப் பாராட்டாமல் போய்க் கதவைத் திறந்தாள். ஒரு கிழவர், கையில் லாந்தருடன் காட்சியளித்தார். தமது பெண்ணுக்குக் கொஞ்ச நாளாக ஜுரம் என்றும், அன்று அதிகமாய் விட்டதால் பயமாக இருப்பதாகவும், உடனே வந்து பார்க்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். கல்யாணி தன் சிரமத்தை மறந்து, வேண்டிய மருந்துகளை எடுத்துக் கொண்டு அவருடன் கிளம்பினாள்.

அவள் சிகிச்சை செய்யச் சென்ற நோயாளி, ஓர் இளம் பெண். கல்யா ணியை அழைத்து வந்த கிழவரின் பெண். வீட்டுக் கூடத்து அறையில் ஒரு கட்டிலில் படுத்திருந்தாள். தேக நிலையைப் பரிசோதித்ததில், அவள் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதைக் கல்யாணி தெரிந்து கொண்டாள். அதனால் அந்த வயோதிகரையும் அவர் மனைவியையும் கூப்பிட்டு ரகசியமாக, ‘‘இந்த கேஸைப் பற்றி நான் தைரியமாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. எதற்கும் என்னால் ஆனவரை முயன்று பார்க்கிறேன்’’ என்றாள்.

இதைக் கேட்டதும் கிழவரும் அவர் மனைவியும் பதறினார்கள்.  ‘‘ஐயோ! கொஞ்ச நாள் சீராடலாமென்று எவ்வளவோ பாடுபட்டு அழைத்து வந்தேனே! டாக்டர்! நீங்கள் எப்படியாவது அவளைப் பிழைக்க வைத்து விடுங்கள்! மாப்பிள்ளை இரண்டு நாளில் வருவதாகக் கடிதம் எழுதியிருக்கிறார். வேண்டுமானால் தந்தியும் அடிக்கிறேன். வந்து பார்த்தால் அவர் மனசு எப்படி இருக்கும்?’’ என்று கண்ணீரும் கம்பலையுமாய் அவர்கள் இருவரும் கல்யாணியை வேண்டிக் கொண்டனர்.

கல்யாணி என்ன சிகிச்சை செய்யலாமென்று யோசனை செய்த வண்ணம் எதிர்ச் சுவரை உற்று நோக்கினாள். அவள் கவனம் அகஸ்மாத்தாக அங்கே மாட்டியிருந்த ஒரு போட்டோவின் மேல் சென்றது. படத்தில் நிற்கும் அந்தப் பெண்ணும் வாலிபனும் யார்? பெண்தான் அங்கே அவள் முன் கட்டிலில் படுத்திருப்பவள். வாலிபன் வேறு யாருமில்லை; அந்தப் பழைய ராமகிருஷ்ணன்தான். அவள் ஒரு நிமிஷத்தில் எல்லாவற்றையும் ஊகித்துக் கொண்டாள். நோயாளியாய்ப் படுத்திருப்பவள், தான் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் இப்பொழுது இருப்பவள்.

இதை நினைத்ததும் அவளுக்குத் தன்னையறியாமலேயே கோபம் உண்டாயிற்று. கல்யாணி இப்படிச் சுவரைப் பார்த்து நின்றுகொண்டிருப்பதைக் கண்ட கிழவர், ‘‘என்ன யோசிக்கிறீர்கள்? எனக்குப் பயமாயிருக்கிறதே! குழந்தை பிழைப்பாளா, மாட்டாளா? உண்மையைச் சொல்லி விடுங்கள்’’ என்றார். அவர் பேசியதைக் கேட்டதும்தான், கல்யாணிக்கு தான் சிகிச்சை செய்ய வந்திருக்கும் உணர்வு திடீரென்று வந்தது. அவள் தன்னைச் சமாளித்துக்கொண்டு,  ‘‘இல்லை, என்ன மருந்து கொடுக்கலாமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்… நீங்கள் ஆளை அனுப்புங்கள். நான் மருந்து அனுப்புகிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

4

ன்றும் மறுநாளும் கல்யாணி நான்கு ஐந்து தடவை வந்து பார்த்துத் தக்க மருந்து கொடுத்துச் சிகிச்சை செய்தாள். அந்தப் பெண்ணுக்குக் குணமாகிக் கொண்டு வந்தது.

மூன்றாவது தினம் காலையில் அவள் நோயாளியைப் பார்த்து விட்டு, ‘‘இனி பயம் இல்லை. கொஞ்சம் ஓய்வு வேண்டும். இந்த மருந்தையே கொடுத்து வாருங்கள்’’ என்று சொல்லிக்கொண்டிருந்த போதே, வாசலில் வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

மறு நிமிடம் ஒருவர் ‘தடதட’ வென்று அவசரமாக உள்ளே நுழைந்தார். நுழைந்தவர் நேரே நோயாளியிடம் சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘உடம்பு எப்படி இருக்கிறது, சுசீ?’’ என்று பதைப்புடன் கேட்டார்.

கிழவர் குறுக்கிட்டு, ‘‘குழந்தைக்குக் குணமாகி விட்டது. இனி பயமில்லை என்று டாக்டர் இப்போதுதான் சொன்னார். இவளை இந்தப் புண்ணியவதிதான் காப்பாற்றினார்’’ என்று டாக்டர் கல்யாணி நின்றிருந்த இடத்தைப் பார்த்தார். ராமகிருஷ்ணனும் டாக்டருக்கு வந்தனம் கூறுவதற்காக அவளைப் பார்க்கத் திரும்பினான். ஆனால் கல்யாணி அங்கே இல்லை! ராமகிருஷ்ணன் உள்ளே வந்தவுடனேயே, அவர்கள் அறியாமல் கல்யாணி வெளியே போய்விட்டாள்.

வண்டியில் சென்றபோது கல்யாணி, ‘‘சுவாமி! எட்டாத கோட்டைகள் கட்டியதற்காக இந்த மனப்புண்ணைக் கொடுத்து என்னைத் தண்டித்தீர்கள். போதும், எப்படியாவது அவர்கள் இரண்டு பேரும் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழட்டும்’’ என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

அவளுக்கு அது தகுந்த தண்டனையா?

*****

(இது எழுத்தாளர் லட்சுமி எழுதிய முதல் சிறுகதை. 10-3-1940ல் வெளியானது)

Painting Credit: perth-kinross-council

காலத்தை வென்ற கதைகள்! – 4

அம்பைImage

இயற்பெயர் சி.எஸ்.லஷ்மி. 1960களின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்தார். தமிழின் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவராக கொண்டாடப்படுபவர். பெண்ணியப் பார்வையில் இவர் முன் வைக்கும் அழுத்தம் திருத்தமான கருத்துகள் வாசகரை சிந்திக்க வைப்பவை. பெண்ணியம் தவிர, அரசியல், உறவுச் சிக்கல்கள், உளவியல் என பல பிரச்னைகளை அனாயசமாக படைப்புகளில் கையாண்டவர். SPARROW (Sound and Picture Archieves for Research on Women) என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். இந்தி, கன்னட மொழிகள் அறிந்தவர். C.S.Lakshmi என்கிற பெயரில் பிரபல ஆங்கில நாளிதழ்களில் எழுதி வருகிறார். இவருடைய படைப்புகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

****

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

– அம்பை

Image

ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில். அதில் நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். சமையலறையில் அடி வைத்து, முதல் நாள் சமைத்து, கைக்குத் தங்க வளையல் போட்ட உடனேயே வெடிப்புக்குத் தடவ ஒரு மெழுகுக் களிம்பு தந்து விடுவாள், ஜீஜி என்று எல்லோரும் கூப்பிடும் கிஷனின் அம்மா.

சமையலறையின் கிழக்குப்புறம் பார்த்த ஜன்னல் வழியே பச்சை மலைகள். மேலே ஒரு வெள்ளைப் பொட்டுக் கோயில். பிள்ளையார் கோயில். அந்த ஜன்னலின் கீழேதான் சமைக்கும் மேடை. வெடிப்புப் பாதங்கள் பச்சை மலையில் உறுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த ஜன்னல் வெளியேதான் துணி உலர்த்தும் கொடி. கால்சராய், சட்டை, பைஜாமா, புடவை, பாவாடை விரிந்து ஜன்னலை மறைக்கும்.

கொத்தமல்லிப் பொடி, காரப் பொடி, கரம் மசாலாப் பொடி தூவி, அரைத்த பசு மஞ்சளும், இஞ்சியும் தடவப்பட்டுத் தயிரில் ஊறிய மாமிசத் துண்டங்களைக் கிளறி நிமிர்பவர்களை எதிர்கொள்வது ஒரு நாடா தொங்கும் பைஜாமாவாக இருக்கலாம். இதில் யாருக்கும் ஆட்சேபணை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் வாழும் பாங்கு சமையலறையைச் சுற்றியே இருந்தது. சமையலறை என்ற தத்துவத்தை ஒட்டி. சாப்பாட்டுப் பிரியர்கள் – மதுப் பிரியர்கள் என்றே பெயரெடுத்த வம்சம். அனுபவிப்பவர்கள். உல்லாசிகள். பார்க்கப்போனால் இவர்கள் கல்யாணத்தில் அஜ்மீர் உறவினர்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காத விஷயம் யாருக்கும் எந்தவித மதுபானமும் குடிக்கத் தரவில்லை என்பதுதான்.

குலதெய்வம் அம்பாவுக்குக்கூட மதுதான் பிரஸாதம். ஸ்காட்சிலிருந்து நாட்டுச் சரக்குவரை எதைத் திறந்தாலும் சுவரில் தெளித்து ‘‘ஜெய் அம்பே’’ சொல்லிவிட்டுத்தான் குடிப்பது. பிறந்த குழந்தையின் வாயில் முதலில் மதுவில் முக்கிய விரலைத்தான் இடுவது. அப்படி இருக்கும்போது இப்படிக் கல்யாணம் செய்துகொண்டால்? சரி. ரம், ஜின், விஸ்கி வேண்டாம். அஜ்மீரிலேயே தயாராகும் ஆரஞ்சு வண்ணக் கேஸர் கஸ்தூரி இல்லையா? மண்டையைப் போய் ஒரு உதை உதைக்குமே? சே சே. இது என்ன இப்படிக் கல்யாணம் செய்துகொண்டாய் என்றார்கள் அவனிடம். வீரனுக்கு லட்சணமான குதிரையும் மதுவும் இல்லாமல் ஒரு கல்யாணமா? ராட்சஸப் பூக்கள் வரைந்த கடும் செம்மண், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு வண்ணப் பாவாடைகள் இடுப்பிலிருந்து உப்பிப் பருத்த பிருஷ்டங்களின்மேல் மடங்கி மடங்கிச் சரிய, வெள்ளி நிறச் சரிகைகள் இட்ட முக்காடுகளைத் தூக்கி வயதான பெண்கள் அவனிடம் கேட்டார்கள்: குடிக்க ஒன்றுமில்லையா?

ஜீஜி நடமாடிக்கொண்டிருந்தபோது டாணென்று மாலை ஏழு மணிக்கு அப்பளம் சுட ஆரம்பித்துவிடுவாள். பப்பாஜி வெளியறை முக்காலியில் மற்ற விஷயங்களை வைத்துவிட்டுத் தயாராக இருப்பார். ஜீஜி கார அப்பளம் தட்டில் அடுக்கி வைத்து வருவாள். கார அப்பளம் தீர்ந்ததும் நாக்கில் சுள்ளென்று உறைக்கும் பிகானீர் ஸேவ். அது அலுத்தால் சோளப் பக்கோடா. அல்லது மிளகாயும் கடலை மாவும் தடவிப் பொரித்த நிலக்கடலை. எதிரெதிரே அமர்ந்து ‘ஜெய் அம்பே’ என்று விட்டு ஆரம்பிப்பார்கள். பிள்ளைகளும் பெண்களும் இருந்தால் குடும்பத்தோடு சிரித்துக்கொண்டு. ஜீஜி நாட்டுப் பாடல்கள் பாடுவாள் – ‘சந்தைக்குப் போனால் எனக்கொரு குஞ்சலம் வாங்கி வா… நல்ல வண்ணத் தாவணி வாங்கிவா…’ ‘இன்னமுமா ஆசை?’ என்று பப்பாஜி சிரிப்பார்.

சமையலறை மூலையில் ஒரு கும்மட்டி அடுப்பில் சாய் செய்யத் தண்ணீர் கொதித்தவாறே இருக்கும். சாப்பிடும் சமயத்தில் வீட்டு வாசலில் யாராவது தெரிந்தவர் வந்துவிட்டால் முதலில் ‘ஜில்’லென்று தண்ணீர்.

‘‘சாப்பிடுங்களேன். சாச்சாவுக்கு ஒரு தட்டு கொடு’’ என்று ஆரம்பிப்பார் பப்பாஜி.

‘‘இல்லை. சும்மா இப்படி வந்தேன்.’’

‘‘சரி, சாய் குடிக்க என்ன வந்தது?’’

‘‘வேண்டாமே.’’

‘‘காஃபி?’’

‘‘தண்ணி போதும்.’’

‘‘அதெப்படி வெறும் தண்ணி. கொஞ்சம் ஷர்பத் போட்டுக் குடியுங்கள்.’’

‘‘சரி.’’

ஜீஜி எழுந்திருப்பாள்.

‘‘அப்படியே ஒரு தட்டில் ரெண்டு கபாப் கொடு.’’

ஜீஜி சமையலறையை எட்டும்முன் காலையில் செய்த வெந்தயக் கீரை பரோட்டா பப்பாஜிக்கு நினைவு வரும். ‘‘ஸுனியேஜி’’ என்று மனைவியை விளிப்பார்.  ‘‘அந்த மேதி பரோட்டாவும் ரெண்டு சூடாக்கி எண்ணெய் தடவிக் கொண்டுவா. சாச்சா ருசி பார்க்கட்டும்’’ என்பார்.

வந்தவர் தோல்வியை ஒப்புக்கொள்வார்.

‘‘நான் சாப்பிட்டே விடுகிறேன்.’’

ஜீஜி எப்படியும் சமையலறைக்குப் போவாள். இரண்டு முட்டைகள் மிளகும் உப்பும் தூவிப் பொரிக்க. ஒருவேளை, சாப்பாட்டு அளவில் ஏதாவது குறைந்துவிட்டால்?

ஆனால், சமையலறை என்ற பௌதிக விவரம் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்று இல்லாததுபோல் இருந்தார்கள். அவர்கள் கூட்டுக் குடும்ப வீடுகளில் பரந்த கல்தரை முற்றம், கூடம் இவற்றைத் தாண்டிய இருள் மூலை சமையலறை. பூஜ்ய வாட் விளக்கு எரியும் அங்கு. முக்காடு அணிந்து,  அழுத்தமான வண்ணப் பாவாடைகள் இருளை ஒட்டியே இருக்க, பெண்கள் நிழல்களாய்த் தெரிவார்கள் அந்த அறையில். அறைந்து அறைந்து சப்பாத்தி மாவு பிசைந்துகொண்டோ, அடுப்படியில் கும்மென்று மணக்கும் மஸாலா  பருப்பைக் கிளறியவாறோ. சமையலறை ஒரு இடம் இல்லை. ஒரு கோட்பாடு மட்டுமே. அத்தனை ருசியான, நாக்கை அடிமைப்படுத்தும் சாப்பாடும் மாயக் கம்பளத்தில் வந்ததுபோல் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

மீனாட்சிதான் ஒரு முறை சாப்பிடும் நேரத்தில் அந்த விஷயத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தாள், பப்பாஜி அப்போது கீழே இருந்த கார் ‘ஷெட்’டின் மேல் ஒரு அறை கட்டிக்கொண்டிருந்தார்.

‘‘பப்பாஜி, சமையலறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தைப் பெரிதுபண்ணிவிடுங்களேன். அதை நீங்கள் அகலமாக்கினால் நாற்காலி போட்டு உட்காரலாம். இடது பக்கம் ஒரு பாத்ரூம் கட்டினால் அதில் பெரிய தொட்டி போடலாம், பாத்திரம் தேய்க்க. பாத்ரூமுக்கு வெளியே துணி உலர்த்த அலுமினியக் கம்பி போட்டு விடலாம்.’’

பப்பாஜி இந்த அபிப்ராயத்தால் தாக்கப்பட்டவர்போல் பார்த்தார்.

ஜீஜியும் வியப்படைந்தவள்போல் அவளைப் பார்த்தாள். மருமகள்கள் இதுவரை இப்படிப்பட்ட அபிப்ராயங்களை முன்வைத்ததில்லை. ராதா பாபிஜி, தட்டை வெறித்துப் பார்த்தாள். குஸுமா தலை முக்காட்டைச் சரி செய்துகொண்டாள், அவள் படபடப்பை மறைக்க. பப்பாஜி கிஷனை நோக்கினார். அவன் நிதானமாகச் சாப்பிட்டவாறிருந்தான்.

பப்பாஜி தொண்டையைச் செருமிக்கொண்டு, ‘‘எதற்காக?’’ என்றார்.

‘‘இந்த சமையலறைத் தொட்டி ரொம்பச் சின்னது. தண்ணி வேறு சரியாகப் போவதில்லை. வேலைக்காரி அங்கேயே பாத்திரம் தேய்த்தால் சமையலறை முழுவதும் தண்ணீர். நிற்க முடியவில்லை. ஜன்னலுக்கு வெளியில் துணி தொங்கினால் மலையை மறைக்கிறது பப்பாஜி.’’

கிஷனைப் பார்த்தார் மீண்டும். அந்தக் கட்டடக்கலை நிபுணன் தன் மனைவியோடு உடன்பட்டான்.

‘‘அவள் சொல்வது சரிதான் பப்பாஜி. அப்படியே செய்து விடலாம்.’’

‘‘நீ எங்கே சமையலறைப் பக்கம் போனாய்?’’

‘‘அவள் மைசூர் சமையல் செய்யும்போது இவன்தான் மிளகாய், வெங்காயம் அரிந்தான்’’ என்றாள் ஜீஜி.

‘‘பேசாமல் உனக்கே தங்க வளையல் போடலாம் போலிருக்கிறதே.’’

‘‘தங்கவளை எதற்கு பப்பாஜி. மோதிரம் போடுங்கள்.’’

பப்பாஜி சிரித்தார்.

அறை கட்டி முடித்தாகிவிட்டது. சமையலறை நிலவரம் மாற்றப்படவில்லை. துணி உலர்த்த இன்னும் இரண்டு நைலான் கயிறுகள் கட்டப்பட்டன, ஜன்னல் எதிரே. பப்பாஜியின் மௌனச் சவால்: பெண்ணே, மைசூர்ப் பெண்ணே, இங்கே நிரந்தரமாக வாழாத உனக்கு மலை எதற்கு? அதன் பச்சை எதற்கு? ராஜஸ்தானத்து சமையல் பண்பாட்டுக்கும் ஜன்னலுக்கும், பாத்திரம் அலம்பும் தொட்டிக்கும், என்ன சம்பந்தம் பெண்ணே. கறுத்த நிறமுடைய, முக்காடு அணிய மறுக்கும், என் பையனை வசியப்படுத்திய, நிறையப் பேசும் பெண்ணே…

***

பின்னிரவு மூன்று மணி வாக்கில் மயில்கள் அகவ ஆரம்பித்தன. ஒன்றன்பின் ஒன்றாக. கர்ண கடூரமாக. குரல் இழந்த சாதகம். ஐந்தரை மணிக்கு அவளும் கிஷனும் மொட்டை மாடி போனபோது எதிரே மரத்தில் சிவன் விரித்த ஜடையாய் மயில் வால் தொங்கியது. கரு நீலமும், மென் பச்சையும், தீர்க்கப் பச்சையும் பளீரிடத் திரும்பியது. எதிர்பாராதபோது பறந்து மொட்டைமாடிச் சுவரில் அமர்ந்து வாலை நீட்டிப்போட்டது. பிறகு, இரண்டு மொட்டை வால் மயில்கள். திரும்புவதற்குள் இன்னும் இரண்டு, சாட்டை வால்களுடன். வயிற்றினுள் ஒரு மென் தன்மை இதமாய்ப் பரவியது. காலைக்கடன்களை முடித்ததும் வயிற்றுக் கனம் அகலும் இதம். அந்தக் கருநீலப் பச்சை ஐஸ் துகள் சிலீருடன் எல்லா அடங்காச் சூட்டையும் தணித்தது. கிஷனின் உதடுகளில் ஒரு முறை நாக்கால் தடவி மென்மையாக முத்தமிட்டாள். பனித்துளி ஒட்டிய, அடித்தளச் சூட்டை இனம் காட்டிய முத்தம்.

மொட்டை மாடிக் கதவு கிர்ரிட்டது. படி ஜீஜி (பெரிய ஜீஜி) எழுந்தாயிற்று. கதவருகே இருந்த பெரிய ட்ரம்மிலிருந்து கரி எடுக்க வந்திருப்பாள், கும்மட்டி அடுப்புப் பற்றவைக்க. படி ஜீஜி பப்பாஜியின் சிறிய தாயார். பப்பாஜிக்கு பதினேழு வயதாகும்போது அவருடைய தந்தை இன்னொரு திருமணம் செய்துகொண்டார், ஒரு பதினேழு வயதுப் பெண்ணை. ஐந்து பெண்கள் பெற்றாள். பப்பாஜிதான் ஆதரவு. பெயர்தான் படி ஜீஜி. அவளுக்கும் ஜீஜிக்கும் இடையே இரண்டே வயதுதான் வித்தியாசம். பொக்கை வாய். பொய்ப் பல் வேண்டாம் என்று விட்டாள். மாமிசம் சாப்பிடுவதை விட்ட பின்னர் எதற்குப் பல் என்று கூறிவிட்டாள்.

காலில் அணிந்த கனத்த வெள்ளித் தண்டை படியில் இடிக்க, போய்விட்டாள் படி ஜீஜி.

‘‘சாய் கொண்டு வரட்டுமா மீனா?’’

‘‘ம்.’’

கிஷன் போனதும் மாடி இரும்புத் தொட்டிக் குழாயைத் திறந்து முகம் கழுவி, பல் தேய்த்தாள்.

தொப்பியால் மூடிய கெட்டிலில் சாய் கொண்டுவந்தான் கிஷன். கீழே வைத்து இரு கோப்பைகளில் சாய் ஊற்றியபோது இஞ்சி, துளசி மணம் பரவியது. ஒரு காலை நட்சத்திரம் மினுக்கியது. மயில் நீலப் பச்சையில் தெறித்தது. சாய் தொண்டையில் சூடாய் இறங்கியது.

கீழே போனபோது சமையலறை மூலையில் பெரிய பித்தளை டம்ளரில் கிஷன் ஊற்றித் தந்திருந்த சாயை முக்காட்டுத் தாவணித் துணியால் பிடித்தவாறு அமர்ந்து, ஊதி ஊதிக் குடித்துக்கொண்டிருந்தாள் படி ஜீஜி. ராதா பாபிஜி இன்னொரு பெரிய கெட்டிலில் சாய்த் தூளைப் போட்டுச் சுடுதண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

‘‘நாஸ்தாவுக்கு மாவு பிசையட்டுமா?’’ என்றாள் படி ஜீஜி.

‘‘பப்பாஜி உலவப் போயிருக்கிறார். சமோசாவும் ஜிலேபியும் வாங்கி வருவார். ரொட்டி வாட்டினால் போதும், அதை நான் வெளியில் டோஸ்ட் செய்துகொள்கிறேன். இன்றைக்கு என்ன நம் சமையலா, இல்லை மைசூர் சமையலா?’’

‘‘அவளும் கிஷனுமாய் நேற்று காய்கறியும் தேங்காயும் வாங்கி வந்தார்கள்.’’

‘‘என்ன தேங்காய் சமையல் சப்புச்சப்பென்று? நீங்கள் ஒன்று செய்யுங்கள், படி ஜீஜி. மஞ்சளும் இஞ்சியும் அரைத்துவிடுங்கள்.  மட்டன் புலாவ் செய்துவிடலாம். சுரைக்காய் துருவிவைத்து விடுங்கள். கோஃப்தா செய்துவிடலாம். சேப்பங்கிழங்கைத் தொலி சீவிவிடுங்கள். பெரிய ஏலம், மிளகு, லவங்கப்பட்டை, தனியா, லவங்கம் இடித்துவிடுங்கள். நல்லா நைஸாக. தனியாவை வேறாக எடுத்து இடியுங்கள் கொஞ்சம். ராத்திரி ஆலு-கோபிக்குப் போடலாம்.’’

சமையலறைக்கு வெளியே வந்தாள் சாய் கெட்டிலும் கோப்பைகளும் வைத்த தட்டை ஏந்தியவாறு.

‘‘என்ன மீனா. இன்றைக்கு என்ன சமைக்கப் போகிறாய்?’’

‘‘எதுவும் இல்லை. நாங்கள் கணேஷ் மந்திர் மலையில் ஏறப்போகிறோம்.’’

‘‘சரிதான்.’’

மீனாட்சி சமையலறையில் நுழைந்தாள் இரண்டாம் ஈடு சாய் தயாரிக்க.

படி ஜீஜி பொக்கை வாய் திறந்து சிரித்தாள். தன் பித்தளை டம்ளரை நீட்டினாள்.

‘‘எனக்கும் சாய்.’’

‘‘இஞ்சி போடவா படி ஜீஜி?’’

‘‘ம். போடு. எனக்கு, நீ போடும் சாய் பிடிக்கும்.’’

‘‘சமோசாவும் ஜிலேபியும் வாங்கி வந்திருக்கிறேன். கொஞ்சம் ஜிலேபியைப் பாலில் போடுங்கள்’’ என்று ஒரு பொது உத்தரவு வெளியிலிருந்து வந்தது. மீனாட்சி ஜிலேபிப் பொட்டலத்தைச் சமையலறைக்குக் கொண்டுவந்து பிரித்தாள்.

‘‘உஷ்… இதோ… இதோ…’’

மீனாட்சி திரும்பினாள். ‘‘எனக்கு நாலு குடு’’ என்றாள் படி ஜீஜி.

அது ஓர் உணவுப் போர். நிதர்சனமாகப் பங்குபெறுவோர் – ஜீஜி, படி ஜீஜி. தாத்தா உயிருடன் இருந்தபோது படி ஜீஜி கொடுங்கோல் ஆட்சி செய்தாள். மலை மலையாய்ச் சப்பாத்தி மாவு பிசைந்தாள் ஜீஜி. கூடை கூடையாய் வெங்காயம் அரிந்து கிலோ கணக்கில் மாமிசம் சமைத்தாள். மாலை வேளைகளில் படி ஜீஜி கேஸர் கஸ்தூரி குடித்தபோது அப்பளம் சுட்டாள். பக்கோடா செய்தாள். குடல் பொரித்தாள். தாத்தா இறந்தார். பத்து நாட்களில் சமையலறையில் ஜீஜிக்குப் பதவிப் பிரமாணம் நடந்தது. குங்குமம், வெற்றிலை, மது, மாமிசம் இவற்றுடன் படி ஜீஜியின் மற்ற சாப்பாடும் பறிக்கப்பட்டது. நிதம் நிதம் மாமிசம் சமைக்கப்பட்டது. மரக்கறி உணவு உண்பவர்களுக்கு (படி ஜீஜி மாத்திரம்தான்) ஜனநாயக உணர்வுடன் உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. படி ஜீஜி இரவெல்லாம் ஏப்பம் விட்டுக் கொண்டும், உடம்பையே கிழிப்பதுபோல் குசுவிட்டுக் கொண்டும், கக்கூஸில் ‘உம் ஆ’ என்று முனகியவாறும் தன் போர்க்களத் தோல்வியைக் கொண்டாடிக்கொண்டிருந்தாள். மீண்டும் தாக்கப்படும்முன் அவள் இரண்டாம் போர்முனை ஒன்றைத் துவக்கினாள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை படி ஜீஜிமேல் அம்பா வர ஆரம்பித்தாள்.

ஜீஜியும் பப்பாஜியும் அவரவர் பானங்கள், சுட்ட அப்பளங்கள் இவற்றுடன் அமரும் மாலை வேளைகளை அம்பா தேர்ந்தெடுத்தாள். முதலில் அறையிலிருந்து ‘ஹே’ என்று குரல் கொடுத்தாள் அடி வயிற்றிலிருந்து. பதறி ஓடி வந்ததும்  ‘‘என்னை மறந்தாயா?’’ என்று சீறினாள். தாழ்ந்து வணங்கி  ‘‘உத்தரவிடுங்கள் அம்பே’’ என்று ஜீஜி சொன்னதும், ‘‘எனக்கான பானத்தைத் தா, கேஸர் கஸ்தூரி வேண்டும். ஒரு கிலோ பர்பி வேண்டும். வறுத்த இறைச்சி வேண்டும்… அ… ஆ…’’ என்று கட்டளையிட்டாள். எல்லாம் தரப்பட்டதும் அம்பா ‘‘போங்கள் எல்லோரும்’’ என்று உத்தரவிடுவாள். படி ஜீஜியின் அறையில் ஆரவாரம் கேட்கும் சற்று நாழிகை.

மறுநாள் காலை மதுவால் கனத்த கண் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்து சமையலறையில் ஒரு பொக்கைவாய்ப் புன்னகையுடன் காட்சியளிப்பாள் படி ஜீஜி. ‘‘அம்பா கஷ்டப்படுத்திவிட்டாள்’’ என்பாள்.

படி ஜீஜியை வம்புக்கு இழுக்கலாம். அம்பாவைக் கேள்வி கேட்கும் தைரியம் ஜீஜிக்கு வரவில்லை.

‘‘ஜிலேபி தா’’ என்றாள் படி ஜீஜி.

நாலு ஜிலேபிகளைத் தந்தாள் மீனாட்சி. வீட்டில் எல்லோருக்குமாக ஜிலேபி பிரிக்கப்படும்போது படி ஜீஜிக்கு அவள் பங்கு கிடைக்கும். இது ஆசையினால். ஆரம்பத்தில் இவற்றை அவள் எங்கேதான் வைக்கிறாள் என்று நினைத்தாள் மீனாட்சி. பிறகுதான் தெரிந்தது பல மடிப்புகள் தைத்த நாலு கஜப் பாவாடையினுள் அவள் இரு ஜேபிகள் தைத்திருந்தாள். அவற்றை மீனாட்சிக்குக் காட்டியிருக்கிறாள்.

தொப்பியால் சாய் கெட்டிலை மூடினாள்.

‘‘மசாலா சாமான்களைத் தந்துவிட்டுப் போயேன்’’ என்றாள் படி ஜீஜி. ‘‘நெய்யும் வேணும். மட்டன் புலாவ் செய்ய.’’

இது சமீபத்தில் எழுந்த ஒரு புதுக்களம். ஜீஜியின் ஆஸ்த்மாவும் ரத்த அழுத்தமும் அவள் நடமாட்டத்தைக் குறைத்துவிட்டன. அவள் படுக்கை அருகே உள்ள மர பீரோவில் லவங்கம், குங்குமப்பூ, லவங்கப்பட்டை, மிளகு, திராட்சை, பெரிய ஏலம், ஏலக்காய், சர்க்கரை, நெய், முந்திரி எல்லாம் இருக்கும். அவளைத் தாண்டாமல் பீரோவை எட்ட முடியாது. அதை அடையும்முன் ஒரு கேள்விப் பட்டியல் நீட்டப்படும். எதற்காக நெய்? நேற்றுத் தந்தது என்ன ஆயிற்று? சப்பாத்திக்குத் தடவினதில் மீதி அரைக் கிண்ணம் இருந்தால் இப்போதைக்குக் கால் கிண்ணம் போதுமே? மசாலா சாமான்களைக் காட்டிவிட்டு எடுத்துப்போ. காஷ்மீரத்திலிருந்து வரவழைத்த குங்குமப்பூ. அதைப் புலவில் கொட்ட வேண்டாம். மரக்கறி சாப்பிடுபவர்களுக்கு என்ன காய்கறி? நேற்று சமைத்தது ஏதும் மீறவில்லையா அவர்களுக்கு? சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கக்கூஸ் போனால் யாருக்கு என்ன பயன்?

ஒளியற்ற, ஜன்னல் குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து, கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால்போல் ஆதிக்கக்கரங்கள் நீண்டு வளைத்துப்போட்டன. கால்கள் இறுக இறுகக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலாபுறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்துகொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகளை எடுத்தனர். பேடி அதிகாரம்.

Image

ஜன்னலைத் திறந்து மலையையும், பச்சையையும், ஆகாசத்தையும், நீலத்தையும்  உள்ளே இழுத்ததும் பலம் உறிஞ்சப்பட்டாற்போல் இளைத்தனர். வீணா மோஸியைப்போல். கிஷனின் சித்தி. ஐம்பது வயது. பதினைந்து வயதில் விதவை. ஒரு கிராமத்தில் டீச்சராக இருந்தாள். பள்ளிச் சொந்தக்காரர் வீட்டுத் தோட்டத்து மூலையில் ஒரு அறையும் சமையலறையும். அசோகமரம் வாசலில். சமையலறை பின்னால் சம்பக் மரம்… வெள்ளைப் பூக்களும் மஞ்சள் தண்டுமாய், ஜன்னலை ஒட்டிய பூங்கொடிகள் உள்ளே நுழைந்துவிடும் சுதந்திரமாய். பசித்தால் சமையல். மாலையில் பக்கத்திலுள்ள குழந்தைகள் வந்துவிடும், டீச்சரைப் பார்க்க. இல்லாவிட்டால் அசோகமரத்துக் குயில் பாட்டு. ஆனால் வீணா மோஸி ‘‘நான் அதிகாரமற்றுப் போனேன்’’ என்பாள். ‘டீச்சர், டீச்சர்’ என்று சுற்றிக்கொள்ளும் குழந்தைகள். பள்ளியின் ஆரம்பக் கல்வியின் பூரணப் பொறுப்பு. நினைத்தால் வீசு நடை பஜார் வரை. நார்க்கட்டிலை அசோக மரத்தின் கீழே இழுத்துப்போட்டு கக்ஹூ கக்ஹூ என்று தாகம் தீரும்வரை குயில் தோழமை. காலையில் பின்கதவைத் திறந்ததும் தொடும் தூரத்தில் வெள்ளை மலர்கள். இருந்தும், வீணா மோஸிக்கு மூச்சு முட்டியது. வெட்ட வெளியில் எம்பியதும் மண்ணுக்காக வீறிட்டாள், யோனியும், கருப்பையும், மார்க்காம்புகளும் கல்லாகின. கனம், இழுப்பு. கீழ் நோக்கி விழுந்து விழுந்து, விழுந்து விழுந்து மண்ணில் சரண். பாதங்களைப் புதைத்து அசைவற்று நிற்க.

***

ஏரியின் மூலையிலிருந்து வெள்ளை இறக்கைகள் நளினமாய்த் தாழ்ந்தும், உயர்ந்தும், சாய்ந்தும் நகர ஆரம்பித்தன. கண்ணில் பட்ட முதல் கணம் ஒரு சிறு வியப்பு மீனாட்சியினுள் சிதறியது. ஏரியின் முழு வீச்சிலும் சுழன்று நீரில் மிதக்கும்போது அந்தச் சிவப்பு அலகுகள் தூரத்தில் ஒளிர்ந்தன. பிறகு மீண்டும் எழும்பி வெள்ளை இறக்கைகளைச் சரேலெனப் பிரித்து இடமும் வலமும் சாய்ந்தும் எழுந்தும்… வெகு அருகே, முகத்தின் அருகே இறக்கை வீச்சு, பவழ அலகு தட்டையாய் நீண்டு. ரஷ்யப் பறவைகள். ஆனா சாகர் ஏரியில் சில மாதங்கள் வரும் திடீர் விருந்தினராய்.

அதற்கு முந்தைய இரவுதான் ஏரிப் பயணம் தீர்மானிக்கப்பட்டது. எல்லா உறவினர்களுடனும் ஏரியைப் பார்க்கும் திட்டம். இருபது பேர்களுக்கு நூறு பூரி, உருளைக்கிழங்கு ஸப்ஜி, தக்காளிச் சட்னி, ஸாண்ட்விச் நூறு, நொறுக்குத் தீனி, குழந்தைகளுக்கு நிரப்பப்பட்ட பால் புட்டிகள், ஃப்ளாஸ்க்கில் வெந்நீர். மாலையில் சூடாகப் பக்கோடா  சாப்பிட ஒரு ஸ்டவ், ஒரு பாட்டிலில் எண்ணெய், கடலை மாவு, வெங்காயம், மிளகாய்ப் பொடி, உப்பு, பெரிய மிளகாய் – பஜ்ஜி போட – இத்யாதி.

விடிகாலை நான்கு மணிக்குச் சமையலறை விளக்கு எரிந்தது. ஒரு பெரிய தாம்பாளத்தில் கோதுமை மாவைப் போட்டுப் பிசைய ஆரம்பத்தில் ஜீஜி. குஸுமா வாணலியில் எண்ணெயை விட்டு, பிசைந்த மாவை இட்டுப் பொரிக்கத் துவங்கினாள். ராதா பாபிஜி ரொட்டியில் வெண்ணெயும் சட்னியும் தடவ ஆரம்பித்தாள். ரொட்டிப் பொட்டலங்கள் அவளைச் சுற்றி, படி ஜீஜி நொறுக்குத் தீனிகளைப் ப்ளாஸ்டிக் பொட்டலங்களில் போட்டு ரப்பர் வளையத்தால் இறுக்கினாள். ஏரிப் பயணத்தின் இந்த அம்சத்தைப் பற்றி மீனா யோசித்திருக்கவில்லை.

‘‘மீனா, எழுந்துவிட்டாயா?’’ என்றாள் ராதா பாபிஜி. கூந்தல் வியர்வையில் ஒட்டிக்கொண்டிருந்தது. ‘‘சாய் போடுகிறாயா?’’

மீனா இவர்கள் எல்லோருக்கும் சாய் போட ஆரம்பித்தாள். துளசி இலையைப் போட்டாள் வெந்நீரில். பல் தேய்த்துவிட்டு வந்த கிஷன் கோப்பைகளைத் தட்டில் வைத்தான்.

ராதா பாபிஜி தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தாள்.  ‘‘குழந்தைகளைக் குளிப்பாட்ட வேண்டும். ப்ளாஸ்டிக் பையில் ரெண்டு, மூணு ஜட்டி அதிகப்படியாய் எடுத்துக்கொள்ள வேண்டும். ப்ரியா சில சமயம் சொல்லாமலே போய்விடுவாள். புல்லில் விரிக்க ஐந்தாறு கம்பளங்களாவது சுருட்டி வைக்கவேண்டும். எத்தனை கைக்குழந்தைகள் மொத்தம்? நாலு.  பால்டப்பா, க்ளாக்ஸோ மீனாவுக்கு. அர்ச்சனா குழந்தைக்கு லாக்டோஜன், மறக்காமல் பிஸ்கட் பொட்டலம். இதுக்கு உப்புதான் பிடிக்கும். இல்லாவிட்டால் வழியில் வாங்க வேண்டும். அழுது தொலைக்கும் இல்லாவிட்டால். இவருக்குப் பிடிக்காது. சர்க்கரை, ஸ்பூன் மறக்காமல். பரிமாறக் கரண்டி, தட்டுகள், குஸுமா, அந்த சோப் பாட்டிலை எடுத்துக்கொள், தட்டுக்கழுவ. அங்கே குழாய் உண்டு. படி ஜீஜி, வெங்காயம் ஒரு பத்து பதினைந்து அரிந்துவிடுங்கள். ப்ளாஸ்டிக் பொட்டலத்தில் போட்டுக்கொண்டு போனால் நிமிஷமாய் பக்கோடா. மீனா, ப்ளீஸ், குழந்தைகளைக் குளிப்பாட்டுகிறாயா?’’

‘‘பாபிஜி, ஆறு மணிதான் ஆகிறது. அழும் எழுப்பினால். கோபால் பாய் சாஹப் குளிப்பாட்டட்டுமே அப்புறமாய்.’’

‘‘ஆமாம். அவர் குளிப்பாட்டுவார், நினைத்துக்கொண்டு இரு.’’

மீனா சாய் கோப்பையை நீட்டினாள். பித்தளை டம்ளரில் படி ஜீஜிக்கு விட்டுத் தந்தாள். ராதா பாபிஜி சலிப்புடன் பேசியது அவளுக்குப் புரிந்தது. ராதா பாபிஜி கணக்கில் புலி. அதில் மேல்படிப்பு மேற்கொள்ள வீட்டில் அனுமதிக்காததால் ஒரு வங்கியில் பெரிய பதவியில் இருந்தாள். வங்கியில் அவளுக்கு சகுந்தலாதேவி என்றே பெயர். சில மாதங்களுக்குமுன் அவளும் கோபால்பாய் ஸாஹபும் கிஷனையும், மீனாட்சியையும் ஜோத்பூருக்கு வந்து சில நாட்கள் தங்கும்படி அழைத்திருந்தனர். அங்குள்ள ஆஸ்பத்திரியில் கோபால்பாய் சாஹப் டாக்டர். நல்ல வெய்யில் காலம். மத்தியானச் சாப்பாடு இன்னும் ஆகவில்லை.

‘‘இந்த ஊர் வெய்யில் எரித்துவிடும். ஒன்றும் செய்ய முடியாது. ராதா பாங்க் வேலைக்காக இரண்டு நாட்கள் போனாள். தவித்துவிட்டேன். சமையலறையில் நிற்க முடியவில்லை. இங்கே வேலைக்கு ஆளும் கிடைக்கமாட்டார்கள். ஒரு டீ போடக்கூட சமையலறையில் நிற்க முடியவில்லை என்றால் பார்த்துக்கொள் கிஷன்.’’

கிஷன் மெள்ளச் சொன்னான்: ‘‘பாங்கில் பெரிய வேலை பார்க்கும் ராதா பாபிஜி இப்போது அதே சமையலறையில்தானே சமைத்துக்கொண்டிருக்கிறாள்?’’

‘‘ஆமாம் அதற்கென்ன? பெண்களுக்கு அதெல்லாம் சகஜம்தானே?’’

கோபால்பாய் சாஹப் விடுமுறைக்கு வந்த வேளையில் சீக்கிரம் எழுந்து குழந்தைகளைக் குளிப்பாட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

‘‘ராதா பாபிஜி, எந்தப் புடவை கட்டிக்கொள்ளப்போகிறீர்கள்?’’ என்றாள் குஸுமா.

‘‘அந்தச் சிவப்பு ஸில்க்தான். ராத்திரியே இஸ்திரி போட்டாகிவிட்டது. அவருடையது அப்புறம் குழந்தைகளுடைய சட்டைகளுக்கும் போட்டுவிட்டேன்.’’

‘‘நான் அந்தக் கறுப்புப் பொட்டுப் போட்ட வெள்ளைப் புடவை கட்டலாம் என்று நினைத்தேன். ரவிக்கை இஸ்திரி போடவில்லை. மீனா, உன் கறுப்பு ரவிக்கை தருகிறாயா?’’

‘‘எடுத்துக்கொள்ளேன். ஆனால் அது ஸ்லீவ்லெஸ்.’’

‘‘அடடா! அப்படியானால் என் ரவிக்கையை இஸ்திரி போடுகிறாயா மீனா? நான் ஸ்லீவ்லெஸ் போடமுடியாது. என் கை சுத்தமாயில்லை.’’

‘‘தலைப்பால் போர்த்திக்கொண்டு விடு பேசாமல். நீளத் தலைப்பு விட்டு. உன் கைக்கு அடியில் யார் வந்து பார்க்கப்போகிறார்கள்?’’

‘‘இதோ பார் மீனா. தமாஷ் பண்ணாதே. இஸ்திரி போடுகிறாயா?’’

‘‘சரி. சரி.’’

மெதுவாகச் சுவரைப் பிடித்து நடந்து வந்து ஜீஜி ஊறுகாய் பரணியைத் திறந்தாள்.

‘‘என்ன செய்கிறீர்கள் ஜீஜி, போய்ப் படுங்கள் பேசாமல்’’ என்று அதட்டினாள் ராதா பாபிஜி.

‘‘ஊறுகாய் பிடிக்குமே எல்லோருக்கும். எடுத்து வைக்கிறேன்.’’

‘‘அங்கே சமையலறையில் என்ன சத்தம், தூங்கவிடாமல்?’’ என்று குரல் கேட்டது.

நச்சென்று மௌனம்.

ரகசியக் குரலில், ‘‘மீனா, சாய் அடுப்பில் உருளைக்கிழங்கை வேகப்போடுகிறாயா?’’

‘‘ராதா பாபிஜி, தாளித்து ப்ரஷர் குக்கரில் போடலாமே? வேகவிட்டு உரிக்கவேண்டாம்’’ குஸுமா கிசுகிசுத்தாள்.

‘‘நீ செய் அதை. மீதி பூரி படி ஜீஜி பொரிக்கட்டும்.’’

எட்டு மணி அளவில் கழுத்து, அக்குள் எல்லாம் வியர்வை மழை. ரவிக்கை ஒட்டிக்கொண்டது. எண்ணெய்ப் புகை கண்ணில். முழுத்தூக்கம் இல்லாமல் கனம் ஏறிய இமைகள். பப்பாஜி சமையலறையில் எட்டிப் பார்த்தார்.

‘‘ஏரிக்குப் போகலாம் என்றதுமே உற்சாகம் பொத்துக்கொண்டு விடுமே உங்களுக்கு?’’ என்றார்.

அஹ்ஹா என்று சிரித்தார்.

***

சிறு சிறு பறவைகள் கக்ளக் என்றபடி நீரில் மிதந்தன கறுப்பும் மஞ்சளுமாய். திடீரென்று வெள்ளை இறக்கை வீச்சு. பவழ நிழலுடன்.

கம்பளங்களில் சீட்டுக் குலுக்கல். சிலவற்றில் பெண்கள். ‘‘மம்மீஜி, டட்டி’’ என்று பின்பாகத்தைப் பிடித்துக்கொண்டு குழந்தை சொல்லும்வரை. பழைய பேப்பரைக் கையில் ஏந்தியபின், கக்கூஸ் பயணம். குழந்தை தலையில் ஒரு குட்டு. வலிக்க வலிக்க. அம்மாக்கள் ஒழித்த இடத்தில் கன்னிப் பெண்கள். இடையிடையே சீட்டை வைத்துவிட்டு எழுந்து தண்ணீர் உபசாரம்.

சாப்பிட்டு தட்டுகளை குஸுமாவும் ராதா பாபிஜியும் கழுவியாயிற்று.

ஸ்டவ் ஏற்றல். பக்கோடா போட ஆரம்பித்தனர்.

‘‘அரே என்ன வாசனை? எனக்கு இரண்டு வெறும் மிளகாயுடன்.’’

இடையில் குழந்தைகளுடன் பேச்சு.

‘‘ராஜூ, நீ என்ன செய்வாய் பெரியவன் ஆனதும்?’’

‘‘பைலட். ஸுய்ங்கென்று.’’

‘‘நீ, ப்ரியா?’’

‘‘நானு… நானு… நானு… வந்து… தப்பாத்தி தெய்வேன் எங்க வீட்டுலே.’’

‘‘என்ன சமத்தாய்ப் பேசுகிறது?’’ ஜீஜி சிரித்தாள்.

‘‘அஜ்மீரைச் சுற்றியுள்ள அத்தனை மலைகளிலும் நான் ஏறியிருக்கிறேன்’’ என்றார் பப்பாஜி.

‘‘ஜீஜி, நீங்கள்?’’ என்றாள் மீனாட்சி.

‘‘அவர் மலை ஏறினபோதெல்லாம் எனக்கு வயிற்றில் குழந்தை’’ என்றாள் ஜீஜி. சிரித்தாள் வாய்விட்டு. எல்லோரும் சிரித்தனர். ஜீஜி பதினாலு குழந்தைகள் பெற்றாள்.

எல்லாவற்றையும் வாரிக்கொண்டு, இன்னொரு முறை ‘டட்டி’ போகலாமா என்று யோசித்த குழந்தைகளின் மனதைத் திசை திருப்பிவிட்டுக் கிளம்பினர்.

குஸுமா பின்தங்கினாள். ‘‘மீனா, மெள்ள நடவேன். இன்னும் நான் பறவைகளைச் சரியாகப் பார்க்கவில்லை.’’

‘‘ஸதீஷைக் கூப்பிடவா?’’

‘‘இல்லை, இல்லை. அவர் போகட்டும், கலாட்டா ஆகிவிடும் அவரைக் கூப்பிட்டால்.’’

மெதுவாக நடந்தார்கள்.

‘‘பத்து நாள் தள்ளிப்போயிற்று. லேடி டாக்டரிடம் போகணும் என்று நினைப்பதற்குள் வந்துவிட்டது.’’

‘‘தயாராக வந்தாயா? நீ சொல்லியிருந்தால் கடைக்குப் போய் ஸானிடரி டவல் வாங்கியிருக்கலாமே…’’

‘‘தயாராய்த்தான் வந்தேன். இருந்தாலும் வெள்ளைப் புடவை. கொஞ்சம் பின்னால் பார்.’’

‘‘இல்லை. ஒன்றும் ஆகவில்லை.’’

‘‘வேகமாக நடப்போமா? ஏரிப்பக்கம் உட்கார நேரம் இல்லை. ராத்திரி சமையலுக்குப் பூண்டு உரிக்க வேண்டும்.’’

‘‘வா நீ பேசாமல்.’’

ஏரி அருகே குஸுமாவை உட்கார்த்தி மௌனித்தாள்.

ஜீஜியிடம் ஒரு முறை ‘‘உங்கள் மூன்றாம் பிள்ளைக்கு எப்படிப்பட்ட மருமகள் வேண்டும்?’’ என்றபோது சடாரென்று பதிலளித்தாள் ஜீஜி – படித்தவள், வெளுப்பானவள், பேசாதவள் என்று. ‘‘சரியாகச் சொன்னாய்’’ என்றார் பப்பாஜி. அப்படி ஒரு பெண் இருப்பாள் என்று மீனாட்சி நம்ப மறுத்தாள். ஜீஜியின் பதில் அன்று மத்தியானம் நடந்திருந்த சம்பவத்தின் நீட்சி என்று நினைத்தாள். மத்தியானம் பப்பாஜியின் நண்பர் வந்திருந்தார். சரும நோய் நிபுணர். அப்போது மீனாட்சிக்குக் கையில் சில வெள்ளைத் திட்டுக்கள் வந்திருந்தன, கொஞ்சம் அரிப்புடன். சரும நோய் நிபுணரிடம் பப்பாஜி அறிமுகப்படுத்தினார்: இவள் கிஷனின் மனைவி. ஓயாமல் ஊர் சுற்றுகிறாள். சதா கையில் புத்தகம். வாயாடி. இவள் கையைப் பாருங்கள்.

நிபுணர் உபதேசம்: நீ வீட்டில் இரு. மற்ற பெண்கள் மாதிரி. எல்லாம் சரியாகிவிடும். அவரவர் அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட மாதிரி இருந்துவிட்டால் ஏது நோய்?

‘‘ஆஹா’’ என்றார் பப்பாஜி.

ஜீஜி கூறியது அதை ஒட்டிய ஹாஸ்யம் என்று நினைத்தாள். ஆனால், ஜீஜியின் விளக்கத்துக்கு உரை போட்டாற்போல் கிடைத்தாள் குஸுமா.

அரசியலில் எம்.ஏ. ஃப்ரெஞ்சில் டிப்ளோமா. எதற்காக ஃப்ரெஞ்ச் படித்தாள் என்று தெரியவில்லை. திருமணத்திற்காகக் காத்திருக்கும்போது ஏதாவது மொழியில் டிப்ளோமோ வாங்குவது காத்திருத்தலின் ஒரு அம்சம் என்று தெரிந்தது. வெளியூரில் வேலை செய்யும் மாப்பிள்ளையானால் வெளிநாட்டு மொழி உபயோகமாக இருக்குமாம். பூ வேலை செய்த குஷன்கள், தலையணை உறைகள், கை வேலைப் பொருட்கள், பூ வேலையும் லேஸ் வேலையும் செய்த புடவைகள் எல்லாம் செய்திருந்தாள் குஸுமா அந்தச் சமயத்தில். பூ அலங்கார வகுப்புகள், பேக்கரி வகுப்புகள், தையல் வகுப்புகள், ஜாம், ஜூஸ், ஊறுகாய் வகுப்புகள் எதையும் அவள் விட்டுவைக்கவில்லை. எல்லா வித்தைகளையும் கற்றிருந்தாள். பூரணமான மருமகள்.

வெகு தூரத்திற்குப் போய்விட்டிருந்த வெள்ளைக் கூட்டம் நினைத்துக்கொண்டாற்போல் உயரே எழும்பி வட்டம் சுற்றி இடப்பக்கம் வந்தது. மிதமான வேகத்தில் மிதந்தாற்போல் வந்து சுழன்றது.

குஸுமா அழ ஆரம்பித்தாள்.

‘‘அந்த அலகு… என்ன சிவப்பு…’’ என்று விசித்தாள்.

மெல்லச் சிவக்கத் தொடங்கிய மாலையில் பவழம் மிதந்தது இறக்கைகளுடன்.

உரிக்காத பூண்டு… இறக்கைகள் திறந்தன மறுவட்டம் அடிக்க.

உருவாகாத கரு… ஒயிலாக நீரின்மேல் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று சறுக்கி இறங்கி மிதந்தன.

விசும்பல் ஒலி.

***

ஹோலிப் பண்டிகை விடுமுறையில் அஜ்மீர் வந்தபோதுதான் ஜீஜிக்கு நோயின் கடுமையான தாக்குதல் நேர்ந்தது. ஒரு மத்தியானம், அன்றைய சமையலுக்கான உபகரணங்களைத் தந்துவிட்டு, சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு, குளிர்ப்பதனப் பெட்டியில் என்ன மிஞ்சியிருக்கிறது என்று பார்க்க ஜீஜி மெல்ல நடந்து வந்தாள். அதை எட்டும் முன்பே மூச்சு முட்டியது. சுவாசம் பெருத்த ஓசையுடன் இழுத்தது. மற்றவர் ஓடி வரும்முன் தன் கனத்த சரீரத்துடன் தரையில் விழுந்துவிட்டாள் ஜீஜி. வியர்வை பெருகியது. சிறுநீர்  பெருகி உடையெல்லாம் ஈரம்.

‘‘நான் போய்விடுவேன்… நான் போய்விடுவேன்… என் மருமகள்கள் எல்லோரும் வெளியூரில்… அந்தப் பாவி படி ஜீஜி என் சமையலறையை ஆளப்போகிறாள்… ஹே பக்வான்…’’ என்று அரற்றிக்கொண்டே தலையை இடமும் வலமும் திருப்பினாள். கீழே இருந்த டாக்டர் ஓடி வந்து ஊசி போட்டார். மூச்சு சீராகியது. இமைகள் இழுக்க உறங்கிப்போனாள்.

கண் விழித்ததும் இடுப்புச் சாவியைத் தொட்டுக்கொண்டாள்.  ‘‘ராத்திரி என்ன சமையல்?’’ என்று கேட்டாள். பீன்ஸ் என்றதும்  ‘‘ஏன், நான் காலிஃப்ளவர் அல்லவா சொல்லியிருந்தேன்? அவள் மாற்றினாளா? நான் போய்விடுவேன் என்று நினைத்தாளோ?’’ என்று பொருமினாள்.

‘‘இல்லை ஜீஜி. காலிஃப்ளவர் கிடைக்கவில்லை பஜாரில்.’’

‘‘புடவை… வேறு புடவை… தா’’ என்றாள்.

குஸுமா, ஜீஜியின் பீரோவைத் திறந்து பச்சைப் புடவை, பச்சை உள்பாவாடை, இளம் மஞ்சள் ரவிக்கை எடுத்தாள். ஜீஜியின் படுக்கை அருகே வைத்தாள். தலையைத் திருப்பிப் பார்த்த ஜீஜி,  ‘‘பச்சை வளையல் எங்கே?’’ என்றாள் ஈனஸ்வரத்தில். மீனாட்சி வளையல் பெட்டியைத் திறந்து பச்சைக் கண்ணாடி வளையல்களை எடுத்து வைத்தாள்.

கதவை மூடி ஜீஜியின் ஆடைகளை அகற்றினர். முழுவதும் சிவக்கப் பழுத்த பழம் ஒன்று வற்றினாற்போல் இருந்தது அவள் உடம்பு. அகங்கையில் கோடுகள் கனத்து ஓடின. புறங்கை சுருங்கி நரம்புகள் பளபளத்தன. அடிவயிற்றில் ஏரிட்டு உழுதாற்போல் ஆழமான பிரசவ வரித் தழும்புகள். அவள் உறுப்பின் மேல்புறத்துமயிர் வெளேரென்று பசையற்று, அங்கங்கே உதிர்ந்து இருந்தது. பருத்து தளர்ந்த பின்பாகமும், தொடைகளும் வெளுத்த கீறல்களுடன் சுருங்கித் தொங்கின. உள்தொடை இடுக்கின் அருகே கருகிய வாழைத் தோல்போல் வதங்கிக் கிடந்தது. ஸ்தனங்கள் சுருங்கிய திராட்சை முலைக்காம்புகளுடன் தாழ்ந்து தொங்கின. கழுத்தில் பல தங்கச் செயின்களின் கரிக்கோடுகள். நெற்றியில் வகிட்டின் முனையில் கனத்த தங்கக் குண்டுடன் தலையில் அணிந்த சுட்டிப் பட்டம் அழுத்தி அழுத்தி வழுக்கை விழுந்தாற்போல் வழவழவென்று ஒரு தழும்பு.

வாழ்ந்த உடம்பு. சிறுநீர், மலம், ரத்தம், குழந்தைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருந்த உடம்பு. எத்தனை தடங்கள் அதில்!

புடவை கட்டி முடித்ததும், ஜீஜியின் தலையை வாரி, வண்ண நூல் குஞ்சலம் தொங்கும் கருத்த நூல் சவுரியைக் கூந்தலில் இணைத்துப் பின்னிவிட்டாள் ராதா பாபிஜி. பீரோ சாவியை குஸுமா ஜீஜியின் இடுப்பில் செருகினாள். ஜீஜி படுக்கையில் சாய்ந்துகொண்டாள். மற்றவர்கள் போனதும் ஜீஜி அருகில் உட்கார்ந்துகொண்டாள் மீனாட்சி. ஜீஜியின் கை இடுப்பைத் துழாவியது. ஜன்னல் திரைகள் மூடப்பட்ட அறை இருண்டிருந்தது.

சிறிது நேரம் பொறுத்து ஜீஜி பேசினாள்.

மருந்து, தூக்கம், அயர்ச்சி சேர்ந்து ஜீஜியின் குரல் கனத்து வெளிப்பட்டது. ஆனால், காற்றினில் அலைந்துவிட்டு வந்ததுபோல் அழுத்தமின்றி இருந்தது.

‘‘சிகப்புக் கலர் பாவாடை…’’

‘‘என்ன ஜீஜி?’’

‘‘என் கல்யாணப் பாவாடை. சிகப்புக் கலர். தங்க வெள்ளிச் சரிகை உடலெல்லாம். தங்கத் தகட்டுப் பொட்டு. பன்னிரெண்டு தங்க வளையல்கள். இரண்டு அட்டிகை, சிவப்பில், பச்சையில், முத்துத் தோடு. பவழத் தோடு. நெற்றிச் சுட்டியின் தங்கக் குண்டு அஞ்சு பவுன். ஒரு வெள்ளிச் சாவி வளையம். பதினாலு வயது எனக்கு. என்னை வழியனுப்புகிற ‘பிதாயி’ன்போது என் அம்மா காதில் சொன்னாள். நெஞ்சில் முட்டுகிறது அந்த ‘பிதாய்’. முக்காட்டோடு அவள் குனிந்து என்னைக் கட்டிக்கொண்டாள். பெரிய மூக்கு வளையம். உறுத்தியது. ‘‘சமையலறையை ஆக்ரமித்துக்கொள். அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே… இரண்டும்தான் உன் பலம். அதிலிருந்துதான் அதிகாரம்…’’

‘‘இருக்கட்டும் ஜீஜி. தூங்குங்கள்.’’

‘‘ஞாபகம் வருகிறது… எல்லாம்… முப்பது பேர் வீட்டில். அஞ்சு கிலோ ‘ஆட்டா’ பிசைவேன். முந்நூறு சப்பாத்தி இடுவேன். முதல் தடவை இரண்டு உள்ளங்கையும் ரத்தம் கட்டி நீலமாய் இருந்தது. தோள் பட்டையில் குத்திக் குத்தி வலித்தது… பப்பாஜி சொன்னார்… சபாஷ்… நீ நல்ல உழைப்பாளி… என்று…’’

ஹா என்று மூச்சு விட்டாள்.

‘‘கோபாலுக்கு முன் ஒரு ஆண் குழந்தை. அவன் போய்விட்டான். தெரியுமா? ஒரு வயதில். பூஜை அன்று, எல்லோரும் சமையலறையில்… குழந்தை படியேறி மதில் சுவரில் ஏறப்பார்த்து விழுந்துவிட்டான்… முப்பது படி ஏறியிருந்தான்… எண்ணெயில் பூரியைப் போட்டதும் ஈச்சென்ற அலறல்…  வயிற்றில் முட்டியது… பின் மண்டையில் பிளவு… முற்றத்துக் கல் தரையில் வெள்ளைப் புழுக்கை மாதிரி அவன் மூளை சிதறியிருந்தது… ஆண் பிள்ளைகள் எல்லாம் வந்தபின்… பொரித்தேன்… மீனா… கேட்கிறாயா… பொரித்தேன் மீதம் பூரிகளை…’’

மீனாட்சி ஜீஜியின் நெற்றியில் தடவினாள்.

‘‘மாமனார் போனதும் வெள்ளிச் சாவி வளையத்தில் சாவி கோத்துக்கொண்டேன்…’’

‘‘மீனா… எனக்கு எத்தனை செல்வாக்கு பார்த்தாயா? நான் ராணி மாதிரி அதிகாரம் செலுத்துகிறேன்… இல்லையா?’’ ஜீஜி முனகினாள். உறங்கினாற்போல் கிடந்தாள்.

பெரிய வட்டப் புஷ்ப வடிவில் கமலமும், நீலமும், பச்சையும், முத்தும் பதித்த தோடுகளை அணிந்த சருகுச் செவிகள் அருகே மீனாட்சி குனிந்தாள். விரிந்த கடலில் பாம்புப் படுக்கையில் மகா விஷ்ணு மிதப்பதுபோல் ஜீஜியும் அவளும் மட்டுமே. இருண்டு கிடந்த அறையில் ஒரு தொப்புள் கொடி அறுந்த தன்மை ஏற்பட்டது. அந்த உரையாடலை அவள் நிகழ்த்தினாளா, அது தன்னால் ஏற்பட்டதா, அப்படிப் பல முறை யோசித்ததால் நிகழ்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதா, அது ஜீஜிக்கும் அவளுக்கும் மட்டுமேயான உரையாடலா என்று தெரியவில்லை.

ஜீஜி, அந்தச் சமையலறை, அட்டிகை, வளை, தங்கக் குண்டுச்சுட்டி – அதிலெல்லாம் ஒரு பலமுமில்லை.

அதிகாரம் அதிலிருந்து வரவில்லை.

அது பப்பாஜியை ஒட்டிய அதிகாரம்.

அதிலிருந்து எல்லாம்.

விடுபடுங்கள்.

விடுபடுங்கள்.

விடுபடுங்கள்.

விடுபட்டால்… அப்புறம்… எஞ்சுவது?

சமையலறை, நகைகள், குழந்தைகள், பப்பாஜி எல்லாவற்றையும் துறந்த நீங்கள்தான். அறுபட்ட நீங்கள், வெறும் துலாரிபாய், துலாரிபாய் மட்டுமே. அங்கிருந்துதான் பலம். அதிகாரம்.

அதை எல்லாம் துறந்த நான்… நான்… யார்?

கண்டுபிடியுங்கள். முங்கிப் பாருங்கள்.

எதில்?

கிணற்றில், உங்கள் அந்தரங்கக் கிணற்றில்.

பற்றிக்கொள்ள எதுவுமில்லையே… பயமாக…

இன்னும் முங்குங்கள். முங்குங்கள். துலாரிபாய்க்கும் உலகுக்கும் என்ன சம்பந்தம் என்று பாருங்கள்.

நிதம் இடப்பட்ட அந்த முந்நூறு சப்பாத்திகளும், பதினாலு குழந்தைகளை உதைக்கவிட்ட வயிறும் இல்லாவிட்டால்

மட்டன் புலவு, மசாலா, பூரி – ஆலு, தனியாப் பொடி, உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று யோசித்திருக்காவிட்டால்

நாலு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டவ் திரியை இழுத்துவிட வேண்டும்; மண்ணெண்ணெய் கிடைக்கும்போது வாங்க வேண்டும்; மழைக்காலத்தின் கவலை அரிசி, பருப்பில் பூச்சி; மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்; வெய்யில் காலத்தில் அப்பளம்; பழங்கள் வரும் காலத்தை ஒட்டி ஷர்பத், ஜூஸ், ஜாம்; பழைய துணிகள் போட்டுப் பாத்திரம்; சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு; மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ என்று கவலை; தள்ளிப் போகாவிட்டால் கவலை என்று மண்டையெல்லாம் பூச்சி, ஊறுகாய், சுண்ணாம்பு அடைத்திருக்காவிட்டால்.

மூளையின் இழுப்பறைகளை இவற்றை எல்லாம் போட்டு நிரப்பியிருக்காவிட்டால்…

ஒருவேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம்; தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம்;  புதுக் கண்டங்களைக் கண்டுபிடித்திருக்கலாம். கைலாய பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம். குகைகளுக்கு ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள், சிறை, தூக்குமரங்கள், ரசாயன யுத்தங்கள் இல்லாத உலகம் உண்டாக்கியிருக்கலாம்.

நீங்கள் எங்கே போய்விட்டீர்கள் ஜீஜி?

சரியான அளவில் எல்லாம் இடப்பட்ட சமையலில்

காதிலும் கழுத்திலும் நுதலிலும் உறுத்திய நகையில்

பலம் என்று

எப்படி நினைத்துக்கொண்டீர்கள்?

முங்குங்கள் இன்னும் ஆழமாக.

அடியை எட்டியதும் உலகளந்த நீரைத் தொடுவீர்கள். சுற்றியுள்ள உலகுடன் தொடர்பு கொள்வீர்கள்.

உங்கள் யோனியும், ஸ்தனங்களும், கருப்பையும் சுழன்று விழும் சமையல் மணம் தூரப் போய்விடும். நகையின் மினுமினுப்பு மறைந்துவிடும். பால்தன்மை அற்ற நீங்கள். அதில் சிக்காத நீங்கள். அதில் குறுகாத நீங்கள். அதனின்றும் விடுபட்ட நீங்கள்.

அதைத் தொடுங்கள் ஜீஜி.

தொட்டு

எழுங்கள்.

எழுங்கள்.

எழுங்கள்.

அதுதான் பலம். அதனின்றும்தான் அதிகாரம்.

ஜீஜி திரும்பி, மீனாட்சியின் கையைத் தேடிப் பற்றிக்கொண்டாள்.

*****

காலத்தை வென்ற கதைகள்! – 3

 அநுத்தமா

Image

‘பாசாங்குத்தனமே இல்லாத, பொய்மை என்பதே அறியாத ஜீவனாக வாழ்ந்த அபூர்வ மனுஷி. அவரது எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் எந்த பேதமும் இல்லை. ஆதர்ஷம் என்று எதை நம்பினாரோ அதன்படி வாழ்ந்தவர்’ என்று இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் வாஸந்தி.

1922, ஏப்ரல் 16ம் தேதி பிறந்த இவருடைய இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மநாபன். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்வியலை எளிமையாக எழுத்துகளில் பதிவு செய்தவர். 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியிருக்கிறார். மெட்ரிகுலேஷன் படித்தவர். இந்தி, தெலுங்கு, பிரெஞ்ச் மொழிகளைக் கற்றவர். 25வது வயதில் எழுதத் தொடங்கினார். இவருடைய படைப்புகள் கன்னடத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ் வளர்ச்சிக் கழக விருது, கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு உள்பட பல விருதுகளைப் பெற்றவர். குழந்தைகளுக்கான படைப்பிலக்கியத்திலும் இவருடைய பங்களிப்பு கணிசமானது. மோனிகா ஃபெல்டன் எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 2010, டிசம்பர் 3ம் தேதி காலமானார்.

ஒரு சோறு பதம்

Kalamitsi beach, Lefkada island, Greece.

ஸ் நின்றதும் கண்களைச் சுருக்கிப் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். ‘ஜீவானந்த நகர்’ என்று படித்ததும், அவசர அவசரமாக இறங்கினேன். பஸ் கண்டக்டர் வேறு, ‘‘வீட்டிலே சொல்லிட்டு வந்திட்டாயா? முன்னாடி இறங்கறதுக்கு என்ன? பேஜாரு!’’ என்று முத்தாய்ப்பு வைத்து வாழ்த்தினான்.

என் பிழைப்பையே படமெடுத்துத் தந்து விட்டேனோ? வீட்டிலே சொல்லிவிட்டுத்தான் வந்தேன். என்னவென்று? இந்த ஓர் இடமும் நேரவில்லையென்றால் இனி ஜாதகமே கையில் எடுக்க மாட்டேன் என்று!

முன்னாடி இறங்குவதற்கு என்ன என்றானே அந்த பஸ்காரன். நான் எவ்வளவோ இறங்கித்தான் வந்து விட்டேன். நடுத்தர வர்க்கத்து பிராம்மண குடும்பஸ்தன் கதி பரிதாபம்தான்! கிடைத்த சம்பளத்தில் மூன்று பெண்களையும் படிக்க வைத்து, வேலைக்கு அலைந்து, தேடித்தந்து, பிறகு வரன் தேடித் திரிந்து, எத்துணை கால உழைப்பையும் ஊதியத்தையும் சேர்த்து, கண்ணின் இமைக்குள் வைத்து வளர்த்த செல்வங்களைப் பிறரிடம் ஒப்படைத்து விட்டு, அவர்கள் க்ஷேமமாக இருப்பார்களா என்று ஜோசியம் பார்க்கும் அளவுக்கு இறங்கி விட்டேனே? சம்பந்திகள் இட்ட கட்டளைகளுக்குப் பெருமாள் மாடு மாதிரித் தலை ஆட்டிக்கொண்டு, மாப்பிள்ளை ஆட்டும் கோலுக்கு நர்த்தனமாடிக் கொண்டு, பெண்களின் கண் பிசைதலுக்குப் பயந்து கொண்டு…

சரி, இந்தக் கடைக்குட்டி சரயுவுக்காவது கல்யாணம் செய்யாமல், அவளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேனே? அதற்கும் மனம் துணியவில்லை. கடமையில் தவறி விடுவதாக ஓர் உறுத்தல் உள்ளத்தை அரிக்கிறது. இதோ கிளம்பி விட்டேன்.

செவ்வாய் தோஷ ஜாதகங்கள் கிடைப்பது கடினம். மிக மிக நன்றாகப் பொருந்தியிருக்கிறதாம். எங்கள் ஜோசியர் சொல்லிவிட்டார். அவர்கள் ஜோசியரும் ஆமோதிக்க வேண்டுமே? பிறகல்லவா பேசலாம். எனக்கும் என் மனைவிக்கும் யார் ஜாதகம் பார்த்தார்கள்? பையன் நல்ல குடும்பம், பிழைத்துக் கொள்வான், ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பார்த்தார் என் மாமனார். என் அப்பாவைக் கேட்டார். பெண் அடக்கம், வீட்டு வேலைகளை நிர்வகிப்பாள், பார்க்கப் பரவாயில்லை என்று என் அப்பாவும் ஒப்புக் கொண்டார். அவ்வளவுதான். எங்கள் முப்பது வருட தாம்பத்தியத்தில் ஒரு நாள் கூட பெரிய உரசல் ஏதுமில்லை.

இந்தக் காலத்தில் பையனும் பெண்ணும் தாமாகவே பார்த்து, விரும்பி மணம் முடிக்கின்றனர். என்னைப் போல் எத்தனை பேர் அப்படியுமில்லாமல், இப்படியுமில்லாமல் ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு அலைகிறோம்!

என் சிந்தனைகள் எனக்குத் துணை இருந்தன போலும்! வேகமாக நடந்து வந்து விட்டேன். சிவப்புக் கட்டடம். வீட்டிற்கு வெளியே கார்ப்பரேஷன் வைத்த செடி கூண்டில் வளர முயன்று கொண்டிருந்தது. அடையாளம் சரியாக இருக்கவே, நேரே போனேன். சந்தேகத்திற்கு இடமில்லாமல், பளபளவென்று பிற்பகல் வெயிலில் மின்னிய இரண்டு பித்தளைத் தகடுகளில், ஒன்றில் ‘கே.நடேசன்’ என்றும் மற்றதில் ‘டாக்டர் என்.முரளி’ என்றும் செதுக்கியிருப்பதைக் கண்டு, வெளிக்கதவைத் திறக்கலானேன். நன்றாகத் திறக்க முடியாமல் அங்கே நின்ற காரின் பின்புறம் மோதியது கதவு. மெள்ள வளைந்து உள்ளே நுழைந்து, கதவைப் பழையபடி மூடிய பிறகுதான் உள்ளே அடி எடுத்து வைக்க முடிந்தது.

நந்தியை விலகச் சொல்லி அன்று நந்தன் பாடி விட்டான். இன்று எனக்கே அவ்வளவு திறமை? அந்த அம்பாஸிடர் காரைக் கட்டித் தழுவி முன்புறம் வந்தேன். ஒரு தினுசாகப் படிக்கட்டைப் பிடித்து ஏறி, வீட்டின் கதவிலிருந்த ‘விளிமணியை’ அழுத்தினேன்.

‘‘யாரது?’’ என்ற கேள்வியைப் பின்தொடர்ந்து ஒரு பெண்மணி கதவை மெதுவாகத் திறந்தாள். கார் மீது பின்புறமாக விழாமல் சமாளித்து ‘‘நான் மகாதேவன். மயிலாப்பூர் சாலைத் தெருவிலிருந்து…’’ என்று நான் கூறி முடிப்பதற்குள் அந்த அம்மாள் கதவை நன்றாகத் திறந்து ‘‘வாருங்கள்’’ என்று அழைத்தாள். ‘‘உங்கள் ஃபோன் வந்தது. இவர் வீட்டில்தான் இருக்கிறார்’’ என்று கூறிவிட்டு, மாடிக்கு இன்டர்காமில் தகவல் சொன்னாள். என்னை ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு உள்ளே போய் விட்டாள்.

டாக்டர் முரளியின் தகப்பனார் இறங்கி வந்தார். புதிய மாதிரி ஃப்ரேம் போட்ட கண்ணாடி, துல்லிய பாலியெஸ்டர் வேட்டி, அரைக்கை பட்டுச் சட்டை, பார்க்க கம்பீரமாக இருந்தார் நடேசன். நான் என் உடைகளை ஒரு தரம் கண்ணோட்டம் விட்டேன். மடிப்புக் கலைந்து, பஸ்சில் நசுங்கி என்னைப் போலவே ஜீவனும் இல்லாமல் ஆனந்தமும் இல்லாமல் காணப்பட்டது.

கைகூப்பி வரவேற்றார் நடேசன். நான் எழுந்து பவ்யமாக மறு வணக்கம் செலுத்தினேன். ‘‘உட்காருங்க’’ என்று என் இருக்கையைக் காட்டிவிட்டு அவர் தானும் அமர்ந்தார். பீங்கான் கோப்பைகளில் மணக்கும் காபியுடன் வீட்டு அம்மாள் வந்து, எங்கள் இருவரிடமும் நீட்டிவிட்டுத் தானும் ஒரு கோப்பையை எடுத்தவாறு எதிரே ஓர் இருக்கையில் அமர்ந்தாள்.

‘‘நாங்க இன்னமும் ஜாதகம் பார்க்கலை. உங்களுக்குச் சரியாக இருகிறதாக்கு?’’ என்று கேட்டார் நடேசன்.

‘வேண்டாம்’ என்று மறுப்பதற்கு ஓர் அஸ்திரமாக ஜாதகத்தை வைத்திருக்கிறார்களா, உண்மையிலேயே பார்க்கவில்லையா? ஒன்றும் புரியவில்லை.

நானும் சாவதானமாக, ‘‘என் ஜோசியர்படி நல்ல பொருத்தம். அங்கேயும் பார்த்துச் சொல்லிட்டா. மேற்கொண்டு வேலைகளைக் கவனிக்கலாம். சத்திரம் கிடைக்க ஒரு தபசே இருக்கணும்’’ என்றேன்.

தாங்கள் தயாராக இல்லையென்றால், என்னை இன்று வரச் சொல்லுவானேன்? தொலைபேசியிலேயே தகவல் தரக் கூடாது? அவர்கள் பிள்ளை வீட்டுக்காரர்கள்! என் பெண் செவ்வாய் தோஷ ஜாதகம்! நான் மவுனமாகத் தலை கவிழ்ந்தேன். அவர்கள் என்ன பதில் சொல்வார்களோ என்று என் செவி மட்டும் கூர்மையாகக் காத்தது.

‘‘பையன் பெண்ணைப் பார்க்கட்டுமே?’’ என்றார் நடேசன்.

‘‘இந்தக் காலத்தில் பெண்கள் வயது வந்தவர்கள். பார்த்த பிறகு ஜாதகம் சரியில்லை என்று விடுவது உசிதமில்லை அல்லவா? உங்கள் ஜோசியர் பச்சைக் கொடி காட்டட்டும், நாம் பிறகு பேசுவோம்’’ என்று கூறிவிட்டு நான் எழுந்திருக்கலானேன்.

‘‘காபி சாப்பிடுங்கோ, ஆறிப் போயிடும்’’ என்றாள் பையனின் தாய்.

‘‘பையனைப் பற்றி நீங்கள் ஒன்றுமே கேட்கவில்லையே. அவன் மணிபாலில் படித்துப் பட்டம் பெற்றான். வெளிநாட்டுப் பரீட்சைகளும் எழுதியிருக்கிறான்’’ என்று நடேசன் துவங்கினார்.

மரியாதை கருதி காபியை அருந்தியவாறே சிந்திக்க ஆரம்பித்தேன். இதைத் தவிர வேறே செவ்வாய் தோஷ ஜாதகம் ஏதாவது கைவசமுண்டா என்று நான் எண்ணமிட்ட வண்ணம் இருந்தபடியால், அவர்கள் பேசியதில் பாதிக்குமேல் என் மனதில் பதியவில்லை.

‘‘இதெல்லாம் அவன் வாங்கின பரிசுகள்’’ என்று ஸ்ரீமதி நடேசன் சுவரில் பொருத்தியிருந்த கண்ணாடி பீரோவைக் காட்டினாள். இரண்டு பதக்கங்கள், இரண்டு கோப்பைகள், ஏதோ இருப்பதைக் கண்டேன்.

‘‘பையன் சில கொள்கைகள் வைத்திருக்கிறான். நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களே, சொல்லி விடுகிறேன். நம்ப சம்பிரதாயப்படி பெண் பார்க்கும் படலம் அவனுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது பொது இடத்தில் பார்க்கலாம் என்கிறான். பெண்ணோடு சில வார்த்தைகள் பேச வேண்டுமாம்…’’ அவர்கள் அடுக்கிக் கொண்டே போனார்கள்.

நான் இடைமறித்து, ‘‘பிராப்தமிருந்தால் பார்ப்போம், எனக்கு ஒரு கார்டு போட்டு விடுங்கள்’’ என்று கூறிவிட்டுக் காபி கோப்பையைக் கீழே வைத்தேன்.

தம்பதிகள் எழுந்து வழியனுப்ப வெளியே வந்தனர்.

மறுபடியும் முதற்படியில் ஒரு சர்க்கஸ். காரின் முகப்பின் மீது ஒரு கை வைத்தவாறு வெளிக்கதவை எட்டி விட்டேன்.

‘‘இன்னும் காருக்கு ஷெட் கட்டலையாக்கும்’’ என்று என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

‘‘இந்தக் காலத்தில் கண் மறைவாக காரைப் பூட்டி வைத்து விட்டுத் தூங்கினால் அவ்வளவுதான்!’’ என்றார் நடேசன்.

என் கண் முன், வீட்டின் பக்கவாட்டில் காலியாகக் கிடந்த பத்தடி நிலம் பரவி நின்றது.

கேட்டை மூடிவிட்டுத் தெருவில் நின்று ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு வீடு நோக்கிக் கிளம்பினேன்.

ஊரைவிட்டு எங்கேயோ தொலை தூரத்தில் வீட்டைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள்.

அவர்கள் சொந்தக் காரில் பவனி வருவார்கள். என்னைப் போன்றவர்களோ?

இனி இப்படி எட்டாத இடத்தில் வரன் இருந்தால் நான் அந்த ஜாதகத்தைத் தொடக் கூடப் போவதில்லை! இப்படி ஓர் உறுதி எடுத்த பிறகு எனக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது, வேகமாக நடந்து பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். பஸ்ஸும் வந்தது. ஏறி அமர்ந்து வீடு வந்து சேர்ந்தேன்.

என் மனைவி ஆவலோடு எதிரே வந்தாள்.

உதட்டைப் பிதுக்கி விட்டு என் சாய்வு நாற்காலியில் பொத்தென்று விழுந்தேன்.

‘‘என்ன ஆச்சு?’’

‘‘ஒன்றுமே ஆகலை. அழகான வீடு கட்டியிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே ஒருத்தரோடு ஒருத்தர் டெலிஃபோனில் பேசிக் கொள்கிறார்கள். நல்ல காபி தருகிறார்கள். இதுதான் இன்று கிடைத்த ஞானம்’’ என்று எரிச்சலுடன் பதிலளித்தேன்.

அவள் இங்கிதமாக அப்பால் போய்விட்டாள்.

மெல்ல மின் விசிறி இயங்கியது, நான் கண்ணை மூடி ஆகவாசப் படுத்திக்கொண்டேன். ஏமாற்றத்தின் கைப்பு ஓரளவு அடங்கியது.

நான் யாருடனும் எதைப் பற்றியும் பேசவில்லை. என் பெண் சரயு கூட என்னிடம் ஏதும் கேட்கவில்லை. ஆஸ்பத்திரியிலிருந்து அலுத்து வந்த அவள், கை, கால், முகம் கழுவி, என் எதிரே அமர்ந்தாள். ரிகார்டரில் இதமான சங்கீதம் போட்டாள். வயலின் இசை மிருதுவாக என் நரம்புகளை வருடிக் கொடுத்தது. கண்களை மூடியபடி படுத்திருந்த நான், மெல்லத் திருட்டுத்தனமாக ஒரு கண் இமையை விலக்கி அவள் முகத்தை நோட்டம் விட்டேன். சஞ்சலமின்றி இளம் புன்னகை ஒன்று முகத்தில் தவழ, அவள் சங்கீதத்தை ரசித்தாள். கால்களை நீட்டிக் கிழவி போல நீவி விட்டுக் கொண்டாள்.

‘‘ஏன் அம்மா, கால் வலிக்கிறதா?’’ என்று கரிசனத்தோடு கேட்டு அவள் தாய் அவளுக்குப் பலகாரம், காபியைத் தந்தாள்.

‘‘நாலு ஆபரேஷன், இரண்டு எமர்ஜென்ஸி கேஸ் அட்மிஷன், தவிர வழக்கமான நடை. மூணு நர்ஸ் லீவு’’ என்றாள் சரயு சுருக்கமாக.

‘‘பேசாமல் உன் பெரிய அக்கா மாதிரி பாங்க் வேலைக்குப் போயிருக்கலாம். இல்லையோ, சின்னவ மாதிரி டீச்சராகியிருக்கலாம்… ஓய்வே இல்லாத வேலையைத் தேர்ந்தெடுத்திட்டே’’ என்றாள் தாய்.

‘‘சரி அம்மா, எல்லாரும் பாங்கிலேயே உட்கார்ந்திட்டும், பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டுமிருந்தா, யார் நோயாளிகளைப் பார்த்துக்குவா? நீதானே சொன்னே… அப்பா ஆஸ்பத்திரியிலே இருந்தப்ப அந்த நர்ஸ் ஒவ்வொருத்தியும் உனக்குப் பெண் மாதிரி இருந்தான்னு?’’ பெண், தாயின் வாயை மடக்கி அனுப்பிவிட்டாள்.

எனக்கும் என் குழந்தையின் அலுப்பைப் பார்த்துக் கஷ்டமாக இருந்தது. ஆனால் அவளேதான் இதைத் தேர்ந்தெடுத்துப் படித்தாள். வாய்ப்புக் கிடைத்தால் டாக்டராகக் கூடப் போக ஆசைப்பட்டாள். பெண் வேலைக்குப் போக வேண்டும்’’ என்று இரண்டு, மூன்று நபர்கள் கேட்ட பிறகுதான் பெரியவளை வேலைக்கு அனுப்பினேன். பிறகு இருவருக்கும் தொழில் கல்வியே கற்றுக் கொடுத்தேன்.

நான் உறங்கி விட்டேன் போலும். உணவருந்த அழைத்த பின் எழுந்தேன். சாப்பாடு முடிந்ததும் யாருடனும் பேசாமல் படுக்கைக்கே விரைந்தேன். சற்றைக்கெல்லாம் என் நெற்றி மீது இதமாக ஒரு கை வருடியது.

என் மகள் என் நாடியைப் பார்த்தாள். அடுத்தபடி இரத்த அழுத்தம் பார்ப்பாள். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

‘‘என்ன அப்பா, என்ன நடந்தது? ஏன் இப்படிப் படபடப்பு வந்து விட்டது?’’ என்று அவள் பரிவுடன் விசாரித்தாள்.

‘‘ஒன்றுமில்லை அம்மா.’’

‘‘சோர்ந்து போவதிலே பயன் என்ன அப்பா? அநாவசியமாகக் கவலைப் படறீங்க நீங்க.’’

அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டுமென்று நான் பாடுபடுவது அநாவசியமான கவலையா?

மறுநாள் காலை எழுந்ததுமே சோர்வு தொடர்ந்தது. அதனால் பல்துலக்கி, காபி அருந்தி விட்டு மீண்டும் படுத்து உறங்கி விட்டேன். சரயு வேலைக்குப் போய் விட்டாள் போலும்.

எதிர் வீட்டில் எனக்காக போன் வந்திருப்பதாக என்னை எழுப்பவே, அதிசயப்பட்டபடியே அங்கு சென்றேன். நடேசன்தான் பேசினார். ‘‘இந்த நம்பரில் என்னைக் கூப்பிடலாம்னு எப்படித் தெரிந்தது?’’ என்று முதலில் வியப்புடன் கேட்டேன்.

‘‘அங்கே இருப்பது என்னுடைய பள்ளித் தோழன்னு நேற்று திடீர்னு தெரிஞ்சது. இப்பப் பேச வசதியாச்சு’’ என்று நடேசன் சகஜமாகப் பேசினார்.

‘‘அப்படியா? சொல்லுங்க’’ என்றேன்.

‘‘உங்களுக்கு ஆட்சேபணையில்லைன்னா இன்னிக்கு மாலை காந்திஜி சிலைக்கருகே உங்கள் பெண்ணை அழைச்சிண்டு வரமுடியுமா? என் மனைவியும் நானும் பையனைக் கூட்டிக் கொண்டு வருகிறோம்’’ என்றார்.

‘‘ஜாதகம் பார்த்தாச்சா?’’ என்று நான் எச்சரிக்கையுடன் கேட்டேன்.

‘‘ஆச்சு, நீங்க எங்க வீட்டுக்கு வந்து விட்டுப் போன பிறகு, உடனே கார் எடுத்துக் கொண்டு போய்ப் பார்த்தேன். அங்கேதான் என் நண்பனை, அதாவது உங்க எதிர் வீட்டுக்காரனைப் பார்க்க நேர்ந்தது’’ என்று அவர் விவரித்தார்.

‘‘சரி, நான் வீட்டுக்குப் போய்க் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன். என் பெண் வேலைக்குப் போயாச்சு.’’

நான் டெலிஃபோனை வைத்துவிட்டு அந்த வீட்டு மனிதர்களிடம் நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பினேன்.

‘‘என்ன சொன்னான், நடேசன்?’’ என்று அவர் கேட்ட பிறகு விவரமெல்லாம் கூறினேன்.

‘‘நான் சொன்னேன் அவனுக்கு – சரயு மாதிரிப் பெண் கிடைப்பது கஷ்டம் என்று.’’

‘‘பிராப்தம் எப்படியோ?’’ என்று வழ வழவென்று பதில் தந்து விட்டு என் வீடு திரும்பினேன். என் மனைவியுடன் பேசி முடித்து, பெண்ணைப் போய்ப் பார்த்துச் சொல்லிவிட்டு வந்தேன்.

வீட்டிலேயே கொஞ்சம் தித்திப்பு, காரம் பட்சணங்கள் செய்து முடித்தாள் என் மனைவி.

மாலை நாங்கள் மூவரும் கடற்கரைக்குச் சென்றோம். காந்திஜி சிலையருகில் படிக்கட்டுகளில் அவர்கள் மகன் முரளி, மகள் ரத்தினா சகிதம் காத்திருந்தனர். நான் பரஸ்பரம் எல்லோரையும் அறிமுகப்படுத்தினேன். பிறகு மௌனமாக எல்லோரும் மணற்பரப்பை அடைந்தோம்.

‘‘எல்லாரும் உட்காரலாமே?’’ என்று நடேசன் தொடங்கினார்.

முதலில் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. என் மனைவி பட்சணங்களை எடுத்துக் காகிதத் தட்டுகளில் பரிமாறி உபசரிக்கத் தொடங்கியதும் எல்லோருக்கும் பேசத் தோன்றியது.

டாக்டர் முரளி, சரயுவைப் பார்த்து நேரடியாகப் பேசினான்.  ‘‘எந்தக் காலேஜிலே படிச்சீங்க?’’ என்று கேட்டான்.

‘‘க்வீன் மேரீஸ்தான். நீங்க?’’ என்று அவளும் சகஜமாகப் பேசினாள்.

நடேசன், சரயுவைப் பாடச் சொன்னார். அவள் தேவாரம் ஒன்றைப் பாடினாள். பேச்சு களை கட்டி விட்டது.

‘‘என்ன நகை போடப் போறீங்க?’’ என்று முரளியின் தாயார் ஆரம்பித்தாள்.

என் மனைவி சொன்னாள்.

‘‘பதினைந்து பவுன்தானா? எங்கப் பொண்ணுக்கு இருபது போட்டோம். தவிர மாப்பிள்ளைக்கு மைனர் செயின், மோதிரம் இதெல்லாம் பழக்கம்தானே?’’ என்றாள் அந்த அம்மாள்.

‘‘மற்ற இரண்டு பெண்ணுக்கும் பத்து பவுன்தான் போட முடிந்தது. இவள் சம்பாத்தியத்தைச் சேர்த்துத்தான் ஐந்து மேலே போட முடிகிறது’’ என்று விளக்கினேன் நான்.

‘‘நாங்க வரதட்சிணை வாங்க மாட்டோம்.’’

‘‘உங்களுக்கு வேளச்சேரியிலே ஒரு வீடு இருக்கிறதாமே?’’ என்று ஆரம்பித்தாள் முரளியின் தாயார்.

டாக்டர் என்னைச் சட்டென்று உன்னினான்.

நான் அவர்களுக்கு உடனே பதில் சொல்லவில்லை. என் மகளைப் பார்த்து, ‘‘சரயு, நீ என்ன சொல்றே? தனியாகச் சொல்றதானால் உன் அம்மாவை அந்தண்டை அழைச்சிண்டு போய்ச் சொல்லு…’’ என்றேன். முடிவை அவள் கையில் விடலாம் என்ற நோக்கம் எனக்கு. அவள் மட்டும் மனப்பூர்வமாக அந்தப் பையனை விரும்பினால், நான் என் வீட்டை விட்டுத் தரத் தயாராக இருந்தேன்.

‘‘டாக்டருக்கு என்ன பிளட் குரூப் கேளுங்க, அப்பா’’ என்றாள் அவள், சம்பந்தமில்லாமல்.

‘‘ஏன் கேட்கிறே?’’ என்றேன், ஆச்சரியத்துடன்.

‘‘எனக்கு RH ஃபாக்டர் இருக்குதே? நீங்க ஜாதகப் பொருத்தத்தையே பார்க்கிறீங்க. அதிலேயே ஒருத்தர் சொன்ன மாதிரி ஒருத்தர் சொல்லலைன்னு பேசிக்கிறீங்க. வைத்தியத்திலே அப்படி இல்லை, அப்பா. சில ரத்தம்தான் சேரும். அந்த வித்தியாசத்திலே எத்தனை தாம்பத்தியம் திண்டாடிப் போறது அப்பா! டாக்டரைக் கேளுங்க. எங்க க்ளினிக்கிலே பல கேசு…’’ என்றாள் சரயு நிதானமாக.

‘‘என்ன இப்படிப் பேசறா உங்க பெண்? நினைச்சுப் பார்த்தால் அசிங்கமாக இல்லை?’’ என்று வெகுண்டு எழுந்தான் டாக்டர் முரளி.

‘‘இந்தக் காலத்துப் பெண்களுக்கு வெட்கமே இல்லை’’ என்றாள் அவனுடைய தாய்.

‘‘புத்திசாலியாகத்தானே பேசினா, அண்ணா… உன் பிளட் குரூப் சொல்லேன்’’ என்று இடைமறித்தாள் அவர்கள் பெண் ரத்தினா.

‘‘ரத்னா!’’ என்று கோபமாகப் பெண்ணை அடக்கினார் நடேசன். அவள் பயந்துப் பின்பக்கமாக நகர்ந்து விட்டாள்.

‘‘என்ன அம்மா சரயு, இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால், நானே மாமியிடம் ரகசியமாக விசாரித்திருப்பேனே? பார், அவர் உன்னைத் தப்பா எடை போடறா?’’ என்று என் மனைவி, மிக்க துக்கத்துடன் தன் மகளிடம் கெஞ்சினாள்.

நடேசன் மேல் துண்டை எடுத்து உருவிப் போட்டுக்கொண்டார். ‘‘சார், நீங்களும் நானும் பேசுவோம். எனக்குப் பளிச்சென்று பேசத்தான் தெரியும். என் பையன் ஓரளவு நன்றாகக் கால் ஊன்றி விட்டான். நாங்க இருக்கிற வேளச்சேரி வட்டாரத்திலே ஒரு நல்ல மருத்துவமனை தேவைப்படுகிறது. எனக்கு இன்னுமொரு பெண் கல்யாணத்துக்கு இருக்கிறாள். அதனால் அந்த வசதியை அவனுக்குச் செய்து கொடுக்க முடியவில்லை. உங்க வீட்டை உங்க பெண் மீது எழுதி வைத்தால் நன்றாக இருக்கும். உங்கள் பெண்தானே வாழப் போகிறாள்…? செவ்வாய் தோஷ ஜாதகம்… நர்ஸ் வேலை பார்த்த பெண்…’’ என்று கூறி நிறுத்தினார்.

‘‘ஏன், நர்ஸ் வேலைக்கு என்ன? புனிதமான தொழிலை அவளே தேர்ந்தெடுத்தா’’ என்றேன் பெருமையாக.

‘‘புனிதம்தான். இலட்சியவாதத்துக்குச் சரிதான். ஆனால் எத்தனை பேர் அழுக்கையெல்லாம் அப்புறப்படுத்தியிருப்பாள்! அதை நினைச்சா ரொம்ப பேர் யோசிப்பாளே?’’ என்றாள் திருமதி நடேசன்.

நான் என் மகளைப் பார்த்தேன். அவள் கண்களில் தீ மூள்வது புரிந்தது. ‘‘டாக்டர் தொழில் மட்டும்?’’ என்று அவள் அந்த அம்மாளைப் பார்த்துக் கேட்டு விட்டாள்.

எனக்குக் கள் வார்த்தது போல ஆகிவிட்டது. அவரைப் போலவே நானும் என் மேல் துண்டை மடித்து நின்றேன். ‘‘நல்ல இதமான சூழ்நிலையிலே இருக்கிறோம். இப்படியே பிரிவோம் சார். எனக்கு வேளச்சேரியிலே ஒரு சிறிய வீடு இருக்கிறது. நாங்க இரண்டு பேரும் வயதான காலத்தில் இருக்க ஒரு நிழல். அதில் இப்பொழுது இருந்தால் செலவுக்குப் பணம் குறையும். வட்டி கட்ட வேண்டும். நான் சாதாரண நடுத்தர வர்க்கத்து மனிதன் சார். நிறைய வாடகைக்கு அதை யாருக்கோ கொடுத்து விட்டு, நான் சொற்பக் குடிக் கூலியில், அற்ப வசதியுடன் ஒண்டுக் குடித்தனம் நடத்துகிறேன் சார்.’’

‘‘நமக்கு ஒத்து வராது சார். ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். உங்கள் வீட்டு வாசலில் கார் நிறுத்தியிருந்த விதம் ஒன்றே என்னை விரட்டியிருக்க வேண்டும். வீட்டைத் தேடி வருபவர்களைத் தாராளமாக வரவேற்காமல், ஒரு பெரிய நந்தியைக் குறுக்கே நிறுத்தினதில் புரிகிறது, உங்களுக்கு அடுத்தவர்கள் மனநிலை பற்றிக் கவலை கிடையாது என்று. சொத்து மீது அபார ஆசை. போதும் சார் உங்களுக்கு எவ்வளவு பணம் இருந்தால் எனக்கு என்ன சார்? மனம் விசாலமில்லாத வீட்டில் என் பெண்ணுக்குப் புழுக்கமாகி விடும்.”

‘‘செவ்வா…’’

‘‘செவ்வாய் தோஷம் கிடக்கட்டும் சார், என் பெண்ணுக்கு நல்ல இன்பமான, நிறைவான வாழ்க்கை வேண்டும்.’’

‘‘அதுதான் முக்கியம். நானும் என் உடம்பிலே யுகயுகமாக ஊறிவிட்ட பழக்கத்தில் அவளுக்கு மண வாழ்க்கையில் ஒரு பாதுகாப்புத் தேடியது உண்மைதான். பாதுகாப்பு என்ன பெரிய பாதுகாப்பு! நீங்க ஒரு நல்ல யோசனை சொன்னீங்க. வீட்டை அவள் பேரிலே எழுதி வச்சிடறேன். தாங்க்ஸ் சார். என் புத்தியைத் தெளிவு படுத்திட்டீங்க. அவள் தன் தொழில் செய்து கொண்டு பிறர் கஷ்டத்தை நீக்கிக் கொண்டு வாழட்டும்.’’  நான் படபடப்பாய் பேசிவிட்டேன். என் மூச்சு வாங்கியது. முகம் சிவந்தது.

வைத்தியனின் நுண்ணறிவுடன் முரளி சட்டென்று என் நாடியைப் பார்த்தான்.

சரயு அதற்குள் என்னைத் தழுவியபடி அமரவைத்து, ‘‘எதுக்கு, அப்பா நீங்க உணர்ச்சி வசப்படறீங்க? நீங்க இனி செய்யப் போறதையெல்லாம் இப்ப விஸ்தரிக்கணுமா? ‘சரிப்படலை’ன்னா போச்சு’’ என்று அன்புடன் கடிந்தாள்.

என் மனைவி தன் தலைப்பால் என் முகத்தை விசிறினாள்.

‘‘வாடா முரளி, அவர் கையை விடு’’ என்று கட்டளையிட்டார் தந்தை.

அவன் என் கையைப் பார்த்து விட்டு ‘‘ஹார்ட்?’’ என்று முடிக்காமல் சரயுவைக் கேட்டான்.

‘‘ஆமாம்’’ என்று என் மகள் கண் இமைத்தாள்.

அவன் வேகமாக நடந்து செல்லும் தன் பெற்றோரைப் பின்பற்றவும் முடியாமல், எங்களை அப்படியே விட்டு விடவும் துணியாமல் தவித்தான்.

‘‘நீங்க போங்க. எனக்குப் பழக்கம்தான். பார்த்துக் கொள்கிறேன்’’ என்றாள் சரயு.

அவன் கை கூப்பிவிட்டு விடை பெற்றான். இப்பொழுது அவன் முகத்தில் ஒரு கனிவு இருந்தது. நான் ஆசுவாசமடையும் வரை அவன் என் அருகில் இருந்தான். பிறகு ‘‘மிஸ் சரயு, என் பிளட் குரூப் கூட…’’ என்று ஆரம்பித்தவனை சரயு கை அமர்த்தி நிறுத்தி விட்டாள்.

‘‘இனித் தேவையில்லை, நான் இனி கன்னியாகவே இருப்பதாகத் தீர்மானித்து விட்டேன். என தகப்பனாருக்கு ஒரு மகன் இல்லை. அப்படி ஒருவன் இருந்திருந்தால், அவன் என் அப்பா, அம்மாவைக் கவனிப்பான். அவன் கடமை தவறினாலும், ஊரார் அவனைச் சொல்லிச் செய்ய வைப்பார்கள். இன்றைக்கு இவ்வளவு விஸ்தாரமாகப் பேசிய பிறகுதான் எனக்கு எல்லாம் தெள்ளெனப் புரிந்தது. நான் இனி என் பெற்றோருக்கு ஒரு பிள்ளை’’ என்றாள் சரயு தீர்மானமாக.

‘‘எனக்கும் இன்றைக்குப் பல விஷயம் புரிந்தது. நீங்க சொல்வது போல ரத்த க்ரூப் கவனிக்க வேண்டியதுதான்.’’

நடேசன் தூர நின்று மகனுக்காகக் காத்திருப்பது தெரிந்தது. ரத்தினா ஓடோடி வந்தாள். ‘‘அண்ணா, அப்பா கோவமாக இருக்கிறார். வா சீக்கிரம்’’ என்றாள்.

டாக்டர் முரளி கிளம்பிவிட்டான். அவன் திரும்பிப் பாராமல் தன் தங்கையுடன் நடந்தான். தன் பெற்றோர் இருக்குமிடம் அடைந்தவுடன் ஒரு முறை திரும்பிப் பார்த்தார்கள் அண்ணன், தங்கை இருவரும். கையை உயரத் தூக்கி அஞ்சலி செய்தனர்.

நானும் கையைத் தூக்கி ஆமோதித்தேன். ‘‘வெட்கமில்லைன்னு உன்னைச் சொன்னார்களே, அந்தப் பையனுக்குத்தான் வெட்கமில்லை. அப்பாவோடும் சேருகிறான். நம்மகிட்டேயும் குழைகிறான்’’. நான் நறநறவென்று பல்லைக் கடித்தேன்.

‘‘போதும் அப்பா. அவர்களோ போய்விட்டார்கள். இன்னும் என்ன கோபமும் தாபமும்?’’ என்றாள் சரயு.

‘‘படிப்பும் பண்பும் அவர்கள் உடம்பிலே ஊறவேயில்லையே? டாக்டர் பையன் தன் தொழிலின் புனிதம் புரியாமல் வியாபாரமாக நினைக்கிறானே?’’ என்று என் மனைவி அங்கலாய்த்தாள்.

‘‘ஊறிப் போனதையெல்லாம் ஒரே நாளிலே நீக்கிவிட முடியாது அம்மா. பசங்களைப் படிக்க வைக்கணும். வேலைக்கு அனுப்பணும், கல்யாணம் செய்து வைக்கணும் – இப்படி ஒரு நியதி, ரயில் வண்டித் தொடர் மாதிரி. ஒரே மாதிரி ஜாதகம், பெண் பார்ப்பது, லௌகீகம் பேசுவது. எல்லாம் கண்மூடித்தனமாக நடக்கிறது. இப்படி எத்தனை பேர் அம்மா, இந்த அப்பா மாதிரி உப்பு காகிதமாக உரசி எடுப்பா சொல்லு’’ என்று மொழிந்து விட்டு என் மகள் பெரிய நகைச்சுவை கண்டவள் போல கலகலவென்று சிரித்தாள்.

இந்த மாதிரி ஊறிப்போன வியாதிகளுக்கு என்னைப் போல ஓர் இதயக்கோளாறு என்ன செய்து விட முடியும்? என் பெண்ணும், அந்த டாக்டரும், ரத்தினாவும் கை தூக்கிக் காட்டிக் கொண்டபோது இந்த இளைஞர் உலகம்தான் வழி காட்டப் போகிறது என்று எனக்குத் தோன்றியது.

*****

காலத்தை வென்ற கதைகள்! – 2

ராஜம் கிருஷ்ணன்

 Image

1925ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தார். பள்ளிக்குச் சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் இவருக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணம். கணவர் மின் பொறியாளர். அவர் உதவியோடு புத்தகங்களைப் படித்தார். பிறகு அவரே எழுத ஆரம்பித்தார். ‘கரிப்பு மணிகள்’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட இவருடைய பல நாவல்கள் கள ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டவை. பெண் மன உணர்வுகளை யதார்த்தமாக பிரதிபலிக்கும் எழுத்துக்கள் இவருடையவை. ராஜம்-கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. தொண்ணூறாம் வயதில் கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்தார். சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற இவர், போது சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் பெண்களுக்கான பொது வார்டில் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார்.

தலைமுறைகள்

Image

ளைவு நெளிவுகளை அழித்துக்கொண்டு உடலைச் சுமக்க வைத்த சதை வயசுக்கும் வாழ்வின் சரிவுக்கும் கட்டுவிட்டுத் தொய்ந்து ஆடுகிறது. ஓர் அடி பெயர்த்து வைக்கும் முன் இன்னோர் அடியில் தாங்காத உடல் தள்ளாடுகிறது. முண்டிதமான தலையை மறைக்கும் சேலை இறுக்கமாக இரு செவிகளையும் மூடிக் கொண்டிருக்கிறது. துல்லியமான பார்வை இல்லாத கண்களைப் பாதுகாக்க அமைந்தாற் போன்ற கண்ணாடி. டாக்ஸியை விட்டு மெல்ல இறங்கும் மருமகள் ஒவ்வோர் அடியாக வாயிற்படியிலேற்றிக் கூட்டி வருகிறாள். வளைவே இல்லாத மெத்தென்ற பாதம் மொஸைக் தளத்தில் சில்லென்று அழுந்தும்போது கூசுகிறது.

‘‘மெள்ள, மெள்ள!’’ என்று படி ஏற வைக்கிறார்கள். மூச்சு வாங்குகிறது.

‘‘இப்படி உட்காருங்கோம்மா. சோபா பிளாஸ்டிக் துணிதான்’’ என்று முதியவளை உட்கார வைக்கிறாள்.

சந்தேகம் தீர, கை சோபாவின் பரப்பைத் தொட்டுப் பார்க்கிறது.

இதற்குள் டாக்ஸிக்காரனுக்குப் பணம் கொடுத்துவிட்டு, பிள்ளை பெட்டியையும் பையையும் கொண்டு வருகிறார்.

‘‘குழந்தை இன்னும் வரலியாம்மா?’’

கண்ணாடிக்குள் இருக்கும் திரைபடர்ந்த விழிகள் எதிரே நிலைக்கின்றன.

‘‘நீங்க பல் தேச்சுக் காபி குடிக்கிறேளா?’’ என்று கேட்கிறாள் மருமகள்.

‘‘கப்பல் காலமேயே வந்திருக்கும்னானே! குழந்தை வரட்டுமே!’’ அந்தரத்தில் பிடிப்பின்றி அசையும் நூலிழை போல் ஒலிக்கிறது குரல்.

‘‘கப்பல் வந்திருக்கும். அவன் வரட்டுமே? நீங்க நேத்து ராவே பட்டினி. ரயில்லே வந்த சிரமம் வேறே. பல்லைத் தேச்சுக் காபியைக் குடியுங்கோ… மெள்ள… பாத்ரூமுக்கு வரேளா?’’

‘‘இப்ப ஒரு தரம், அப்புறம் ஒருதரம் எழுந்திருந்து போக வேண்டாம்னு பார்த்தேன்’’.

பஞ்சுப் பிசிறுகளைப் போல் மனப்பரப்பு முழுவதும் ஆசைகள் பரவிக் கிடக்கின்றன. ஒன்றாகத் திரட்டி முறுக்கிக் குரலாக்கக் கிழவிக்குச் சக்தி இல்லை. பிசிறுகள் குரலாக இழையுமுன் பொருள் கரைந்துவிடும் நலிவு.

‘‘ரெண்டு தரம் எழுந்திருக்க வேண்டாம்னா, இப்பவே பல் தேச்சு ஸ்நான பானத்தை முடிச்சிக்கலாம்மா. பாயிலரில் வெந்நீர் கொதிக்கிறது’’.

கிழவி சலனம் காட்டவில்லை.

புகையிலைச் சாற்றை வாஷ் பேஸினில் உமிழ்ந்து விட்டு வரும் பிள்ளை, குரலில் கொஞ்சம் கடுமையுடன் ‘‘ரெயில் தீட்டிலே காபி குடிக்கக்கூடாதுன்னா, குளிச்சிட்டுத்தான் குடியேன். இந்த ஆசாரமெல்லாம் ஊரோட மூட்டை கட்டணும். பேரனைப் பார்க்கப் பட்டணம் வரணும்னா ஆசாரம் பார்க்கக்கூடாதுன்னு சொல்லலே நான்?’’ என்று கேட்கிறார்.

‘‘அதுக்கில்லேடா; ரெயில் தீட்டென்ன ரெயில் தீட்டு? குழந்தையைப் பார்க்கணும்னுதானே இந்தச் சரீரத்தைத் தூக்கிண்டு உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுத்திண்டு வந்திருக்கேன்? சுமந்துண்டுவர ரெயிலுக்குத் தீட்டென்ன, தீட்டு? ஆசையைச் சுமந்துண்டு வரபோது மடியேது மடி?’’

‘‘பின்னென்ன யோசனை? காபி ஆறினா உனக்குப் பிடிக்காது. பல் தேச்சுட்டு வா. இங்கே பக்கத்தில்தான் பாத்ரூம்’’.

‘‘இங்கேயா?’’

‘‘ஆமாம்’’.

மருமகள் கையைப் பற்றி எழுப்பி ஒட்டிய வாயிற்படிக்கு அழைத்து வருகிறாள்.

‘‘இவ்வளவு பக்கத்திலியா இருக்கு?’’

‘‘ஆமாம்’’.

‘‘இது ராஜனுக்கு சிநேகிதாளாந்தானே? அவா ஒத்தரும் இல்லியா?’’

‘‘சிநேகிதாளாந்தான். அவா ரெண்டுபேரும் ஏதோ கல்யாணம்னு திருப்பதிக்குப் போயிருக்காளாம். சாவியைப் பக்கத்தாத்தில் கொடுத்திருந்தா’’.

‘‘மாடியா அழச்சிண்டு வந்தியேன்னு பார்த்தேன்’’.

‘‘இங்கெல்லாம் மாடி மாடியா ப்ளாட்தாம்மா. நம்ம கிராமம்னு நினைச்சேளா?’’

‘‘அப்படியா? எனக்கென்ன புரியறது? அப்ப பக்கத்தாத்துக்காரா பாயிலரில் நெருப்புப் போட்டு, வெந்நீர் போட்டு வச்சிருக்காளாக்கும்? வந்த இடத்தில் உனக்குச் சமையல் வேலை வேற புடிச்சிண்டுதா?’’

‘‘இல்லேம்மா, மடியா அடுத்தாத்திலே சமையல் பண்ண ஏற்பாடு பண்ணியிருக்கா. காபி அங்கேருந்துதான் கொண்டு வந்திருக்கேன்’’.

‘‘இதெல்லாம் என்ன விசாரணை வேண்டியிருக்கு?’’ என்று பிள்ளையின் கடுங்குரல் செவியில் விழுந்ததும் கிழவி மௌனமாகிறாள்.

மருமகள் கருவேலம்பட்டைப் பொடியை, டப்பியைத் திறந்து எடுத்துக் கொடுக்கப் பல் துலக்குகிறாள். மெல்லச் சோபாவுக்கு மீண்டதும் திருநீற்றுச் சம்புடத்தைத் திறந்து நெற்றியில் பூசிக் கொள்கிறாள்.

அடைத்த இடத்தில் நீர் பொசிவதுபோல் சந்தேகம் மீண்டும் கசிகிறது.

‘‘அதென்ன கட்டிலா?’’

‘‘ஆமாம். பெரிய கட்டில். நீ உட்கார்ந்திருக்கிறது பெரிய சோபா, பீரோ, நாற்காலி எல்லாம் இருக்கு. வெந்நீர்போட நெருப்பு மூட்ட வேண்டாம். ஸ்விட்ச் போட்டா சுட்டுடும்’’.

‘‘சமைக்கற ரூம்பு பின்னாடி இருக்கோ?’’

‘ராம ராமா!’ என்ற மருமகள் மனசோடு அலுத்துக் கொண்டு, ‘‘ஆமாம், பின்னே இருக்கு. அதை எல்லாம், பூஜை ரூமைக்கூடப் பூட்டிண்டு போயிருக்கா’’ என்று உரைக்கிறாள்.

விழிகள் சூனியத்தில் நிலைத்துவிட்டு மறுபடியும் தாழ்கின்றன.

‘‘ராஜனோட இந்தச் சிநேகிதனுக்கு நிறையச் சம்பளமோ?’’

‘‘ஆமாம்’’.

‘‘இல்லே, பட்டணத்திலே பெரிய வீடுன்னா, பங்களாவா, தோட்டம், ஹால்னு இருக்கும்னுதான் நினைச்சிண்டிருந்தேன். இப்ப எவ்வளவோ மாறிப்போச்சு. இந்த வீடு சொந்த வீடுதானாமா?’’

‘‘என்னெல்லாம் விசாரணை பாரு! எப்படியாயிருந்தா இவளுக்கென்ன?’’

‘‘இல்லேடா இல்லே. கேட்டேன். கீழெல்லாம் பளிங்காட்டமா இருக்கே. சுச்சி போட்டா வெந்நீர் மாதிரி, சமையலும் பண்ணுவாளா இருக்கும்’’.

குரலின் சுருதி இறங்கி, அவளுக்குப் பரிச்சயமான உலகத்தில் ஒன்றுகிறது.

பெரிய வாசல் – திண்ணைகள், ரேழி நடை, எடுத்துக் கட்டிய பெரிய பட்டகசாலை – பூஜையறை, இரண்டாம் கட்டு சாமான் அறை, சமையற்கட்டு, முற்றம், கொட்டில் என்று வாய்க்கால் கரைவரை நீண்டு செல்லும் உலகையே அவள் அறிவாள். அதுவும் சென்ற பதினைந்தாண்டுக் காலமாக அந்த எல்லையை விட்டு வெளியேறி அடுத்த ஊருக்கு சென்றிருக்கவில்லை. தாயின் கருப்பையை விட்டு வெளியேறிய சிசு பிரம்மமாய் ஒளியைப் பர்த்துக் கொண்டு கிடப்பதைப் போல் உட்கார்ந்திருக்கிறாள்.  இப்படி முன்பின் தெரியாத இடத்தில் ஜடமாய் வந்து உட்காருவோம் என்று கற்பனை கூடச் செய்திருக்கவில்லை.

அவள் கண்விழித்துக் கண்ட உலகும், ஆண்ட உலகும் இன்று கால ஓட்டத்தில் நிலை புரண்டு விட்டன. பிறந்த இடமும் புகுந்த இடமும் பூமியைக் கட்டி ஆண்டு அது பவித்த வளமையில் செழித்தவை. அரைப்படியும் காற்படியும் வடிப்பதைப்பற்றியே அவள் அறிந்ததில்லை. சமையற்கட்டில் கூலிக்கு வைத்துக் கொண்ட ஆட்களாகவே அந்த வீட்டில் யாரும் பணி செய்ததில்லை. தலைமுறை தலைமுறையாக அண்டி வாழ்ந்த ஏழைக் குடும்பங்கள் என்றுதான் சொல்லவேண்டும். மடியாகப் புடவை துவைத்துலர்த்த, வெந்நீர் வளாவி வைக்க, கால் பிடித்துவிட என்று வரும பெண்களை வெறும் சோற்றைப் போட்டுச் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிடும் வழக்கம் அவளுக்குத் தெரியாதது. பாடசாலையில் வளரும் பையனோ, வாரச் சாப்பாட்டுக்கு வரும் இளைஞனோ அகப்படாமல் போகமாட்டான். கூறை தாலி வாங்கி, கெட்டிமேளம் கொட்டிக் குடித்தனம் வைப்பது வரையிலும் பொறுப்பேற்றிருக்கிறாள். இருக்கிறது இல்லை என்றோ முதல்தேதி கடைசித்தேதி என்றோ கணக்குப் பார்த்தறியாள்.

இன்று அந்தப் பிரபுத்துவ வாழ்க்கையின் வெறும் சின்னமாகக் கிழவி, இயங்கச் சுமையாக இருக்கும் சரீரத்துடன், மிஞ்சி இருக்கிறாள். அந்த வாழ்வின் தேய்மான காலப் பிரதிபலிப்பாய்ப் பிள்ளை, ஒரே வாரிசு. கும்பகோணம் கல்லூரியில் அவன் படித்ததெல்லாம் திண்ணை அரட்டையில் வெற்றிக்கொடி பிடிப்பதற்குத்தான் என்ற உணர்வுக்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற ரேகை நினைவும் கிடையாது. செம்பு செம்பாகக் காபியும் கவுளி கவுளியாக வெற்றிலையுமாகச் சீட்டாட்டம் அமர்க்களப்படும். கிரிக்கெட் மாட்ச், சங்கீத சீஸன் என்றால் பட்டணம் போய் ஆயிர ஆயிரமாகச் செலவழிக்கும் வாய்ப்பு என்று பொருள். நண்பர்கள், தெரிந்தவர்கள் வந்தால் பாலும் நெய்யுமாகச் சாப்பாடு. இந்த வாழ்க்கையில் பழகி வந்தாலும் தேய்வின் கடுஞ்சரிவில் நின்று சமாளிக்க இளமை துணை இருப்பதால் மருமகள் தாங்கி நிற்கிறாள்.

நான்கு பெண் மக்கள். இரண்டு பேருடைய கல்யாணங்கள் குடும்ப கௌரவத்தின் எந்த அம்சத்துக்கும் பங்கம் வராமல் பணம் தண்ணீராய்ச் செலவழியும்படி நடந்தேறின. மூன்றாவது பெண்ணுக்குக் கல்யாணம் செய்யும் யோசனை இல்லை. தஞ்சாவூர் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள். அவள் டாக்டராகப் போகிறாளாம். இடம் பிடிக்கவே ஆயிரக்கணக்கில் செலவழித்திருக்கிறார்கள். கடைசிப் பெண்ணும் சிதம்பரம் போய்ப் படிக்கிறாள். பையன், ஒரே கொழுந்தாய் நிற்கும் வாரிசு, படித்த படிப்புக்கு இரண்டாண்டுகள் வேலையின்றிச் சேர்ந்தபின் திரைகடல் மேலே போயிருக்கிறான். கப்பலிலே பணி. மண்ணின் வாசனையிலும் வண்மையிலும் சுகம் காணும் ருசி அறியாத குழந்தை அவன். இன்றையத் தலமுறையின் பிரச்னைகளை எதிர்க்க, கடல் மேல் பணி செய்யப் போகிறான். அவன் வாழ்வைத் தேடிக் கடல்மேல் செல்வதனால்தான் அந்தக் குடும்பத்தின் இன்றைய வாழ்வின் தேவைகளுக்கு வேண்டிய ஈரம் பசைக்கிறது.

‘‘காபி சாப்பிடறேளா? இந்தாங்கோ!’’

‘‘குழந்தை இன்னும் வரலியேம்மா? அவனைப் பார்க்காமலா காபி?’’

‘‘அவன் ஏறத்தாழ வருவான்.  நீ நொண நொணன்னு அரிக்காம காபியைக் குடியேன்’’. பிள்ளையின் அதட்டலில் கிழவி மௌனமாகக் காபியை வாங்கிக் குடிக்கிறாள்.

விழிகள் மறுபடியும் சூனியத்தில் நிலைக்கின்றன.

எப்போதோ பன்னிரண்டு வயசில் பட்டணத்தில் ஜட்ஜ் வீட்டுக் கல்யாணத்தக்கு அவளுடைய அப்பா கூட்டிக் கொண்டு வந்தார். அப்போது பீச், லைட்ஹவுஸ் எல்லாம் கொண்டு காட்டினார். அப்போது நடுச் சமுத்திரத்தில் அவள் ஒரு கப்பல் நிற்கக் கண்டாள். அதற்குள் டென்னிஸ் கோர்ட், வெள்ளைக்காரர்கள் ஆணும் பெண்ணுமாக டான்ஸ் ஆடும் கூடம் எல்லாம் இருக்குமென்று அவர் சொன்னார். அந்தக் காலத்தில் கப்பலேறிப் போய் வந்தால் பிராயச்சித்தம் பண்ணிக் கொண்டால்தான் உள்ளே சேர்ப்பார்கள்.

போன வருஷம் தீபாவளி கழிந்து ஒருநாள் ‘‘பாட்டி போயிட்டு வரேன்’’னு சொல்லிக் கொண்டு போன குழந்தை இன்று முகத்தைக் காட்டப் போகிறான். ‘‘கப்பல் மதராஸுக்கு வருகிறது. அப்போது பார்க்கலாம். பிறகு இந்தக் கரைக்கு வர மூன்று வருஷமாகும்’’ என்று பிள்ளை சொன்னதைக் கேட்டுத் துடித்துக் கொண்டு பேரனைப் பார்க்க வந்திருக்கிறாள்.

அந்தக் கூடத்தை விட்டு வெளியே வருவதைப் பற்றிய சிந்தையே இல்லாமல் இருந்தவள் எங்கோ வந்திருக்கிறாள்.

குழந்தை ஏன் இன்னமும் வரவில்லை?

நடுக்கடலில் ஆளுயர அலை அடிக்குமாம். பதினேழு பதினெட்டு வருஷங்களுக்கு முன் ‘அவர்’ இருந்த நாட்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை ஸ்நானம் செய்ய,  ‘பிளஷர்’ வைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அந்தச் சமுத்திரம் அவள் மனக் கண்ணில் எப்போதும் தெரிந்து கொண்டிருக்கிறது. இரவும் பகலுமாக அந்தச் சமுத்திர ராஜாவைக் குழந்தை போகும் கப்பலுக்கு ஒரு தடங்கலும் உண்டாக்காமலிருக்க வேண்டிக் கொள்கிறாள்.

‘‘கப்பல் அப்பவே வந்துடும்னியேம்மா?’’

‘‘அடடா! வந்தா அவனுக்கு எத்தனையோ வேலை இருக்கும். சித்தப் பேசாம ராமா கிருஷ்ணன்னு உக்காந்திரு’’ என்று பிள்ளை கோபிக்கிறார்.

‘ராமா கிருஷ்ணா’ என்று சொல்லப் பொருந்துகிறதா நெஞ்சம்? எதை எதையோ நினைக்கிறது. நடுக்கடலில் நிற்கும் கப்பல் கரை தட்டி வருவது போலவும், அதிலிருந்து குழந்தை இறங்கிப் பெரிய பெரிய பூட்ஸ் அடிகளை ஈர மண்ணில் பதித்துக் கொண்டு நடந்து வருவது போலவும் கிழவி கற்பனை செய்து கொள்கிறாள். நெஞ்சு வேகமாக துடிக்கிறது. மெல்லக் காலை நீட்டினால் பளீரென்று மூட்டில் வலி வெட்டுகிறது. உள்ளங் காலெல்லாம் இரத்தம் கட்டிய வலி. அந்தக் காலத்தில் சாப்பிட்டு ஊஞ்சற் பலகையில் படுத்தால் லட்சுமி இதமாகக் காலைப் பிடித்து விடுவாள். அவளை அன்னம்மா பிள்ளைக்குத்தான் கட்டிக் கொடுத்தார்கள். திருச்சி ரெயில் ஆபீஸில் வேலை பார்க்கிறான். மூன்று குழந்தைகளுடன் போன மாசம் கிராமத்துக்கு வந்து பார்த்துவிட்டுப் போனாள்.

சிந்தனையோட்டம் தேயச் சற்றே கண்ணயர்ந்து போனாற்போலும், குரல் கேட்டாற்போலும் திடுக்கிட்டு விழிக்கிறாள்.

‘‘குழந்தை வந்துட்டானாம்மா?’’

‘‘நீங்க குளிச்சு ஜபம் பண்ணிச் சாப்பிடுங்கோம்மா. மணி பத்தாயிட்டது’’.

‘‘பத்தாயிடுத்தா? தூங்கிட்டேனா என்ன? குழந்தை எங்கே? சாப்பிடறானா?’’

‘‘ராஜன் மத்தியானத்துக்கு மேல்தான் வருவானாம். இப்பத்தான் உங்க பிள்ளை டெலிபோன்லே கேட்டார்’’.

‘‘டெலிபோனா? அது இங்கே இருக்கா? குழந்தை அதிலே பேசினானா?’’

‘‘ஆமாம்’’.’

‘‘அப்படீன்னா அப்புறமாவே குளிச்சிக்கிறேனே? அவனைக் கண்ணாலே பாக்கறதுக்காகவா உக்காந்திருக்கேன்? தொட்டுப் பார்க்க முடியாதேன்னுதானே இத்தனை தூரம் வந்தேன்! அப்புறமா குளிச்சிட்டு அவனோட சாப்பிடறேனே? தினம் தினந்தான் பத்து மணிக்குச் சாப்பிடறேனே?’’

‘‘ராம ராமா! இவளுக்கு எத்தனை தரம் சொன்னாலும் புரியாது! அவன் குளிச்சுச் சாப்பிட்டப்புறந்தான் வருவான்’’ என்கிறார் பிள்ளை.

‘‘ஆமாம்மா, உங்க ஸ்நானம் ஜபம் முடிச்சு, சாப்பிட்டுடுங்கோ. அப்புறம் தொட்டா என்ன?’’

‘‘அதுவும் சரிதான். தொட்டுப் பேசிட்டுக் குளிக்கறதும் சரியில்லை, மனசுக்கு எப்படியோ இருக்கும்’’.

குளியலறைக்கு மருமகள் இட்டுச் சொல்கிறாள்.

நீராடி, மடிசஞ்சியிலிருந்து எடுத்த மடி உடுத்து, கீழே வழுக்குத் தரையில் உட்கார்ந்து அன்றாட வழிபாட்டில் ஒன்றுகிறாள்.

காலணி ஓசை கேட்கிறது.

‘‘வா’ வா! ஏன் இத்தனை நேரண்டா ராஜா?’’

உருத்திராட்ச மாலை நழுவ, கண்கள் பிரமித்து நிலைக்க,  ‘‘குழந்தே!’’ என்ற குரல் துளும்புகிறது.

உணவு கொள்ளுமுன், இறை வழிபாடு முடிக்குமுன் எதையும் தொடாத ஆசாரம் கழன்று விடுகிறது.

‘‘ஏன் பாட்டி? கீழே தரையில் உட்கார்ந்திருக்கே?’’’

பேரன் கிழவியை எழுப்பித் தூக்கிச் சோபாவில் உட்கார்த்துகிறான். சுமையாய்ச் சுமக்கும் வலிகளெல்லாம் கரைந்து போகின்றன. பொன் முடிந்த துணிக்குத் தீட்டு உண்டா? வயிற்றில் பிறந்ததன் வாரிசுக்குக் கப்பல் தீட்டு ஏது?

கிழவிக்குப் பேச்சு எழவில்லை.

‘‘என்னடா ராஜா கையிலே பாண்டேஜ்?’’ என்ற மருமகளின் குரல் கேட்டு அதிர்ச்சியுறுகிறாள்.

‘‘ஒண்ணுமில்லேம்மா; பாயிலர்ல சுட்டுடுத்து’’.

‘‘சுட்டுடுத்தா? சுட்டுடுத்தா? பாயிலர்லேந்து வெந்நீர் எடுத்து வைக்க ஆளில்லையாடா குழந்தே?’’

பேரன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

‘‘ஐயோ பாட்டி, சுடவுமில்லே, ஒண்ணுமில்லை. சும்மாத்தான் துணியைச் சுத்திண்டிருக்கேன். நீ தொடுகிறாயான்னு பார்க்க!’’

பாட்டி விம்மிதத்துடன் அவன் முகத்தை, முடியை, சட்டைபோட்ட மேனியை, கைகளைத் தொட்டுப் பார்க்கிறாள். உயரமும் பருமனுமாக அவன் தாத்தாவைப் போலிருப்பான். அவர் குடுமி, இவன் கிராப்பு. காதுகளில் பிழம்பாய் ஒளிரும் கடுக்கன்கள் இருக்கும் அவருக்கு. ராஜ கம்பீர நடை, இவனுக்கு? இந்தக் குலக்கொடிக்கு அந்த மண்ணை நுகர நிழலில்லை.

வயிற்றில் சொரேலென்று குழி பறிக்கிறது.

‘‘குழந்தே நீ இளைச்சுப் போயிட்டியேடா?’’

‘‘ஐயையோ குண்டோதரன் மாதிரி இருக்கேன்னு எல்லாரும் சொல்றா!’’

கிழவியின் மனம் கப்பல் ‘ஞான’த்தை நினைவு கூருகிறது. அந்தக் காலத்தில் ரங்கூன் கப்பலுக்குப் போகிறவர்கள் எட்டு நாளைக்குக் காப்பி டிகாக்ஷனும் புளியோதரையும் பூரியும் காரத் துவையலும் கொண்டு போவார்களாம், டப்பிப் பால் காபிக்கு. கரைக்குக் கரை போகுமுன் நடுவிலே ரெயில் ஸ்டேஷன் மாதிரி என்ன கிடைக்கும்?

‘‘கப்பல்லே சாப்பாட்டுக்கு எல்லாம் கிடைக்குமாடா குழந்தே?’’

‘‘நிறையக் கிடைக்கும் பாட்டி. சாப்பாட்டுக்கு வேண்டியதெல்லாம் கரையிலேயே ஏத்திப்போம்’’.

‘‘சமையல்காரன் நன்னாச் சமைச்சுப் போடுவானோ ருசியா?’’

பிள்ளைக்குக் கோபம் வருகிறது.

‘‘இதான் இவகிட்ட, நொண நொணன்னு கேள்வி கேட்ப!’’

குற்ற உணர்வோடு மௌனமாகிறாள் முதியவள்.

‘‘பாட்டிக்கு இப்ப பார்வை சுத்தமா இல்லை போலிருக்கே?  காட்ராக்ட் முத்திடுத்துன்னா பட்டணம் வந்திருக்கேள், கண்ணை நல்ல சர்ஜனிடம் காட்டலாமே?’’

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லேடா குழந்தே. எனக்கு நன்னாத்தான் எல்லாம் தெரியறது. உன்னைப் பார்க்கத்தான் நான் வந்திருக்கேன். சமுத்திரத்திலே பெரிய பெரிய அலை அடிக்கிறப்ப கப்பல் ரொம்ப ஆடுமோடா குழந்தே?’’

‘‘சே சே! சும்மா தொட்டிலாடறாப் போல இருக்கும், அவ்வளவுதான். பாட்டியை ஒரு டாக்ஸி வச்சு மட்றாஸெல்லாம் சுத்திக் காட்டுங்கோப்பா’’.

‘‘ஆமாம், ரொம்ப நாளாத் திருப்பதிக்குப் போகணும்னு சொல்லிண்டிருந்தா. ஊரை விட்டுக் கிளம்பியாச்சு, அங்கேயும் போயிட்டுத் திரும்பத்தான் உத்தேசம்’’.

‘‘எனக்கு ஒண்ணுமே பார்க்க வேண்டாம். இலையைப் போடம்மா. குழந்தையும் சாப்பிடட்டும்’’.

‘‘நானா? நான் ஒன்பது மணிக்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுத்தான் வந்தேன் பாட்டி. பகல் ஒண்ணரை மணிக்கு ஒரு சிநேகிதன் கல்யாண விருந்து கொடுக்கிறான். போகணும்’’.

‘‘அப்ப, இங்கே நீ சாப்பிடாமே, என்னை உன்னை வச்சிட்டுச் சாப்பிடச் சொல்றியா குழந்தே?’’

மருமகள் கீழே இலை போட்டுப் பரிமாறுகிறாள். கிழவியைப் பேரன் எழுப்பி உட்கார வைக்கிறான்.

பச்சடி, கூட்டு, கறி, பருப்பு என்று மருமகள் சாப்பாட்டு அடுக்கைத்  திறந்து பரிமாறுகிறாள்.

‘‘ஒரு வாய் பருப்பும் சாதமும் தரேன். வாங்கிக்காட்டா மனசு கஷ்டப்படும் குழந்தே!’’

‘‘சரி’’ என்று பேரன் வாங்கிக்கொள்கிறான்.

‘‘சச்சு பிள்ளை நட்டு சுவாமிமலைக்கு வந்துட்டு வந்தான். ‘உங்க பேரன் கோழியும் மீனும் ஆடும் சாப்பிடக் கத்திண்டிருப்பான்’ என்றான். ‘வேற தண்ணி மேல போறப்ப பூசணிக்காயும் கொத்தவரங்காயுமா கிடைக்கும், அவியல் பண்ணித் திங்க? கடல் வாழக்காய்தான்’னான். நிசமாடா குழந்தே?’’

பாட்டிக்குக் கண்களில் நீர் தளும்புகிறது.

பேரன் குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறான்.

‘‘எதுக்குடா குழந்தை சிரிக்கறே? அப்படித்தானா? படிப்படியா  வடிச்சு, வந்தவாளுக்கெல்லாம் போட்ட வீட்டில் பிறந்த உனக்கு அந்தச் சாதமும் நிழலும் இல்லாமப் போயிடுத்தேன்னு…’’

கிழவியின் புலம்பலில் பிள்ளையின் பொறுமை குலைகிறது.

‘‘ஆரம்பிச்சுட்டாளா? நான் என்ன சொல்லிக் கூட்டிண்டு வந்தேன்?’’

‘‘இல்லேப்பா, அந்த நட்டு பொய் சொல்றான்னு எனக்குத் தெரியாதா? நான் நம்பலை’’.

வெளிப்படையாக நா மழுப்பினாலும், ‘ஒரு சாக்கு அரிசி கொண்டு வந்து கப்பலில் ஏற்றக் கூடாதா? குழந்தைக்குப் பல நாளைக்கு அது வருமே?’ என்று நெஞ்சு பேதைமையுடன் நினைக்கிறது.

‘‘பாட்டி, என் சாப்பாட்டைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப்பட வேண்டாம் நீங்க. ஃபஸ்ட் கிளாஸ் அரிசிச் சாப்பாடு. உங்களை எல்லாம் அடிக்கடி பார்க்க முடியாது; அவ்வளவுதான்’’.

‘‘மிஷின்லே வேலை செய்வேன்னா, அதெல்லாம் தூக்கி எடுக்கப் பளுவா இருக்குமோ? கஷ்டமா…?’’

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி. சும்மா மனசை ஏன் அலட்டிக்கிறேள்?’’

‘‘ஆமாம். கேள்வி கேட்டுக் கேட்டு உண்டு இல்லைன்னு தீர்த்துடுவ. சாப்பிட்டுச் சாப்பிட்டுத் திண்ணையிலே உட்கார்ந்தா செலவுக்குப் பணம் வந்து குதிக்குமா? கிராமத்தில் என்ன இருக்கு இப்பல்லாம்? சொச்ச மிச்சம் இருப்பதை ஒழிச்சிண்டு பட்டணத்திலே ஒரு வீட்டைக் கட்டிப் போட்டால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும்’’.

‘‘நல்ல யோசனைதான் அப்பா. இடம் ஏதேனும் பாருங்கள். பட்டணமாக இருப்பதனால் கப்பல் வரும்போது உங்களுக்கும் பார்க்க முடியும்’’.

கிழவி இடி விழுந்தாற்போன்று அதிர்ந்து சரிகிறாள்.

‘‘என்னடா சொல்றே குழந்தே!’’

‘‘ஒண்ணும் சொல்லலே. நீ சித்த பேசாம இரும்மா!’’ என்று மகன் வாய்ப்பூட்டுப் போடுகிறார்.

காலம் காலமாய் ஆற்றின் கரை ஈரப் பொசிவில் வேரோடி இருந்த மரம், வெட்டி வெட்டி மொட்டையாக்கினாலும், தளிர்த்துக் கொண்டிருந்தது. ஆறு மணலாறாய் வறள, பூச்சிகள் வேர்களை அரிக்கத் தொடங்கிய பிறகு தளிர்க்கும் ஈரமும் மாய்ந்து, எப்போதோ அடிக்கப் போகும் ஒரு பெருங்காற்றுக்குக் காத்திருக்கிறது. அதைப் பெயர்த்து இன்னொரு மண்ணில் நட முடியுமா?

அவளுடைய உடல் எப்போதோ சொன்னபடி கேட்காமலாகிவிட்டது. ஆனால் அந்த மனசு, என்றுமே தனக்கென்று மட்டும் நினைத்ததில்லை. கல்யாணம், கார்த்திகை, நோவு நொடி, பிள்ளைப்பேறு என்று யார் எந்த உதவி நாடி வந்தாலும் அந்தப் பெரிய வீட்டில் இடம் கொடுக்க அவள் மனத்தில் இடம் இருந்தது. அவர் இருந்த நாளில் எத்தனை ஏழைப் பிள்ளைகளுக்குப் பிரம்மோபதேசம் செய்து வைத்திருக்கிறார்கள்! பருப்புத் தேங்காய்ப் பாகு மணக்காத மாசம் இல்லை. அந்த நித்யகல்யாணக் கூடம் கோலாகலம் கண்டு எத்தனையோ நாட்களாயின. அந்தச் சமையலறை அடுப்பில் மருமகள் ஒரு வெண்கலப் பானையை வைத்து வடித்துச் சமைத்துவிட்டு அணைத்துவிடுகிறாள். மாசாமாசம் பாங்கிக் கணக்கில் பணம் வந்து செலவு செய்கிறார்கள். குலக் கொழுந்தான செல்வன் மண்ணும் வேருமில்லாததோர் வாழ்வுக்குப் போய்ப் பணம் சம்பாதிக்கிறான். அவன் கண்முன் நடப்புக்களை மறக்கும் இருட்டை வரவேற்காமல் எப்படி இருப்பாள்? இருட்டில் உட்கார்ந்து உண்மையை மறந்து, திரையில் காண்பதை ரசிப்பதுபோல, கடந்து போன நாட்களில்தான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

‘‘பாட்டி, போயிட்டு வரட்டுமா? மணியாயிடுத்து’’. அந்தக் கை படும்போது சிலிர்ப்பில் மூழ்கி எழுந்திருக்கிறாள்.

‘‘போயிட்டு வரியா குழந்தே?’’

நூழிலையில் தொங்கும் ஈயக்குண்டை நினைப்பூட்டுகிறது குரல்.

‘‘கண்ணை டாக்டரிடம் காட்டிண்டா, அடுத்த தடவை நான் வரப்ப உன்னைக் கப்பலுக்குக் கூட்டிப் போய்க் காட்டுவேன்; மாட்டேங்கறியே?’’

‘‘எனக்கு இப்ப என்ன தெரியலே? நீ போற சமுத்திரத்தின் அலை இந்த நெஞ்சிலே அடிச்சிண்டே இருக்குடா கண்ணா. இப்ப நீ எம் முன்னாடி இருக்கே. சித்தப் போனா, அந்த நெஞ்சுக்குள்ளே இருக்கற சமுத்திரத்திலே இருப்பே. வேற எனக்குக் கண்பார்வை எதுக்குடா குழந்தே?’’

ராஜன் அவள் பிடியினின்று விலகி விடைபெற்றுக் கொண்டு  போகிறான். அவனைத் தொடர்ந்து தாயும் தந்தையும் வாசலுக்குச் செல்கின்றனர்.

வில்லை அணிந்த ஓட்டல் பணியாள் சாப்பாட்டு அடுக்கை எடுத்துச் செல்ல அறைக்குள் வருகிறான்.

கிழவி வெற்றிடத்தைப் பார்த்துக்கொண்டு துணி மூட்டையாய் அழுந்திப் போகிறாள். ‘படி இறங்கிப்போய், ரெயிலேறி, அந்தக் கூடம்…’ என்ற உணர்வே மிஞ்சுகிறது.

(பாரி புத்தகப் பண்ணை வெளியிட்ட ‘உயிர்ப்பு’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து…)

காலத்தை வென்ற கதைகள் – 1

ஒரு புது வீச்சை தமிழ்ப் படைப்புலகில் ஏற்படுத்திய சாகா வரம் பெற்ற எத்தனையோ அற்புதச் சிறுகதைகள்… அத்தனையும் பெண் எழுத்தாளர்கள் எழுதியவை. ஒவ்வொன்றாக இங்கே…

Image

ஆர்.சூடாமணி

தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுபவர். 1931ல் சென்னையில் பிறந்தார். உளவியல் நோக்கில் இவர் எழுதிய சிறுகதைகள் பரவலாகப் பேசப்பட்டன. தமிழின் பல பத்திரிகைகளில் இவர் படைப்புகள் வெளியாயின. ‘சூடாமணி ராகவன்’ என்கிற பெயரில் ஆங்கிலத்தில் எழுதினார். நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளையும் ‘உள்ளக்கடல்’ என்கிற நாவலையும் எழுதியிருக்கிறார். ‘இலக்கிய சிந்தனை’ உள்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ‘இருவர் கண்டனர்’ இவர் எழுதிய நாடகம். சிறு வயதிலேயே அம்மை நோயால் தாக்கப்பட்டதால் இவரின் உடல் வளர்ச்சி குன்றியது. செப்டம்பர் 13, 2010ல் மறைந்தார்.

இறுக மூடிய கதவுகள்

பார்வை மங்கியது. எதிரில் கிடந்த அம்மாவின் முகம் பனிப்படலத்தினூடே மொத்தையாய்த் தெளிவின்றித் தெரிந்தது. கண் டாக்டர், மருந்து போட்டுக் கண் பாப்பாக்களை விரித்து வைத்தால் இருக்குமே, அந்த மாதிரி.

கண்களைத் துடைத்துக்கொண்டேன்.
இந்தக் கண்ணீர் ஏதோ நிமோனியாவில் காய்ச்சல் தகிக்க ஆக்ஸிஜன் குழாயினால் மூச்சு விட்டுக்கொண்டு நினைவின்றிப் படுத்திருக்கும் அம்மாவுக்காக மட்டும்தானா?
எனக்காகவும்தான்.
மற்றவருக்காக அழும்போது அந்த அழுகை பெரும்பாலும் நமக்காகவேதான் இருக்கிறது. நாம் அவருக்குச் செய்யத் தவறிய கடமைகளுக்காக, அவரிடம் காட்டாத அனுதாபத்துக்காக, அவரைப் புரிந்து கொள்ளாமல் போனதற்காக.
அம்மாவுக்கு மாநிறம். இப்போது காய்ச்சல் வேகத்தில் கறுப்பாகவே தெரிந்தாள். கரிய முகத்தில் ஜுரப் பளபளப்பு. கரிய முடியில் தலை சாமான் வைத்துக் கட்டியது போல், வகிட்டையொட்டி நெற்றியின் மேல் விளிம்பில் இருபுறமும் வெள்ளை முடி. திலகமில்லாத வெறும் நெற்றி, எனக்கு நினைவு தெரிந்த நாளாக வெறுமையாய் இருந்து வரும் நெற்றி.
டாக்டர் இனி அதிக நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டார். அதாவது, ‘‘பார்ப்போம் மிஸ்டர் கேசவன், நம்மாலான முயற்சியெல்லாம் செய்யறோம். காட் இஸ் க்ரேட்’’ என்று சொன்னார்.
அறைக் கதவிடை சலனம். வேகமாய்த் திரும்பிப் பார்த்தேன், என் மனைவிதான். என் முகம் விழுந்துவிட்டதா? என ஏமாற்றத்தை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.
‘‘யாரை எதிர்பார்க்கிறீங்க?’’
‘‘ம்? யாரையுமில்லே.‘‘
‘‘இந்த நேரத்துக்கு நான்தான் வருவேன்னு உங்களுக்குத் தெரியும்.’’
‘‘ஆமாம்.’’
‘‘பின்னே?’’
‘‘பின்னே? ஒண்ணுமில்லே.’’
‘‘நாலு நாளா கவனிக்கறேன். வீட்டிலேயும் சரி, இங்கேயும் சரி, அடிக்கடி வாசல் பக்கமே பார்த்துக்கிட்டிருக்கீங்க. யாரை எதிர்பார்க்கறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கக்கூடாதா?’’
அவள் குரலில் சற்று சூடு உறைத்தது. நியாயம் இருக்கும் இடத்தில் சூடு அவசியம் இருக்கும். அன்பான மனைவி. முகம் கோணாமல் என் தாயைக் கவனித்துக் கொள்பவள். நான் யாரை எதிர்பார்க்கிறேன், யாருக்கு அம்மா உடல்நிலை பற்றி எழுதி அனுப்பியிருக்கிறேன் என்று அறிந்துகொள்ள அவளுக்கு உரிமை இல்லையா என்ன? ஆனால், அது அம்மாவின் உரிமையில் குறுக்கிடுவதாயிருந்தால்? யாருக்கும் தம் அந்தரங்கத்துக்கான உரிமை உண்டல்லவா?
‘‘முக்கியப்பட்ட யாருமில்லை நீலா’’ என்று பொய் சொன்னேன்.
‘‘இருந்தாலும் எனக்குச் சொல்றது! யாரது?’’
‘‘எங்களோட ஒரு பழங்காலக் குடும்ப நண்பர். அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர். சொந்தம்னு அதிகமா யாருமில்லாத எங்களுக்கு அவரை ஒரு சொந்தக்காரராய் நினைச்சு, அம்மா முடியாமல் படுத்திருக்கிறதைத் தெரிவிச்சிருக்கேன், அவ்வளவுதான்’’ என்றேன், அதில் அதிக சிரத்தை இல்லாதவன்போல்.

மிஸ்டர் செல்லப்பா இந்த ஊரில் இருந்ததே எனக்குத் தற்செயலாய்ச் சென்ற மாதம்தான் தெரிய வந்திருக்கிறது. அப்போதிலிருந்தே அம்மாவிடம் சொல்லலாமா என்ற எண்ணம், அவரை வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்ற துடிப்பு. என் நினைவில் தெரிந்த வாலிப செல்லப்பா வெளியூருக்கு மாற்றலாகிச் சென்று இப்போது வயோதிகச் செல்லப்பா. தம் இலாகாவின் தலைவராய்ச் சென்னைக்கே வந்து சேர்ந்திருக்கிறார். முடி பஞ்சாய் நரைத்திருக்குமோ? வழுக்கை, கைத்தடி? சே சே, அவருக்கு ஐம்பத்தைந்து ஐம்பத்தாறு வயதுக்கு மேலே இருக்காதே. நிமிர்ந்த உடலும் சுறுசுறுப்பான நடமாட்டங்களும் கருமை மாறாத தலைமுடியுமாய் நாற்பது என்று மதிக்கத்தக்க எத்தனையோ ஐம்பத்தைந்துகளை நான் பார்த்ததில்லையா என்ன? இது ஓர் அசட்டுத்தனம், நமக்கு முந்தைய தலைமுறை என்றதுமே தொண்டுக் கிழமாய்க் கற்பனை செய்து கொள்வது. குழந்தைக் கண்களுக்குத்தான் முப்பது என்றாலே முதுமை. என் வயதிலுமா?
அவரை நான் வீட்டுக்கு அழைக்கவில்லை. அம்மாவிடம் சொல்லக்கூட இல்லை. சொல்லவேண்டுமென்று நினைத்துக்கொண்டே இருக்கையில் அம்மா கடுமையான நிமோனியாவில் படுத்துவிட்டாள்.
அம்மா முகத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். மனம் உணரும் உணர்ச்சிகளையெல்லாம் பேச நாவுக்குத் திறமை இல்லை. ஆனால் கண்களுக்கு உண்டு. உணர்ச்சிகள் வெள்ளமிட்டு வரும்போது கண்களால் மட்டும்தான் பேச முடிகிறது. புலன் ஆற்றல் ஒன்று இடம் மாறிப் போகிறது.
‘‘என்ன அப்படியே உட்கார்ந்திருக்கீங்க? எழுந்து வீட்டுக்குச் கிளம்புங்க. நான்தான் வந்துட்டேனே!’’
நான் மெள்ள எழுந்து கொண்டேன்.
‘‘அப்பப்பா! இன்னிக்கு அந்த ரெண்டு வாலுங்களையும் ஸ்கூலுக்கு அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு. ‘அப்பா லீவு போட்டிருக்காரே, நாங்க மட்டும் போடக்கூடாதோ?’ன்னு ஒரே ரகளை. சாயங்காலம் அதுங்க வர்றப்பக் கொஞ்சம் அதட்டி, கொஞ்சம் நயமாப் புத்தி சொல்லி, டிபன் சாப்பிட்டுட்டுப் பாடம் படிக்கச் சொல்லுங்க’’ என்றாள் நீலா.
‘‘ஆஸ்பத்திரிக்கு வந்து பாட்டியைப் பார்க்கணும்னு அருண் நேத்தே சொன்னான். சாயங்காலம் அழைச்சிட்டு வரட்டுமா? பார்த்துட்டு உன்கூட வீட்டுக்குத் திரும்பிடட்டுமே?’’
அவள் கணநேரம் யோசித்தாள். ‘‘எதுக்கு… இப்ப எதுக்குங்க? சின்னப்பையன். இந்த ஆக்ஸிஜன் குழாயையெல்லாம் பார்த்து பயந்துப்பான். நாலு நாள் போகட்டுமே, அதுக்குள்ள அத்தைக்கும் கொஞ்சம் குணம் தெரிஞ்சு டாக்டர் ஆக்ஸிஜனை எடுத்துடலாமில்லையா?‘‘
ஆக்ஸிஜனை எடுத்து விடலாம் என்பது உண்மை. குணம் தெரிவதால்தானா? இன்னொரு சாத்தியக்கூறு பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. எங்கள் மௌனத்துள் அது ஆயிரம் நாவுகளோடு பதுங்கியிருந்தது.

நீலா பகலுணவு சாப்பிட்டாகி விட்டது. கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தையும் பிற்பகல் காப்பி இருந்த பிளாஸ்கையும் மூலையிலிருந்த மேஜைமேல் வைத்துவிட்டுக் கட்டிலை நெருங்கிக் குனிந்து, என் தாயின் பிரக்ஞையற்ற வடிவைச் சில கணங்கள் உற்றுப் பார்த்தாள். பிறகு என் முகம் நோக்கி நிமிர்ந்தாள். நோயாளியின் நிலையில் எவ்வித மாற்றமுமில்லை. எங்கள் கண்கள் சந்தித்தபோது பேச இவ்வளவுதான் விஷயம்.
‘‘அப்ப, நான் கிளம்பறேன் நீலா.’’
‘‘ம். ஸிஸ்டர் வந்து இன்ஜெக்ஷன் போட்டுட்டாங்க, இல்லே?’’
‘‘நான் பார்த்துக்கறேன்.’’
தெருவில் இறங்கினேன். முற்பகல் வெயில் சுள்ளென்று உறைந்தது. நான் வீடு வந்து சேர்ந்தபோது மணி பத்தரை. ஆஸ்பத்திரியிலிருந்து நடக்கும் தூரத்தில்தான் வீடு. குளித்தேன். ஹாட் ஃப்ளாஸ்கில் நீலா எனக்கு வைத்திருந்த உணவை உண்டுவிட்டு ஆயாசத்துடன் படுத்துக் கொண்டேன். ஆயாசம் வெயிலினால்; ஐந்து நாட்களாய் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் அலைவதனால்; அம்மாவைப் பற்றிய கவலையினால்; மனப்பாரத்தால்.
இரவு முடிய ஆஸ்பத்திரியில் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கண் விழித்திருந்ததால் இப்போது கண்கள் எரிந்தன. மூடிக்கொண்டேன். விட்டு விட்டுத் தூக்கம். அதில் கனவென்று சொல்லமுடியாத தாறுமாறான பிம்பங்கள். அமுங்கி அமுங்கி வெளிவரும் அம்மாவின் முகம். கூட ஓர் எட்டுவயதுச் சிறுவன். ஒரு விநாடி கண்களைத் திறந்துவிட்டு மூடினேன். மறுபடியும் தூக்கமா? இப்போது வேறொரு முகம். சிவந்த, நீளவாட்டு முகம். இதமான புன்சிரிப்பு. பிரகாசக் கண்களில் ஆழமான பார்வை. சுருட்டை கிராப். நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த முகமும் நழுவியது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன்.
புரண்டு படுத்தேன். மறுபடியும் அரைத் தூக்க நிலை. கண்களுள் மீண்டும் இளம் அம்மாவின் முகம். அதில் ஒருவித ஆவல். உதடுகள் ஏதோ சொல்கின்றன. சிறுவனின் கண்களில் அதிர்ச்சி. மறுப்புக் குறியில் தலை இடவலமாய் அசைகிறது. மறுபடியும் விழித்துக் கொண்டேன். உடல் முழுவதும் வியர்வை. ஆழ்ந்த, தொடர்ச்சியான உறக்கமில்லாததால் ஓய்வு எடுத்த உணர்வே இல்லை. எழுந்து உட்கார்ந்து கடிகாரத்தைப் பார்த்தேன். பிற்பகல் மூன்று மணி. போய் முகம் கழுவிக்கொண்டு காஸ் அடுப்பை ஏற்றிப் பாலைக் காய்ச்சி, உப்புமா செய்தேன்.
வாசல் மணி ஒலிப்பது கேட்டது. ஓடிப் போய்க் கதவைத் திறந்தேன். தபால்காரர், ஒரு நண்பர் வீட்டுத் திருமணத்துக்கு வந்திருந்த அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுப் போனார்.
நான் எதிர்பார்த்தவர் வரவே மாட்டாரா? அம்மாவின் உயிர் பிரியுமுன் அவள் முகத்தையாவது அவர் பார்க்கட்டும் என்று எண்ணி அவள் உடல்நிலை பற்றியும் மற்ற விவரங்களையும் அவருக்கு எழுதியிருந்தேனே, அந்த அற்பப் பணி செய்வதுகூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லையா? நேரில் போய்ச் சொல்லலாமென்றால் காலையும் மாலையும் அவர் வீட்டில் இருக்கும்போது நான் ஆஸ்பத்திரியில் அம்மாவுடன் இருக்கிறேன். பகல் முடிய எனக்கு நேரம் இருக்கும்போது அவர் அலுவலகம் போயிருப்பார். நீலாவைப் போய்ச் சொல்லச் சொல்லலாமென்றால் அவளுக்கு இவ்விஷயத்தின் முக்கியத்துவம் தெரியாது. அதை அவளுக்கு விளக்க எனக்குத் தயக்கம்தான். இன்று மாலை ஆஸ்பத்திரிக்குப் போனபின் சிறிது நேரம் பணிப்பெண் எவளையாவது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு நானே போய் அவரிடம் சொல்லிவிட்டு வந்தால் என்ன? டாக்டரின் முகமோ, ‘இன்னும் அதிக காலமில்லை’ என்று சொல்லிவிட்டது. இன்னும் இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமைக்காகக் காத்திருந்தால் காலம் கடந்து விடலாம்.

மாலை நாலரை மணிக்கு என் குழந்தைகள் பத்மாவும் அருணும் பள்ளியிலிருந்து திரும்பினார்கள். அவர்களுக்குச் சிற்றுண்டியும் காப்பியும் கொடுத்துவிட்டு நீலாவுக்குத் தனியாய் எடுத்து வைத்துவிட்டு நானும் உட்கொண்டேன்.
‘‘பாட்டி இன்னிக்கு எப்படிப்பா இருக்காங்க?’’ என்றான் அருண்.
‘‘அப்படியேதான். புதுசா ஒண்ணுமில்லே.’’
‘‘நான் உங்ககூட ஆஸ்பத்திரிக்கு வந்து பாட்டியைப் பார்க்கறேம்ப்பா!’’
‘‘அண்ணா வந்தா நானும் வருவேன்’’ என்றாள் பத்மா.
‘‘ரெண்டு பேருமே இப்ப வேணாண்டா கண்ணு.’’ பத்மாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டேன். ‘‘ஒருநாள் ரெண்டுநாள் போகட்டும். பாட்டிக்கு எப்படி இருக்குன்னு பார்த்துக்கிட்டு நானே உங்களை அழைச்சுக்கிட்டுப் போறேன்.’’
‘‘இப்ப கொஞ்ச நேரத்தில் நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிடுவீங்க. நாங்க ரெண்டு பேரும் தனியாத்தானே இருக்க வேண்டியிருக்குது?’’
‘‘தனி என்ன? ஒரு அரை மணி நேரம் பக்கத்து வீட்டு ஆன்ட்டிகிட்டப் போய் இருக்கப் போறீங்க. அரை மணியில் அம்மா ஆஸ்பத்திரியிலேர்ந்து திரும்பி, உங்களை வந்து அழைச்சுக்கிட்டு இங்கே வந்துடப்போறாங்க.’’
‘‘நீங்க எப்பப்பா மறுபடியும் ராத்திரியிலே வீட்டியே இருப்பீங்க? எனக்குத் கதை சொல்லுவீங்க?’’ என்று என் மேல் நெருங்கி ஒன்றிக்கொண்டாள் பத்மா. அவள் தலைமுடியைக் கோதி முத்தமிட்டேன்.
‘‘பாட்டி, ஆஸ்பத்திரியில் இருக்கிற வரைக்கும் நான் அவங்ககூட துணைக்கு அங்கே இருக்க வேண்டாமா கண்ணு? சொந்த மனுஷங்க யாரானும் கூடவே இருக்கணும்னு டாக்டருங்க சொல்றாங்களே. அதனாலதானே அம்மாவும் நானும் மாத்தி மாத்திப் பாட்டியோடு இருக்கோம்.’’
‘‘ஊஹும், நீங்க இங்கேதான் இருக்கணும். ஆஸ்பத்திரிக்குப் போகக்கூடாது.’’
அழத் தொடங்கிய குழந்தையைத் தேற்றிச் சமாதானப் படுத்தினேன். ‘‘அழக்கூடாதும்மா கண்ணு. சமர்த்தில்ல? ராத்திரியில் பாட்டி கண் விழிச்சுப் பார்த்து ‘ஐயோ, நம்ம மகன் இங்கே இல்லையே’ அப்படின்னு வருத்தப்படக்கூடாதில்லையா? பாட்டி வீட்டுக்கு வந்ததுமே நானும் வந்துடுவேனே! அப்புறம் ராத்திரியிலேயும் வீட்டில்தான் இருப்பேன். பத்மாவுக்கு ஒவ்வொரு ராத்திரியும் புதுப்புதுக் கதையெல்லாம் சொல்லுவேன்…’’
இந்தக் குழந்தை சொல்வதைக் கேட்டு நான் ஆஸ்பத்திரிக்குப் போகாமலே இருந்தால் எவ்வளவு தவறாக, அநியாயமாக இருக்கும்! குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அவர்களுடைய பேச்சில் எதைப் பெரிதாய் எடுத்துக்கொண்டு மதிப்பளிக்க வேண்டும் என்னும் அறிவும் தெளிவும் பெரியவர்களுக்கல்லவா இருக்க வேண்டும்?
அம்மா ஏன் அந்த எட்டு வயதுச் சிறுவனின் பேச்சைக் கேட்டாள்?

மறுபடியும் மாலையில் ஆஸ்பத்திரி, அம்மாவின் பிரக்ஞையற்ற உருவம்.
‘‘டாக்டர் வந்தாரா நீலா?’’
‘‘ம்…’’
‘‘புதுசா ஏதானும் சொன்னாரா?’’
‘‘ஊஹும், மருந்துகள், இன்ஜெக்ஷன், ஆக்ஸிஜன், காட் இஸ் கிரேட் எல்லாமே வழக்கம்போல்.’’
சற்றுத் தயங்கிவிட்டு, ‘‘அவர் வந்திருந்தாரா? அதான், நான் சொல்லியனுப்பினேன்னு, சொன்னேனே, அந்தாளு’’ என்றேன்.
‘‘யாரும் வரல்லே’’ என்றவள் என்னைக் கூர்ந்து பார்த்தாள். ‘முக்கியப்பட்டவரில்லை என்கிற ஒருவருக்காகவா இப்படிப் பறக்கிறாய்? இதை என்னை நம்பச் சொல்கிறாயா?’ என்று கேட்கும் பார்வை.
நான் தலையைத் திருப்பிக்கொண்டேன். நீலாவுக்குச் சொல்லவேண்டியதுதான். ஆனால் அவளுக்குச் சம்பிரதாய மனம். அம்மாவைப் பற்றிக் குறைவாக நினைத்து விட்டால்?
‘‘அப்போ நான் வீட்டுக்குப் போகவா?’’
‘‘ம், கிளம்பு, குழந்தைங்க எதிர்பார்த்துக்கிட்டிருக்கும்.’’
அவள் போனபின் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
அம்மா சலனமின்றிப் படுத்திருந்தாள். செயற்கை சுவாசத்தில் நோயின் முனகல்கள் ஏதுமில்லை. மார்பு சீராய் ஏறி இறங்கியது. ஒருகால் இந்த மயக்கத்தின் திரைக்குப் பின்னே, ஆழ்மனத்தில், வேறேதோ ஒரு காலத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறாளா?
நெற்றியின் கோடுகள். வாழ்வின் தடங்கள். அதில் ஒரு தடத்தில் நிற்கும் அம்மா. இளைய அம்மா. பயம் கலந்த ஒரு சந்தோஷத்தில் உருவமே வேறாகி ஒளியால் நிறைந்தது போன்ற அம்மா. அவள் அணைப்பினுள் எட்டு வயதுப் பையன்.
‘‘செல்லப்பா அங்கிளை உனக்குப் பிடிச்சிருக்குதா கேசவா?’’
‘‘ஓ… ரொம்பப் பிடிக்குமே!’’
‘‘எனக்கு… எனக்குக்கூட அவரைப் பிடிக்குதுடா கண்ணா!’’
‘‘நல்ல அங்க்கிள் அவரு.’’
‘‘அவரை… அந்த நல்ல அங்கிளை… உனக்கு அப்பாவாய்ப் பண்ணட்டுமா?’’
பையன் முகத்தில் ஒன்றும் புரியாத வெற்றுப் பார்வை. அது ஒரு தடை என்பதுபோல், அம்மாவின் முகத்தில் கணநேரத் தடுமாற்றம்.
‘‘என்னம்மா?’’
‘‘அவரை… நான் கல்யாணம் செய்துக்கட்டுமா?’’
‘‘ஊஹும், கூடாது, அது தப்பு!’’
‘‘உனக்கு ஒரு அப்பா கிடைப்பார்டா கண்ணா!’’
‘‘என் அப்பா செத்துப்போய்ட்டார். நீ என் அம்மா, அம்மால்லாம் தப்புச் செய்யக்கூடாது…’’
மறுப்பில் தலையாட்டும் மகன்.
அந்தத் தலையாட்டலில் ஒரு வாழ்க்கைக் கதவை இறுக மூடிப் பூட்டிவிட்டதை அந்தச் சிறுவன் அறிய மாட்டான். நான்தான் அதை அறிந்து, உணர்ந்து, நொந்து, வெட்கி அதற்காகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன்.
குழந்தைகளின் உலகம் சுயத்தில் தொடங்கிச் சுயத்தில் முடிகிறது. தம்முடன் சம்பந்தப்படுத்தித்தான் எதையும் அவர்களால் பார்க்க முடியும். என் அம்மா, என் அப்பா, என் தம்பி, என் நண்பன், என் டீச்சர்.
மனிதர்களைத் தனி மனிதர்களாய்ப் பார்க்கும் ஆற்றல் ஒரு குழந்தைக்கு எப்படிச் சாத்தியமாகும்? அவனைப் பொறுத்த வரை அம்மா ஒரு பெரியவள், தன் அம்மா, தன்னைப் பார்த்துக்கொள்கிறவள். தன் பாதுகாப்பான பின்னணி.
அம்மாவை முப்பது வயதான வாலிப மங்கையாக, எதிர்பார்ப்புகள் நிறைந்தவளாக, வருங்காலம் தன் முன் நீண்டு கிடக்கக் காண்பவளாக, இனம் கண்டு கொள்கிற முதிர்ச்சியும் விலகி நின்று வெறும் பார்வையாளராய்ப் பார்க்கும் தெளிந்த கண்டோட்டமும் ஒரு குழந்தைக்கு எப்படி வரும்?

அந்தக் குழந்தையின் பேச்சை நீ ஏனம்மா கேட்டாய்? தன் அம்மா என்பதற்குமேல் நினைக்கத் தெரியாத குழந்தையின் பேச்சை ஏன் கேட்டாய்? விதவை மறுமணம் தவறு என்று கருதும் ஒரு மரபுச் சமுதாயத்தின் வார்ப்படமான குழந்தையின் பேச்சை ஏன் கேட்டாய்? முதலில் ஒரு குழந்தையிடம் யோசனை கேட்பதே தவறில்லையா? குழந்தையைக் குழந்தையாகவே வைத்துவிட்டு உன் இதயம் காட்டிய வழியில் நீ சென்றிருந்தால் அந்தக் குழந்தை முதலில் முரண்டியிருக்கலாம். ஆனால் நான் புரிந்து கொண்டிருப்பேன், மகிழ்ந்திருப்பேன். இரண்டு பேரின் சந்தோஷ வாய்ப்பைக் கெடுத்துவிட்ட குற்றச் சுமையை நெஞ்சில் தாங்கி இப்படி வருஷக்கணக்காய்ப் பரிதவித்துக் கொண்டிருக்க மாட்டேன்.
எல்லாம் வேறுவிதமாய் நடந்திருந்தால்!
அம்மாவின் நெற்றியில் குங்குமம், சிரிப்பில் சந்தோஷம், முகத்தில் பிரகாசம். முதுமையும் மரணமும் யாருக்கும் நேர்வதுதான். ஆனால் தனிமை இருந்திருக்காது. நாளுக்கு நாள் வளர்ந்து பெரியவனாகித் தன் வாழ்வை நோக்கிக் கிளை பிரிந்து போகும் மகன் – அடுத்த தலைமுறையினன் – எத்தனை பாசமிருந்தாலும் எந்த அளவுக்குத் தோழனாயிருக்க முடியும் பெற்றவளுக்கு?
அம்மாவின் தலைமுடியைத் தடவிக் கொடுத்தேன். கன்னத்தைத மெல்லத் தீண்டினேன். கையைப் பற்றினேன். எதற்குமே அவளிடம் எதிர் விளைவு இல்லை. உடம்பில் அசைவில்லை.
அம்மா, அம்மா, உன்னை எப்படி எட்டுவேன்? உன்னுடன் நான் எத்தனையோ பேசவேண்டும். எனினும் என் நாவு புரளவில்லை. நான் பேசினாலும் உனக்குக் கேட்காது. ஆனால் உன் மனம் என் மனத்தை உணர்கிறதா? என் அன்பை, என் துயரத்தை, என் கழிவிரக்கத்தைப் பேச்சின்றியே புரிந்துகொள்கிறாயா? இப்போது உடல் குலுங்க நான் மௌனமாய்க் கொட்டும் இந்தக் கண்ணீர் உனக்காக மட்டுமல்ல. எனக்காகவும்தான் என்பதை நீ உணர்கிறாயா அம்மா? உணர்ந்து என்னை மன்னிக்கிறாயா?
நெடுநேரம் ஆகியிருக்குமென்று நினைக்கிறேன். தலை நிமிர்ந்து மூக்கை உறிஞ்சிக் கண்களைத் துடைத்துக் கொண்டேன். குளியலறைக்குச் சென்று வாளியிலிருந்து சிறிது நீரை முகத்தில் இறைத்துக் கழுவிக் கொண்டேன்.

மணி எட்டை நெருங்கியிருந்தது. ஒரு நர்ஸை அழைத்த அம்மா பக்கத்தில் அமர்த்திவிட்டு மிஸ்டர் செல்லப்பாவின் வீட்டுக்கு நான் போய்…
எண்ணம் முடியவில்லை. எதிரே, அறைக்கதவுக்கு வெளியே நின்றிருந்தவரை என் கண்கள் கண்டுகொண்டன.
சிவந்த நீளவாட்டு முகத்தில் இப்போது சில சுருக்கங்கள். சுருள் முடியில் அங்கங்கே நரை. எனினும் அந்த முகத்தின் நேர்த்தியை, இதமான புன்சிரிப்பை, ஒளிமிக்க விழிகளை, எட்டு வயதுப் பையனுக்குப் பரிச்சயமான அவன் அப்பாவின் நண்பரை, எனக்கும் அடையாளம் புரிந்தது.
பேசத் தெரியாமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்றேன். வந்துவிட்டார். வந்துவிட்டார். வந்துவிட்டார்.
‘‘கேசவ்? கேசவன்தானே? நான் செல்லப்பா.’’
அந்தக் குரலும் மாறவில்லை.
‘‘தெரியும்’’ என்று எப்படியோ தடுமாறிக் கூறினேன்.
‘‘நான் ரெண்டு வாரமா ஊர்ல இல்லை. இன்னிக்குச் சாயங்காலம்தான் வந்தேன். உன் – உங்க – லெட்டரைப் பார்த்தேன். உடனே கிளம்பி வந்தேன்.’’
அவர் கண்கள் படுக்கைமீது கிடந்த உருவத்தில் சென்று நிலைத்தன. உதடுகள் லேசாய்த் துடிப்பது தெரிந்தது. அவர் பார்வையில் ஒரு வாழ்நாளின் உணர்ச்சிகள் அனைத்தும் ஒருங்கே கட்டவிழ்ந்து உடைந்தன. கணப்பொழுதில் அம்மாவுடன் அவர் அங்கே தனியாய் இருந்தார். இது அவ்விருவருடைய கணம். அவர்களுடையதாய் இருந்திருக்க வேண்டிய எத்ததனையோ ஆண்டுகளின் ஒரு சின்னஞ்சிறு, கடைசிப் பிரதிநிதி.
‘‘உள்ளே வந்து உக்காருங்க ஸார். நான் இதோ வந்துடறேன்’’ என்று கூறி அந்த அறையைவிட்டு நான் வெளியேறினேன்.

ஆர்.சூடாமணி

Image

1950-60களில் நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் உணர்ச்சிகளை அடக்கத்துடன் சித்திரித்தவர்களாக அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி ஆகிய மூவரையும் சொல்லலாம். அவர்களில் சூடாமணியின் எழுத்து, எண்ணங்களை அவற்றின் ஆழத்தில் அவதானிக்கும் தன்மையுடையதாக இருந்தது. ‘நிதானமான, மிக உறுதியான இலக்கிய வளர்ச்சியும் சாதனைகளும் கொண்டது சூடாமணியின் எழுத்துப்பணி’ என்னும் அசோகமித்திரனின் மதிப்பீட்டைப் பலரும் ஏற்றுக்கொள்வார்கள். வார, மாதப் பத்திரிகைகளின் வாசகர்களாக இருந்து, இலக்கியத்தை நோக்கிப் பயணித்த என்னைப் போன்ற பலருக்கும் சூடாமணியின் எழுத்தின் மீது ஒரு நேசம் ஆயுள் பரியந்தம் இருக்கும் என்றே தோன்றுகிறது. கலைமகள் பரிசுபெற்ற நாவல் மனதுக்கு இனியவள், ஆனந்த விகடன் பரிசு பெற்ற நாடகம் இருவர் கண்டனர், கலைமகளில் பிரசுரமான குறுநாவல் விடிவை நோக்கி இவற்றை எல்லாம் மாணவப் பிராயத்திலேயே படித்திருந்தபோதிலும், அவற்றின் நிழல்கள் வெகுகாலம்வரை தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. லட்சியமும் யதார்த்தமும் அவருடைய எழுத்தில் உருக்கமான விகிதத்தில் கலந்திருந்தது, அதற்குக் காரணமாக இருக்கலாம். பரிவின் ஒழுக்கு, அவருடைய எழுத்தின் ஆழத்தில் ஒலி எழுப்பாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரது ‘அந்நியர்கள்’ ‘நான்காம் ஆசிரம்’ ஆகிய சிறுகதைகள், சிறந்த தமிழ்ச் சிறுகதை வரிசையில் நீங்காத இடம்பெறுபவை.

(மதுரை ந. ஜயபாஸ்கரன் எழுதிய அஞ்சலியிலிருந்து…)