சப்த விடங்கம்!

Image

தாமரை விரிகிறது… வண்டுகள் கிறீச்சிட்டுப் பறக்கின்றன… கோழி தலையை அசைத்து அசைத்து நடந்து போகிறது… ஒரு பல்லக்கில் பவனி வருகிறார் உற்சவர்… இந்தக் காட்சிகளை நேரில் பார்க்கலாம், கற்பனையும் செய்யலாம். மேடையில்? அதையும் சாத்தியமாக்கியிருக்கிறது நடனக் கலைஞர் லட்சுமி இராமசுவாமியின் ‘சப்த விடங்கம்’ நாட்டிய நாடகம். அவரும் அவர் குழுவினரும் வெறும் உடல் மொழியாலும் தேர்ந்த நாட்டிய அசைவுகளாலும் தத்ரூபமாக இந்தக் காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்து மிரட்டியிருக்கிறார்கள்.

Image

‘விடங்கம்’ என்றால் உளி தொடாத சிலை. தமிழகத்தில் ஏழு (சப்த) இடங்களில், சிற்பிகள் செதுக்காத வடிவில், இயற்கையாக அமைந்த லிங்கமாகக் காட்சி தருகிறார் ஈஸ்வரன். அதனாலேயே ஈஸ்வரனுக்கு ‘விடங்கர்’ என்று பெயர். அந்தத் திருவிடங்கர் தலங்களுக்கு நம்மைக் கையைப்பிடித்து அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்திருக்கிறார் லட்சுமி இராமசுவாமி… ‘சப்த விடங்கம்’ மூலமாக!

Image

ஏழு விடங்கர் தலங்களுக்கும் புராணப் பின்னணி உண்டு. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை. ஒரு கட்டத்தில், அசுரர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் தேவர்கள். அந்த நேரத்தில் தேவர் தலைவன் இந்திரனுக்கு ஒரு யோசனை சொல்கிறார் நாரதர். பூலோகத்தில் இருக்கும் சோழச் சக்கரவர்த்தி முசுகுந்தன் வந்தால் போர் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்கிறார். இந்திரன் அழைக்க, முசுகுந்தனும் வருகிறார்… போரில் இந்திரன் வெற்றி பெற உதவுகிறார். அசுரர் படை தோற்று ஓடுகிறது.

Image

மகிழ்ந்து போன இந்திரன், ‘‘முசுகுந்தா! உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்!’’ என்கிறார். இந்திரனிடம் ஒரு அற்புதமான, யாருக்கும் கிடைக்கப் பெறாத லிங்கம் ஒன்று இருப்பது முசுகுந்த சக்கரவர்த்திக்குத் தெரியும். அது, மஹாவிஷ்ணுவால் இந்திரனுக்கு வழங்கப்பட்டது. அதைத் தனக்குப் பரிசாகக் கொடுக்கும்படி கேட்கிறார். இந்திரன் இதை எதிர்பார்க்கவில்லை. மிகுந்த ஈடுபாட்டோடும் பக்தியோடும் தினமும் பூஜிக்கும் லிங்கம். அந்த லிங்கம் இல்லாத பூஜையை அவனால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. அதை முசுகுந்தன் கேட்கிறார்… வாக்கும் கொடுத்தாகிவிட்டது. என்ன செய்வது? ‘‘அதற்கென்ன முசுகுந்தரே… நாளைக் காலை வாருங்கள். பூஜை முடிந்ததும் கொடுத்து விடுகிறேன்’’ என்கிறான். யாருக்கும் கிடைக்காத அபூர்வமான லிங்கம் தனக்குக் கிடைக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சியோடு செல்கிறார் முசுகுந்தன்.

Image

இரவோடு இரவாக மகாவிஷ்ணு அளித்த லிங்கத்தைப் போலவே, அச்சு அசலாக 6 லிங்கங்களை உருவாக்குகிறான் இந்திரன். அடுத்த நாள் முசுகுந்தன் வந்ததும், ‘‘இந்த ஏழு லிங்கங்களில் மகாவிஷ்ணு எனக்களித்த லிங்கம் எதுவோ அதை சரியாகக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுங்கள்!’’ என்கிறான். அந்த நேரத்தில், சரியான லிங்கத்தை அடையாளம் காண, முசுகுந்தனுக்கு மறைமுகமாக உதவுகிறார் விநாயகர். அதன்படியே லிங்கத்தை சுட்டிக் காட்டுகிறார் முசுகுந்தன். அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் அந்த லிங்கத்தைப் பரிசாகக் கொடுக்கிறான் இந்திரன். கூடவே, அவன் உருவாக்கிய மற்ற 6 லிங்கங்களையும் கொடுக்கிறான்.

Image

இந்திரனிடம் பெற்ற ஏழு லிங்கங்களை பூமிக்குக் கொண்டு வந்து, ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்கிறார் முசுகுந்தன். திருவாரூர், திருக்கோளிலி, திருகாறாயில், திருமறைக்காடு, திருநாகை, திருவாய்மூர், திருநள்ளாறு ஆகிய ஊர்கள் அவை. இந்த ஏழு இடங்களும் சிவபெருமான் தாண்டவமாடியத் தலங்கள் என்கிறது புராணம். ஒவ்வோர் ஊருக்கும் ஒரு நடனம். ‘அஜபா நடனம்’, ‘பிருங்க நடனம்’, ‘குக்குட நடனம்’, ‘ஹம்ஸ நடனம்’, ‘அலபா/வீசி நடனம்’, ‘உன்மத்த நடனம்’ எனப்படும் ஏழு நடனங்களையும் வடிவமைத்து, மேடையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் லட்சுமி இராமசுவாமி.

Image

7 பெண்கள் நாட்டியமாட, தொடங்குகிறது நிகழ்வு. புராணக் காட்சிகள், போர் என எல்லாமே நடன அசைவுகளால் காட்சிப்படுத்தப்படுகின்றன. பிறகு, சப்த விடங்கத்தலங்கள்… திருவாரூரில் தொடங்கி திருநள்ளாறு வரையான ஊர்களில் சிவபெருமானின் விடங்கத் தாண்டவங்கள் நிகழ்த்தப்படுகின்றன. நான்கு பெண்கள் பல்லக்குத் தூக்கிகளைப் போல அசைந்து நடனமாடி வர, நடுவில் உற்சவராக ஒரு பெண் அந்த அசைவுகளுக்கு ஏற்ப ஆடி வருகிறார். இந்த அஜபா நடனத்தில் தொடங்கி ‘விறுவிறு’வென காட்சிகள் நகர்கின்றன. திருக்கோளிலியில் ஆட வேண்டிய பிருங்க (வண்டு) நடனத்துக்கு வண்டாகவே மாறி நடனமாடுகிறார்கள். குக்குட நடனமா? கோழியைப் போலவே அசைவுகள். கமல நடனத்துக்கு தாமரைப் பூவாக அசைந்து, குவிந்து, மலர்ந்து விரிகிறார்கள்!

Image

இந்த நாட்டிய நாடகத்தில் பாடப்பட்ட எல்லாமே தமிழ்ப்பாடல்கள்… குறிப்பாக அருகிப் போன தேவாரப் பாடல்கள்! பொருத்தமான, தமிழ்ப்பண்களை மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். லட்சுமி இராமசுவாமியின் இந்த நடன நிகழ்வு  சமீபத்தில் சென்னையில் அரங்கேறியது. தயாரிப்புக்கு மானியம் தந்து உதவியிருக்கிறது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம். இந்த நடன நிகழ்வுக்கான ஆராய்ச்சியை செய்து, பாடல்களைத் தேர்ந்தெடுத்திருப்பவர் முனைவர் இரகுராமன். தமிழ்ப்பாடல்களுக்கு இசையமைத்து பாடியும் இருக்கிறார் முனைவர் வானதி இரகுராமன்.

Image

உறுத்தாத ஒளியமைப்பு, பொருத்தமான ஒப்பனை, மனம் கவரும் தமிழ் இசை, தேர்ந்த கலைஞர்களின் நடனம்… என எல்லாமே கனகச்சிதம். லட்சுமி இராமசுவாமி, பெண் நடனக் கலைஞர்களோடு களமிறங்கி ஒரு புதிய நிகழ்வைத் தந்திருக்கிறார். அது மறக்க முடியாத, தவிர்க்கக்கூடாத அனுபவம்!

– பாலு சத்யா

படங்கள்: மாதவன்