ஸ்டார் தோழி – 16

ஒரு தோழி பல முகம்

Star Thozhi 2 copy

தமிழரசி

நான்…

ஒரு மனுஷியாக என் சுதந்திரத்தை முழுதாக சுவாசிப்பவள். என் கட்டுப்பாடென்பது… எவரையும் பாதிக்காது, எதனினும் மூக்கை நுழைக்காது, எல்லை மீறல் இருக்காது, எவரையும் வருத்தாது. அதே நேரம் என்னை சீண்டினால் தேவைக்கும் காரணத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப என் விட்டுக்கொடுத்தலும் தணிந்து போதலும் போராடுதலும் இருக்கும்,

தாயாக…

என் குழந்தைகளுக்கு நல்ல தாயாகவே இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

தோழியாக…

பெரும்பாலும் நட்புக்கு ஆண், பெண் பேதம் பர்ப்பதில்லை நான். நண்பர்கள் என்ற பொதுவான சொல்தான் இருபாலினருக்கும்.

பள்ளி

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளி… இப்போதைய வயது நூறாண்டுகளுக்கு மேல். அதன் ஒவ்வொரு தூணும் ஐந்து பேரும் கைகோர்த்து நின்றாலும் அணைத்து கொள்ள முடியாத அளவு பெரிய தூண்கள். அத்தனை அழகும் நேர்த்தியும்! அறிவியல் பாடமெடுத்த முனுசாமி வாத்தியார் எனக்கு பிடித்தவர்… ஒரு கம்பீரமும் மிடுக்கும் இருக்கும். இவர் வகுப்பு வராதா என்று காத்திருப்போம். ஒழுக்கம், நேர்மை, கல்வியின் அவசியம் ஆகியவற்றையும் பொய் சொல்வது பிழையென்றும் பள்ளி போதித்தது. போட்டிகளில் ஆர்வம் காட்டுதல், விட்டுக்கொடுத்தல், தோழமை, நட்பின் ஆழம் இப்படி நிறைய நல்ல விஷயங்களும் அங்குதான் கிடைத்தன.

ஊரும் பேரும்

chitoor

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம். பிறந்து வளர்ந்தது வாழ்வதென அனைத்தும் இங்கேதான். ஊரைச்சுற்றி மலைகளை ரசிக்கலாம். பனியோ, வெயிலோ, குளிரோ எல்லாமே அதிகம். உணவில் காரம் அதிகம் சேர்த்து கொள்வோம். மாம்பழம், வெல்லம், சிவப்பு சந்தனம், பால்கோவா, கிரானைட் போன்றவை பிரசித்தி பெற்றவை. மார்கழிப்பனியில் அதிகாலையில் பச்சை தண்ணீரில் குளித்து, மலைக்கோயில் முருகன் கோயிலுக்குப் போகும் வழியில், தாத்தா வாங்கி தந்த டீயை குடித்துவிட்டு அவரோடு வெடவெடத்துக்கொண்டு போவது ஒரு சுகானுபவம்.. குளிர் தளர்ந்து ஒரு தெய்வீகம் மனசை சூழும் அந்த நொடி பிறப்பின் அதிசயம் கண்ட தருணமாக இனிக்கும். மூலை, முடுக்கு, சந்து, பொந்தெல்லாம் என் சினேகத்தின் வாசனை நிறைந்திருக்கும் என் ஊரில்!

புத்தகங்கள்

kadal-pura

marapasu

parisukku-po

மரப்பசு, கங்கை எங்கே போகிறாள், பாரீசுக்கு போ, கடல் புறா, பாரதியின் கவிதைகள்…

குடும்பம்

கூட்டுக்குடும்பம் சுருங்கும் காலப்போக்குக்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல. எல்லோரும் சொல்லும் வழமையான வரிகள்… அழகான குழந்தைகள், உண்மையாக நேசிக்கும் கணவர் – மொத்தத்தில் அன்பான குடும்பம்.

பொழுதுபோக்கு

கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, ஃபேஸ்புக், பாடல்கள் கேட்பது, கிளாஸ் பெயின்டிங், எம்பிராய்டரி…

இயற்கை

nature

இயற்கையை வேட்டையாடி அழித்து, நாட்டை வெறிச்சோடி வெறுமையாக ஆக்கி வருகிறோம். இயற்கையை மாசு படுத்தாமல் இருத்தல், மரக்கன்று நடுதல் ஆகியவை அவசியத் தேவை இன்று. இயற்கை நம் வாழ்வாதாரத்துக்கு அவசியமான வரப்பிரசாதம். அழகு மட்டுமே இயற்கையல்ல… அடிப்படையே இயற்கைதான்.

தண்ணீர் சிக்கனம் – பிளாஸ்டிக் பயன்பாடு

தண்ணீர் சிக்கனம் இன்றைக்கு அத்தியாவசியமாகிப் போனது. மழை நீர் சேகரிப்பு அவசியம், ‘அதற்கு மழை வந்தால்தானே!’ என்பதற்கு விடை யாரிடமுமில்லை. ஆகையால் இயன்ற எல்லா வகையிலும் நீரை சேமிக்கப் பழக வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

plastic

மக்காத பொருளாகிய ப்ளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது என்று சொல்வதை விட தவிர்த்தல் நலம். கெடுதி மட்டுமே இதன் ஆய பயன் என்றபடியால் இதைக் கையாள்வதை நிறுத்த வேண்டியது அவசியம்.

சமூக அக்கறை

நிறையவே உண்டு. வறுமை ஒழிய வேண்டும் என்பதே தலையாய எண்ணம். கல்வியை அனைவருக்கும் பயிற்றுவிக்க வேண்டும். அது வியாபாரமயமாவதை கட்டுப்படுத்த வேண்டும். சமூகத்தையும் அரசியல்வாதிகளையுமே குறை கூறிக்கொண்டு நம் கடமையை தட்டிக்கழிக்காமல் நம்மால் இயன்றதை செய்யலாம். நம்மைச் சுற்றி இருக்கும் இடங்களை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு சிறு மரக்கன்றை நடுவது கூட சமூக அக்கறையே…

மனிதர்கள்

கவலையோடு இருக்காதீர்கள்… கருணையோடு இருங்கள்.

பிழைகள் நேரலாம் அரிதாக மட்டுமே.

மனிதப்பிறவி என்பது ஒரு கொடுப்பினை… மலிவான மனிதர்களிடம் விலை போகாதீர்கள்.

நம் நம்பிக்கைக்கு புறம்பான செயல்பாடுகளை ஆதரிக்கவும் வேண்டாம்… துணை நின்று தூக்கி விடவும் வேண்டாம்… மனிதனுக்குரிய பண்புகளை மட்டும் பராமரித்து வந்தால் போதும்.

புறம் பேசுதல், பொது இடத்தை அசுத்தப்படுத்துதல், இயன்ற வரை மற்றவர்களை சொற்களாலும் செயலாலும் காயப்படுத்தாமல் இருத்தல், உணவை வீணடிக்காமல் இருத்தல் போன்றவை வேண்டும். முடிந்தவரை அனைவரிடத்திலும் அன்பாக இருத்தல் நலம்.

உறவுகள்…

சொந்தங்கள் வழமை போல் அனைவரும் உண்டு. கற்றுக்கொண்ட்து… இனிப்பு இருந்தால் ஈக்கள் மொய்க்குமென்று.

நேர நிர்வாகம்

TimeManagement

நேரப் பற்றாக்குறை என்று எதுவுமில்லை. வீட்டு வேலைகளை நானே செய்து கொள்வதால் நேரம் வீணாவதுமில்லை. என் கைப்பட செய்து கொள்கிறேன் என்கிற நிறைவும் உண்டு. வீட்டு வேலைகள் போக, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர பணிகளை செய்ய போதுமானதாக இருக்கிறது நேரம். இதில் முகநூல் அரட்டை, பத்திரிகைகளுக்கு எழுதுவது, கவிதை கட்டுரை எழுத என எல்லாவற்றுக்கும் நேரம் கிடைக்கவும் செய்கிறது.

சமையல்

Cooking

அசைவம் சமைப்பதில் ஆர்வம் அதிகம். வெரைட்டி உணவுகள் பற்றி ஓரளவே தெரியும். பெரும்பாலும் இன்றளவும் என் பாட்டி கைப்பக்குவமே சமைப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் பண்பாடான விருந்தோமல் மிகவும் பிடித்த ஒன்று.

கடந்து வந்த பாதை

என் பாதையும் எல்லார் பாதையை போல மேடும் பள்ளுமுமாகத்தான். நேர்த்தியான சாலை இருந்து விட்டால் பயணம் எளிதாகிவிடும். வாழ்க்கை என்பதே ஒரு பந்தயம். ஒரு சிறந்த சாலையில் ஓடவிட்டால் எல்லாரும் எளிதாக வெற்றி பெற்று விட மாட்டோமா என்ன? அதனால்தான் எல்லாருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் பாதை கரடு முரடானதாகவே இருக்கும். இதில் ஏழை பணக்காரன் விதி விலக்கல்ல.

சினிமா

bharathiraja

kb

saritha

சில வருடங்களுக்கு முன் பைத்தியமாக இருந்தவள்தான். பிடித்த இயக்குநர்கள் கேபியும் பாரதி ராஜாவும். கேபி, பாரதி ராஜா, பாக்கியராஜ், டி.ஆர்., பார்த்திபன், சேரன், கே.எஸ்.ஆர்… இப்படி பலரின் டைரக்‌ஷன் ரொம்ப்ப் பிடிக்கும். சரிதாவின் மிகப்பெரிய ரசிகை. நடிகர்களில் முரளி என் அபிமானம். எம்.எஸ்.வி., இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசையை மிகவும் ரசிப்பேன். கருப்பு-வெள்ளை படப் பாடல்கள் மேல் தீராக்காதல்.

உடலும் மனமும்

உடல் நலம்… ‘நோயற் வாழ்வே குறைவற்ற செல்வம்.” இதை அனைவரும் வார்த்தைகளாக அல்லாமல் செயலிலும் பின்பற்ற வேண்டும். மன நலம்… இதை பேணிக்காப்பது சற்று சிரமான ஒன்றே. இதை சீர்கெட வைப்பது எதிர்ப்பாராமல் நிகழும் அல்லது நேரும் பிரச்னைகளே…

எழுதியதில் பிடித்தவை

‘தீட்டுத்துணி’ என்ற கட்டுரை… பெண்களின் உடல் ரீதியான அந்த நாட்களின் வலியையும் மலிவான வார்த்தைகளால் பெண்களை எள்ளல் செய்வதை துச்சமாக தூக்கியெறிந்த வரிகளையும் அடக்கியது. சுமார் ஆயிரத்துக்கும் மேலான பகிர்வுகள் இதற்குக் கிடைத்தன. அடுத்து கவிஞர் வாலிக்கு எழுதிய அஞ்சலி உரை. ஆண்கள் தினத்தன்று எழுதிய ‘வேரின்றி மரமே ஏதம்மா?’ என்ற கட்டுரை… பல நூறு நண்பர்களால் பாராட்டப்பட்டும் வாழ்த்தப்பட்டும் என்னை அவர்கள் நெகிழ வைக்க்க் காரணமானது.

இசை

music

இசையில் எனக்கு மிகவும் பிடித்தது மெலடி. இதில் நாட்டுப் பாடல்களும், கர்னாடிக் இசையும் எனக்கு பிடிக்கும். இரண்டிலும் குறிப்பிட்ட அளவு தேர்ந்த அறிவாற்றல் இல்லையென்றாலும் ரசிக்கும் பக்குவம் சற்று அதிகமாகவே உண்டு. கண்மூடி, தலையசைத்து அதில் லயித்துக் கிடக்கும் தருணம் வாழ்வில் ஒப்பிட ஏதுமில்லாத காரணங்களாகும்.

பிடித்த ஆளுமைகள்

மகாகவி பாரதியும் இயக்குநர் சிகரம் கே.பி.யும்… இவர்களை வழித்தடங்களாகக் கொண்டு இயங்கவும் செய்கிறேன்.

பிடித்த பெண்கள்

என் பாட்டி… தாயின் மேலாய் சீராட்டி செல்லமும் அதற்கிணையாக கண்டிப்பையும் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் தன் வாழ்ந்து எங்களுக்கு அதை சாராமாக ஆக்கித் தந்தவர்… என் கண்கள் கண்டு களித்த மேன்மை கொண்ட பெண். அடுத்து என் மகள்… குருவாயக இருந்து போதிக்கிறாள்… தாயாக இருந்து தாங்குகிறாள்…

எங்கள் வீட்டில் வேலைக்கு உதவிக்கு வைத்திருந்த பெண். இளம்பிராயத்தில் திருமணம். இரண்டு பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. பொறுப்பில்லாத கணவன் கடைசியில் ஒரு நாள் தற்கொலை செய்துக் கொண்டு செத்துப்போக, தன் குடும்பத்தையும் தன் தாயையும் தங்கையையும் அவள் குடும்பத்தையும் தாங்கும் சுமைததாங்கி… பெயர் கிருஷ்ணவேணி.

ஃபேஸ்புக்… கற்றதும் பெற்றதும்

நிறைய பத்திரிக்கைகள்… அதன் வாயிலாக எழுத வாய்ப்பு. அப்படிப் பெற்ற தகுதிதான் இதோ இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இந்த சொல்லுக்கான தகுதியும். நிறை குறை எங்கும் உண்டு. நம்பிக்கை என்ற ஒன்றை எல்லாரிடம் வைக்க கூடாதென்றும் நம் குடும்ப விஷயங்களையும் பலவீனங்களையும் புறவெளியில் பகிரக்கூடாதென்பதும் இங்கு கற்றதே!

வீடு

தேவையான பொருட்களை சுத்தமாக அதனதன் இடத்தில் வைப்பதிருப்பதே ஒரு கலை. தேவைக்கதிகமான பொருட்களை, அது அலங்கார பொருட்களாகவே இருந்தாலும் கூட நெருக்கி நெருக்கி வைக்கும் போது ஒரு மூச்சடைக்கும் தொனி உருவாகும். வீடு என்ற பட்சத்தில் அத்தியவசியமாக இருக்க வேண்டியது முதலுதவி பெட்டி. இதில் தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, இருமல், காதுவலி, கண்வலி, காய்ச்சல் இவற்றுக்குத் தேவையான மாத்திரைகளும் டெட்டால், இலவம் பஞ்சு, டிங்சர், பேண்டேஜ், தைலம், பெயின் கில்லர் போன்ற மருந்துப் பொருட்களும் ஒரு பெட்டியில் தயார் நிலையில் இருக்கும். சமையல் அறையில் பர்னால் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்து அதை வைத்துமிருக்கிறேன். இன்டீரியர் டெகரேஷன் எல்லாமே அவரவர் பொருளாதராத்துக்கு ஏற்ப எளிமையாக இருத்தல் நலம். தரையைத் துடைத்து, சுத்தப்படுத்தி பளீரென்று எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பே வீட்டை பேரழகாகக் காட்டும்.

எழுத்தும் வாசிப்பும்

எழுத்து என் பித்து… எழுதாமல் இருத்தல் என்னால் சாத்தியமாகாத ஒன்று. எப்போதும் மனம் எதையேனும் எழுதவே அசை போட்டபடி இருக்கும். வாசிப்பும் உண்டு. அதிக அளவு ஈடுபட்டு வாசித்ததில்லை. தொடங்கிவிட்டாலோ ஆயிரம் பக்கமென்றாலும் இரண்டு மூன்று நாட்களில் முடித்து விடுவேன்… வாசிப்பில் என்னை செலுத்த்த் தொடங்கினால் என் உலகம் தனியானதாகிவிடும்.

Star Thozhi 1 copy

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

Image courtesy:

http://www.fameofcity.com

http://stylonica.com/

http://static.guim.co.uk

http://www.convertwithcontent.com

http://www.firsttimerscookbook.com

http://cdn2.liquiddnb.com