இந்தியாவில் பெண் குற்றவாளிகள் அதிகரிப்பு – புள்ளிவிவரப் பின்னணி என்ன?

Image

‘கடந்த 2-3 ஆண்டுகளில், குற்றம் புரிந்துவிட்டு சிறைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலேயே அதிக பெண் குற்றவாளிகள் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா…’ இப்படி ஓர் நீண்ட அதிர்ச்சி அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது ‘தேசிய குற்றப் பதிவுகள் தகவலகம்’ (National Crime Records Bureau). இந்திய குற்றவியல் நடவடிக்கைச் சட்டத்தின்கீழ் (Indian Penal Code) மகராஷ்டிராவில் கடந்த 2-3 ஆண்டுகளில் 90,884 பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறது அந்தப் புள்ளிவிவரம். குற்றம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகமாக இருப்பது ஆந்திராவில். அங்கே அதே காலகட்டத்தில், 57,406 பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் மத்தியப்பிரதேசமும் நான்காவது இடத்தில் தமிழ்நாடும் ஐந்தாவது இடத்தில் குஜராத் மாநிலமும் இருக்கின்றன.

தேசிய குற்றவியல் பதிவுகள் தகவலகம் சொல்லியிருக்கும் அறிக்கைப்படி பார்த்தால், பெண்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்திருப்பது போல் தெரியும். ‘இது உண்மையா?’ என்று கேட்டால் அழுத்தம் திருத்தமாக மறுக்கிறார் எழுத்தாளரும் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனருமான திலகவதி.

‘‘இந்தியாவில், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்கள் மிக மிகக் குறைவு. குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்படும் பெண்களுக்குப் பின்னணியில் ஆண்களும் சமூகக் காரணிகளும்தான் முக்கியமாக இருக்கின்றன. அதை நேரில் உணர்ந்த அனுபவங்களும் எனக்கு உண்டு. வேலூருக்கு அருகே இருக்கும் தொரப்பாடி சிறைச்சாலை பழமை வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்பட்டு வருவது. அங்கே மகளிர் சிறையும் உண்டு. அந்தச் சிறையில் இருக்கும் பெண்களுடன் பேசும் வாய்ப்பு ஒருமுறை எனக்குக் கிடைத்தது. ஆர்வத்தோடு அவர்களில் சிலருடன் பேசினேன். அவர்கள் ஏன் சிறைக்கு வந்தார்கள்? என்னென்ன மாதிரியான குற்றங்கள் செய்திருக்கிறார்கள்? அவர்கள் வரலாறு என்ன? எல்லாவற்றையும் விசாரித்தேன்.

அவர்களுடன் பேசியதில் ஒரு உண்மை தெரிந்தது. அதாவது, பல குற்றச் செயல்களுக்கு அந்தப் பெண்கள் பலிகடா ஆக்கப்பட்டிருந்தார்கள். கள்ளச்சாராய வியாபாரத்தையே எடுத்துக் கொள்வோமே..! சாராயம் காய்ச்சுவது, அதை விற்பனைக்குக் கொண்டு வந்து வைப்பது எல்லாமே ஆண்கள்தான். அதை விற்பனை செய்வது, காசு வாங்குவது பெண்கள்… மனைவி, தாய் என்கிற ஸ்தானத்தில் இருப்பவர்கள்! காவல்துறை கள்ளச்சாராய விற்பனை பற்றிக் கேள்விப்பட்டு ரெய்டுக்கு வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சம்பந்தப்பட்ட ஆண்கள் ஓடிவிடுவார்கள். பெண்கள் பிடிபட்டு சிறைக்குப் போவார்கள். அந்த வகையில் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்களைக்கூடப் பார்த்தேன்.

Image

இப்படி பழி சுமந்து சிறையில் இருந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன்… ‘‘தப்பு செஞ்சதெல்லாம் உங்க வீட்டுக்காரரு… நீ ஏம்மா ஜெயில்ல இருக்கணும்?’’

அந்தப் பெண் சொன்னார்… ‘‘வேற என்னாங்க மேடம் செய்யறது? அவரு வெளியில இருந்தாத்தானே எங்களை வெளிய கொண்டு வர முடியும்? வழக்கு நடத்தணும்… அதுக்குப் பணம் பொரட்டணும்… இதெல்லாம் அவங்களாலதானே முடியும்? அதோட குடும்பம், புள்ளை குட்டிங்களை கவனிச்சுக்கறதுக்கு அவங்களை விட்டா என்னை மாதிரி பொம்பளைங்களுக்கு வேற என்ன ஆதாரம்?’’ இது அந்தப் பெண்ணின் கருத்து மட்டுமல்ல… சிறையில் இருக்கும் பல பெண்களின் கருத்து!

மிக அபூர்வமாகத்தான் ஆண்கள், கள்ளச்சாராயம் போன்ற பெண்களும் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். கணவன், மனைவி இருவரும் கைதாகும் நிலையில் வீட்டுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. அம்மாவும் அப்பாவும் இல்லாத நிலையில், பிழைப்புக்காக வீட்டில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் சிறுசிறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். பிக்பாக்கெட், சின்னத் திருட்டு என அவர்களுடைய குற்ற நடவடிக்கை ஆரம்பமாவதும் இந்தப் புள்ளியில்தான். பெண் பிள்ளைகள் தங்கள் உடலை விற்றுப் பிழைக்கத் துணிவதும், அந்தப் படுகுழியில் தள்ளப்படுவதும், மற்ற ஆண்களின் மேல் ஈர்ப்புக் கொள்வதும்கூட இது போன்ற சந்தர்ப்பங்களில்தான்.

சிறைச்சாலையில் நான் சந்தித்த பெரும்பாலான பெண்கள் செய்த குற்றச் செயல்கள் போதை மருந்து கடத்துதல், விற்பனை செய்தல் அல்லது கள்ளச்சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல் போன்றவைதான். இது தவிர மருமகளைக் கொடுமைப்படுத்தியதால் சிறைக்கு வந்தவர்கள்… பெண்களை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிறைக்கு வந்தவர்கள் என இருந்தார்கள். தொரப்பாடியில் கொலைக்குற்றம் செய்துவிட்டு சிறைக்கு வந்த ஒரு பெண்மணியை சந்தித்தேன்.

அவருக்கு 60க்கும் மேல் வயது. தன் கணவனைக் கொலை செய்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ‘இந்த வயதில் ஏன் கொலை செய்ய வேண்டும்?’ என் கேள்விக்கு அவர் சொன்ன பதில்… ‘நான் அந்த ஆளைக் கொலை செய்யறதுக்காகக் காத்துகிட்டு இருந்தேம்மா. பேரன், பேத்தி எடுத்தாச்சு. ஆனா, அந்த மனுசன் வீட்ல இருந்த யாரையும் நிம்மதியா இருக்க விடலை. எல்லாரையும் கொடுமைப்படுத்தினாரு. படிக்கிற பையனை மாடு மேய்க்க விட்டாரு. படிக்கிற பொண்ணை ஆடு மேய்க்கச் சொன்னாரு. எல்லாத்துக்கும் ஒரு காலம் வரட்டும்னு காத்திருந்தேன். பேரன், பேத்தின்னு வந்துடுச்சு. புள்ளைங்க சொந்தக்கால்ல நின்னுடுவாங்கங்கற நம்பிக்கை வந்ததுக்கப்புறம்தான் அவரைக் கொலை பண்ணினேன்.’

அதே தொரப்பாடி மகளிர் சிறையில் தன் மகளோடு சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு உள்ளே இருந்த பெண் ஒருவரையும் சந்தித்தேன். ‘தெனமும் குடிச்சிட்டு வந்து அடிப்பாரு. எதுத்து ஒரு வார்த்தை பேச முடியாது. ஒருநாள் என் பொண்ணுகிட்டயே தவறா நடக்க முயற்சி பண்ணினாரு. நான் இல்லாத நேரத்துல பொண்ணை ஏதாவது செஞ்சிடுவாரோன்னு பயம் வந்துடுச்சு. வேலைக்குக்கூடப் போகாம வீட்லயே இருந்தேன். அதுக்கப்புறம்தான் பொறுக்க முடியாம, இது மாதிரி மனுசன் உலகத்துலயே இருக்கக்கூடாதுன்னு நானும் என் மகளும் சேர்ந்து உலக்கையால அடிச்சு அவரைக் கொன்னோம்…’

இது போல உணர்ச்சிவசப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவது தமிழகத்தில் நடக்கிறது. ஆனால், கொலைச் சம்பவங்களில் பெண்கள் ஈடுபடுவது அரிதாகத்தான் நிகழ்கிறது.

மகாராஷ்டிராவில் பெண்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வேறு காரணம். மும்பை ‘வியாபாரத் தலைநகரம்’ (Commercial Capital). பணப்புழக்கம். அதன் காரணமாக தாதாக்களின் ஆதிக்கம் அதிகமுள்ள நகரம். பல வளைகுடா நாடுகளோடு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நகரம். அங்கே வெளியாகும் பல திரைப்படங்களில் ஒன்று, நிழலுலக தாதா கதாபாத்திரம் ஹீரோவாக இருப்பார். அல்லது போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் ஹீரோவாக இருப்பார். நிஜத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில்தான் அங்கே பல சினிமாக்கள் உருவாகின்றன. அங்கே தாதாக்கள் மட்டுமில்லை. அவர்களின் முக்கிய பிரதிநிதிகள், அடியாட்கள் என பலதரப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மையம் கொண்டிருக்கிறார்கள். ஒரு தாதாவின் குழுவுக்கும் மற்றொரு தாதாவின் குழுவுக்கும் இடையிலான மோதல் அடிக்கடி நடக்கும். அதில் உயிர் துறப்பவர்களின் மனைவிகள் அதற்குப் பிறகு கவனம் பெறுகிறார்கள். அதுவரை பலரின் பார்வையிலேயே படாமல் இருந்தவர்கள் இறந்த கணவனின் இடத்துக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கும் வேறு வழி இருப்பதில்லை. விட்டால், உயிர் போய்விடும். அந்த உயிர் பயம்தான் அவர்களையும் குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டிவிடுகிறது. இது போல சமூகக் காரணங்களும் ஆண்களும்தான் பெண்கள் குற்றச் செயல்களில் ஈடுபடக் காரணமாக இருக்கிறார்கள். துணிந்து, தாங்களாகவே குற்றம் புரியும் பெண்கள் மிக மிகக் குறைவு’’ என்கிறார் திலகவதி.

Image

கவிஞரும் எழுத்தாளருமான க்ருஷாங்கினி சொல்கிறார்… ‘‘இந்தியாவில் பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆணாயினினும், பெண்ணாயினும், குழந்தைகளாயினும் குற்றச் செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. என் கருத்தும் அதேதான். ஆணும் பெண்ணும் சட்டத்தின் முன் சமம் என்று எழுத்தில் இருக்கலாம். நடைமுறையில் அப்படி இல்லை. பெண் என்பவளுக்கு பிறப்பே உரிமை அற்று இருக்கிறது.

ஒரு பெண் குற்றம் புரிவதற்கு சமுதாயமும் குடும்பமும் எந்த அளவிற்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்களைக் கேடயமாக நிறுத்திக் குற்றம் புரிந்துவிட்டு தப்பிக்கும் ஆண்கள் சமுதாயத்தில் பலரும் இருக்கின்றனர். மன அழுத்தமும், பிறர் தரும் தொல்லைகளும் தாங்க இயலாத போது சில சமயம் வெடிக்கும் குற்றம் என்பது ஒரு சிறு அளவே.

உண்மையில் கல்விக் கூடத்தில் தொடங்குகிறது பெண்களின் மன அழுத்தம். வீட்டில் தனிமை, பகிர யாருமற்ற நிலை என குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது மன அழுத்தம். பணி இடங்களிலும் அது தொடர்கிறது. பெண், காவல்துறையில் இருந்தாலும், மந்திரியானாலும் கூட இதுவேதான் தொடர்கிறது. சொல்ல முடியாத மன அழுத்தத்திலிருந்து வெளிப்படவே, விடுபடவே சட்ட ஆலோசனைகள் இருக்கின்றன. ஊடகங்களில் பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்படுவதும் கூட ஒரு விதமான ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முறைதான். இருந்தாலும் சொல்ல முடியாத, கூடாத, தெரியாத பெண்களால் வன்முறைகளுக்கு எதிர்வினை எப்போதாவது நிகழ்கிறது.

உண்மையிலேயே சொல்லவும் முடியாமல் அதிலிருந்து மீளவும் முடியாமல், தனக்குத் தீங்கிழைத்தவர்களை மனதால் தண்டித்துக் கொண்டும், அல்லது ஆண்டவனிடம் முறையிட்டு மண்டியிட்டு அழுது கொண்டும்தான் பல பெண்கள்  இருக்கிறார்கள். ‘எனக்கு வரும் கோவத்துக்கு…’ என்று சொல்லி சொற்களால் குற்றவாளிகளுக்குத் தீர்ப்பளித்துக் கொண்டு இருக்கிறார்கள். குற்றவாளிகள் – பல சமயம் அவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள் – தப்பித்துக் கொண்டு பதவியிலும், பணத்திலும் மிதக்கிறார்கள். எல்லோரும் தனக்குத் தீங்கிழைத்தவர்கள் மீது தன் எண்ணத்தை நிலை நாட்டத் தொடங்கினால், அப்படிப்பட்ட எண்ணம் தோன்றத் தொடங்கினால் சிறை பெண்களால் நிரம்பி வழியக் கூடும். மன அழுத்தம் காரணமாகத் தற்கொலைக்கு முயலும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையலாம். மனப் பிறழ்வுக்கு ஆளாகி, உலகத்தில் ஏதும் நடப்பதறியாமல் தெருவில் திரியும் பெண்களின் எண்ணிக்கையும் குறையலாம்.  நான் இங்கு குற்றம் இழைப்பது சரியென்றோ, பழிவாங்கல் நியாயமென்றோ வாதாடவில்லை. ஆண் பெண் இருவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்தான். இது போன்ற புள்ளி விவரங்களைப் பட்டியலாகத் தயாரித்து, அதை இந்தியாவின் மாநில வாரியாக அடுக்கி வெளியிடுவது கூட பெண்களின் மீதான ஏளனப் பார்வையை அதிகரிக்கச் செய்யலாம். ‘உத்யோகம் புருஷ லட்சணம்’ என்பது போல. இதுவரையில் ஆண்களின் குற்றச் செயல்களினிடையே பெண்களின் குற்றங்கள், உண்மையில் குற்றம் இழைத்தவர்கள், எத்தனை சதவிகிதம் என்பதையும் வெளியிட வேண்டும்.

தன் பாலியல் இச்சைக்கு அடிபணியாத வேலைக்காரச் சிறுமியைத் திருட்டுக் குற்றத்தில் மாட்டிவிடுவதிலிருந்து, முக்கியமான இடங்களில் பெண்கள் வந்துவிடக் கூடாது என இட்டுக்கட்டிப் பட்டியல் இட்டக் குற்றசாட்டுகளை, ஆதாரங்களைப் போலியாகத் தயாரித்து கைது செய்வது வரை, எல்லா நிலைகளிலும் இவை நிறைய நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. சாதி பலம், மத பலம், பண பலம், அதிகார பலம், அரசியல் பலம் என எல்லாத் தரப்பும்  உபயோகப்படுத்தப்படுகின்றன. எனவே குற்றம் சாட்டப்பட்டுச் சிறையிலிருக்கும் பெண்களில் தெரிந்தே குற்றம் செய்தவர்கள் எத்தனை பேர், நிரபராதிகள் எத்தனை பேர், தெரியாமல் சிக்குண்டவர்கள் எத்தனை பேர் என்று கணக்கிட்டுவிட்டு குற்றம் புரிந்தோரை மட்டும் பட்டியலிட்டுச் சொல்லாம். ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருப்பதைப் போலப் பெண்ணின் குற்றத்திற்குப் பின்னால் ஆண்கள் இருக்கிறார்கள். சமுதாயமும் இருக்கிறது. குடும்பமும் இருக்கிறது. இதுவரையிலும் குற்றவாளிகளாகக்  கருதப்பட்டு சிறை சென்ற ஆண்களின் மொத்த சதவிகிதத்தில் இப்போது இரண்டாண்டுகளாக அதிகரித்திருக்கும் குற்றம் புரிந்த பெண்களின் அளவு எவ்வளவு சதவிகிதம் என்றும் கணக்கெடுத்துப் பட்டியலிட்டு அதையும் மாநில வாரியாகப் பிரித்தெடுத்தும் வெளியிடலாம்.’’

Image Courtesy: http://frontpagemag.com

தொகுப்பு: பாலு சத்யா 

தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் பலாத்காரம்… கலங்க வைக்கும் புள்ளிவிவரம்!

Image

டெல்லி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிற்து டெல்லி நீதிமன்றம். அதே சமயம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் பட்டியலை நினைத்தால் நெஞ்சு பதைபதைக்கிறது. தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆதாரபூர்வமாக, அழுத்தம் திருத்தமாக அதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது சமீபத்தில் வெளியான ‘மாநில குற்றப் பதிவு செயலகம்’ (State Crime Records Bureau – SCRB) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம்.

கடந்த 2012ம் வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை மாதம் வரை பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளைவிட, 50% அதிகமாக 2013ல் பதிவாகியிருக்கின்றன. அதாவது, அதே ஜனவரி – ஜூலைக்கு இடைப்பட்ட காலத்தில். 2013ல், ஏழு மாத காலத்தில், காவல்துறையில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 436. 2012ல் பதிவானவை 291. அதிலும் சென்னையில்தான் அதிகம். 42 வழக்குகள். கணவர் மற்றும் உறவினர்களால் குரூரமாகத் தாக்கப்பட்ட வழக்குகளிலும் சென்னைக்கே முதலிடம். மொத்தம் 1,130 வழக்குகள். அவற்றில் 118 வழக்குகள் சென்னையில்.

மாநில குற்றப் பதிவு செயலகத்தின் அறிக்கைப்படி…

ஜனவரி – ஜூலை காலத்தில் பதிவானவை

                                            2012                   2013

பாலியல் பலாத்காரம்      291                    436

பாலியல் தொந்தரவு        708                     585

கடத்தல்                              756                     698

கணவரால் தாக்குதல்      860                  1,130   

 

அதிக அபாயமுள்ள பகுதிகள்…

                    பலாத்காரம்       சீண்டல்     கடத்தல்            கணவரால் தாக்கப்படுதல்

சென்னை       42                        33                  24                                   118

விழுப்புரம்      32                        47                 73                                      33

கோவை          11                          5                    2                                     22

மதுரை              9                        13                  18                                      51

திருச்சி              7                        13                    6                                      18

தமிழகத்தில் பாலியல் சீண்டல், கடத்தல் ஆகியவை எண்ணிக்கையில் சற்றுக் குறைந்திருந்தாலும் பெண்களின் மேல் கணவர் மற்றும் உறவினர்களின் தாக்குதல் அதிகமாகியிருக்கிறது. இது கிட்டத்தட்ட 32 சதவிகிதம் அதிகம். வழக்குப் பதியாமல், சம்பவம் நடந்ததையே மறைத்துவிடாமல் காவல்துறையும் நம்பகத்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதே நேரம், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் காவல்துறைக்கு இருக்கிறது.

பரவலாகிவரும் குடிப்பழக்கமும் போதைப் பொருள் பழக்கமும்கூட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி வருவதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘இப்போதெல்லாம் பெண்களுக்கும் தங்களுக்கு பாலியல் தொந்தரவோ, வன்முறையோ நிகழ்ந்தால் அதை காவல்துறை வசம் புகாராகத் தெரிவிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட ஒரு காரணம்’ என்று குறிப்பிடுகிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கொடுப்பதும் கணிசமாக இதே காலத்தில் உயர்ந்திருக்கிறது. ஜனவரி-ஜூலை 2013 காலக்கட்டத்தில் சென்னையில் 23 வழக்குகளில் 12 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் இன்னமும் கூட பல பாலியல் பலாத்கார சம்பவங்களும், சீண்டல் சம்பவங்களும் பதியப்படாமல் வருவது குறிப்பிடத்தக்கது. பஞ்சாயத்து மூலமாகவோ, உறவினர்களைக் கொண்டோ, பயமுறுத்தியோ பல சம்பவங்கள் தீர்த்து வைக்கப்படுகின்றன. சில இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை, திருமணம் செய்து, சமாதானப்படுத்துவதும் நடக்கிறது.

எந்தக் காரணம் சொல்லப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி வருவது கலக்கத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

– மேகலா பாலசுப்ரமணியன் 

பெண்கள் பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்?

Image

‘பெண்கள் பள்ளிகளில் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதோடு, ‘பெண்கள் படிக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியைகள் நியமிக்கப்படுவார்கள். ஆண்கள் பள்ளிகளில் மட்டும் ஆசிரியர்களுக்கு அனுமதி. இருபாலரும் படிக்கும் பள்ளிகள் என்றால் அதில் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை என்றும் அரசு அறிவித்திருக்கிறது.

இந்த உத்தரவால் பெண்கள் பள்ளிகளில் மாற்றம் ஏற்படுமா? மாணவிகள் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தப்பித்துவிடுவார்களா? பெண்கள் சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள் இங்கே…

Image

சந்தன முல்லை – குடும்ப நிர்வாகி 

பாலியல் தொந்தரவு என்ற ஒரே ஒரு விஷயத்துக்காக பெண் ஆசிரியர்களை நியமிப்பது எந்த விதத்திலும் சரியான தீர்வாகாது. ஏனென்றால், பெண் ஆசிரியர்களால் பிள்ளைகளுக்கு துன்புறுத்தல் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சில வருடங்களுக்கு முன்னால், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதற்கு ஒரு பெண் ஆசிரியர்தான் உடந்தை என்பது தெரிய வந்தது. இது போன்ற விஷயங்கள் நடக்கும்போது என்ன செய்ய முடியும்? பள்ளிகளில் ஆண்- பெண் என பிரித்து வைப்பது எந்த விதத்திலும் சரி இல்லை.

பள்ளிகளில் மட்டும் இந்த விஷயத்தை சரி செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா? குழந்தைகள் டியூஷன் செல்லும் இடம், ஸ்பெஷல் கிளாஸ் – இங்கெல்லாம் ஆண்கள் இருந்தா என்ன செய்வது? அதற்காக பிள்ளைகளை அப்படியே விட்டுவிட முடியுமா? பெண்கள் வெளியில் வருவதால்தான்  பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று டெல்லி சம்பவம் நடந்தபோது சொன்னார்கள். இந்த மாதிரி பிற்போக்குத்தனமான அடக்குமுறைகளுக்கு பெண் குழந்தைகளை பழக்குவது நல்லதில்லை.

ஒரு நல்ல பள்ளியில் முறையான கண்காணிப்பு இருந்தால் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பிருக்காது. பாலியல் பிரச்னைகளை விட பிள்ளைகளுக்கு மனரீதியான அழுத்தம்தான் அதிகம். அதைத் தீர்க்க எந்த நடைமுறைகளும் இருப்பது போல தெரியவில்லை. முதலில் நான் ஒரு தாயாக, என் பெண் நல்ல சூழலில் நிம்மதியாக படிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவேன். அதற்கு பெண் ஆசிரியர்கள்தான் தீர்வு எனச் சொல்ல மாட்டேன். முறையான விழிப்புணர்வு எல்லா ஆசிரியர்களுக்குமே அவசியம். குழந்தைகளை ட்ரீட் செய்யும் சைக்காலஜி தெரிந்தாலே போதும்… எந்த ஆசிரியராக இருந்தாலும் ஓகேதான். பெண்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் எல்லாருமே பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை!

Image

ஜன்னத் – பள்ளி ஆசிரியை 

பள்ளிகள்ல பெண் ஆசிரியர்கள் நியமிக்கறதை வரவேற்கிறேன். ஏன்னா, பெண் ஆசிரியர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். டீன் ஏஜ்ல இருக்குற பாய்ஸை ஹேண்டில் பண்றது ஆசிரியைகளுக்குக் கொஞ்சம் கஷ்டமான விஷயமும் கூட. இதனால டீச்சர்ஸுக்கும் மன உளைச்சல் ஏற்படும். ஆனா, அதுவே பெண்கள் பள்ளின்னு வரும்போது ரிலாக்ஸாக வேலை பார்க்கலாம். டீன் ஏஜ்ல இருக்குற பெண்கள், அவங்களுக்கு உடல்ரீதியான பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டா ஆண் ஆசிரியர்கள்கிட்ட சொல்லத் தயங்குவாங்க. இனி அந்த பிரச்னைகள் கூட இருக்காது. பெண்கள் பள்ளிகள்ல பெண் ஆசிரியர்கள் என்பது ரெண்டு தரப்புக்குமே நல்ல விஷயம்தான். இந்த மாதிரி விஷயங்களைக் காரணம் காட்டி அரசு உத்தரவிட்டிருக்கலாம். பாலியல் தொந்தரவைக் காரணம் காட்டி இந்த உத்தரவை கொண்டு வந்திருப்பது சரியல்ல. ஏன்னா, ஏதோ ஒரு ஆண் தப்பு பண்றார் என்பதற்காக எல்லாரையும் அப்படி நினைப்பது தப்புதானே?

Image

விஜயா – கல்வியாளர் 

அரசின் இந்த உத்தரவை சோதனை முறைப்படி செய்து பார்ப்பதில் தவறில்லை. அதே நேரம், ‘பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் என்ற நடைமுறை வந்தால் ஆண்கள் எப்போதுதான் தங்களை சரி செய்து கொள்வார்கள்? ஆண் ஆசிரியர்களுக்கு முறையான கவுன்சலிங், பிள்ளைகளை ஹேண்டில் செய்யும் விதம் என எல்லாவற்றையும் முறையாக கற்றுத்தர அரசு முன்வர வேண்டும். ‘பெண் பிள்ளைகளிடம் 3 அடி தள்ளி நின்று பேச வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அவர்களிடம் அருவெறுக்கத்தக்க வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது. அவர்களை தொடுவது, அடிப்பது, உடல் பாகங்களைக் குறித்துப் பேசுவது உள்ளிட்ட விஷயங்களைச் செய்யக் கூடாது என முன்னரே சொல்லி, அதை அவர்கள் கடைபிடிக்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அரசின் உத்தரவுப்படி பார்த்தால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் பெண் ஆசிரியர்களை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், சிறு பிள்ளைகளிடம்தான் இப்போது பாலியல் வன்முறை அதிகம் நடக்கிறது. அவர்களால் யாரிடமும் சொல்லமுடியாது என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள் அத்துமீறுகிறார்கள். அதனால், 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கும் முறையான கவுன்சலிங் தர வேண்டும். தவறான தொடுதல் போன்றவை நடக்கும்போது, பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க மாணவர்கள் முன்வந்தால் மட்டுமே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

தவறுக்கு உரிய தண்டனை கிடைக்கிறது என்றால் அடிப்படை சரியாக அமைந்துவிடும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள், மாணவர்களை கண்காணிக்க ஒரு குழு இருக்க வேண்டியது அவசியம்.

தொகுப்பு: எஸ்.பி.வளர்மதி

Image