திரைவானின் நட்சத்திரங்கள் – 15

 marilyn_monroe

2

கதாநாயகி… நம்பர் ஒன்!

‘தனிமையில் இருக்கும் போது என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன்’. –மர்லின் மன்றோ.

‘அனாதை இல்லம்’ கற்றுத் தரும் பாடங்கள் அனேகம். வலி நிறைந்த அனுபவப் பாடங்கள் அவை. தனிமை, கழிவிரக்கம், துயரம், துரோகம், ஏமாற்றம், எதிரிகள், நண்பர்கள்… இப்படி ‘லாஸ் ஏஞ்சல்ஸ் அனாதை இல்ல’த்தில் நோர்மா ஜீனுக்கு என்னென்னவோ கிடைத்தன. கூடவே ஊக்கத் தொகையும் கிடைத்தது! ஊக்கத் தொகை என்ன பெரிய ஊக்கத் தொகை! மாதத்துக்கு ஒரு நிக்கல் (அமெரிக்க பணத்தில் ஐந்து சென்ட்). அதுவும் சும்மா கிடைத்துவிடவில்லை. சமையலறை இருட்டிலும் வெப்பத்திலும் வியர்க்க விறுவிறுக்க நின்று உதவி செய்கிறேன் என்கிற பெயரில் வேலை பார்த்ததற்குக் கிடைத்த சன்மானம். அந்தப் பணத்திலும் ஒரு சிறு தொகையை வாரா வாரம் சர்ச்சுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது அந்த விடுதியின் விதிகளில் ஒன்றாக இருந்தது.

அங்கிருந்து விடுதலை கிடைக்காதா என ஏங்க ஆரம்பித்தாள் அந்தக் குழந்தை. அவளை அங்கிருந்து அழைத்துச் செல்லவும் வளர்க்கவும் பலர் ஆசைப்பட்டார்கள். பார்த்ததுமே யாருக்கும் பிடித்துப் போகும் ‘பளிச்’ குழந்தையல்லவா நோர்மா?! ஆனால், அது மட்டும் நடக்கவில்லை. தடையாக நின்றவர் அம்மா கிளாடிஸ். எப்பேர்பட்ட நல்ல மனிதர்கள் வந்து கேட்டாலும் நோர்மாவை அவர்களிடம் கொடுக்கத் தயங்கினார், உறுதியாக மறுத்தார். சில நேரங்களில் வந்தவர்களை திட்டி அனுப்பினார். ஒருநாள் கிரேஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் அனாதை இல்லத்துக்கு வந்தார். பரவசத்தில் துள்ளிக் குதித்தாள் நோர்மா. அன்றைக்கு கிரேஸ் வெறுமனே நோர்மாவைப் பார்க்க வரவில்லை. கையோடு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். கிரேஸின் கணவர் எர்வின் சில்லிமேன் ‘டாக்’ காட்டார்டின் மூத்த மனைவிக்கு ஒரு மகள் இருந்தாள். கிட்டத்தட்ட நோர்மாவின் வயது. அவளுக்குத் துணையாக இருக்கும்… நோர்மாவுக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது கிரேஸின் எண்ணம். ஆனால், நடந்ததோ வேறு.

கிரேஸும் காட்டார்டும்

கிரேஸும் காட்டார்டும்

அந்தச் சின்னஞ்சிறு குழந்தையை பாலியல் வடிகாலாகப் பயன்படுத்தப் பார்த்தார் ‘டாக்’. ஒருநாள் அது போன்ற ஒரு காட்சியை கண்ணெதிரே பார்த்து அதிர்ந்து போனார் கிரேஸ். உடனடியாக நோர்மாவை கலிஃபோர்னியாவில் இருக்கும் தன் பெரிய அத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் பெயர் ஆலிவ் புரூனிங்ஸ். அத்தை அங்கே தனியாக இல்லை… தன் மகன்களுடன் இருந்தார். ஆக, பிரச்னைகள் தொடர்ந்தன. கலிஃபோர்னியா, காம்ப்டனில் (Compton) இருந்த ஆலிவ் புரூனிங்ஸ் வீட்டில் கொஞ்ச நாட்கள் கூட நிம்மதியாக இருக்கவில்லை நோர்மா. அத்தையின் மகன்களில் ஒருவன் ஒருநாள் கண்மூடித்தனமாக தாக்கியதில் சுருண்டு போனாள்.

அம்மாவும் சரியில்லை… போகிற இடங்களில் இருக்கும் ஆண்களும் சரியில்லை… தன் மேல் காமப் பார்வை படிவதை அறிந்தும் வெளியில் சொல்ல முடியாத வேதனை அந்த சிறு பூவுக்கு. இவையெல்லாம் பின்னாளில் மர்லின் மன்றோ அனுபவித்த மனப் பிரச்னைகளுக்கும் மன அழுத்தத்துக்கும் தூக்கமில்லாமல் தவித்த இரவுகளுக்கும் முக்கியமான காரணங்கள். மைதானத்தில் வீரர்களின் கால்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கால் பந்து போல அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட நோர்மா, 1938களின் தொடக்கத்தில் மற்றொரு அத்தை வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.

அங்கே நோர்மா செல்வதற்கு ஏற்பாடு செய்ததும் கிரேஸ்தான். அவர் பெயர் அனா லோயர் (Ana Lower). லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்த வேன் நய்ஸ் (Van Nuys) என்கிற இடத்தில் வாழ்ந்து வந்தார். திருமணம் ஆவதற்கு முன்பாக கிரேஸின் வீட்டில் எப்படிப்பட்ட நிம்மதி கிடைத்ததோ, அதே நிம்மதியை அத்தை அனா வீட்டிலும் உணர்ந்தாள் நோர்மா. marilyn_monroe 1‘‘என் இளம் பருவத்தில் நான் வசித்த வெகு சில நல்ல இடங்களில் அனா அத்தையின் வீடும் ஒன்று’’ என்று பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார் மர்லின் மன்றோ. ஆனால், அங்கேயும் வெகுகாலம் நோர்மாவால் நீடித்திருக்க முடியவில்லை. காரணம், அனா வயதானவர். முதுமையோடு சேர்ந்து பல உடல் உபாதைகள் அவரை வாட்டியெடுத்துக் கொண்டிருந்தன. நாளுக்கு நாள் அனாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது.

1942… அனா அத்தையின் வீட்டில் மேலும் தங்கியிருக்க முடியாமல் கிரேஸின் வீட்டுக்கே திரும்பினாள் நோர்மா. அந்த முதிய பெண்மணி, அனா அத்தையால், நோர்மாவுக்குக் கண்கலங்க விடை கொடுக்க மட்டுமே முடிந்தது. கிரேஸின் வீட்டில் ‘டாக்’ இருப்பார் என்று நோர்மாவுக்குத் தெரியும். ஆனால், ஆதரவற்ற அந்தப் பெண் குழந்தையால் வேறு எங்கே செல்ல முடியும்? அந்த நாட்களில் நோர்மாவின் மனதுக்குள் ஓர் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. ‘இனிமேலும் யாரையும் அண்டி வாழக் கூடாது. தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்’. அனாவின் வீட்டிலிருந்து வெளியே வந்த போது அந்த எண்ணம் உறுதிப்பட்டது.

வேன் நய்ஸில் உயர்நிலைப் பள்ளியில் படித்த போது நோர்மாவுக்கு ஓர் இளைஞன் அறிமுகமாகியிருந்தான். அவன் அனாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவன். பெயர் ஜேம்ஸ் ‘ஜிம்’ டோரத்தி (James ‘Jim’ Dougherty). அன்புக்கும் பரிவுக்கும் ஏங்கும் நிலையில் இருந்த நோர்மாவுக்கு, ஜிம் அவளைப் பார்த்து உதிர்க்கும் புன்னகை ஒன்றே போதுமானதாக இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் பேசினார்கள். பூமியில் உள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் பேசினார்கள். மனிதர்கள், மலைகள், ரோஜா, குருவி, அடுத்த தெருவில் இருந்த வெள்ளைச் சடை நாய்… ஒறையும் விடாமல் பேசித் தீர்த்தார்கள். தனிமையில் இருந்தபோது மனசுக்குள்ளேயே ஒருவர் மற்றவரிடம் பேசிக் கொண்டார்கள். ஜிம்மின் மேல் நோர்மாவுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு மெல்ல மெல்லக் காதலாக மாறியது. அனாவின் வீட்டை விட்டுப் போகும் போது நோர்மாவின் மனது முழுக்க ஜிம் நிறைந்து போயிருந்தான். ஆனாலும், கிரேஸின் வீட்டுக்குப் போவதைத் தவிர வேறு வழி நோர்மாவுக்கு இருக்கவில்லை.

சில மாதங்கள் கழிந்தன. மேற்கு வர்ஜீனியாவில் ‘டாக்’ காட்டார்டுக்கு புதிய வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம்… எதிர்காலத்தில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் வேலை. கிரேஸும் காட்டார்டும் இடம் பெயர முடிவு செய்தார்கள். என்ன காரணமோ, இந்த முறை நோர்மாவை தங்களுடன் அழைத்துச் செல்ல கிளாடிஸ் விரும்பவில்லை. மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாறை எழுதியவர்களும் இதற்கான காரணத்தை சரியாகக் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு குடும்பத்தினர் நோர்மாவை வளர்க்க விரும்பினார்கள். அதற்கும் மறுப்பு சொல்லிவிட்டார் கிரேஸ். நோர்மாவை கூட அழைத்துப் போகவில்லையே தவிர, கிரேஸ் ஒரு நல்ல காரியம் செய்தார். அவருக்கு நோர்மா ஜேம்ஸ் ஜிம் டோரத்தியை விரும்புவது தெரிந்திருந்தது. ஜிம்மின் வீட்டுக்குப் போய், அவன் அம்மாவிடம் பேசினார்.

நேரடியாக விஷயத்துக்கு வந்தார். நோர்மாவை ஜிம்முக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். ஜேம்ஸ் ஜிம் டோரத்திக்கு பக்குவமில்லாத வயது. நோர்மாவுக்கு பதினாறு வயது. இருவரும் சேர்ந்து வாழ்வதில் முகாந்திரம் இருந்தாலும் அவர்களின் இல்லற வாழ்க்கை நல்லவிதமாக நடக்குமா என்கிற கவலையோடு பேசினார் ஜேம்ஸ் ஜிம் டோரத்தியின் தாய். ‘‘வேறு வழியில்லை. எங்களால் நோர்மா ஜீனை அழைத்துப் போக முடியாது. இந்தத் திருமணம் மட்டும் நடக்காவிட்டால் அவள் திரும்பவும் ஏதாவது ஆதரவற்றோர் விடுதிக்கோ, அனாதை இல்லத்துக்கோ செல்ல வேண்டியதுதான்’’. அழுத்தம் திருத்தமாக உண்மையை எடுத்துச் சொன்னார் கிரேஸ். இதைக் கேட்டதும் ஜேம்ஸ் ஜிம் டோரத்தியின் அம்மாவே கூட திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார். ஆனால், ஜிம் ஒப்புக்கொள்ள மறுத்தான். வயது ஒருபக்கம் இருக்கட்டும்… குடும்பத்தை எப்படி நடத்துவது? வேலை என்று உருப்படியாக எதுவும் இல்லை. வருமானத்துக்கு என்ன செய்வது? இந்த யோசனைகளால் ஜிம் தயங்கினான். ‘இப்போதைக்கு திருமணம் வேண்டாமே!’ என்று திரும்பத் திரும்ப சொன்னான். கிரேஸ், நோர்மாவின் நிலைமையை எடுத்துச் சொன்னார். ‘கரைத்தார் கரைத்தால் கல்லும் கரையும்’ நிலைதான். ஜேம்ஸ் ஜிம் டோரத்தி இறங்கி வந்தான். திருமணத்துக்கு ஒப்புக் கொண்டான். wedding2விஷயத்தைக் கேள்விப்பட்டார் நோர்மாவுக்குப் பிரியமான அனா அத்தை. அவரே முன்னின்று திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். ஜேம்ஸ் ஜிம் டோரத்திக்கும் நோர்மாவுக்கும் திருமணம் நடந்தது. நோர்மாவுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டது அந்தக் கணத்தில் இருந்துதான். அவளுக்கு ஜிம்மின் வீடு ஒரு புது உலகமாக இருந்தது. அங்கே அவளை அதிகாரம் செய்ய யாரும் இல்லை… எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை… எல்லாவற்றுக்கும் மேலாக ‘இது தன் வீடு இல்லை, இங்கே வரம்பு மீறிவிடக் கூடாது’ என்கிற எண்ணம் அடியோடு இல்லை.

புகுந்த வீட்டுக்கு வந்த கையோடு நிர்வாகத்தையே தன் கையில் எடுத்துக் கொண்டாள் நோர்மா. கணவனுக்கும் அவன் வீட்டாருக்கும் உற்ற துணையாக ஆகிப் போனாள். அது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். 1943ல் ஜேம்ஸ் ஜிம் டோரத்திக்கு ஒரு வேலை கிடைத்தது. ‘மெர்ச்சன்ட் மரைன்’ என்கிற வாணிக கப்பல்படையில் வேலை. கலிஃபோர்னியாவின் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சான்டா கேட்டலினா தீவில் வேலைக்குச் சேர ஆர்டர் வந்தது. நோர்மா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். சான்டா கேட்டலினா தீவு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்தது. அதனால், ஜிம்முடன் அவளும் போக முடியும். சேர்ந்து வாழ முடியும். ‘அங்கே எத்தனை நாட்களுக்கு வேலை இருக்கும் என்று தெரியவில்லை. நீ இங்கேயே இரேன்’ என்று சொல்லிப் பார்த்தான் ஜேம்ஸ் ஜிம் டோரத்தி. ‘நீங்கள் வேறு எங்காவது மாற்றலாகிப் போகும் வரை உங்களுடன்தான் இருப்பேன். என்னால் உங்களைப் பிரிந்திருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டாள் நோர்மா. இருவரும் சான்டா கேட்டலினா தீவுக்குக் கிளம்பினார்கள். அங்கே இருக்கும் ஏவலோன் (Avalon) நகரில் குடியேறினார்கள்.

சில மாதங்கள்தான்… ஆனால், நோர்மாவின் வாழ்க்கையில் அற்புதமான நாட்கள் அவை. ஜேம்ஸ் ஜிம் டோரத்தி, நோர்மாவை நன்றாக கவனித்துக் கொண்டான். இனி வாழ்க்கையில் பிரச்னையே இல்லை என்கிற நினைப்புக்கு நோர்மா வந்தபோதுதான், ஜிம்முக்கு அந்த உத்தரவு வந்தது. அவன் உடனடியாக கப்பலில் ஏறி பசிபிக் கடலில் சென்றாக வேண்டும். இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம் அது. நோர்மாவுக்குள் ஓர் எண்ணம் அழுத்தமாக உட்கார்ந்திருந்தது. ஜிம் பசிபிக் கடலுக்குப் போனால் உயிரோடு திரும்பி வரமாட்டான் என்கிற எண்ணம். பேசிப் பார்த்தாள், அழுது பார்த்தாள், ஆர்பாட்டம் செய்தாள். எதற்கும் மசியவில்லை ஜிம். பசிபிக் பயணத்துக்குத் தயாராகிவிட்டான்.

அடுத்த அதிரடியை ஆரம்பித்தாள் நோர்மா. ‘சரி… உங்க இஷ்டப்படியே போய் வாருங்கள். ஆனால், போவதற்கு முன்னால் எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டுப் போங்கள். நீங்கள் திரும்பி வரும் வரை குழந்தையைப் பார்த்தாவது உங்கள் நினைவில் வாழ்கிறேன்’.

அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை ஜேம்ஸ் ஜிம் டோரத்தி. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, அதை வளர்க்கும் அளவுக்கான பக்குவம் நோர்மாவுக்கு வரவில்லை என்று நினைத்தான்.

‘கவலையே படாதே! நான் திரும்பி வந்த பிறகு கண்டிப்பாக உன்னை அம்மாவாக்கிவிடுகிறேன்’. கண் சிமிட்டிச் சொன்னான். உரிய தேதியில் கடல் பயணத்துக்குக் கிளம்பினான். நோர்மா, வேறு வழியில்லாமல் ஜேம்ஸ் டோரத்தியின் அம்மா வீட்டுக்குத் திரும்பினாள்.

(தொடரும்)

– பாலு சத்யா

Image Courtesy:

http://amirulhafiz.deviantart.com/

http://blog.everlasting-star.net/

http://www.thisismarilyn.com/

http://en.wikipedia.org/

திரைவானின் நட்சத்திரங்கள் பிற…

மர்லின் மன்றோ – 1

பேட்ரிஸியா நீல்

கோஸி ஆன்வுரா

ஆண்ட்ரியா ஆர்னால்ட்

சோஃபியா ஜாமா

ஷர்மீன் ஓபெய்ட் சினாய்

மெரில் ஸ்ட்ரீப்

சாபா சாஹர்

பெக் என்ட்விஸ்லே

மார்த்தா மெஸ்ஸாரோஸ்

ஹைஃபா அல்-மன்சூர்

தமீனே மிலானி

சமீரா மேக்மல்பாஃப்

மோபெல் நார்மண்ட்

திரைவானின் நட்சத்திரங்கள் – 9

Image

இன்ஸ்பெக்டர் என்ன செய்திருப்பார்?

மையாஸா! (Myassa) அதுதான் அந்தப் பெண்ணின் பெயர். பகல் முழுக்க வேலை பார்த்தக் களைப்பு. அலுப்புடன் வீடு திரும்புகிறாள். அன்று அவளுக்கு ஒரு பிரச்னை. அதற்குக் காரணம் ஓர் ஆண். அவள் குடியிருக்கும் அபார்ட்மென்ட் பகுதியில் வைத்து அவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யத் துணிகிறான். அவள் எப்படியெல்லாமோ போராடுகிறாள். ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போய்விடுகிறது. அவனுக்கு ஆண்மைக் குறைபாடா அல்லது வேறு பிரச்னையா என்று தெரியவில்லை. பலாத்காரம் நிகழவில்லை. அவன் அவளை விட்டுவிடுகிறான். அடுத்த நாள் மையாஸாவிடம் இருந்தது இரு வாய்ப்புகள். ஒன்று, அவள் காவல்நிலையத்துக்குப் போவது. அங்கே அவளுக்கு நடந்த பலாத்கார நிகழ்வை புகார் கொடுப்பது. இரண்டாவது வாய்ப்பு… அவள் மேல் பாலியல் பலாத்கார முயற்சி நடந்ததை அப்படியே மறந்துவிடுவது. அவள் என்ன செய்வாள்?

எங்கோ, எப்போதோ நடந்திருந்தாலும் அன்றாடம் பல பெண்கள் உலகம் முழுக்க எதிர்கொள்கிற பிரச்னை. இந்த நிகழ்வை ‘லிம்ப்லி, (சாஃப்ட்லி) ஒன் சாட்டர்டே மார்னிங்’ என்ற குறும்படமாகப் படைத்திருக்கிறார் அல்ஜீரிய இயக்குநர் சோஃபியா ஜாமா (Sofia Djama). ‘‘இது ஆண்களுக்கு எதிரான படம் அல்ல. அல்ஜீரியாவில் இளைய தலைமுறை எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் அடையாளம். இங்கே இருக்கும் தோல்வி அடைந்த, இயந்திரத்தனமான ஓர் ஒழுங்குமுறையை வெளிக்கொண்டு வர நான் முயற்சித்திருக்கிறேன். இங்கே இளைஞர்களுக்கு வேலை இல்லை. சுதந்திரமாக தங்கள் உணர்வுகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத் தேவையான களம் இல்லை. எல்லோரும் வீட்டில் பெற்றோருடன் வசிக்க நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அதன் விளைவாக, ஏதாவது ஒரு அடையாளம் தேவை என்பதற்காகவே குடும்பம், பாரம்பரியம், பழக்க வழக்கம் என்று பழமையில் ஊறித் திளைத்துவிடுகிறார்கள். இங்கே அரசு, இளைஞர்களை கவனிப்பதில்லை. அதனாலேயே அவர்களுக்குள் வெறுப்பும் வன்முறையும் தொற்றிக் கொண்டு விடுகிறது. இதைத்தான் என் படத்தில் வெளிக் கொண்டு வர நினைத்தேன். என்னைப் பொறுத்தவரை பலாத்காரத்துக்கு ஆளான பெண், பலாத்காரம் செய்த ஆண் இருவருமே பாதிக்கப்பட்டவர்கள்தான்’’. தெளிவாக ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜாமா.

Image

ஜாமா அடிப்படையில் எழுத்தாளர், இலக்கியவாதி. அல்ஜீரியாவில் இருக்கும் ஓரனில் (Oran) 1979, பிப்ரவரி 10ம் தேதி பிறந்தார். பெஜய்யா (Bejaia) என்கிற ஊரில் வளர்ந்தார். பெஜய்யா பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் இலக்கியம் படித்தார். முதுகலைப் படிப்புக்காக அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீர்ஸுக்கு வந்தார். அங்கே இருக்கும் ‘பௌசாரியா பல்கலைக்கழகத்தில்’ (Bouzareau) சேர்ந்தார். அல்ஜீயர்ஸுக்கு வந்த பிறகு அவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகமானது. சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். தலைநகர் வாழ்க்கை அவரை மிகவும் பாதித்தது. அதை மையமாக வைத்தே ஒரு சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிட முடிவு செய்தார். எழுதினார். ‘லிம்ப்லி, ஒன் சாட்டர்டே மார்னிங்’ என்கிற தலைப்பும் வைத்துவிட்டார். ‘பர்ஸாக்’ என்கிற பதிப்பகத்தின் வெளியீடாக அது வர இருந்தது. என்ன காரணமோ, சிறுகதைத் தொகுப்பு வெளியாகவில்லை.

வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஒரு அட்வர்டைசிங் ஏஜென்சி நிறுவனத்தில் அக்கவுன்ட் எக்ஸிகியூட்டிவாகச் சேர்ந்தார் ஜாமா. சிறிது காலம் கணக்குப் பார்க்கும் வேலை பார்த்ததற்குப் பிறகு அது பிடிக்காமல் அந்த நிறுவனத்திலேயே ‘திட்டமிடுதல் துறை’க்கு (Planning Department) மாறினார். அதுவும் பிடிக்காமல் ‘படைப்பாற்றல் துறை’யில் (Creative Department) காப்பி எடிட்டராக சேர்ந்தார். செக்கு மாடு போல காலையில் வேலைக்குப் போவது, மாலையில் வீட்டுக்குத் திரும்புவது என்கிற இயந்திரத்தனமான வாழ்க்கை ஜாமாவுக்குப் பிடிக்கவில்லை. தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை எந்த வழியிலாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார். ‘லே டெம்ப்ஸ்’ (LE TEMPS) என்ற வார இதழில் ஃப்ரீலேன்ஸ் எழுத்தாளராக நிறைய எழுதினார். இணையதளத்திலும், வேறு சில பத்திரிகைகளிலும் விமர்சனங்கள் எழுதினார். ‘க்ரைசாலைடு’ (CHRYSALIDE) என்கிற கலாசார அமைப்பில் இணைந்து சினிமா, நாடகம் என்று பல தளங்களில் செயல்பட்டார். ஜாமா இயக்கிய முதல் படம் ‘தி ஹண்ட்ரட் ஸ்டெப்ஸ் ஆஃப் மிஸ்டர் எக்ஸ்’.

அல்ஜீரியாவில் சட்டத்துக்கும் சமூகத்துக்கும் இடையேயான இடைவெளி அதிகம் என்று நினைத்தார் ஜாமா. ‘‘ஒருவேளை மையாஸா காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். இன்ஸ்பெக்டர் என்ன செய்திருப்பார்? சிரித்திருப்பார்’’ என்கிறார் ஜாமா. ‘‘ஒரு வகையில் பார்த்தால் நான் இங்கே மிகவும் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். நான் ஸ்கர்ட் அணியலாம், பீச்சுக்குப் போகலாம். சட்டம் என்னைத் தடுக்காது. ரமலான் சமயத்தில் நான் நோன்பு இருக்கவில்லையா? சட்டம் எனக்கு உதவி செய்யாது. சமூகப் பார்வையில் இது மன்னிக்க முடியாத செயல்’’.

Image

‘லிம்ப்லி, ஒன் சாட்டர்டே மார்னிங்’ குறும்படம் மரியாதைக்குரிய இரண்டு விருதுகளை ஜாமாவுக்குப் பெற்றுத் தந்தது. ‘க்ளெர்மான்ட்-ஃபெர்ராண்ட் சர்வதேச குறும்பட விழா’ (Clermont-Ferrand international short film festival) உலக குறும்பட விழாக்களில் மிக முக்கியமான ஒன்று. அதில் கலந்து கொண்டு இரண்டு பரிசுகளை வென்றது ஜாமாவின் குறும்படம். சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன அவமானங்களையும் ஏமாற்றங்களையும் மிக அழகாகப் பதிவு செய்ததுதான் ஜாமாவின் குறும்படம் வெற்றி பெற்றதற்குக் காரணம்.

அல்ஜீரியா திரைப்படத்துறை இன்னமும் குழந்தையாகவே இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் ஜாமா. அவருடைய சொந்த மண்ணில் திரைப்படப்பள்ளிகள் இல்லை. திரைப்படம் எடுக்கப் போதுமான வசதிகள் இல்லை. அதன் காரணமாகவே அல்ஜீரிய தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து படம் எடுக்க முடியாத சூழ்நிலை. ‘லிம்ப்லி, ஒன் சாட்டர்டே மார்னிங்’ திரைப்படத்தை ஐரோப்பிய தொழில்நுட்பக் கலைஞர்களுடன், ஐரோப்பிய நிதி உதவியுடன்தான் தயாரிக்க முடிந்தது. அப்படி இருக்கும் போது அவருடைய குறும்படம் அல்ஜீரியாவில் எப்படி வரவேற்கப்படும் என்பது அவருடைய கேள்வி.

ஆனால், ‘அல்ஜீரியன் பிரெஸ் சர்வீஸ்’ என்கிற பத்திரிகையாளர்கள் சங்கம் அவருக்கு உதவியது. அவருடைய படம் ரிலீசாவதை வெகு சிறப்பாக செய்திகளில் இடம்பெறச் செய்தது. எப்படியோ சென்சாரின் கைகளில் போய் மீண்டு வந்தது அவருடைய குறும்படம். இப்போது பாரீஸில் வசிக்கிறார் ஜாமா. எழுதுவதிலும் அடுத்த பட முயற்சியிலும் தீவிரமாக இருக்கிறார். அவருடைய ‘எ கிளாஸ் டூ மச்’ என்ற படைப்பை படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

தனக்கு சர்வதேச அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஜாமா. ‘‘நான் முழுக்க முழுக்க ஆப்பிரிக்க குடிமகள் அதே நேரம் மக்ரேபியும் (Maghrebi) கூட. எனக்கு அரபு மற்றும் இஸ்லாம் இரண்டு பாதிப்பும் இருக்கிறது. அதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்’’ என்கிறார்.

அல்ஜீரியா, தன் சொந்த நாட்டு திறமைசாலிகளுக்குக் கூட உரிய அங்கீகாரம் அளிப்பதில்லை. அந்த வருத்தம் மிக அதிகமாக ஜாமாவுக்கு இருக்கிறது. 2012ல் ஒலிம்பிக் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்றவர் அல்ஜீரிய தடகள வீர தவுஃபிக் மக்லோஃப் (Taoufik Maklouf). அந்த ஓட்டப் பந்தய நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சிகளில்கூட ஒளிபரப்பப்படவில்லை. அவர் நாடு அவருக்கு எந்தவிதத்திலும் ஆதரவு தரவில்லை.

ஜாமா இப்படிக் குறிப்பிடுகிறார்… ‘‘அல்ஜீரியாவில் கதாநாயகர்கள் இல்லை. தியாகிகள்தான் இருக்கிறார்கள்’’

– பாலு சத்யா

Sofia Djama

Born in Oran (Algeria) on the 10th of February 1979. Raised in Bejaia, after two years at the Department of Literature of the University of Bejaia, in 2000 she moves to Algiers to finish her master at the University of Bouzarea.

Limply, a Saturday morning

திரைவானின் நட்சத்திரங்கள் – 7

Image

இரும்புப் பெண்மணி!

மெரில் ஸ்ட்ரீப். “இந்தப் பெயர் கொஞ்சம்கூடப் பொருத்தமே இல்லை. பேசாமல் ‘விருது மங்கை’ என்று மாற்றி வைத்துக்கொள்ளலாம்” என்று அவர் காதுபடவே முணுமுணுத்தவர்கள் ஏராளம். இது போல எந்தப் பேச்சைக் கேட்க நேர்ந்தாலும், தன் ‘பளிச்’ புன்னகையை உதிர்த்துவிட்டு, பேசாமல் நகர்ந்து போய்விடுவார் மெரில் ஸ்ட்ரீப் (Meryl Streep).

பின்னே! 17 முறை ஆஸ்கர் விருதுக்காக இவர் பெயர் நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் மூன்றுக்கு விருது. 27 முறை கோல்டன் குளோப் விருதுக்காக இவர் பெயரில் நாமினேஷன். அவற்றில் எட்டுக்கு விருது. மேலும், இரண்டு எம்மி விருதுகள், ஐந்து முறை கிராம்மி விருதுக்காக நாமினேஷன் செய்யப்பட்டவர், கேன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதை ஒரு முறை பெற்றவர்… இப்படி பக்கம் பக்கமாக எழுத வேண்டிய பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். உலகில், வேறு எந்த நடிகரும், நடிகையும் எட்ட முடியாத உயரத்தை அலட்சியமாகக் கடந்து அடைந்தவர். பல நடிகர்கள் பெற்ற ரெகார்டுகளை உடைத்தவர். இதற்கெல்லாம் அடிப்படை, அவருடைய உழைப்பு, உறுதி, தொழில்பக்தி.

கடந்த 2012ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது, ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நடித்ததற்காக மெரில் ஸ்ட்ரீப்புக்கு கிடைத்தது. அதில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் ‘மார்கரெட் தாட்சர்.’ ‘இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி’ என்று போற்றப்படும் மார்கரெட் தாட்சர், இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர். தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர். ‘அயர்ன் லேடி’ படத்தில் கிட்டத்தட்ட மார்கரெட் தாட்சராகவே மாறியிருந்தார் மெரில் ஸ்ட்ரீப். அந்த அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்புத்தான் அவருக்கு ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்தது.

Image

1949, ஜூன் 22. அமெரிக்காவில், நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள சம்மிட் என்கிற இடத்தில் பிறந்தார் ஸ்ட்ரீப். அம்மா மேரி வோல்ஃப் ஓவியர். அப்பா ஒரு மருந்து கம்பெனியில் எக்ஸிகியூட்டிவ். ‘டேனா டேவிட்’, ‘மூன்றாம் ஹாரி வில்லியம்’ என்று இரண்டு சகோதரர்கள். பாரம்பரியப் பெருமை உள்ள குடும்பம். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த பரம்பரை. மெரிஸ் ஸ்ட்ரீப்பின் அம்மாவும் அயர்லாந்தில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அமெரிக்காவில் பென்சில்வேனியாவை உருவாக்கிய வில்லியம் பென்னுக்கு ஸ்ட்ரீப் குடும்பத்துக்கு தூரத்துச் சொந்தம் என்றெல்லாம் சொல்வார்கள்.

நியூ ஜெர்சியில் இருக்கும் பெர்னார்ட்ஸ் வில்லியில் வளர்ந்தார் ஸ்ட்ரீப். அவருக்கு நடிப்பில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவர் சென்று சேர்ந்த இடம் நியூ யார்க்கில் இருக்கும் வாஸ்ஸர் காலேஜ். அங்கே அவருக்கு நடிப்பின் முக்கியமான நுட்பங்களைக் கற்றுக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. கூடவே, அப்போது புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த நடிகை ஜீன் ஆர்தரிடம் விளக்கமாக நடிப்பைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமைந்தது.

நாடகத்தில் பி.ஏ. முடித்தார் ஸ்ட்ரீப். அத்தோடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிடாமல் ‘யேல் ஸ்கூல் ஆஃப் டிராமா’வில் சேர்ந்து, நாடகத்தில் எம்.எஃப்.ஏ. பட்டமும் பெற்றார். யேலில் படித்தபோது அவர் நிறைய நாடகங்களில், விதவிதமான பாத்திரங்களில் நடித்தார். அந்த அனுபவங்கள்தான் அவருடைய நடிப்புத் திறமையை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றின.

Image

நடிகைகளுக்கே உண்டான வாழ்க்கை பிரச்னைகள் அவரையும் விட்டுவைக்கவில்லை. ஆரம்ப கால வாழ்க்கையில் அவ்வளவு வேதனைகளை சந்தித்தார். யேல் (Yale) கல்லூரியில் இருந்து வெளி வந்தபிறகு, பல மேடை நாடகங்களில் நடித்தார். நாடகங்களுக்கேயான ‘பிராட்வே’ அவரை அரவணைத்துக் கொண்டது. கிட்டத்தட்ட ஸ்டார் அந்தஸ்தும் கிடைத்துவிட்டது. அந்தச் சமயத்தில் அறிமுகமானவர்தான் ஜான் கேஸேல் (John Cazale). அறிமுகம், நட்பானது. நட்பு காதலாக மாறியது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கேஸேலோடு சேர்ந்து வாழ்ந்தார் ஸ்ட்ரீப்.

நடிப்புத் துறையில் பலருடைய அலட்சியத்தையும் அவமானத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு படத்தின் ஆடிஷனுக்காகப் போயிருந்தார் ஸ்ட்ரீப். அது புகழ்பெற்ற ‘கிங் காங்’ திரைப்படம். அதன் தயாரிப்பாளரான டினோ டே லாரன்டீஸுக்கு (Dino De Laurentis) என்ன காரணமோ, ஸ்ட்ரீப்பைப் பிடிக்கவில்லை. தன் மகனை அழைத்தார். ஸ்ட்ரீப்புக்கு இத்தாலி தெரியாது என்ற நினைப்பில் அந்த மொழியிலேயே மகனைத் திட்டித் தீர்த்தார். “இவளைப் பாக்கவே அருவெறுப்பா இருக்கு. எதுக்கு இவளை இங்க கூட்டிட்டு வந்தே?” இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் ஸ்ட்ரீப் நிதானத்தை இழக்கவில்லை. மிக மென்மையான குரலில், தெளிவான இத்தாலியில் டினோவுக்கு பதில் சொல்லிவிட்டு வெளியேறினார். 

நடிப்பு… இதுதான் வாழ்க்கை என்கிற தீர்மானம் அழுத்தமாக அவருக்குள் விழுந்திருந்தது. சின்ன கதாபாத்திரமோ, கதாநாயகி வேடமோ நிறைவாகச் செய்ய வேண்டும் என்கிற உறுதி அவருக்குள் இருந்தது. கூடு விட்டுக் கூடு பாய்வது போல் பாத்திரமாக மாறும் கலை மெல்ல மெல்ல அவருக்கு வசப்பட ஆரம்பித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன்டன் செகாவ், பெர்டோல்ட் பெர்க்ட் நாடகங்களில் எல்லாம் நடித்தார். 1976ல் ‘சிறந்த நாடக நடிகை’க்கான ‘டோனி விருதை’யும் பெற்றார். இது போல மேலும் சில விருதுகளும் நாடகத்தில் நடித்ததற்காக அவருக்குக் கிடைத்தன.

ஸ்ட்ரீப் நடித்த முதல் படம், ‘ஜூலியா.’  ஒருவழியாக 1977ல் வெளியானது. மிகச் சிறிய பாத்திரம். ஆனாலும் தன் பங்கை சிறப்பாகச் செய்திருந்தார். நியூ யார்க்கில் தன் காதலன் கேஸேலோடு தங்கிக்கொண்டே வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார். கேஸேலுக்கு எலும்பு கேன்ஸர். உடம்பு படுத்தி எடுத்துக்கொண்டிருந்தது. ஆனாலும் கேஸேல் ஒரு படத்தில் நடிக்க வேண்டிய சூழல். ‘தி டீர் ஹன்ட்டர்’ என்பது படத்தின் பெயர். அந்தப் படத்தில் நடிக்க ஸ்ட்ரீப்புக்கும் வாய்ப்புக் கிடைத்தது. காரணம், அவர் சிறந்த நடிகை என்பதற்காக அல்ல; அதில் கேஸேல் நடிக்கிறாரே! அதற்காக.

பிறகு, ‘ஹோலோகாஸ்ட்’ என்கிற ஒரு சிறிய தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு. பிடிக்கவே இல்லையென்றாலும் நடித்தே ஆகவேண்டிய சூழல். காரணம் பணம். அது ஸ்ட்ரிப்புக்கும் கேஸேலுக்கும் வாழ்வாதாரத்துக்கு மிகவும் தேவையாக இருந்தது.

ஒரே இடத்தில் தங்கியிருந்தால், தேங்கிப் போய்விடுவோம் என்று நினைத்தார் ஸ்ட்ரீப். கேஸேலை தனியாக விட்டுவிட்டு, ஆஸ்திரியா, ஜெர்மனிக்கெல்லாம் நடிப்பு வாய்ப்புத் தேடிப் போனார். பிரமாதமாக ஒன்றும் அமையவில்லை. திரும்பி வந்தபோது கவலைக்கிடமான நிலையில் இருந்தார் கேஸேல். 1978, மார்ச் 12ம் தேதி கேஸேல் மறைந்தார். அவர் மரணத்தைத் தழுவும் வரைக்கும், கூடவே இருந்து ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வது போலப் பார்த்துக்கொண்டார் ஸ்ட்ரீப்.

கேஸேல் இறந்த பிறகு, ஸ்ட்ரீப் தன் கவனம் முழுவதையும் நடிப்பில் திருப்பினார். ‘ஹோலோகாஸ்ட்’ அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தது. அதில் நடித்ததற்காக சில விருதுகளும் அவரைத் தேடி வந்தன. அவற்றுள் ஒன்று, பிரைம் டைம் எம்மி விருது. அதே சமயம், ‘தி டீர் ஹன்ட்டர்’ ரிலீஸானது. அதில் சிறப்பாக நடித்திருந்ததற்காக, ஸ்ட்ரீப்பின் பெயர், சிறந்த துணை நடிகை பரிசுக்காக ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதற்குப் பிறகும்கூட வாழ்க்கையில் பெரிய மாற்றமில்லை. துணைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புத்தான் ஸ்ட்ரீப்புக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்படித்தான் ‘மன்ஹாட்டன்’ படத்தில் வுட்டி ஆலனோடு சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. இயக்குநர், ஸ்ட்ரீப்பிடம் ‘நீங்களாக எதுவும் செய்யக்கூடாது’ என்றார். சொல்லிக் கொடுக்கிற வசனத்தைத் தாண்டி ஒரு துணையெழுத்துக்கூட வாயிலிருந்து வரக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். பல்லைக் கடித்துக்கொண்டு நடித்தார் ஸ்ட்ரீப்.

‘க்ராமர் வெஸர்ஸ் க்ராமர்’ (Kramer Vs Kramer) படத்திலும் அவருக்குத் துணை நடிகை வேடம்தான். ஆனால், அங்கே முழுச் சுதந்திரம் கிடைத்தது. அவருக்காக ஸ்கிரிப்டையே மாற்றி எழுதினார் இயக்குநர். ஒரு சராசரிப் பெண்மணி கதாபாத்திரம். அந்தப் பெண் வீட்டில் எப்படி இருப்பார், என்ன செய்வார், எப்படியெல்லாம் மற்றவர்களோடு நடந்து கொள்வார் என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடிவு செய்தார் ஸ்ட்ரீப். காரணம் படிப்பும் நடிப்பும் அவரை வீட்டிலிருந்து தள்ளியே வைத்திருந்தன. அம்மாவுடன் வீட்டிலேயே நாள் கணக்கில் செலவழித்தார். அம்மா எப்படி வீட்டு வேலைகளைச் செய்கிறார், எல்லோருடனும் எப்படியெல்லாம் பழகுகிறார் என்று கவனித்தார். சிலவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அம்மாவில் ஆழ்ந்து போனார். கற்றுக் கொண்டதை தன் நடிப்பில் கொண்டு வந்தார் ஸ்ட்ரீப். அவருடைய உழைப்புக்குப் பலன்… சிறந்த துணை நடிகைக்கான பல விருதுகள்… அவற்றில் கோல்டன் க்ளோப் அவார்டும், ஆஸ்கர் விருதும் அடக்கம்.

Image

அதற்குப் பிறகு, வாழ்க்கை முழுக்க வேகம்தான். ‘பிரெஞ்ச் லெப்டினெண்ட்ஸ் வுமன்’ படத்தில் பிரதானமான பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்த ஒன்று மட்டுமல்ல… அன்றிலிருந்து இன்றுவரை அவர் நடித்ததெல்லாமே பிரதான கதாபாத்திரங்கள்தான். பார்ப்பவர்களை பிரமிக்க வைத்த பாத்திரங்கள். தேர்ந்தெடுத்து, கதை கேட்டு, அதை உள்வாங்கி அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்திய பாத்திரங்கள். ‘என்ன பிரமாதமான நடிப்புப்பா!’ என்று ‘அட!’ போட வைத்த அற்புதங்கள் அவை!

1978ல் டன் கம்மர் என்கிற சிற்பியைத் திருமணம் செய்து கொண்டார். நான்கு குழந்தைகள் பிறந்தன. அவர்களில் இருவர் அம்மாவைப் போலவே நடிகைகள். ஒருவர் இசையமைப்பாளர்.

மதம் தொடர்பான பல பாத்திரங்களில் நடித்திருந்தார் ஸ்ட்ரீப். அது தொடர்பான ஒரு கேள்விக்கு இப்படி பதிலும் சொல்லியிருந்தார்… ‘‘நான் எந்த மதக் கொள்கையையும் பின்பற்றுபவள் அல்ல. நான் எந்த சர்ச்சையோ, கோயிலையோ, ஆசிரமத்தையோ சார்ந்தவளும் அல்ல. நான் எப்போதும் நம்பிக்கையில் ஆர்வம் வைத்திருக்கிறேன். ஏனென்றால், மதங்களின் மொத்தக் கட்டமைப்பில் அடிப்படையாக இருப்பது அமைதி. அதைத் தருவது நம்பிக்கை’’.

அறுபதைத் தாண்டிய வயதில் இன்னும் வெற்றிப் படிகளில் ஏறிக்கொண்டே இருக்கிறார் ஸ்ட்ரீப். அவரைப் பொறுத்தவரை வெற்றிக்கு வயது ஒரு தடையில்லை. 2013 டிசம்பரில் வெளி வர இருக்கும் ‘ஆகஸ்ட்: ஓசேஜ் கவுண்டி’ படத்திலும் நடித்திருக்கிறார். அடுத்து என்ன செய்யலாம் என்று ஆவலோடு ஒரு சிறுமியைப் போலக் காத்திருக்கிறார். கடைசியாக 2012ல் வெளி வந்த ‘ஹோப் ஸ்ப்ரிங்ஸ்’ படத்தில் நடித்ததற்காக ஒரு விருதையும் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில், “விருதுகள், திரைப்படங்களில் நான் பார்த்த வேலைக்கு அங்கீகாரத்தையும் பாராட்டையும் தருபவையாக இருக்கின்றன. அது எனக்குப் பரவசத்தைத் தருகிறது. உலகத்தின் உயரமான இடத்தில் நான் இருப்பதாக என்னை உணரச் செய்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவரைப் போலவே, உலகெங்கும் இருக்கும் எத்தனையோ சினிமா விமர்சகர்களும் “இவங்க இன்னும் எத்தனை விருது வாங்குவாங்கப்பா?“ என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை மார்கரெட் தாட்சரோ, சாதாரண குடும்பப் பெண்மணியோ அவர்கள் பேசுவதைப் போலவே பேசுவதும், அவர்களைப் போலவே ஸ்ட்ரீப் மாறுவதும்தான். இது எப்படி சாத்தியம்? இந்தக் கேள்விக்கு அவர் சொல்லும் பதில்… ‘‘நான் கவனிக்கிறேன்.’’  

– பாலு சத்யா 

Meryl Streep
Born June 22, 1949 (age 64)[1]
SummitNew Jersey, U.S.
Alma mater Vassar College
Yale School of Drama
Occupation Actress
Years active 1971–present
Title Doctor of Fine Arts (honorary) of Princeton University
Spouse(s) Don Gummer
(1978–present)
Partner(s) John Cazale
(1976–1978, his death)
Children Henry Wolfe Gummer
Mamie Gummer
Grace Gummer
Louisa Gummer

திரைவானின் நட்சத்திரங்கள்! – 5

ஹாலிவுட் ரொம்ப உயரம்!

Image

வெற்றியாளர்களை நினைவுகூர்வது அவசியம். அதைவிட தோல்வி அடைந்தவர்களின் வாழ்க்கையை அலசுவதும் ஆராய்வதும் மிக மிக அவசியம். அதிலிருந்துதான் எங்கே தவறு, எப்படிச் சரி செய்வது, தடைகளை எப்படித் தாண்டுவது என்பதையெல்லாம் கற்றுக் கொள்ள முடியும். நடிகை பெக் என்ட்விஸ்லேயின் (Peg Entwistle) வாழ்க்கை, திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குமே பாடம்!

‘ஹாலிவுட்’ என்றதும் பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவது எது? அங்கே இருக்கும் பிரம்மாண்டமான ஸ்டூடியோக்களோ, பிரபல நடிகர்களோ, நடிகைகளோ, இயக்குநர்களோ அல்ல. லாஸ் ஏஞ்சல்ஸில், மவுன்ட் லீ மலையின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் ‘HOLLYWOOD’ என்ற எழுத்துகள்தான். அந்த மலையும் எழுத்துகளும் ஹாலிவுட் என்கிற பிரம்மாண்டத்தின், கனவுத் தொழிற்சாலையின் அடையாளம்! அந்த மலையின் மீது கஷ்டப்பட்டு ஏறி, அதிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் பெக் என்ட்விஸ்லே.

Image

1908, பிப்ரவரி 5ம் தேதி இங்கிலாந்து, வேல்ஸில் இருக்கும் போர்ட் டால்பாட் (Port Talbot) நகரில் பிறந்தார் பெக். அப்பா ராபர்ட் சைம்ஸ் என்ட்விஸ்லே நாடக நடிகர். அம்மா, எமிலி என்கிற மில்லிசென்ட் லில்லியன் என்ட்விஸ்லே. சிறு வயதிலிருந்தே பெக் என்ட்விஸ்லேவுக்கு ஒரு கனவு இருந்தது. நடிகை ஆகவேண்டும் என்கிற கனவு. திரையில் தோன்றி, ஆடவும் பாடவும் வேண்டும், பாராட்டுகளையும் கைதட்டல்களையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்ற கனவு. அது வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அவர் கூடவே வந்தது. பெக்கின் ஆரம்ப நாட்கள் லண்டனில் இருக்கும் வெஸ்ட் கென்ஸிங்டன்னில் கழிந்தது.

சின்னஞ்சிறு பெண்ணாக பெக் இருக்கும் போதே அம்மா எமிலி இறந்து போனார். அது பெக் சந்தித்த முதல் இழப்பு, பேரிழப்பு. அம்மாவின் அரவணைப்பில்லாமல் வளரும் குழந்தை சந்திக்கும் அத்தனை பிரச்னைகளையும் எதிர்கொண்டார் பெக். அப்பா ராபர்ட் எஸ். என்ட்விஸ்லே, பிழைப்புக்காக பெக்கை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குக் கிளம்பினார். சின்சினாட்டி, ஓஹியோ, நியூ யார்க் என்று எங்கெங்கேயோ வாழ்ந்தார்கள். ராபர்ட் அமெரிக்காவில் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன. நாடகங்களுக்குப் பிரபலமாக இருந்த பிராட்வே பகுதியில் சில நாடகங்களில் ராபர்ட் நடிக்க, அந்த வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

டிசம்பர் 1922. பெக்கின் வாழ்க்கையில் மற்றொரு இடி விழுந்தது. நியூ யார்க்கில் இருக்கும் பார்க் அவென்யூவுக்கு அருகில் நடந்த கார் விபத்தில் ராபர்ட் என்ட்விஸ்லே இறந்து போனார். பெக்கின் சித்தப்பா ஹெரால்டு, குழந்தைகளை தன்னுடன் அழைத்துக் கொண்டு போனார். அவர், அப்போது பிராட்வேயின் பிரபல நாடக நடிகர் வால்டர் ஹேம்டனிடம் மேனேஜராக இருந்தார். பெக்கின் வாழ்க்கையில் கலை உலகம் மெல்ல அறிமுகமானது.

Image

1925. பெக், பாஸ்டனில் இருந்த ஒரு நாடகக்குழுவில் சேர்ந்தார். ‘ஹென்றி ஜுவட்’ (Henry Jewett) என்ற அந்தக் குழு அமெரிக்க அளவில் பிரபலமாக இருந்த நேரம் அது. பெக், தீவிரமாக நடிப்புக் கற்றுக் கொண்டார். மேடையில் தோன்றினார், சின்னச் சின்ன வேடங்களில். வால்டர் ஹேம்டன், பெக்கின் திறமையைப் பார்த்து தான் நடிக்கும் ‘ஹேம்லட்’ நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். அரசருக்கு விஷத்தைக் கொண்டு வந்து தரும் கதாபாத்திரம்!

***

அமெரிக்காவில் அப்போதெல்லாம் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக நாடக நடிகர்களும் புகழ் பெற்றிருந்தார்கள். பிராட்வேயில் இருந்த சிறந்த நாடக நடிகர், நடிகைகளை ஹாலிவுட் அள்ளிக் கொண்டு போனது. அப்படி ஒரு வாய்ப்பு தனக்கு வராதா என்று காத்திருந்தார் பெக்.

நியூ யார்க்கில் அப்போது பிரபலமாக இருந்த ‘தியேட்டர் கில்ட்’ நாடக நிறுவனம் பெக்கை வேலைக்குச் சேர்த்துக் கொண்டது. அங்கே சேர்ந்த பிறகு, ‘மேன் ஃப்ரம் டொரண்டோ’ நாடகத்தில் ‘மார்த்தா’ என்ற கதாபாத்திரத்தில் முதன் முறையாக நடித்தார். 28 முறை அரங்கேறியது அந்த நாடகம். 1932 வரை, ‘தியேட்டர் கில்ட்’ தயாரித்த 10 நாடகங்களில் நடித்தார். ‘டாமி’ என்கிற நாடகம்தான் அவருக்குக் கொஞ்சம் பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. 238 முறை மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்தின் மூலம்தான் வெளி உலகுக்குக் கொஞ்சம் அறிமுகமானார் பெக். பத்திரிகைகள் அவரைப் பற்றியும் சிறு குறிப்பு வரைந்தன.

Image

‘தியேட்டர் கில்ட்’ குழுவினர் நடிகர்களை அடிக்கடி எங்கேயாவது சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள். வாரா வாரம் நடிகர்களின் கதாபாத்திரங்களை மாற்றுவார்கள். அப்பாவி, நகைச்சுவை நடிகை, குணச்சித்திர வேடம்… என்று தான் ஏற்ற எல்லா பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் பெக். நாடகங்களில் நடித்தாலும் ‘ஹாலிவுட் கனவு’ அவரை விடாமல் துரத்தியபடி இருந்தது.

1927ல் ராபர்ட் கெய்த் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு நடிகர். என்ன… மேடையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் நடித்தவர். அது தெரிந்தபோது அதிர்ந்து போனார் பெக். ராபர்ட் கெய்த்துக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகனும் இருந்தான். இதை மறைத்துவிட்டார் கெய்த். விஷயம் கேள்விப்பட்டு துடித்துப் போனார் பெக். 1929ல் கெய்த்திடம் இருந்து விவாகரத்துப் பெற்றார். முதல் மனைவி இருப்பதை மறைப்பது சட்டப்படி குற்றம். முதல் தாரம், வழக்குப் போட்டால் கெய்த் சிறைக்குப் போக வேண்டியதுதான். பெக்கின் நல்ல மனம், கெய்த்தைக் காப்பாற்றியது. தன்னிடம் இருந்த பணத்தை முதல் தாரத்துக்கு ஜீவனாம்சமாகக் கொடுத்து, வழக்கு நடக்காமல் காப்பாற்றினார்.

1932ன் முற்பகுதி. பிராட்வேயில் பெக் நடித்த நாடகம் ‘ஆலிஸ் சிட் பை தி ஃபயர்’ அரங்கேறியது. அந்த நாடகத்தை எழுதியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜே.எம்.பேரி. நாடகத்தில் நடித்த ‘லாரட் டெய்லர்’ பிராட்வேயில் புகழ்பெற்ற நடிகை. அவருடைய குடிப்பழக்கத்தால், இரண்டு முறை நாடகம் நின்று போனது. பார்வையாளர்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயம். நாடகக்குழு நிர்வாகம், மேலும் நாடகத்தை நடத்த விருப்பமில்லாமல் நடிகர்களை வீட்டுக்கு அனுப்பியது. அதற்காக பெக்குக்கும் மற்றவர்களுக்கும் தரப்பட்டது ஒரு வாரச் சம்பளம்!

***

அது அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை (Great Depression) நிலவிய காலம். நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பதே அரிதாக இருந்தது. நாடகங்கள் தொடர்ந்து நடந்தால்தானே வாய்ப்புக் கிடைக்கும்? பிராட்வேயில் அதற்கு மேலும் காலம் கழிக்க முடியாது என்று தெரிந்து போனது. பெக், லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் போக முடிவு செய்தார். பக்கத்திலேயே ஹாலிவுட். நடிக்க வாய்ப்புக் கிடைக்காமலா போகும்?

Image

1932, ஏப்ரல் மாதம் ஹாலிவுட்டுக்கு வந்தார் பெக். அங்கே பெண்களுக்காகவே இருக்கும் ‘ஹாலிவுட் ஸ்டூடியோ கிளப்’பில் அறை எடுத்துத் தங்கினார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்  கேட்டு அலைந்தார். அறை வாடகையே தாறு மாறாக இருந்தது. வேளா வேளைக்கு வயிறு பசிக்காமல் விடுகிறதா? அதற்கு வேறு தீனி போட்டாக வேண்டுமே! பெக் என்ட்விஸ்லேவுக்குத் தெரிந்த ஒரே வேலை நடிப்பு. வாடகை கொடுக்க முடியாமல்,  சித்தப்பாவின் துணையுடன் ‘பீச்வுட் கேன்யான் டிரைவ்’ என்ற ஓட்டலுக்கு இடம் பெயர்ந்தார். தொடர்ந்து சினிமா வாய்ப்புத் தேடி கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினார்.

பெக்குக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமாவில் அல்ல. நாடகத்தில். மறுபடியும் நாடகமா? அயர்ந்து போனார். ஆனால், அவருக்கு அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ‘தி மேட் ஹோப்ஸ்’ என்ற நாடகம் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் மேடை ஏறியது. பத்திரிகையில் விமர்சனங்கள் எல்லாம் நல்லவிதமாக வந்தாலும் 12 நாட்களுக்கு மேல் ஓடவில்லை. மறுபடி பிரச்னை. பணத் தேவை. பெக் இறுக மூடப்பட்ட ஹாலிவுட் கதவுகளை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்கிற உத்வேகத்தோடு மோதிப் பார்த்தார்.

பலன் கிடைத்தது. சினிமாவில் நடிக்க முதல் வாய்ப்பு! பெக்கின் கனவு நிறைவேறுவதற்கான முதல் படி. துள்ளிக் குதித்தார். தாரை தாரையாக கண்ணீர் வந்தது. அது ‘தேர்ட்டீன் வுமன்’ என்கிற மர்மப் படம். ‘ரேடியோ பிக்சர்ஸ்’ (RKO) என்ற தயாரிப்பு நிறுவனம், பெக்கை அந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது. மிகச் சிறிய கதாபாத்திரம்தான். ஆனால், உற்சாகமாக நடித்தார். அந்தப் படம் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பினார். இனிமேல் தடையே இல்லாமல் மளமளவென்று வெற்றிப் படிகளில் ஏறிவிடலாம் என்றுமனக் கோட்டை கட்டினார். அது அவ்வளவு சீக்கிரம் உடைந்து விழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே பெட்டிக்குள் முடங்கியது.

Image

படத்துக்கான அடிப்படை வேலைகள் முடிந்தன. திரையுலக வழக்கப்படி ‘தேர்ட்டீன் வுமன்’ சிறப்புக் காட்சி முக்கியமானவர்களுக்காக திரையிடப்பட்டது. அதைப் பார்த்தவர்கள் சொன்ன விமர்சனம் தயாரிப்பாளர்களை முகம் சுளிக்க வைத்தது. ‘என்னாங்க… இப்பிடி எடுத்திருக்கீங்க?’ என்ற கேள்வியால் தயாரிப்பாளர்கள் திணறிப் போனார்கள். திரைப்படத்தை திரும்ப எடிட் செய்தார்கள், இசைக் கோர்ப்பை லேசாக மாற்றினார்கள். ஆனால் திருப்தியாக இல்லை. ‘தேர்ட்டீன் வுமன்’ திரைப்படம் ரிலீஸாவது தள்ளிப் போனது. நொறுங்கிப் போனார் பெக். எத்தனை வருடப் போராட்டத்துக்குப் பின் வந்த முதல் வாய்ப்பு! இனிமேல் அவ்வளவுதானா? எல்லாம் முடிந்துவிட்டதா?!

1932, செப்டம்பர் 16. இரவு சாப்பாடு முடிந்தது. பெக், தன் சித்தப்பாவிடம், ‘‘அப்பிடியே பீச்வுட் பக்கம் ஒரு வாக் போயிட்டு, அங்கே இருக்குற மருந்துக் கடையில என் ஃபிரெண்ட்ஸையும் பார்த்துட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். பாதி தூரம் போனதும் அவர் பாதை மாறியது. ‘HOLLYWOOD’ எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும் மவுன்ட் லீ மலையில் ஏற ஆரம்பித்தார். அந்த எழுத்துகளுக்கு அருகே வந்து நின்றார். ஒவ்வொன்றும் 45 அடி உயரம், 30 அடி அகலம் கொண்டவை. தன் மேல் கோட்டை அழகாக மடித்து கீழே வைத்தார். பக்கத்தில் தன் பர்ஸையும் வைத்தார். அந்த போர்டை பராமரிக்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஏணியில் ஏறி ‘H’ என்ற எழுத்தின் உச்சிக்குப் போனார். காற்று சில்லென்று அடித்தது. அதிலிருந்து தரையைப் பார்த்தார். குதித்தார். தற்கொலை செய்து கொண்ட போது அவருக்கு வயது 24.

இது நடந்து இரண்டு நாள் கழித்து, ஹாலிவுட் லேண்டில்  பெண்ணின் பிணம் ஒன்று கிடப்பதாக ஒரு பெண்மணி போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸ் வந்தது. பெக் விட்டுப் போன கோட்டும் பர்ஸும் கிடைத்தன. நேர்த்தியாக உடை அணிந்த, நீலக் கண்களை உடைய, அழகான கூந்தலுடன் கூடிய பெக்கின் பிணம் கிடைத்தது. பெக்கின் சித்தப்பா கதறியபடி அடையாளம் காட்டினார். பிரேத பரிசோதனையில் இடுப்பெலும்பு முற்றிலுமாக நொறுங்கிப் போய் பெக் மரணமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Image

பெக், இறப்பதற்கு முன்பு தன் பர்ஸில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அதை அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகள் பிரசுரம் செய்தன. ‘ஒரு கோழையாக இருப்பதை நினைத்து நான் பயப்படுகிறேன். எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதை நான் வெகு காலத்துக்கு முன்பே செய்திருந்தால், நிறைய வலிகள் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம்’.

நிறைய படங்களில் நடிக்கவில்லை, பெரும் புகழும் பணமும் சம்பாதிக்கவில்லை. ஒரே ஒரு படம்தான். ஆனால், இன்றும் ஹாலிவுட்டில் மறக்க முடியாத ஒரு பெயராக இருப்பது ‘பெக் என்ட்விஸ்லே’. எவ்வளவோ போராடிப் பார்த்தவர் இன்னும் சில காலம் காத்திருந்திருக்கலாம் என்பதுதான் காலம் அவருக்கு சொன்ன தீர்ப்பு.

அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து, ‘தி பீவர்லி ஹில்ஸ் ப்ளேஹவுஸ்’ நிறுவனத்திடம் இருந்து பெக்கின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை சித்தப்பா ஹெரால்ட் வாங்கிப் பிரித்தார்.

‘மிஸ் பெக் என்ட்விஸ்லே அறிவது. நாங்கள் அடுத்து ஒரு திரைப்படம் தயாரிக்க இருக்கிறோம். அதில் நடிப்பதற்கு உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். கதா பாத்திரம் என்னவென்றால், மன உளைச்சலால் ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்…’

இதை என்னவென்று சொல்வது? விதியா? எப்படி இருந்தாலும் பெக் இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்திருக்கலாம்.

– பாலு சத்யா  

Peg Entwistle

Born – Millicent Lilian Entwistle, 5 February 1908, Port TalbotWales

Died – 16 September 1932 (aged 24), HollywoodCalifornia, U.S.

Cause of death – Suicide

Resting place – Oak Hill Cemetery

Nationality – English

Occupation – Actress

Years active – 1925–1932

Spouse(s) – Robert Keith (m. 1927–1929)