வாசிக்க… யோசிக்க…
21ம் நூற்றாண்டு?
மேற்கு வங்கத்திலுள்ள பிர்பும் மாவட்டம் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கிருக்கும் காப் கிராமத்தில் 20 வயது இளம் பெண்ணுக்கு நடந்திருக்கும் கொடூரம் உலகையே உலுக்கி எடுத்திருக்கிறது. அந்தப் பெண் செய்த மாபெரும் தவறு(!) காதலித்ததே. அதுவும் வேறு சாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனை. இருவரையும் ஒருசேர பார்த்த சிலர் ஊர் மத்தியில் கட்டிப் போட்டார்கள். விசாரித்தார்கள். பெண்ணின் குடும்பத்தினருக்கு அபராதம் விதித்தார்கள்… 25 ஆயிரம் ரூபாய்! ‘அவ்வளவு பணம் எங்க கிட்ட இல்லை சாமி’ என்று கதறி அழுதிருக்கிறார்கள் குடும்பத்தினர். ‘அப்படியா? அவளை அந்தக் குடிசைக்கு தூக்கிட்டுப் போங்கடா!’ என்று கட்டளையிட்டிருக்கிறது பஞ்சாயத்து. ‘யார் வேண்டுமானாலும் அவளுடன் வல்லுறவு கொள்ளலாம்’ என்றும் பஞ்சாயத்துத் தலைவரால் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்கள் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள். விடிய விடிய நடந்தது இந்தக் கொடுமை. இறுதியில், ‘வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்’ என எச்சரிக்கப்பட்டு, விரட்டப்பட்டார் அந்தப் பெண். எப்படியோ தப்பித்து அவர்கள் காவல்துறையில் புகார் செய்ய, 13 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மருத்துவமனையில் கண்ணீர் மல்க சில வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்… ‘‘அவர்களில் சிலருக்கு என் தந்தையின் வயது…’’
சட்டம்… உயிர்… குழந்தை!
அந்தப் பெண்ணின் பெயர் மார்லைஸ் முனோஸ். அமெரிக்காவைச் சேர்ந்தவர். 33 வயது. 2013 நவம்பரில் மூளையில் ரத்தம் உறைந்து போனதன் காரணமாக கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். மூளை செயல்பாடு முற்றிலும் இல்லாமல் போனது. இச்சூழலில் நோயாளி இறந்துவிட்டதாகவே கருதப்படுவார். அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவரின் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவும் மாட்டார்கள். டெக்சாஸ் ஜான் பீட்டர் ஸ்மித் மருத்துவமனை முனோஸுக்கோ தொடர்ந்து சிகிச்சை அளித்தது. காரணம், 14 வார கருவை சுமந்து கொண்டிருந்தார் முனோஸ். கருவைக் காப்பாற்றுவதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. முனோஸின் கணவர் எரிக், ‘சிகிச்சை தேவையில்லை… எங்கள் குடும்பத்தினர் யாரும் இதை விரும்பவில்லை’ என்றார். மருத்துவமனையோ ஒப்புக்கொள்ளவில்லை. வழக்குத் தொடர்ந்தார் எரிக். டெக்சாஸ் நீதிமன்றம் முனோஸுக்கு வழங்கப்படும் சிகிச்சையை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஜெர்மன் டாக்டர்கள் ஒரு படி மேலே போய், பழைய கேஸ் ஃபைல்களை புரட்டிப் போட்டிருக்கிறார்கள். இது போல 30 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், அதில் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் வரை உயிரோடு இருந்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
சூப்பர் 50!
‘நடுத்தர வயதைக் கடந்த பெண்மணிகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார்கள்’ என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களாம். அதற்கு உதாரணங்களும் பட்டியல் இடப்பட்டிருக்கிறது. லிஸ் டிமார்க்கோ வீன்மேன், நியூ யார்க்கை சேர்ந்தவர். 2001 செப்டம்பர் 11 அன்று, இரு விமானங்கள் வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதிய சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர். 2007ல், தன் 55வது வயதில் சுயதொழில் தொடங்க முடிவெடுத்தார், பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து கற்றுக் கொண்டார். இன்றைக்கு லிஸ் வெற்றிகரமான தொழில்முனைவோர். அமெரிக்காவில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களில் 55-64 வயதுக்குட்பட்டவர்கள் 23.4 சதவிகிதமாம். அவர்களிலும் பெண்களே அதிகமாம்… அப்படிப் போடுங்க!
கொஞ்சம் ‘கவனிங்க’ பாஸ்!
அமெரிக்கா, யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று நம் தலைநகர் டெல்லிக்கு முதல் இடம் கொடுத்திருக்கிறது. ஆனால், அது பெருமைப்படும்படியான செய்தி அல்ல! ‘உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசு நிலவும் நகரம் டெல்லி’ என்கிறது அந்த ஆய்வு. சீனாவின் பீஜிங் நகரத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கே நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை அரசு நிறுவனங்கள் கண்டு கொள்வதே இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது.
பசுமைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 178 நாடுகளில் இந்தியா இருப்பது 155வது இடத்தில். டெல்லியின் காற்று மாசு, பீஜிங்கை விட இருமடங்கு அதிகம். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு காற்று மாசு 44 சதவிகிதம் அதிகமாம். இப்படி அதிகமாவதற்குக் காரணம், வாகனங்களும் தொழிற்சாலைகளும் வெளியேற்றும் புகை. இந்த லட்சணத்தில், டெல்லி சாலைகளில் பவனி வரும் வாகனங்களோடு ஒவ்வொரு நாளும் 1,400 வாகனங்கள் புதிதாகச் சேருகின்றன. சுற்றுப்புறச் சூழல் தூய்மை சீர்கெடுவது என்பது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். டெல்லியில், 5க்கு 2 பேர் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகிறார்களாம்.
மலாலாவின் மனம்!
‘நான் மலாலா’. பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதிய புத்தகம். கடந்த 28ம் தேதி, பெஷாவர் பல்கலைக்கழகத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. என்ன காரணமோ, ‘எங்களால் போதுமான பாதுகாப்புக் கொடுக்க முடியாது’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இரண்டு அமைச்சர்கள் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். காவல்துறை தொடங்கி பல அரசு அதிகாரிகள் வரை நூல் வெளியீட்டை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி நிகழ்ச்சி நடத்த முயன்றபோதுதான் காவல்துறை, பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்று கை விரித்திருக்கிறது. தலிபான்கள், புத்தக வெளியீடு நடக்கும் பகுதியில் இருக்கும் கடைக்காரர்களிடம் மலாலாவின் புத்தகத்தை வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்களாம். ‘நான் மலாலா’ புத்தக வெளியீடு நிறுத்தப்பட்டது பாகிஸ்தானில் சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சையும் விமர்சனமும் கிளம்பியுள்ளன.
கண் என்ப வாழும் உயிர்க்கு!
‘உலகில் உள்ள அத்தனை சிறார்களும் ஆரம்பக் கல்வி பெற வேண்டுமா? 70 வருசம் பொறுங்கப்பா!’ என்று ஒரு போடு போட்டிருக்கிறது யுனெஸ்கோ… ஐ.நா.வின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பு. ‘உலக அளவில் 5 கோடியே 70 லட்சம் சிறார்கள் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பே இல்லாமல் இருக்கிறார்கள்’ என்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை. ‘ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசிப்பு, கணக்குப் போடுதல் திறன் இல்லை. உலகில், மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் இருக்கும் ஆசிரியர்களில், கால் பங்குக்கும் மேலானவர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. பாகிஸ்தானில், மூன்றில் ஒரு குழந்தைக்குத்தான் எழுத்துக்கூட்டிப் படிக்கவும், அடிப்படைக் கணக்குகளைப் போடவும் தெரிந்திருக்கிறது. இந்தியா, வியட்நாம், எத்தியோப்பியா, தான்சேனியா போன்ற நாடுகளில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சஹாராவுக்கு தெற்கே உள்ள நாடுகளும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும்தான் குழந்தைக் கல்வியில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன. வறிய நாடுகளில் கால்வாசிக் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதே இல்லை’ என்று பல புள்ளிவிவரங்களை தெளித்திருக்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை.
தொகுப்பு: பாலு சத்யா