சேமிப்பும் செல்லங்களும்!
முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன் என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவு சேமிப்பை
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்
என் செல்லத் தோழியே!
இனிமையான இல்லறத் தலைவியின் பண்பாக அறியப்படும்
‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசார்ந்த
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’
என்ற வள்ளுவனின் வரியை இன்றைய கால சூழலில் இவ்வாறுதான் கையாள வேண்டும் ,
தனது சொத்துகளையும் பாதுகாத்து தனது கணவனின் சொத்துகளையும் வளர்த்து , குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்கு வேண்டிய பாதுகாப்பை சோர்வில்லாமல் செயல் செய்பவளே நல்ல குடும்ப தலைவி.
”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று பள்ளியில் படிக்கிற காலத்தில் ,மண்டையில் இடித்து, இடித்து சொல்லிக் கொடுத்துவிட்டு, படிப்பு முடிந்தபிறகு “ கடன் வாங்காத குடும்பம் கரையிலேயே நிற்கிற கப்பல்” என்று வாழ்க்கைக்கு தலைகீழ் பாடம் நடத்துவது யாருடைய தவறு? வரவுக்குள்ளாக செலவு செய்கிறபொழுது வாழ்க்கை கடினமாக இருக்குமே தவிர , கஷ்டமா மாறாது ; வரவை மீறி , கடன் வாங்கியாவது செலவு செய்வது , வழக்கத்தில் நமக்கு கஷ்டம் மட்டுமல்ல… பெரும்பாலும் நஷ்டமே ..
இதை தடுக்க தவிர்க்க நமக்கு ஒரே வழி சேமிப்புதான்.
சேமிப்பை முதலில் நம்ம குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் தான்!
‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட நம்ம குழந்தைகளின் சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் நம்ம குழந்தைகளின் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை நமது செல்லங்களுக்கு உணர்த்தும்…
நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். நாம் உண்ணும் உணவு ஒரே பருக்கையால் ஆனது அல்ல. எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்றுதான் சேமிப்பும். சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு உதவுகிறது. கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.
ஏனெனில், நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது. நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.
சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரிந்தால் அவர்களது பொருளாதார அறிவு வளரும். மாறும் சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராவார்கள். இரண்டாவது, பல நேரங்களில் பயனற்ற செலவுகளை கண்டறிந்து நீக்க இது உதவும்.
‘சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன‘ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது.
இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு விளக்குகின்றார். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” (குறள் 247). அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது.
பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே, இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார். “செய்க பொருளை” என்று (குறள் 759).
செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம்.
(1) கஞ்சத்தனம்
(2) சிக்கனம்
(3) ஆடம்பரம்
(4) ஊதாரித்தனம்.
கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.
சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழையின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.
ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கிறோம்.
ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி, கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.ஒருமுறை அமெரிக்க ஃபோர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு, மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில், ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார், ‘சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன், முதல் தர அறையை எடுத்திருக்கிறார், தாங்கள் ஏன்?‘’
உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இதுதான். “”அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!
”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாக அவற்றை இழந்துவிட நேரும்.
உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்…
Neither a borrower nor a lender be;
For loan oft loses both itself and friend,
And borrowing dulls the edge of husbandry.
கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில், பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அதோடு வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்.
தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன..
எதிர்கால செலவுகளை திட்டமிடுவது சேமிப்பைத் தூண்டும் மற்றொரு வழி. உங்களது எதிர்கால செலவுகள் என்ன என்பதை எழுதிப் பாருங்கள். குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்! உங்கள் வருவா யைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்.
மீண்டும் யோசித்துப் பார்த்தால், சேமிப்பு என்பதே வருவாயைக் கூட்டும் இன்னொரு வழிதானே. சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்யும்போது அதுவே உங்களுக்கு கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும்…
பல நேரங்களில் எது அவசியமான செலவு என்பதில் குழப்பம் இருக்கும். புலன்களின் பேச்சைக் கேட்காமல், கற்பனையான சமுதாய நிலையைப் பார்க்காமல், அறிவு சொல்லும் தீர்ப்பே இதில் சரியாக இருக்கும்…
சேமிப்பு என்பது இப்போதைய காலத்தில் பணம் தவிர … மழை நீர், குடிநீர், மின்சாரம் , எரிசக்தி , என எல்லாவற்றிலும் அவசியம் ஆகி விட்டது.
சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பது நிதர்சனம்!
முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன் என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவு சேமிப்பை
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்
என் செல்லத் தோழியே!
- ப்ரியா கங்காதரன்