ஸ்டார் தோழி – 11

ஒரு தோழி பல முகம்

vanitha 2

வனிதா காஷ்யப்

தொழில் முனைவர் / புகைப்படக் கலைஞர்

நான் ஒரு மனுஷியாக… தோழியாக… எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற உந்துதல் எப்போதும் உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கிடைத்த அனுபவம் கொண்டு, கணவர் உதவியுடன்,  நண்பர்களுடன் சேர்ந்து சொந்த நிறுவனம் நடத்துகிறேன். புதிதாக தொடங்கி இருக்கும் தொழிலை அடுத்த படிக்கு உயர்த்துவதே நோக்கமாக இருப்பினும், புகைப்படக்கலையையும் வாழ்க்கையுடன் இணைபிரியாமல் தொடர வேண்டும் என்பது முக்கிய குறிக்கோள். நட்பு வட்டம் சிறியதே… அவர்களுடனான உறவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்துகிறேன்.

பள்ளியும் ஆசிரியர்களும்

பெங்களூரு ‘காவேரி ஆஷ்ரமா’ பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை… அம்மா இறந்து போன துக்கம் தெரியாமல் பார்த்துக் கொண்டனர் ஆசிரியர்கள்.  அம்மா இருந்திருந்தால் என்னென்ன நற்குணங்களை கற்றுக்கொண்டிருந்திருப்பேனோ அதையெல்லாம் ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக்கொண்டேன்.  ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் இல்லாமல் கல்வி போதித்த ‘காவேரி ஆஷ்ரமா’ எனக்குள்ளும் ஏழைகளுக்கு உதவும் எண்ணங்களை விதைத்தது.

ஊரும் பேறும்

banglore

பிறந்ததுவளர்ந்தது அனைத்தும் பெங்களூரு என்பதால், அதிக சிரமம்  இல்லாமல் பூக்களைப் படம் எடுக்கும் வாய்ப்பு தானாகவே அமைந்தது.  நாளடைவில் அதுவே புகைப்படக்கலையின் மேல் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. கர்நாடகாவுக்கே உரியதான பாணியில் தயாரிக்கும் ‘பிசிபேலேபாத்’தின் ரசிகை. வெவ்வேறு மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் ஊர். ஆதலினால், அவர்களுடன் நெருக்கமாகப் பழகிடவும், அவர்களின் கலாசாரத்தினை அறிந்து கொள்ளவும் சாத்தியப்படுகிறதுஇதுவே தமிழ் மேலும் ஆர்வத்தினை அதிகப்படுத்தியது.

பிடித்த புத்தகங்கள்

பெங்களூரில் படித்ததால் ‘கன்னடம்’ இரண்டாவது தாய் மொழியாகிவிட்டது. ஆகவே, விரும்பிப் படிக்கும் புத்தகங்களில் கன்னடத்துக்கும் இடம் உண்டு. பொதுவாகவே நல்ல கதைகளைக் கொண்ட புத்தகங்களே என்னுடைய முதல் விருப்பம்.  குறிப்பாக ‘தாரா பேந்த்ரே’ எழுதிய புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

குடும்பம்  

அம்மா இல்லாமல் வளர்ந்த எனக்கு, தாய்ப்பாசம் என்னவென்றே தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் திருமணத்துக்கு முன்பு வரை இருந்தது.  ஆனால், அம்மாவிடம் கிடைக்காத அன்பு மாமியாரின் மூலமாக கிடைத்திருக்கிறது. கணவரும் என் செயல்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். வேறென்ன வேண்டும்..? இன்னும் பாசத்தைப் பொழிய அக்காவும் தம்பியும்… வாழ்க்கை மகிழ்ச்சியாக விரைகிறது.

பொழுதுபோக்கு

photography

பொழுதுபோக்காக தொடங்கிய புகைப்படக்கலை இன்று வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட தேவையின் காரணமாக பயணங்களின் மேல் ஆர்வம் அதிகமாகி உள்ளது. பிறகு எல்லோரையும் கவரும் இசை என்னையும் கவரத் தவறவில்லை.

தண்ணீர் சிக்கனம், பிளாஸ்டிக் பயன்பாடு 

பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு சற்று குறைவே! ஆனாலும்,  ஒரு பொறுப்புள்ள நபராக தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்கவும் சேமிக்கவும் முயற்சிக்கிறேன். பிளாஸ்டிக்கால் விளையும் ஆபத்தை அறிந்திருப்பதால், பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் போது துணிப் பைகளை எடுத்து செல்வதை தவறாமல் கடைப்பிடிக்கிறேன்.

சமூகம்

சமீபத்தில் ‘டான்டேலி’யில் உள்ள மின் உற்பத்தி நிலையத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நம் பயன்பாட்டுக்கு உண்டான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மக்கள் எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.  அதனால் மின்சாரத்தை எவ்வளவு சிக்கனமாக உபயோகிக்க முடியுமோ அவ்வளவு குறைவாக உபயோகிக்கிறேன்.  மற்றவர்களுக்கும் அதை கடைப்பிடிக்கக்  கேட்டுக் கொள்கிறேன்.

நேர நிர்வாகம்

time management

அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் சரி பாதியாக நேரத்தை ஒதுக்கி விடுகிறேன் என்று சொன்னால் முழுப் பொய்… ஸாரி… பாதி பொய்யாகி விடும். வீட்டு வேலைகள் முழுவதையும் வார நாட்களில் அம்மாவே (மாமியார்) கவனித்துக் கொள்வதால், அலுவலக வேலையில் முழு கவனமும் செலுத்த முடிகிறது. விடுமுறை நாட்களில் அம்மாவுக்கு உதவுவதுண்டு.

சமையல்

cooking

மற்றவர்கள் முகம் சுளிக்காமல் சாப்பிடும் அளவுக்கு சமைக்கத் தெரியும்.  அதிகமான அயிட்டங்கள் செய்யத் தெரியா விட்டாலும், தெரிந்ததை நேர்த்தியாக சமைக்கத் தெரியும்.

பிடித்தது

போட்டோகிராபி…போட்டோகிராபி… போட்டோகிராபி… அவ்வளவு பிடிக்கும்! ஒருமுறை பூங்காவுக்குச் சென்றிருந்த போது, 1,200 ஷாட்ஸ் ஒரு மணி நேரத்துக்குள் எடுத்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டிப் பார்த்தால் கிட்டத்தட்ட அனலாக் ஃபிலிம் ரோல் 33ஐ 1 மணி நேரத்துக்குள் காலி பண்ணியிருக்கிறேன்… டிஜிட்டல் கேமரா கண்டுபிடித்தவருக்கு கோடி நன்றி!

வீடு-அலுவலகம்… சமாளிக்கும் கலை!

ட்ராவல் அண்ட் டூரிஸம் தொழிலில் திட்டமிடுதலும் நேர மேலாண்மையும் மிக முக்கியமான அம்சங்கள். போதிய அனுபவம் இருப்பதால் அலுவலக வேலைகளை சிரமம் இல்லாமல் கையாள முடிகிறது. நான், கணவர், அம்மா, பாட்டி என்கிற சிறு குடும்பம்.  அம்மாவே அனைத்தையும் கவனித்துக் கொள்வதால் எந்த சிரமும் இல்லை.

சினிமா

குடும்பக் கதைகளை சித்தரிக்கும் படங்கள் மிகவும் பிடிக்கும்.

பிடித்த பெண்கள்

குடும்பத்தில்…

மாமியார்… அல்ல அம்மா! எல்லா விஷயத்திலும் அவரே துணை!

வெளியில்…

photo jackie

பூக்களைப் படம் எடுக்க எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்  அதே துறையில் ஆர்வம் உள்ள இங்கிலாந்தை சேர்ந்த ஜாக்கி பார்க்கர் படங்களை மிகவும் ரசிப்பேன். ஃபிளிக்கர் தோழி சுபாவின் புகைப்படங்களும் என்னை மிகவும் கவர்ந்தவை. வீட்டுக்குள் கிடைக்கும் பொருட்களை சூரிய ஒளியின் உதவியுடன் அவர் எடுக்கும் படங்களைப் போலவே நானும் படமெடுக்க முயற்சிகள் மேற்கொள்ள ஆசை.

ஃபேஸ்புக்

நிறைய நண்பர்களைப் பெற்றுத் தந்தது. வெகு வருடங்கள் தொடர்பில்லாமல் போன சொந்தங்களைக் காண உதவியது. புகைப்படக்கலையில் பல விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து கற்றுத் தந்தது.

அழகென்பது…

உள்ளமும் பண்பும் சார்ந்தது. புற அழகு நிரந்தரமானது அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.

வாழ்க்கை

Life is too short to wake up the regrets.

Love the people who treat you right. Forget the ones who don’t.

Believe that everything happens for a reason.

If you get a chance take it ! If it changes your life let it !

Nobody said life would be easy. They just promised it would be worth it.

(இணையத்தில் படித்தது)

புகைப்படக்கலை

வரலாற்றாசிரியர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல புகைப்படக்கலைஞர்கள். எழுத்தில் அவர்கள் பதிந்து வைப்பதைக் காட்சியாகப் பதிகிறோம் நாங்கள்.  திருமணத்துக்கு குடும்ப நண்பர் ஒருவர் பரிசளித்த கேமராவே ஒளிப்படக்கலையில் ஆர்வம் ஏற்படத் தூண்டுதலாக இருந்தது. அதன் பிறகு நான் கேமராவைத் தொடாமலிருந்த நாளே கிடையாது.  போட்டோகிராபி மட்டுமே என் ஒரே பொழுதுபோக்கென அமைத்துக் கொண்டதில் அது இப்போது என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆகி விட்டது.  இனி அது இல்லாத வாழ்வை நினைத்தும் பார்க்க முடியாது. என் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. சோர்வடையும் தருணங்களில் உற்சாகம் தருகிறது. அதே நேரம் வேகமாக இயங்கும் உலகில் சற்றே என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் போட்டோகிராபிதான் உதவுகிறது. என் தீவிரமான ஈடுபாட்டைப் பார்த்த கணவர், DSLR வாங்கிக் கொடுத்ததுடன் மற்ற நண்பர்களுடன் போட்டோ வாக், போட்டோ டூர் சென்று வரவும் ஊக்கம் தருகிறார். ஃப்ளிக்கர் தளமும், அதன் மூலமாகக் கிடைத்த நண்பர்களின் ஆலோசனைகளும் என் திறனை வளர்க்கவும் செதுக்கவும் உதவி வருகின்றன. பூக்கள், போர்ட்ரெயிட், லேண்ட்ஸ்கேப் ஆகியவற்றைப் படமாக்குவதில் விருப்பம் அதிகம். என்றாலும் என் ஆர்வத்துக்கு வானமே எல்லை.

vanitha 1

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

Image courtesy:

http://themediaray.com

http://www.officetime.net

http://www.popsugar.com

http://www.photobotos.com