ஆமாஞ்… சொல்லிப்புட்டேன்!

Image 

பொண்ணாப் பொறந்ததுக்குப் 

     புழுவாப் பொறந்தாலும் 

மண்ணில் பொரண்டுடலாம் 

     மறைவாக் கெடந்திடலாம் 

 

சிறுஜன்னல் கம்பியெல்லாம் 

     சிறைக்கம்பி ஆனதென்ன?

ஒருமின்னல் இடியாகி 

     உடம்புக்குள் விழுந்ததென்ன?

 

அடியேன்னு கூப்புடுற  

     ஆம்பிளைக்குச் சேவைசெய்ய 

புடவை கட்டிவிட்ட 

     பொம்மையாய்ப்  பொறந்ததென்ன ?

 

கொழந்தை பெக்கும் மெசினாகக் 

     குல விருத்தி செய்தவளை 

அழுந்தி மிதிக்குறாங்க 

     அவ உசுர எடுக்குறாங்க 

 

சாணியால மெழுகி வச்சி 

     சம்பரமா கோலம்போட்டு 

நாணிக் கோணி நின்னுப்புட்ட 

     நாளெல்லாம் போயாச்சு 

 

எந்திரமா ஒழைச்சாலும் 

     எஞ்சியதைத்  தின்னுப்புட்டு 

தந்திரமா ஏமாந்த 

     தரித்திரமே முடிஞ்சிடுச்சு 

 

வானத்தில் பறக்குறமே 

     வரலாறா இருக்குறமே 

வானந்தாண்டி ஞானத்தின் 

     வாசலையே திறக்குறமே 

 

விஸ்வரூபப் பெண்வடிவம் 

     விபச்சார வாணிபமா?

பஸ்சுக்குள் துகிலுரிய 

     பாஞ்சாலி ஆகணுமா?

 

கற்பை வச்சி சூதாடும் 

     களியாட்டம் நிக்காதா?

உறுப்பை சிதைப்பவர்கள் 

     உரு சிதைஞ்சி போகாதா?

 

மொத்த மேனியையும் 

     முழுங்கிப்புட்ட பொய்சிவனே 

அர்த்தநாரி என்னும் 

     அலங்காரச் சொல் எதற்கு?

 

ஆண்டாண்டா செய்ஞ்சி வந்த 

     அநியாயம் பலிக்காது 

பெண்டுகளே  இனிஇந்தப் 

     பிரபஞ்ச வரலாறு 

– வெள்ளச்சி 

(2012 டிசம்பர் 16 ஆம் நாள் இரவில் புது தில்லியின் தென்பகுதி முனிர்கா அருகில் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் உயிர் சூறையாடப்பட்ட ஒரு பெண்ணின் நினைவாக…)

 Image Courtesy: http://www.actionaid.org.uk