பெண் எழுத்தும் தடைக்கற்களும்!

istock_girl_writing_in_journal

புத்தக விமர்சனக் கூட்டம் ஒன்றில் ஒரு பெண் எழுத்தாளர் இன்னொரு பெண் எழுத்தாளரைப் பார்த்து, “நமக்கெல்லாம் டேக் கட்டிட்டாங்கப்பா. அதை நீயோ நானோ நினைச்சாலும் கழட்ட முடியாது” என்றார் ஆதங்கத்துடன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

தன்னை விட 25 வயது குறைந்த வாசகனை சந்தித்து தன் புத்தகம் குறித்து பேச, தான் லெட்டர் போஸ்ட் செய்யும் அஞ்சலகத்திற்கு வரச்சொல்லி ஒரு 5 நிமிடம் பேசிவிட்டு “இனிமே இப்படி எல்லாம் வராதீங்க” என்று சொல்லி அனுப்பினாராம் ஒரு மூத்த பெண் எழுத்தாளர்.

தன் கணவர் “இனிமே எழுதுவியா? எழுதுவியா?” என்று நள்ளிரவில் தன் விரலை நசுக்கினதை தன் நட்பிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் ஒரு பெண் எழுத்தாளர்.

இப்படி எத்தனை எத்தனை நங்கூரங்கள் பேனா என்னும் ஆயுதத்தை தூக்கும் பெண்ணுக்கு. அந்த வலியை, பெண்ணாக நின்று பார்த்தால்தான் உணர முடியும்.

‘முகவரி’ படத்தில் ஒரு வசனம் வரும். “நான் ஜெயித்த பிறகு நான் திரும்பி பார்க்க எனக்கொரு குடும்பம் வேண்டும்” என்று அந்த கதாநாயகன் சொல்லுவார். ஆனால், பல பெண் எழுத்தாளர்கள் தங்கள் குடும்பத்தைத் தொலைத்த பிறகே ஜெயிக்க முடிகிறது. அல்லது ஜெயித்தால் தன் குடும்பத்தைத் தொலைக்க வேண்டி இருக்கிறது.

காக்கைப் பாடினியார் தொடங்கி எத்தனை எத்தனையோ பெண் எழுத்தாளர்களை கண்டிருக்கிறது இந்த சமூகம். அது போல் ஆண் எழுத்தாளர்களையும். ஆனால், ஓர் ஆண் எழுத்தாளருக்கு கிடைக்கும் சுதந்திரம் பெண் எழுத்தாளருக்குக் கிட்டுவதே இல்லை… அங்கீகாரமும். அட அங்கீகாரம் கிடைக்காமல் போனால் போகிறது. உதாசீனப்படுத்துவது, தவறாகப் பேசுவது போன்ற வலிகளையாவது கொடுக்காமல் இருங்களேன்.

ஆண் எழுத்தாளர்களிடம் குறையே இருப்பது இல்லையா என்ன? ஆனால், எந்த ஓர் ஆண் எழுத்தாளரையும் பார்த்து “ஐயோ அந்த ஆள் பெண் பித்தர்ப்பா” என்று இந்தச் சமூகம் ஒதுங்கி கொள்வது இல்லையே. பெண்களை பொறுத்தவரை மட்டும் எழுத்து என்று வந்துவிட்டால் போதும்… நேரில் கைகுலுக்கிவிட்டு பின்னால் போய் இல்லாத ஒன்றை இட்டுகட்டி பேசுவதே வழக்கமாகிவிடுகிறது.

இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் பெரிய பின்புலம் தேவைப்படுகிறது. நல்ல குடும்பப் பின்னணி, அரசியல் பலம், உறுதுணையாக இருக்கும் கணவர் அல்லது நாசுக்கு இப்படி ஏதோ ஒன்று அவசியமாகிவிடுகிறது.

பெண் எழுத்தாளரின் சொந்த, தனிப்பட்ட வாழ்வை புறந்தள்ளிவிட்டு அவரின் படைப்பை மட்டும் பார்க்கும் ஆட்கள் வெகு சிலரே! அப்படி பெண் எழுத்தாளர்களின் வாழ்வை தோண்டித் துருவ காரணம் என்னவாயிருக்கக்கூடும்? எதுவாக வேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும். ஆனால், இலக்கியத்துக்காக, இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் பலப்பல சுமைகளைத் தூக்கிக்கொண்டு திரியும் பெண் எழுத்தாளர்கள் எத்தனை பேர்!

வேலை முடிந்து சோர்ந்த முகத்துடனும் கலைந்த தலையுடனும் ஆனால் ஆர்வ மிகுதியில் ஜொலிக்கும் கண்களுடனும் இலக்கியக் கூட்டத்துக்கு வரும் பெண்கள்… மறுநாள் அரசுத் தேர்வை வைத்துக்கொண்டு கருத்தரங்கில் கலந்து கொள்ள வரும் பெண்கள்… குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வந்து கவியரங்கத்தில் கலந்து கொள்ளும் பெண்கள்… ‘நான் கொஞ்சம் சீக்கிரம் போகணும். அதனால் நான் முதல்ல பேசிடுறேனே’ என்று ஆய்வரங்கில் பேச வாய்ப்புக் கேட்கும் பெண்கள்… என பலப்பல முகங்கள். எல்லாருக்கும் ஒரே குறிக்கோள் அது எழுத்து… எழுத்தின் மீது கொண்ட காதல்.

இலக்கியக் கூட்டம் பத்து மணிக்குத்தான் முடியும் என்றால் தன்னை மறந்து அமர்ந்திருக்கும் ஆண்களைப் போல் பெண்களால் நிம்மதியாக உட்கார முடியாது. ‘குழந்தைகள் சாப்பிடும் நேரமாகிவிட்டதே!’ ‘பிள்ளைகள் தனியாக இருப்பார்களே!’, ‘நேரமாகிவிட்டதே கணவர் திட்டுவாரோ!’, ‘தாமதமாகப் போனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்களோ!’ என்றெல்லாம் எத்தனையோ கவலைகள்.

ஓர் இலக்கிய முகாமில், பிள்ளைகளைக் கூட்டி வந்து அவர்களின் நச்சரிப்பினூடே அந்தப் பேச்சை கவனிக்க ஒரு பெண் எழுத்தாளர் பட்டபாடு இன்னமும் என் கண்முன் நிற்கிறது.

ஒரு பிரபல பெண் எழுத்தாளர் பெரும்பாலான மீட்டிங்கில் பாதியிலேயே பேக்கை தூக்கிக்கொண்டு கிளிம்பிவிடுவார். நல்லபடியாக ஊர் போய்ச் சேர வேண்டுமே!

இது மட்டுமல்ல… தன் எழுத்து ஆசையை கணவரின் வேலை, குடும்பம் போன்றவற்றுக்காக தியாகம் செய்துவிட்டு காலதாமதாக வந்து இந்தக் களத்தில் ஜெயிக்க முடியாமல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண்கள் பலருண்டு.

யாரும் அறியாமல் டைரிகளில் மட்டும் தன் எழுத்தை நிரப்பி, கண்ணுக்குள் பொத்தி வைத்த கனவுகளோடு உள்ளுக்குள்ளேயே வெம்பிப்போன சில பெண்கள் போன தலைமுறைகளில் நிறையவே இருக்கிறார்கள்.

ஆணுக்கு பல இடங்களுக்கு செல்ல, பலரோடு பேச, படித்ததை பகிர்ந்து கொள்ள, படிக்க வேண்டியதைக் கேட்டு தெரிந்து கொள்ள என கிடைக்கும் பலப்பல வாய்ப்புகள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை.

இப்படி சேற்றுக்கு நடுவில் செந்தாமரை போல், ஏதோ ஒன்றை எழுதி இந்த சமுதாயத்தை திருத்திவிடமாட்டோமோ என்று ஓடி ஓடி களைக்கும் அந்த சகோதரிகளிடம் பிறருக்கு இரக்கம் பிறக்கிற காலம் கனிவது எப்போது? யாரோ ஊர் பேர் தெரியாதவர்களின் பாராட்டுக்காக வீட்டில் இருப்பவர்களிடம் மூஞ்சாலடி முகத்தடி வாங்கும் அவர்களின் அவஸ்தைகளை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

ஏதோ ஓர் ஊருக்குப் போய் நாலு நாள் தங்கி, பல இடங்களை நேரில் பார்த்து கள ஆய்வு செய்து எழுதும் பாக்கியம் பெண்களுக்குக் கிடைப்பது அரிது. பெண்ணின் உலகம் மிகச்சிறிய வட்டமாக இருக்கிறது. அதைத் தாண்டி காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் பல தடைகளைத் தாண்டி பல நெருப்புகளை தீண்டித்தான் வர வேண்டி இருக்கிறது.

வீட்டில் எழுதும் சுதந்திரம் ஓர் ஆணுக்கு கிடைக்குமளவு எத்தனை பெண்களுக்கு கிடைத்திருக்கிறது? வேலைகளை மறந்து பிள்ளைகளோடு பேசாமல், யாரும் தன்னை அணுக முடியாதவாறு ஒரு திரையை ஏற்படுத்திக்கொண்டு எழுதும் ஆண் எழுத்தாளர்களை போல பெண்ணால் இருக்க முடியுமா?

சரியான சம்பாத்தியம் இல்லை, வீடு தங்குவதில்லை என எத்தனை குறைகள் இருந்தாலும் மற்றவர்கள் முன் சொல்லும்போது ‘என் கணவர் எழுத்தாளாராக்கும்!’ என பெருமை பேசும் பெண்கள் போல், ‘என் மனைவி எழுத்தாளராக்கும்!’ என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு கணவன்மார்கள் சொல்வதை கேட்கும் பாக்கியம் எத்தனை பெண் எழுத்தாளருக்குக் கிடைத்திருக்கிறது?

ஒரு ஆணுக்கு தான் பார்த்த, பேசிய, கேட்டறிந்த செய்திகளை வெட்ட வெளிச்சமாக எழுதும் உரிமை உண்டென்றால் பெண்ணாகப் பிறந்தவளுக்கும் அதே உரிமை உண்டுதானே! பெண்ணும் இந்த பூமியின் பிரஜைதானே! ‘எழுதறா… அந்தத் திமிர்’ என்று தூக்கி எறியும் உறவுகள் எப்போது இதை உணர்ந்து கொள்ளும்?

ஆண் எழுத்தாளன் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று அனுமதி அளிக்கும் ஒரு சமூகம் பெண்ணுக்கு அந்த வாய்ப்பை மறுதலிப்பதேன்?

போகப் பொருளாக மட்டுமே பார்க்காமல் அவளும் ஓர் சக உயிர்… அவளுக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை உண்டு… தப்பு செய்யும் சமுதாயத்தை தட்டிக் கேட்கும் கடமையும் உண்டு என்பதை எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோம்?

பெண் எழுத்தாளர்களின் பேனாக்கள் அவர்களின் உணர்வை உணர்ந்து வடிக்கும் கண்ணீர்தான் கவிதைகளாக மலர்கிறது. அவர்களின் வலிகள்தான் கதைகளாக விரிகின்றன. அதுதான் அவள் உணர்ந்தது. அதுதான் அவளுக்கான உலகம். அவளுக்கான உலகம் விரிவடையும் போதுதானே அவளால் பல களங்களில் தன் சிறகை விரிக்க முடியும்? கூண்டுக்கிளிகள் போல் சிறகுகளை வெட்டிவிட்டு அதனால் வானுயரப் பறக்க முடியாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?!

எத்தனையோ காப்பியங்களில் அடியவர்கள் தன்னை பெண்ணாகவும் இறைவனை காதலனாகவும் நினைத்துப் பாடி இருந்தாலும் உண்மையான பெண்ணான ஆண்டாள் கண்ணனை காதலனாக நினைத்து எழுதிய திருப்பாவை பாடல்கள்தான் வலிமையானவை.

அது பெண்ணோ, ஆணோ நல்லதை தேர்ந்தெடுத்துப் படிக்கும் உரிமை வாசகருக்கு உண்டு. ஆனால், எழுத்துரிமை என்பது இரு பாலருக்கும் சமம் என்பதை உணர்ந்தால் பெண் வலிகளை தாண்டி வேறு சிலவற்றை பெண் எழுத்தாளர்களால் பேச முடியும்.

இதை ஆண்கள் மட்டுமல்ல… உடனிருக்கும் பெண்களும் உணர வேண்டும்.

யாரோ ஒரு சலவைத் தொழிலாளியின் பேச்சைக் கேட்டு சீதையை தீக்குளிக்க வைத்த ராமன் போல் வார்த்தைகளால் தீக்குளிக்க வைப்பதை நிறுத்தினால் மட்டுமே வானம் வசப்படும். அப்படி வசப்படும் பட்சத்தில் வலிமையான அந்தப் பெண்கள் மூலம் உங்களுக்கு இன்னுமொரு புதிய வானமும் அறிமுகப்படுத்தப்படலாம்.

– ஸ்ரீதேவி மோகன்

Woman-Writing-Stylized-Print

Image courtesy:

http://www.elatiaharris.com

http://www.coloredgirlconfidential.com