இறைவி

iraivi2ஒரு பொக்கே!

நல்லவர்களைப் பார்ப்பது ஓட்டல் சாம்பாரில் காயைத் தேடுவதுபோல கஷ்டமான வேலையாகிவிட்டது. இப்படி ஒரு காலத்திலும் யாராவது நல்லது செய்தால் அவர்களைத் தேடிப் பிடித்தாவது பாராட்டுவதுதான் அவர்களுக்கு இன்னும் ஊக்கமாகவும், மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கும்.

பீப் ஸாங் போன்ற விஷயங்களைக் கேள்விப்படும்போது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தப் பெரும்பாலானோர் தவறுவதில்லை. ஆனால்… நல்லது நடக்கும்போது மட்டும் பாராட்ட மறந்துவிடுகிறோம்… அல்லது அதை ரசித்துவிட்டு நகர்ந்துவிடுகிறோம்.

ஆமாம்…
‘இறைவி’ கார்த்திக் சுப்புராஜ் பற்றிக் கொஞ்சம் பேசுவோம்..

iraivi3

படத்தின் நிறைகுறைகளை விமர்சிப்பதற்கெல்லாம் பல சினிமா நிபுணர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அவருக்கு ரெட் கார்ட் போட்டது பற்றி ஆராயவும் பலர் இருக்கிறார்கள் என்பதால் நாம் அதைப் பேச வேண்டியதில்லை.

இதில், நாம் குறிப்பிட விரும்பும் விஷயம்… சமீபகாலத்தில் பெண்களை அவமானப்படுத்தாத, அசிங்கப்படுத்தாத படம் எதுவும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. பெரும்பாலானவை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ வகையறாவாக இருப்பதாகத்தான் ஞாபகம். இதற்காக வரலாறை எல்லாம் புரட்ட வேண்டியது இல்லை. ‘இறைவி’யுடன் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் கூட பெண்களைத் திட்டி ஒரு பாடல்… பல டபுள் மீனிங் வசனங்கள்… இன்னும் ஓர் ஆபாச பாடல்.. ‘புஷ்பா புருஷன்’ என்று அருவருப்பான கேரக்டர் என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது.

ஒரு படத்தை ஆரம்பிக்குபோதே, ‘ஒரு டாஸ்மாக் ஸாங் சார்… அதுல பொம்பளைங்களத் திட்டுறோம்… கானா பாலாகிட்ட வேணா கேட்டுப் பார்க்கலாம்’ என்றுதான் டிஸ்கஷனே நடத்துவார்கள் போல. அந்த அளவுக்கு சமீபகாலத்தில் பெண்களை அசிங்கப்படுத்தாத பாடலோ படமோ இல்லை என்று யார் தலையில் வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம்.

iraivi1

இந்த மாதிரி ஒரு ஆபாச சூழலில், பெண்களைத் திட்டாத படம் என்பதற்காகவே ‘இறைவி’க்கு பொக்கே தரலாம். நம்முடைய அம்மா, சகோதரி, தோழி என தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கிற பெண்களின் துயரங்களைப் பேசியிருப்பது இதுவரை தமிழ்சினிமாவில் நாம் பார்த்திராத ஓர் அதிசயம். அதிலும் பெண்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வெகுஜனப் படம் என்பது எல்லா இறைவிகளும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இத்தனைக்கும் அவர் டாக்குமெண்ட்ரி சினிமா எடுக்கிற ஆள் இல்லை. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ என இரண்டு ப்ளாக்பஸ்டர்கள் கொடுத்த ஒரு வெகுஜன இயக்குநர். மூன்றாவது படமான ‘இறைவி’யில் மிகவும் எதிர்பார்க்க வைத்த இயக்குநர். தன்னுடைய சினிமா மார்க்கெட் ஸ்டிராங்காக இருந்தும் இதுபோல பெண்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் ஒரு படம் எடுத்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜுக்கு பெரிய பொக்கேவே தரலாம்.

iraivi4

கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் அதிதீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். வாட்ஸ் அப் ப்ரொஃபைலிலேயே தன்னுடைய போட்டோவுக்குப் பதிலாக ரஜினி போட்டோவை வைத்திருக்கும் தீவிரவாதி அவர்.

அதனால், ‘கபாலி’ ஸ்டைலிலேயே கடைசியாக ஒரு வார்த்தை…
மகிழ்ச்சி!

  • ஜி.ஸ்ரீவித்யா

iraivi5

ப்ரியங்களுடன் ப்ரியா – 11

நாங்கள்…
கடவுள்   படைத்தவற்றில் 
கடவுளுக்கு  நிகரான  
இனம் நாங்கள்…
அனைத்தையும் அடுத்தவர்க்காக
அர்ப்பணிப்பவர்கள்   நாங்கள்…
அன்பை மட்டுமே
செலுத்துபவர்கள் நாங்கள்…
தன்மானத்தின்
தனிஉருவம் நாங்கள்…
அன்னையும் நாங்கள்…
சகோதரியும் நாங்கள்…
தோழியும் நாங்கள்…
காதலியும் நாங்கள்…
மனைவியும் நாங்கள்…
மகளும் நாங்கள்…
உலகில் உள்ள 
அனைத்து உறவுகளும்
நாங்களே…
இன்பங்களின்
தொழிற்சாலை நாங்கள்…
இன்னல்களின்
மயானமும் நாங்கள்…
அன்பென்ற வார்த்தையின்
அகராதி நாங்கள்..
பூமியில் பிறந்த  தேவதை
நாங்கள்…
வாழ்நாள் முழுவதும் 
பிறருக்காக வாழும் 
நாங்கள்  என்றும் அடிமை அல்ல…
இந்த அகிலம்தான் எங்களின் அடிமை!
oil on canvas painted by artistelayarajamo:+919841170866

oil on canvas painted by artistelayarajamo:+919841170866

 
சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, நட்பாக, நலம் விரும்பியாக, வழிகாட்டியாக காலம் காலமாக ஒரு பெண் ஏற்கும் வேடங்கள்தான் எத்தனை… எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாக பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்ட முடியும்?
 
பல கோடி ஆண்டுகள் உலக சரித்திரத்தில் பெண்கள் சந்தித்த அடக்குமுறைகள், வன்முறைகள் எத்தனை எத்தனை? பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் சமமற்ற ஆணாதிக்க நீதியினை தாண்டியும் இன்றைய நிலையில் கல்வி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றை வென்று சாதித்து வருகிறார்கள்.
 
elayaraja7
இன்றைய சுதந்திர இந்தியாவில் எங்களின் நிலை…
 
 21 -ம் நூற்றாண்டில், இந்தியா பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது, விரைவில் இந்திய தேசம் பெரிய வல்லரசாகி விடும் என இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தேசத்தின் சரிபாதி மக்களான நமது  நிலை என்ன என்பது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய ஒன்று…
 
இந்தியாவில் பெண்களின் நிலை என்று கேட்ட உடனேயே இந்தியர்கள் அனைவரும், எங்கள் நாட்டில்தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். பூமி முதல் ஆறு, கடல் வரை அனைத்திலும் பெண் வடிவத்தைக் காண்கிறோம்.பெண்களுக்கும் வாக்களிக்க உரிமை அளித்திருக்கும் வளரும் நாடுகளில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது.
 
இந்திய அரசியலமைப்புச் சட்டமும் பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகளையும், உரிமைகளையும் வழங்குகிறது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு உதவி அமைப்பு இந்தியாவில் பெண்களின் நிலைப் பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
இந்த ஆய்வு, இந்திய அரசு அளிக்கும் அறிக்கைகள், உள்ளூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, ஊடகங்களில் தினமும் வரும் செய்திகளை வைத்து இதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
 
elayaraja5
இந்த ஆய்வு நாம் பெண்களைப் பற்றிக் கூறுவத‌ற்கு எதிராகவே உள்ளது..
 
நம் நாட்டில் வீட்டிற்கு வெளியே வேலைக்கு சென்று பொருள் ஈட்டும் குடும்பப் பெண் ஒருவரின் நிலையை எண்ணிப் பாருங்கள். வீட்டில் காலை முதல் இரவு வரை வேலைக்கு செல்லாத குடும்பப் பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் கவனிப்பது இன்றும் முழுமையாக இவர்கள் பொறுப்புதான். நகரங்களில் ஒரு சிலரால் உதவிக்கு வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு ஆட்களை நியமித்துக்கொள்ள முடிகிறது என்றாலும், பெரும்பாலான வீடுகளில் பணத்தட்டுப்பாட்டின் காரணமாக இது சாத்தியப்படாது. எத்தனை ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு ஈடாக வேலைப் பளுவை பகிர்ந்து கொள்ள இறங்கி வருகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
 
இந்திய திருநாட்டில் இன்றும் வழக்கத்தில் உள்ள வரதட்சணை முறை, பெண் பார்க்கும் படலம், பெண்ணுக்கு தந்தையின் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் இயற்றிய பின் திருமணத்திற்கு முன்பே முத்திரைத் தாள்களில்(legal stamp papers) பெண்ணிடம் கையொப்பம் வாங்கி விடுவது, பள்ளி கல்லூரி மற்றும் வேலை இடங்களில் ஆண்களின் கேலிப் பொருளாக நடத்தப்படுவதை பொறுத்துக் கொள்வது, புகுந்த வீட்டில் அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வது, புகுந்த வீட்டின் நடைமுறைக்கு ஏற்ப தன் பழக்கவழக்கங்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்வது என்று ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் ஏதோ ஒரு கட்டத்தில் அடக்குமுறைக்கு உட்பட்டதாகவே உள்ளது. 
elayaraja4
இன்று பெண்ணடிமைத்தனம் என்பது நடைமுறையில் இல்லை எனக் கூற துணிவுள்ள ஒவ்வொருவருக்கும் எனது சவால்…
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளில் ஏதாவது ஒன்றை தன் வாழ்வில் எதிர்கொள்ளாத பெண் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா?
 
பாலின வேறுபாடுகள் …
 
இன்று பாலின வேறுபாடு (Gender inequality) அனைத்துத் துறைகளிலும் காணப்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று. பொருளாதாரத்தில் இந்தியாவை விட பின்தங்கிய நிலையில் இருக்கும் நாடுகள் பலவற்றிலும் இந்த நிலை கிடையாது. 2010 -ம் ஆண்டு உலக வங்கி ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’(GDP) அடிப்படையில் வெளியிட்ட உலக நாடுகளின் தர வரிசையில் இந்தியா 7 -வது இடத்தில் உள்ளது. இது நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு விசயம் தான். அதே 2010 -ம் ஆண்டு ஐ.நா.-வின் மனித உரிமை வளர்ச்சிப்பிரிவு வெளியிட்ட பாலின சமத்துவமின்மை(Gender inequality) அறிக்கையில் மொத்தம் 138 நாடுகள் உள்ளடங்கிய தர வரிசையில் இந்தியா 122 -ம் இடம் பெற்றுள்ளது. என்ன ஒரு வெட்கக் கேடான நிலை. இந்த தகவல் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் சமுதாய அக்கறையுள்ள எவருக்குமே வருத்தத்தை அளிக்கும். ஆனால், நிச்சயம் வியப்பாக இருக்காது. தினக்கூலி வேலையில் ஆரம்பித்து, உயர் அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் இது பொருந்தும். கூலி வேலை பார்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரே விதமான உடல் உழைப்பிற்கு ஆணுக்கு, சராசரியாக பெண்ணைவிட 33% அதிக கூலி வழங்கப்படுகிறது. படித்து பட்டம் பெற்று உயரிய வேலைகளில் தனியார் நிறுவனங்களிலும், அரசு நிறுவனங்களிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் இந்த பிரச்சினையை வேறு விதமாக சந்திக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் சம பதவிக்கு சம ஊதியம் வழங்கினாலும், பதவி உயர்வு என்று வரும் பொழுது பெண்களுக்கு இரண்டாம் இடமே.
 
elayaraja3
சமுதாய அமைப்பிலே நமது சுதந்திரம், நமது  சமத்துவம், நமது விடுதலை என்ற சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. ஆனால், நமக்கான நீதி இன்றைய சமுதாயத்தில் சரிவர அமையவில்லை. சீறிவந்த புலியையும் முறத்தினால் அடித்து விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்சிராணி வழிவந்த பெண்ணினம் என வீர முழக்கமிடும் சமுதாய கோஷத்தில் நீதியின் கண்முன் பெண்களுக்குச் சமுதாய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா? 
 
elayaraja2
20ம் நூற்றாண்டுச் சமுதாய அமைப்பில்  நமக்கென  குரலெழுப்பியவர் பாரதியார்…
‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ எனமுழக்கமிட்டார்.
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். 
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் 
இளைப்பில்லை காண்’
என்று சமத்துவக் குரல் எழுப்பினார்.
நமது சுந்திர இந்தியாவில் சாதித்த முதல் பெண்களை காண்போம்…
இந்திராகாந்தி முதல் பெண் பிரதமரான காலம் (1966); கமல்ஜித் சாந்து ஆசிய பந்தயங்களில் முதலில் தங்க மெடலைப் பெற்ற பெண் (1970); கிரண் பேடி இந்திய காவல் துறையில் முதன் முதலில் உயர்பதவி வகித்த பெண்மணி. திஹார் ஜெயிலை யோகா ஜெயிலாக மாற்றிய பெருமைக்கு உரியவர் (1972); மதர் தெரசா நோபல் பரிசை உலக அமைதிக்காக பெற்ற முதல் இந்தியக் குடியுரிமைப் பெண் (1979); 1989ல் பாத்திமா பீபி சுப்ரீம் கோர்ட்டில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்றார். கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனை (1997); முதல் பெண் கவர்னர் பதவி வகித்தவர் – கவிக்குயில் சரோஜினி நாயுடு; முதல் பெண் அமைச்சர் சுதேச கிருபளானி; மகாராணி எலிசபெத் அவர்களால் பகுதி நேர நீதிபதியாக நேரடியாக நியமகிக்கப்பட்டவர் கல்யாணி கௌல் என்கிற இந்தியப் பெண்மணி என்பது பெருமைக்குரிய செய்தி; முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர், துணை சபாநாயகராக பதவி வகித்த பெண் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். 1994ல் ஹரிதா கௌர் இந்திய விமானப் படையின் முதல் பெண் விமான ஓட்டி. 2000 கர்ணம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பித்தளை மெடலை பெற்ற முதல் இந்திய பளுதூக்கும் சாம்பியன். மீரா குமார் இநதிய லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர், பி.டி.உஷா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மங்கை. இந்திரா நூயி. பெப்சி தலைவர். 2010இல் கொடுக்கப்பட்ட கல்பனா சாவ்லா விருது பெற்றவர்கள் சமூக அர்வலர் நபீஸா அலியும் உயர் காவல் துறை அதிகாரி கிரண்பேடியும். முதல் பெண் டி ஜி பி லத்திகா சரண்.
oil on canvas painted by artistelayarajamo:+919841170866

oil on canvas painted by artistelayarajamo:+919841170866

 

நமது பெண்களுக்கோர் வேண்டுகோள் …

பணத்தட்டுப்பாட்டின் காரணமாக உயர் கல்வி கற்க இயலாமல் போகும் நமது சகோதரிகளை கண்டெடுத்து, அவர்கள் படிப்புக்கு உதவுங்கள். இது அவர்களை மட்டும் அல்லாது அவர்களது வருங்கால சந்ததியினரும் மேன்மையடைய வழிவகுக்கும்.
வீட்டிலும் வெளியிலும் போராடி தன் உரிமைகளை தக்க வைத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஓர் வேண்டுகோள்…
தங்கள் அளவிற்கு உலக அறிவும், போராட்ட குணமும் வாய்க்கப்பெறாத தங்களை சுற்றியுள்ள பெண்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படுங்கள். அவர்களது அறிவுரையாளராக (mentor) செயல்பட்டு அவர்கள் உரிமைகளை பெற உதவுங்கள். அடக்கு முறையை அழிக்கத் துடிக்கும் ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்கள் நல்லொழுக்கத்தையும், உயர்ந்த கொள்கையையும் தங்கள் ஆண் நண்பர்களுக்கு தவறாமல் பரப்புங்கள். அவர்கள் எண்ணம் செயல் இரண்டிலும் நல் மாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள்.
இது பற்றி பெரிதான கருத்து ஒன்றும் இல்லாத ஆண்களுக்கு ஓர் வேண்டுகோள்…
தங்களை சுற்றி உள்ள பெண்களை சற்று கூர்ந்து கவனியுங்கள். தங்களையும் அறியாமல் கலாச்சார போர்வையில் நீங்கள் வீட்டிலும் வெளியிலும் நடந்து கொள்ளும் முறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். தங்களை சுற்றி உள்ள அன்பான பெண் உள்ளங்கள் உரிய உரிமையும் வாய்ப்பும் பெற வழிவகை செய்யுங்கள்.
ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்கும் ஓர் வேண்டுகோள்…
பல இடங்களில் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் இருக்கிறாள். இந்த நிலை மாற பிடிவாதம், பொறாமை, புறம் பேசுதல் தவிர்த்து பெண் சமுதாயம் மறுமலர்ச்சியடைய வழிவகுப்போம் என இந்த சுதந்திர நாளில் உறுதி காண்போம்.
கடவுள் படைத்தவற்றில் கடவுளுக்கு நிகரான இனம் நாங்கள்… அனைத்தையும் அடுத்தவர்க்காக அர்ப்பணிப்பவர்கள் நாங்கள்…
அன்பை மட்டுமே செலுத்துபவர்கள் நாங்கள்…
தன்மானத்தின் தனிஉருவம் நாங்கள்…
அன்னையும் நாங்கள்…
சகோதரியும் நாங்கள்…
தோழியும் நாங்கள்…
காதலியும் நாங்கள்…
மனைவியும் நாங்கள்…
மகளும் நாங்கள்…
உலகில் உள்ள அனைத்து உறவுகளும் நாங்களே…
இன்பங்களின் தொழிற்சாலை நாங்கள்…
இன்னல்களின் மயானமும் நாங்கள்…
அன்பென்ற வார்த்தையின் அகராதி நாங்கள்…
பூமியில் பிறந்த தேவதை நாங்கள்…
வாழ்நாள் முழுவதும்
பிறருக்காக வாழும் நாங்கள் என்றும் அடிமை அல்ல…
இந்த அகிலம் தான் எங்களின் அடிமை…
மாதர் தமை இழிவு செய்யும் மடமை தனை கொளுத்துவோம்!
 v33
Paintings Courtesy: Artist S.Elayaraja

அதிகம் படித்தால் குறைந்த சம்பளம்!

Image

‘‘அதிகம் படித்த பெண்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் வாங்கும் சம்பளத்துக்கும் ஆண்கள் வாங்குவதற்கும் நிச்சயம் அதிக வேறுபாடு இருக்கும். அதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ இப்படிச் சொல்லியிருப்பது யாரோ அல்ல… அகமதாபாத் ஐ.ஐ.எம். (Indian Institute of Management – Ahmedabad) கல்வி நிறுவனத்தில், இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட உறுப்பினர்கள் சொல்கிறார்கள்!

பெண் கல்வி வெகு அழுத்தமாக வலியுறுத்தப்படும் இந்தக் காலத்தில் இந்த ஆய்வு சொல்லியிருக்கும் கருத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அதிகம் படித்திருந்தாலும், பெண் என்கிற காரணத்துக்காகவே சம்பளம் குறைத்துக் கொடுக்கப்படுவதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அதிகம் படிக்காத பெண்கள் கூட, ஆண்களுக்கு சமமாகவோ, சில நேரங்களில் அவர்களை விட அதிகமாகவோ சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், படித்திருந்தாலோ நிலைமை தலைகீழ்!

அடிப்படைக் கல்வியோடு கொஞ்சம் கூடுதல் தகுதியோ, டிப்ளமோ படிப்போ படித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு சமமான கல்வித்தகுதி உடைய ஆண்களைவிட 10 சதவிகிதம் குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்கள். முதுகலைப் பட்டம் பெற்ற பெண்கள் நிலைமை இவர்களை விட மோசம். தங்களுக்கு சமமான தகுதியுடைய ஆண்களைவிட 40 சதவிகிதம் குறைந்த சம்பளம் வாங்குகிறார்கள். இந்த நிலைமை இந்தியாவில்தான் அதிகம். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, வீட்டு வேலை செய்வது, வீட்டைப் பராமரிப்பது, சமைத்துப் போடுவது போன்றவை இந்தியப் பெண்கள் எந்தச் சம்பளமும் பெற்றுக் கொள்ளாமல் செய்யும் மகத்தான வேலைகள். உண்மையில் இவையெல்லாம் விலை மதிப்பிட முடியாத பணிகள். அதுவும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தேதான் இருக்கிறது. இந்த உணர்வுபூர்வமான வேலைகள் பெண்களைப் பெரும்பாலும் கட்டிப் போட்டே வைத்திருக்கின்றன. இந்த வேலைகளின் அடிப்படையில் பார்க்கப்படுவதால்தான் பெண்கள் பணிக்குச் செல்லும் இடங்களிலும் அவர்களுக்கான நியாயமான சம்பளம் மறுக்கப்படுகிறது. ஆனால், அடிமட்டக் கூலித் தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஆண்களைவிட அதிகம் வருமானம் ஈட்டுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. உதாரணமாக, அடிப்படை கல்விகூட பெறாத பெண்கள் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதே தகுதியுடைய ஆண்கள் சம்பாதிப்பது வருடத்துக்கு சராசரியாக 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்தான்.

ஒரு பெரிய நிறுவனம்… அங்கே முக்கியமான பதவிக்குப் போட்டி. ஆண், பெண் இருவருமே விண்ணப்பம் செய்கிறார்கள். இது போன்ற நேரங்களில் நிறுவனத்தின் உரிமையாளர் பெண்களைவிட ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார். வேலை கிடைப்பதற்கு முன்பாகவே பெண்கள் வடிகட்டப்படுவதும் இப்படி நடக்கிறது.

முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பெண்ணின் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய். அதே முதுகலைப் பட்டம் பெற்ற ஆணாக இருந்தால், வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய். அதாவது சதவிகிதக் கணக்கில் ஆண், பெண்ணை விட 40.76% அதிகமாகப் பெறுகிறார்.

Image

இந்த ஆய்வு வேறொரு கோணத்திலும் பெண்களை அணுகியிருக்கிறது. பொதுவாக, பெண்கள் பயிற்சிகள் அதிகம் தேவைப்படும், நீண்ட நேரம் பணியாற்றும் வேலைகளை விரும்புவதில்லையாம். அந்த மாதிரியான பணிகளில் இருப்பவர்கள், திருமணம், தாய்மையடைதல் போன்ற காரணங்களால் சீக்கிரத்திலேயே வேலையை விட்டுவிடுகிறார்களாம். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக, வேலைகளுக்கு இடைவெளி விடுகிறார்கள் அல்லது பகுதி நேர வேலைகளில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். இது போன்ற காரணங்களால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநேரமாக வேலைக்கு வரும் பெண்களுக்குக் கிடைப்பது ஆண்களைவிட குறைந்த சம்பளமே!

சரி… தாய்மையடையாத பெண்கள்? அவர்களுக்கும் இதே நிலைமைதான். குழந்தை இல்லை என்பதற்காக அவர்களுக்கு சிறப்பாக எந்த முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை. அவர்களை, ‘சீக்கிரமே அம்மாவாகப் போகிறவர்கள்’ என்று முத்திரை குத்தி அடையாளப்படுத்தியிருக்கிறது சமூகம்.

அகமதாபாத் ஐ.ஐ.எம்.மின் ’பேசெக் இந்தியா’ (Paycheck India) என்கிற ஆய்வுப் பிரிவு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வுக்கு தன்னார்வத் தொண்டு அமைப்பான ‘வேஜ் இண்டிகேட்டர் ஃபவுண்டேஷன் அண்ட் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ம்ஸ்டர்டாம்’ (Wage Indicator Foundation and University of Armsterdam) உதவியிருக்கிறது. இந்தியா முழுக்க இந்த ஆய்வு 21,552 பேரிடம் நடத்தப்பட்டிருக்கிறது… அதுவும் கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகள்!

ஆய்வு கிடக்கட்டும்… ஆண்களைவிட பெண்கள் எவ்வளவு குறைவாக வருமானம் பெறுகிறார்கள் என்பது நம் மனசாட்சிக்குத் தெரியாதா?

 

Photo Courtesy: http://freeimagescollection.com

http://www.employeerightspost.com/

– பாலு சத்யா