தாய்ப்பாலின் மகத்துவம், அதைக் குழந்தைக்குப் புகட்டும் விதம், பயன்கள் எல்லாவற்றையும் குறித்து செட்டிநாடைச் சேர்ந்த டாக்டர். ஏ.முத்துசாமியும், ரோட்டேரியன் இந்திரலேகா முத்துசாமியும் இணைந்து BPNI அமைப்பின் சார்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கை இது…
கடந்த 1992ம் ஆண்டு முதல் நாங்கள் தீவிரமாக தாய்ப்பால் ஊக்குவிப்பில் பணியாற்றி வருகிறோம். அரசும் 6 மாதங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளித்துள்ளது. பல சட்டதிட்டங்களையும் இயற்றியுள்ளது. ஆனாலும் 40.5% தாய்மார்கள்தான் குழந்தை பிறந்த முதல் 60 நிமிடங்களுக்குள் தாய்ப்பால் தருகிறார்கள். 46.8% தாய்மார்கள்தான் ஆறு மாதம் முடிய தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள்.
இந்தப் பின்னடைவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமானவை…
- மருத்துவத்துறை அலுவலர்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கு போதிய ஆதரவு தராததும், அக்கறை எடுக்காததும்.
- குழந்தை உணவு/பால்பாட்டில் தயாரிப்போரின் அதி தீவிர வியாபார/விளம்பர உத்திகள். மருத்துவமனையிலிருந்து வெளிவரும் தாய் தன் குழந்தையுடன் பால்பவுடர் டின் மற்றும் பால்புட்டியுடன் வரும்போது மருத்துவத்துறை சாராத நம்மால் எப்படி அந்தத் தாயை தாய்ப்பாலூட்ட ஊக்குவிக்க முடியும்? ‘தாயின் மார்பை வற்றவைக்க ஒரு புட்டி, ஒரு நாள் போதும்’ என்கிறது மருத்துவ ஆய்வு.
ஆகவே, உங்கள் முழு அழுத்தமும் கவனமும் மருத்துவ சேவை தரும் இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். முளையிலேயே கிள்ளாமல் விருட்சமான பின் வெட்டுவதும், தும்பை விட்டு வாலைப் பிடிப்பதும் சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. சிசுவின் தூய்மையான உணவுக்குழாயை (Virgin Intestine) முதல் உணவாக விலங்கின் பாலைக் கொடுத்து பாழ்படுத்திய பின்பு நாம் செய்யும் எந்தப் பணியும் பூரண பலனைத் தராது.
தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை
அதைத் தருவது தாயின் கடமை, அதற்கு
உதவுவது மருத்துவமனையின்/சமுதாயத்தின் கடமை.
இதில் மாற்றுக்கருத்து எங்கிருந்து வருகிறது?
பலர் இது நடைமுறை சாத்தியமற்றது என்பார்கள். அப்படியானால் இதை, பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருபவர்களும் நடைமுறைபடுத்தச் சொல்லும் அரசும், BPNI, WHO, UNICEF, IAP போன்ற அமைப்புகளும் பொய் சொல்கிறார்களா?
நீங்கள் செய்ய வேண்டியது சில செயல்பாடுகளே…
- மகப்பேறு/சிசு/சிறு குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று அங்கே, ‘சிசு மற்றும் சிறு குழந்தைகளின் உணவு பற்றிய தேசிய வழிகாட்டுதல்களை’ நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யுங்கள். அங்கு எழுதப்பட்ட வழிகாட்டுதலை யாவரும் படிக்கும் இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
- எங்கெல்லாம் புகைப்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் ‘பால்புட்டிகள், டின் உணவு வகைகள் தடைசெய்யப்பட்டுள்ளன’ என்ற அடையாளச் சின்னங்களை, வாசகங்களை ஒட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
- உங்கள் நகரை ‘பால்பாட்டில் இல்லா நகரமாக்க’ ஏற்பாடு செய்யுங்கள். பால்பாட்டில்களின் தீமையை விளக்கி அதை உபயோகிப்போரிடமிருந்து ஒரு சிறு தொகை/அன்பளிப்பு கொடுத்து வாங்கி பின் ஒரு விழா நடத்தி அவற்றை அழியுங்கள்.
- சினிமா/தொலைக்காட்சிகளில் பால்புட்டிகளைக் காண்பிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது. அது பற்றி அவர்களுக்கு தெரிவியுங்கள்.
- விளம்பரம்.
பரிசுகள்: இவற்றை நடைமுறைப்படுத்த ஆகஸ்ட் 1 முதல் நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் அறிக்கையை மின் அஞ்சல் மூலம் 1.12.2015க்குள் எனக்கும், மாவட்ட தலைவருக்கும், பி.பி.என்.ஐக்கும் அனுப்புங்கள். சிறந்த முதல் மூன்று சங்கங்களுக்கு பரிசுகளும், பங்குபெறும் சங்கங்களுக்கு சான்றிதழ்களும் மாவட்ட மாநாட்டில் வழங்கப்படும்.
நல்வாழ்த்துகள்.
என்றும் சமூக சேவையில்,
பி.கு.: தயவு செய்து குழந்தை உணவு/பால்புட்டி நிறுவனங்களிடமிருந்து எந்த உதவியும் பெறாதீர்கள். அப்படிப் பெற்றிருந்தால் உங்கள் அறிக்கை செல்லத்தக்கதாகாது.
Dr. அ. முத்துசாமி Rtn. இந்திரலேகா முத்துசாமி
BPNI ஒருங்கிணைப்பாளர் R.C. of கும்பகோணம் சக்தி
***
சிசு மற்றும் சிறு குழந்தைகளின் உணவு பற்றிய தேசிய வழிகாட்டுதல் – 2010.
இந்த மருத்துவமனையில் தாய்ப்பாலே சிறந்த குழந்தை உணவு என்று உணர்ந்து, குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுக்கும் சுகாதாரமான பழக்கத்தை ஆரம்பித்து, பின் கீழ்க்கண்ட பத்து சிசுநேயக் கொள்கைகளைக் கடைபிடிப்பதன் மூலம் தாய்ப்பால் கொடுப்பதைக் காப்பாற்ற, ஊக்குவிக்க மற்றும் உதவ துணைபுரிகிறோம்.
- இந்த மருத்துவமனைக்கு எழுத்துப்பூர்வமான தாய்ப்பால் கொள்கைகள் உள்ளன. இவை, இங்குள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அனைத்துப் பணியாளர்களும் சிறப்பு பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
- கருவுற்றிருக்கும் எல்லாத் தாய்மார்களுக்கும் தாய்ப்பாலூட்டும் நன்மைகளையும், எப்படி தாய்ப்பால் ஊட்டுவது என்றும் விவரமாகத் தெரிவிக்கிறோம்.
- சுகப்பிரவத்தில் பிறந்த குழந்தைக்கு அரை மணிக்குள்ளும், சிக்கலான பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு ஒரு மணிக்குள்ளும் தாய்ப்பால் கொடுக்கிறோம்.
- தவிர்க்க முடியாத காரணங்களால் தாயும் சேயும் பிரிய நேரிட்டால், எப்படி தாய்ப்பால் கொடுப்பது, பின் எப்படி தொடர்ந்து தருவது என்று காண்பித்துத் தருகிறோம்.
- மருத்துவக் காரணங்களைத் தவிர, வேறு எந்த காரணத்துக்காகவும் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவோ, தண்ணீரோ கொடுப்பதில்லை.
- தாயும் சேயும் ஒரே அறையில் 24 மணி நேரமும் ஒன்றாக இருக்க வாய்ப்பும் வசதியும் செய்து தருகிறோம்.
- குழந்தை அழும்போதெல்லாம் தாய்ப்பால் தர ஊக்குவிக்கிறோம்.
- தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாட்டில், ரப்பர், நிப்பிள், சூப்பான் போன்றவை கொடுப்பதில்லை.
- தாய்ப்பால் ஊக்குவிப்போர் குழுக்களை அமைத்து தாய்மார்கள் மருத்துவமனையிலிருந்து வெளிவரும்போது அக்குழுக்களின் ஆலோசனையைப் பெற ஊக்குவிக்கிறோம்.
தயவுசெய்து இந்த வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த உதவுங்கள். 6 மாதங்கள் முடிய தாய்ப்பால் மட்டுமே போதும். பின் இரண்டு வயது முடியும் வரையோ அல்லது அதற்குப் பிறகுமோ வீட்டு இணை உணவுடன் தாய்ப்பால் தரவேண்டும்.
பணிக்குச் செல்லும் தாய்மார்கள் தொடர்ந்து தாய்ப்பால் தரும் முறை
இது மிகவும் சுலபமானது. பணிக்குச் செல்ல மூன்று வாரங்கள் இருக்கும்போதே திட்டமிட வேண்டும். முதல் வாரத்தில் தானே எப்படி தாய்ப்பாலை பீச்சி எடுப்பது, பாதுகாப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள். கையால் பீச்சி 250 மி.லி. பாலை ஒரு தடவை சுலபமாக எடுக்கலாம். ஒரு மார்பில் குடிக்கும்பொழுது மறு மார்பில் பீச்சி எடுப்பது சுலபமானது. பீச்சியபால் அறை வெப்பத்தில் 8 மணி நேரமும், குளிர்சாதனப்பெட்டியில் 24 மணி நேரமும் கெடாமல் இருக்கும்.
இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் கீழே கண்ட அட்டவணைப்படி, பீச்சிய பாலை கப் அல்லது ஸ்பூன் மூலம் புகட்ட வேண்டும். இத்திட்டத்தை உங்கள் வேலை நேரத்துக்கேற்பவும், குழந்தையின் தேவைக்கேற்பவும் மாற்றிக் கொள்ளலாம். பணியிடத்தில் 4 மணிக்கு ஒரு முறை பாலை பீச்சி எடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து புகட்டலாம்.
பணிக்குச் செல்லும் முன் அன்றைய தேவைக்கான பாலை தனித்தனி கப்களில் எடுத்து, நேரத்தை குறித்து வைத்துச் செல்ல வேண்டும்.
(சித்திரம் மட்டுமல்ல, பால் எடுப்பதும் கைப்பழக்கம்தான்).
பால் புகட்டும் நேரம் | நாள் 1-3 | நாள் 4-6 | நாள் 7-9 | நாள் 10-12 |
7:30-9:30
காலை |
பீச்சி எடுத்த தாய்ப்பால் | பீச்சி எடுத்த தாய்ப்பால் | பீச்சி எடுத்த தாய்ப்பால் | பீச்சி எடுத்த தாய்ப்பால் |
10:30-12:30 காலை |
தாய்ப்பால் | பீச்சி எடுத்த தாய்ப்பால் | பீச்சி எடுத்த தாய்ப்பால் | பீச்சி எடுத்த தாய்ப்பால் |
1:30-3:30
மதியம் |
தாய்ப்பால் | தாய்ப்பால் | பீச்சி எடுத்த தாய்ப்பால் | பீச்சி எடுத்த தாய்ப்பால் |
4:30-6:30
மாலை |
தாய்ப்பால் | தாய்ப்பால் | தாய்ப்பால் | பீச்சி எடுத்த தாய்ப்பால் |
‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே… அவர் நல்லவராவதும், நலங்கெட்டு வாழ்வதும் தாய்ப்பால் கொடுப்பதிலே.’
மேலும் தொடர்புக்கு: Dr.A. முத்துசாமி
99, ரயில்நிலையம் சாலை, செட்டிநாடு – 630 102.
Email: a_muthuswami@yahoo.com.
தாய்ப்பால் அளிப்பது தொடர்பான தகவல்களுக்கு… www.bpni.org இணையதளத்தைப் பார்க்கவும்.
Image courtesy: