தேன், பாண்டா, கருப்புக் கரடிகள்… ரஷ்யக் குள்ளர்கள்!

‘ஆசைப்பட்டது போல வாழ முடியவில்லையே! என்கிற குறை அபார்ட்மென்ட்வாசிகளுக்கு நிறைய உண்டு. விருப்பப்பட்ட செடி, மரத்தை வளர்க்க முடியாது, முன்வாசலில் சாவதானமாக விளையாடக் குழந்தைகளுக்கு இடம் இருக்காது, உறவினர்கள் வந்தால்கூட கலகலவென சத்தமாகப் பேச முடியாது இப்படி ஏகப்பட்ட மனக்குறைகள். இவற்றையெல்லாம் விட செல்லப்பிராணி பிரியர்களின் பாடுதான் படு திண்டாட்டம்!

உயர்ரக நாயாக இருந்தாலும், அழகான பூனைக்குட்டியாக இருந்தாலும் அபார்ட்மென்ட்டில் வளர்ப்பது இன்றையச் சூழலில் மிகவும் கடினமான காரியம். பல குடியிருப்புகளில் ‘செல்லப்பிராணிகளை வளர்க்கக்கூடாதுஎன்று விதியே இருக்கிறது. அந்த விதி இல்லாத இடங்களில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் இடைஞ்சல் வரும். ‘உங்க டாமி வீட்டு வாசல்ல அசிங்கம் பண்ணிடுச்சு’, ‘குழந்தையை பிராண்டிடுச்சுஎன்று தினம் ஒரு பிரச்னை தலை தூக்கும். இந்த சிக்கல்கள் எதுவும் இல்லாமல் செல்லப்பிராணி வளர்க்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றவை ‘ஹாம்ஸ்டர்ஸ்’.

Image

பார்ப்பதற்கு எலி மாதிரியே இருகும். ரொம்ப சாது. ‘தேன் கரடி, ‘பாண்டா கரடி, ‘கருப்பு கரடி, ‘ரஷ்ய குள்ளர்கள் என எக்கச்சக்கமான செல்லப் பெயர்கள் இதற்கு உண்டு. முதன் முதலில் சிரியாவில்தான் இதை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தார்கள். பிறகு மற்ற நாடுகளிலும் பிரபலமானது. தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ஹாம்ஸ்டர் வகைகள் கிடைக்கின்றன. சிரியன் வகை, பார்ப்பதற்குக் கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும். கிட்டத்தட்ட 8 இன்ச்சுக்கு வளரும். ‘டார்ப் எனப்படும் இனம் மூன்றரை முதல் 4 இன்ச் வரை வளரும். சீன வகை மிகவும் உயரம் குறைவானது. இது 3 இன்ச் வரை மட்டுமே இருக்கும். ரஷ்யன் இனம் இன்னமும் உயரமும் குறைவாக இருக்கும். இதை ‘ரஷ்ய குள்ளர்கள், ‘குள்ள வெள்ளெலிகள் என்று சொல்வார்கள். ஒவ்வொன்றின் தன்மையைப் பொறுத்து இந்த வெள்ளெலிகள் ஜோடி ரூ.600 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.Image

 

ஒயிட், பிரவுன், சாம்பல் நிறம், தேன் நிறம் என விதவிதமான வண்ணங்களில் கிடைக்கின்றன. இதன் ஆயுட்காலம் இரண்டே முக்கால் வருடங்கள். பராமரிப்புச் செலவுகள் அதிகம் இல்லை. உணவுக்கும் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களே போதுமானவை. முட்டைக்கோஸ், காலிஃபிளவர், சோளம், வேர்க்கடலை, பாசிப் பருப்பு, பட்டாணி, கொண்டைக்கடலை இவை எல்லாமே ஹாம்ஸ்டர்ஸின் ஃபேவரிட். குழந்தைகளுக்கு பீடிங் பாட்டிலில் பால் கொடுப்பது போல், தண்ணீரை ஊற்றி கூண்டுக்குள் வைத்துவிட்டால் போதும். அதற்கு தேவைப்படும்போது தண்ணீரை உறிஞ்சி குடித்துக் கொள்ளும்.

 

இதற்கென தனியாக கூண்டுகள் கிடைக்கின்றன. எளிமையான கூண்டு என்றால் ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும். ஹாம்ஸ்டர்ஸ் சுறுசுறுப்பாக விளையாடும் தன்மை கொண்டது. கம்பிகளின் மேலும் கீழும் ஏறி விளையாடும். அதற்கேற்றாற்போல நவீன வசதிகள் கொண்ட கூண்டு கிடைக்கிறது. அதன் விலை குறைந்தது 2 ஆயிரம் ரூபாய். அதிகம் சப்தம் எழுப்பாத விலங்கு இது. அவற்றுக்குள் சண்டை வரும் போது மட்டும்தான் சப்தம் வெளியே கேட்கும். கூண்டுக்குள்ளேயே அடைத்து வைக்காமல், வாரத்தில் 3 நாட்கள் வெளியே எடுத்து விளையாடினால் உங்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துவிடும். அதற்குப் பிறகு உங்கள் குரலைக் கேட்டாலே போதும், ஓடி வந்து விளையாடும் அளவுக்கு நெருங்கிவிடும்.Image

இந்த எலிகள் பகல் நேரத்தில் தூங்குபவை. அதற்கு ‘பெட் எனப்படும் படுக்கை வசதி அவசியம். வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் மரத்தூள்தான் படுக்கை. கொஞ்சம் மென்மையான தன்மை கொண்ட இந்த மரத்தூளை தேவையான அளவுக்கு கூண்டுக்குள் பரப்பி, அதன் மேல் ஹாம்ஸ்டர்ஸை விட்டால் போதும். ஒரு ஜோடி எலிகள் என்றால் மாதத்துக்கு ஒருமுறை மரத்தூளை மாற்ற வேண்டும். இந்த மரத்தூள் செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேகக் கடைகளில் கிடைக்கிறது. விலை ஒரு கிலோ ரூ.300 முதல். இந்த மரத்தூளை வெயிலில் காயவைத்து, மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் செலவு அதிகம் ஏற்படாது.Image

 

கொறித்துத் தின்னும் இயல்பு கொண்ட இந்த எலிக்கு சாப்பிடுவதில் கொள்ளைப் பிரியம். கிட்டத்தட்ட முயல் மாதிரி. மோப்ப சக்தி அதிகம். ஒரு சின்ன சைஸ் கேரட் வாங்கி வந்தாலும், கூண்டின் கதவருகே நின்று, நம்மைப் பார்த்து ‘சாப்பாடு கொண்டு வந்து வை! என்பது போல் பார்க்கும். கேட்கும் திறனும் இதற்கு அதிகம். வீட்டுக்குப் புதிதாக ஒருவர் வந்தால், அவர் குரலை வைத்து புதியவர் என அடையாளம் கண்டு அமைதியாக ஒளிந்து கொள்ளும். அவ்வளவு புத்திசாலி இந்தக் குட்டி எலி.

இதனுடைய கழிவுகள் மரத்தூளில் தங்கிவிடும். அதனால் எலிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது சுத்தம் செய்தால் போதும். மற்ற எலிகளைப் போல் கடிக்காது என்பதால், குழந்தைகளை இதனுடன் விளையாட தாராளமாக அனுமதிக்கலாம். ஒன்றரை மாத இடைவெளியில் குறைந்தது 6 குட்டிகள் போடும். ஒரு கூண்டுக்கு ஒரு ஜோடி எலிகள் போதுமானவை. அப்போதுதான் அவற்றால் ரிலாக்ஸாக விளையாட முடியும். ரொம்ப சமர்த்தாக இருக்கும் என்பதால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் பிரச்னை செய்ய மாட்டார்கள். ஹாம்ஸ்டர்ஸ் வளர்க்கிறீர்களா? இது எங்க வீட்டு உறுப்பினர்களில் ஒண்ணு என்று தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

– எஸ்.பி.வளர்மதி  

படம்: கிருஷ்ணமூர்த்தி

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s