ப்ரியங்களுடன் ப்ரியா-26

காதல்னா என்னங்க ?

woman1

காதல்னா என்னங்க ? ரெண்டு உசுரு ஒரு உசுரா மாறுவது தானே ??

அதிலே ஒரு உசுரை துடிக்க துடிக்க கொன்னுட்டு போறப்ப அதில் எங்கே காதல் என்ற வார்த்தை வருது ?

எங்கே செல்லும் இந்த பாதை …
யாரோ யாரோ அறிவார் …

கண்டிப்பா நாம அறியலாம் தோழிகளே…

எல்லாத் துறைகளிலும் பெண்கள் இப்போது எவ்வளவோ முன்னேறி விட்டனர். ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்பது இப்போதைய உலகில் உறுதி செய்யப்பட்டு விட்டது என்று சொல்லப்படுகிறது . ஆனால், இன்னமும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையே, அடிக்கடி நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்டுகின்றன.

woman2

தயவுசெய்து இனி அதை  காதல் என்று சொல்லாதீங்க யாரும்…

தனக்கு இல்லாத ஒன்று  யாருக்கும் இல்லை என்ற மனநிலையில் இருப்பவன் மனதில் எப்படி காதல் என்ற ஒன்று இருக்கும் ?

ஒரு வேளை அந்த  சைக்கோக்களை அந்த பெண்கள் காதலித்தால் / திருமணம் செய்தால் தினம் தினம் செத்துதான் பொழைக்கணும்…

இதில் யாருடைய தவறு் என்று ஆராய ஆரம்பித்தால், ஒவ்வொரு நிகழ்விலும் செயலிலும் தவறுகள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

என்றைக்கு தவறான பாதையில் செல்லும் ஹீரோக்களை பொண்ணுங்க  காதலிச்சு திருத்துவதை விசில் அடிச்சு ரசிக்க ஆரம்பிச்சோமோ, அன்றைக்கே நமக்கு கேடுகாலம் ஆரம்பித்து விட்டது.

சினிமாவை சினிமாவாக பார்க்காமல் அதை வாழ்வியல் தத்துவம் போல உணர ஆரம்பித்த காலமே இந்த ஒருதலை காதல், தறுதலை காதல், கன்றாவி காதல் எல்லாமே…

செய்கிற அவ்வளவு அயோக்கியத்தனத்துக்கும் பின்னால் காதல் என்ற ஒற்றை வார்த்தையை அடைமொழியாக்கி விட்டால் நியாயம் ஆகிவிடுமா ?

இருக்கும் பஞ்சாயத்தில் இப்போ கொஞ்ச வருஷமா புதுசா ஒண்ணு…

சோசியல் மீடியா…

இருங்க இருங்க… உடனே கோபப்படாதிங்க… தத்தளித்த சென்னையை தமிழக அரசே சீர் செய்ய காலதாமதம் ஆன நிலையில், ஒற்றை போனும் 1 gb டேட்டாவும் வச்சு சரி செஞ்சதை இந்த உலகமே மறக்காது. அதுதான் சோசியல் மீடியா வின் பலம்… அதை சரியான பாதையில் பயன்படுத்துகையில் எல்லாமே சரியா இருக்கும்.

நான் எல்லோரையும் போல இங்கே உபதேசம் செய்யவில்லை… ‘கவனமா பயன்படுத்துங்க… சாட் செய்யாதீங்க… நம்பர் கொடுக்காதீங்க… போட்டோ போடாதீங்க… இரவு ரொம்ப நேரம் இருக்காதீங்க’ என்றெல்லாம்…

இணையம் பயன்படுத்துவது எப்படி உங்கள் உரிமையையோ, அதை விட முக்கிய கடமை உங்கள் குடும்பத்தை பாதுகாப்பது.

woman

ஒரு சிறிய தவறு நடந்தாலும் கூட இப்போது இருக்கிற தகவல் தொழில்நுட்ப உதவியில் 5 நிமிடத்தில் காவல்துறை உங்கள் இல்லம் வந்து கதவை தட்டும் வாய்ப்புகள் இருக்கிறது.

நம் சிறுசிறு விளையாட்டுகள், தவறுகள் எல்லாம் நம்மை மீறி நமது குடும்பத்தை தொடும்போது அங்கே அதன்பிறகு  நமக்கு கிடைக்கும் மரியாதை எப்படி இருக்கும் ?

நண்பர்கள் தேர்வு என்பது இனிமேல் வரப்போகிற மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் விட கடினமா இருக்கணும்.

இது பொதுவெளி… இது ஒரு நடைபாதை… எதிர் வர்றவங்க பிடிக்கலை என்றால் நாமே வழிவிட்டு இறங்கி விடுவோம்… தப்பே இல்லை.

எனக்கும் இங்கே நல்ல உறவுகள் நட்புகள் உண்டு. என்னோட 600 நண்பர் வட்டத்தில் ஒரு 10 இல் இருந்து 15 பேர் மட்டும்தான் வீடு வரை உள்ள நட்பாக இருக்காங்க.

அவங்க குடும்பத்தில் இருப்பவங்க எங்க வீட்டோடும்  நாங்க அவங்க வீட்டோடும் இணைந்து இருக்கோம்… அதான் நம்பிக்கை . அந்த நம்பிக்கையைப் பெறும் நட்புகள் கிடைப்பதும் வரமே.

அதற்காக மற்றவர்கள் யாரும் நட்பில்லை என்று அர்த்தம் அல்ல. எனக்காக, என் குடும்பத்துக்காக சற்று விலகி இருக்கேன் என்று மட்டுமே அர்த்தம்.

ஓர் அவசரத்துக்கு இரவு 12 மணிக்கு மேல் கூட, என் நண்பனின் மனைவிக்கு போன் செய்து, ‘அவனை எழுப்பி விடுமா’ என்று சொல்லி இருக்கிறேன்.

அதான் நட்பு… அந்த நட்பை இங்கே தேர்வு செய்வதில்தான் சில தடுமாற்றங்கள் எல்லோருக்கும்.

ஒருவருக்கு நல்லவராக இருக்கும் ஒருவர் மற்றவருக்கு கெட்டவராக இருக்கும் அபாயம் மிக அதிகம் உள்ள உலகம் இது… இணைய உலகில் அடிக்கடி நடப்பதும் இதுதான்…

ஒரு சிலரோட பதிவுகளில் அவர்களின் தவறான எண்ணங்களும் எழுத்தாக வரும்… அதைக் கடப்பதும் தவிர்ப்பதும் நாமே.

என் இப்படி எழுதுறீங்க என்று கேட்க வேண்டும் என்பதற்காகவே இங்கே சில பேர் அப்படி எழுதுவாங்க. அவர்களைத் திருத்துவது நம் வேலை இல்லை.

நம்மையே மறந்து இங்கே நாம் இருக்கும் போதும்  நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைக்கும் ஒரே சக்தி நம் குடும்பம் மட்டும்தான்…  அதை நினைத்தாலே  போதும்… பல பிரச்னைகளில் இருந்து எளிதாக விடுபடலாம்.

இப்போதெல்லாம் ஒரு சிறுகுற்றம் நடந்தாலே காவல்துறை உடனே கையில் எடுப்பது சம்பந்தப்பட்டவர்களின் சோசியல் மீடியா பதிவுகள் / இன்பாக்ஸ் / வாட்சப் / பரிமாற்றம் மட்டுமே.

எவனோ / எவளோ செய்த குற்றங்களுக்கு நாம் / நம்ம குடும்பம் என் அலைய வேணும்?

சரிங்க … போனதை பற்றி விவாதம் செய்ய வேணாம்… இனி அழ தெம்பு கூட இல்லை… நடப்பவற்றைக் காணும் பொழுது …

நம் எல்லோருக்குமே தோளுக்கு மேல வளர்ந்த பசங்க இருக்காங்க. நம்மைத்தான் நம்பி இருக்காங்க. நாம்தான் அவர்களுக்கு வலி இல்லாத உலகிற்கு வழி காட்டணும்.

24 மணிநேரமும் அவர்களுக்கு செக்யூரிட்டி வேலை பார்க்க வேணாம்.

கிடைக்கும் நேரத்தில் அவர்களுக்கு அவர்களின் விஷயங்களை நம்மோடு பகிர நேரம் ஒதுக்கினாலே போதும்… வேண்டாத விஷயம் எது…சரியான விஷயம் எது என்று அவர்கள் புரிந்துகொள்ள…

கலி காலம் என்று கவலைப்பட்டு கொண்டு இருந்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா ?

நாம்தான் சரி செய்யணும்… செய்வோம்!

நல்லதே நடக்கும்… நடக்கணும்!

woman4

  • ப்ரியா கங்காதரன்

சிறுகதை

காவிரிக்கரை பெண்ணே…

புவனா ஸ்ரீதர்

ilayaraja

வருடம் 1990.  ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.  தெய்வ நாயகி மிஸ் எங்க வகுப்பிற்கு வந்ததும் எல்லோரையும் ஒரு முறை பார்த்தார். நீங்க ரெண்டு பேரும் எந்திருங்க, போன வருசம் போலவே நீ கிளாஸ் லீடர், தேவி அஸிஸ்டெண்ட் லீடர் சரியா?

போச்சுடா மனசுக்குள் சொல்லிட்டு சரி மிஸ் என்றேன். வேற வழி!

காரணம் மிஸ் ஸ்கூலுக்கு வரவே மாட்டாங்க பாதி நாள் நாங்களே தான் படிச்சுக்குவோம். இப்போ நாங்க 10 வது வேற, என்ன பண்ண போறாங்களோ தெரில…

கிளாஸ் முடிஞ்சதும் நீ மட்டும் என்ன வந்து பாரு.

சரி மிஸ்.

என்னவா இருக்கும்டி தேவி மெதுவா கேட்டா. தெரிலடி. வகுப்பு முடிந்ததும் போனேன்.

மிஸ்…

ம்…..வா. என் பையன் இப்போ 12 வது போறான் அவன் கூட நான் இருக்கனும். நான் அப்பப்போ வருவேன் நீ தான் கிளாஸ் சத்தம் வராம பாத்துக்கனும். சரியா?

ம்..சரி மிஸ்.

அரசு பெண்கள் பள்ளியில் இவரும், பக்கத்து காம்பவுண்ட்ல ஆண்கள் பள்ளியில் அவர் கணவரும் ஆசிரியர்கள். யாரும் ஒன்றும் பண்ண முடியாது.

எங்க வகுப்பில் நான்கு குரூப்கள். அவங்கள சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.

எங்க குரூப்ல நானு, முத்துலட்சுமி, ரமா, தேவி, ரஷிதாபேகம். அஞ்சு பேரும் ஒண்ணாவே சுத்துவோம். தேவிக்கு சிம்ம குரல் கணீர்னு பாடுவா. எல்லாரும் உக்காந்து மணிக்கணக்குல அவ பாடறத கேப்போம்.

போர் அடிக்குது பாடுடி…

“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே”….

துளி சத்தம் இல்லாம அமைதியா கேப்போம்.

முத்துலட்சுமி மட்டும் கமல் பாட்டுதான் கேப்பா. கமல் பைத்தியம். பானு ரஜினி ரசிகை. முத்துவ வம்பிழுப்பதே பானுக்கு வேலை.

எதாவது கேட்டா கூட கமல் பாட்டு வரிகள்ல இருந்தே தான் பதில் சொல்லுவா. அவ எப்பவும் கிளாஸ்க்கு லேட்தான். 3 கிமீ நடந்து வருவா.

ஏன் லேட் வெளிய நில்லு.

‘பொன் மானே கோபம் ஏனோ?’

பாடாம வெளியவே நில்லு. எப்ப பாரு கமல் பாட்டா பாடிட்டு.

‘காவல் காப்பவன் கைதியா நிற்கிறேன் வா… பொன் மானே…’

சரி உள்ள வந்து தொல.

‘மங்கை உன் மனதினை கவருது, மாறன் கணை வந்து மார்ப்பினில் பாயுது, இதழில் கதை எழுதும் நேரமிது…”

சரி போய் உக்காரு.

ஏ அவ கமல் பொண்டாட்டிடி.. பானு வம்பிழுப்பா.

அவளுக்கு என்னடி நதியா மாதிரி அழகா தானே இருக்கா, நான் மட்டும் பையனா இருந்தா இவள கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவேன் … தேவி எப்பவும் முத்துக்குதான் சப்போர்ட் பண்ணுவா.

பானுக்கு முத்து மேல லேசா பொறாமை கூட உண்டு.

எப்படியோ படிச்சு ஒரு வழியா 10வது முடிச்சோம். ரிசல்ட் வந்தது. ரமாவும் நானும் மட்டும் 400 மதிப்பெண் மேல. மத்தவங்க பாஸ்.

நான்  பாலிடெக்னிக் சேர போறேன்டி. முத்து நீயும் வரியா?

எங்க வீட்ல படிக்க வைக்க மாட்டாங்கடி எனக்கு ஸ்ரீரங்கம் ஸ்கூல் தான் கடைசி வரை.

நீ நல்லா படி.

ம் சரிடி.

அவ இன்ஜினியரம்மாடி… பானு சத்தமா கத்த எல்லாரும் சிரிக்க, பிரிய மனமின்றி பிரிந்தோம்.

———————————————————————–

நானும் புது பிரண்ட்ஸ், புது இடம் பிசியாகிட்டேன். செமஸ்டர் லீவ்ல ஸ்கூல் போய் எல்லார் கூடவும் பேசிட்டு, முத்துவோட கமல் பாட்டு கேட்டுட்டு வருவேன்.

அடுத்த செம் லீவ்ல ஸ்கூல் போக முடியல. அவளுங்களும் 11 வது முடிந்து 12 வது வந்துடாங்க. 6 மாதம் கழித்து ஸ்கூலுக்கு போனேன். முத்து மட்டும் சோகமா இருந்தா.

என்னாச்சுடி?

ஒன்னுமில்ல… சொல்லும் போதே அழுதா.

பானுதான் சொன்னா, தினமும் ஸ்கூல் போகும் போது யாரோ ஒருத்தன் இவள பார்த்து இருக்கான். போன வாரம் ஒரு கர்சீப்ல, ‘காவிரி கரை பெண்ணே’னு ஆரம்பிச்சு லவ் லெட்டர் எழுதி முத்துக்கு கொடுத்துருக்கான். அத அவ சித்தப்பா பாத்துட்டார். கர்சீப்பை தீ வச்சு எரிச்சுட்டார். வீட்ல ஒரே பிரச்னை. அதான் அழறாடி.

இதில் இவ தப்பு ஒன்னும் இல்லயே பின்ன எதுக்கு பிரச்சனை பண்றாங்க – நான் கேட்கவும், முத்து பேச ஆரம்பிச்சா…

அதான் எனக்கும் புரியல. எப்பவும் வீட்ல ஒரே திட்டு. உறவுக்காரப் பையனுக்கே என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா பேசிக்கறாங்க. இனி ஸ்கூலுக்கு வர மாட்டேன்னு தோனுது… – சொல்லிட்டு திரும்ப அழுதாள்.

உனக்கு 17 வயசு தானே ஆகுது. அதுக்குள்ள கல்யாணமா, நீ ஒத்துக்காதடி.

என்னை யாரும் மதிக்கறதே இல்லடி அவங்க இஷ்டப்படி கல்யாண ஏற்பாடு நடக்குது. இன்னும் 2 மாசத்துல கல்யாணம்னு சொல்றாங்க.12வது கூட படிக்க மாட்டேன் போல. என் விதி அவ்ளோதான்…

தேம்பி தேம்பி அழுதவளை பரிதாபமா எல்லோரும் பார்த்தோம்.

————————————————————————–

கொஞ்ச நாள் கழித்து பானு தான் சொன்னா, முத்துக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு. யாரையும் கல்யாணத்துக்கு கூப்டலடி. பாவம் எப்படி இருக்கான்னு தெரிலடி.

அவ சொல்லவும்…

யார் யாருக்கு என்ன வேஷமோ னு எங்கயோ பாட்டு சத்தம் கேட்டுச்சு.

தேர்வு, படிப்புன்னு நாள் ஓட ஆரம்பிச்சுது. 12 வது முடிச்சு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் SRC காலேஜ் சேர்ந்தாங்க. நானும் அப்பப்போ போய் எல்லாரையும் பார்த்துட்டு வருவேன். முத்து என்ன ஆனான்னு மட்டும் தெரியவே இல்ல.

நாட்கள் வருடங்களா வேகமாக ஓடிடுச்சு. கல்லூரி முடித்ததும் ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆச்சு. யார் கூடவும் தொடர்பு இல்லாம போச்சு.

குடும்பம், குழந்தைகள் னு தனி உலகத்துல வாழ பழகியாச்சு. அப்பப்ப முத்து நினைவு வரும்.

————————————————————————

20 வருடம் ஓடியாச்சு. ஒரு நாள் போன் வந்தது.

நான் முத்து பேசறேன்டி.ஸ்ரீரங்கம் கோயில் வரீயா உன்ட பேசனும்.

நிஜமா கனவா?

ம்.. வரேன்டி எப்படி என் நம்பர் கிடச்சுது?

எல்லாம் நேர்ல பேசலாம் வா.

ஸ்ரீரங்கம் பெருமாள் ஒய்யாரமா படுத்துகிட்டுகூட்டத்தில் முண்டியடிச்சு வரும் பக்தர்களை பார்த்து அருள்பாலித்து கொண்டிருந்தார்.

முத்துவும் அவள மாதிரியே ஒரு பொண்ணும்…

பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். என்னென்னவோ பேசனும் நினச்சு ஒண்ணும் பேசாம ஒரு பெரிய மௌனம்.

எங்கடி போன? என்ன ஆன? எவ்ளோ நாள் உன்ன பத்தி கவல பட்டோம் தெரியுமா?

ம்… கல்யாணம் முடிந்ததும்  அவர் கூட மைசூர் போய்ட்டேன். கூட்டுக் குடும்பம். சமைக்க, மகள கவனிக்க, உறவுகாரங்கட்ட நல்ல பேர் எடுக்க போராடியே என் வாழ்க்கை ஓடிடுச்சுடி.

ம்… மேற்கொண்டு எதுவும் படிக்கலயா?

இல்லடி. இப்பவும் ஆரம்பிச்ச இடத்துலதான் நிக்கறேன். சரி விடு… இவதான் என் ஒரே பொண்ணு.

ஹலோ ஆன்ட்டி நான் சிந்து. அம்மா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க.

அழகாகச் சிரித்தாள்.

ஹாய் சிந்து உன் அம்மா மாதிரியே இருக்கயே. என்ன படிக்கற?

அவ தோள் மேல கை போட்டேன்.

நான் அம்மா மாதிரிதான். ஆனா ரொம்ப போல்ட் ஆன்ட்டி. சிஏ முடிக்கப் போறேன். அடுத்து ஆபிஸ் போடனும்.

படபடன்னு பேசினா.

ஓ… சூப்பர்மா. கலக்கு. அட்வான்ஸ் விஷ்ஷஸ்!

பெருமை பொங்க முத்து பார்த்தாள்…

இவள நல்லா படிக்க வச்சுட்டேன். இவ மனசுக்குப் பிடிச்ச பையனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டா என் வேல முடிந்ததுடி.

முத்து சொல்ல சொல்ல சிந்து வேற எங்கயோ வேடிக்கை பார்த்தா.

அதான் உன் அம்மா சொல்லிடாளே உன் மனசுக்கு பிடிச்ச பையன் யாராவது இருக்கானா?

இருக்கு, ஆனா இல்ல!

புரியலயே தெளிவா சொல்லும்மா.

ஆன்ட்டி நான் ஒரு பையன லவ் பண்ணே. அவனும் நல்லவன்தான். ஆனா, இங்க நிக்காத, இத பண்ணாத, அங்க போகாதன்னு ஒரே டார்ச்சர். எனக்கான ஸ்பேஸ் கொடுக்காதவன் கூட எப்படி ஆயுசு முழுசும் வாழ முடியும்? அதான் பிரேக்கப் பண்ணிட்டேன் ஆன்ட்டி.

எதுவும் பேசாம முத்துவும் நானும் நின்னோம்.

ஏனோ தெரியல காவிரிகரை பெண்ணேனு எழுதுன கர்சீப்பும், தேம்பி தேம்பி அழுத அந்த 17 வயசு முத்து முகமும் நினைவில் வந்து போனது.

Painting Credit: Artist Ilayaraja

Bhuvana

இறைவி

iraivi2ஒரு பொக்கே!

நல்லவர்களைப் பார்ப்பது ஓட்டல் சாம்பாரில் காயைத் தேடுவதுபோல கஷ்டமான வேலையாகிவிட்டது. இப்படி ஒரு காலத்திலும் யாராவது நல்லது செய்தால் அவர்களைத் தேடிப் பிடித்தாவது பாராட்டுவதுதான் அவர்களுக்கு இன்னும் ஊக்கமாகவும், மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கும்.

பீப் ஸாங் போன்ற விஷயங்களைக் கேள்விப்படும்போது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தப் பெரும்பாலானோர் தவறுவதில்லை. ஆனால்… நல்லது நடக்கும்போது மட்டும் பாராட்ட மறந்துவிடுகிறோம்… அல்லது அதை ரசித்துவிட்டு நகர்ந்துவிடுகிறோம்.

ஆமாம்…
‘இறைவி’ கார்த்திக் சுப்புராஜ் பற்றிக் கொஞ்சம் பேசுவோம்..

iraivi3

படத்தின் நிறைகுறைகளை விமர்சிப்பதற்கெல்லாம் பல சினிமா நிபுணர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அவருக்கு ரெட் கார்ட் போட்டது பற்றி ஆராயவும் பலர் இருக்கிறார்கள் என்பதால் நாம் அதைப் பேச வேண்டியதில்லை.

இதில், நாம் குறிப்பிட விரும்பும் விஷயம்… சமீபகாலத்தில் பெண்களை அவமானப்படுத்தாத, அசிங்கப்படுத்தாத படம் எதுவும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. பெரும்பாலானவை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ வகையறாவாக இருப்பதாகத்தான் ஞாபகம். இதற்காக வரலாறை எல்லாம் புரட்ட வேண்டியது இல்லை. ‘இறைவி’யுடன் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் கூட பெண்களைத் திட்டி ஒரு பாடல்… பல டபுள் மீனிங் வசனங்கள்… இன்னும் ஓர் ஆபாச பாடல்.. ‘புஷ்பா புருஷன்’ என்று அருவருப்பான கேரக்டர் என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது.

ஒரு படத்தை ஆரம்பிக்குபோதே, ‘ஒரு டாஸ்மாக் ஸாங் சார்… அதுல பொம்பளைங்களத் திட்டுறோம்… கானா பாலாகிட்ட வேணா கேட்டுப் பார்க்கலாம்’ என்றுதான் டிஸ்கஷனே நடத்துவார்கள் போல. அந்த அளவுக்கு சமீபகாலத்தில் பெண்களை அசிங்கப்படுத்தாத பாடலோ படமோ இல்லை என்று யார் தலையில் வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம்.

iraivi1

இந்த மாதிரி ஒரு ஆபாச சூழலில், பெண்களைத் திட்டாத படம் என்பதற்காகவே ‘இறைவி’க்கு பொக்கே தரலாம். நம்முடைய அம்மா, சகோதரி, தோழி என தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கிற பெண்களின் துயரங்களைப் பேசியிருப்பது இதுவரை தமிழ்சினிமாவில் நாம் பார்த்திராத ஓர் அதிசயம். அதிலும் பெண்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வெகுஜனப் படம் என்பது எல்லா இறைவிகளும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இத்தனைக்கும் அவர் டாக்குமெண்ட்ரி சினிமா எடுக்கிற ஆள் இல்லை. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ என இரண்டு ப்ளாக்பஸ்டர்கள் கொடுத்த ஒரு வெகுஜன இயக்குநர். மூன்றாவது படமான ‘இறைவி’யில் மிகவும் எதிர்பார்க்க வைத்த இயக்குநர். தன்னுடைய சினிமா மார்க்கெட் ஸ்டிராங்காக இருந்தும் இதுபோல பெண்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் ஒரு படம் எடுத்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜுக்கு பெரிய பொக்கேவே தரலாம்.

iraivi4

கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் அதிதீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். வாட்ஸ் அப் ப்ரொஃபைலிலேயே தன்னுடைய போட்டோவுக்குப் பதிலாக ரஜினி போட்டோவை வைத்திருக்கும் தீவிரவாதி அவர்.

அதனால், ‘கபாலி’ ஸ்டைலிலேயே கடைசியாக ஒரு வார்த்தை…
மகிழ்ச்சி!

  • ஜி.ஸ்ரீவித்யா

iraivi5

ஒரே ஒரு பூமி!

ரஞ்சனி நாராயணன்

image

உலகச் சுற்றுச்சூழல் தினம்

‘உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக’

என்ன அருமையாகக் கவிஞர் மனிதனுக்கே பூமியின் வளங்கள் எல்லாம் என்று சொல்லுகிறார்! மனிதன் ஆண்டு அனுபவிக்க என்று இறைவன் படைத்ததையெல்லாம் மனிதன் தனது பேராசையினால் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விழைந்ததன் விளைவே இப்போது உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒரு தினத்தை ஒதுக்கி எல்லோருக்கும் நமது சூழ்நிலை சரியில்லை என்று சொல்லி அதைச் சரிப்படுத்துவதும் நம் கடமையே என்று நமக்கு நினைவு மூட்டும் அளவிற்கு வந்து நிற்கிறது!

‘ஒரே ஒரு பூமி’ என்ற கோஷத்துடன் 1973 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஆரம்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. நம்மைச் சுற்றி ஆரோக்கியமான பசுமையான சூழல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம்  பற்றியும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வரும் கேடுகள் பற்றியும் உலக மக்களிடையே இது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கொண்டாட்டம். சுற்றுச்சூழலை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை. யாரோ காப்பாற்றுவார்கள் அல்லது அரசு பார்த்துக்கொள்ளும் என்று நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது, அதை எப்படிப் பாதுகாப்பது என்பதற்கான வழிகளை பற்றிப் பேசுவதும் கூட இந்த நாளை நாம் அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். ஐக்கிய நாடுகள் சபையால் மிகப்பெரிய அளவில் அனுசரிக்கப்படும் இந்த உலகச்சுற்றுச்சூழல் தினம் உலகில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள், அரசு மற்றும் ஆரோக்கிய அமைப்புகள் சுற்றுச்சூழலைக் காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசுவதற்காக ஏற்படுத்தப்பட்ட  ஒரு நாள்.

image

அப்படி என்ன நம் சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது?

மனிதன் எப்போதெல்லாம் பேராசை கொண்டு இயற்கைக்கு ஊறு விளைவிக்கிறானோ அப்போதெல்லாம் இயற்கை சீறுகிறது. மனிதா நீ உன் எல்லையை மீறுகிறாய் என்று எச்சரிக்கை செய்கிறது. ஆனால் நாம் தொடர்ந்து இயற்கையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திக் கொண்டே வருகிறோம். விளைவு திடீர் மழை, தொடர்ந்து வரும் வெள்ளம். விவசாய நிலங்களிலும் நீர் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் புகுந்து மனித உயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்துகிறது.

மழை பெய்ய வேண்டிய காலங்களில் பெய்யாமல் போவதால் ஏற்படும் வறட்சியால் உணவுப் பயிர்கள் பாதிக்கப்படுவது, உணவுப் பொருட்கள் வீணாவது, உலக வெப்பமயமாதல், அழிந்து போகும் அல்லது மனிதனின் பேராசையினால் அழிக்கப்படும் காடுகள்; காடுகள் அருகி வருவதால் விலங்குகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இதன் காரணமாக மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் மோதல்கள், உயிரிழப்புகள் இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

image

ஒவ்வொரு வருடமும் இந்த உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒரு மையக்கருத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த வருட மையக்கருத்து ‘GO WILD FOR LIFE’ – வனவிலங்குகளை, வனங்களைப் பாதுகாப்பது, வனவளத்தை அநியாயமாக திருடி வர்த்தகம் செய்வதை எதிர்ப்பது

வனவளம் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?

நம்மைப் போலவே இந்த பூமியில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு நம்முடன் இயைந்து வாழப் பிறந்தவை வனவிலங்குகளும், செடி கொடி, மரங்களும். அவற்றை வாழ வைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஆனால் இங்கு நடப்பதென்ன?

சட்டவிரோதமாக வனவிலங்குகள் அவற்றின் இறைச்சி, தோல், உரோமம், மற்றும் தந்தம் போன்றவற்றிற்காக வேட்டையாடப்பட்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சில விலங்குகள் அவற்றின் இரத்தத்திற்காகவும், மருந்துகளுக்காகவும் கொல்லப்படுகின்றன. நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த வியாபாரத்தால் நமது பூமியின் பல்லுயிர்கள் அழிந்துகொண்டு வருகின்றன. இயற்கை வளங்கள் திருடப்படுகின்றன. பல விலங்கினங்கள் முற்றிலும் அழிந்தே போய்விடும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான விலங்குகள் சின்னச்சின்ன பூச்சிகள் அழிந்தே விட்டன. காட்டுவிலங்குகள் திருட்டுத்தனமாக கொல்லப்பட்டு, கடத்தப்படுவதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன் நமது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. திட்டமிட்டக் குற்றங்கள், லஞ்ச லாவண்யங்களுக்கும் இவை வழிவகுக்கின்றன. இதனால் உலகம் முழுவதும் ஒரு பாதுகாப்பின்மை உணரப்படுகிறது.

வனக்குற்றங்கள் பெருகுவதால், நாடுகளின் தனித்த அடையாளங்களான யானை, காண்டாமிருகம், புலி, கொரில்லா கடல் ஆமைகள் ஆகிய உயிரினங்கள் அருகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. காண்டமிருங்கங்களில் ஒருவகையான ஜாவன் ரைனோ இனம் 2011 ஆம் வருடம் வியட்நாமில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதே வருடம் கேமரூனில் கருப்பு காண்டாமிருகங்கள் அழிந்துவிட்டன. காம்பியா, பர்கினோ ஃபாஸோ, பெனின் டோகோ முதலிய நாடுகளிலிருந்து ஏப் எனப்படும் பெரிய மனிதக் குரங்குகள் மறைந்துவிட்டன. கூடிய சீக்கிரமே மற்ற நாடுகளிலிருந்தும் இந்த விலங்கினம் மறையக்கூடும். வெறும் விலங்கினங்கள் மட்டுமல்ல, மூங்கில் மற்றும் பூக்கள் கூட வன உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. ஆர்சிட் பூக்கள், ரோஸ்வுட் எனப்படும் மரங்களும் மறைந்து வருகின்றன. அதிகம் அறியப்படாத பல பறவையினங்களும் இதில் அடங்கும். கடல் ஆமைகள் அவற்றின் இறைச்சிக்காகவும் அவற்றின் மேல் கூடுகள் செயற்கை நகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் செய்வதற்காகவும் வேட்டையாடப்படுகின்றன.

இந்தவகைக் குற்றங்களைத் தடுக்க மிகக்கடுமையான கொள்கைகளை அரசு அமல்படுத்தியிருக்கிறது. இது தவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சமுதாய பாதுகாப்பிற்கான முதலீடுகள், சட்ட அமலாக்கம் என்று பலவிதங்களிலும் நடவடிக்கை எடுத்ததில் சில சில வெற்றிகள் கிடைத்திருக்கின்றன என்பது உண்மை. ஆனாலும் பல உயிரினங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் காட்டு விலங்கினங்களை காப்பதை நம் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். நமது தொடர்ந்த முயற்சிகள் பல உயரினங்களை வாழவைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

image

செய்யவேண்டியவை:
தந்தத்தினாலும், விலங்குகளின் உரோமம் மற்றும் தோல் இவைகளினால் செய்த பொருட்களை வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இவைகளுக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வரவேற்பைக் கண்டு இதற்காக காட்டு விலங்குகளை நெஞ்சில் இரக்கமின்றிக் கொல்லும் கயவர் கூட்டம் இருக்கிறது. நமது தேவை குறையும்போது விலங்குகளும் அநியாயமாகக் கொல்லப்பட மாட்டா.
காடுகளை அழித்து வீடுகள், தொழிற்சாலைகள் அமைப்பதை தடுக்க வேண்டும்.
வீடுகளை அழகுபடுத்தவும் காகிதங்களுக்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. நகரத்தின் விரிவாக்கத்திற்காக சாலைகள் அமைக்கப்படும்போது அங்கு பல வருடங்களாக வளர்ந்து கிளை பரப்பி, நிழல் கொடுக்கும் பழைய, பெரிய மரம் தான் முதல் பலி ஆகிறது. புதிதாக அமைக்கப்படும் சாலைகளிலும் நிழல் தரும் மரங்களை அமைக்கவேண்டும். அரசு இயந்திரமே எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல், தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவ முன்வர வேண்டும்.

இலவசமாக நமக்கு கிடைக்கும் சூரியசக்தியை வீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
மாசுபடாத நதி நீர், சுத்தமான கடற்கரைகள், பனிமூடிய மலைகள், இயற்கை வளம் நிறைந்த காடுகள் இவை நமது அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும்படி செய்வது நம் கடமை.

image

பூமி கீதம் – இந்தியக் கவிஞர் திரு அபய் குமார் இந்த பூமி கீதத்தை இயற்றியிருக்கிறார். இந்தப் பாடல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளான அரபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஹிந்தி மற்றும் நேபாளி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பாடப்பட்டிருக்கிறது.

Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the continents and the oceans of the world
united we stand as flora and fauna
united we stand as species of one earth
black, brown, white, different colours
we are humans, the earth is our home.

Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the people and the nations of the world
all for one and one for all
united we unfurl the blue marble flag
black, brown, white, different colours
we are humans, the earth is our home.

ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு இந்த நாளை முன்னிலையில் நின்று தனிச்சிறப்புடன்  கொண்டாடுகிறது. இந்த நாடு தனது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிறப்பு முயற்சிகளை எடுக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் அங்கோலா நாடு இந்த விழாவை முன்னெடுத்துக் கொண்டாடுகிறது. இந்த நாட்டின் காடுகளில் வாழ்ந்து வரும் ஜயன்ட் சாபெல் ஆண்டிலோப் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. இந்த மானினத்தையும் மற்ற காடு வாழ் பிராணிகளையும் காக்க  அங்கோலா அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.

அரசு எத்தனைதான் சட்டதிட்டம் போட்டாலும், அவற்றில் உள்ள ஓட்டைகளை சாதகமாக எடுத்துக் கொண்டு மனிதம் குற்றம் புரிகிறான். மனிதனின் இந்த குணம் மாற வேண்டும். மனிதனும், விலங்குகளும் இணைந்து, இயைந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. இத்தனை வருடங்கள் இதை மறந்து இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி வருகிறோம். இனியாவது நமது பேராசைக்கு சற்று ஓய்வு கொடுத்து நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ எல்லாவகையிலும் தகுதி உள்ள உயிரினங்களை வாழ விடுவோம்.

இந்த உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை நாம் எல்லோரும் எடுப்போம்.

image

http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com

http://thiruvarangaththilirunthu.blogspot.in/

http://isaipaa.wordpress.com/

ப்ரியங்களுடன் ப்ரியா–25

th6

தைராய்டு

World Thyroid Day / May 25, 2016

உலக தைராய்டு தினம் / மே 25, 2016

th2

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா  இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல..

நான் ரொம்ப குறைவா டையட் உணவு தான் சாப்பிடறேன்.. ஆனாலும் உடம்பு வெயிட் போட்டுடுது.. யோகா வாக்கிங் எல்லாம் போறேன் ஆனாலும், உடம்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம்.. அதற்கு மாற்றாக, வேறு சிலரோ ஒல்லிப் பிச்சான்களாக இருப்பார்கள். எப்போ பார்த்தாலும் எதையாவது சாப்டுட்டே இருக்கா ஆனால் பாரு எவ்வளவு சாப்பிடாலும் உடம்பு வரவே இல்ல ரொம்ப ஒல்லியா வீக்கா இருக்கான்னு  சொல்லுவாங்க..

th7

இதுக்கெல்லாம் என்னங்க காரணம் ??

தைராய்டு தான் ..

தைராய்டு என்றால் என்னங்க ?? அதை எப்படி  பிரியா தெரிஞ்சுக்கலாம்னு  நீங்க கேட்பது புரியுதுங்க … கொஞ்சம் கவனமா படிங்க இதை .

30 வயதை தாண்டும் நமது நாட்டு பெண்களுக்கு  30 முதல் 45 சதவிதம் வரை தைராய்டு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது ..

th4

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன..நம் அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்களால் தான் தைராய்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம் கழுத்தில் உள்ள நாளமில்லாச் சுரப்பி நம் உடல் இயக்கத்திற்க்கு தேவையான பணிகளை செய்கிறது.. பொதுவாக நம் உடலில் அயோடின் குறைபாட்டினால் தான் தைராய்டு பிரச்சனை வருகிறது.. இந்த நோய் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது..

நாளமில்லாச் சுரப்பிகளுள் மிக முக்கியமானது தைராய்டு சுரப்பி. இதில் சுரக்கும் தைராக்சின் எனும் ஹார்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது.

th3

ஆரம்ப அறிகுறிகள் :

மோசமான தசை தொனி (தசைத் தளர்ச்சி)

களைப்பு

குளிர் தாங்கமுடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல்

உளச்சோர்வு

தசைப்பிடிப்புக்கள் மற்றும் மூட்டு வலி

மணிக்கட்டு குகை நோய்

முன்கழுத்துக் கழலை

மெலிதல், விரல்நகங்கள் நொறுங்குதல்

மெலிதல், முடி நொறுங்குதல்

வெளிரிய தன்மை

குறைவான வியர்வை

உலர்ந்த, அரிக்கும் தோல்

எடை ஏற்றம் மற்றும் நீர்ப்பிடிமானம்

குறை இதயத் துடிப்பு (குறைவான இதயத்துடிப்பு வீதம் – நிமிடத்திற்கு அறுபது துடிப்புகள்)

மலச்சிக்கல்

வெகுநாளான அறிகுறிகள் :

மெதுவான பேச்சு மற்றும் தொண்டை கட்டி, குரல் உடைதல் – மெல்லிய குரலையும் கேட்க முடிதல்

வறண்ட வீங்கிய தோல், குறிப்பாக முகத்தில்

கண் புருவங்களின் வெளிப்பகுதி மெல்லியதாதல் (சைன் ஆப் ஹெர்டோக்ஹி)

இயல்பற்ற சூதகச் சுழல்கள்

குறைவான உடல் அடிப்பகுதி வெப்பநிலை

குறைந்த பொதுவான அறிகுறிகள் :

பழுதடைந்த நினைவுத்திறன்

பழுதடைந்த புலனுணர்வு செயல்பாடு (தெளிவற்ற மூளை) மற்றும் கவனமின்மை

குறைந்த மின்னழுத்த சமிக்ஞைகளிலும் ECG மாற்றங்களுடன் குறைந்த இதயத்துடிப்பு வீதம். குறைவான இதய வெளியீடு மற்றும் குறைந்த சுருங்கு திறன்.

இரத்தசை சர்க்கரைக் குறைவு எதிர்ப்பு(அல்லது இரவு உணவு)

மந்தமான அனிச்சைகள்

முடியுதிர்தல்

அனீமியா ஏற்படுத்தும் பழுதான ஹீமோகுளோபின் தொகுப்பு (குறைந்த EPO அளவுகள்), பழுதான குடல்சார்ந்த இரும்புத்தாது மற்றும் பொலிக்கமில உறிஞ்சும் தன்மை அல்லது பித்தபாண்டுலிருந்து வரும் B12 குறைபாடு

விழுங்குவதில் சிரமம்

ஆழமில்லாத மற்றும் மெதுவான சுவாச அமைப்புடன் மூச்சுவிடுதலில் சிரமம்

தூக்கம் நேரம் அதிகரிப்பு

உறுத்தும் தன்மை மற்றும் மனநிலை நிலைத்தன்மையின்மை

பீட்டா-கரோட்டின்[15] விட்டமின் A ஆக மாற்றப்படும் மோசமான செயலால் தோல் மஞ்சளாதல்

குறைவான GFR உடன் மந்தமான சிறுநீரகச் செயல்பாடு.

அதிகரித்த வடிநீர் கொழுப்பு

கடுமையான உளப்பிணி (மிக்ஸெடிமா மேட்னெஸ்) என்பது தைராய்டு சுரப்புக் குறைக்கு ஒரு அரிதான அறிகுறியாகும்.

சுவை மற்றும் மணம் உணர்திறன் குறைவு (அனோஸ்மியா)

Th1

தைராய்டு பிரச்சனையை ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்.. அவற்றின் அளவை பொருத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரு வகைப் படுத்தலாம்.. பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி  கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு கான்சேர் அளவுக்கு வந்து இருக்கிறது. முதலில் எல்லாம் எல்லாருக்கும் பிரஷர் , சுகர் பிரச்சனைகள் மட்டுமே இருந்தன. இப்போ ஃபுல் ஹெல்த் செக்கப் செய்யப்போகும் எல்லாருக்குமே பிரஷர் ஷுகரோடு தைராய்டும் இருப்பதாக ரிசல்ட் வருகிறது. T3, T4, TSH என்ற ஹார்மோன்கள் சுரப்புத்தான் இதற்கெல்லாம் காரணம்..

ரத்தத்தில் TSH அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு எனப்படும்..

T3,T4 ன் அளவு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு என்கிறார்கள்..

th9

தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும். அதேபோல், தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதிப்பு அதிகம்..

iodized உப்பு சேர்த்து கொள்ளுவது  தைராய்டு குறைபாடுகள் ஒரு சிலவற்றை தவிர்க்க உதவும். 40 வயதுக்கு மேலே பெண்கள் புல் செக் அப்  செய்து கொள்ளுவது நல்லது..

th8

ஹைப்போ தைராய்டு

இரத்ததில் தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவில் சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.. இது பொதுவாக

வயது பெண்களையும் பாதிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும், உடல் தளர்ச்சி,சோர்வு, அதிக தூக்கம், முடி உதிர்தல், மறதி,தலை வலி, கை,கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், குறைந்த குளிரைக்கூட தாங்க முடியாத தன்மை, முறையற்ற மாத விலக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும்..

தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப், போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பிற்க்கு அயோடின் அவசியம். ஆனால் இவை தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்ச விடாமல் தடுக்கும்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளுட்டன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்வி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்..

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால்,  அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்ட உடனேயே உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கால்சியமானது தைராய்டிற்காக எடுத்து வரும் மருந்துகளின் சக்தியைக் குறைத்துவிடும். எனவே பால் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்த சில மணிநேரங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

தைராய்டு பிரச்சனை இருந்தால், அது ஹைப்போவாக இருக்கட்டும் அல்லது ஹைப்பராக இருக்கட்டும், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

th5

ஹைப்பர் தைராய்டு

இரத்தத்த்இல் தைராக்சின் அதிக அளவில் சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு ஏற்படுகிறது.. பசி அதிகமாக இருக்கும், அடிக்கடி சாப்பிட்டாலும் உடல் மெலிந்து கொண்டே போகும், கை-கால்களில் நடுக்கம் இருக்கும்,சில சமயங்களில் உடல் முழுவதும் நடுங்கும்,காரணம் எதுவுமின்றி கோபம் வரும், அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருக்கும்,

தூக்கமின்மை,நாடித் துடிப்பு அதிகமாக இருக்கும்,மாதவிலக்குப் பிரச்னைகள்,கால் வீக்கம், மூட்டுவலி, ஞாபக சக்தி குறைவு, வேலைகளில் ஈடுபாடற்ற தன்மை தோன்றும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களால் முதலில் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு, அதில் அழற்சி ஏற்பட்டு, ஹைப்பர் தைராய்டு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள், ஜாம், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மாவுப் பொருட்கள் போன்றவற்றை தங்களின் உணவில் சேர்ப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும், உங்களுக்கு உணவில் இனிப்புச்சுவை வேண்டுமானால், தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மாவைத் தவிர்த்து, தானியங்களை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.

கழுத்தில் கட்டி ஏற்பட்டால்…:

கழுத்தில் தைராய்டு சுரப்பி உள்ள பகுதியில் சிறிய அளவில் கட்டி ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் நிலையில் வீக்கமும் விஷக் கட்டியும் ஏற்படும். இது நச்சுக் கழலை ஆகும்.

ஆரம்ப நிலையில் வலி இருக்காது. திடீரென கட்டி பெதாக வலிக்கத் தொடங்கும். சில சமயங்களில் பேச்சு நரம்பு பாதிக்கப்பட்டு, பேச்சுத் திறன் பறி போகவும் வாய்ப்பு உண்டு. எனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் நிலையில் எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம்.

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், உணவில் இஞ்சி, மஞ்சள், பட்டை போன்றவற்றை அதிகம் சேர்த்து வர, அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதே சமயம் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றில் கொய்ட்ரஜன் இயற்கை வடிவில் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, அதிகாலையில் சிறிது நேரம் சூரியக்கதிர்கள் சருமத்தின் மேல் படும்படி வாக்கிங் மேற்கொள்வது ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

ஒவ்வொருவரும் தினமும் முயற்சிக்க வேண்டும். அதற்கு தியானம், நல்ல பாட்டுக்களை கேட்பது, நண்பர் அல்லது குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பது என்று ஈடுபட வேண்டும்.

பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.

நாம எவ்வளவு தான் கோடி கோடியா சம்பாதிச்சாலும் இழந்த உடல் நலனை மட்டும் எப்போவுமே திரும்ப பெற முடியாது ,,

அதனால சரியான உணவு முறை,  உடற்பயிற்சி முறை என நம் உடம்பையும் மனசையும் நாம சரியாய் வைத்து கொண்டால் வருமுன் காத்து நம்மை நாமே பேணலாமே…

வாழ்க வளமுடன் !

  • ப்ரியா கங்காதரன்

IMG-20151106-WA0049

 

ப்ரியங்களுடன் ப்ரியா–24

தரையில் விளையாடிய காலம் மறந்து
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் …

game4

கூட்டாளிய சேத்துகிட்டு 
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய் 
சடுகுடுவாடி 
மன  சைக்கிள் ஏறி 
போகததேசம் போய் வந்து 
சலிக்காமல்  சோர்வாகி 
வீடு சேர்ந்து 
கோலி குண்டும் கில்லி 
தட்டியும் ஆயுதமாய் 
கபடி கபடி என பாட்டு 
பாடி  
சரடிழுத்து பம்பரம் சுத்தும் 
கைகள் அதை கண்டு 
உற்சாகமும் பம்பரமாய் 
சுத்தும் ! 

Game2

பெண் குழந்தைகள் எல்லாம் 
பாண்டி ஆடும் ! இல்லை 
கால்கள் பாடியே ஆடும் ! 
பல்லாங்குழியில் முத்திட்டு 
தொட்டாங்கல்லில் 
கைகள் தாளமிடும் ! 

game9
எழூரு எழுகடல் தாண்டி 
ஒழிஞ்சிருக்கும் 
முட்டையெடுக்க 
கண்ணா மூச்சியாடும் 
அதற்கு கண்ணனையே 
துணையாக தேடும் 
என அத்தனையும் இரையானது 
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு…
கையளவு திரையில் காரே ஓட்டலாம் 
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே 
தொலைத்தவைகளை தேடி 
மீண்டுமொரு பால்யம் வேண்டி …

Game1

வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றாற் போன்று ஓடிக்கொண்டேயிருக்கிறோம் இயந்திரம் போல…

இளைப்பாற சற்று அமரலாம் என்று நினைக்கும் போது துரத்தி வரும் வாழ்க்கையை வெல்ல மீண்டும் ஓட்டம் என வட்டமாகி போன பின்னர் மறந்து போன பால்ய விளையாட்டுகள் எல்லாமே கானல் நீர் ஆகி விட்டது…

பெண்ணுரிமை போற்றிய மகாகவி பாரதியை ரசிக்கும் நாமே

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வரியை மறந்து போனோமா அல்லது கடந்து போனோமோ என்று தெரியவில்லை…

இப்போ இதை படிக்கிற எத்தனை பேர் நம்ம குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் விளையாட அனுப்புறோம் ??

இல்லை பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி சொல்லி குடுத்து இருக்கோம் ??

Game3

நம்ம  குழந்தைகளுக்கு நாகரிக உலகில் விளையாட கூட நேரமில்லீங்க… புழுதித் தெருக்களில், புரண்ட நாம்தான் இன்னைக்கு  குழந்தைகளை கான்கிரீட் ரோடுகளில் பாதம் பதியாமல் செருப்போடும், வாகனத்துடன் தான் நடத்துகிறோம்..

விலைமதிப்பிட முடியாத பண்பாட்டுப் பொக்கிசங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் கிராமத்துச் சிறுவர்களும், சிறுமிகளும் விளையாடிய விளையாட்டுக்கள் கூட சமூக அக்கறை சார்ந்ததாக இருந்தது. உழைப்பவர்களின் செல்வத்தை ஏகாதிபத்தியத்தின் வலிய கரங்கள் கவர்ந்து கொள்ளும் காரியம் காலகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கேரளாவில் நான் பாட்டி வீட்டில் இருந்த போது  பள்ளியில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த உடன் பையை  ஒரு மூலையில் போட்டுவிட்டு தோட்டத்திற்கு   விளையாட சென்று விடுவேன் !

நிறைய  விளையாட்டுக்கள் விளையாடுவோம்
ஓடிபிடிப்பது, மறைந்து விளையாடுவது , உப்புமூட்டை , மணலில் வீடு கட்டுவது , கோலி , பல்லாங்குழி, திருடன் -போலீஸ் ,பரம பதம், கண்ணாமூச்சி , சிறிய சாமான்களை வைத்து  சோறு பொங்குதல் , போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடுவோம்.

game11

இதில் ஒவ்வொரு  விளையாட்டும்  நம் வாழ்க்கையின் ஒரு உணர்வை வெளிபடுத்தும் ..
ஓடிபிடிப்பது –  ஓட்ட பயிற்சி , உப்புமூட்டை – வலிமை சேர்க்கும் , மணல் வீடு – சோறு பொங்குதல்  போன்றவை சிறுவர்களுக்குள்ள ஒற்றுமையை உணர்த்தும், பல்லாங்குழி – சேமிப்பு மற்றும் எண் கணக்கின் அவசியத்தை உணர்த்தும் , . மேலும்  இரவில் ஒரு விளையாட்டு விளையாடுவோம்  அதன் பெயர்  கூட்டாஞ்சோறு   அதாவது ஒவ்வொருவரும் அவரது வீட்டில் செய்த உணவை, அனைவரும் எடுத்துகொண்டு யாருடைய  வீட்டிலாவது  வைத்து பகிர்ந்து உண்ண வேண்டும் !  தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் ! இந்த விளையாட்டில் விட்டுகொடுத்தல் , சகோதரத்துவம் , போன்ற பண்புகளை  வளர்க்கும்.

நொண்டி,பச்சை குதிரை, மேடு பள்ளம், கில்லி, தாயம், பரமப்பதம், தட்டாங்கல், ராஜா ராணி, பம்பரம், பட்டம் என நாம் மறந்து போன, மறைந்து போன குழந்தைப் பருவ விளையாட்டுகள் ஏராளம்.

game5

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் ஆன்ட்ராய்டு யுகம் நமது நாட்களை களவாடிக் கொண்டது. கூகிள் ப்ளே ஸ்டோரில் தொடுதிரையை கீறியவாறு விளையாடிக் கொண்டிருகிறோம் தன்னந்தனியாக. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விளையாட்டு என சீர்படுத்தி, அதில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று வகைப்படுத்தி நம்மவர்கள் இதிலும் புத்திசாலித்தனத்தை ஆழமாக பதித்தவர்கள்.

கடைசியாக இந்த விளையாட்டை எல்லாம் விளையாடி மகிழ்ந்தவர்கள் 1990 முன்னர் பிறந்தவர்களாக தான் இருக்க முடியும். 21 ஆம் நூற்றாண்டு நாளுக்கு நாள் மாற்றத்தை பரிசளித்து, நமது நினைவுகளை பேரழிவுக்குள்ளாக்குகிறது. மாற்றம் மட்டுமே மாறாதது என்ற போதிலும். இந்த அதிவேக மாற்றங்கள் கொஞ்சம் ஏமாற்றமும் அளிக்கின்றன…

game7

வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்….கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம்..

இன்று எங்கே தொலைந்து போனது அந்த கேளிக்கைகளும் சந்தோசங்களும்…?

இப்படி எல்லாத்தையும் தொலைசிட்டு நம்ம பிள்ளைங்களுக்கு வேற எதை சேர்த்து வைக்க போறோம் ?

முதலில் பிள்ளைங்க மனநிலையை நாம்தான் மாற்றனும்.

விளையாட்டில் வியர்வை வெளியேறினால் உடம்புக்கு என்னன்னா நன்மைகள் என்று நாம்தான் சொல்லி குடுக்கணும்..

அவங்களை விளையாட அனுமதிக்கணும்.

game10

இவ்வாறான விளையாட்டுக்கள் இப்போது அழிய காரணம் புத்தகசுமை,நேரமின்மை , நகரமயமாதல், என ஒரு புறம் இருந்தாலும்  சிறுவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை என நிறைய  வந்தபின் தான் குழந்தைகள் பள்ளி விட்டவுடன்   குழந்தைகளுக்கான அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம்  என அவங்க  வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது ! இதற்க்கு பின்னால் வரும் தலைமுறையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது.

இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டை ஆரம்பிப்போம்!

game8

தரையில் விளையாடிய காலம் மறந்து 
திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறோம்..

கூட்டாளிய சேத்துகிட்டு 
பச்சக் குதிரை தாண்டி சகதி மண் மன்னர்களாய்
சடுகுடுவாடி 
மன  சைக்கிள் ஏறி 
போகததேசம் போய் வந்து 
சலிக்காமல்  சோர்வாகி 
வீடு சேர்ந்து 
கோலி குண்டும் கில்லி 
தட்டியும் ஆயுதமாய் 
கபடி கபடி என பாட்டு 
பாடி  
சரடிழுத்து பம்பரம் சுத்தும் 
கைகள் அதை கண்டு 
உற்சாகமும் பம்பரமாய் 
சுத்தும் ! 

game6

பெண் குழந்தைகள் எல்லாம் 
பாண்டி ஆடும் ! இல்லை 
கால்கள் பாடியே ஆடும் ! 
பல்லாங்குழியில் முத்திட்டு 
தொட்டாங்கல்லில் 
கைகள் தாளமிடும் ! 
எழூரு எழுகடல் தாண்டி 
ஒழிஞ்சிருக்கும் 
முட்டையெடுக்க 
கண்ணா மூச்சியாடும் 
அதற்கு கண்ணனையே 
துணையாக தேடும்…

என அத்தனையும் இரையானது 
இந்த சின்னஞ்சிறு அலைபேசியின் அகோரப்பசிக்கு 
கையளவு திரையில் காரே ஓட்டலாம் 
கைவிரலை தவிர வேறெதும் ஓடலையே 
தொலைத்தவைகளை தேடி 
மீண்டுமொரு பால்யம் வேண்டி …

  • ப்ரியா கங்காதரன்

IMG_20160117_163128

ப்ரியங்களுடன் ப்ரியா–23

ஆதலினால்…
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்…
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் …
என் ரகசியம் அனைத்தையும் 
தன் ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
ஆதலினால் காதல் செய்வீர் …
l4
காதலர் தினத்திற்கு  வாழ்த்து சொல்ல காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை…. அனைவருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது இல்லை….. இரு இதயங்கள் இணைகின்ற நாள்..உண்மையான காதலினை ஏற்று கொள்வதில் தவறு ஏதும் இல்லை..
காதல் என்றுமே காதலிக்க படும் என்பதில் எந்த ஒரு மாற்றுகருத்தும் இல்லையென்றாலும் ஊரோடு ஒத்து வாழ் நிகழ்வில் இந்த ஒரு நாளும் திருநாளாக மாறியதே ..
என் பள்ளி .. கல்லூரி கால கட்டங்களில் காதல் என்பது ஒரு மிக பெரிய பாவ செயல் போல ஒரு மாய தோற்றம் இருந்தது உண்மைதான் ,,
இப்போ இருப்பது போல எந்த ஒரு தகவல் தொழில்நுட்பமும் மிகுதியாக இல்லாத காலங்களில் என்னோட கல்லூரி தோழர்களின் காதல் பயணங்களை இப்போது நினைத்து பார்த்தாலும் சிரிப்பும் சந்தோசமும் என்னை சுற்றி வந்து விடும் ,,
காதல் கடிதங்கள் … ரோஸ் வாங்கி கையில் வச்சுக்கிட்டு காத்திருப்பது ,,, கடைக்கண் பார்வைக்கு காலையில் இருந்தே காத்திருப்பது …
வார இறுதியில் கோவிலில் சந்திக்க வாரத்தின் முதல் நாளே திட்டமிடல் …  செமஸ்டர் லீவ் 60 நாளையும் தினமும் சபிச்சே கழிச்சது ,,’
அந்த 60 நாளும் அவங்க அவங்க காதலி / காதலன் வீடு . தெரு பக்கம் சுத்துவது … அவன் / அவ வீட்டுக்கு போன் செஞ்சு வேற யாரவது எடுக்கும்
பொழுது பூமியே பிளந்து விடுவது போல உணர்வு …
எல்லோரும் சேர்ந்து ஒரு படம் போக ஒரு மாசமா திட்டம் போட்டும் கடைசியில் மாறி விடுவது ,,
ஹா ஹா ,,, இப்படியே கழிந்து போன எங்கள் கால கட்டங்களை ஒப்பிடும் பொழுது இன்றைய தலைமுறை ரொம்ப குடுத்து வச்சவங்க …
விரல் நுனியில் காதலை வைத்திருக்கிறார்கள் …
வாட்ஸ் அப் … ஐமோ ..FB .. கால் … என 24 மணிநேரமும் காதலும் கையுமாக கலந்து இருக்காங்க ,, அது எவ்வளவு சந்தோசமோ அதே அளவு
கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள் என்பதும் கொஞ்சம் வருத்தம் கலந்த உண்மைதான் …
எங்க வீட்டில் படத்துக்கு போகலாம் என்று சொன்னால், வீட்டிலே ஒரு தணிக்கை குழு கூடி அந்த படத்தில் காதல் காட்சிகள் இருக்கா ?? போக கூடிய படமா என்று ஒரு பெரிய ஆலோசனையே   நடந்து எல்லாம் இருக்கு ,,,
இப்போ நடுவீட்டிலே எல்லா கண்றாவியும் வந்திரிச்சு நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ..
நம்மதான் எல்லாத்தையும் சரி செஞ்சு நமக்கான சரியான பாதையை தேர்வு செய்து போகணும்…
l6
காதல் எப்போவுமே தேன்தான்…. இயற்கை சுவையில் என்றுமே திகட்டாது  …
காதலையும் ஒரு வியாபார வணிக நோக்கமாக்கி பணம் சம்பாதிக்க வலி செய்தது இந்த நாகரிக வளர்ச்சி என்றும் கூட சொல்லலாம்.
காதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14ம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் சொல்ல, இது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ..? எனும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு..
காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடவில்லை எனில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.
l8
நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல்,  கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது.  டிஸ்கோதே, இரவு விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கென்று குத்தகைக்கு விடப்பட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் மழைகாளான்கள் போல் தோன்றி மறையும் காதலாக உள்ளன..
காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.
பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ….
கம்ப ராமாயணத்தில் கம்பரின் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகு சேர்ப்பதாய் தான்  இருக்கிறது . காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் இருக்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது தான் உண்மை..
l2
காதலர் தினம் தோன்றிய வரலாறு..
கி.பி இருநூறாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த மன்னன் கிளாடியஸ் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். இவருடைய  ஆட்சி காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.
மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது..
ரோமில் பிப்ரவரி மாதம் என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம், வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.எனினும் வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக இருந்திருக்கிறது..
சீனர்களிடம் ‘ஏழின் இரவு’ என்று சொல்லப்படும்  இந்த காதலர் தினம் ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள்..
l1
1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் வருகிறது..
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது..
காதலர் தினக் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய்,  அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது. இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் புலப்படும்.
அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம்..
l3
ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்..
காதல்  எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நொடியாவது தீண்டாமல் போவது இல்லை…
ஒவ்வொரு நொடியும் உணர்ந்து சுகித்து ரசித்து வாழுவோம்.
l9
காதலை காதல் செய்து ,,,
ஆதலினால் காதல் செய்வீர் …
மலரை  விட 
மென்மையானவன் அவன்…
தரையில் பாயும்  வேரை விட 
உறுதியானவன் அவன்…
செல்ல  சண்டையை  
சிறு  புயலாய்  செய்பவன் அவன்…
 ஊடல் கொண்டே 
என்னை உளற வைப்பவன் அவன்…
எனக்கு  முகவரி
அளிப்பவன்  அவன்…
தாயின் தழுவல்களை 
போல கதகதப்பானவன் அவன்…
அடக்காது என்னை ஆனந்தமுடன் 
ரசிப்பவன்  அவன்
மென்மையான பெண்மையை 
உணர்ந்தவன் அவன்…
நட்பு சுடரேற்றி  என் தனிமை 
இருளை விரட்டியவன் அவன் ..
ரகசியம் அனைத்தையும் 
ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..
காதோர நரையின் பின்னும் 
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல கோவங்களை 
சிரிப்புடன்  எதிர்கொள்பவன்  அவன்…
என் சின்னச் சின்ன தேடலை  கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீராய்  
உடனிருப்பவன் அவன்…
என்  புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
கனவிலும்  என்னை
மறக்காதவன் அவன்…
தூறல்  கண்ட மண்  போல்
மணமானவன் அவன்…
என்னை  சுமக்கும்
மற்றொரு  உயிரானவன் அவன்..
எனக்கே எனக்கு  அழகானவன் அவன்…
எனக்கு  மட்டும் முழுமையானவன் அவன்…
 காதல் சொல்லி தந்தவன்  அவன்…
 என்னை எனக்கே  அறிமுகப்படுத்திய உயிரானவன் …
அவனே நானாக 
நானே அவனாக ..
அவனில் தொலைந்தே …
– ப்ரியா கங்காதரன்
IMG_20160117_163128

ப்ரியங்களுடன் ப்ரியா–22

தை பிறந்தால் வழி பிறக்கும் 
தரணியிலே ஒளி பிறக்கும் 
தை மகளின் வருகையிலே 
பரணி சொல்லும் வழி பிறக்கும் 

image

மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்க்றது.

தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாட்ப்படுகிறது.

தை முதல் தேதிதான் பொங்கல் என்றாலும்  மார்கழி முதல் தேதியிலேயே எல்லோரும் பொங்கலுக்குத் தயாராகிவிடுவார்கள்.  

இவர்கள் ‘சேற்றில் ‘ கை வைத்தால்தான் நாம் ‘சோற்றில் ‘ கை வைக்க முடியும். யார் இவர்கள் ?

‘செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே ‘என்றுரைத்த கம்பர், ‘உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி ‘ என்ற வள்ளுவப் பெருந்தகையும் சொல்லிச் சென்றவர்கள்தான் இவர்கள்!

உழவர் பெருமக்கள். உழவர்கள் – தமிழர்கள்; அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற
திருநாள்தான்… பொங்கல் திருநாள்.

image

பொங்கல் விழா என்று பெயர் வந்தது ஏன் ? இது ஒரு சமுதாயத்தினர் கொண்டாடும் விழாவா ? அல்லது மதம் சார்ந்த பண்டிகையா ? சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாதான் இந்தப் பொங்கல் விழாவா ? என்றெல்லாம் வினாக்கள் கண் முன் விரிகிறது.

மனித இயந்திரங்கள் இயந்திர ஓசைகளை உருவாக்கிய காலத்து முன் வேளாண்மை மட்டுமே சமுதாய

நகர்வுகளுக்கு அச்சாணியாகத் திகழ்ந்திருக்கிறது. இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல…
எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும். இந்த வேளாண்மை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எத்தனைப் பொங்கல் காலத்தை இந்தத் தமிழ்க்குடிகள் பார்த்திருக்கும் ? எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது. ‘மேழிச் செல்வம் கோழைபடாது ‘ என்ற கொள்கையே இத்தமிழ்ச் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது.

image

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. 

வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது. அதனையே பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்’ என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கலஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித்ததும்பும் விழா கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு… 

image

பொங்தித்தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள்.

இல்லங்கள் இணைந்து, உள்ளங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து, ஒரு சமுதாயமாக ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன. இந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப்

பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்த சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.

இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா!

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவே

பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது..

image

போகி பண்டிகை

மார்கழி மாதத்தின் இறுதி நாள்  போகிப் பண்டிகையாக கொண்டாடபடுகிறது.  இந்தநாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் போக்கும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்றும் சொல்லுவர் கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும்.

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை தீயிலிட்டு கொழுத்துவார்கள்..

image

மாட்டுப் பொங்கல்

இதுவும் உழவர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு விழா தான். உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த கால் நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவித்து அவற்றை கும்பிட்டு பூஜை செய்யும் நாள் இது. மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து, வீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றிற்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு  தொழுவத்திலேயே பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். அன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப்பொலிவு பெறும். மாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு அவை ஊர்வலமாக அழைத்து வருவர். 

image

மஞ்சளும் மலர்களும் மணம் சேர்க்க..

பொங்கலும் கரும்பும் சுவை சேர்க்க..

அனைவர்க்கும் இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்

– ப்ரியா கங்காதரன்

image

ப்ரியங்களுடன் ப்ரியா–21

நம்பிக்கையுடன் தொடர்வோம்!

dawn

இந்த ஆண்டு இனிய ஆண்டே!

 

நேற்றும் இன்றும் 
மாறிவிடாத 
தவமொன்றின் வலிகளாய்

மேகங்கள் மெய்வருத்தத் 
தருங் கூலியென 
பெய்யென பெய்த 
பெருமழை தாண்டி

இதோ 
நமக்கான  விடியல் 
தன் கதவுகளை 
திறக்கிறது…

கனவுகளால் 
கட்டமைக்கப் பட்ட 
ஒவ்வொரு நாளும் 
நமக்கான  பறவையே

தேட முடிவெடுத்த பின் 
தொலைதலில் 
பயம் கூடாது…

வெல்ல  தொடங்கிய பின் 
தொடுவானம் தூரம் 
என்பதில் 
மூச்சு மட்டுமே வாங்க முடியும்…

எல்லாம் முடியும் 
என்பதாகவே பேசட்டும் 
கண்களும் காலமும்…

புதிய வருடமும் 
புதிதாக பிறக்கும் குழந்தையும் 
வளர்க்கும் கைகளும் 
வாழும் வாழ்கையும் 
தீர்மானம் செய்வது போல

நீண்டு கிடக்கும் நீலவானம் 
மௌனமாய் புன்னகைக்கிறது
இரு கரம் நீட்டி நம்மை வரவேற்கிறது.

பொதுவா ஒவ்வொரு வருட தொடக்கத்தையும் சந்தோசமா வரவேற்போம். இத்தனை வருஷம் இயற்கைக்கு எதிராக நாம் செய்த எல்லாவற்றிக்கும் ஒரே வாரத்தில் இயற்கை தந்த பதிலால் கொஞ்சம் இல்லை நிறையவே வேதனையுடன் இந்த வருடத்தை தொடங்கி இருக்கிறோம்.

முன்னாடி எல்லாம் புதுவருஷம் என்றால் காலையிலே சீக்கிரமா எந்திரிச்சு கோவிலுக்கு போயிட்டு அப்பா அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கி ஆண்டை தொடங்கிய காலம் கடந்து, வருடம் விடிந்துதான் படுக்கை செல்லும் அளவிற்கு நாம் முன்னேறி இருக்கிறோம்.

2015…

மனிதம் தழைய செய்த மழை வெள்ளம்

அக்னிசிறகு நாயகன் அப்துல்கலாம் ஐயா மறைவு

இப்படி இரண்டு பெரிய நிகழ்வை இந்த ஆண்டு கடந்தோம்.

ஒவ்வொரு வருடமும் வழக்கமாக வரும் டைரி, காலெண்டர், கேக், புத்தாண்டு சபதம் என இயல்பு நிகழ்வுகள் தொடர்ந்தாலும், என்றுமே தொடங்கும் ஒரு நாளாகத்தான் தொடங்கி இருக்கிறது இந்த ஆண்டும்.

நாங்கள் புத்தாண்டை வரவேற்ற முறைக்கும் இப்போதைய தலைமுறை வரவேற்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தோம் என்றால், ஒரு தலைமுறைக்குள் நூற்றாண்டு வேறுபாடுகள்…

காதை கிழிக்கும் இரைச்சல்… உணர்வை மறக்க உற்சாக பானங்கள் என அதி நவீன வாழ்வின் அடிமைகள் ஆன நமது தலைமுறைகளை நினைக்கும் பொழுது மனம் வேதனை அடைவது என்னவோ உண்மைதான்.

பொதுவாக நாம் எல்லோருமே புத்தாண்டை ஒரு விடுமுறை தினமாக தான் பார்க்கிறோம். அதான் உண்மையும் கூட… மேற்கத்திய கலாசாரம் என்று அதை ஏற்றுக்கொண்ட பொழுதிலும், தமிழ் புத்தாண்டுக்கு உரிய மனநிறைவை ஏனோ  அது தருவதில்லை.

dawn2

கடந்து செல்லும் நாட்களில் அதுவும் ஒன்றாக எண்ணாமல் புதிதாகத் தொடங்கும் ஆண்டின் உறுதிகளாக சிலவற்றை தொடர்வோம்…

  • ‘உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.
  • பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால்தான் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்னைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.
  • ‘மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுகளிலும் சரி உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது ‘உற்சாக டானிக்’கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.

dawn1

  • தனித்தன்மையுடன் திகழுங்கள். அதில் பெருமை கொள்ளுங்கள்.
  • நீங்கள் ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் அனைவரின் பார்வையும் உங்கள் மேல் உள்ளதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
  • வாழ்க்கை உங்களுக்கு அளிக்கவிருக்கும் அரிய அனுபவங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்களா என்பதே உங்கள் முன் இருக்கக் கூடிய மிகப் பெரிய கேள்வி.
  • முடியாது என்று மற்றவர்கள் சொல்வதை நாம் செய்து முடிப்பதன் மூலம் அடையக் கூடிய மகிழ்ச்சி அளவற்றது.
  • கனவுகளைக் காண முடிந்தவர்களால் அடைய முடியாதது என்று எதுவுமே கிடையாது.
  • எந்த ஒரு பொருளையும் முதலாவதாகவோ அல்லது கடைசி முறையாகவோ பார்ப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் மிகவும் அழகாகத் தோன்றும்.
  • எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கும்.
  • நம் கனவுகளின் தேடல் வேட்டையில், தேடலில் தொலைந்து போய் அதனை விட சிறப்பான ஒன்றை நாம் பெறுகிறோம்.
  • உங்கள் வாழ்க்கைப் பாதைகளில் வரும் தடங்கல்களைக் கண்டு அஞ்சாதீர்கள். ஏனென்றால் நம்முடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே அவை ஏற்படுத்தப்படுகின்றன.
  • ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பிரச்னைகள் உண்டு. அவை எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை… அவை ஒவ்வொன்றும் நன்மை தரும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியே அமைகின்றன… பிரச்னைகள் ஒவ்வொன்றும் மனிதனை பட்டை தீட்டும் வலிமை கொண்டவை.
  • இந்த ஆண்டில் தேவைற்ற பொருள்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம்தான். உங்களுக்கு அருகாமையில் உள்ள வீட்டு நண்பர்களோ, அலுவலக நண்பர்களோ, நீங்கள் இருக்கும் எந்த இடத்திலும் சுற்றியருப்பவர்களின் நட்பை ஒரு போதும் இழந்துவிடாதீர்கள். உங்கள் வார்த்தைகள் எப்போதும் மென்மையாகவும், இனிமை கலந்தாகவும் இருக்கட்டும்.
    மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற அவர்களுக்கு நீங்கள் முதலில் உதவ வேண்டும்!

DSC01519

  • ப்ரியா கங்காதரன்

இணையம் இணைத்த இதயங்களும் கரங்களும்

வெள்ளக் களத்தில் தோழிகள்

sumitha1

சுமிதா ரமேஷ் – துபாய்

முகம் பார்க்க மறந்தோம்… நலம் கேட்க மறந்தோம்… தனித்தீவுகளானோம்… தனியாய் சிரித்தோம்…உறவுகள் தொலைத்தோம்..ஸ்மார்ட் போனுக்குள் கூடு கட்டி வசித்தோம். பேஸ்புக் அல்லது ட்விட்டரில் நீந்தினோம்…வாட்ஸ் அப்பில் வானம் அளந்தோம்…எல்லையற்றுப் பறந்தோம். ஏனோ அருகில் இருக்கும் மனிதர்களை சருகெனத் துறந்தோம்… கடல் கடந்த நண்பர்களிடம் கதைகள் கதைத்தோம்.

ஒரு வெள்ளம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டியது. சக மனிதர்களிடம் இருந்து நம்மைப் பிரித்த இணையம் உலகெங்கிலும் உள்ள தகவல்களை அள்ளி வந்து வெள்ளத்தில் சிக்கிய மனிதர்களை மீட்கும் வலையாக விரிந்தது. ஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் கண்டு… உதவும் கரங்களை அள்ளி வந்து ஃபேஸ் புக், வாட்ஸ்அப் என இணையமும் ஸ்மார்ட் போனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரணம் வழங்கும் பணியைத் துவங்கி இன்னும் விழிகளை மூடவில்லை. இணையத்தின் இமைகளாக மாறி, இதங்களாக உருவெடுத்து, கரங்களாக அணிவகுத்து… கண்ணீர் துடைக்கும் பணியில் துபாயில் இருந்து சுமிதா ரமேஷ் செய்திருக்கும் பணிகள் வியக்க வைக்கின்றன.

திருச்சியை சேர்ந்த சுமிதா திருமணத்துக்குப் பின்னர் கணவர் ரமேஷுடன் துபாயில் செட்டில் ஆனவர். ரமேஷ் சீமென்ஸ் நிறுவனத்தில் கமர்ஸியல் இயக்குனர். இரண்டு குழந்தைகள். கணிணி, கணித ஆசிரியையாக இருந்த சுமிதா, துபாயில் வெளியில் பணிக்குச் செல்வதற்கான சூழல் இல்லாத நிலையில் தனி வகுப்புகள் எடுத்துள்ளார். பேச்சாற்றலில் வல்லவரான சுமிதா விசுவின் அரட்டை அரங்கத்தில் பங்கேற்று தன்னை பேச்சாளராகவும் அடையாளம் கண்டவர்.

‘தமிழ் குஷி’ இணைய வானொலியின் ஆர்ஜேவாக பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். தற்பொழுது குழந்தைகளின் படிப்புக்காக வீட்டை கவனித்த படியே சுமிதா சென்னை, கடலூர் பகுதி வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க செய்திருக்கும் பணி அளவிட முடியாதது.

இனி சுமிதா…

‘‘சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட உடன் வெளி நாடுகளில் உள்ளவர்கள் அவர்களது உறவினர்களின் விவரங்களைக் கொடுத்து அவர்களின் நிலை என்ன என்று ஃபேஸ்புக்கில் பதிவுகளைப் போட்டனர். வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. நெட்டிசன் என்ற பெயரில் ஃபேஸ்புக் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்திருந்தோம். ஃபேஸ்புக் பதிவுகளைத் தொடர்ந்து உதவ முடிவு செய்தோம். எங்களது குழுவில் 25 பேர் வேகமாக இயங்க ஆரம்பித்தனர். உதவி கேட்டு வந்த தொலைபேசி எண்கள் உண்மைதானா என்பதை ஒரு குழு நேரடியாக தொடர்பு கொண்டு பேசி உறுதி செய்தது. இன்னொரு புறம் தன்னார்வலர்களின் எண்களை தொடர்பு கொண்டு உதவி தேவைப்படும் இடங்களுக்கு அவர்கள் உடனடியாக அனுப்பும் பணியை செய்யத் துவங்கினோம்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்டர் நெட்டை விட வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்துக்கு உதவியாக இருந்தது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை ஜே.பி.ஜி. ஃபைலாக ஆக்கி, எந்த வழியிலும் படிக்கும் வகையில் மாற்றி பதிவு செய்தோம். 2ஜி சேவை மட்டுமே இருந்த இடங்களிலும் தகவல் பரிமாற்றம் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக இது போல் தகவல்களை எளிய வடிவத்துக்கு மாற்றினோம். உதவி கேட்டு வந்த தகவல்களை உறுதி செய்து அதிகம் பேருக்கு ஸ்பிரெட் செய்தோம். உதவும் குழுக்களைப் பற்றிய டேட்டாக்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தோம். இதனால் உதவி கேட்ட சில நிமிடங்களில் தன்னார்வலர்களையும் படகுகளையும் அனுப்பி மீட்க முடிந்தது.

குழுவில் 25 பேர் வேகமாக இயங்க ஆரம்பித்தோம் ! 250 குழந்தைகள் மீட்க, மீட்பு குழுவிற்கு தகவல் மற்றும் ஆர்மிக்கும் தகவல் தந்தோம்

குழந்தைகள் மீட்கப்பட்டதாக கிடைத்த முதல் உறுதிப்படுத்த ப் பட்ட தகவல் ஒரு தனி உத்வேகம் தந்து இன்னமும் வேகமாக இயங்க வைத்து , நிறைய மீட்புப்பணிக்கு உதவி செய்ய வைத்தது

மீட்புப் பணிகள் குறித்த அப்டேட்ஸ் தன்னார்வலர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி செய்து முடிந்த விஷயங்களை அதிகம் ஷேர் ஆகாதபடி டெலிட்ம் செய்தோம்.

ராமாபுரம் பகுதியில் தாய் இறந்துவிட்டதாக ஒருவர் பதிவிட்டிருந்தார். இன்னொருவர் தன் தந்தைஇறந்துவிட்டதாகவும் அதற்கு ஃப்ரிசர் பாக்ஸ் வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இவை கிடைத்த நேரம் நள்ளிரவு… கொட்டும் மழையில் செய்வதறியாது தவித்த நொடிகள்… கண்களில் நீர் வரவழைத்தது… மனம் இறைவா என அரற்றியது.

வயதானவர்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்பட்டவர்கள், மருத்துவ மனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டும் பதிவுகள் வந்தன. இவர்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவும் வழி செய்தோம்.

போரூர் பகுதியில் ஒரு ஹாஸ்டலில் வட இந்தியப் பெண்கள் மாட்டிக் ெகாண்டு உதவி கேட்டனர். இது குறித்து கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தோம். ராணுவம் அவர்களை மீட்டது. வேளச்சேரியை சேர்ந்த சாருலதா, தானே படகில்சென்றுபலரையும்மீட்டதோடு, தன் மொபைல் நம்பரையும் தந்து, பின்னர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தப் பெண்களுக்கும், தன்னால் ஆன உதவியை செய்தபடி  இருந்தார் இந்தச் சின்னப் பெண்! அவரது பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஓ.எம்.ஆர். பகுதியில் ஐ.டி.ஐ. முதல்வர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து ெகாள்ள வந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தன்னார்வலர்கள் மூலம் தகவல் மீட்புப் பணிகளை விரைவு படுத்தினோம்.

துபாயில் இருந்து நானும், அமெரிக்காவில் கார்த்திக் ரங்கராஜன், வெங்கட்ராகவன் மூவரும் மிக வேகமாக நெட்டிசன் குரூப்பில் பணிகளை பிரித்துக் கொண்டு வேகமாக செயல்பட்டோம்.

தகவல்களை உறுதி செய்யும் பணியில் நண்பர்கள் குழு வேகமாக இயங்கியது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை எளிய வடிவத்துக்கு மாற்றி அதிகமாக ஷேர் செய்யும் பணி என்னுடையது. எந்த வாலண்டியர் அருகில் உள்ளார் , யாரால் இதனை செய்ய முடியும் என்று பார்த்து அவர்களிடம் உதவி கோருவதும் அதில் சேர்ந்திருந்தது.

பள்ளிக்கரணை, கோசாலை பசு, govt  doctors தான் அட்டெண்ட் செய்ய முடியும் என்ற நிலையால் , பெங்களூரு கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் அனுப்பி விட்டோம்.

இன்னும் பலப்பல பணிகள், அடுத்தடுத்து எங்களை ஆக்டிவாக வைத்திருந்தன என்றால் மிகையாகாது.

இன்னமும் தொடந்தபடியே இருக்கிறது… மேற்சொன்னவை நினைவில்வந்துஎட்டிப்பார்த்த சில துளிகளே…

தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் உதவிப் பொருட்கள் உள்ள இடங்களையும் தேவைக்கான இடங்களையும் மிகச்சரியாக இணைக்க இணையமும் சில இதயங்களும் உதவின. மனிதம் இன்னும் இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இது.

தமிழ்நாட்டை விட்டு வந்த பின்னர் நான் நண்பர்களுடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முகம் தெரியாத தம்பிகள் நட்பிலும் இல்லாதவர்கள் என்னை அக்கா என அழைத்து பேசும்போது வெள்ளம் சேர்த்த உறவுகளாக எண்ணுகிறேன். சின்னச் சின்ன உதவிகளைக் கூட இணையத்தின் வழியாக செய்ய முடிகிறது. இணையம் இவ்வளவோ இதங்களையும் கரங்களையும் இணைத்து சாத்தியப்படுத்தியுள்ளது. ஒருவேளை நான் சென்னையில் இருந்திருந்தால் கூட இவ்வளவு பேரை இணைத்திருக்க முடியாது. இணைய வசதி உள்ள இடத்தில் இருந்ததால் வேகமாக செயல்பட்டு பல உயிர்களை மீட்க முடிந்தது. பலவித உதவிகளையும் தேவையானவர்களுக்கு கிடைக்கச் செய்ய முடிந்தது. நாங்கள் செய்திருக்கும் வேலை சிறுதுளியே’’ என்கிறார் சுமிதா.

சுமிதாவின் பதிவுகளைப் படிக்க:

சுமியின் கிறுக்கல்கள்