குழந்தைகளுக்குத் திருமணம்!

Image

‘பெற்றோர் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்க வைக்கவேண்டும். அவசரப்பட்டு சிறு வயதிலே திருமணம் செய்துவிடக் கூடாது. படித்து முடித்து ஒரு தொழிலுக்குச் சென்ற பிறகே திருமணம் பற்றிப் பேச வேண்டும். அதுவும் திருமணச் சங்கதியைப் பெண்ணின் இஷ்டத்திற்கு விட்டுவிட வேண்டும். அவர்களாக தங்களுக்கு ஏற்றவரைத் தெரிந்து எடுத்துக் கொள்வார்கள்’. –  தந்தை பெரியார்.

ஜூன் 26, 2013. தர்மபுரி மாவட்டத்தில் ஏ.புதுப்பட்டியில் இருக்கும் ஒரு கோயில். அங்கே நான்கு ஜோடிகளுக்குத் திருமணம். நல்ல விஷயம்தானே? மண்டபத்தில் வைத்து, ஊரைக்கூட்டி, விருந்து வைத்து, மேள, தாளத்தோடு, ரிசப்ஷன் என்கிற பெயரில் ஆர்கெஸ்ட்ராவை அலற விடாமல், ஆடம்பரம் இல்லாமல், அதிகச் செலவில்லாமல் நடக்கும் திருமணம்தானே! இப்படி  உங்களுக்குத் தோன்றலாம். உண்மைதான். ஆனால் நடந்தது குழந்தைத் திருமணம். ஒரே சமூகத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்த திருமணம் அது! நான்கு மணப் பெண்களும் திருமணத்துக்கான குறைந்த பட்ச வயதான 18ஐக்கூட அடையவில்லை என்பதே வருத்தமான உண்மை.

இதைக் கேள்விப்பட்டு காவல்துறையும் சமூக நலத்துறை அதிகாரிகள் சிலரும் திருமணத்தைத் தடுக்கச் சென்றிருந்தார்கள். அவ்வளவுதான். கொதித்தெழுந்தார்கள் சம்பந்தப்பட்ட உறவினர்கள்.

‘‘என்னாங்க பெரிய சட்டம்… எங்களுக்கு இங்கே உருப்படியா வேலை எதுவும் இல்லை. நாங்க எங்க புள்ளைங்களை விட்டுட்டு பொழைப்புக்காக வேற ஊருக்குப் போயிடுவோம். நாங்க இல்லாத நேரத்துல, எங்க சாதிய விட்டுட்டு வேற சாதில கண்ணாலம் கட்டாம எங்க புள்ளைங்களை உங்க சட்டத்தால தடுக்க முடியுமா?’’ ஒவ்வொரு வார்த்தையிலும் அனல் தெரிக்க மல்லுக்கு நின்றார்கள் உறவினர்கள். அவர்களை சமாதானப்படுத்தி நடக்க இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்கள் காவல்துறையினரும் சமூக நலத்துறையைச் சேர்ந்தவர்களும். இது தொடர்பாக சிலர் மேல் வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல்துறை.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, சாதி ஈடுபாடு பலரை பலவிதங்களில் யோசிக்கவும், செயல்படவும் வைத்திருக்கிறது. தர்மபுரியில் குழந்தைத் திருமணங்கள் மறைமுகமாக அதிக அளவில் அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன என்பது கவலையோடு நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய செய்தி.

தர்மபுரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வு இது. அந்தப் பெண்ணின் பெயர் சத்யா. 19 வயது. அப்பா ஒரு கட்டிடத் தொழிலாளி. கடத்தூருக்கு அருகே இருக்கும் லிங்கநாயக்கனஹல்லி கிராமம்தான் சொந்த ஊர். தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் பாப்பிரெட்டிபட்டி தாலுகாவில் இருக்கும், காட்டுக்கோட்டை ஊரைச் சேர்ந்த வினோராஜ் என்பவருக்கும் காதல்! ஒருநாள் கல்லூரிக்குப் போன சத்யா வீடு திரும்பவில்லை. பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்தார்கள். விசாரணை தொடங்கியது. காதலர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். விசாரணையில் வினோராஜுக்கு சட்டபூர்வமான திருமண வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரிய வந்தது. காவல்துறையால் இருவரும் பிரிக்கப்பட்டார்கள். வீடு திரும்பிய சத்யா எதையோ இழந்த மன நிலைக்கு ஆளானார். அவர் வினோராஜுக்கு போன் செய்தார். ஒன்றல்ல… இரண்டல்ல… பலமுறை. மறுமுனையில் பதில் இல்லை. அதிர்ச்சியும் வேதனையும் தாங்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் சத்யா.

தர்மபுரியில் வேப்பமரத்தூர் என்கிற ஊரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட சுரேஷ், சுதா தம்பதி தொடர்ந்து ஊர்மக்களால் மிரட்டலுக்கும் தொல்லைக்கும் ஆளான செய்தி சமீபத்தில் பல பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது. ஒரு கும்பல் வீடு புகுந்து தாக்கியிருக்கிறது. பஞ்சாயத்தைக் கூட்டி, சுரேஷையும் சுதாவையும் ஊரைவிட்டே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பொது இடத்தில் அவர்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது, கிராமத்தில் உள்ளவர்கள் யாரும் அவர்களுடன் பேசக்கூடாது என்றெல்லாம் உத்தரவு வேறு.

‘காதலனை விட்டுப் பிரிந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட பெண்’, ‘வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை’, என்று அடிக்கடி தொடர்கிற தர்மபுரி செய்திகளோடு இப்போது குழந்தைத் திருமணச் செய்திகளும் இடம் பெறுவது வேதனையை அளிக்கிறது. பிள்ளைகள் காதலில் விழுவதையும், சாதி மறுப்புத் திருமணங்கள் செய்வதையும் தடுக்க குழந்தைத் திருமணம் ஒரு தீர்வல்ல என்பது இவர்களுக்குப் புரிய வேண்டும். புரியுமா?

– ஆனந்த பாரதி