ஒரு தோழி பல முகம்
வடுவூர் ரமா
நான்…
சாதாரண கிராமத்து பெண்ணுக்கு என்ன வரையறையோ அதுவே நான். 20 வருஷ டெல்லிவாசி. ஆனாலும், வடுவூரும் என்னுடனே வாழ்கிறது டெல்லியில். வடுவூர் ஆற்றங்கரையும் ஏரியும் ராமர் கோயிலும் இன்னும் என்னுடன்தான்… சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு அடிமை. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. இருக்கும் இடத்தை பிடித்த இடமாக மாற்றிக் கொள்ளும் பழக்கம்… லொட லொட, கலகல பேர்வழி. வம்பு இழுத்து குறும்பு செய்யப் பிடிக்கும். பழைய நினைவுகளில் இருக்கும் சந்தோஷங்களை திரும்பத் திரும்ப அலசுவதும்…
பள்ளி வாழ்க்கை
மன்னை பள்ளி… பார்த்து பயந்த பாரதி டீச்சர் ஆதர்ச ஆசிரியையாக ஆனதும், நான் அவர்களுக்குப் பிடித்த மாணவியானதும் மறக்க முடியாதது. பாரதி டீச்சரும் போஸ் மாஸ்டரும் சௌரி மாஸ்டரும் இன்னும் என்னை வழி நடத்துகிறார்கள். இரு பள்ளித் தோழிகளை சந்திக்க ரொம்ப ஆசை. நீடாமங்கலம் அகிலா, வடபாதிமங்கலம் நளினிமற்றும் பலர்…
தன்னம்பிக்கை
அலுவலக வேலையை தொடர முடியாத சூழல்… இட்லி மாவுக்கு நல்ல தேவை இருந்தது தெரிந்தது. தோழியுடன் சேர்ந்து வீட்டில் தயாரித்து கடைகளுக்குக் கொடுத்தோம். இட்லி மாவில் ஆரம்பித்து அடை, வடை, சட்னி, மைசூர் பா எல்லாம் செய்ய ஆரம்பித்தேன். தனி அடையாளமும் கௌரவமும் கிடைத்தது. எந்த விஷயத்திலும் ஈடுபாட்டோடும் உண்மையோடும் உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.
வாழ்க்கை
கிடைத்ததில் நிறைவு கொள்பவள். எந்த விஷயத்துக்கும் அடுத்த பக்கம் ஒன்று உண்டு என்று நினைப்பவள். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்று நம்புபவள்.
பிடித்தவை
* கையகல இடமாக இருந்தாலும் நேர்த்தியாகக் கோலம் போடுவது.
* வருடத்துக்கு ஒரு ‘தீம்’மில் கொலு வைப்பது. மணி மாலை, சின்னச் சின்ன தோடுகள், ஸ்லோக சிடிக்கள், வேண்டாத சிடிகளில் அகல்விளக்கு என என் கையால் செய்த கிஃப்ட் பொருட்களை மற்றவர்களுக்குக் கொடுப்பது.
* குரல் எப்படி இருந்தாலும் பாடிக் கொண்டே வேலை செய்வது. சின்னச் சின்ன மேட் கிங் ஆபரண ப்ரியை…
* பார்த்துப் பார்த்து மேட்ச் ஆக அணிவதே என் அடையாளமானது.
நடைப்பயிற்சி
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆரம்பித்தது. இயற்கையை ரசிக்கவும், அணில், மரங்கள், சாலையின் நெளிவுகள், மேகத்தின் பிம்பங்கள்… நடக்கும் போது உடன் வருவதும் பிடிக்கிறது.
எழுத்து…
‘அம்புலி மாமா’, ‘பாலமித்ரா’வில் ஆரம்பித்தது… பத்தாவதில் பாலகுமாரனின் வரிகளை நேசிக்க ஆரம்பித்தேன். ‘தாயுமானவன்’ பரமு-சரசு, ‘நிழல் யுத்தம்’ லலிதா-முரளி மாதிரி இவ்வுலகில் யாராவது எங்காவது வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் பரமு… தன் மகள் பெரிய மனுஷியான செய்தி கேட்டு என்ன செய்வது என்று திண்டாடுவதும், குழந்தை தன்னுடன் வர வெட்கப்படும்போது மகளிடமிருந்து அந்நியப்பட்டுப் போன மாதிரி உணருவதும், பெண் மருத்துவரிடம் அழைத்துப் போய் புரிய வைக்க சொல்வதும், மாடியில் மனைவியின் புடவையை காயப் போடுவதும்…. ஒவ்வொரு அப்பாவுக்கும் இந்த அத்தியாயம் படிக்கும் போது கண்கள் கலங்கித்தான் போகும். லா.ச.ரா. எழுத்து என்னை வசீகரிக்கும் மாய வித்தை.
பிடித்த மனுஷி
அத்தை ஜானகி டீச்சர். தன் வாழ்க்கையை எங்களுக்காக வாழ்கிறவர். யோகா ப்ரியர். கவிதை எழுதுவார். வளர்ப்புப் பிராணிகளிடம் பிரியம் கொண்டவர். தோட்டத்தைப் பராமரிப்பார். தான் வளர்த்த எலுமிச்சை மரங்களிடம் ஆசையாகப் பேசுவார்.
சினிமா
‘மௌன ராகம்’. நடிகை ரேவதி மாதிரியே விளையாட்டாக அக்கம்பக்க வீட்டுக்காரர்களை வம்பிழுத்த அனுபவமும் உண்டு… ‘தில்லு முல்லு’, ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற நேர்த்தியான நகைச்சுவைப் படங்களும் பிடிக்கும்.
பாதித்தது
அம்மாவின் மரணம். அம்மா பேச விழைந்த தருணங்கள்… மனது பேசத் தூண்டினாலும் ‘அப்புறம் பேசறேன்மா’ என்று பேசாமல் தவிர்த்த நிமிடங்கள்… வருத்தம் இன்னும் வாட்டுகிறது. அம்மாவுக்கு வாங்கித் தராமல் விட்ட பொருட்கள்… சொல்லாமல் விட்டவை… நினைத்தால் மனசு கனக்கிறது. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சில விஷயங்களை விட்டுவிடுவோம். பிறகு அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்காமலே போகலாம். சின்ன விஷயமாக இருந்தாலும் உள்ளுணர்வு சில விஷயங்களைக் காட்டிக் கொடுக்கும். அச்சமயங்களில் அதன்படி நடப்பதே நலம்.
திருமண வாழ்க்கை
திருமணமாகி டெல்லி வந்த புதிதில் ஊர் ஞாபகம் வாட்டும். கணவரின் பெரிய அண்ணனின் மனைவி ராதா அண்ணி அந்தக் குறையே தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். தலை தீபாவளிக்கு ஊருக்கு வர இயலவில்லை. அண்ணி, பிடித்ததை செய்து கொடுத்து, கேட்டதை வாங்கிக் கொடுத்து என்னையும் என் கணவரின் இன்னோரு தம்பி மனைவி சுதாவையும் அம்மாவின் நிலையில் இருந்து கவனித்துக் கொண்டார்கள். நான் கருவுற்றபோது உடல் நிலை மிக மோசமாகி, கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். அப்போது, அண்ணியும் இன்னொரு ஓரகத்தியும் ஒரு வேலை செய்ய விடாமல் பார்த்துக் கொண்டார்கள். புகுந்த வீட்டில் நாம் அன்புடனும் அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் இருந்தால் அவர்கள் அதற்கு மேல் நம்மை நேசிப்பார்கள்… இது அனுபவத்தில் கண்டது. எனக்கு எல்லாருமே அப்படித்தான் அமைந்தார்கள். என் கணவர் எனக்கு நண்பர். உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில மூன்று முறை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் முகம் சுளிக்காமல் கவனித்துக் கொண்டவர். அன்பான கணவரும் அருமையான மகனும் எனக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.
பிடித்த Quote
‘வாழ்க வளமுடன்’.
அடுக்களை அனுபவக் குறிப்புகள்
* அஞ்சறைப் பெட்டியில் போடும் எல்லா சாமான்களையும் அழகான சிறிய ஜாம் பாட்டிலில் வரிசையாகக் கொட்டி வைக்கலாம். பார்வைக்கு அழகாகத் தெரியும், எளிதாக எடுக்கலாம். ஒன்றுக்கொன்று கலந்து போகாமலும் இருக்கும்.
* ரவா உப்புமாவுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொஞ்சம் தாராளமாக எண்ணெய் விட்டு வறுக்கவும். ரவையையும் எண்ணெய் விடாமல் வறுக்கவும். இரண்டையும் கலந்து காற்றுப் புகா டப்பாக்களில் வைத்துவிடவும். எப்போது தேவையோ அப்போது வெறும் தண்ணீரை கொதிக்க வைத்துப் போட்டால் ரெடிமேட் உப்புமா கிடைக்கும். சாதாரணமாகச் செய்வதை விட வாசனையாக இருக்கும். ஒரு மாதம் வரை கெடாது.
மனசு
பஸ்ஸிலோ ரயிலிலோ செல்லும் போது, வழியில் தென்படும் வீடுகள், குடிசைகளில் நாம் இருந்தால் எப்படி இருப்போம் என யோசிப்பேன். நடைபாதை சதுர கட்டங்களில் நடக்கும்போது, ‘இச்சா இனியா… காயா பழமா…’ என்று மனதால் விளையாடியபடி போவேன்.
ஷாப்பிங்
‘பார்க்க அழகா இருக்கிறதே’ என்று பார்த்தவுடன் வாங்கும் பொருட்கள் தேவையுள்ள இடத்தை தேவையில்லாமல் அடைக்கும்.
எனக்குப் பிடித்த என் வரிகள்
‘நம்ம எல்லார் உள்ளும் ஒரு குழந்தை இருக்கு. அதுக்கு ஜடை பின்னி, பொட்டு வைத்து, கொஞ்சம் ஷொட்டும் வைத்து ஆசையாக பார்த்துக் கொண்டோமானால் அது நம்மை சந்தோஷமாக பார்த்துக் கொள்ளும்’.
பியூட்டி
அவசரத்துக்கு டிசைனர் பிளவுஸ் கிடைக்கவில்லையா? கடைகளில் பெரிய சம்க்கி, மணி வைத்த கலர் ஸ்டிக்கர் பாக்கெட்டுகள் கிடைக்கும். அதை வாங்கி, பிளவுசில் எப்படி வேண்டுமோ அப்படி ஆங்காங்கே ஒட்டவும். அதன் மேல் ஒரு துணியை வைத்து லேசாக ப்ரெஸ் செய்தால் நன்றாக ஒட்டிக் கொள்ளும். விழவே விழாது. விழா முடிந்தவுடன் அதை எடுத்தும் விடலாம். எடுத்த அடையாளம் தெரியாது. அதே போல் காதில் தோடு போட மறந்துவிட்டாலோ, திருகு விழுந்து விட்டாலோ இதே பெரிய சம்கி பொட்டுகளை காதில் ஒட்டிக் கொண்டு விடலாம். சமயத்தில் கை கொடுக்கும்.
இன்டீரியர்
* பழைய குழந்தைகள் குடையில் துணியை எடுத்துவிடவும். அதன் கம்பிகளில் அழகான கலர் க்ளிட்டரிங் பேப்பர்கள் மற்றும் பெரிய சம்கிகளை ஒட்டவும். அதில் சீரியல் விளக்குகளைத் தொங்க விடலாம். தேவைப்பட்டால் நுனியில் ஒரு சிடியை ஒட்டி அதில் பல்பு அல்லது பலூனை தொங்க விடலாம். தலைகீழாக மாட்டினால் சாண்ட்லியர் விளக்கு போல் இருக்கும்.
* என் வீட்டில் அவசியமான இடங்களுக்கு மட்டுமே திரைச்சீலை… மற்ற இடங்களில் சுவரின் வண்ணத்துக்கு ஏற்ப புடவை, துப்பட்டா போன்றவை!
* சில சாக்லேட் பிஸ்கெட் பேக்கிங் கவர்கள், நடுவில் நிறைய குழியுடன் இருக்கும். அவற்றை ஐஸ் க்யூப்ஸ் ட்ரேயாக சில நாட்கள் பயன்படுத்தலாம்.
* ஃப்ரிட்ஜிலுள்ள காய்கறி ட்ரே விரிசலடைந்தால், அதில் மணல் நிரப்பி பால்கனியில் செடி கொடிகள் வளர்க்கலாம்.
வீட்டுப் பராமரிப்பு
* கைப்பிடித் துணிகளை புதிதாக வாங்க வேண்டியதில்லை. வேண்டாத காட்டன் துப்பட்டாவை கிழித்து ஓரம் அடித்து’ பயன் படுத்தலாம். நூல் நூலாக வராமல், பார்க்கவும் நீட்டாக இருக்கும்.
* பாத்திரம் தேய்த்த ஸ்பாஞ்சை சோப் மேலேயே வைக்காமல், பழைய அழுக்கு போகக் கழுவி, சற்று உலர்ந்தாற் போல் வைப்பது நல்லது.
* கேஸ் அடுப்பு குமிழிகள், டைல்ஸில் இருக்கும் பிசுக்குகளை வெந்நீரில் லிக்விட் சோப் கலந்து ஸ்பாஞ்சால் அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.
* வீட்டு வேலை செய்ய வருபவரிடம் பாத்திரங்களை கும்பலாகப் போடக்கூடாது. கொஞ்ச பாத்திரங்களானாலும் நிறைய இருப்பது போல் தெரியும். ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி, தண்ணீரில் ஊற வைத்துப் போட்டால் அவர்களுக்கும் அது கஷ்டமாக தெரியாது.
* செமி வாஷிங் மெஷினில் துவைத்து டிரை பண்ணும் போது பேன்ட், ஷர்ட் எல்லாவற்றையும் சற்று மடித்தாற்போல் போட்டு ஒரு உதறு உதறி காயப் போடவும். அதிக சுருக்கம் இருக்காது. அவசரத்துக்கு அயர்ன் பண்ணாமல், லேசாக நீவிவிட்டு அணியலாம்.
* சில சாமான்களை கதவுகளின் பின்புறச் சுவர்களில் கண்ணில் படாமல் ஸ்டாண்ட் அடித்து மாட்டலாம்.
பிடித்த பாடல்
மகுடி படத்தில் இடம்பெற்ற ‘நீலக் குயிலே உன்னோடு நான்…’ பாட்டு. அது ஒன்பதாவது படித்த சமயம்… இன்னெதென்று சொல்லத் தெரியாத ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. இப்போது கேட்டாலும் அதே மன நிலை.
உடை
புடவை… பாந்தத்துக்கும் சுடிதார்… சௌகரியத்துக்கும் உடுத்துவேன். அந்தந்த கால ஃபேஷன் உடைகளை வாங்க மாட்டேன். யாரைப் பார்த்தாலும் ஒரே மாதிரி போரடிக்கும். எவ்வளவு புது புது டிசைன்கள் வந்தாலும் அந்தக் கால கோபுர பார்டர் புடவை ரொம்ப பிடிக்கும். காட்டன் மாதிரி புடவைகள் லைட் கலராகவும், பட்டு மாதிரியான புடவைகள் ஆழ்ந்த கலராகவும் எடுத்தால் நல்லது. மெல்லிய சரிகை பார்டர் போட்ட அதிக சரிகை வேலைப்பாடு இல்லாதவை சிறு விழாக்களுக்கு நன்றாக இருக்கும். நாம் கட்டியிருக்கும் ஒவ்வொரு புடவையையும் இது நன்றாக இருக்கிறது என்று சொல்லும் படியாகவே தேர்ந்தெடுப்பேன். விலை குறைவாக இருக்கலாம் மனசுக்கு பிடிச்சு இருக்கணும். புடவையைக் கூட குழந்தைங்க மாதிரி அணைச்சுக்க தோணும்.
மறக்க முடியாத தேர்வு
பத்தாம் வகுப்பு பொது தேர்வு நேரம். ஊருக்கு ‘உத்தம புத்திரன்’ படம் வந்திருந்தது. பாட்டியிடம் தோழியுடன் படம் பார்க்கப் போகிறேன் என்று அடம் பிடித்தேன். முகத்தை தூக்கி வைத்துக் கொண்டேன். சாப்பிடவில்லை, படிக்கவில்லை. மறுநாள் வரலாறு மற்றும் புவியியல் தேர்வு. பாட்டி, ‘போய்ட்டு வா, இல்லைன்னா உன் மனசு பூரா படத்துலதான் இருக்கும். நாளை பரீட்சை ஒழுங்காக எழுத மாட்டாய்’ என்று அனுப்பி வைத்தார். அந்தப் பரீட்சையில் நல்ல மதிப்பெண் வாங்கினேன். இப்போதெல்லாம் பெற்றோர் குழந்தைகளை தேர்வுக்காக நெருக்குவதைப் பார்க்கும்போது எனக்கு பாட்டி ஞாபகம் வரும். அந்தக் காலத்தில் உளவியல் ரீதியாக புரிந்து நம்மை வளர்த்தார்கள். அதை என் குழந்தையிடமும் கடைப்பிடிக்கிறேன்.
எதிர்பாராத நட்பு
முக நூல்… இன்று உங்களுடன் நான் பேசவது அதனால்தான் சாத்தியமானது. சாதாரணமாகவே நட்பு விரும்பி… முக நூல் என் மன அலைவரிசைக்கேற்ற நட்புகளுடன் ஒரு இனிமையான பக்கத்தை அளித்திருக்கிறது.
வடுவூரும் நானும்
திருமணமானதும் பிறந்த வீட்டு சீருடன் வடுவூர் நினைவுகளையும் எடுத்து வந்தாச்சு. திண்ணை, இந்துவுடன் மலை மாற்றி விளையாடிய தூண்கள், கிணற்றடி, கொல்லை வேப்பமரம், ஆற்றங்கரை படித்துறை, பாட்டியோட சுண்ணாம்பு தீற்றின சுவர், பக்கத்து வீட்டு திலகத்தம்மாவின் வெற்றிலை டப்பா எல்லாம் கூடவே இருக்கு. சில சமயம் ஊர் ஞாபகம் வரும் போது மாடிப்படியில் தனியாக அமர்ந்து மனதால் வடுவூர் வீட்டுப்படி, ரேழி, கூடம், முற்றம், கிணற்றங்கரை, கொல்லை, வேப்பமரம் எல்லாவற்றிலும் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வருவேன். கற்பனை செய்கிற அந்த நிமிடங்கள் ஒரு எனர்ஜியை கொடுப்பதை உணர்ந்திருக்கிறேன்.
***
Thoziyin varikallil ennaiya nan parliran vazha valamudan
முக நூல் என் மன அலைவரிசைக்கேற்ற நட்புகளுடன் ஒரு இனிமையான பக்கத்தை அளித்திருக்கிறது.நிஜம்தான்.. ரமா உண்மையான முகம் உண்மையான பகிர்வு….ரமா எனக்கும் தோழியாச்சே….பெருமையா சொல்றேன்…வாழ்க வளமுடன்
கிராமத்து மணமும் இனிய ரசனையும் நினைவுகளையும் விடாமல் சுமந்துக்கொண்டு டில்லி வரை எடுத்துச்சென்று அங்கே இதோ இந்த நிமிடம் வரை அந்த மண்வாசனை போகாமல் கமழ்ந்துக்கொண்டிருப்பதை வரிகளில் காணமுடிகிறது ரமா…
நினைவுகள் எப்போதுமே திகட்டுவதே இல்லை… நம்மை அந்தக்காலத்துக்கே அழைத்துச்செல்லும் டைம் மெஷின் இந்த நினைவுகள் செய்யும் மஹா அற்புதம் நம்மை நம் எனர்ஜியை பூஸ்ட் அப் பண்ணுவது அற்புதம்..
பார்த்து பயந்த டீச்சரிடத்திலேயே வைராக்கியமாக நன்றாக படித்து நல்லப்பெயர் எடுத்து இன்றுவரை அவர்கள் பெயரை மறக்காமல் சொல்லும் இனியப்பிள்ளையின் இந்த வரிகளில் மெய் மறக்கிறேன்…
தனக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கும் ஒவ்வொருவருக்கும்.. அது தான் அவர்களது அடையாளம்.. இதோ பலர் தேவை அறிந்து சமயோஜிதமாக இட்லி மாவு தயாரித்து அதோடு நிறுத்திக்கொள்ளாமல் பலவகை பக்ஷணங்கள் பெருகியது பாருங்க.. வெற்றியின் நுனி உங்க விரல்களில் நம்பிக்கையை கோர்த்துக்கொண்டு என்பது தெரியவருகிறதுப்பா..
இருப்பதைக்கொண்டு அதில் திருப்தி அடைந்து அதிலேயே வெற்றியை அமைத்துக்கொள்ள முனைவது தான் முயற்சியின் முதல் கட்டமே..
வீட்டை கோலத்தால் அழகுப்படுத்தி… அழகிய தீம்களில் கொலுவை நிறுத்தி.. க்ரியேட்டிவிட்டி புள்ள க்ரியேட்டிவிட்டி… அற்புதம் புள்ள..
உடையலங்காரம் நம்மைப்பற்றி அறியாமலேயே நம்மைப்பற்றி அறியத்தருவது… இந்த ஆடை நேர்த்தி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா.. அடடே பாடிக்கொண்டே சமைப்பதில் நீங்களும் என்னைப்போல தான்.. சேம் பிஞ்ச்.. நிறைய விஷயங்கள் நமக்குள் ஒத்துப்போகிறதே..
நடைப்பயிற்சி… மனசுக்கு அமைதி.. உடலுக்கு ஆரோக்கியம்… இருதயத்துக்கோ மிக்க பலம்.. தொடருங்கள்…
ஆஹா பாலகுமாரன் விசிறியா நீங்க. அவர் எழுத்துகள் ஒரு விஷயம் எடுத்தால் அதை அக்கு வேறு ஆணி வேறாக முழுமையாக சொல்வதில் வல்லமை படைத்த ஒரு அற்புத ஜீவி…
ஹை ரேவதி நானும் ரேவதி ஃபேன்… பழைய பாடல்கள் படங்கள்.. ரேவதியின் முணுக் கோபம், மௌனம் இதெல்லாம் மௌனராகம் படத்தில் நச் என்று இருக்கும்..
அம்மாவைப்பற்றிய பதிவு படித்ததும் மனசை கனமாக்குகிறதுப்பா… இருக்கும்போது அவர்களின் வார்த்தைகளை தவறவிட்டுவிடுகிறோம்.. இல்லாதபோது ஏங்குகிறோம்…
வாய்ப்புகள் எப்போதும் அமைவதில்லை… கிடைக்கும்போது அதை சரியானபடி பயன்படுத்திக்கொள்ளவேண்டும்..
தில்லியில் வாழ்க்கைப்பட்டோமே என்று வீட்டோடு முடங்கி இருக்காமல் தனக்கென்ற ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு முத்திரை பதித்த முத்துப்பா நீங்க…
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் இறையாசி நல்கட்டும்… நினைவுகளுடனே பயணம் தொடரட்டும்…
மிக்க நன்றியும் அன்பும் Lakshmi k, Uma mohan, Manju Bashihi Sambathkumar….
பஸ்ஸிலோ ரயிலிலோ செல்லும் போது, வழியில் தென்படும் வீடுகள், குடிசைகளில் நாம் இருந்தால் எப்படி இருப்போம் என யோசிப்பேன்
எங்கள் முகநூல் நண்பர் திருமதி Vaduvur Rama அவர்களின் குங்குமம் தோழி புத்தகத்தில் வந்த பதிவு… எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திருமதி Vaduvur Rama