ப்ரியங்களுடன் ப்ரியா – 3

picture of happy mother with baby over white

எனக்கான 

குழந்தைகளின் கவிதைகளும்

குழந்தைகளுக்கான 

எனது  கவிதைகளும்

முத்தங்களாலேயே

எழுதப்படுகின்றன… 

வாழ்வின் முக்கியமான வளர்ச்சி, குழந்தைப் பருவத்தில்தான் நிகழ்கிறது. குழந்தை பிறக்கும்போது தலையின் சுற்றளவு 35 செ.மீ. இருக்கும். இது குறிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து குழந்தையின் ஒரு வயதில் 45 செ.மீ. ஆகிறது. ஐந்து வயதாகும்போது தலையின் சுற்றளவு 50 செ.மீ. இருக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். காரணம், வளர்ந்த மனிதனின் தலை சுற்றளவு 50 செ.மீ.தான். ஐந்து வயதுக்கு மேல் தலைச்சுற்றளவும், மூளையின் புற வளர்ச்சியும் அதிகரிப்பதில்லை. அறிவு மற்றும் சுற்றுப்புற சூழல் தூண்டுதல்களால் மூளையின் செயல்திறன் மட்டுமே அதிகரிக்கிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்தில் சத்துணவு மிக மிக அவசியம்.

baby sleep

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதங்கள் வரை கொடுக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான தாய்க்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 850 மி.லி. அளவுக்கு பால் சுரக்கிறது. இதற்காக ஒரு தாய்க்கு 600 கலோரி அளவுக்கு சக்தி தேவைப்படுகிறது.  ஆக, சத்தும் சக்தியும் உள்ளத் தாய்க்குத்தான் முழுமையான தாய்ப்பால் சுரப்பு இருக்கும். பிரசவித்த முதல் மூன்று அல்லது ஏழு நாட்களுக்கு தாயின் மார்பகத்தில் நல்லக் கொழுப்பு அதிகமுள்ள சீம்பால் (Colostrum) சுரக்கிறது. இந்தச் சீம்பால் மிகவும் இனிப்பாகவும் ருசியாகவும் இருக்கும். இதைப் பிறந்த குழந்தைக்குக் கொடுக்கும் போது, கருவறையில் சிசுவாக இருந்து குடித்த பனிக்குட நீர் அசுத்தங்களை வெளியேற்றி, வயிறு மற்றும் குடலைச் சுத்தமாக்கி, குழந்தைக்கு  நல்லப் பசியை உண்டாக்குகிறது. இதன் பின்னர் தாய்ப்பால் ஊட்டும் போது, குழந்தைக்கு முழுமையான செரிமானம் மற்றும் முழுமையான சத்து கிரகிப்பு நிகழ்ந்து விரைவாக வளர்தல் நிகழ்கிறது. எனவே, பாட்டில் பால் வேண்டவே வேண்டாம்.

6ம் மாதம் 

ஆப்பிளின் தோலை சீவி, குக்கரில் வேக வைத்து, சிறிது நெய் சேர்த்துக் கொடுக்கலாம். சத்து மாவு, கோதுமை , ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது… குழந்தைக்கு ஒரு புது உணவைக் கொடுத்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு வேறு எந்தப் புது உணவையும் அறிமுகப்படுத்தக் கூடாது. அப்போதுதான் அந்த உணவால் எதாவது அலர்ஜி ஆகிறதா என்று நாம் அறிய முடியும். முதல் நாள் மிகவும் கொஞ்சமாகவும் அடுத்த நாள் அளவை சற்றுக் கூட்டியும் தர வேண்டும்.

Happy baby laying on belly

7, 8ம் மாதங்களில்…

ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சாதம், பால் சாதம், ஆப்பிள், வேகவைத்து மசித்த கேரட், உருளைக்கிழங்கு, ரொட்டி பால் சேர்த்து, உப்பு பிஸ்கெட் ஊற வைத்துக் கொடுக்கலாம். வெறும் பருப்பு சாதமாகக் கொடுத்து குழந்தையை கொடுமை செய்யாமல், அதற்கென தனியாக சமைத்து கொடுக்கவும். பருப்புடன் , கேரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்து கொடுக்கலாம். பசும்பாலை அறிமுகப்படுத்தவும்.

9 ,10ம் மாதங்களில்… 

இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை போன்றவற்றைத் தரலாம்.

11, 12ம் மாதங்களில்… 

நம் வீட்டு நார்மல் சாப்பாட்டை குழந்தைக்குப் பழக்கப்படுத்தவும். உணவைக் கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். இரண்டு வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் ஜீரணம் ஆகாது. பதிலாக இந்த அட்டவணையை கடைப்பிடித்துப் பாருங்கள்.

அட்டவணை

காலை

7:00 மணிக்கு குழந்தை எழுந்தால், எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்.

8:00 மணி – குளிக்க வைக்கலாம். இந்தப் பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்கள் குட்டி பள்ளி செல்லும் போது பயன்படும்.

8:30 – காலை உணவு – திட உணவாக இருக்கட்டும்.

10:30 – ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுக்கவும். அல்லது ஒரு பழம்.

மதியம்

12 :00 – திட உணவு.

4:00 மணிவரை எதுவும் தேவை இல்லை. பிறகு பால் கொடுக்கலாம். கூட இரண்டு பிஸ்கெட் அல்லது ஒரு ரொட்டித் துண்டு.

இரவு

7:30 மணிக்கு முழு திட உணவு கொடுக்கவும்.

9:00 மணிக்கு மீண்டும் பால்.

baby 3

குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான ஈர்ப்பு குறையும். இந்தக் காலகட்டமும் இரண்டாம் உலகப் போரும் ஒன்று. (அம்புட்டு போராட்டம் நடக்கும்).

நாம்தான் பொறுமையாக குழந்தைகளுக்கு அவர்களின் மனநிலை அறிந்து பிடித்தவற்றை, பிடித்த சூழலில் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போதே சாப்பாட்டின் அருமையையும் சேர்த்து ஊட்ட வேண்டும்.

உணவு விளையும் முறைகள்… சாப்பாடே கிடைக்காமல் இருக்கும் குழந்தைகள்.  எல்லாவற்றையும் சொல்லி உணவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் உணவின் மீது ஒரு மரியாதையை குழந்தைகள் உணர்வார்கள். உணவை வீண் செய்யக் கூடாது என்ற எண்ணமும் சேர்ந்து வளரும்.

சிந்தாமல் சாப்பிடச் செய்வது ஒரு கலை 

வைஷு குழந்தையாக இருக்கும் போது ஒரு முறை சொன்னேன்… ‘சிந்தாமால் சாப்பிடு வைஷு’ என்று.

‘பாப்பான்னாலே சிந்திதான் சாப்பிடும். இது கூட தெரியாதா உனக்கு மக்கு அம்மா’ என்று ஒரு போடு போட்டாள். அதுதான் குழந்தைகள். அவர்கள் உலகம்  விசித்திரமானது. சாப்பாட்டில் விளையாடுவார்கள். விளையாட்டை சாப்பாடு ஆக்கிவிடுவாகள்.

இந்தக் காலத்தில் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவதனால், அவர்களுக்கு துரித உணவுகளின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதால், மற்ற நேரங்களில் துரித உணவு மீது ஆர்வம் போகாது. இதனால் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உடல் எடைக் கூடுவதை தவிர்த்திடலாம்.

முடிந்த வரை ஒரு குறிப்பிட்ட வயது வரை உங்கள் நேரங்களை குழந்தைகளுடன் செலவு செய்யுங்கள். அது அவர்களின் மனதுக்கும் நல்லது… உடல் நலனுக்கும் நல்லது.

குழந்தைகள் தானே சாப்பிட ஆரம்பித்த பிறகு ஏற்படும் மன மாறுதல்கள்…

 1. குழந்தையின் சக்தி உருவாக உணவு மாற்றப்படுகிறது: குழந்தை தன் கையால் அள்ளிச் சாப்பிடும் போது அதன் கை வழி சக்தியால் உணவை அதன் உடல் உள் தன்மைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் உணவு சுலபமாக செரித்து கிரகிக்கப்படுகிறது.
 1. பசித்தால் மட்டுமே சாப்பிடுகிறது: குழந்தை பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுகிறது. இதனால், மண்ணீரல் செரிமானம் சிறப்பாக நிகழ்கிறது.  மாவுச்சத்தின் உடனடி சக்தி குழந்தைக்கு கிடைத்து சுறுசுறுப்படைகிறது.
 1. பசியின் அளவுக்கு மட்டுமே சாப்பிடுகிறது: குழந்தை தன் இயல்புக்கு சாப்பிடுவதால் பசியின் அளவுக்கு மட்டுமே சாப்பிடுகிறது. இதனால், முழுமையான செரிமானம் நிகழ்ந்து போதுமான  சக்தியும் தரமான சத்தும் கிடைக்கப் பெற்று ஆரோக்கியமாக வாழ்கிறது.
 1. உணவு மட்டுமே வீணாகிறது: குழந்தையின் விளையாட்டால் உணவு சிந்தப்பட்டாலும், குழந்தை, பசிக்கு சாப்பிடுவதால், குழந்தையின் ஆரோக்கியம்  கெடுவதில்லை. உணவு வீணானால்  பரவாயில்லை. குழந்தை வீணாகக்கூடாது.  இது கொஞ்சம் வருத்தம்தான்… உணவு வீணாவதில். ஆனால், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.
 1. பசிக்கு சாப்பிடுகிறது: பசிக்கு சாப்பிடப் பழகுவதால், பசியைத் தீர்க்கும் உணவுக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் நோய் வசம் சிக்காமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
 1. சுயமாகச் செயல்படக் கற்றுக் கொள்கிறது: தானே உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கமானது சுயமாக செயல்படுவதற்கு அற்புத வாய்ப்பாக அமைகிறது. இதனால், குழந்தையின் தன்னம்பிக்கை வளர்கிறது.
 1. ஒழுக்கம் வளர்க்கப்படுகிறது: சுய ஒழுக்கம் வளர்க்கப்படுவதால் மேம்பாடு நிகழ்கிறது.

எதையும் சுயமாக செய்யப் பழக்கப்படுத்தப்படுவதால், அவரவர் பொறுப்பு உணர்த்தப்பட்டு, உறவு நிலை மேம்படுத்தபடுகிறது. இதனால், எதிர்பார்ப்பற்ற அன்பு நீடிக்கிறது.   ( நன்றி: டாக்டர் அனுராதா கிருஷ்ணன் – கோவை)  உங்கள் குழந்தை தானாக சாப்பிட வேண்டுமாயின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து  சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் சரியாக எல்லா வகை உணவுகளையும்  ஆரோக்கியத்துக்காக சாப்பிடுவதை முன்னுதாரணமாக நம் குழந்தைகள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.  இவ்விதமாக நாம் கையாளும் போது நாம் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். சிறுகச் சிறுகத்தான்  நம்  குழந்தைகள் மாறுவார்கள். நாம் நல்ல முன்னுதாரணமாக இருக்கும் வரை நம் குழந்தைகளும் கண்டிப்பாக  நல்ல வழிமுறைகளுக்கு வருவார்கள்.

எனக்கான 

குழந்தைகளின் கவிதைகளும்

குழந்தைகளுக்கான 

எனது  கவிதைகளும்

முத்தங்களாலேயே

எழுதப்படுகின்றன … 

pri2

 • ப்ரியா கங்காதரன்

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

ப்ரியங்களுடன் ப்ரியா!

கனவு + முயற்சி + பயிற்சி + செயல் = ? 

றந்து திரிந்த பள்ளிக்காலம் முடிந்து வாழ்வின் வாசலான கல்லூரி நோக்கிப் பயணம் செய்யும் செல்ல சிட்டுகளுக்கு…

ஒவ்வொருவரும் தான் பெற்ற மதிப்பெண்ணை வைத்து மதிப்பீடு செய்வதை மறந்துவிட்டு, வாழ்வின் அடுத்த நிலையை நோக்கிச் செல்லும் பருவம் இது.

மதிப்பெண்தான் ஒருவரை நிர்ணயம் செய்யும் என்றால்… அப்படி நல்ல மார்க் எடுத்துத்தான் ஒருவர்  முன்னேற முடியும் என்றால் வருடத்துக்கு  இரண்டு பேர், ஸ்டேட் ஃபர்ஸ்ட், ஸ்டேட் செகண்ட் கணக்கு வைத்து இப்போது வரைக்கும் 60 வருடக் கல்வித் திட்டப்படி 120 பேர்கள் மட்டுமே நன்றாக வந்திருக்க முடியும்.

college students

அப்படி என்றால் நாட்டில் நன்றாக வாழும் எல்லோரும் மனிதர்கள் இல்லையா? அதனால் அதைத் தொலைவில் வைத்து விட்டு, அருகில் இருக்கும் வாழ்கையை ரசிக்க வேண்டும்… படித்து ரசிக்க வேண்டும், ஜெயித்து ரசிக்க வேண்டும்.

எந்தப் படிப்பை படித்தால் வாழ்கையில் வெல்லலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும் எந்தப் படிப்பை படித்தால் வாழ்க்கையை வாழலாம் என்று தீர்மானம் செய்ய வேண்டிய காலக்கட்டம் இது. கல்லூரி என்றதும் நிறைய பேருக்கு சினிமாவில் பார்ப்பது போலத்தான் கல்லூரி காலங்கள் கனவில் நிழலாடும். இஷ்டப்படி போகலாம்… வரலாம்… என்பது போல உருவகம் செய்த சினிமாக் காட்சிகள் கண்முன்னே வந்து போகலாம். நிழல் வேறு… நிஜம் வேறு.

கல்வி (Education) என்றால் என்ன? நீங்கள் இப்போது இருக்கிற நிலையில் இருந்து புதிய அறிவும் (Knowledge) செயலாற்றலும் (Skill) மனோபாவத்தில் (Attitude) மாற்றமும் பெற்றால் அதையே கல்வி என்கிறோம். (Change in the behaviour is education).

college students 2

கல்விக் கூடம் சென்று கற்பது மட்டும்தான் கல்வி என்பதன்று. ஒருவன் எந்தக் காரியத்தில், தொழிலில், பதவியில் அல்லது வணிகத்தில் வெற்றி பெற எண்ணுகிறானோ அதில் வெற்றிபெறத்தக்க அளவுக்கு சிறப்பாக அந்தத் துறை தொடர்பான அறிவையும் செயலாற்றலையும், (Skill and experience) உரிய மனோபாவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் எந்த மாதிரிச் சூழலில் கல்லூரிக்குப் போகிறோம் என்பதை! இந்த 3 அல்லது 4  ஆண்டுகளே நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும்… நம்மைப் பெற்றவர்களையும் தலை நிமிரச் செய்யும்.  ‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே‘ என்று புறநானூறும்,

“தந்தை மகற்காற்று நன்றி யவையத்து

முந்தி இருப்பச் செயல்” என்று வள்ளுவரும் கூறியுள்ளனர். இதன் பொருள்… கற்றவர் கூடிய அவையில் எல்லோருக்கும் முன்னவனாக இருக்கத்தக்க வகையில் தம் மக்களை  கல்வியில் மேம்பட்டவனாக்குவதே தந்தை தன் மகனுக்குச் செய்யும் உதவியாகும்.

நம் கல்லூரி காலக்கட்டம் சிக்கலுக்குரியதாக உள்ளது. பழமையும் புதுமையும் சங்கமமாகிறது. இந்தியக் கல்வியும் , மேலைநாட்டுப் பாரம்பரியமும் நம் கல்லூரி வாழ்வில்  ஊடுருவத்  தயராக இருக்கின்றன. தகவல் தொடர்பின் வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டது. உலகம் ஓர் கிராமம் ஆகிவிட்டது. எல்லாக் கலாசாரங்களும் எல்லா இடங்களிலும் விரவி நிற்கின்றன. இது ஒருபுறம்.

போட்டிகள் எல்லாத் துறைகளிலும் பெருகி வருகின்றன. குறிப்பாக கல்வி துறையில்…  (Struggle for existence – The fittest will survive). ‘வாழ்வுக்கானப் போராட்டம் – வலுவுள்ளது வாழும்’ என்ற காலக்கட்டம் இன்னொருபுறம்.

கல்வியிலும்  மாபெரும் வளர்ச்சி  விரைந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஈடு கொடுக்க மாணவச் செல்வங்கள் தயாராக வேண்டும்.

மாணவர்களை  சீர்குலைக்கச் செய்பவை இரண்டு. ஒன்று கோபம். மற்றொன்று பயம். ‘கோபம் உண்டான மனதில் குழப்பம் உண்டாகும்; குழப்பம் உண்டானால் சிந்தனை தடுமாறும்; சிந்தனை தடுமாறும்போது தவறான முடிவுகளே உருவாகும்; தவறான முடிவுகளால் தவறான செயல்கள் உண்டாகும்; தவறான செயல்களினால் அழிவு ஏற்படும்’ என்கிறது பகவத்கீதை.

பயம் நம்மை நெருங்குவது, நாய் துரத்துவதைப் போன்றது. பயந்து ஓடிக்கொண்டேயிருந்தால் நம்மை மேலும் துரத்திக் கொண்டேயிருக்கும். தைரியத்துடன் எதிர்கொண்டால், திரும்பி ஓடிவிடும்.

கோபத்தின் போது சில நடைமுறைகளைக் கையாளலாம்…

 • பிறரிடம் பேசுவதைத் தவிர்த்தல்.
 • எந்த முடிவையும் செய்யாமை.
 • அவசியமாகச் செய்ய வேண்டியதாக ஏதாவது இருந்தால், அதை மறக்காமல் முடித்து விடுதல்.
 • நல்ல நண்பர்கள் அல்லது ஆலோசகர்களை கலந்தாலோசித்தல்.
 • தற்காலிகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறுதல்.
 • தனியறை கிடைத்தால் படுத்து, ஆழ்ந்து மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுதல். அமர்ந்தபடியேயும் மூச்சை இழுத்து வெளிவிடலாம்.

உடலில் கோபத்தின்போது அதிகமான அளவில் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் சுரப்பதால், அதன் பாதிப்பைத் தவிர்க்க எளிய உடற்பயிற்சிகளை (நேராக நின்று, பின் குனிந்து தரையைத் தொடுதல்) சுமார் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

இவை இரண்டிலும் இருந்து விடுபட்டாலே போதும்… வாழ்வை வென்றுவிடலாம். தினமும் புதிய சிந்தனைகள்… மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது. மனதில் மாற்றம் நிகழும் போது சிந்தனையில் மாற்றம் மலர்கிறது. சிந்தனை மாறும்போது செயலும் வாழ்க்கை முறையும் மாறுதல்களைச் சந்திக்கிறது. இத்தகைய மாற்றமே முன்னேற்றத்தின் முகாந்திரமாக அமைந்து விடுகிறது. மேலும், மாற்றத்தைத் தோற்றுவிக்கும் ஆக்க சிந்தனையின் உறைவிடமாக உங்கள் மனம் திகழும்போது எந்தப் பிரச்சனையையும் சந்தித்துத் தீர்க்கும் ஆற்றல் உங்களுக்கு வருகிறது.

கனவு காணுங்கள்… கைக்கெட்டிய தூரம் வரை எனது உலகம் என்று! வெறும் கல்லூரிப் படிப்பு மட்டுமே நம்மை வெல்லத் தயார் செய்யாமல் விழித்திருக்கும் போது கற்பனை செய்ய வேண்டிய கனவு. விழிப்புணர்வுடன் உங்கள் எதிர்காலம் பற்றி கற்பனை செய்ய வேண்டிய கனவு. உங்கள் பெற்றோருக்காக கற்பனை செய்ய வேண்டிய கனவு. வெற்றி பெற்ற அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை  என்ன தெரியுமா? அவர்கள் அனைவருமே இந்த வெற்றியைப் பற்றிக் கனவு கண்டவர்கள் என்பதுதான்.

கனவு + முயற்சி + பயிற்சி + செயல் = நிச்சயமான வெற்றி!

கனவு மெய்ப்படும்…

உன் சிறகை விரிக்கும் வரை

நீ எட்டும் உயரம் யாரறிவார்?

பற… இன்னும் பற… வானமே எல்லை…

கல்லூரி செல்ல இருக்கும் அனைத்து தேன் சிட்டுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!  வாழ்க வளமுடன் !

ப்ரியா கங்காதரன் 

15

***

பெற்றோரின் கனிவான கவனத்துக்கு…

இந்த நிலையில் பெற்றோரான நமக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.

நமது குழந்தைகளை எந்த ஒரு நிலையிலும் பிற குழந்தையுடன் ஒப்பிட வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திறமை எங்காவது ஒளிந்து இருக்குமே தவிர திறமை இல்லாதக் குழந்தைகள் இல்லவே இல்லை. தேடி எடுக்க வேண்டியது நமது கடமை. நாம்தான் தேடி எடுத்து, செப்பனிட்டு, புடம் போட்ட தங்கமாக உருவாக்க வேண்டும்.

பள்ளிக் கல்வி வரை ஒரே சீருடை… ஒரே வாகனம்… ஒன்றாக இருந்து கற்ற நமது பிள்ளைகள்… கல்லூரிக்குச் செல்லும் போது உணரும் சூழல் வேறு. ஏழை-பணக்காரன்… விதவிதமான உடைகள்… கார், பைக், பாக்கெட் மணி என அனைத்திலுமே வேறுபாடுகளைக் காணும் பருவம்! இந்த நிலையில் நமது வழிகாட்டல் மட்டுமே இந்த ஏற்ற தாழ்வுகளைக் கடந்து நமது பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர உதவும். அதற்கு அவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். வெல்லும் தொலைவை வரையறை செய்து ஓட வைக்க வேண்டும். வென்றால்தானே வாழ்க்கை! அதைப் புரிய வைக்க வேண்டும். மனதை அலைபாய விடாமல் அன்பால் கட்டிப் போட வேண்டும். இதெல்லாம் பெற்றோரான நம்மால் மட்டுமே முடியும்.

நமது  குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக உருவாக்குவோம். தன்னம்பிக்கை கொண்டவர்கள் வெற்றிக்கு வழி தேடுவார்கள்… வெற்றியை நேசிப்பார்கள்… வெற்றி பற்றிக் கனவு காண்பார்கள்.

Image courtesy:

http://www.blacknet.co.uk/

http://www.eplindia.org

ஸ்டார் தோழி – 20

11185755_942133792487388_13225070_n

புவனா ஸ்ரீதர் – ஒரு தோழி பல முகம்

நான்

Trichyட்

பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே திருச்சியில். பொறியியலில் டிப்ளமோ, சைக்காலஜியில் டிகிரி. அப்பா குடும்பத்தில் முதல் பேத்தி, பெற்றோரின் தலைமகள், கணவரின் அன்பான மனைவி, என் மகள் மற்றும் மகனின் பொறுப்பான தாய், புகுந்த வீட்டின் கடைசி மருமகள்… இப்படி எல்லா நிலைகளிலும் நல்லவர்கள் என்னைச் சுற்றி இருப்பதே வரம்.
பள்ளி

ஐந்தாம் வகுப்பு வரை மேட்டூரிலும், பின்பு ஸ்ரீரங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். ‘படிப்பில் கெட்டி பள்ளியில் சுட்டி’ என்று பெயர் எடுத்ததால் கிளாஸ் லீடர் ஆகவும் பொறுப்பேற்ேறன். எந்த நெருக்கடியும் இல்லாத பட்டாம்பூச்சி வாழ்க்கையாக என் நட்புகளுடன் அமைந்தது என் பள்ளி வாழ்க்கை. இன்றும் என் பள்ளிக் கல்லூரி தோழமைகளுடன் நட்பு தொடர்கிறது.
குடும்பம்

கணவர் ஸ்ரீதர் வங்கியில் தலைமை மேலாளர். மகள் கல்லூரியில் நுழைகிறாள். மகன் 11ம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறான். என் குழந்தைகள் இருவரையும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் மனிதநேயத்துடனும் வளர்த்து வருகிறேன்.
ஊரும் பேரும்

திருமணத்துக்குப் பிறகு கணவரின் பணி இடமாற்றம் காரணமாக முதலில் மும்பை, பிறகு கள்ளக்குறிச்சியில் கூட்டுக்குடும்பம், பின் கோயம்புத்தூர், பாலக்காடு, கிருஷ்ணகிரி, இப்பொழுது செங்கல்பட்டில்… ஒவ்வோர் ஊரிலும் புதுப்புது வீடு, அனுபவம், மனிதர்கள் என்று வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது.
பொழுதுபோக்கு

பலவகை ஓவியங்கள், Soft toys, க்வில்லிங் காதணிகள், செயற்கை ஆபரணம் செய்தல், மணப்பெண்களுக்காக டிசைனர் பிளவுஸ் செய்தல் ஆகிய கலைகளை கற்றுள்ளேன். ஃபேஸ்புக்கில் ‘ஸ்ரீவிஜா ஆரி டிசைனர்ஸ்’ பேஜ் நடத்தி வருகிறேன். ஆன்லைன் டிேரடிங்கும் செய்வதுண்டு.
ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்

பள்ளி, கல்லூரி நட்புகள், மறந்தே போன குடும்ப உறவுகள் அனைவரையும் கண்டுபிடிக்கவும் அவர்களுடன் தொடர்பு நீடிக்கவும் ஃபேஸ்புக்கே காரணம். பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் இதில் நிறைய விஷயங்களை கற்றும் கொள்ளலாம்.
வீடு

ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு விதமான வீட்டில் வசித்துள்ளோம். சொந்த வீட்டில் வசிக்க முடியவில்லையே என்ற எண்ணமே வராத அளவுக்கு ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. விதவிதமான மனிதர்கள், கலாசாரம், சமையல் என்று குழந்தைகளும் நானும் புதுப்புது அனுபவங்களைப் பெற்று வருகிறோம்.
மனிதர்கள்

அப்பா, அம்மா, நான், தங்கை என்று சிறிய குடும்பத்தில் பிறந்தேன். படிப்பு, நட்பு என்று பட்டாம்பூச்சியாக சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. திருமணத்துக்குப் பிறகுதான் மனிதர்களைப் புரிய ஆரம்பித்தது. பொறாமைக்காரர், நம்பிக்கை துரோகிகள், புறம் பேசுபவர்களைக் கண்டால் இன்றும் அலர்ஜிதான்…  ஒதுங்கிவிடுகிறேன்.
புத்தகம் 

vedathiri maharishi

பள்ளிக் காலத்திகல் இருந்தே ஒரு புத்தகமும் விடாமல் படிப்பேன். ‘அம்புலி மாமா’ முதல் சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகள் வரை ஆர்வமுண்டு. இறையன்பு, சுகிசிவம், வேதாத்ரி மகரிஷி போன்றவர்களின் ஆன்மிக நூல்களை விரும்பிப் படிப்பேன். சைக்காலஜி படித்ததால் டாக்டர் ஷாலினியின் மருத்துவக் கட்டுரைகள், வலைத்தளங்களும் வாசிப்பதுண்டு.
வாழ்க்கை

வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்வதே மன நிம்மதியைத் தரும். எந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தைத் தரும். ஒவ்வொரு நிமிடமும் வரமே. மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்து ஒவ்வொரு நொடியையும் வாழ வேண்டும்.
பிடித்தப் பெண்கள்

நான் சந்தித்த எல்லாப் பெண்களுமே எனக்குப் பிடித்தவர்களே. குடும்பத்துக்காக படிப்பைத் துறந்த பெண்கள், கணவன் சரியில்லாமல் தைரியமாக குடும்பத்தைச் சுமக்கும் பெண்கள் என்று தன்னம்பிக்கையுடன் வாழும் ஒவ்வொரு பெண்ணுமே பிடித்த பெண்தான். என் அப்பா வெளிநாட்டில் வாழ்ந்தபோதும் தனியாளாக இரண்டு பெண்களை வளர்த்த என் அம்மாவே நான் வணங்கும் தலைமைப் பெண்.
இசை 

m-s-subbulakshmi1

காலை நடைப்பயிற்சியில் ஆரம்பித்து இரவு தூங்கும்வரை இசையுடனே வாழ்வது நிம்மதி தரும். இசை இன்றி அமையாது இவளுலகு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் ‘குறையொன்றும் இல்லை’ பாடலைக் கேட்டாலே மனம் அமைதி கொள்ளும்.

உடலும் மனமும் 

yoga

அளவான உணவு, நடைப்பயிற்சி, நிறைய தண்ணீர், மனதை சந்தோஷ நிலையில் வைத்துக் கொண்டாலே போதும்… யோகா செலய்வதும் உடல், மனம் இரண்டையும் புத்துணர்ச்சியாக்கும். வெறும் அரிசி உணவை மட்டும் உண்ணாமல் சிறுதானிய உணவுகளையும், நிறைய பழம் மற்றும் காய்களையும் உண்டு வந்தாலே உடல் எடை குறைந்து இளமையாகக் காட்சியளிக்கலாம்.
சமையல் 

meen_fish_kuzhambu

nandu gravy

திருமணத்துக்குப் பிறகுதான் கற்றுக் கொண்டேன். கோயம்புத்தூரின் அரிசிம் பருப்பு சாதம், பச்சைப் பயறு கூட்டு, மும்பையின் பாவ் பாஜி, கிருஷ்ணகிரியின் சிறுகீரைத் தொக்கு என ஒவ்வோர் ஊரிலும் பலவித சமையலைக் கற்றுக் கொண்டேன். நான் செய்யும் மீன் குழம்பு, நண்டு கிரேவி என் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். கேழ்வரகு உருண்டையுடன் மீன் குழம்பு எனக்குப் பிடித்த உணவு.
இயற்கை

பள்ளி விடுமுறைக் காலத்தில் கிராமத்திலுள்ள தாத்தா வீட்டுக்குச் சென்று விடுவோம். தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, ரோஜாப்பூ தோட்டம், மல்லிகைத் தோட்டம், என்றுமே வற்றாத ஆறு என்று சித்தி, மாமா பசங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாட்டம்தான். கிராமத்தின் அத்தனை குறும்புகளும் விளையாட்டுகளும் கலந்த அழகிய நாட்கள் எங்கள் குழந்தைப் பருவம். கணவரும் குழந்தைகளும் விடுமுறையில் எங்கள் விவசாய நிலத்துக்குச் சென்று பலவகை மரக்கன்றுகள் நடுவது, உரமிடுவது என ஆர்வத்தோடு இறங்கி விடுவார்கள். என் அப்பாவுக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகம். ஜீவாமிர்தம், அமிர்த கடைசல் என்று அவரே தயார் செய்து செடிகளுக்கும் மரங்களுக்கும் இடுவார். இயற்கையை ரசிக்கும் போது மனதுக்கு அமைதி கிடைக்கும். விடுமுறையில் குடும்பத்துடன் மலைப்பிரதேசங்களுக்கும் சென்று வருவோம்.
மரம் வளர்த்தல், மரங்களை அழியாமல் காத்தல், பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் மண்வளத்தை காப்பாற்றுவது போன்றவற்றை நாமும், நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுத்தும் வாழ்வோம். இயற்கையையும் சுற்றுசூழலையும் காப்பதும் நம் கடமை என்று உணர்வோம்.
தண்ணீர் 

Water-Saving

பிறந்து வளர்ந்தது காவிரிக் கரையோரம் என்பதால் தண்ணீர் பிரச்னை என்றால் என்ன என்று கூட்த் தெரியாமல் வளர்ந்தேன். ஊர் மாறும் போதுதான் நீரின் அருமை புரிந்தது. தண்ணீர் கஷ்டம் இல்லாத வீடாக அமைய வேண்டும் என்று வேண்டுதலே வைக்கிறேன். தண்ணீரின் அவசியம், தண்ணீர் சிக்கனம் போன்றவற்றை இளைய தலைமுறைக்கும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டியது நம் கடமை. பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைத்தாலே ஆறு, ஏரி, குளம் போன்றவை மாசுபடாமல் காத்து, அவற்றில் மழைக்காலத்தில் தண்ணீரை சுத்தமாக சேமித்து வைக்கலாம். துணிப்பைகளை உபயோகிப்பதால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை விட்டொழிக்க முடியும். நாம் ஒவ்ெவாருவரும் செய்யும் இந்த முயற்சிகூட கணிசமாக பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைக்கும். நம்மால் இயன்ற வரை வீட்டுத் தோட்டங்கள் அமைக்கலாம். மரங்களை நடலாம். மழை பெறலாம். நீரின்றி அமையாது உலகு.
புகைப்படக்கலை

சிறுவயதில் இருந்தே புகைப்பட கலையில் ஆர்வம் அதிகம். கோயில்கள், குளங்கள், மலைப்பிரதேசம், பூக்கள், சூரியன், பறவைகள், விலங்குகள் என்று நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தும் வருகிறேன்.
அழகென்பது

அழகென்பது தன்னம்பிக்கை, நேர்மை, மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டாலே அழகு தானே கூடிவிடும்.

நேர நிர்வாகம்… 

சரியான திட்டமிடல் இருந்தாலே போதும்… நிச்சயமாக நிறைய நேரத்தை மிச்சபடுத்தலாம். ‘நான் ரொம்ப பிஸி… நேரமே இல்லை’ என்று புலம்பவே வேண்டாம். முதல் நாள் இரவில், தூங்கப் போவதற்கு முன்பே மறுநாள் வேலை என்னென்ன… எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டாலே போதும்… மறுநாள் காலை முதல் டென்ஷன் இல்லாமல், நிதானமாக வேலைகளைச் செய்து முடிக்கலாம்.

பிடித்த ஆளுமைகள் 

diana

இந்திரா காந்தி, மதர் தெரசா, டயானா. மூன்று தலைமுறைகளையும் தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கும் மனோரமா ஆச்சியும் எனக்குப் பிடித்த ஆளுமையே.

சினிமா 

Jyothika_Sadanah_Wallpaperjpg_qllbl_Indya101(dot)com (1)

ரஜினி படத்தை மட்டும்தான் தியேட்டருக்குச் சென்று பார்ப்போம். இப்போது சூர்யா பசங்களின் சாய்ஸ். எல்லா நல்ல படங்களையும் தியேட்டருக்குச் சென்று பார்க்கிறோம். ஜோதிகா மீண்டும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. அவர் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.

கடந்தது வந்த பாதை

புது அனுபவங்களையும் பக்குவத்தையும் படிப்பினையும் தந்திருக்கிறது. இன்னும் கடக்க வேண்டிய பாதை நிறைய இருக்கிறது. கற்ற ஒவ்வொரு பாடத்தையும் படிக்கட்டுகளாக எண்ணி பயணம் செய்கிறேன்.

பிடித்தவை

இயற்கையை ரசிக்கவும் இசை கேட்கவும் பிடிக்கும். தொலைதூர பயணம்… அதில் மெலடி பாட்டுகள், தோழிகளுடன் மணிகணக்கில் அரட்டை மிகவும் பிடித்தவை.

வாழ்க்கை

நட்புகள், உறவுகள் மனநிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கிறது. வருவதை அப்படியே ஏற்று நதி போல ஓடிக்கொண்டே இருப்போம். இந்த நிமிடம் அழகு என்று ஒவ்வொரு நிமிடமும் ரசித்து வாழ்வோம். வாழ்க்கை வாழத்தானே!

11028968_862442367154003_2615257940376410732_o

***

Image courtesy:

http://www.trichypress.com

http://raviyolimathi.blogspot.in/

rlalitha.files.wordpress.com

http://www.landofyoga.com

http://cdn.awesomecuisine.com

http://ennsamaiyal.blogspot.in

http://www.sparkenergy-blog.co.uk

http://media-1.web.britannica.com

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16

ஸ்டார் தோழி – 17

ஸ்டார் தோழி – 18

ஸ்டார் தோழி – 19

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தின் மாநில மாநாடு & இருநாள் கருத்தரங்கு!

Entrepreneurs

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT) 9வது மாநில மாநாட்டையொட்டி ‘மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள்’ குறித்த இருநாள் கருத்தரங்கை ஜூன் 26 மற்றும் 27 தேதிகளில் நடத்த உள்ளது. இக்கருத்தரங்கில், ‘தொழில் தொடங்குவது எப்படி?’, ‘மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான என்னென்ன தொழில் வாய்ப்புகள் உள்ளன?’, ‘தொழில் தொடங்க எங்கு பயிற்சி பெற வேண்டும்?’, ‘அதற்கான உதவி திட்டங்கள் என்னென்ன?’,  ‘தொழில் தொடங்கத் தேவையான நிதி, இடம், மூலப்பொருட்கள், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றை தேர்ந்தெடுப்பது பற்றிய தகவல்களை எங்கு பெறலாம்?’,  ‘மார்கெட்டிங் இணைக்கப்பட்ட தொழில்கள் யாவை?’, ‘வெற்றிகரமாக நிர்வாகம் செய்வது எப்படி?’, ‘மத்திய, மாநில அரசு மானிய திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெற என்னென்ன வழிமுறைகள்?’, ‘தொழில் தொடங்கி தொடர்ந்து நீடித்திருப்பது எவ்வாறு?’… இவற்றோடு பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், நிதி நிறுவன அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், தனியார்துறை தொழில் அதிபர்கள், வெற்றிகரமாக செயல்படும் மகளிர் தொழில் முனைவோர்கள், இயற்கை சுற்றுப்புறச் சூழல் வேளாண் சார்ந்த கிராம வளர்ச்சிக்கான தொழில் நடத்தி வரும் நிறுவனங்கள், பெண்கள்  வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய தொழில்கள், நிதி கையாளும் முறை, தொழிலில் நிலைத்திருக்க ஆலோசனைகள் ஆகிய அனைத்தும் பெறலாம்.

தொழில் அதிபராகி நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனளிப்பீர்! இம்மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து தகவல்களும் அடங்கிய மாநாட்டு மலர், கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்ப்ப் படிவங்கள், தேனீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். கருத்தரங்கில் இலவச தொழில் ஆலோசனைகளும் வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

வாரீர் மாநில அளவில் நடக்கும் இக்கருத்தரங்குக்கு! பெறுவீர் பெரும் பயன்!

கருத்தரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு செய்யவேண்டிய முகவரி:

135-B, செயிண்ட்பால்ஸ் காம்ப்ளக்ஸ்,

பாரதியார் சாலை,

திருச்சிராப்பள்ளி – 1.

தொலைபேசி எண்: 0431-4200040, 9488785806.

Image courtesy:

http://cpainerie.com/

===

ஸ்டார் தோழி – 19

ஒரு தோழி பல முகம் 

4

ப்ரியா கங்காதரன் 

நான்…

கொங்கு திருநாட்டில் கொஞ்சும் தமிழோடு வெள்ளியங்கிரி, சந்திரா தம்பதிகளின் தலை மகளாகப் பிறந்தேன். மகளாகப் பிறந்தாலும் மகனைப் போல தன்னம்பிக்கையை மட்டும் தாய்ப்பாலாக பருகி வளர்ந்ததால் வெல்லும் தூரத்தில்தான் வானம் என சிறகு விரித்துப் பறந்தேன். உடன் பிறந்த தீபா திவ்யமான தோழி. என் கவிதைகளின் நாயகன் கங்காதரன்… கொண்டவளை அடக்கியோ/அடங்கியோ ஆள்வோர் மத்தியில் என் எண்ணங்களுக்கு வண்ணமும் பூச ஏங்குபவர். என் இறைவன் என்னிடமே தந்த என் செல்ல மகள் வைஷாலி… இதுதான் நான்… இவர்களும் நான்தான்… என்னுலகம் தமிழாலும் இவர்களாலும் மட்டுமே நிறைந்தது.

கற்றதும் பெற்றதும்

மருத்துவக் கல்வியை மனதில் எண்ணி பள்ளிக் கல்வியை படித்தாலும் கணினி துறையில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். படித்தது அறிவியல் என்றாலும் ரசித்தது தமிழை மட்டுமே. எழுத்தில் இதயம் தொலைத்து, கவிதைகளில் வாசம் செய்து, என்னை நானே உணரும் நேரத்தில் கைப்பிடித்தேன் என்னவனை, மனதில் கொண்டவனை, என் மன்னவனை. இனிய இல்லறத்தில் நிலவாகப் பூத்து என்னை முழுமை செய்தவள் வைஷாலி. அவள் வளர, அவர் வியாபாரத்தில் வெற்றிநடை போட எனக்குக் கிடைத்த தனிமையில் மீண்டும் எழுத்தில் பயணம் செய்தேன். என் தமிழை துடுப்பாக்கி கற்பனை கடல்களில் நீந்த செய்தேன்.

பிடித்தவை 

flower

எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொண்டால் பிடிக்காது என்பதே இருக்காதே! இருந்தாலும் மலை முகட்டில் ஒற்றை புல்லின் பனித்துளி ரசித்து கவிதை சொல்ல பிடிக்கும். இளையராஜாவின் இசையை இணைந்து பாடப் பிடிக்கும். வேகமாக கார் ஓட்டிச் செல்ல பிடிக்கும். என்னைப் பிடிக்கும்… எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். அப்பா மடியில் படுத்து அடம் பிடிக்க, அம்மாவிடம் செல்ல அடி வாங்க, தலை போகும் வேலையாயிருந்தாலும் என் தங்கத்துக்கு என் கையால் சமைத்துக் கொடுக்க, விட்டுக் கொடுக்க ரொம்பவே பிடிக்கும்… அதை அவர்கள் வெற்றியாக நினைத்து சிரிக்கும் அந்தச் சிரிப்புப் பிடிக்கும். பூ பிடிக்கும், புன்னகை பிடிக்கும். அம்புலி பிடிக்கும். அலை கடல் பிடிக்கும். காதல் பிடிக்கும். காவியும் பிடிக்கும். பிடிக்காத எல்லாவற்றையும் பிடித்ததாக மாற்ற முடியும் என்ற என் தன்னம்பிக்கை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

வாசித்தலில் வருடியவர்கள் 

சில நேசிக்கும் எழுத்துகளை வாசிக்கும்போது அவர்கள் சொல்லி விளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் கண்திறக்க மனமின்றி எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துகளின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். அப்படி என்னை மடியில் கிடத்தி தலை கோதி வருடிய சில…

s.ramakirhsnan

1. எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி.’ வரிகளை வாசிக்கும் பொழுதே உடன் பயணம் செய்கிற அனுபவம்… ஒவ்வொரு தேசமாக ஒவ்வொரு மனிதராக அவர் சந்தித்த பயணத்தின் சுகானுபவம் படிக்கும் பொழுதே நம்மையும் பற்றிக் கொண்டு விடுகிறது. இவரின் வரிகளை கடக்கையில் ‘அட… ஆமாம்! எப்படி இதை நாம் ரசிக்காமல் விட்டோம்… நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார்?’ என மனசு கேட்காமல் இருபதில்லை.  புத்தகத்தின் சில தேன் துளிகள்…

‘சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது…’

நிலமெங்கும் பூக்கள்…

‘பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்… எத்தனைவிதமான மலர்கள்..! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும்…’

உறங்கும் கடல்… 

‘தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன…’

balakumaran

2. எழுத்து சித்தர் பாலகுமாரன் வரிகளில் வாழ்க்கையை உணரலாம்… மனசோ உடம்போ சோர்வாக இருக்கும் பொழுது இவருடைய புத்தகம் போன்ற மருத்துவன் வேறு யாரும் இல்லை.
இவருடைய வரிகளில் எனது அடி நாதம் வென்றவை…
மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.
‘அக்கறைக்குப் பெயர் காதல், காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல்.  காதல் என்பது மதித்தல்.
உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை.’ – ‘குன்றிமணி’யிலிருந்து…

‘விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது அடக்கமும் அல்ல. சூழ்நிலையின் உண்மையை தனது வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.
ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன். தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.’- ‘சுழற்காற்று’ நூலிலிருந்து…

‘நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதைவிடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை.’ – ‘உத்தமன்’ புத்தகத்திலிருந்து…

‘பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும் மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.’ – ‘என் கண்மணித்தாமரை’யிலிருந்து…

RAMANICHANDRAN

3. குடும்ப உறுப்பினர்களின் மூலம் அறிமுகமானவர் ரமணிசந்திரன். அந்தப் பெயர் மனதில் பதிய, சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கினேன். இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாகக் காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களைச் சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை. சில நேரங்களில் அந்த கதாநாயகிகளாகவே கற்பனை செய்து பார்ப்பதும் உண்டு. படிக்கும் போதே நம் பிரச்னைகளுக்குத் தீர்வு நம்மிடமே இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து இவருடையது.

vairamuthu

4. திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று நினைததுமுண்டு. ஆனால், ‘கருவாச்சி காவியம்’ என் எண்ணத்தை மாற்றிவிட்டது.
வைரமுத்துவின் வைர வரிகளில் என் கண்களை குளமாக்கிவிட்டது. படிக்கும் போதே உயிர் ஒடுங்கி, ஒரு நடுக்கம் வருவதைத் தடுக்க முடியாது. கருவாச்சி, ஆத்தா பெரியமூக்கி, கொண்ணவாயன், கட்டையன், அவன் அப்பா சடையதேவர், கருவாச்சி மகன் அழகுசிங்கம், கெடா பூலித்தேவன், வைத்தியச்சி, கனகம், பவளம்… இவர்கள் எல்லோருடனும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிந்த அனுபவம் கிடைத்தது. காவியம் என்பது இதிகாசம் தொடர்பான ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணத்தை ‘கருவாச்சி காவியம்’ முற்றிலும் மாற்றிவிட்டது.

Pa Vijay

5. நிலவையும் தாளில் கொண்டு வந்தவர் வித்தக கவி பா.விஜய். சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை கவிதைகளாகத் தொகுத்து நெய்யப்பட்டது இவருடைய ‘உடைந்த நிலாக்கள்.’ ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்… இப்படி நீண்டுகொண்டே போகும் சாதனை மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த பெரும் மாற்றங்களுக்கு பெண் மட்டுமே முக்கிய காரணம்.
‘பெண் என்னும் பிஞ்சு பிராவகமே! கனவாக நீயிருந்தால் கண்விழித்தா நான் இருப்பேன்? நிலமாக நீயிருந்தால் நடக்க மாட்டேன்… தவழ்ந்திருப்பேன். முள்ளாக நீயிருந்தால் குத்திக் கொண்டு குதூகலிப்பேன். தீயாக நீயிருந்தால் தினந்தோறும் தீக்குளிப்பேன். தூசாக நீயிருந்தால் கண் திறந்து காத்திருப்பேன். மழையாக நீயிருந்தால் கரையும் வரை நனைந்து நிற்பேன்.’

என்னை கவர்ந்த எனது வரிகள் 

Window

ஜன்னல்
ஜன்னல்களுக்கு நான்
நன்கு பரிச்யமானவள்…
இன்னும் சொல்லப்போனால்
ஜன்னல்கள் குடும்பத்தில்
நானொரு கம்பி போன்றவள்!

இந்த ஜன்னல் வழியே
நான் வீசி எறிந்த திண்பண்டத்தின்
மிச்சத்தை இழுத்து ஓடிய எலியை
பின்னாளில் ஒரு காக்கா கொத்திக்
கொண்டிருந்ததும் பிறகு ஒரு
நாளில் அந்த இறந்து கிடந்த
காக்கையை எறும்புகள் மொய்க்க…

ஒரு உணவு சுழற்சிமுறையை காணநேர்ந்தது இந்த ஜன்னல் வழியேதான்!

இந்த ஜன்னல் வழியே
வீசி எறிந்த மாங்கொட்டை ஓன்று
மரமாகி கூட போனது!
இயற்கைக்கு என்னால் செய்ய
முடிந்தது இந்த ஜன்னல் வழியேதான்!
மழையில் நனைவது அவ்வளவு
சுகமென்று கவிதை எழுதி
வைத்துவிட்டு மழையில் நனையாமல்
வேடிக்கை பார்ப்பதும் இந்த
ஜன்னல் வழியேதான்!
பக்கத்து வீட்டுகாரனும்
எதிர்த்த வீட்டுகாரனும்
தெரு சண்டைகளில் இறங்கி
சண்டையிடும்போது சமூகத்தை
பார்த்து முகம் சுளித்ததும்
இந்த ஜன்னல் வழியேதான்!
ஒரு வேடிக்கையாளனுக்கு
இந்த ஜன்னல்கள் எப்படியெல்லாம்
விசுவாசமாக இருக்கிறது!
எனக்குதான் ஜன்னல்களிடத்தில்
நன்றியுணர்ச்சி அறவே இல்லை…
நான் இல்லாத நேரத்தில் அதை மூடி வைத்து விடுவேன்!

ஆளுமை செய்பவர்கள்… 

என் பாட்டி… கடின உழைப்பும் சிக்கனமும் கொண்டவர். படிப்பறிவு இல்லாவிட்டாலும், எதை எப்படி செய்ய வேண்டுமென்று அழகாக யோசித்து செய்வார்கள். தள்ளாத வயதிலும் தனி ஆளாக தோட்டத்தில் துறு துறு என சுற்றித் திரிந்து வேலையாட்களிடம் விவேகமாக வேலை வாங்கும் பாட்டியிடம் 10 வயது வரை வளர்ந்ததால் அந்த தன்னம்பிக்கையும் தைரியமும்தான் இன்று நான் செய்யும் வியாபாரத்திலும் வெற்றிநடை போட உறுதுணையாக இருப்பதாக உறுதியிட்டுக் கூறலாம்.

லக்ஷ்மி டீச்சர்… ஆ’னா, ‘ஆ’வன்னா கைப்பிடித்து எழுத வைத்தவர். படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் கூட இவர் பாடம் எடுத்தால் கற்கும் ஆர்வம் வந்துவிடும். பெயரிலேயே லக்ஷ்மியை வைத்து கொண்டு வாழும் சரஸ்வதியாக வலம் வந்தவர்.
திருமணம் செய்து கொள்ளாமல் கல்வி சேவை புரிந்தவர். ‘ஏன் டீச்சர் கல்யாணம் செய்யலை?’ என்று கேட்டால், ‘கல்யாணம் ஆனா ஒரு புள்ளை, ரெண்டு புள்ளைக்குத்தான் தாயா இருக்க முடியும். இப்போ பாரு… எம்புட்டு பிள்ளைக்கு தாயாக இருக்கேன்’ என்று சொல்லி கல்வி மீது காதல் வர வைத்தவர்.

வைஷாலி… குழந்தைத்தனத்தோடு  இருந்தவளைத் தாயாக மாற்றியவள். குழந்தையாக, ஆசிரியராக, தோழியாக, தாயாக, மகளாய் பன்முகம் காட்டுபவள்… என்னை முழுமை செய்த முழு நிலவு அவள். என் வாழ்வின் அர்த்தமே இவள்தான்.

அப்பா… அப்பா என்று சொன்னதும் எனக்கு ஆயிரம் எண்ணங்கள், பெண் குழந்தைக்கு அப்பாவையும், ஆண் குழந்தைக்கு அம்மாவையும்தான் பிடிக்கும் என்று சொல்வார்கள். எது எப்படியோ, என் விஷயத்தில் அது முற்றிலும் உண்மை. அம்மாவை எவ்வளவு பிடிக்குமோ, அதற்கு ஒரு படி மேல் என் அப்பாவைப் பிடிக்கும். எனக்கு என் அப்பா எப்பவுமே ஒரு ஹீரோதான். எப்போவாவது வீட்டில் சின்னச் சின்ன சண்டை வந்தாலும்  நா அப்பா சைடுதான். சரியோ, தப்போ அப்பாவைதான் சப்போர்ட் பண்ணுவேன். எனக்கு நினைவு தெரிந்து அப்பா (அம்மாவும்) என்னை அடித்ததோ, திட்டியதோ இல்லை. இத்தனைக்கும் அப்பா ரொம்ப கோபக்காரர். அடிக்கடி தான் சிறுவயதில் கஷ்டப்பட்டதை கூறுவார். இதெல்லாம் சொல்லி வளர்த்ததனாலேயோ என்னவோ எது தேவை எது தேவையில்லை என்று யோசிக்கும் பக்குவம் அப்பாவிடம் இருந்து வந்தது. அப்பாவிடம் ரொம்பப் பிடித்த விஷயம் அவர் எனக்கு அளித்த சுதந்திரம்… ‘எங்கே போய்ட்டு வந்த? ஏன் லேட்டு?’ போன்ற எந்தக் கேள்விகளையும் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. இந்த சுதந்திரம் என் எல்லைகள் எதுவென்பதை எனக்கு உணர்த்தியது. எல்லாவற்றையும் தாண்டி அவர் என் மீது வைத்திருக்கும் அன்பையோ, நான் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தையோ ஜஸ்ட் லைக் தட் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

என் சமையல் அறையில் 

kitchen

எனது சமையல் அறை எனது இரண்டாவது பூஜை அறை. ஒவ்வொரு முறை உள்ளே நுழையும் பொழுதும் கர்பககிருகத்தில் செல்லும் உணர்வு ஏற்படும். எப்பொழுதும் நாம் அன்பா சமைத்து, அதை எல்லோரும் ஆசையாக ரசித்து சாப்பிடும் அந்த உணர்வை, சந்தோஷத்தைப் பகிர வார்த்தைகளே இல்லை. என்னதான் வேலை, டென்ஷன் இருந்தாலும் வீட்டுக்குப் போனதும் ‘மாமாவுக்கு இதைச் செய்யணும்… அவருக்கு இது பிடிக்கும்… வைஷு இது வேணும்னு ஆசைப்பட்டாளே…’ என்று நினைக்கும் பொழுதே என்னோட டென்ஷன் எல்லாமே மறந்து போயிரும். என்னை அனுதினமும் புதுப்பிக்கும் மற்றொரு கோயில் எனது சமையல் அறை.

கோவையும் நானும் 

ooty

சிலிர்க்கும் சிறுவாணி (உலகின் சுவையான 2வது குடிநீர்), மனம் மயக்கும் மருதம் (மலை),  தீரனின் வீரம், கரிசல்காட்டில் நெரிசல் கட்டிய பஞ்சாலைகள், பல உன்னத கண்டுபிடிப்பை உலகுக்குத் தந்த ஜி .டி. நாயுடு, கல்விக்கு கண்திறக்கும் ஏராளமான கல்லூரிகள், கார் சாம்பியன் கார்த்திகேயன், தென் இந்தியாவின் மான்செஸ்டர், கலைவண்ணம் சிலைவண்ணம் கொண்ட பேரூர், கற்பகவிநாயகன், அன்னபூர்ணா இட்லி சாம்பார், பாலக்காட்டு கணவாயின் பசுமையான காற்று, வாழ முதுகெலும்பான விவசாயத்துக்கு முதல் கல்லூரி, மரியாதை அறிந்த மக்கள், இன்றும் ஓடிக்கொண்டு இருக்கும் இந்தியாவின் ஒரே புகைவண்டி (ஊட்டி), எட்டும் தூரத்தில் ஏலகிரி, தொட்டுவிடும் தூரத்தில் தொட்டபேட்டா, பாரதி கண்ட சேரநன்னாட்டிளம் பெண்களுடன்… மார் தட்டி சொல்வேன் என்னை கொங்கு தமிழச்சி என்றே!

சமூக மாற்றம்

ஒரு சமூகம் மாற்றம் பெறுவது கல்வியால் மட்டுமே! ஒருவனுக்குக் கல்வியை அளித்து விட்டாலே போதும்… அவன் அவனையும் அவன் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வான். ஆனால், அதே நேரம் அதற்குத் தகுந்த பாடத் திட்டங்களில் நமக்கு மாற்றம் தேவை என்பதும் உண்மை. நமது பாடத் திட்டங்கள், இன்னும் மெக்காலேயின் எழுத்தர்களை உருவாக்கும் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலேயே உழன்று கொண்டிருக்கிறது. ஒரு மிகச் சிறந்த அடிமையை எப்படி உருவாக்குவது என்பதுதான் மெக்காலே உருவாக்கி இந்திய சமூகத்துக்குப் பரிசளித்த கல்விமுறை. நாம் அந்த முரணை இன்னும் கடக்காமல் பயணிப்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொடுமை. இப்போது சமச்சீர் கல்வி குறித்த விவாதத்தில் நாம் எல்லோரும் குதித்திருக்கிறோம், ஆனால், அடிப்படைக் கல்வி மற்றும் கல்விச் சூழல் குறித்த எந்த விவாதக் களங்களையும் மேடைகளையும் நாம் உருவாக்குவதே இல்லை. இப்போது நம்மில் பலர் உரையாடிக் கொண்டிருக்கிற சமச்சீர் கல்வி குறித்த விவாதங்கள் அரசியல் முடிவுகள் குறித்த விமர்சனங்களாகவும், நம்மையும் அறியாத ஒரு பக்கச் சார்பு உரையாடல்களாகவுமே இருப்பதை ஆழமாகக் கவனிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.
நமது அடிப்படைக் கல்வி முறையில் காலம் காலமாக ஒரு வியப்பான, மிகக் கொடுமையான முரண் இருக்கிறது. அந்த முரணை நம்மில் பலர் கடந்து வந்திருக்கிறோம். கடக்க முடியாமல் தேங்கிப் போனவர்களாகவும் இருக்கிறோம். அந்த முரண், கல்வியை ஒரு நினைவாற்றல் தொடர்பான திறனாக மாற்றி வைத்திருப்பதில் இருந்து தொடங்குகிறது. நினைவாற்றல் கல்வியின் ஒரு மிக இன்றியமையாத பகுதி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நினைவாற்றலே கல்வி என்கிற ஒரு முரணை நாம் விரைவில் கடந்தாக வேண்டும்.
கல்வி என்பதை பொருளீட்ட உதவும் கருவி அல்லது வாழ்க்கையின் பொருட் தேவைகளை எதிர்கொள்ள நாம் கண்டறிந்த ஒரு தகுதி என்பது மாதிரியான ஒரு பிம்பத்தை நமது அறிவுலகமும் அரசும் கட்டமைத்திருக்கின்றன. கல்வி உறுதியாகப் பொருளீட்ட உதவும் ஒரு கருவிதான் என்பதை நாம் ஒப்புக் கொண்டாலும், அடிப்படைக் கல்விக்குப் பொருளீட்டுவதை விட மிக முக்கியமான ஒரு தேவை இருக்கிறது. அதுதான் சமூக மாற்றம்.

சமுக மாற்றத்தில் எனது பங்கு 

bharathi

‘அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல்… அதனிலும் ஆங்கோர் ஏழைக்கோர் எழுத்தறிவித்தல்…’ என் பாரதி எங்கோ, என்றோ சொன்னது கனவிலாட… இன்று வரை அதை நனவாக்க
என்னால் முயன்ற முயற்சியை செய்து கொண்டு இருக்கிறேன்.
வருடம் ஒரு 12ம் வகுப்பு மாணவர்… படிக்கும் ஆர்வமுவும் வெல்லும்  எண்ணமும் கொண்ட, படிக்க வசதி இல்லாத ஒருவரைத் தேர்வு செய்து அவரின் இளங்கலைப் படிப்பு முழுவதும் எங்கள் குடும்பச் செலவில் எங்கள் நிறுவன முயற்சியில் செய்கிறோம்.
இறைவன் அருளில் அதைப் பன்மடங்காகச் செய்யணும்.

எழுத்தின் இலக்கு

எழுதும் எல்லோருக்கும் உள்ள ஆசைதான் எனக்கும்.
கருவில் இருக்கும் குழந்தையை ஈன்றெடுக்கும் அன்னையின் ஆவலில் நானும்… ஆம். என் கவிதைக் குழந்தையை புத்தகமாக  பிரசுரம் செய்து, ஆசை தீர அள்ளி முகர வேண்டும் என்பதே…

ஒவ்வோர் எழுத்தையும் அன்னையாக ஆராதனை செய்து, நான் பெற்றெடுக்கும் என் கவிதைக் குழந்தை அனைவரின் கையிலும்  தவழ வேண்டும். ஓர் அன்னையாக  அதனை நான் ரசிக்க வேண்டும். என் வரிகளின் வாயிலாக இந்த உலகை காண வேண்டும். ஒவ்வொரு வரிகளும் பெறும் கைதட்டலை உள் வாங்கி உணரவேண்டும். என் கவிதைக் குழந்தையை எல்லோரும் ரசிக்கும் பொழுது… பிணியில்லா உலகும், பசியில்லா வாழ்வும், குறைவில்லா கல்வியும் எல்லோருக்கும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, நன்றி சொல்கிறேன்.

Image courtesy:

http://www.thenewsminute.com/

http://imgkid.com/

http://wallpaperjpeg.com/

http://upload.wikimedia.org/

http://www.goodluckkitchen.com/

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16

ஸ்டார் தோழி – 17

ஸ்டார் தோழி – 18

13

ஸ்டார் தோழி – 18

ஒரு தோழி பல முகம் 

Star Thozhi 2

ஷர்மிளா ராஜசேகர்

நான்…

தாயாக என்பதைக் காட்டிலும் நல்ல தோழியாக வாழ்வதே வசதியாக இருக்கிறது. அதிகபட்ச நேரங்களில் தாயாக, தோழியாக என்பதைக் காட்டிலும், நல்ல ‘மனுஷி’யாக இருப்பதையே விரும்புகிறேன். பிள்ளைகளின் படிப்பு, ஹெல்த் தவிர வேறெந்த விஷயங்களிலும் கட்டுப்பாடே கிடையாது.  அம்மா என்பதற்கு நம் சமூகத்தில் வைத்திருக்கும் அளவுகோலில் சேர்ந்து கொள்வதில்லை!

தோழியாக இருக்கையில் நல்ல நட்புடன் இருந்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘பெஸ்ட் தோழி’ என்று சொன்னால் அது நானாகத்தான் இருப்பேன். மனது என்ன நினைக்குமோ அது மட்டும்தான் வார்த்தையில் வரும். மனஸ்தாபம் வந்தால் விலகி நிற்பேனே தவிர, குறை பேசுதல் பிடிக்காது.

கஷ்டம் என்று சொல்லும் போதோ, உதவி என்று நம்பி வந்துவிட்டாலோ எப்படியும் உதவி செய்து விடுவேன். இதனால் இன்றளவும் குடும்பத்தில் மனஸ்தாபங்கள் வந்ததுண்டு. குடும்பம் என்பதை தாண்டி, வீட்டில் உள்ள முகங்களை தாண்டி, மற்ற மனிதர்களும் கூட உயிர்தான், சக மனிதர்கள்தான் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்று சொல்வார்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு வகையில் எங்கிருந்தோ உதவி செய்ய, யாரோ ஒருவர் முன்னிற்பார். உதவி செய்தலில், சாப்பாட்டில் எதிர் பாராமல் கூடிய காரம் போல சிலநேரங்களில் தவறு நேரலாம்.  எப்பொழுதுமே தவறாக இருந்து விடாது.

பள்ளி

திருச்சி, ராமகிருஷ்ணா மிடில் ஸ்கூல், BHEL கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல். கோயில் என்றால் என் பள்ளிதான். சிறு வயதிலேயே எனக்கு கோபம் வர வைக்க, என் அண்ணன் என் பள்ளியைத் திட்டுவான். அடக்க முடியாத கோபம் அப்போதுதான் வரும். ‘படி படி படி’ என்பதைத் தாண்டி எங்கள் பள்ளியில் போதித்தது சுத்தம், உதவி செய்தல், நட்பு, பணிவு, கடவுள் பக்தி, நாட்டுப்பற்று, பெரியவர்களுக்குத் தலை வணங்குதல்… இந்த குணங்கள் எல்லாம் வந்துவிட்டாலே படிப்பு தானாக வந்து விடும்.

ஆசிரியர்

சுவாமிநாதன் (ஹெச்.எம்.)… சுகந்தா மிஸ் இருவரும் என்றும் நினைவில் நிற்பவர்கள். சிறு குழந்தையில் எங்கள் ஹெச்.எம்.முக்கு செல்லப்பிள்ளை நான். வகுப்பில் வரலாறு பாடம் எடுக்க வருவார். உள்ளே நுழைந்ததும் புன்னகைத்து, எழுந்து நின்று என்னை படிக்கச் சொல்வதே பெருமையான விஷயமாயக நினைத்து மனம் துள்ளிடும்.

சுகந்தா மிஸ்… அவரின் உடல்நிலை மோசமான நிலையிலும் ‘என் பிள்ளைகளின் பத்தாம் வகுப்புத் தேர்வு முடியாமல் ஆப்ரேஷனுக்குப் போகப் போவதில்லை’ என்று சிகிச்சையையே தள்ளிப்போட்டவர். சிறந்த ஆசிரியை. ஒவ்வொரு கட்டத்திலும் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னுதாரணமாக என் மனதில் என்றும் இருப்பவர்.

ஊர் 

Trichy

திருச்சி. எனக்குத் தெரிந்தவரை அமைதியான ஊர், மரியாதை நிரம்பிய மக்கள், நல்ல உணவு, அதிக சாதி, மத வேறுபாடு பார்க்காத மக்கள். எந்தப் பிரச்னை நாட்டில் நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படாத நகரம். எந்தப் பகுதியில் இருந்தாலும் நினைத்த இடத்துக்கு 15 நிமிடங்களில் போய்விடலாம். சுத்தமான நகரம். இன்னும் கூட சுத்தம் இருந்தால் நன்றாக இருக்கும்.

புத்தகங்கள் 

Nenjukku needhi

suki Sivam

thabu shankar

கலைஞர் கருணாநிதியின் அனைத்து படைப்புகளும், இறையன்பு,லேனா தமிழ்வாணன், சுகி சிவம் அவர்களின் படைப்புகளும் என் வாசிப்பில் முக்கியமானவை. தபூ சங்கர் கவிதைகளில் சொக்கிப் போயிருக்கிறேன்.

குடும்ப அமைப்பு 

குடும்பம் என்பது அழகிய பூந்தோட்டம் போல. ஏனோ நம் குடும்ப அமைப்பில் மாற்றி, மாற்றி அடிமைத்தனம் செய்வதே முக்கியமான அம்சமாக ஆகிப் போனது. விட்டுக்கொடுத்தல், அனுசரித்து நடத்தல், ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்டல் எல்லாமே யாரோ ஒருவரை அடக்கி வைத்தலிலேயே முடிந்து விடுகிறது. இது மன அழுத்தத்தில் கொண்டு போய் விடுமே தவிர, வாழ்க்கை முழுமை அடையாது. முன்பிருந்த காலம் போல இல்லாமல் இனி வரும் தலைமுறை புரிந்து கொண்டு மாற்றிக்கொண்டால் மட்டுமே குடும்பம் முழுமையடையும்.

பொழுதுபோக்கு 

ஃபேஸ்புக் வருவதற்கு முன் புத்தகம் படிப்பதே பிடித்த விஷயம். இப்பொழுது ஃபேஸ்புக்கில் படித்துக்கொண்டிருக்கிறேன் இசை கேட்பதும் பிடிக்கும்.

இயற்கை 

Then sittu

குளிர்ந்த காற்று, மேகங்கள், ஊர்ந்து செல்லும் உயர்ந்த மலை… இப்படிப்பட்ட இயற்கை தினமும் கண்களுக்குக் கிடைத்துவிடாதே… அதனால் இயற்கையின் ஓர் அம்சமாக தினம் தினம் ரசிப்பது விடியற்காலையில் வீட்டின் முன்புற மரத்தில் வந்து அமர்ந்து தாவித்தாவி குதிக்கும் தேன்சிட்டு… இது எங்கிருந்தோ வந்து தினமும் சந்தோஷப்படுத்திச் செல்லும்.

தண்ணீர் சிக்கனம் 

water

ஒவ்வொரு மனிதரின் மிகப் பெரிய கடமை. முடிந்த வரை வருங்கால சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய மிகப் பெரிய சொத்து தண்ணீர்.

இதில் மக்களாக 100 மடங்கு கவனம் தேவை என்றால், அரசாங்கம் கவனிக்க வேண்டியது 1,000 மடங்கு. மழை நேரத்தில் கிடைக்கும் அத்தனை தண்ணீரையும் கடலுக்கு அனுப்பி விட்டு, ‘தண்ணீரை சேமியுங்கள்…  சேமியுங்கள்’ என்பது சரியானதாயகப் படவில்லை. மழைக் காலத்தில் ஒரு சொட்டு நீரையும் வீணாக்காமல் சேமிக்க அரசும் முன்வர வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி, குளம் எல்லாம் தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிக்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் 

ஏதோ ஒரு வகையில் ஒரு பெரிய தவறு மக்கள் பயன்பாட்டுக்குள் வந்து வாழ்க்கையின் மாற்ற முடியாத சக்தியாக ஆகியிருக்கிறது பேப்பர் கப், பேப்பர் பேக் என்று எவ்வளவு மாறினாலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிப்பது சிரமமே.

plastic-waste-road

ஒரே வழி இப்படி உபயோகத்தில் இருக்கும் பிளாஸ்டிக்கை ரீயூஸ் செய்வது. பிளாஸ்டிக் ரோடு போல வேறு என்னென்ன வகையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம் என்று கண்டறிந்து, உபயோகப்படுத்திய ப்ளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் ஆக்கபூர்வமான வழிகளில் உபயோகப்படுத்தலாம்.

சமூக அக்கறை

சமீப காலங்களில் சமூகத்துக்கு மிகப் பெரிய பாதிப்பாக நான் உணர்வது டாஸ்மாக் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு. இவற்றை வளரும் பிள்ளைகளின் மனதை சிதறடிக்கும் விஷயங்களாகப் பார்க்கிறேன். சில இடங்களில் 9ம்  வகுப்பு, 10ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கூட தங்கள் வாட்டர் பாட்டிலில் மதுவை கலந்து வைத்துக்கொண்டு அருந்துவதை கேள்விப்படும் போது மனம் வேதனையடைகிறது.

மிருகத்திலிருந்து மனிதனை வேறுபடுத்திக்காட்டுவது மனித குலத்தின் யோசிக்கும் தன்மைதான். ஒரு வருங்கால சந்ததியே போதையில் சிக்கி,  யோசிக்கும் திறனற்றுப் போய் விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

cellphone

இன்டெர்நெட் பயன்பாடு… பேச, சிரிக்க, அரட்டை அடிக்க என்று இருந்த காலம் மாறிப்போய்  ‘தானும் தன் போனும்’ என்று ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளப் பழகிவிட்டோம்.

மனிதர்கள்

விவசாயிகளும், நகரை சுத்தம் செயபவர்களுமே நாம் கண்ணால் காணும் தெய்வங்கள். இவர்கள் இருவரும் இல்லையென்றால் நாமெல்லாம் வாழவே முடியாத நிலையில் தள்ளப்படுவோம். எக்காரணம் கொண்டும் இவர்களை இழிவாகப் பார்ப்பதோ கிண்டலாகப் பேசுவதோ கூடாது என்பதை என்னிடம் பயிலும் பிள்ளைகளுக்கு மனதில் விதையாக ஊன்றியிருக்கிறேன்.

நாட்டில், சிறிதுசிறிதாக மனிதம் இறந்து போய்க்கொண்டிருப்பதற்குக் காரணம் நம்பிக்கை துரோகங்கள். மனித உருவில் இருக்கும் மிருகங்கள், கொஞ்ச நஞ்சம் இருக்கும் மனிதாபிமானத்தையும் இரக்க குணத்தையும் சாகடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எப்படியான சூழ்நிலையிலும், எவ்வளவோ விமர்சனங்கள் இருந்த போதும் மனிதாபிமானம் தவறில்லை, மனிதர்களாகவே இருப்போம் என்று நம்பிக்கை தரும் வண்ணம் நடக்கும் ஒரு சில நேர்மையான காவல் அதிகாரிகளால்தான் இன்னமும் மனிதம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

சொல்ல விரும்புவது… ரோட்டில் ஒரு பள்ளம் இருக்கிறதென்றால் உடனே ஒதுங்கி ஒதுங்கிப் போகாதீர்கள். சக மனிதன் உங்கள் பின்னாலேயே வந்து விழ வாய்ப்பிருக்கிறது. அரசாங்கம் சரி செய்யும் வரை அதில் ரெண்டு கல்லை எடுத்துப் போட்டு நாமே சரி செய்யலாம். மழைக்காலங்களில் இப்படிப்பட்ட உதவி தேவைப்படும்.

சமூக கோபம் 

ரோட்டில் போய்க்கொண்டு இருக்கும் போதே எச்சில் துப்புவது… எந்த கட்டிடமாக இருந்தாலும் எல்லா மூலையிலும் தவறாமல் எச்சில் துப்புவது…

பொதுக்கழிவறையை உபயோகப்படுத்தினால் அதை சரியாக சுத்தம் செய்யாமல், தண்ணீர் கூட ஊற்றாமல் வருவது… ‘நாம யூஸ் பண்றது தானே’ங்கிற எண்ணம் நிறைய பேருக்கு இல்லை… அப்போல்லாம் கோபம் வருது.

சொந்தங்கள் 

என்றோ ஒரு நாள் பார்க்கும் போது ஆசையாகப் பேசி, அன்பால் மனதை நிறைக்கும் சொந்தங்கள்… அதிக பட்சமாக வீட்டுக்கு ஒரு பிள்ளை என்றாகிப் போன நிலையில், இனி வரும் காலங்களில் நட்புகளே சொந்தங்கள்!

கற்றதும் பெற்றதும் 

எல்லா காலகட்டங்களிலும் எந்தச் சூழ்நிலையிலும் என்ன செய்தாலும் அதில் குறை சொல்லவும், குற்றம் காணவும் ஏதோ ஓர் உயிர் நம் உடனேயே பயணம் செய்து கொண்டே இருக்கும். கண்டு கொள்ளாமல் விடுவதுதான் ஒரே வழி. ஒவ்வொருவருக்காகவும் மாறினால், இறுதியில் நம் சுயத்தை இழந்து நாம் நம் தனித்தன்மையை இழந்துதான் நிற்க நேரிடும். எனக்கு எது பிடிக்குமோ, நான் எப்படியோ அப்படியே இருக்க விரும்புகிறேன்… எவ்வளவு சோதனைகள் வந்தாலும்!

நேரம்

ஸ்ரீ மனோஜ் ஹிந்தி வித்யாலயா… என்னுடைய கல்வி மையம். என் பிள்ளைகள், என் வகுப்பு எஅன என் நேரம் இனிதாக நிறைகிறது.

சமையல் 

cooking

காரசாரமாக, அதிக வெரைட்டியோடு வெஜிடேரியன் ஃபுட் மிகவும் பிடிக்கும். நான்கைந்து சைட்டிஷ்களோடு சமையலை சட்டென்று முடித்துவிடுவேன். ஜுரம், சளி, தலைவலி, வயிற்றுவலி என்று எதுவாயக இருந்தாலும் சமையிலிலேயே சரி செய்து விடுவேன். நம் ஆரோக்கியம், நம் குடும்ப ஆரோக்கியம் எல்லாம் நம் கையில்தான். சமையல் சரியாயக இருந்தால் ஆரோக்கியம் நம் வசம்!

பிறகலை 

டிராயிங், பூவேலை, தையல் என்று நிறைய தெரிந்தாலும் என்னவோ ஒன்றின் மேல் 10 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடிவதில்லை.

வீடும் நிர்வாகமும்

முழு வீட்டு நிர்வாகமும் நான்தான். முடிந்த வரை அதிகப் பொறுப்புகளை சேர்த்துக் கொள்வது என் பழக்கம்.

உடல்நலமும் மனநலமும்

உடல்நலம் நம்மைச் சார்ந்தது. மனநலம் நம்மைச் சார்ந்தவர்களைச் சார்ந்தது.  மனநலனை காத்தாலே உடல்நலத்தையும் சீராக வைத்துக் கொள்வது எளிதாகிவிடும்.

சினிமா

ஒரு மிகப் பெரிய சக்தி. சமுதாயத்தை சீர்ப்படுத்தவும் நாசமாக்கவும் அதனால் முடியும். ஆனாலும் சினிமா துறையினர் பல பொறுப்பில்லாமல் இருப்பது பெரிய ஆதங்கம். வயதானவர்கள் அதிகம் திரையரங்குக்குப் போவதில்லை. இப்பொழுதெல்லாம் அடிதடி, திருட்டு, டாஸ்மாக் போன்றவை அதிகம் சினிமாவில் இடம் பெறுகின்றன. ‘எவனையும் மிச்சம்வைக்காதே! போட்டுத் தள்ளு’ போன்ற வசனங்கள் இடம் பெறுவது சர்வ சாதாரணம். சினிமா  இளையதலைமுறையினரை நல்வழிப்படுத்த வேண்டாம்… அவர்களை வீணாக்காமல் இருந்தாலே போதும்.

கடந்து வந்த பாதை

அமைதியாக, நிம்மதியாக, சுலபமாக ஒரு வாழ்க்கை. எண்ணங்களும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். நிறைய நாடுகளுக்கு பயணப்பட, நிறைய எழுத, அரசியல் பக்கம் செல்ல என்று நிறைய ஆசைப்பட்டதுண்டு. ஆனாலும், நம் சமுதாயம், கட்டுப்பாடு, குடும்பம் என்று சிறு வட்டத்துக்குள் அமைந்த ஒரு வாழ்க்கை.

இசை 

music-symbols

இசை போல் மனதுக்கான இனிய மருந்து எதுவுமே இல்லை. எப்படிப்பட்ட வெறுமையையும் தனிமையையும் இனிமையாக்கும் இசை.

என் மரியாதைக்குரிய பெண்கள்

என் வாழ்வில் சந்தித்தவர்களில் என் அம்மாவும் தங்கையும்…

கட்சி, கட்சி என்று குடும்பத்தைப் பார்ப்பதில் அப்பா அதிக ஈடுபாடு காட்டாவிட்டாலும், இரும்பு மனுஷியாக பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வர உழைத்தவர் அம்மா.

பிள்ளைகளிடம் ‘என்ன ஆக ஆசைப்படற?’ என்ற கேள்விக்கு பெரும்பாலும் ‘டாக்டர் ஆகணும்’ என்பதே பொதுவான பதிலாக இருக்கும். அப்படிச் சொன்னதை செய்து காட்டி, நல்ல ‘மகப்பேறு’ மருத்துவராக வலம் வரும் என் தங்கை டாக்டர் கனிமொழி.

மகிழ்ச்சி தருணம் 

தினமும் மாலை என் ஹிந்தி வகுப்பில் என் குழந்தைகள் அத்தனை பேரும் செய்யும் சேட்டைகளும், பேசும் பேச்சுகளும், சந்தோஷக்கடலில் ஆழ்த்தும் மகிழ்ச்சியான தருணங்களே. பெற்றோரிடம் பேசறாங்களோ, இல்லையோ… எல்லா விஷயங்களையும் என்கிட்டேதான் சொல்லுவாங்க.

வீடு 

paint

வரைவதற்காக காஸ்ட்லி பெயின்ட்ஸ் வாங்கி, வீடு முழுவதும் அங்கங்கே வரைந்து, அரைகுறையாக விட்டுவிடும் மகனின் ஓவியங்கள்தான் சிறந்த இன்டீரியர்.

வாழ்க்கை 

வாழும் நாட்களைத் தள்ளுவது வாழ்க்கையில்லை. வாழ்வதே வாழ்க்கை.  ‘குடும்பம் இப்படித்தான் இருக்கணும்’, ‘இது சரி… இது தப்பு’ என்று ஒரு வட்டமிட்டு முடக்கிக்கொண்டு வாழாமல், கையில் கிடைத்த, கண்முன் இருக்கும் வாழ்க்கையில், பிடித்ததைப் பேசுங்கள்… பாருங்கள்… வாழுங்கள்!

அழகு

அழகு என்பது இன்னொருவரின் மனதில் இடம் பிடிக்க ஒரு ‘என்ட்ரி’ டிக்கெட் மட்டுமே. உங்களின் அன்புதான் பிறகு அழகாக மாறும். உங்களைச் சார்ந்தவர்களிடம் சரியோ, தவறோ ரசித்து வாழப் பழகுங்கள்… அவர்களின் உயிருக்கு உயிராக ஆவீர்கள். இல்லையென்றால், அவர்களின் நினைவின் மூலையில் கூட உங்களின் நினைவு இருக்காது.

ஃபேஸ்புக்

மறுஜென்மம் என்ற கூற்று உண்மையானால் நாம் ஒரு ஜென்மத்தில் சந்தித்த நபர்களை மறு ஜென்மத்தில் சந்திக்க நேரிடுமாம். அவ்வகையில் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்த களம் ஃபேஸ்புக்.  ஒவ்வொருவருக்கும் அன்பாக, நட்பாக, உயிராக நட்புகளைக் காட்டும் தளம்… அன்பான நட்பினை மனதின் நெருக்கத்துக்குக் கொண்டு வந்து வைக்கும் கடவுள் வசிக்கும் தளம்.

எதுவாக இருந்தாலும் மனதில் உள்ளதை கொட்டிவிடலாம். கேட்க, மதித்து பதில் சொல்ல என்று நட்புகள்… எந்தக் கவலை இருந்தாலும் மனதை உடனடியாக ரீசார்ஜ் செய்துவிடும்.

நல்ல மனிதர்கள் எவ்வளவோ அதைக்காட்டிலும் தவறானவர்கள் பலமடங்கு உலவும் இடம்… இருப்பினும், நாம் நண்பர்களை சரியாகத் தேர்ந்தெடுத்து விட்டால் நல்லதே நடக்கும்.

குடும்பம்

என் இரு மகன்கள் – அரவிந்த், மனோஜ்ராகுல். வீட்டின் பெண் பிள்ளையாக என்னைக் கொண்டாடும் கணவர்… பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்ளும் பொறுப்பான குடும்பத்தலைவர்.

இன்னும் என்னை குழந்தையாகவே பாவிக்கும் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை (தங்கையாய் இருந்தாலும் அதுவும் அப்படித்தான்!)

போகும் வரும் இடத்திலெல்லாம் என்னைப் பற்றியே பேசி, கொண்டாடும் இன்னொரு அம்மா (மாமியார்), கணவரின் உடன்பிறப்பாக இருவர், அன்பான குடும்பம்!

எழுதியதில் பிடித்தது

முதன்முதலாக ‘குங்குமம் வலைப்பேச்சி’ல் வெளியானது…

‘தனியாக இருப்பதுதான் தனிமையா? பத்து பேர் நடுவுல நாம இருந்தாலும் நம்ம செல்போன் நம்ம கையில இல்லாம இருக்கும் போது வர்ற ஃபீலிங்தான் தனிமை.’

‘சளி பிடிச்சுருக்கு’, ‘பேய் பிடிச்சுருக்கு’ன்னு பிடிக்காததெல்லாம் பிடிச்சுருக்குன்னு சொல்றாங்களே… வேற என்னவெல்லாம் பிடிக்காதது பிடிச்சுருக்கு!!!

எனக்குப் பிடித்த என் எழுத்துகள்…

ஒரு வரிக்கதை…

சிறு ஊடல்

அவன் பேசட்டும் என அவள் காத்திருந்தாள். அவள் பேசட்டும் என அவன் காத்திருந்தான். இந்தக் காத்திருப்பில் தற்கொலை செய்து கொண்டது இருவருக்கிடையேயான நட்பு!

***

 • நட்புடன் இருப்பதாக நடிக்க கற்றுத் தர சிறந்த இடம் ஃபேஸ் புக்!
 • நட்பு என்னும் கோட்டினை தாண்டி சிறிது எட்டிப் பார்த்தாலும் அந்த நட்புக்கு அற்ப ஆயுள்தான்!
 • பொண்ண பெத்தவங்கல்லாம், பையன் போல வளர்க்கறேன்னு வளர்க்கறாங்க. இனி அமைதியான பையன் கிடைச்சாலும் கிடைப்பான்… அமைதியான பொண்ணு கிடைக்கறது ரொம்ம்ம்ம்ம்ப கஷ்டம்!
 • அன்பாக இருப்பதை தாய்மொழியிலும், கோபத்தை வேற்று மொழியிலும் வெளிப்படுத்துதல் உறவுகள் பிரியாமல் இருக்கும் ஒரு ராஜதந்திரம் தான்!
 • என் எல்லா மகிழ்ச்சியையும் ‘மகிழ்ச்சி என்பது யாதெனில்’ என்று மகிழ்வாக குங்குமம் தோழி வெளியிட்ட அனைத்தும் பாராட்டு வாங்கிக்கொடுத்தன.

Star Thozhi 1

Image courtesy:

http://fc03.deviantart.net

http://static.ibnlive.in.com

http://beta.slashdigi.com

http://www.rodalenews.com/

http://upload.wikimedia.org/

http://epikardia.com/

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16

ஸ்டார் தோழி – 17

செய்திக்குப் பின்னே… பிட்டுக்கு வேலை கிடைத்த கதை!

 

open-chitting-in-bihar

– ஷர்மிளா ராஜசேகர்

‘பீகாரில் பத்தாம் வகுப்புத் தேர்வின் போது பிள்ளைகளுக்கு பிட் கொடுத்த பெற்றோர்’… இச்செய்தியைப் படித்ததும் படம் பார்த்ததும் ஒரு ஜாலியான விஷயமாகவே முடிந்து போனது!

இதற்குப் பின் மறைந்துள்ள பாதிப்புகள்..?  

 

காலைல இருந்து நைட் வரைக்கும் நாள் முழுதும் ‘படி,படி,படி’ன்னு நம்ம ஊர் பிள்ளைங்க… இங்கே எக்ஸாம் எழுத எவ்வளவு ஸ்ட்ரிக்ட்…  படிக்கறதுக்காக எத்தன கோச்சிங் சென்டர் போய் நாள் முழுதும் புக் வச்சே காலத்தை தள்ளின எவ்வளவோ பேர்!

ஆனால், ஒண்ணுமே இல்லாம காப்பி அடிச்சு பாஸ் பண்ண வச்சு ஈசியா கவர்ன்மென்ட் ஜாப்ல செட் பண்ணி அனுப்பி வச்சுருக்கு அந்த கவர்ன்மென்ட்…

எவ்வளவோ படிச்சும் அறிவிருந்தும் சரியான வேலைக்கு போக முடியாம நிறைய பேரு பிரைவேட் கம்பனியிலேயும் வெளிநாட்டுக்கும் பிழைப்புக்காக ஓடிட்டு இருக்காங்க.

‘பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்’ என்ற செய்தி… வெளியில தெரிந்து போனதற்காக வந்த அறிக்கையே தவிர அவர்களுக்கு தெரியாத நிகழ்வு இல்லை. இதை சாதாரணமான விஷயமாக விட்டுவிட முடியுமா? முறையாக படித்தவர்களுக்கு வந்திருக்க வேண்டிய நிறைய வாய்ப்புகள்  களவாடப்பட்டிருக்கிறதுதானே?

இதைப் பற்றி முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் அறிவிப்பு… ‘என் ஆட்சியாக இருந்திருந்தால் பிள்ளைகளுக்கு இவ்வளவு கடினமாக இருக்காது. புக் கொடுத்தே அனுப்பி இருப்பேன்.’ (அவர் காலத்தில் நடந்ததை வாக்குமூலமாக சொல்லியிருக்கிறார்!)

லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது நிறைய பீகாரீஸ் ரயில்வே துறையில் வேலையில் அமர்த்தப்பட்டனர் என்பது நினைவு கூறத்தக்கது.

எவ்ளோ பாசமான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்… புக் கொடுத்து பாஸ் பண்ண வச்சு எல்லா கவர்ன்மென்ட் ஆபீஸுக்கும் வேலைக்கு அனுப்பி பார்த்துக்கிட்டு இருக்காங்க… அங்கே மக்களுக்காக அரசு.

இங்கே உள்ள சட்ட திட்டம் எவ்வளவுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ‘சரியாக எழுதலைன்னா மார்க் வரலைன்னா தற்கொலை பண்ணிட்டு செத்துடு’ன்னு சொல்லாமல் சொல்ற மாதிரியான மனநிலைக்கு பிள்ளைங்கள கொண்டு வந்து விட்டு வச்சுருக்காங்க… இங்கே அரசுக்காக மக்கள்!

மேம்போக்காகப் பார்த்தாலோ, ‘இதிலென்ன’ என்று கூட நினைக்க தோணும். ஆனால், இது அதுக்கும் மேலே…

இப்படி ஒரு செய்தி வெளியில் தெரிந்ததும், ஏமாற்றி வேலைக்கு வந்தவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும். இனியாவது நம் அரசாங்கம் நம் மக்கள் நலனில் (முறையாக) அக்கறை செலுத்துமா?

ஷர்மிளா ராஜசேகர்

ஷர்மிளா ராஜசேகர்

***

ஸ்டார் தோழி – 17

kirthika 1ஒரு தோழி பல முகம்

கிர்திகா தரன்

நான்…

கிர்த்திகா, கீர்த்தி, அம்மா, அக்கா – ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பதவி, பட்டம். அந்தந்த வயதில் அவற்றை அனுபவித்தே இருக்கிறேன்… மனுஷியாக வாழ்வதே சவாலாக இருக்கும் காலத்தில் திரும்பி பார்க்கும் வாழ்க்கை திருப்தியாக இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம். காலம் ஒவ்வொரு பருவத்திலும் மனிதர்களை சேர்க்கிறது… விலக்குகிறது. அனைவரிடமும் முடிந்த வரை அன்பு பாராட்டி நதி போல ஓடிக்கொண்டு இருப்பதே சாதனை. தாய் என்பது மிகப்பெரிய பதவியும், பொறுப்பும். வாசிக்க, எதையும் கவனிக்க, கேள்விகள் கேட்க, பதில்கள் தேட கற்றுக் கொடுப்பது மட்டும் பெற்றோரின் பொறுப்பு என்று நம்புகிறேன். கல்வியை கற்றுக் கொடுப்பது நம் கடமையல்ல… அது திணிப்பாக மாற வாய்ப்பு உண்டு. நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள தூண்ட வேண்டும். பிறகு அவர்களே கற்றுக் கொள்வார்கள். இன்றும் நான் ஐந்து வயது தோழமை கூட பேசிகொள்வது வரம்… ஐந்து நிமிட தோழமைகள் கூட மறக்காமல் இருப்பது வரமோ வரம்.

பள்ளி

பள்ளிப் பருவத்தில் ஒரு பட்டாம் பூச்சியாக என்னை இருக்க விட்டது மிகப் பெரிய விஷயம். இப்போதைய பள்ளிகளைப் போல சிறகை ஒடித்து அடைத்து ருசிக்காமல்,  சிறகை விரித்து பறக்க விட்ட காலம். மதிப்பெண்கள் பற்றிய கவலை தேர்வு நேரங்களில் மட்டும். உற்சாகம், சந்தோஷம், விளையாட்டு, பேச்சு, பேச்சு, பேச்சு நிரம்பிய காலம் அது. பெரிய பள்ளியில் ஆசிரியர்கள் அறிய இருப்பதே பெரிய விஷயம். அவர்களிடம் நெருக்கமும் இருந்தது. அந்த நெருக்கமே அவர்கள் போதிப்பதை நெருங்கி பார்க்க செய்தது. வீட்டில் படித்த நினைவே இல்லாமல் இருக்கிறது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அதற்கு ஆசிரியர்கள் காரணமாக இருதிருக்கின்றனர்.

ஊர்… கற்றதும் பெற்றதும் 

பெங்களூரு

பெங்களூரு

20 வருடமாக  வசிக்கும் இடம் என்று சொல்லி, தள்ளி வைக்க முடியாது பெங்களூரை… இதன் நீரை அதிகம் குடித்து, அதன் காற்றை சுவாசித்து, இந்த ஊர் என் மெய்யோடு கலந்து யுகமாகிவிட்டது. ஆரம்பத்தில் ‘என் மாநிலம் தமிழ்நாடு’ என்று சொன்னது போய் ‘கர்நாடக வாழ் தமிழர்’ என்று சொல்லும் அளவுக்குக் கலந்து விட்டது.

பல மொழிகள் , பல கலாசாரம், கல்வி முறைகள், உடை வகைகள், பரந்த சிந்தனை, மாடர்ன் மனசு, எதையும் சகித்துக்கொண்டு, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைத்தையும் கற்றுக்கொண்டது இங்குதான். தனியாக மொழி தெரியாமல் எங்கும் போய் சமாளிக்கும் தன்னம்பிக்கையையும் இது தந்தது.

உணவு 

Maddur Vada

உடுப்பி கடுபு, மங்களூர் ஹோலிகே, வட கர்நாடக ஜோலா தோசை, கத்தரிக்காய் கொஜ்சு, பெங்களூரு போண்டா சூப், மதுர் வடை, ராகி உருண்டை – தொட்டுக்க பசார் கீரைக் குழம்பு, கர்நாடக ரசம், ரோட்டோர பானி பூரி, மசால் பூரிகள்,  எம்.டி.ஆர். ரவா இட்லி, வீணா ஸ்டோர் இட்லி-சட்னி… ஐயர் கஃபே வடை, காபி, CTR வெண்ணெய் தோசை… ஒன்றா இரண்டா உணவு வகைகள்? அனைத்தையும் ஒரு கை பார்ப்பதே நம் வேலை!

புத்தகம் 

ambai sirukathaigal
சுஜாதாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. சிறு வயதில் மகாபாரதம், ராமாயணம், தேவி பாகவதம் மற்றும் பத்திரிகைகள்… தவிர பாலகுமாரன், ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஜெயமோகன், சுந்தர ராமசாமி, காஃப்கா, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜி.நாகராஜன், பஷீர்… அடுத்து பெருமாள் முருகனின் எழுத்துகள்… கொங்கு நாடு பற்றிய அறிமுகம் அவர் நாவல்கள் மூலமே. இன்னும், இன்னும் நிறைய எழுத்தாளர்கள்… தற்பொழுது வாசித்துக்கொண்டு இருப்பது அம்பை சிறுகதைகள். இதுதான் என்று இல்லை… நல்ல புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்கப் பிடிக்கும்.

குடும்பம் 

20 வருடங்களாக கூட்டுக் குடும்பம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மாமியாருடன் இருக்கிறேன். அம்மா, அப்பாவோடு இருந்ததை விட அவரோடு அதிகம் இருக்கிறேன். குழந்தைகளுக்கு பாட்டியின் அரவணைப்பு கிடைத்தது வரம். பக்கத்திலாவது சித்தப்பா, அத்தை, பாட்டி, கசின் என்று யாரேனும் அருகிலாவது இருக்க வேண்டும். அப்போது குடும்பத்தின் ஆணி வேர் பலமாக குழந்தைகளின் மனதில் ஊன்றப்படும். எல்லார் அன்பும் நிறைக்கும் வேளையில் அவர்கள் குடும்பத்தை விட்டு விலக விரும்ப மாட்டார்கள். வாய்ப்பு இருக்கும் வேளையில் பெரியவர்களோடு குழந்தைகள் ஐக்கியமாக விட வேண்டும். நம் பிரச்னைகளை அவர்கள் முன் தவிர்க்க வேண்டும். கணவர் மருத்துவர்… இரு ஆண் குழந்தைகள்… ஆண்களால் அழகாக சூழப்பட்ட வாழ்க்கை.

பொழுதுபோக்கு 

புத்தகம், இணையம், நண்பர்கள், பயணம்…

இயற்கை 

shark
பையன் ஒரு கேள்வி கேட்டான்… ‘வெளிநாட்டில் தண்ணீருக்கு அடியில் கண்ணாடிக் குழாயில் இருந்து கொண்டு மீன்கள், டால்பின்கள், சுறாக்கள் பார்க்க முடியுமே! ஏன் நம்ம ஊரில் அந்த வசதி இல்லை?’ ‘உன்னை கண்ணாடி வீட்டில் குடியிருக்க சொன்னால் இருக்க முடியுமா?’ என்று கேட்டேன். ‘ஹையோ. நான் பாத்ரூம் போகணும். அம்மாவை கட்டிக்கிட்டு தூங்கணும். முடியாது’ என்றான். ‘அதே போல்தான் மிருகங்களும். அதுவே நீருக்கு மேலே வரும். இல்லையென்றால் நீச்சல் கற்றுக்கொண்டு மூழ்கிப் போய் பார்க்கலாம்… நட்பாக அளாவலாம்… அதை விட்டுவிட்டு வேடிக்கை பொருளாக்கி பார்க்க கூடாது’ என்றேன். இயற்கையும் அப்படித்தான். காய்ந்து இலையும் சருகுமாக இருக்கும் காட்டுச் செடிகளை, மரங்களை அழித்து கொரியன் புல் வளர்ப்பது, பூச்செடிகள் போடுவது  இயற்கை காட்சி  அல்ல. இயற்கையாக இயற்கையை விடுவதே இயற்கை. அதைக் காப்பாற்றி குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

தண்ணீர் சிக்கனம் – பிளாஸ்டிக் பயன்பாடு 

BBMP
இரண்டு மூன்று வருடங்களாக பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வாங்குவதை முடிந்தவரை தவிர்கறேன். முக்கியமாக தமிழ்நாட்டில் மிக அதிக பிளாஸ்டிக் பை உபயோகம் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. பிளாஸ்டிக்குகளை எல்லா இடங்களிலும் வீசி வருவது வருத்தம் தருகிறது. சமீபத்தில் ஒருநாள் பார்த்தேன். இங்கு ஒரு மூலையில் நான்கு, ஐந்து BBMP குப்பை லாரிகள் நின்று கொண்டு இருந்தன. ஈரக் குப்பைகள்  தனியே உரத்துக்கு… பேப்பர் குப்பைகள் விலைக்கு என்று அனைத்தையும் அழகாகாகக் கழித்துவிட்டனர். டம்ப் செய்வது பெரும்பாலும் குறைக்கப்பட்டு இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு வந்தால் வாழும் இடம் சொர்க்கமாகும்.

பள்ளியில் ஒருநாள் குழந்தைகளுக்குப் பாடம் எடுத்தேன். ‘நீங்கள் குடிக்கும் தண்ணீரை வெளியே எடுங்கள்’ என்றேன். ‘அது எவ்வளவு ஃப்ரெஷ்?’ என்று கேட்டேன். அனைவரும் ‘இப்பதான்’ என்றார்கள். ‘எங்கம்மா பழைய தண்ணி வைக்க மாட்டாங்க’ என்றார்கள். ‘எங்கிருந்து வந்தது?’ என்றேன். ‘பைப்’, ‘டாங்க்’, ‘அக்வா கார்ட்’ என்று பதில்கள்… ‘பிறகு?’ என்றதற்கு ‘ஆறு’, ‘ஏரி’ ‘நிலத்தடி நீர்’… இன்னும் ரிவர்ஸில் போகச் சொன்னேன். ‘மழை’, ‘மேகம்’, ‘பனி’… இன்னும் பின்னே… ‘கடல்’, ‘ஆறு’, ‘ஏரி’, ’குளம், குட்டைகள்… பிறகு? சுற்றிச் சுற்றி வந்தது.

‘நாம் குடிக்கும் நீர் பல மில்லியன் காலங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது. நம்மால் ஒரு சொட்டு கூட ஆய்வு கூடத்துக்கு வெளியே உருவாக்க முடியாது என்பதே உண்மை. நம் பாட்டிலில் இருக்கும் நீர் நம் கொள்ளு தாத்தாவின் உச்சாவாகக் கூட இருக்கலாம். ஆனால், அதில் விஷம் கலந்தால் நமக்குத்தான் திரும்பி வரும்’ என்றேன். ‘சுத்தப்படுத்த மிக அதிக செலவாகும். மரங்கள் ஓவர் டியூட்டி செய்ய வேண்டும். சிக்கனமாக இருப்பது நல்லது’ எனச் சொல்ல… மாணவர்கள் அழகாக ஏற்றுக்கொண்டனர். கதையால் சிக்கனம் சொல்லலாம்… அறிவுரை யாருக்கும் பிடிக்காது.

சமூக அக்கறை 

எப்பொழுதும் உண்டு. இப்பொழுதும் இரு பொருளாதாரத்தில் பின் தங்கிய  பள்ளிகளில் பாடம் எடுக்கிறேன். கல்வியின் மூலமே ஒரு சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டிய நிர்பந்தம். ஆனால், அந்த வாய்ப்பு சிலருக்கு இல்லாமல் போவது சமூக்க் கேடு. அனைவரும் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வாழ வேண்டும். இளைஞர்கள் அனைவரும் சமூகத்துக்கு சிறு பங்காவது செய்ய வேண்டும். பலர் அப்படிச் செய்வது நம்பிக்கையைத் தருகிறது.

மனிதர்கள் 

அனைவரும் நல்லவர்கள். மிகக் குறைந்த விகித அளவே வேறு மாதிரி இருக்கிறார்கள். நாம் குறை, பகை இல்லாமல் அன்பாக இருந்தால் நம்மிடம் அன்பு செலுத்த மனிதர்களுக்குத் தடை ஏதும் இல்லை. நாம் நட்புரிமையுடன், ப்ரியத்துடன் நேசத்தை செலுத்தினால் உலகம் அழகாகும். நமக்கு நம்மை மாற்றிக்கொள்ளும் சக்தி மட்டுமே உண்டு.

பிறந்த ஊர் 

oonjal

கொல்லுமாங்குடி… கும்பகோணம் அருகில். இன்னமும் கிராமத்தின் வெள்ளந்தித்தனத்தை ஒளித்து வைத்து இருப்பது வரம். கிரிகெட், சீரியல்  உள்ளே நுழையாத காலம்… அதனால் பளிங்கு, கிட்டிப்புல், கபடி, பாண்டி, ஊஞ்சல் என்று உற்சாகப் பறவையை கட்டிக்கொண்டு பறந்த காலம். கற்றுக்கொள்ள வாழ்கை எத்தனையோ வைத்திருக்கிறது. குழந்தைப் பருவம் மிக இனிமை… அதை எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுத் தந்தது ஊர்.

நேர நிர்வாகம் 

அப்படியெல்லாம் எதுவுமில்லை. எத்தனை வேலை இருந்தாலும் அவ்வப்போது முடித்து விட வேண்டும். சும்மா இருக்கும் பொழுது சந்தோஷமாக இருக்க வேண்டும். நேரம் என்ன தேக்கி வைத்து இருக்கிறதோ அதை  எடுத்துக்கொண்டு போக வேண்டும்.

சமையல் 

சுவையா சமைக்க பிடிக்கும். ஆனால், இரண்டு மணி நேரத்துக்கு மேல் கிச்சனில் இருக்கப் பிடிக்காது. திறமையான பல பெண்கள் சமையல் அறையில் நேரத்தை வீணடிப்பதில் ஒப்புதல் இல்லை. எளிமையாக இந்த நேரத்தில் ஒரு நாளுக்கே சமைத்து விடலாம். அதை இன்னொருவரிடம் தொழில் ரீதியாக ஒப்படைத்தால் அவர் குடும்பத்துக்கும் வருமானம் கிடைக்குமே.
பிற கலை 

சினிமா, டிராமா, எழுத்து, ஓவியம, புகைப்படம், நாட்டியம்… ஏன் பஜன் கூட ரசிக்கப் பிடிக்கும்.

வீடு-அலுவலகம் சமாளித்தல் 

கற்றுக்கொண்டு இருக்கிறேன். எத்தனை ஒழித்தாலும் குப்பை சேருவதை தடுக்க முடியவில்லை. அதனால் அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு இப்படி இப்படியே வேலை செய்து முடிக்கிறேன்.

கடந்து வந்த பாதை

மிக அழகான பாதை… கிராமத்தில் பிறந்து, விவசாயத்தோடு வளர்ந்து, டவுனில் படித்து, நகரத்தில் வாழ்ந்து, உலகம் சுற்றும் குழந்தைகளை வளர்த்து… நல்ல குடும்பம், நட்புகளை வரமாக பெற்று… வேறென்ன வேண்டும்..

சினிமா 

Actor Karthi in Madras Movie Posters

நல்ல சினிமாக்களை பார்ப்பது பிடிக்கும். மசாலாவும் பிடிக்கும், ஜேம்ஸ் கேமரூன், மணிரத்னம், மிஷ்கினும் பிடிக்கும். பிடித்த ஹீரோக்களில் அரவிந்த் சாமி முதல் ஜார்ஜ் க்ளூனி வரை ரசனை நீள்கிறது. தரமான உலக படங்களும் பிடிக்கும். தற்பொழுது தமிழ் படங்கள் உச்சத்தை நோக்கி பயணம் செய்வதாக தோன்றுகிறது. ‘ஜிகர்தண்டா’, ‘சதுரங்க வேட்டை’, ‘மெட்ராஸ்’ என்று இயக்குநர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள். அந்தப் பக்கம் பார்த்தால் கலர்ஃபுல்லாக ’காவியத் தலைவன்’… மிக அழகாக அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமா நகர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

உடல் நலம் மன நலம் 

இரண்டும் ஒன்றுகொன்று தொடர்பு உடையவை. ஒன்று நன்றாக இருந்தால் இன்னொன்றும் அப்படியே இருக்கும்.

எழுதியதில் பிடித்தவை 

குட் டச்… பேட் டச்…’ பற்றி அதிகம் தெரியாத நேரத்தில் அதைப் பற்றி விளக்கமாக எழுதினேன். அது ஃபேஸ்புக்கில் நிறைய ஷேர் செய்யப்பட்டு வலம் வந்தது. அடுத்து அப்பா பற்றி எழுதியது… அனைத்துமே உணர்வு பூர்வமானவை.

இசை

மனதுக்கினிய எந்த ஒலியும் இசையே. அன்பின் ஹலோ, குழந்தையின் அழைப்பு, பையனின் ஸ்கைப் கால் – அனைத்துமே இசைதான். சிலரின் பேச்சுகள் கூட இசையாக ஒலித்துக்கொண்டே இருக்கும்.

பிடித்த ஆளுமைகள் 

தமிழ் இணையத்தில் ஈரோடு கதிர், ரவி நாக், அமுத தமிழ் இன்னும் பலர். அன்பின் ஆளுமைகளும் அதிகம் உள்ளனர்.  வெளியில் படேல், அம்பேத்கர், காந்தி. அதைத் தவிர அனைத்து தன்னம்பிக்கை பெண்களும் பிடித்த ஆளுமைகள்.

பிடித்த பெண்கள் 

அம்மா, அக்கா, தம்பி மனைவி… வீட்டுக்கு வெளியே கிரண் மசூம்தார்- தொழில் அதிபராக. ஜெயலலிதா, இந்திரா அவர்களின் தன்னம்பிக்கைகாக. மதர் தெரசா சேவைக்காக.

நகைச்சுவை… வாழ்க்கையில்! 

ஒன்றா, இரண்டா… எத்தனையோ காமெடிகள். காமெடி திருவிழாவே நடக்கும் நம்மைச் சுற்றி
ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்
கற்றது கொஞ்சம்… எழுத்து, தமிழ், மன உறுதி. பெற்றது அன்பு, நட்புகள், இது போன்ற வாய்ப்புகள். இழப்பதற்கு எதுவும் இல்லை.

அழகென்பது 

தன்னம்பிக்கை.

வீடு

வீட்டை அலங்கரிக்க மிக ஆசை. பையன் கொஞ்சம் சுட்டி என்பதால் அவன் பொம்மைகளைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. சுவரில் இத்தனை நாள் அவன் கிறுக்கல்களே ஓவியம். ஒரு பூவைக் கூட ஓர் இடத்தில் வைத்தால் வீட்டை அழகாக்கும் சூத்திரம் மிகப் பிடிக்கும்.

வாழ்க்கை 

நதி போல அணைத்து, கழுவி, வீழ்ந்து, எழுந்து, வேகம் கொண்டு, சுழித்து, பயன் பெற்று, பயன் அளித்து… ஓடிக்கொண்டே கலக்க வேண்டும். ரசனை நொடிகள்… அழகு நிமிடங்கள்… வாழ்தல் மிக இனிது.

மறுசுழற்சி

அதைவிட மினிமலிசம் நல்லது. தேவை இல்லாமல் சேர்ப்பது லக்கேஜ் சுமக்கும் அபாயம்.

எழுத்தும் வாசிப்பும்

அனைத்து எழுத்துகளும்… வடை சுற்றின பேப்பரைக்கூட விடுவதில்லை.

புகைப்படக்கலை

ஒரு கணத்தை ஓராயிரம் விழிகளுக்கு படைப்பது அத்தனை எளிதல்ல அந்தக் கணம். அதை மனதில் பிடிப்பதா, கேமராவில் பிடிப்பதா என்ற சண்டையில் கேமரா தோற்க நேரும். மனமும் கேமராவும் ஒன்று சேரும் கணத்தில் காட்சி கவிதையாகிறது.

kirthika 2

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16
Image courtesy:

http://upload.wikimedia.org/wikipedia/commons

 

 

சேவைக்குக் கிடைத்த விருது!

Anbu 1
உலக மகளிர் தினத்தை ஒட்டி, மத்திய அரசு ஆண்டு தோறும் ஆறு தேசிய விருதுகளை பெண்களுக்கு வழங்கி வருகிறது. ’ஸ்ரீ சக்தி புரஸ்கார்’ எனப்படும் இந்த விருது பெண்களின் முயற்சி மற்றும் சிறந்த பங்களிப்புக்காக வழங்கப்படுவது. இந்த ஆண்டு பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மேலும் எட்டு விருதுகளை பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது அரசு. அந்த விருதின் பெயர் ‘நாரி சக்தி புரஸ்கார் விருது.’ இந்த விருது பெற்ற மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்… கௌசல்யா, சாய்லட்சுமி பலிஜப்பள்ளி, நந்திதா கிருஷ்ணா! மூவரையும் மனமாரப் பாராட்டுவோம்! எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆற்றிய சேவைக்காக கௌசல்யாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர் குறித்த கட்டுரை, ‘குங்குமம் டாக்டர்’ டிசம்பர் 1-15, 2015 இதழில் வெளியானது. உங்கள் பார்வைக்காக அந்தக் கட்டுரை இங்கே…
தேவை கொஞ்சம் அன்பு!
‘ஹெ ச்.ஐ.வி. பாதித்த மனிதர்கள் அபாயகரமானவர்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் கைகளைக் குலுக்கலாம்… ஓர் அன்பான அணைப்பைத் தரலாம். அது அவர்களுக்கு எந்த அளவுக்கு அவசியம் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்’. –  இளவரசி டயானாவே இப்படிச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தாலும், இந்த உண்மைக்குக் காது கொடுப்பவர்கள் நம்மில் வெகு குறைவு. எய்ட்ஸ் நோயாளிகளும் ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளானவர்களும் சமூகத்தில் மற்றவர்களால் புறக்கணிக்கப்படுபவர்களாகத்தான் இன்றைய தேதி வரை இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கௌசல்யா.
ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுகிற கௌசல்யா தொடங்கிய அமைப்புதான் ‘பாசிட்டிவ் வுமென் நெட்வொர்க்’. ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் ஹெச்.ஐ.வி. தன்னை பாதித்த வலி மிகுந்த கதையை மெல்லிய குரலில் விவரிக்கிறார் கௌசல்யா…
‘‘பிளஸ் டூ முடிச்சிட்டு வீட்ல இருந்தேன். சொந்த கிராமம் நாமக்கல் போடிநாயக்கன்பட்டி… வளர்ந்ததெல்லாம் நாமக்கல். அம்மா 2 வயசுலயே இறந்துட்டாங்க. அப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகிட்டார். அதனால பாட்டி வீட்டுல வளர்ந்தேன். ஒரு அக்கா, அண்ணன்… அக்காவுக்கு கல்யாணம் ஆகி, ஒரு பையன். அக்கா இப்போ உயிரோட இல்லை. நீரிழிவுப் பிரச்னை இருந்துச்சு. அது தீவிரமாகி ஹார்ட் ப்ராப்ளம் வந்து, பிரெயின்ல கட்டி வந்து இறந்துட்டாங்க…’’ – சற்று நேர அமைதிக்குப் பின் தொடர்கிறார்…

‘‘பிளஸ் டூ முடிச்சிட்டு வீட்ல இருந்தப்பவே எனக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. கணவருக்கு தொட்டிரெட்டிபட்டின்னு ஒரு கிராமம். லாரி ஓட்டுவார். விவசாயத்துல ஒத்தாசையா இருப்பார். அவருக்கு ஏற்கனவே ஹெச்.ஐ.வி. இருந்திருக்கு. அது அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கும் தெரியும். மறைச்சு கல்யாணம் பண்ணிட்டாங்க. 1995 மார்ச்ல எனக்கு கல்யாணம்… அப்புறம் அவர் மூலம் எனக்கும் ஹெச்.ஐ.வி. பாதிச்சுச்சு. ஏதோ ஒரு காரணத்துக்காக டெஸ்ட் பண்ணினப்பதான் அது தெரிஞ்சுது.
கல்யாணத்துக்கு 10 நாளுக்கு முன்னாடி என் கணவரை ஒரு டாக்டர் டெஸ்ட் பண்ணியிருக்கார்… ஹெச்.ஐ.வி. இருக்கறது தெரிஞ்சிருக்கு. அந்த டாக்டர்தான் என் கணவருக்கு ஹெச்.ஐ.வி. இருக்கறதை ஒரு மீட்டிங்ல என்கிட்ட சொன்னார். ‘இப்படி ஒரு கொடுமையான உண்மையை மறைச்சு கல்யாணம் பண்ணிட்டாங்களே’ங்கிற ஆதங்கத்துல, நான் அந்த வீட்டை விட்டு வெளியேறிட்டேன். அதுக்கப்புறம் கணவர் வீட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லாம போயிடுச்சு.
கல்யாணம் முடிஞ்சு, சரியா ஏழாவது மாசம் என் கணவர் தற்கொலை செஞ்சுகிட்டார். அந்தத் தகவலைக் கூட என் மாமனார் வீட்ல இருந்து யாரும் சொல்லலை. ‘விஷம் குடிச்சி செத்துப் போயிட்டாரு’ன்னு யாரோ மூணாவது மனுஷர் சொல்லித்தான் நான் தெரிஞ்சுகிட்டேன். என் கணவர் ஹெச்.ஐ.வி.க்கான மருந்தை முறையா எடுத்துக்கலை. யாரோ ஒரு போலி மருத்துவர்கிட்ட மருந்து வாங்கி சாப்பிட்டிருக்கார். அதுக்கு ஒவ்வொரு முறையும் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்னு பணம் வேற குடுத்திருக்கார். வீட்ல குடுத்த பிரஷர் தாங்காமதான் தற்கொலை வரை போயிருக்கார். கணவரோட மரணத்துல சந்தேகம் இருக்குன்னு நான் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் குடுத்தேன். ஆனா, அந்த கேஸை என் மாமனார் வீட்ல ஒண்ணும் இல்லாம ஆக்கிட்டாங்க.
இடையில என் மாமனார் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போனார். அந்தக் குடும்பத்துக்கு முறையான வாரிசு நான்தான்கிற சர்டிஃபிகேட், அவரோட டெத் சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கினேன். ஆனா, ஒண்ணும் நடக்கலை. என் மாமனார் உயில் எழுதி வச்சிட்டுப் போயிருக்கறதா சொன்னாங்க. எனக்கு அந்தச் சொத்து பெருசில்லை. அதை வச்சு ஹெச்.ஐ.வி. பாதிப்படைஞ்ச பெண்களுக்கு ஏதாவது உபயோகமா செய்யணும்னு நினைச்சேன்.
கேஸ் நடத்தறது சாதாரண விஷயமில்லை… வக்கீல் மூலமா நோட்டீஸ் அனுப்பணும்… வழக்கு நடத்தணும்… தீர்ப்பு வர வருஷக் கணக்கா ஆகும். அப்படியே நடத்தினாலும், நான் இறந்து போனதுக்கு அப்புறம் கூட நீதி கிடைக்குமான்னு தெரியலை. என்னை மாதிரி எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பொண்ணு ஒண்ணு இதே மாதிரி வழக்குப் போட்டுச்சு. அந்தப் பொண்ணுக்கு தீர்ப்பும் சாதகமாத்தான் வந்தது. ஆனா, யார் அந்தப் பொண்ணுக்கான உரிமைகளையும் சொத்தையும் புகுந்த வீட்ல போய் மீட்கறது? தீர்ப்பு வர்றதுக்கு அஞ்சாறு வருஷங்களுக்கு முன்னாலயே, அந்தப் பொண்ணு இறந்துட்டா…
ஹெச்.ஐ.வி. பாதிப்போட ஒரு பெண் வாழ்க்கையை எதிர்கொள்றது பெரிய சவால். இந்த மாதிரி பெண்களுக்காகத்தான், நான், வரலட்சுமி, ஹேமா, ஜோன்ஸுனு நாலு பேரும் சேர்ந்து ‘பாசிட்டிவ் வுமென் நெட்வொர்க்’  ஆரம்பிச்சோம்.
ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க… ஆதரவற்ற தனிமை… பிறக்கிற குழந்தை ஹெச்.ஐ.வி. பாசிட்டிவா பிறந்தாலும் நெகட்டிவா பிறந்தாலும் பிரச்னை! பெண் குழந்தைன்னா கண்டுக்க மாட்டாங்க… ஆண் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இல்லைன்னா தூக்கிட்டுப் போயிடுவாங்க. இந்த மாதிரி பாதிப்புக்கு ஆளான பெண்கள் அனாதை இல்லங்கள்லயோ, ஏதாவது ஆசிரமத்துலயோதான் இருந்தாகணும். வாடகைக்கு வீடு கிடைக்காது. கெடைச்சாலும் அநியாய வாடகை. அரசாங்கம் விதவை பென்ஷன்னு ஆயிரம் ரூபாய் குடுக்குது… அதுவும் 38-40 வயசுக்கு இடைப்பட்ட பெண்களுக்குத்தான். ஹெச்.ஐ.வி.க்கு மருந்து எடுத்துக்கறாங்கன்னா அதுக்கு ஆயிரம் ரூபாய் குடுப்பாங்க. இதை வச்சுக்கிட்டு வாழ முடியுமா?
2002ல தமிழக அரசு ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யறதுக்காக ஒரு குழுவை அமைக்கணும்னு ஒரு ஆணை கொண்டு வந்தது. அது வெறும் எழுத்தளவுலதான் இருக்கு. இன்னும் செயல்படுத்தப்படலை. அந்த மாதிரி ஒரு குழு இருந்தா, ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களை சின்னச் சின்ன குழுக்களா இணைச்சு, தொழில் பயிற்சி கொடுக்க முடியும். அதன் மூலமா அவங்களோட வருமானத்தைப் பெருக்க முடியும். பேங்க்ல தொழில் தொடங்க கடன் வாங்கித் தர முடியும். அதுக்காகத்தான் நாங்க குரல் கொடுத்துகிட்டு இருக்கோம்.
சென்னைல ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண் ரேஷன் கார்டு வாங்கறதே கஷ்டம். மாவட்டங்கள்ல கொஞ்சம் சிரமப்பட்டாவது வாங்கிடலாம். ‘கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு? உனக்கு எதுக்கு பென்ஷன்’னு ஈசியா கேட்டுடுவாங்க. அந்த மாதிரி பாதிக்கப்படுற பெண்களுக்கெல்லாம் எங்க அமைப்பு மூலமா வழி காட்டுறோம். ஒரு பெண்ணுக்கு பிரசவம்னா யாராவது தன்னார்வலரை வச்சு உதவி செய்யறோம். பிரசவத்துக்கு அப்புறம் அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் மருந்து குடுக்கறது, சிகிச்சைக்கு உதவறதுன்னு எங்களால முடிஞ்ச உதவியைச் செய்யறோம். பிறந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இருந்தா அதை வளர்க்க, படிப்புக்கு உதவ, பண்டிகை நாட்கள்ல பரிசுப் பொருட்கள் வழங்க யாராவது எம்.எல்.ஏ., எம்.பி.க்களோட உதவியை பெற்று செஞ்சு குடுக்கறோம். தெரிந்த நிறுவனங்கள்ல ஏதாவது வேலை வாங்கிக் குடுக்கறோம்.
ஹெச்.ஐ.வி. பாதிப்போட வர்ற பெண்களுக்கு நாங்க முதல்ல கொடுக்கறது கவுன்சலிங். அவங்களுக்கு டி.பி. இருக்கான்னு பார்ப்போம். டி.பி. இருக்கறவங்கள்ல சில பேருக்கு மூளையிலயும் பாதிப்பு இருக்கும். சி.டி. ஸ்கேன் செஞ்சு பார்த்தாதான் அது தெரியும். அதுக்கு 2,500 ரூபாய் செலவாகும். அதை இலவசமா செய்யறதுக்கும் வழி இருக்கு. அதுக்கான டாக்டர்கிட்ட அவங்களை அனுப்பி வைப்போம்.
ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் இருக்கற ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்க விரும்புவாங்க. அப்படிப்பட்ட ஆணையும் பெண்ணையும் பத்தின முழுத் தகவல்களையும் சேகரிச்சு சரி பார்ப்போம். எப்போல்லாம் அவங்க மருத்துவ பரிசோதனைக்குப் போகணும்… வாழ்க்கையை எப்படி நடத்தணும்… ஒருத்தருக்கொருத்தர் எப்படி உதவியா இருக்கணும்னு கவுன்சலிங் கொடுப்போம்…’’
சாதாரணமாகச் சொன்னாலும் கௌசல்யா, அவரைப் போன்ற பெண்களுக்குச் செய்வது மகத்தான சேவை. இவருடைய ‘பாசிட்டிவ் வுமென் நெட்வொர்க்’ அமைப்பு 13 மாநிலங்களில், 83 மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கிறது. அவற்றில் இருக்கும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 30 ஆயிரம். இந்த அமைப்பை ஆரம்பித்தவர்களில் ஜோன்ஸ் இப்போது உயிரோடு இல்லை,  ஹேமா தன்னுடன் செயல்படுவதில்லை என்கிற வருத்தம் அவர் வார்த்தைகளில் தெரிகிறது.
கௌசல்யா கடைசியாக இப்படிக் கூறுகிறார்… ‘‘எந்த சுகாதாரத் திட்டமாக இருந்தாலும், அதில் முதலில்     ஒதுக்கப்படுபவர்கள் பெண்கள்தான். கடைசியாகத்தான் அவங்க மேல திட்டத்தின் பார்வை விழுது. சத்தீஸ்கர் கருத்தடை சிகிச்சை முகாம்ல 13 பெண்கள் இறந்து போனாங்களே… எப்படி? கருத்தடை ஆண்களுக்கு எளிதானது. பெண்களுக்கு கடினமானது. அந்த சிகிச்சையை ஆண்கள் செஞ்சுகிட்டிருந்தாங்கன்னா, இந்த மரணங்களைத் தவிர்த்திருக்கலாம். இல்லையா?’’
மேகலா
படம்: ஆர்.கோபால்

வாசிப்பே எழுத்தைக் கற்றுக் கொடுக்கும்!

nina 3சிறப்புப் பேட்டி – நினா மெக் கானிக்லே

ஓர் இலக்கிய நிகழ்வுக்காக சென்னை வந்திருந்தார் அமெரிக்க எழுத்தாளர் நினா மெக் கானிக்லே (Nina McConigley). இவரைப் பற்றிச் சொல்ல ஏராளமான செய்திகள்..! ‘கௌபாய்ஸ் அண்ட் ஈஸ்ட் இண்டியன்ஸ்’ என்கிற இவருடைய சிறுகதைத் தொகுப்பு 2014ம் ஆண்டுக்கான இரண்டு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஒன்று, ‘2014 பென் ஓப்பன் புக் அவார்ட்.’ இன்னொன்று, ‘ஹை ப்ளெயின்ஸ் புக் அவார்ட்.’ சிங்கப்பூரில் பிறந்தவர்… அமெரிக்காவின் வ்யோமிங்கில் (Wyoming) வளர்ந்தவர். ‘கல்ஃப் கோஸ்ட்’ என்கிற பத்திரிகையில் புனைவுகளுக்கான ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘ஓவன் விஸ்டர்டு கன்சிடர்டு’ என்கிற இவருடைய நாடகமும், ‘க்யூரேட்டிங் யுவர் லைஃப்’ என்கிற சிறுகதையும் அமெரிக்காவில் மிக அதிக கவனம் பெற்றவை. ‘நியூ யார்க் டைம்ஸ்’, ‘மெமரியஸ்’ உள்ளிட்ட பல பிரபல பத்திரிகைகளில் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன. பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கும் இவர் வ்யோமிங் பல்கலைக்கழகத்திலும், ‘வாரன் வில்சன் எம்.எஃப்.ஏ. ப்ரோக்ராம் ஃபார் ரைட்டர்ஸ்’ஸிலும் எழுதுவது தொடர்பான பயிற்சி அளிக்கும் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இனி நினாவுடனான பிரத்யேக பேட்டி…

* உங்களுடைய படைப்புகளில் (மற்றும் பேட்டிகளில்) எப்போதும் நீங்கள் வ்யோமிங்கில் இருப்பதையே விரும்புவதாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். கிராமப்புறத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் காதல்தான் வ்யோமிங்கை விரும்ப வைத்ததா? அல்லது தனிமையை விரும்புகிற, கூட்டத்திலிருந்து தள்ளி இருக்க பிரியப்படுகிற மனோபாவமா?

இரண்டாவது காரணம்தான் என்று நினைக்கிறேன். என்னை நான் எப்போதுமே தனிமையை விரும்புகிற துறவியாக நினைத்துக் கொண்டதில்லை… கூட்டத்திலிருந்து சற்றே விலகி இருக்க பிரியப்படுகிறவள். வ்யோமிங்குக்கு இடம் பெயர்ந்த போது நான் குழந்தை. அது மட்டும்தான் எனக்குத் தெரியும். இந்த மலைகளோடும் திறந்த வெளியோடும் எனக்கு ஆழ்ந்த உறவு இருப்பதாக நான் உணர்கிறேன். இந்த இயற்கைதான் என்னை வடிவமைத்தது. நகரங்களுக்குப் போவது பிடிக்கும்தான். ஆனாலும், அமைதியான பரந்த புல்வெளிப் பிரதேசத்துக்குத் திரும்புவதையே நான் எப்போதும் விரும்புகிறேன். இது, என் எழுத்துக்கு தூண்டுகோலாக இருக்கும் ஒரு நில இயலும் கூட. இங்கேதான் என்னால் நன்றாக எழுத முடிகிறது.

* முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக… மிகப் பெரிய அளவிலும் அடுத்தடுத்தும் நகரமயமாக்கல் உலகமெங்கும் அரங்கேறி வருவதை நாம் பார்க்கிறோம். இந்தியச் சூழலில், கிராமங்கள் வேகமாக மறைந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து பெரும்பாலான மக்கள் வேலை தேடி இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். விவசாயம் கணிசமாகக் குறைந்து வருகிறது. இதற்கு எந்தவிதமான தீர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இது தொடர்பாக நான் பேச முடியும் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே நான் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்தவளாகவே இருப்பதால், அமெரிக்காவிலுமே பல பண்ணைகளும் விளைநிலங்களும் பெரிய நிறுவனங்களால் வளைக்கப்படுவது எனக்குத் தெரியும். மேலும், இது பண்ணை உரிமையாளர்களின் வாழ்க்கையை மிகக் கடினமான காலமாக ஆக்கியிருக்கிறது. மக்கள் நகரங்களுக்கோ அல்லது எண்ணெய் நிறுவனங்களுக்கோ வேலைக்குப் போகிறார்கள். அந்த மக்களுக்கு நன்கு தெரிந்த அல்லது அவர்கள் விரும்புகிற வாழ்வாதாரம் அழிந்து வருவதாக நான் நினைப்பதால் இந்நிலையை நான் விரும்பவில்லை. ஆனால், இதை எப்படிச் சரி செய்ய முடியும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை நான் சிறு பண்ணைகளையும் விளைநிலங்களையும் மட்டும் நேசிப்பதால் தெரியவில்லையோ என்னவோ?

* இப்போது நடந்து கொண்டிருக்கும் ‘சார்லி ஹெப்டோ’வுக்கும் (தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ஃபிரெஞ்ச் பத்திரிகை) கருத்துச் சுதந்திரத்துக்குமான பிரச்னையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? படைப்பாளிகளை காயப்படுத்துவதும் கொல்வதும் மோசமானது. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தங்களுடைய கருத்துகள் மூலமாக இந்தப் படைப்பாளிகள் மற்றவர்கள் மீது சுமத்தும் வன்முறை? மற்றவர்கள் உண்மையென்று கருதுகிற விஷயத்தை, நம்பிக்கையை, விருப்பத்தை மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறையை புண்படுத்த இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்கே, எப்படி நாம் இந்தக் கோட்டை வரைந்தோம்?

யார் இந்தக் கோட்டை வரைந்தார்கள் என்பதோ அல்லது யார் இந்தக் கோடு இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள் என்பதோ எனக்கு நிச்சயமாகத் தெரியாது. நான் தத்துவமேதை வோல்டேர் (Voltaire) சொன்னதை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்… ‘‘நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், அதைச் சொல்வது உங்களுடைய உரிமை என்பதற்கு என் உயிருள்ளவரை பாதுகாப்பளிப்பேன்.’’ அப்படித்தான் நானும் உணர்கிறேன். ஒரு வாசகராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு கருத்தை வெளிப்படுத்துவது எழுத்தாளரின் உரிமை என்பதற்கு எப்போதும் மதிப்பளிக்கிறேன்.

nina 2

* ஆங்கிலத்தில் வெளியாகும் இந்திய எழுத்துகளை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட பிராந்திய மொழிப் படைப்புகள் உங்களுக்குப் படிக்கக் கிடைத்திருக்கிறதா? தமிழ் மொழியில் எழுதப்பட்ட படைப்புகளோடு உங்களுக்கு நெருக்கமுள்ளதா?

ஆங்கிலத்தில் எழுதும் பல இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவர்களின் எழுத்தை நான் நேசிக்கிறேன். வ்யோமிங் பல்கலைக்கழகத்தில் இந்திய இலக்கியத்தையும் கற்பித்து வருகிறேன். மேலும், மொழிபெயர்க்கப்பட்ட பல எழுத்தாளர்களின் படைப்புகளையும் கற்றுக் கொடுக்கிறேன். பிரச்னை என்னவென்றால், மொழிபெயர்க்கப்பட்ட இந்திய எழுத்தாளர்களின் பல புத்தகங்கள் அமெரிக்காவில் கிடைப்பது கடினமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களையும் தாண்டி, இந்தியப் படைப்புகளை படிக்க விரும்பும் ஒரு பெரிய வாசகர் வட்டம் இங்கே நிச்சயமாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால், அந்த நூல்களைப் பெற முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, நான் சென்னையில் இருக்கும் ‘தாரா புக்ஸ்’ஸில் ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறேன். அது பல தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. அதே போல, பல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. எனவே, தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சில புத்தகங்களை படித்திருக்கிறேன். இன்னும் படிக்க வேண்டியது நிறைய!

* ஓர் எழுத்தாளர் எழுதுவதோடு, அரசியல் ஆர்வம் உள்ளவராகவும் தன்னை பாதிக்கும் விஷயங்களை வெளியே பேசுபவராகவும் இருக்க வேண்டாமா? மற்றவர்களின் பிரச்னைகளை புறக்கணித்துவிட்டு, இனிமையான சிறிய கதைகளை எழுதுவதில் மட்டும் ஈடுபடுவது நியாயமானதுதானா?

ஒவ்வொரு எழுத்தாளரும் தாங்கள் எதை எழுத வேண்டும் என விரும்புகிறார்களோ அதை எழுத வேண்டும் என எண்ணுகிறேன். நீங்கள் குடும்பக் கதைகளை எழுத விரும்பினால், அதிலிருந்துதான் உங்கள் படைப்பு வரும் என்றால், அதை நீங்கள் எழுத வேண்டும். ஓர் அமைதியான கதைக்குள்ளும் அபாரமான சக்தி உள்ளது. தனிப்பட்ட முறையில் அதை நான் அறிவேன். அரசியல் மற்றும் கடினமான பிரச்னைகள் தொடர்பான படைப்புகளை எழுத நானும் ஆசைப்படுகிறேன். இனப் பிரச்னை மற்றும் தனித்துவமான படைப்பு இரண்டிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அவை என் படைப்புகளிலும் பிரதிபலிக்கின்றன. என் கலைதான் நான் செயல்படும் களம். நான் படைப்புலகில் முன் வரிசையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த எழுத்துக்கு ஒரு சக்தி உண்டு. உங்கள் வார்த்தைகளும் நீங்கள் சொல்லும் கதையும் ஓர் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், ஒரு படைப்பை இது போல அல்லாமல் வேறு மாதிரி வடிவமைக்க வேண்டும் என்று சொல்வது சரி என்று நான் நினைக்கவில்லை. மறுபடியும் சொல்கிறேன், ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஒரு வித்தியாசமான கதை இருக்கிறது.

* இன்றைய தினத்தில் எல்லாமே உலகமயமாகிக் கொண்டிருக்கின்றன… எழுத்தும் அதற்கு விதிவிலக்கல்ல. எழுத்தாளர்கள் உலக அளவில், பரந்துபட்ட வாசக கவனம் பெருவதற்காக உலகப் பொதுவான கருக்களை தங்கள் படைப்புகளில் கையாள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

என்னைப் பொறுத்த வரை, இது ஒவ்வொரு எழுத்தாளரையும் பொறுத்த தனிப்பட்ட விஷயம். உலக முழுமைக்கும் ஏற்ற பொதுவான குடும்பம், போர், காதல் பற்றிய கதைகள் ஆகியவை எங்கு வசிப்பவராக இருந்தாலும் நெகிழ வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தனிப்பட்ட முறையில், நான் எழுதும் போது, இரண்டு பேரை என் வாசகர்களாக நினைத்துக் கொள்கிறேன்… என் அம்மா, அப்பா. அவர்கள்தான் எனக்கு சிறந்த வாசகர்கள், பார்வையாளர்கள். ஒரு பெரிய வாசகர் வட்டம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, அவர்களை திருப்திப்படுத்துவதற்காக நான் எழுதினால் நான் முடங்கிப் போய்விடுவேன். என்னால் எழுத முடியாமல் போய்விடும்.

NM045C

* எழுத்தாளர்கள் மார்கெட்டிங் ஏஜென்டாகவும் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுடைய படைப்புகளை சுறுசுறுப்பாக ப்ரொமோட் செய்யும் பலரை பார்க்கவும் முடிகிறது. நூலாசிரியர் தன் படைப்புக்கு வெளியே இப்படி செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? புத்தகம் தொடர்பான மார்க்கெட்டிங்கை, மார்கெட்டிங் குழுவினரிடம் ஒப்படைத்துவிட்டு படைப்புகளைப் படைப்பதில் மட்டும் நாம் கவனம் செலுத்த முடியாதா?

ஆம். இன்றைய காலக் கட்டத்தில் புத்தகங்களை பிரசுரிப்பது என்பது கடினமாகத்தான் இருக்கிறது. பதிப்பகங்கள் வேறு நிறுவனங்களுடன் இணைக்கப்படுகின்றன அல்லது பெரிய நிறுவனங்களின் கீழ் செயல்பட ஆரம்பிக்கின்றன. அமெரிக்காவில், நன்கு அறிமுகமான எழுத்தாளராக இல்லாத பட்சத்தில், விளம்பரங்களுக்காகவும் புத்தகங்களை பெரிய அளவில் எடுத்து செல்வதற்காகவும் தனியாக, கணிசமாக பட்ஜெட் ஒதுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. என்னுடைய புத்தகத்துக்கு இணையதளங்களில் நிறைய விமர்சனங்களைப் பெற்றேன்… என் புத்தகத்தை ப்ரொமோட் செய்ய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினேன். புத்தகத்தை சந்தைப்படுத்த அவை முழுமையான அளவில் செயல்பட்டன, புத்தகம் குறித்து செய்தி பரப்பின. இந்த உலகில் ஒரு புத்தகத்தின் இருப்பை உணர்த்த இப்படி அழகான, எளிய வழிகளும் இருக்கின்றன. நூலாசிரியர்கள் எழுதுவதை மட்டும் செய்ய வேண்டும், அதை விளம்பரப்படுத்துபவர்களாக இருக்கக் கூடாது என்பதையே நான் விரும்புகிறேன். அது நடக்கும் என்றுதான் நினைக்கிறேன். என் புத்தகத்துக்காக பல வருடங்களுக்கு நான் எப்படி உழைத்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். என் புத்தகம் இந்த உலகத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே, எழுதுவதில் மிக அதிகமான நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், உண்மைநிலை வேறாக இருக்கிறதே!

* சமூக ஊடக வெளி ஒரு தீவிர அச்சுறுத்தலைக் காட்டுவதாகவோ, எழுத்தாளர்களுக்கு ஒரு சவாலாக இருப்பதாகவோ நீங்கள் நினைக்கிறீர்களா?

கணிசமாக நேரத்தை வீணடிப்பவை என்கிற அளவில் மட்டுமே அவை எனக்கு சவாலாக இருக்கின்றன. தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் போது, என் ஃபேஸ்புக் கணக்கை மூடிவிடுவேன். அதிகக் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதே நேரம், சமூக ஊடகங்கள் – குறிப்பாக ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் ஒரு புதிய சமூகத்தை உருவாக்கியிருக்கின்றன என்றும் நினைக்கிறேன். அற்புதமான எழுத்தாளர்களை, முக்கியமாக இந்தியாவில் இருக்கும் எழுத்தாளர்களை நான் ட்விட்டரில் சந்தித்திருக்கிறேன். நிஜ வாழ்வில் அவர்களுடைய பாதைகளை என்னால் கடந்திருக்கவே முடியாது. இது, தங்களுக்கான ஓர் இடம் இல்லையே என்று நினைக்கும் பெரும்பாலானோருக்கு ‘பண்டோராவின் மாயப் பெட்டி’யைப் (Pandora’s Box) போல திறக்கிறது என்றும் சொல்லலாம்.

* எழுதுவதை சொல்லிக் கொடுக்க முடியுமா? எழுதுவது தொடர்பான படிப்பு நீங்கள் எழுதுவதற்கு உதவியிருக்கிறதா?

பெரும்பாலான எழுத்துகள் உள்ளுணர்வு சார்ந்தவை. சிறந்த எழுத்தாளர்கள் நல்ல வாசகர்கள் என்று நான் எண்ணுகிறேன். எனவே, ஓர் எழுத்தாளருக்கு நான் எதையாவது கற்றுக் கொடுக்கிறேன் என்றால் அது படிக்கச் சொல்வதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவில் பல்கலைக்கழக அளவில் எப்படி எழுதுவது என்பதைத்தான் நான் சொல்லிக் கொடுக்கிறேன்… பாத்திரப் படைப்பு, எந்தப் பார்வையில் சொல்லப்பட வேண்டும் போன்ற படைப்பின் வடிவம் சார்ந்த சில அம்சங்களை சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா! கூடவே, எழுத்து தொடர்பான பயிற்சிப் பட்டறையை நடத்தினால் கருத்துகளையும் விமர்சனங்களையும் பெறலாம். என்னுடைய எழுத்துப் பயிற்சி திட்டம் எனக்கு கொடுத்தது உண்மையிலேயே முக்கியமானது… பல எழுத்தாளர்கள் அடங்கிய ஒரு சமூகம். சிலர் வார்த்தைகளே மிக முக்கியமானவை என்று நினைக்கிறார்கள். ஆனால், திரும்பவும் சொல்கிறேன்… எழுத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நிறைய வாசியுங்கள்.

* தென்னிந்தியாவுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு என்ன… முக்கியமாக சென்னையுடன்?

என் அம்மா சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். அவர் புரசைவாக்கத்துக்கு அருகே வாழ்ந்தவர். டவுட்டன் கோரியிலும், ராணி மேரி கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் படித்தவர். வ்யோமிங்கில் வளர்ந்த போதெல்லாம் நான் சென்னையைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் நெருக்கமான, நன்கு அறிந்த இடமாக அதை உணர்ந்திருக்கிறேன். பின்னாளில், நான் இங்கே வந்த போது, நான் கேள்விப்பட்டதைப் போலவே நிறைய இடங்கள் எனக்கு மிகவும் பழக்கப்பட்டவை போல இருந்தன. சில வருடங்களுக்கு முன் நான் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். பெசன்ட் நகரில் வாழ்ந்தேன். ‘தாரா புக்ஸ்’ஸில் பணியாற்றினேன்… இந்த நகரை நேசிக்க ஆரம்பித்தேன். என்னைப் பொறுத்தவரை சென்னை எனக்கு இரண்டாவது வீடு. இந்நகரத்தின் ஆன்மாவை விரும்புகிறேன். வ்யோமிங்கின் அமைதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆனால், சென்னையில் ஒவ்வொன்றும் கிளர்ச்சியடையச் செய்பவை… உயிர்ப்போடு இருப்பவை.

– பாலு சத்யா

NM055