கீர… கீர… கீரேய்!

ஹோம் கார்டன்!

“காய்கறிகள் வாங்கச் செல்லும் நம்மை முதலில் கவர்ந்து இழுப்பது பச்சைப்பசேல் கீரைகள்தான். கீரை வளர்ப்பது மிக எளிது. மிகக்குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்பனை செய்துவிடலாம். இதில் ஓர் அதிர்ச்சிச் செய்தியும் உண்டு. தமிழகத்தின் பல புறநகர் பகுதிகளில், கழிவுநீரில் சுகாதாரமே இல்லாமல் கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள். இதனால், நன்மை செய்ய வேண்டிய கீரையே பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற பாதகங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில், கீரைகளை நம் வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். தானியக்கீரை போன்றவற்றை பெரிய பைகள் அல்லது தொட்டிகளிலும், அரைக்கீரை போன்றவற்றை கீரை படுகைகளிலும், பாலக் கீரையை உயரமான பைகளிலும் வளர்க்கலாம். கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சிறிய பைகளில் வளர்க்கலாம். கீரை விதைகளை நர்சரியில் வாங்கி விதைக்கலாம். அதிகபட்சம் 15 தினங்களில் கூட அறுவடை செய்யும் கீரை வகைகள் உள்ளன’’ என்று ஆர்வமூட்டுகிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட்.

vincent

உயிர்ச் சத்தான வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், இவை தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கின்றன. அதனால் கீரை ‘பாதுகாக்கும் உணவு’ (Protective Food) என்றழைக்கப்படுகிறது.

தானியக்கீரை

இது மிக வேகமாக வளரக்கூடிய தானிய வகையைச் சார்ந்தது. இலைகள் கறியாகவும், விதைகள் தானியமாகவும் நேரடியாகப் பயன்படும். தனியாக பயிர் செய்தால் 4.5 டன்/ஹெக்டர் அளவுக்கு கீரை மகசூலும், 12 டன்/ஹெக்டர் அளவுக்கு தானிய மகசூலும் பெறலாம். ஆன்டீஸ் மலைத் தொடரில் வாழ்ந்த பண்டைய மக்கள் இதனை ‘புனித தானியம்’ எனவும், வட இந்திய மக்கள் ‘ராம்தானா’ அல்லது ‘கடவுளின் தானியம்’ என்றும் அழைக்கின்றனர். வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரும். விதைப்பு, அறுவடை மற்றும் உர நிர்வாகம் கிட்டத்தட்ட சோளத்துடன் ஒத்துள்ளது. 2 அடி முதல் 8 அடி உயரம் வரை வளரக்கூடிய இக்கீரை, மிகக்குறுகிய வளர்ச்சி பருவம் (80 நாட்கள்) கொண்டது.

dhaniya keerai

  • ஊட்டச்சத்து நிறைந்த இத்தானியக்கீரை ரொட்டி, பிஸ்கெட், ஐஸ்க்ரீம், பேக்கரி தயாரிப்புகளில் பயன்படுகிறது. வட இந்தியாவில் தானியக் கீரையிலிருந்து செய்யப்பட்ட ‘லட்டு’ மிகப்பிரபலம்.
  • 63% கார்போஹைட்ரேட் மற்றும் 6-17.6% புரோட்டீன் நிறைந்த தானியக்கீரை வேறு பல தானியங்களையும் விட சிறந்தது.
  • நார்ச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதால் மற்ற கீரைகளை விடவும் சிறப்பானது.
  • குறைந்து வரும் மழையளவு, வெப்பத்தைத் தாங்கி வளரும் திறன், எல்லா மண் வகைகளிலும் வளரும் திறன் என பயிர் செய்வதற்கு ஏற்ற சூழலை தருவதோடு சத்துமிக்க கீரை / தானியமாகவும் உள்ளது. சந்தை வாய்ப்பும் அதிகம் இருப்பதால் தமிழகத்தில் இதனை பயிர் செய்ய முயற்சி மேற்கொள்ளலாம்.
  • பெரிய வகை கீரைகளை பெரிய பைகளிலும் சிறிய கீரைகளை சிறிய தொட்டி அல்லது கீரைப்படுகையிலும் வளர்க்கலாம்.

முருங்கைக்கீரை

நமது நாட்டின் தாவரச் செல்வங்களை நாம் சிறப்பாகக் கருதாவிட்டாலும், மற்ற நாடுகள் அதன் மகத்துவம் அறிந்து பயன்படுத்துகின்றனர். முருங்கையின் தாயகம் இந்தியாதான் என்றாலும், இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு அதிகம். அங்கு முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகவே கொண்டுள்ளனர். குறிப்பாக தாய்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான சத்துகளை குறைந்த செலவில் எளிதாக அளிக்க முருங்கைக்கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். இக்கீரை 300 வித நோய்களை குணப்படுத்துவதாகவும், நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்துவதாகவும் கண்டறிந்துள்ளனர். உடலை உறுதி செய்வதில் முருங்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

drumstick leaves banner

100 கிராம் முருங்கை இலையில்…

  • ஆரஞ்சில் இருப்பதைவிட 7 மடங்கு வைட்டமின் சி உள்ளது.
  • கேரட்டில் இருப்பதைவிட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது.
  • பாலில் இருப்பதைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது.
  • பாலில் இருப்பதைவிட 2 மடங்கு புரோட்டீன் உள்ளது.
  • வாழைப்பழத்தில் இருப்பதைவிட 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது.
  • பசலைக்கீரையில் இருப்பதைவிட 2 மடங்கு இரும்புச்சத்து உள்ளது.

இவ்வளவு பயனுள்ள முருங்கையை கீரைக்காகவே மாடியில் வளர்க்கலாம். வறட்சியையும் தாங்கி வளரும். செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வேர்ப் பகுதியில் நீர் செல்லுமாறு சிறுகுழாய் அமைத்தால் நீரின் தேவையை வெகுவாகக் குறைக்கலாம். கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும், அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சி தாக்குதலில் காப்பது சற்று கடினம்… காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும். 15 அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை கீரை எடுக்கலாம். சில மண்புழுக்களையும் ‘இலைமக்’கும் உபயோகித்தால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.

கீரை மகத்துவம்

அரைக்கீரை: தாது விருத்தி செய்யும். ரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத நோய் தணிக்கும்.

அகத்திக்கீரை: பித்தம் குணமாகும். ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். மலத்தை இளக்கி வெளியேற்றும். வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண் பார்வை தெளிவையும், எலும்பு பலமும் கொடுக்கும்.

தவசு முருங்கை: மூக்கு நீர்பாய்தல், இரைப்பு, இருமல் நீங்கும். கோழை அகற்றும் குணமுடையது.

லஜ்ஜை கெட்ட கீரை: சித்தர்கள் இக்கீரையை ‘வாத மடக்கி‘ என்று கூறுகிறார்கள். மூட்டுவலியும் மூட்டுவீக்கமும் நீங்கும். வாயுத் தொந்தரவுகள் குறையும்.

ஆரைக்கீரை: அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும். பித்தக் கோளாறுகளையும் போக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை (பச்சை): மேனி பிரகாசிக்கும். தினசரி இக்கீரையை சூப் வைத்து அருந்தினால் உடல் வலு பெறும்.

மணத்தக்காளி கீரை: குடல்புண், வாய்ப்புண் ஆற்றும் சக்தி உள்ளது. சிறிய வெங்காயத்துடன் சமைத்து சாப்பிட்டால் புண்கள் விரைவில் ஆறும்.

முளைக்கீரை: அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுடி நரைக்காமல் இருக்கும்.

கறிவேப்பிலை: நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் இளமைத்தோற்றம் நிலைத்து நிற்கும்.

பொன்னாங்கண்ணி கீரை(சிவப்பு): பூண்டு சேர்த்து வதக்கி உணவுடன் உண்டால் மூலநோய், வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

புதினா: இரும்புச்சத்து இருப்பதால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, புதிய ரத்தத்தையும் உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும். எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கிப் போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். 1/2 சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.

Image courtesy:

http://www.astroulagam.co

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s