கடல் சேரா நதிகள்!

“எப்படி இருக்கீங்க?” பொதுவாக யாரைப் பார்த்தாலும் அல்லது போனில் பேசினாலும் நாம் முதலில் கேட்கும் கேள்வி இதுதான். அந்த கேள்விக்குப் பதில் வருகிறதா என்று கூட நாம் பார்க்க மாட்டோம். அடுத்த வாக்கியத்துக்கு தாவி இருப்போம். அதே போல நம்மை நோக்கி கேட்கப்படும் அதே கேள்விக்குப் பதிலாக “நல்லா இருக்கேன்” என்று சொல்லிய பிறகு நம் வீட்டுக் குறைகளையும் நம் நோய்களையும் பட்டியலிடுவோம். மனசாட்சி தொட்டுச் சொல்லுங்கள், இந்த உரையாடல் எத்தனை சதவிகிதம் உண்மை அக்கறை கொண்டது? மிக நெருங்கிய மனிதர்களை தவிர பிறரிடத்தில் கேட்கப்படும் அந்த கேள்வியில் அவர்கள் நலனை தெரிந்து கொள்வதைவிட நம் கடமையை முடிக்கும் வெத்து சம்பிரதாயம்தான் நிரம்பி இருக்கிறது.

பொதுவாக நாம் பேசும் போது பார்த்தால், ‘ஒரு சம்பிராயத்துக்கு சொன்னேன்’, ‘ஒரு சம்பிராயதுக்குக் கூப்பிட்டேன்’ என்று சொல்லுமளவுக்கு சம்பிரதாயம் என்ற வார்த்தையே வெறும் மேல்பூச்சு என்பது போல் ஆகிவிட்டது.

முறைப்படி செய்யும் விஷயங்களைத்தான் சடங்கு, சம்பிரதாயம் என்போம். ஆனால், தற்போது பல சம்பிரதாயங்கள் வெறும் பேச்சுக்குத்தான்.

என் உறவுக்காரப் பெண் ஒருவர், தண்ணீர், எச்சில் கூட விழுங்காமல் இரண்டு வேளை விரதமிருந்து தீபாவளி நோன்பெடுப்பார். அந்த நோன்பை அவ்வளவு கச்சிதமாக எந்த்த் தவறும் நேராமல் செய்வார். ஓர் ஆண்டு கூட நோன்பு தவறிவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பார். அந்த நோன்பானது நீண்ட ஆயுளோடும் நல்ல உடல்நலத்தோடும் தன் கணவர் இருக்கவேண்டும் என்பதற்காக மனைவி எடுப்பது. இவ்வளவு கரிசனத்துடன் நோன்பிருக்கிறாரே… இந்த பெண்ணுக்கு அவ்வளவு அன்பா கணவர் மீது என்றுதானே கேட்க வருகிறீர்கள்? அதுதான் இல்லை.

deepavali nombu

வருடம் முழுவதும் அவர் தன் கணவரை கரித்துக்கொண்டே இருப்பார். வீட்டு வேலைகளை அழகாகப் பகிர்ந்து கொள்ளும் அந்த அன்பான மனிதரை நாள் முழுக்க ’இன்னும் இன்னும்… சம்பாதனை போதவில்லை’ என சபித்துக்கொண்டே இருப்பார். ஒருநாள், ஒரு பொழுது கூட சிரித்துப்பேசி பார்க்க முடியாது. இது என்ன மாதிரியான மனநிலை என்று புரியவில்லை. கணவரிடம் அன்பு செலுத்தாதவர் வருடத்தில் ஒருநாள் மட்டும் விழுந்து விழுந்து விரதமிருந்து அந்த நோன்பெடுப்பது எதற்கு? அது ஒரு வெத்து சம்பிரதாயமா?

நம் வீடுகளில் அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகளுக்கு தீபாவளி பலகாரம் கொடுப்பது, துணிமணி எடுத்துக் கொடுப்பது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. பொதுவாக அது ஓர் அன்பின் வெளிப்பாடுதான். அதன் அடிப்படை நம்மோடு பிறந்து, நம்மோடு விளையாடி வளர்ந்த ஒரு ஜீவன் எங்கோ தொலைவில் நம் எல்லாரையும் பிரிந்திருக்கிறாளே… அடிக்கடி அந்த சொந்தத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், ஒரு நல்ல நாளிலாவது பலகாரம, பண்டம் வாங்கிக்கொண்டு போய் பார்த்து, அன்பைப் பகிர்ந்து கொள்வது நம் சகோதரிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆயிற்றே… நாம் நம் சகோதரியை மதித்தால் நம் மாப்பிள்ளையும் அவளுக்கான மரியாதையைக் கொடுப்பார் என்பதுதான் அதன் தாத்பரியம். ஆனால், இதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டவர்கள் ஒரு சிலரே. ஏதோ கடனே என்று துணிமணி எடுத்துக் கொடுக்கும் சகோதரர்களும், அதில் ஆயிரம் குற்றம் கண்டுபிடிக்கும் சகோதரிகளும்தான் பெருகிக் கிடக்கிறார்கள் இங்கே.

‘அழகி’ படத்தில் வருவது போல சிறு வயதில் நிலக்கடலையை காதில் மாட்டி திரிவோம் ஞாபகமிருக்கிறதா? அந்த நிலக்கடலை உரிக்கும் போது, உரித்த தோலை உரிக்காததுடன் கலந்து விட்டால் மறுபடி மறுபடி அந்த உரித்த தோலை கையிலெடுப்போம். ஏனென்றால் இரண்டுமே ஒன்று போலத்தான் இருக்கும். அது போல உள்ளே இருக்கும் கடலையைத் தொலைத்து, வெறும் கூடுகளாக மாறிப் போய்விட்ட சம்பிரதாயங்களே இங்கு அதிகம்.

அதில் ஒன்று இந்த நவராத்திரி தாம்பூலம். நவராத்திரி சமயத்தில் வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் பிட் போன்றவற்றை வைத்துக் கொடுப்பார்கள். வருபவர்கள் வாழ்த்திச் சென்றால் தன் தாலி பாக்கியம் நிலைக்கும், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆனால், அந்த ஜாக்கெட்டுகள் ராக்கெட்டை விட வேகமாகப் பல கை மாறும் விஷயத்தை என்னவென்று சொல்வது? தனக்கு ஒருவர் கொடுத்ததையே மற்றவர்களுக்கு வைத்துக் கொடுக்கும் அளவுக்குப் பஞ்சம் என்றால் எதற்கு அந்த கொலுவை வைக்க வேண்டும்? தாம்பூலம் தர வேண்டும், தனக்கு மேட்சிங் இல்லை என்று அடுத்தவரிடம் தள்ளிவிடுவதில் எங்கிருந்து புண்ணியம் சேரும் உங்களுக்கு?

navarathri-thambulam

அதே போல், வீட்டுக்கு வந்த அடியாருக்கு பிள்ளைக்கறி சமைத்துப் போட்ட அடியவர்கள் வாழ்ந்த பூமியில்தான் இன்று, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை சீரியல் பார்த்துக் கொண்டே வாங்க என்று வெறும் சம்பிரதாயமாக வரவேற்கிறோம். அங்கு அன்பும் இல்லை, சம்பிரதாயமும் இல்லை. ‘பூஜை வேளையில் கரடி போல சீரியல் நேரத்தில் வந்து இருக்காங்களே… சமைக்கவேண்டி வந்துவிடுமோ’ என்ற உள் பதற்றத்தோடு கேட்கப்படும் ‘சாப்பிட்டீங்களா?’ என்ற கேள்வி வெறும் வார்த்தை ஜாலம் மட்டும்தான்.

இன்றைய காலகட்டத்தில் திருமணங்களிலும் உயிரற்ற சம்பிரதாயங்களும் போலி ஆர்பாட்டங்களுமே நிறைத்திருக்கின்றன. ‘இன்னார், இன்னாரை திருமணம் செய்து கொள்கிறார்கள்… இந்த சந்தோஷமான விஷயத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறோம். இந்த சந்தோஷத்தை நீங்களும் வந்திருந்து எங்களோடு தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்…’ என்பதுதான் கல்யாண வீட்டார் அழைப்பு. வந்தவர்களை வெறும் வயிற்றோடு அனுப்பக்கூடாது என்று வந்தவர்களுக்கு நல்ல விருந்து ஏற்பாடு செய்வது கல்யாண வீட்டார் பொறுப்பு. ‘எங்களை அழைத்தமைக்கு நன்றி. உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்கட்டும்’ என ஆசிர்வதித்து திருமண ஜோடிகளை சந்தோஷப்படுத்த அன்பளிப்பு கொடுப்பது, விருந்தினர் பெருந்தன்மை.

marriage invitation cards models

எத்தனை வீடுகளில் இன்று திருமணங்கள் சந்தோஷத்தை அள்ளி வருகின்றன? கல்யாண முடியும் வரை பெண் வீடோ, ஆண் வீடோ… கலவரமும் குழப்பங்களும்தான் மிச்சம் கல்யாண வீட்டாருக்கு.

‘இந்தப் புடவை நல்லால்லை’, ‘சாப்பாடு சரியில்லை’, ‘என்னை சரியா வரவேற்கவே இல்லை’, ‘அவங்களுக்கு மட்டும் ஸ்வீட் வெச்சாங்க’, ‘என்ன மொய் எழுதி இருக்காங்க உன் சொந்தக்காரங்க!’ இப்படி எத்தனை எத்தனை மன உளைச்சல்கள்!

கல்யாண ஜோடியை ஆசிர்வதிக்க வந்திருக்கிறோம் என்பதை மறந்து வந்து சாப்பிட்டு விட்டு, மொய் கணக்கு எழுதுகிறவர்களிடம் போய் மொய் எழுதிவிட்டு கல்யாண ஜோடியைக் கூடப் பார்க்காமல் கூட செல்கிறவர்கள் அதிகம். சாப்பாடு என்ற பெயரில் ஒரு சாண் வயித்துக்கு 999 அயிட்டங்களை அடுக்குவது வீண் சம்பிரதாயம்.

ஒரு விஷயத்தை எதற்காகச் செய்கிறோம் என்பதை மறந்து ஓடிக்கொண்டு இருக்கிறது இந்த சமூகம். இலக்குத் தெரியாமல் ஓடுவதில் என்ன பயன் இருக்கிறது?

மனிதர்களை நேசிப்பதற்காகத்தான் இந்த சம்பிரதாயங்கள். மனிதர்களோடு நல்லுறவைப் பேணத்தான் இந்த சம்பிரதாயங்கள். மனிதத்தை மறந்து ஓடும் இந்த இயந்திரமான வாழ்க்கையில் என்னதான் மிஞ்சுமோ… அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

-ஸ்ரீதேவி மோகன்

Image courtesy:

http://sharbalaji.blogspot.in

http://www.myscrawls.com/

http://www.oxstyle.com