‘சினிமாவில் பெண்களால் சாதிக்க முடியும்’ என்று சொன்னால் இன்றைக்கும் ஏளனமாகப் பார்க்கிறவர்கள் அனேகம் பேர். பெண்களுக்கான தொழில் இதுதான் என்று நடிப்பு, பாடல், நடனம் உள்ளிட்ட சில துறைகளை முத்திரை குத்தி வைத்திருக்கிறது திரைத்துறை. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மேலே மேலே எட்டு வைத்து ஏறி, சிகரம் தொட்ட பெண்கள் உலகில் அனேகம் பேர். உலக அளவில், திரைப்படத்துறையில் எத்தனையோ எதிர்ப்புகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டு, அழுத்தமாகக் காலூன்றி கோடிக்கணக்கானவர்களை பிரமிக்க வைத்த பெண் நட்சத்திரங்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய அரிய தகவல்கள் இந்தப் பகுதியில்…
அப்பா வயதானவர். முக்கியமாக வேலையில்லாதவர். அம்மாவுக்கு பார்வையில்லை. வெளியே போனால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயத்தில் மகள்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வளர்க்கிறார் அப்பா. கிட்டத்தட்ட 12 வருடங்கள் வெளி உலகமே தெரியாமல் வளர்கிறார்கள் அந்தச் சிறுமிகள். இந்தக் கொடுமையை சகிக்க முடியாமல் அண்டை வீட்டில் இருப்பவர்கள் சமூக சேவகர்களுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். ஒரு சமூக சேவகி வந்து பார்க்கிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சிறுமிகளை விடுவித்து, தெருவில் சுதந்திரமாக நடமாடவும், மற்ற சிறுவர்களுடன் விளையாடவும் சொல்கிறார். வீட்டுக்குள்ளேயே பூட்டி வளர்க்கப்பட்டதால் அந்தச் சிறுமிகளுக்கு மற்றவர்களுடன் பேசத் தெரியவில்லை. அறைக்குள் நடந்து பழகியவர்களால் தெருவில் சரியாக நடக்கக்கூட முடியவில்லை…
மனதை கனக்கச் செய்யும் இந்த நிகழ்வு ஓர் உண்மைச் சம்பவம். இதை அடிப்படையாக வைத்து ‘தி ஆப்பிள்’ என்கிற படத்தை இயக்கியபோது சமீரா மேக்மல்பாஃபுக்கு 17 வயது. 1998ம் வருடம் கேன் திரைப்பட விழாவில் ‘தி ஆப்பிள்’ திரையிடப்பட்டது. உலகிலேயே கேன் திரைப்பட விழாவில் பங்கேற்ற இயக்குநர்களில் மிக இளம் வயது (18) இயக்குநர் என்கிற புகழ் சமீராவுக்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு 30 நாடுகளில் கிட்டத்தட்ட 100 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது அந்தப் படம்.
சமீராவின் தந்தை மோசென் மேக்மல்பாஃப் இயக்குநர், எழுத்தாளர். பிறகென்ன… மகளும் இயக்குநராவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். பெண்களுக்கான உரிமைகள் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட ஈரானில் அது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
‘‘காலம் காலமாக, ஒரு பெண்ணால் இயக்குநராக ஆகவே முடியாது என்கிற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாகப் பதிந்து போய்விட்டது. அதனால்தான் இந்தத் தொழில் பெண்களுக்கு மிகக் கடினமானதாக இருக்கிறது’’ என்று ஒரு பேட்டியில் மனம் வெதும்பிச் சொல்லியிருக்கிறார் சமீரா.அது மார்ச் மாதம், 27ம் தேதி, 2007ம் வருடம். நேரம் சரியாக 12:20. ஆப்கானிஸ்தானில் சர்போல் நகரத்தில் ‘டூ லெக்டு ஹார்ஸ்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் சமீரா. ‘‘சவுண்ட்… கேமரா… ஆக்ஷன்!’’ என்று சமீரா குரல் கொடுத்தபோது அந்த அசம்பாவிதம் நடந்தது. ஏற்கனவே துணை நடிகர்களின் கூட்டத்தோடு கூட்டமாக நுழைந்திருந்த ஒருவன், உயரமான கூரை மேலிருந்து ஒரு வெடிகுண்டை வீசினான். அதிர்ஷ்டவசமாக சமீராவும் உடனிருந்த தந்தையும் உயிர் தப்பினார்கள். ஆனால், படக்குழுவைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தார்கள், ஒரு குதிரை இறந்து போனது. இந்த அசம்பாவிதத்துக்கு தலிபான்களோ, அல்கொய்தாவோ பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், சமீரா குடும்பத்தினர் மீது நடந்த தாக்குதல் என்பது மட்டும் உறுதியானது. மோசென், ஈரானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அவருடைய ‘கந்தஹார்‘ பட ஷூட்டிங்கில் இருந்த போது இருமுறை கொலைத் தாக்குதலுக்கு ஆளாகி தப்பித்தார். சமீராவின் ‘அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்நூன்’ பட ஷூட்டிங்கின் போது அவருடைய தங்கை ஹானா மக்மல்பாஃபை இருமுறை கடத்துவதற்கான முயற்சியும் நடந்தது.
இந்தச் சூழலில்தான் சமூகம் சார்ந்த, யதார்த்தமான, இயல்பான நிகழ்வுகளை திரைப்படமாக இயக்கினார் சமீரா. ஆரம்பத்தில் சமீராவின் வெற்றிக்குப் பின்னால் இருந்து உதவியவர்கள் அவருடைய பெற்றோர். தந்தை மோசென் பல அற்புதமான படங்களை இயக்கியவர். அவருடைய ஐந்து படங்கள் ஈரானில் தடை செய்யப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபட்ட மோசென் அதை விட்டுவிட்டு வானொலியில் வேலை பார்க்கப் போனபோது பழக்கமானார் பாத்திமா மெஷ்கினி . மோசென் நிகழ்ச்சி அமைப்பாளர். பாத்திமா அறிவிப்பாளர். இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு முதல் குழந்தையாக 1980, பிப்ரவரி 15ல் பிறந்தார் சமீரா. அடுத்தது மெய்சாம் என்கிற ஆண் குழந்தை. அதற்கடுத்துப் பிறந்தது ஹானா.வானொலி நிலையத்துக்கு வேலைக்குச் செல்லும் போது சமீராவையும் கூடவே அழைத்துச் செல்வார்கள் பாத்திமாவும் மோசென்னும். ஊடக உலகம் மிகச் சிறு வயதிலேயே சமீராவுக்கு அறிமுகமானது இப்படித்தான். 1992ல் நடந்த ஒரு விபத்தில் பாத்திமா இறந்து போனார். மோசென், பாத்திமாவின் தங்கை மார்ஜியா மெஷ்கினியை மணந்து கொண்டார். மார்ஜியா பெண் உரிமைப் போராளி. அதற்காகவே தன் வாழ்நாளைக் கழித்தவர்.
டெஹ்ரானில் வளர்ந்த போது சிறு வயதிலேயே சமீராவுக்கு சினிமாவின் பல அரிய முகங்கள் அறிமுகமாயின. அப்பா மோசென் நண்பர்களோடு பல படங்களை அக்குவேறு ஆணிவேராக விவாதிப்பார். அப்பா லொகேஷன் பார்க்கப் போகும் போது கூடப் போவது, எடிட்டிங்கை பக்கத்தில் இருந்து கவனிப்பது, ஒரு படம் உருவாகும் வித்தையை, அதன் நுணுக்கங்களை அருகில் இருந்து பார்ப்பது என சமீராவுக்கு வாழ்க்கையோடு ஓர் அங்கமாகவே ஆகிப் போனது சினிமா. எட்டு வயதில் மோசென் இயக்கிய ‘தி சைக்கிளிஸ்ட்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. பள்ளிப் படிப்பை முடித்ததும் ‘Mohhmalbaf Film House’ என்கிற திரைப்படப் பள்ளியில் சேர்ந்தார். 5 வருடம் சினிமா கற்றார். இரண்டு வீடியோ படங்களை இயக்கிய பிறகு, ‘தி ஆப்பிள்’ படத்தை இயக்கினார்.
‘தி ஆப்பிள்’, ‘பிளாக்போர்ட்ஸ்’, ‘11 செப்டம்பர்’ (குறும்படம்), ‘அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்நூன்’, ‘டூ லெக்ட் ஹார்ஸ்’ என சமீரா இயக்கிய படங்கள் ஐந்தே ஐந்து. ஆனால், கேன் திரைப்பட விழாவில் ஜூரிகளின் சிறப்பு விருதை இருமுறை பெற்றவர், 22வது மாஸ்கோ திரைப்பட விழாவில் ஜூரிகளில் ஒருவராக இருந்தவர், வெனிஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். 2004ம் ஆண்டு இங்கிலாந்து பத்திரிகையான ‘தி கார்டியன்’ உலகின் 40 சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக சமீராவையும் சேர்த்திருந்தது.தன் படைப்புகளைப் போலவே அவருடைய பேச்சும் வெளிப்படையானது. பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘‘என் படங்களில் நான் உண்மையைத்தான் வெளிப்படுத்த விரும்புகிறேன். சில தொலைக்காட்சிகளில் புளித்துப் போன செய்திகளை சொல்வது போல, ‘அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு வந்தது. தலிபான்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றியது, அமெரிக்கா ராம்போ போல ஒரு ஹீரோ’ என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. தலிபான்கள் போய்விட்டாலும் அவர்கள் விதைத்துவிட்டுப் போன கருத்துகள் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை. மக்களின் பாரம்பரியத்தோடும் கலாசாரத்தோடும் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. அதனால்தான் இன்னும் இங்கே ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் மிகப் பெரிய வித்தியாசம் நிலவுகிறது’’ என்று சொல்லியிருக்கிறார் சமீரா.
2008க்குப் பிறகு சமீராவின் திரைப்படம் எதுவும் வெளி வரவில்லை. ஆனால், அவர் இயக்கிய ஐந்து படங்களை உலக ரசிகர்கள் இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
– பாலு சத்யா
Samira Makhmalbaf Born February 15, 1980 (age 33)
Tehran, IranOccupation Film Director, Producer, Screenwriter Years active 1998–present Parents Mohsen Makhmalbaf
Marzieh Meshkini