சமையல் கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி?

Image

சமையலறையில் இந்தியப் பெண்கள் வெகு அனாயசமாக வெடிகுண்டை கையாள்கிறார்கள்’. இப்படிக் குறிப்பிட்டிருந்தார் மூத்த சமூக சேவகி ஒருவர். அவர் குறிப்பிட்டது சமையல் எரிவாயு சிலிண்டரை! அதை யாராலும் மறுக்கவும் முடியாது. சமையலுக்குப் பயன்படும் அந்த எரிபொருள், சில நேரங்களில் பலரின் உயிரையும் பலி வாங்கிவிடுகிறது.   

சமீபத்தில் சென்னையில் நடந்தது அந்தச் சம்பவம். எரிவாயு சிலிண்டர் வெடித்த நிகழ்வில் தண்டையார்பேட்டையில் வசித்து வந்த கணவன், மனைவி இருவருமே இறந்து போனார்கள்.

இது நடந்து இரண்டே நாட்கள் கழித்து, ஆந்திராவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் அதே போன்ற விபத்து… எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரரும் அவர் மனைவியும் இறந்து போனார்கள். இப்படித் தொடர்கிற கேஸ் சிலிண்டர் விபத்துகள் நம்மைக் கலங்க வைக்கின்றன.

மையலுக்குப் பயன்படும் கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு என்ன காரணம், அதைத் தவிர்க்க முடியுமா, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? இவையெல்லாம் சமையலறையில் புழங்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். அவற்றைப் பற்றி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைப் பொதுமேலாளர் (எல்பிஜி) சந்திரனிடம் பேசினோம். பொறுமையாக, தெளிவாக நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார் சந்திரன்…

‘‘தமிழகம் முழுக்க இண்டேன் கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒருகோடியே 7 லட்சம்பேர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புதிதாக கனெக்‌ஷன் பெற்றிருக்கிறார்கள். சமீபத்தில் வடசென்னையில் நடந்த விபத்து மட்டுமல்ல… தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சிலிண்டர் விபத்துச் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்குக் காரணம் மக்களின் அலட்சியமே!பெரும்பாலானவர்கள் சிலிண்டர் கனெக்‌ஷனை பெறுவதற்காக காட்டும் ஆர்வத்தையோ, செய்யும் முயற்சிகளையோ அதைப் பராமரிப்பதில்காட்டுவதில்லை. கேஸ் சிலிண்டருக்கான புது கனெக்‌ஷனைப் பெறும்போதே அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், என்னென்ன பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றவேண்டும் போன்ற விஷயங்களைக் கற்றுத்தருவார்கள். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலே போதும்…எந்த பிரச்னையும் வராது’’ என்கிறார் சந்திரன்.

Image

சிலிண்டர் விபத்து நடப்பதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?

‘‘தினமும் தூங்கப் போவதற்கு முன்னால் ரெகுலரேட்டரை ஆஃப் செய்துவிட வேண்டும். நிறையபேர் அதைப் பின்பற்றுவதில்லை. ரெகுலேட்டரில் இருந்து கேஸ் கசிவதால்தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. கேஸ் சிலிண்டரின் உள்ளே இருக்கும் புரோப்பேன் (Propane), பூட்டேன்   (Butane) ஆகியவை திரவ வடிவில்தான் இருக்கும். அதுதான் அடுப்பு வழியாக நமக்கு வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகும்போது எளிதில் உணர்ந்து கொள்ள உதவியாக எத்தில் மெர்கேப்டன் (Ethyl Mercaptan) என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த கெமிக்கல்தான் கேஸ் லீக்காவதை முதலில் எச்சரிக்கை செய்யும். அந்த வாசனையை உணர்ந்ததும் உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும். இல்லையென்றால் சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம் தரையில் பரவிவிடும். சின்ன தீப்பொறி  ஏற்பட்டாலோ, எலெக்ட்ரிக்கல் ஸ்விட்சை ஆன் செய்தாலோ பெரிய விபத்து ஏற்பட்டுவிடும். இப்படித்தான் சிலிண்டர் விபத்து நடக்கிறது.

சிலர் அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். அந்த இடைவெளியில் பால் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். திரும்ப அடுக்களைக்குள் வருபவர்கள், அடுப்புதான் அணைந்துவிட்டதே என்று நினைப்பார்கள். அல்லது அடுப்பை தாங்கள் அணைக்கவில்லை என்பதை மறந்து போய்விடுவார்கள். ஆனால், சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறிக் கொண்டிருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி, வீடு முழுவதும் நிரம்பி விபத்துகளை உருவாக்கிவிடும். எனவே, அடுப்பில் எதையாவது வைத்திருந்தால் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சில வீடுகளில் கிச்சனோடு பூஜையறையும் சேர்ந்தே இருக்கும். விளக்கேற்றுவது அல்லது ஊதுவத்தி கொளுத்துவது போன்றவற்றை செய்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு வெளியே போய்விடுவார்கள். இந்த மாதிரியான நேரங்களில் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சிலர் கிச்சனிலேயே ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருப்பார்கள். சிலிண்டர் லீக்ஆகும் நேரத்தில் இவற்றுக்கு மின்சாரம் வரும் ஸ்விட்ச் போர்டில் இருந்து சின்ன ஸ்பார்க் வந்தாலும் எளிதில் தீ பற்றிக் கொள்ளும். எனவே, கிச்சனில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

மாடுலர்கிச்சன் என்ற பெயரில் சிலர் சிலிண்டரை மர கப்போர்டுகளால் பூட்டி வைத்துவிடுவார்கள். இதனால் கேஸ் லீக் ஆனால் கூட ஆரம்பத்திலேயே தெரியாமல் போய்விடும். எந்த மாடல் கிச்சனாக இருந்தாலும் சிலிண்டரை வெளியில், காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

சிலர் ஜன்னலுக்கு அருகில் கேஸ் அடுப்பை வைத்திருப்பார்கள். அதிகமான காற்று அடிக்கும் நேரங்களில் அடுப்பு அணைந்து போய்விடும். வேறு வேலைகளில் பிஸியாக இருந்தால், அது கவனத்துக்கு வராமலே போய்விடும். இப்படி லீக் ஆகும் கேஸ் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

முன்பெல்லாம் அடுப்பைப் பற்ற வைக்க தீக்குச்சிகளைப் பயன்படுத்தினோம். இப்போது லைட்டர் கருவி வந்து விட்டது. இது எளிதாக இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை.உண்மையை சொல்லப் போனால் லைட்டர்களாலும் விபத்துகள் நடக்கின்றன. கையில் வைத்து ‘டக்டக்’ என்று தட்டிக் கொண்டிருக்கும் போது கேஸ் லீக் ஆகி, கவனிக்காமல் விட்டுவிட்டால் குப்பென உடலிலேயே நெருப்பு பற்றிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் அலட்சியம் கூடாது. அடுப்பை ஆன் செய்த அடுத்த சில விநாடிகளுக்குள் நெருப்பை பற்ற வைப்பது ரொம்ப முக்கியம்’’.

கேஸ் லீக் ஆனால் செய்ய வேண்டியது என்ன?

‘‘உடனடியாக அடுப்பையும் ரெகுலேட்டரையும் ஆஃப் செய்துவிட்டு ஜன்னல்  மற்றும் கதவுகளை திறந்து வைக்கவேண்டும். இதனால் வீட்டின் உள்ளே பரவியிருக்கும் கேஸ் வெளியே போய்விடும். ரெகுலேட்டரை சிலிண்டரில் இருந்து டிஸ்கனெக்ட் செய்து (பிரித்து) விடவேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேஃப்டி கேப்பால் லாக் செய்து விடவேண்டும்.

லீக்கேஜ் ஆன உடனே சம்பந்தப்பட்ட ஏரியா சிலிண்டர் டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் தெரிவித்து விடுவது நல்லது. ஒவ்வொரு பத்தாயிரம் வாடிக்கையாளருக்கும் ஒருவர் என்ற கணக்கில் இண்டேன் கேஸ் நிறுவனத்தின் சார்பில் மெக்கானிக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து பிரச்னையை சரிசெய்து கொடுப்பார்கள். சிலிண்டரில் பிரச்னை என்றால் அதை மாற்றித் தந்துவிடுவார்கள். அதன்பிறகு பயன்படுத்தலாம். இந்த சேவை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே. இது தவிர மாலை 6 மணி முதல் காலை 9 மணி வரை உள்ள நேரங்களில் சிலிண்டர் லீக் ஆகிறது என்றால்1800425247247 என்ற டோல்ப்ரீஎண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சென்டரில் புகாரை பதிவு செய்த உடனே, அந்தத் தகவல் உங்கள் ஏரியாவில் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர் மெக்கானிக், சேல்ஸ் ஆபிஸர், ஏரியா மேனேஜர் ஆகியோருக்கு போய்ச் சேர்ந்து விடும். அவர்கள் உடனடியாக வந்து சரிசெய்து கொடுப்பார்கள்’’.

சிலிண்டர் விபத்தைத் தடுக்க எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்?

‘‘கேஸ் சிலிண்டருக்கான புது இணைப்பைப் பெறும் போது, உங்கள் பகுதி டிஸ்ட்ரிப்யூட்டருக்கான அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்கை வரவழைத்து அவர் மூலமாக சிலிண்டரை இணைப்பது முக்கியம். ஒருவேளை அவர்கள் செய்ய மறுத்தால் ‘டெமோ’ செய்து காட்டும்படி கேட்கவேண்டும். முறையாக எப்படி இணைப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும். சிலிண்டர் டெலிவரி ஆகும் போது, அதை அடுப்புடன் இணைத்து எரிய வைத்துப் பார்க்க வேண்டும். பிரச்னை ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சிலிண்டர் இணைப்புப் பெறும்போது, எரிவாயு நிறுவனத்தில் கொடுக்கும் ரெகுலேட்டர், டியூப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் பிரச்னை எதுவும் ஏற்பட்டால் ஏரியா டிஸ்ட்ரிப்யூட்டருக்கு தகவல் சொல்லி, புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும். இப்படி மாற்றிக்கொள்வதற்கு கட்டணம் ஏதுமில்லை. ஆனால், நீங்களாக சாதாரண கடைகளில் கிடைக்கும் தரமற்ற ரெகுலேட்டர், டியூப்களை வாங்கி எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம்.  இந்த தரமற்ற ரெகுலேட்டர், டியூப்களின் வழியாகத்தான் கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்துகள் அதிகம்நடக்கின்றன. 2 அடுக்கு வயர்களால் ஆன திக்கான சுரக்‌ஷா டியூப்கள் எப்போதும் நிரந்தரமாக இருக்கும். ஒரு மீட்டர், 1.2 மீட்டர் என இரு அளவுகளில் கிடைக்கிறது. 5 வருட வாரண்டியுடனும் தருகிறார்கள். எலி கடித்தாலும் டேமேஜ் ஆகாமல் உறுதியாக இருக்கும்… ஆபத்துகளை தவிர்க்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்களை ஒரே இடத்தில் குவித்து வைக்கக் கூடாது. ஒரு வீட்டில் 2 சிலிண்டர்களுக்கு மேல் வைத்திருப்பதும் ஆபத்தானதே. நல்ல காற்றோட்டமான இடத்தில், சிலிண்டர்களை வைப்பது நல்லது.

‘துருப்பிடித்த, மட்டமான சிலிண்டர்களை எங்களுக்குக் கொடுக்கிறார்கள்’ என நிறையபேர் புகார் சொல்கிறார்கள். ஒரு சிலிண்டரின் ஆயுட்காலம்10 வருடங்கள். 10 வருடங்களில் சிலிண்டர் எங்கெங்கேயோ பயணம் செய்திருக்கும். எனவே, சிலிண்டரை மேற்பார்வையாக பார்த்து அதன் தரத்தை தீர்மானிக்க முடியாது. சிலிண்டரின் மேற்பகுதியில் அது தயாரான தேதி, அதன் ஆயுள் முடிவுறும் தேதி உட்பட எல்லாமே இருக்கும். அதன் ஆயுட்காலத்தையும் தாண்டி புழக்கத்தில் இருப்பது தெரிந்தால் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். கேஸ் சிலிண்டர் தொடர்பான எல்லா புகார்களுக்கும்18002333555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் இல்லங்களில் சிலிண்டரை வாங்குவதில் சிரமமும் தேவையில்லாத குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்காகவே மாலை 6 மணிக்கு மேல் சிலிண்டர் விநியோகம் செய்யும் வசதியும் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சிலிண்டர் டெலிவரி செய்ய வரும்போது அதன் எடையை பரிசோதித்துக் கொள்வது அவசியம். சிலிண்டரின் எடை 15 கிலோ, உள்ளிருக்கும் கேஸ் எடை 14.2  கிலோ இரண்டும் சேர்த்து 29.5 கிலோ இருக்க வேண்டும். இந்த எடை விவரம் சிலிண்டரிலேயே குறிக்கப்பட்டிருக்கும். அதற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ 100 கிராம் இருக்கலாம். அதற்கும் குறைவாக இருந்தால் சிலிண்டரை திருப்பி எடுத்துப் போக சொல்லிவிட்டு, வாடிக்கையாளர் மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

ஐஎஸ்ஐ முத்திரையுள்ள தரமான அடுப்பைப யன்படுத்தவேண்டியது எல்லாவற்றையும்விட முக்கியமானது. பர்னரை சுத்தம் செய்கிறேன் என்று அடுப்பைக் கழற்றி, ஊற வைத்து சுத்தம் செய்யத் தேவையில்லை. அவ்வப்போது சுத்தம் செய்தால் போதும்.

2 வருடங்களுக்கு ஒரு முறை ஏரியா கேஸ் சிலிண்டர் மெக்கானிக்கை அழைத்து அடுப்பு, கனெக்‌ஷன் ஆகியவற்றை சோதித்துக் கொள்வது அவசியம். இதற்கு கட்டணமாக ரூ.70 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.

அடுப்பருகில் நின்று சமைக்கும்போது தீ பரவாமல் இருக்க Fire Resitant Apron என்றொரு கவர் இருக்கிறது. தீப்பிடித்தாலும் எரியாத தன்மை கொண்ட இதை சமைக்கும்போது பயன்படுத்தலாம். இது இண்டேன் டிஸ்ட்ரிபியூட்டர்களிடமும் கிடைக்கிறது.

சில முக்கியக் குறிப்புகள்… விளக்கங்கள்!

Image

 

***

Image

மேலும் உங்கள் புகார்களை தெரிவிக்க கீழ்கண்ட எண்களைத் தொடர்புகொள்ளலாம். (இண்டேன் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்)…

சென்னை: 044-24339236, 044-24339246

கோயம்புத்தூர்: 0422-2245902, 0422-2247396

மதுரை: 0452-2533956

திருச்சி: 0431-2740066 ‘

– எஸ்.பி.வளர்மதி 

மாடல்: உமா

படங்கள்:ஆர்.கோபால்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s