அது ஒரு வெயில் காலம்…
ஓடு பிளந்து பாயும்
மின்சாரத்தைப் போல
வெயிலாயுதம் தாக்குகிறது…
கண்ணாடித் துகள்களென
வெம்மையின் பிம்பங்கள்
தொடர்ந்து வரும் பெரும்புழுதி
பாதங்களின் சுவடுகளை
காகிதங்களெனக் கிழித்து வருகிறது…
கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் முன்பு கொஞ்சம் வெயிலின் நன்மைகளையும் பார்போம்…
சூரியக் கதிர் நம்மை பொறுத்த வரை. தலைமுடி காய வைக்க, துணி காய வைக்க, பெயின்ட் காய வைக்க, மின்சாரம் கிடைக்க, தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க, நெல் மற்றும் தானியங்களை காய வைக்க, உலர்த்த, அதிகமாக உள்ள தண்ணீர் வற்ற, உப்பளத்தில் உப்பு தயாரிக்க, பூக்கள் மலர மற்றும் நேரத்தைக் கணக்கிட இப்படிப்பட்ட விஷயங்களுக்கு மட்டும்தான் என்று நாமே நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் 90 சதவிகித `வைட்டமின் டி’ சத்து சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதால்தான் கிடைக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. நாம் எப்பொழுதுமே வெயிலில் அதிக நேரம் நிற்க விரும்புவதில்லை. இதனால்தான் சுமார் 12 கோடி மக்கள் உலகம் முழுவதும் `வைட்டமின் டி’ சத்து குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
பூமியில் அனைத்து இயக்கமும் சூரிய ஒளி மூலமே! சூரிய ஒளி மட்டும் பூமிக்குக் கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. சூரியனிலிருந்து பூமி மீது விழும் சூரிய ஒளியில் அதாவது வெயிலில் நமக்கு எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை.
சூரியனிலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்கள். பலவிதமான மின்காந்த கதிர்களாகத்தான் (எலெக்ட்ரோ மேக்னெடிக் ரேடியேஷன்) பூமியின் மீது வந்து படுகிறது. இந்த மின்காந்தக் கதிர்கள் அவற்றின் வீரியத்துக்கேற்ப அவற்றின் சக்திக்கேற்ப பலவிதமாக பிரிக்கப்படுகின்றன.
அதிக வெயிலை, ‘சுட்டெரிக்கும் சூரியன்’ என்றுதான் நாம் சொல்வோம். அந்த சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள்
1). எக்ஸ்ரே கதிர்கள்
2). அல்ட்ரா வயலெட் சி, பி, ஏ கதிர்கள்
3). இன்ஃபிராரெட் கதிர்கள்
இவை மூன்றும் நம் கண்களுக்குத் தெரியாது. நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய வெயிலும்(4) சூரிய ஒளிக்கதிரே!
ஆக சூரியக்கதிர்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பூமியைத் தாக்கும் அல்ட்ரா வயலெட் கதிர்களின் வீச்சு விண்வெளியிலுள்ள வாயுக்களாலும், மாசு படலத்தினாலும், மற்ற தடுப்புச் சக்திகளினாலும் தடுக்கப்படாவிட்டால் அது பூமிக்கு வந்து சேரும்போது மனிதர்களின் சருமத்தை மிகவும் பாதிக்கும்.
இதைத்தான் நாம் `சன் பர்ன்’ அதாவது வெயில் சுட்டெரிக்கிறது என்று சொல்வோம். அதே போல மனிதர்களின் தோலிலுள்ள பிக்மென்ட்ஸை (மனிதன் கறுப்பா, சிவப்பா என்று காட்ட உதவுவது இதுதான்) பாதித்து தோலின் இயற்கையான நிறத்தை மாற்றிவிடும். நான் ஏற்கனவே சொன்னபடி சூரிய ஒளிக்கதிர்களிலுள்ள அல்ட்ரா வயலெட் `பி’ கதிர்கள்தான் ஓசோன் படலத்தை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதே கதிர்கள்தான் உடலில் `வைட்டமின் டி’ உருவாகவும் மிக மிக உதவியாக இருக்கின்றன. பத்து சதவிகிதம் ஓசோன் மண்டலம் குறைந்தால் சுமார் இருபத்தைந்து சதவிகிதம் சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருக்கிறது. இத்தனை கோடி கிலோ மீட்டரை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.
அவ்வளவு தூரத்திலிருந்து வரும் சூரியனின் வெப்பத்தை நம்மால் தாங்க முடியவில்லை. சூரிய ஒளியினால் நம் உடலுக்கு நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. சூரிய ஒளியின் மூலம் நமது உடலுக்கு `வைட்டமின் டி’ கிடைக்கிறது. சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா வயலெட் `பி’ கதிர்கள் நமது உடலின் மீது படும்போது தோலிலுள்ள கொழுப்பு பொருள் உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு `வைட்டமின் டி’ ஆக மாறி உடலுக்குள் செல்கிறது.
உடலில் தோலின் பாகம் எவ்வளவு வெயிலில் படுகிறதோ அவ்வளவு `வைட்டமின் டி’ அதிகமாக உருவாகி உடலுக்குள் சேருகிறது.
வெயிலும் நல்லதே!
கோடைக் காலம் என்பது இயற்கையின் பரிசு. கோடையில்தான் மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன. இதனால் பயிர் நிலங்களில் விளையும் பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன.
கோடை வெயில் நம் வீட்டு செல்லங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் அற்புதப் பருவம் அல்லவா அது.
உடல், இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்துவிடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாடு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும் வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன.
மேலும், அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும். வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில் கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
இந்த தருணத்தில் தான் நமக்கு உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வரும்போது உடலானது சில மாற்றங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது.
கோடைக் காலத்தில் அதிகாலை எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது.
உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. நாம் உடுத்தும் துணிகளும் நம் மனநிலையை தீர்மானம் செய்யும் காலமே கோடை காலம்.
வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும். அதிக நீர் அருந்த வேண்டும். விட்டு விட்டு நீர் அருந்துவது நல்லது.
– ப்ரியா கங்காதரன்
***
ப்ரியாவின் பிற பதிவுகள்
Image Courtesy: