22 இன் 1 – அசத்துது அவகடோ!

OLYMPUS DIGITAL CAMERA

மதுமிதா

ganze und halbe avocado isoliert auf weiss

பட்டர் ஃப்ரூட் என்றும் அறியப்படும் அவகடோ பழத்தின் சாறு, தொண்டையில் இறங்கும் போது வெண்ணெய் இறங்குவது போல இதம் தரும். அதனால் இதை வெண்ணெய் பழம் என்றும் கூறுவதுண்டு. பழம் கனிந்ததும் சாலட், ஜூஸ் செய்யலாம் என்பதைப் போல, காயாக இருக்கும்போதும் சமையலில் பயன்படுத்தலாம். மாங்காய் அல்லது குடைமிளகாய் போன்று தனித்த சுவையோ, மணமோ இதற்குக் கிடையாது. எனினும், இதன் சுவை அலாதியானது. பச்சை வண்ண சதைப் பகுதி மருத்துவ குணமுடையது. வெளிநாட்டிலிருந்து வந்த காய் என்பதாலும் பழமாக மட்டுமே பயன்படுத்தி வந்ததாலும் ஜூஸ், சாலடுக்கு மட்டுமே விதவிதமாகப் பயன்படுத்தினர். நம் சமையல் முறைப்படி பொரியல், சாம்பார், சாதமாகவும் முயற்சிக்கலாம்.

அவகடோ ஜூஸ்

அவகடோ பழத்தின் கனிந்த சதையை ஸ்பூனால் எடுத்து, மிக்ஸியில் தேவையான சர்க்கரை சேர்த்து, அரைத்து, நீர் கலந்து ஜூஸாக அருந்தலாம்.

அவகடோ மில்க் ஷேக்

Avocado milk shake

அவகடோ பழத்தின் கனிந்த சதையை ஸ்பூனால் எடுத்து, மிக்ஸியில் தேவையான சர்க்கரை சேர்த்து, அரைத்து, காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து மில்க் ஷேக் ஆகப் பருகலாம்.

அவகடோ சாலட்

Avocado Salad 1

கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, எலுமிச்சை பிழிந்து, உப்பு சேர்த்து, கொத்தமல்லி இலையை பொடியாக வெட்டிச் சேர்த்தால், சாலட் ரெடி.

பழத்தின் சதைப் பகுதியை எடுத்ததுமே, எலுமிச்சைச்சாறை சேர்த்துவிட்டால், நிறம் மாறாமல் இருக்கும்.

2வது முறை: கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, பொடியாக நறுக்கிய தக்காளியும் உப்பும் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சாலட்டாக உபயோகிக்கலாம். கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி, அதிக அளவில் சதைப் பகுதி எவ்வளவு எடுத்திருக்கிறோமோ அதே அளவுக்கு சேர்க்க வேண்டும்.

Avocado Salad 2

3வது முறை: 2வது முறைப்படி செய்த பின், அதோடு, துருவிய கேரட், வெள்ளரிக்காய் எனத் தனித்தனியாக சேர்க்கலாம்.

4வது முறை: காயைத் தோல் சீவி, துருவி எடுத்துக்கொண்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும். இதனுடன் துருவிய கேரட், வெள்ளரிக்காய் எனத் தனித்தனியாக சேர்க்கலாம். உப்பு சேர்த்து பரிமாறவும்.

அவகடோ தயிர் பச்சடி

Avocado thayir pachadi

காயைத் தோல் சீவி துருவி எடுத்துக்கொண்டு, அதனுடன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும். தயிரில் உப்பு சேர்த்து மேலே குறிப்பிட்ட கலவையையும் சேர்த்து பரிமாறலாம்.

அவகடோ ரைத்தா

Avocado Raitha

கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து இந்தக் கலவையை தயிரில் உப்பு கலந்து சேர்க்கலாம்.

2வது முறை: கனிந்த பழத்தின் சதைப் பகுதியை ஸ்பூனால் எடுத்து மசித்து, உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து இந்தக் கலவையை தயிரில் உப்பு கலந்து சேர்க்கவும். இதனுடன் துருவிய கேரட், வெள்ளரிக்காய் எனத் தனித்தனியாகவும் சேர்க்கலாம். தக்காளி அல்லது எலுமிச்சைச்சாறு தேவையெனில் சிறிது சேர்க்கலாம்.

அவகடோ மசால்

Aalu avacado masal

உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அவகடோ காயை தோல் சீவி, கொட்டை நீக்கி, ஒரு இஞ்ச் அளவில் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். அந்த வதக்கிய கலவையுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து, மஞ்சள் தூள், தனி வத்தல் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவகடோ மசால் தயார்.

அவகடோ மசால் தோசை

Avocado Dosai 3

தோசையின் நடுவில் அவகடோ மசால் வைத்து மசால் தோசையாகப் பரிமாறலாம்.

2வது முறை: அவகடோ பழ சாலட்டை தோசையின் நடுவில் வைத்துப் பரிமாறலாம்.

அவகடோ துருவல்

அவகடோ காயை தோல் சீவி, கொட்டையை விலக்கி எடுக்கவும். காயை துருவலாகத் துருவிக் கொள்ளவும். தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். துருவலைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து இறக்கவும்.

அவகடோ பொரியல்

அவகடோ காயை பொடியாக நறுக்கி, கேரட் அல்லது பீன்ஸ் பொரியல் செய்வது போல அவகடோ பொரியல் செய்யலாம்.

அவகடோ ஸ்டஃப்டு சப்பாத்தி

Avacado stuufed chappathi

தாளிக்காமல் அவகடோ துருவல் செய்து சப்பாத்திக்கு நடுவில் வைத்து ஸ்டஃப்டு சப்பாத்தியாகச் செய்யலாம்.

அவகடோ கறி

Avacado curry

அவகடோ காயை கத்தரிக்காய் நறுக்குவது போல நறுக்கிக் கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். காயை லேசாக வதக்கவும். சாம்பார் பொடி, உப்பு சேர்க்கவும். மிக்ஸியில் ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், சிறிது புளி, பாதி மூடி தேங்காய், 3 தக்காளி சேர்த்து அரைத்துச் சேர்க்கவும். வெந்ததும் கெட்டியாக எடுத்துப் பரிமாறவும்.

அவகடோ – கடலைப் பருப்பு கூட்டு

Avacado kadalaiparuppu kuuttu

கடலைப் பருப்புடன் நறுக்கிய கேரட் 2, அவகடோ காய் நறுக்கிச் சேர்க்கவும். சின்ன வெங்காயம் 5, ஒரு தக்காளி, இரண்டு சில்லு தேங்காய் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். சாம்பார் பொடி, பெரிய உப்பு சேர்க்கவும். இரண்டு தேங்காய் சில்லு, ஒரு பச்சை மிளகாய், சிறிது புளி, ஒரு தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். குக்கரில் சிறிது தண்ணீர் விட்டு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு மிளகாய் வத்தல் போட்டு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.

அரைத்து விட்ட அவகடோ சாம்பார்

Avacado araithu vitta sambar

அவகடோ காயைத் தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து விடும் சாம்பாருக்குச் செய்வதைப் போல அனைத்தையும் சேர்த்து, அவகடோ லேசாக வதங்கும் போது அனைத்தையும் சேர்த்து வேக வைக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ – முருங்கைக்காய் சாம்பார்

Avocado Sambar

துவரம் பருப்பு சேர்த்து முருங்கைக்காய் சாம்பார் செய்யும்போது காய்கள் சேர்க்கும் அளவுக்கு, அவகடோ காய் சேர்க்கவும்.

அவகடோ துவையல்

Avocado Thuvaiyal

உளுத்தம் பருப்பு 5 டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 3, மிளகாய் வத்தல் 3, வெள்ளைப் பூண்டு 4, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அவகடோ காயை தோல் சீவி பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும். வதங்கும்போது புளி, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். விரும்பினால் தேங்காய் சிறிது சேர்க்கலாம்.

அவகடோ கொத்து பரோட்டா

Avocado Kothu parota

கொத்து பரோட்டா செய்யும் போது, கேரட், பீன்ஸுடன் அவகடோ காயை நீளமாக பொடியாக நறுக்கிச் சேர்த்து செய்யலாம்.

2வது முறை: 3 சப்பாத்தி மீதமாகி இருந்தால், அவற்றைத் துண்டுகளாக்கி அல்லது துண்டுகளை மிக்ஸியில் லேசாக பெரிய சைஸ் தூளாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, அவகடோ காயை நீளமாக பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். வதங்கும் போது மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி சேர்க்கவும். தக்காளி 2 பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். மிக்ஸியில் தூளாகச் செய்த அல்லது சப்பாத்தியை துண்டுகளாகப் பிய்த்து எடுத்ததை இதில் சேர்க்கவும். சிறிது உப்பு, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ – ஆலு – பட்டர் பீன்ஸ் குருமா

Avocado  aalu butter beans

எண்ணெய் விட்டு, பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, அவகடோ காயை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ் சேர்க்கவும். இவை லேசாக வதங்கும் போது மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, கொத்தமல்லி பொடி, கறிமசால் பொடி, உப்பு சேர்க்கவும். 2 தக்காளியை மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். அரை மூடித் தேங்காய், ஒரு பச்சை மிளகாய், 5 முந்திரிப் பருப்பு, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ பிரியாணி

Avocado Biriyani

பிரியாணி செய்வது போலவே, இஞ்சி – பூண்டு விழுது, கறிமசால் வகைகள், உப்பு அனைத்தையும் சேர்க்கவும். அவகடோ சேர்க்கவும். மிக்ஸியில் அரை மூடி தேங்காயுடன் கால் கட்டு கொத்தமல்லி இலை, கால் கட்டு புதினா இலை சேர்த்து அரைத்து அனைத்தையும் குக்கரில் வைத்து வேக விடவும். முந்திரி வறுத்து சேர்த்து பரிமாறவும்.

அவகடோ ஃப்ரைடு ரைஸ்

Avocado Fried Rice

சாதத்தை வேக வைத்து ஆற வைக்கவும். அவகடோ காயை பொடியாகத் துருவி வைத்துக்கொள்ளவும். எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வதக்கவும். துருவிய அவகடோ காயையும் சேர்த்து வதக்கவும். விரும்பினால், அரை டீஸ்பூன் சர்க்கரை, அரை தக்காளியை பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். வதங்கும் போது தேவையான அளவு மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, கறிமசால் பொடி சேர்க்கவும். உப்பு, கொத்தமல்லி இலை சேர்க்கவும். ஆறிய சாதத்தை இதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

2வது முறை: இதில் கேரட், பீன்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

அவகடோ தேங்காய்ப் பால் பிரியாணி Avocado Biriyani 1

பிரியாணி செய்யும் போது, தேங்காய் விழுதாக அரைத்து விடாமல் தேங்காய் சக்கையைப் பிழிந்து விட்டு, தேங்காய்ப் பாலை அரிசிக்கு அளவு நீராக வைத்து செய்தால் சுவை கூடும்.

அவகடோ – மட்டர் – ஆலு குருமா

எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போட்டு, கறிவேப்பிலை, இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்து, அவகடோ காயை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்க்கவும். இவை லேசாக வதங்கும் போது மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, கொத்தமல்லி பொடி, கறிமசால் பொடி சேர்க்கவும். பச்சைப் பட்டாணி சேர்க்கவும். ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி எனில் அப்படியே சேர்க்கலாம். இல்லையெனில் முதல் நாள் இரவு ஊற வைத்து சேர்க்கவும். 2 தக்காளி மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். அரை மூடித் தேங்காய், ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, 5 முந்திரிப் பருப்பு, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் எடுத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

அவகடோ – மட்டர் ரைஸ்

Avacado Muttar 2

எண்ணெய் அல்லது நெய்யில் பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும். இரண்டு தக்காளியை மிக்ஸியில் அரைத்துச் சேர்க்கவும். தேவையான தனி மஞ்சள் பொடி, தனி வத்தல் பொடி, உப்பு, கறிமசால் பொடி அனைத்தையும் சேர்க்கவும். அவகடோ காயை தோலெடுத்து நறுக்கி சேர்க்கவும். பச்சைப் பட்டாணி சேர்க்கவும். நனைய வைத்த அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும். மிக்ஸியில் அரை மூடி தேங்காயுடன் கால் கட்டு கொத்தமல்லி இலை அரைத்து சேர்த்து குக்கரில் வைத்து வேக விடவும். முந்திரி வறுத்து சேர்த்து பரிமாறவும்.

14 இன் 1 – சத்துமாவு சர்ப்ரைஸ்!

மதுமிதா

 Image

சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!

சத்துமாவு தயார் செய்ய…

தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற வகை பதார்த்தங்கள் செய்ய மு.பருப்பு, பா.பருப்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டியதில்லை.

1. சத்துமாவு கஞ்சி  

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு, பனங்கற்கண்டு அல்லது வெல்லம், பால்.

எப்படிச் செய்வது?

சத்துமாவில், தூசி நீக்கிய வெல்லம் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து, மாவு அளவில் 4 மடங்கு நீர் சேர்த்துக் கிளறவும். நீர்க்க இருந்தது கஞ்சி போல கெட்டியாகும் போது,  தேவையான பால் விட்டு லேசாக கிளறி இறக்கவும். ஹார்லிக்ஸ் போல சூடாகக் குடிக்கலாம்.

* கூல் கஞ்சி: ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைத்தும் கூல் கஞ்சியாக ஸ்பூனில் எடுத்தும் சாப்பிடலாம்! 

2. சத்துமாவு உருண்டை 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு, வெல்லம், நெய் அல்லது நல்லெண்ணெய், ஏலக்காய் தூள் சிறிது.

எப்படிச் செய்வது?

இதை அடுப்பில் வைக்க வேண்டியதில்லை. மாவை வறுத்து அரைத்திருப்பதால் அப்படியே சாப்பிடலாம். பச்சை வாடை தெரியாது.

வெல்லத்தில் நீர்விட்டு தூசு எடுத்துவிட்டு சத்து மாவு, ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும். 

3. புட்டு

என்னென்ன தேவை?

சத்துமாவு, தேய்காய்த் துருவல், லேசாக வறுத்த வெள்ளை எள்.

எப்படிச் செய்வது?

சிறிது வெந்நீரை லேசாக மாவில் தெளித்து உதிரியாக பிசறிக்கொள்ளவும். வெள்ளை எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் வெந்நீர் விட்டு உதிரியாகப் பிசைந்து வைத்த மாவை வைக்கவும். தேங்காய்த் துருவலையும், வறுத்த எள்ளையும் மாவின் மேல் போட்டு வேக வைக்கவும்.

* இனிப்புப் புட்டு 

Image

வேக வைத்த புட்டுடன் தேவையான அளவு ஏலக்காய், சர்க்கரை கலந்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும்.

* வெல்லப் புட்டு 

Image

வேக வைத்த புட்டுடன் தேவையான அளவு வெல்லம், ஏலக்காய் கலந்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும்.

* காரப் புட்டு 

Image

கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், மிளகாய் வத்தல் தாளித்து, பெருங்காயத்தூள், தேவையான உப்புச் சேர்த்து, வேக வைத்து இறக்கிய புட்டை சேர்த்துக் கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.

4. கார கொழுக்கட்டை 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு.

தாளிக்க…

நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தேங்காய் (பொடியாக நறுக்கியது), உப்பு.

எப்படிச் செய்வது?

இவை அனைத்தையும் சேர்த்து தாளித்ததும், சத்துமாவை சேர்த்து லேசாக நீர் தெளித்து கொழுக்கட்டை செய்ய வரும் அளவில் உருட்டி எடுத்துக் கொள்ளவும். இட்லித் தட்டில் கொழுக்கட்டை பிடித்து வைத்து வேக வைத்து எடுக்கவும்.

5. இனிப்பு கொழுக்கட்டை 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு,  வெல்லம், பொடியாக நறுக்கிய தேங்காய், நெய் அல்லது நல்லெண்ணெய்,  தேவையெனில் சிறிது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி.

எப்படிச் செய்வது?

வெல்லத்தில் நீர் விட்டு, தூசு எடுத்துவிட்டு, சத்துமாவு, சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசையவும். பொடியாக நறுக்கிய தேங்காய், வறுத்த முந்திரி சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து கொழுக்கட்டை பிடிக்கவும். இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

6. சத்துமாவு நிப்பட்டி 

Image

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தேங்காய் (பொடியாக நறுக்கியது), மிளகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு.

எப்படிச் செய்வது?

எண்ணெய் தவிர அனைத்தையும் லேசாக தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கவும். மாவு இனிப்பாக இருக்கும் என்பதால் கொஞ்சம் அளவு அதிகமாகவே காரம் சேர்க்கலாம். சப்பாத்தி உருண்டை செய்வது போல கொஞ்சம் பெரிய அளவில் எடுத்து, கையாலேயே தட்டி அப்படியே தோசைக்கல்லில் போட்டு, அதிலும் லேசாக தட்டி அளவை பெரிதாக்கலாம். இல்லையெனில் ஒரு டிபன் ப்ளேட்டை பின்பக்கமாகத் திருப்பி, லேசாக எண்ணெய் தடவி, உருண்டையை வைத்து கையாலேயே தட்டி தோசை போல வட்டமாக விரித்து தோசைக்கல்லில் போடலாம். நல்லெண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும், திருப்பிப்போட்டு நல்லெண்ணெய் விட்டு மறு பக்கமும் கொஞ்சம் வெந்து நிறம் மாறியதும் எடுக்கவும். சுவையான சத்துமாவு நிப்பட்டி அல்லது அடை தயார்.

7. சத்துமாவு தோசை 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு – 5 பங்கு, உளுந்தம் பருப்பு – 1 பங்கு, உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் நீர் சேர்த்து நைசாக அரைக்கவும். உப்புச் சேர்க்கவும். அரைத்த உளுந்த மாவுடன் சத்துமாவு சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். இப்போது தோசை சுடலாம்.

8. சத்துமாவு முறுக்கு 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு – 6 பங்கு, உளுந்தம் பருப்பு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு, பொரிக்க தேவையான எண்ணெய்.

எப்படிச் செய்வது?

உளுந்தம் பருப்பை நன்றாகக் கழுவி நைசாக வேக வைக்கவும். வெந்தவுடன் நன்றாக மசித்து, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முறுக்கு சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.

* முறுக்கு, சீவல், ஓமப்பொடி செய்யும்போது முதல் முறை செய்யும் அளவு சரி பார்த்து அளவு சேர்க்கவும். வேக வைத்த பருப்பின் அளவின்படி அதில் இருக்கும் நீர் அளவுக்கு தகுந்தாற்போல சத்துமாவு அளவைச் சேர்க்க வேண்டும். பிசையும் போது சிறிது எண்ணெய் சேர்க்கலாம்.

9. சத்துமாவு முள்முறுக்கு 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு –  6 பங்கு, பாசிப் பருப்பு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம்,  உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி நைசாக வேக வைக்கவும். வெந்தவுடன் நன்றாக மசித்து, எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முள்முறுக்கு சில் போட்டு பிழிந்து எடுக்கவும்.

10. சத்துமாவு சீவல் 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு – 4 பங்கு, கடலை மாவு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.

எப்படிச் செய்வது?

எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீவல் சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.

 * பாசிப் பருப்பு முறுக்கு மாவு போலச் செய்தும் சீவல் பிழியலாம்.

11. சத்துமாவு ஓமப்பொடி 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு – 4 பங்கு, கடலை மாவு – 1 பங்கு, வெள்ளை எள், சீரகம், உப்பு – சிறிது, பொரிக்கத் தேவையான எண்ணெய்.

எப்படிச் செய்வது?

எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், ஓமப்பொடி சில் போட்டுப் பிழிந்து எடுக்கவும்.

 * பாசிப் பருப்பு முறுக்கு மாவு போலச் செய்தும் ஓமப்பொடி பிழியலாம்.

12. சத்துமாவு வடை 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிது, வெங்காயம் – 1, தேங்காய் – கால் மூடி (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை, உப்பு – சிறிது.

எப்படிச் செய்வது?

பொடியாக நறுக்கிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது நீருடன் சத்துமாவும் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மாவை உருண்டை செய்து வடையாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.

 * பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்க்கலாம்.

13. சத்துமாவு பக்கோடா 

Image

என்னென்ன தேவை?

சத்துமாவு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிது, வெங்காயம் – 2, தேங்காய் – கால் மூடி (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை, உப்பு – சிறிது.

எப்படிச் செய்வது?

பொடியாக நறுக்கிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, சிறிது நீருடன் சத்துமாவும் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மாவை எடுத்து சிறு உருண்டையாக உதிர்த்துப் பொரித்தெடுக்கவும்.

14. சத்துமாவு இடியாப்பம்

என்னென்ன தேவை?

சத்துமாவு, உப்பு.

எப்படிச் செய்வது?

தேவையான சத்துமாவில் சிறிது உப்புச் சேர்த்து, வெந்நீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும். இடியாப்ப சில்லில் பிழிந்து, இட்லி தட்டில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்

* இனிப்பு இடியாப்பம்

பிழிந்து வேக வைத்த இடியாப்பத்தை உதிர்த்து, தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்தால் இனிப்பு இடியாப்பம் தயார். பால், சர்க்கரையோடும் சாப்பிடலாம்.

* கார இடியாப்பம் 

தாளிக்க…

கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய் வற்றல் – 1, இஞ்சி – சிறிது, பெல்லாரி வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), மிளகு – 5, கறிவேப்பிலை சிறிது, எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து, பிழிந்து வேகவைத்த இடியாப்பத்தை உதிர்த்துச் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்புச் சேர்த்தால் சத்துமாவு கார இடியாப்பம் தயார்.

Image

14 இன் 1 – பீட்ரூட் பிரமாதங்கள்!

பொரியலாக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பீட்ரூட்டில் கோலாவும் செய்யலாம்… கோலாகலமாக பாயசமும் சுவைக்கலாம்!

1. பீட்ரூட் பொரியல் 

Image

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – தேவையான அளவு, உப்பு – 1 டீஸ்பூன்.

தாளிக்க…

எண்ணெய் – சிறிது, கடுகு – 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 3, மிளகாய் வற்றல் – 2, பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பைக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பீட்ரூட்டை தோல் சீவி, நன்றாகக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணைய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சேர்க்கவும். மிளகாய் வற்றலையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், பீட்ரூட் சேர்த்து வதக்கவும். பாசிப்பருப்பையும் சேர்க்கவும். மூடியால் மூடி, நெருப்பைக் குறைத்து சிம்மில் வேக வைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் கிளறி விடவும். தேவையெனில் லேசாக தண்ணீர் தெளித்து வேக வைக்கலாம். பீட்ரூட் வெந்ததும், உப்பு போட்டுக் கிளறி தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

* பாசிப்பருப்பை முதலிலேயே உதிரியாக வேக வைத்து வைத்துக்கொண்டு, தேங்காய்த்துருவல் சேர்க்கும் போதும் சேர்க்கலாம்.

2. பீட்ரூட் துருவல் 

Image

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, தேங்காய்த் துருவல் – தேவையான அளவு, உப்பு – 1 டீஸ்பூன்.

தாளிக்க…

எண்ணெய் – சிறிதளவு, கடுகு – 1/2 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பெரிய வெங்காயம் – 1,

பச்சை மிளகாய் – 3, மிளகாய் வற்றல் – 2, பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை தோல் சீவி நன்றாகக் கழுவி, துருவி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, துருவிய பீட்ரூட்டை சேர்க்கவும். லேசான தீயில் கிளறி விடவும். மூடியால் மூடி, கிளறிவிட்டு வெந்ததும் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

3. பீட்ரூட் உசிலி 

Image

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, கடலைப் பருப்பு – 50 கிராம், உப்பு – 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – தேவையான அளவு.

தாளிக்க…

எண்ணெய் – சிறிதளவு, கடுகு – 1/2 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 4, மிளகாய் வற்றல் – 2, பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பைக் கழுவி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். பீட்ரூட்டை தோல் சீவி, நன்றாகக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தண்ணீர் விட்டு வேக வைத்து தனியே எடுத்துக்கொள்ளவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பையும் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும். வதங்கியதும், வேக வைத்த பீட்ரூட் சேர்த்து உப்பு, தேங்காய்த் துருவல் கலந்து இறக்கவும்.

4. பீட்ரூட் ரைஸ் 

Image

உசிலியுடன் தேவையான சாதத்தைக் கலந்தால் பீட்ரூட் ரைஸ் தயார்.

5. பீட்ரூட் சத்துப் பொரியல்

Beet Poriyal

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, நிலக்கடலை – 50 கிராம், தேங்காய் – கால்மூடி (பொடியாக நறுக்கியது), மஞ்சள் தூல் – 1/2 டீஸ்பூன், தனி வற்றல் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், கறிமசால் தூள் – 1 டீஸ்பூன்.

தாளிக்க…

எண்ணெய் – சிறிதளவு, கடுகு – 1/2 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 4, மிளகாய் வற்றல் – 2, பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை தோல் சீவி, நன்றாகக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீர் விட்டு வேக வைத்து, தனியே எடுத்துக்கொள்ளவும். நிலக்கடலைப் பருப்பை வறுக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, வறுத்த நிலக்கடலைப்பருப்பு, நறுக்கிய தேங்காய், மஞ்சள் தூள், தனி வற்ற்ல் தூள் சேர்த்து வதங்கியதும், வேக வைத்த பீட்ரூட் சேர்த்து, உப்பு, கறிமசால் தூள் சேர்த்து இறக்கவும்.

6. பீட்ரூட் சத்து சாதம் 

Image

பீட்ரூட் சத்துப் பருப்புப் பொரியலை, தேவையான சாதத்துடன் கலந்தால் பீட்ரூட் சத்து சாதம் தயார்.

7. பீட்ரூட் பச்சடி 

Image

பீட்ரூட்டை கழுவி, தோலுடன் 5 நிமிடம் வேக வைத்து தோல் சீவி, துருவி வைத்துக் கொள்ளவும். தேவையான தயிரில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றுடன் வேக வைத்துத் துருவிய பீட்ரூட்டை தேவையான அளவில் சேர்க்கவும்.

8. பீட்ரூட் கோலா

beetroot Kola

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, கடலைப் பருப்பு அல்லது துவரம்பருப்பு – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மிளகாய் வற்றல் – 4, பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்புடன் மிளகாய் வற்றல், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். பீட்ரூட்டைத் தோல் எடுத்து கழுவித் துருவி வைக்கவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை பீட்ரூட் துருவல் மற்றும் அரைத்த பருப்பு விழுதுடன் சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

9. பீட்ரூட் வடை

Beetroot vadai

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, கடலைப் பருப்பு – 200 கிராம், பெரிய வெங்காயம் – 2,

பச்சை மிளகாய் – 1, இஞ்சி – சிறிது, தேங்காய் கால் மூடி – பொடியாக நறுக்கியது, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 4, பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்புடன் மிளகாய் வற்றல், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். பீட்ரூட்டைத் தோல் எடுத்து கழுவித் துருவி வைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சித்துண்டு, பச்சை மிளகாய், தேங்காய் மற்றும் மஞ்சள் தூளை பீட்ரூட் துருவல் மற்றும் அரைத்த பருப்பு விழுதுடன் சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, வடை வடிவில் தட்டிப் போடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

10. பீட்ரூட் துவையல்

OLYMPUS DIGITAL CAMERA

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, பாசிப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய் வற்றல் – 6,

நல்லெண்ணெய் –  2 டேபிள்ஸ்பூன், தேங்காய் – பாதி மூடி, சீரகம் – 2 டீஸ்பூன், பூண்டு – 4 பல், கறிவேப்பிலை – சிறிது, புளி – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க…

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்.

எப்படிச் செய்வது? 

பீட்ரூட்டை தோல்சீவி, கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயியில் எண்ணெய் காய்ந்ததும் பாசிப் பருப்பு, சீரகம், வெள்ளைப்பூண்டு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இட்டு வதக்கவும். பாசிப் பருப்பு சிவப்பதற்கு முன்பே நறுக்கிய பீட்ரூட்டுடன், துருவிய தேங்காய், புளி, உப்பு சேர்த்து, வதங்கியதும் இறக்கவும். நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் நைசாக அரைக்க வேண்டும். கிண்ணத்தில் எடுத்து கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துப் பரிமாறவும்.

11. பீட்ரூட் அல்வா

Beetroot halwa 1

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, பால் – 200 மி.லி., சர்க்கரை – 200 கிராம் அல்லது தேவையான அளவு, ஏலக்காய் – 5 பொடித்தது, ரீஃபைண்ட் ஆயில், நெய் – தேவையான அளவு, முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் – தலா 10.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை நன்றாகக் கழுவி தோல் சீவி துருவவும். மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். ரீஃபைண்ட் ஆயிலில் லேசாக வதக்கி, பால் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். கிளறி, சுருள வரும்போது, ஏலக்காய் சேர்க்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து, இதில் நெய்யோடு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

12. பீட்ரூட் துருவல் அல்வா 

Image

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, வெல்லம் – 200 கிராம், பால் – 200 மி.லி., ஏலக்காய் – 5 (பொடித்தது), ரீஃபைண்ட் ஆயில் – சிறிது, நெய் – சிறிது, முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் – தலா 10.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை நன்றாகக் கழுவி தோலுடன் வேக வைக்கவும். தோல் சீவி பீட்ரூட்டைத் துருவவும். கடாயில் ரீஃபைண்ட் ஆயில் விட்டு துருவிய பீட்ரூட்டை போட்டு லேசாக வதக்கவும். பால் விட்டு கெட்டியாகும் வரை வேக வைக்கவும். தூள் செய்த வெல்லம் சேர்க்கவும். ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து, நெய்யுடன் அல்வாவில் சேர்க்கவும்.

* வெல்லத்துக்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். இனிப்பு தேவைக்கேற்ப அதிகமாகவோ குறைவாகவோ சேர்க்கலாம்.

13. பீட்ரூட் கீர் 

Image

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, பால் – 200 மி.லி., சர்க்கரை – 200 கிராம் அல்லது சுவைக்கேற்ப, ஏலக்காய் – 5 (பொடித்தது), ரீஃபைண்ட் ஆயில், நெய் – சிறிது, முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் – தலா 10.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை நன்றாகக் கழுவி தோல் சீவி துருவவும். மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். ரீஃபைண்ட் ஆயிலில் லேசாக வதக்கி, தண்ணீர், பால் சேர்த்து வேக வைக்கவும். மிக்ஸியில் அரைமூடி தேங்காய், ஏலக்காய் சேர்த்து அரைத்து இதில் சேர்க்கவும். சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து, இதில் நெய்யோடு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

14. பீட்ரூட் பாயசம்

Image

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 1, வெல்லம் – 200 கிராம், பால் – 200 மி.லி., ஏலக்காய் – 5 (பொடித்தது), ரீஃபைண்ட் ஆயில், நெய் – சிறிது, முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் – தலா 10, தேங்காய் – அரை மூடி.

எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை நன்றாகக் கழுவி தோலுடன் வேக வைக்கவும். தோல் சீவி, பீட்ரூட்டைத் துருவவும். கடாயில் ரீஃபைண்ட் ஆயில் விட்டு துருவிய பீட்ரூட்டைப் போட்டு லேசாக வதக்கவும். தண்ணீருடன் பால் விட்டு லேசாக வேக வைக்கவும். மிக்ஸியில் அரைமூடி தேங்காய், ஏலக்காய் சேர்த்து அரைத்து இதில் சேர்க்கவும். தூள் செய்த வெல்லம் சேர்க்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பு கிஸ்மிஸ் பழம் வறுத்து நெய்யுடன் சேர்க்கவும். இனிப்பு தேவையான அளவில் அதிகமாகவோ குறைவாகவோ சேர்க்கலாம்.

– மதுமிதா

***

கவிதையும் கவிதையும் – 8

கமலா தாஸ் கவிதை

Image

கற்காலம்

 

பிரியமுள்ள கணவன், பழமையில் குடியேறியவனின் மனதில்

வயதான பருத்த சிலந்தி, வலைகளைப் பின்னுகிறது குழப்பத்துடன்

அனுதாபம் காட்டு!

நீ என்னைக் கற்பறவையாக மாற்றினாய்,

கருங்கல் பறவையாய்

என்னைச் சுற்றி வெறுக்கத்தக்க அறையைக் கட்டினாய்.

நீ வாசிக்கையில்

கவனமின்றி அம்மைத்தழும்பு நிறைந்த முகத்தில் அடித்தாய்

உரத்த பேச்சுடன் நீ

எனது அதிகாலை உறக்கத்தைக் கலைத்தாய்

எனது கனவுகாணும் கண்களில் உன் விரலைக் குத்தினாய்

இருந்தும் பகல் கனவுகளில் பலவான்கள் நிழல்களைப் பதித்தனர்

மூழ்கினர் வெண்சூரியன்களாக பெருகும் எனது திராவிட குருதியில்

ரகசியமாய் வடிகால்களைப் பாயச் செய்தனர் புனித நகரங்களின் அடியில்

நீ பிரிந்தபோது நான் எனது நீலநிற பலமுறை அடிவாங்கிய வாகனத்தை

நீலக்கடல் நெடுக ஓட்டினேன்

நான் நாற்பது பலத்த ஓசை எழுப்பும் காலடிகளுடன்

இன்னொருவரின் கதவைத் தட்ட ஓடினேன்

அக்கம்பக்கத்தினர் எட்டிப்பார்க்கும் துவாரத்தின் வழியே பார்த்தனர்

அவர்கள் கவனித்தனர் என்னை

நான் மழையைப் போல வந்துசென்றதை

கேள் என்னை

அனைவரும் கேளுங்கள் என்னை

அவன் என்னில் என்ன பார்த்தான்

கேள் என்னை ஏன் அவன் சிங்கம் எனப்பட்டான்

ஒழுக்கமில்லாதவன் எனப்பட்டான்

கேள் என்னை ஏன் அவனது கை படம்விரித்தாடும் பாம்பைப்போல அசைந்து

எனது இடையின் பின்பக்கம் அடித்தது

கேள் என்னை ஏன் அவன் பெரும் மரம் வீழ்ந்ததுபோல

எனது மார்பகங்களில் விழுந்து உறங்கினான்

கேள் என்னை ஏன் வாழ்க்கை குறைவாய் உள்ளது

மேலும் காதல் இன்னும் குறைவாய்

கேள் என்னை எது பேரின்பம் மேலும் அதற்கான விலை என்ன…

 தமிழாக்கம்: மதுமிதா

Image

 

painting: suzichua.com

 

மதுமிதா கவிதை

Image

 

உனக்கான பாடலைப் புனைய…

 

ஏதோ ஒரு பேச்சு ஏதோ ஒரு நிகழ்வு

எப்படியோ நினைவுபடுத்திவிடுகிறது

இன்னுமொரு நினைவினை  மற்றுமொரு நிகழ்வினை

 

இந்த சிறுதூறலும் இழுத்து வந்து சேர்க்கிறது

அந்த மழைச்சாரலை

அந்த மரத்தினடியில் நடுங்கியபடி ஒதுங்கியதை

அந்தக் கிளையின் இலைகளசைந்து

அட்சதையாய் பொழிந்து தூவிய

இன்னொரு மழையை

இதழ்கள் ஒற்றிக்கொள்ள இணைந்ததும் விலகிய குளிரை

குபீரெனப் பறந்து சென்ற வெட்கம் பூசிய பறவையை

அந்த நீண்ட பயணத்தை

.

அந்த மிக நீண்டதொரு பயணம் மீண்டும் வாய்க்கவேயில்லை

 

கதகதப்பான உன் ஸ்பரிசம்

அழைக்கிறது உன் வாசம்

 

அடவியின் இருள்

ஆனந்த கீதமிசைத்த புள்ளினங்கள்

ஆடிக்களித்த மான்கள்

அருகில் வந்து பயந்து விலகிய முயல்கள்

இரவா பகலா தெரியா பொழுதில்

இயைந்த பத்து விரல்களின்

இசைவாய் ஒன்றிணைந்த தாபங்கள்

சுவைத்து மகிழ்ந்த இவ்வினிப்பின் சுவை

இனியெங்கே கிடைக்குமென

இங்குமங்கும் தேடியலைந்த அணில்குஞ்சு

 

வீசியெறியப்படுகிறேன் நினைவின் சுழலுக்குள்

விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

வேட்கையும் உயிரும் மீட்பாரின்றி

மூழ்கிக் கிடந்த பெருங்கடலினுள் தத்தளித்தபடி

மேல்நோக்கிப் பாய்ந்து வருகிறேன்

உன் நினைவினைப் பற்றிக்கொண்டு

வெளிவந்து மூச்சடைப்பை நீக்கி மூச்சு எடுத்துவிடும் தீவிரத்துடன்

உயிர் காத்திடும் ஆவேசத்துடன்

 

வற்றாது சுரக்கும் தீராத சொற்களின் குவியலிலிருந்து

எதை விடுத்து எதை எடுத்து

எப்படி பொறுக்கி அடுக்கிக் கோர்க்கப்போகிறேன்

முற்றாத உனக்கான பாடலைப் புனைய.

Image

Painting Credit: Leonid Afremov MAGIC RAIN

 

கவிதையும் கவிதையும் – 7

கமலா தாஸ் கவிதை

Image

கண்ணாடியின் உள்பிரதிபலிப்பு

 

வெளியே மழை வலுத்தது

வராந்தாவின் கதவுகளை அடைத்தோம்

அனைத்து நீலநிற விளக்குகளும் ஏற்றப்பட்டன

முதல் அணைப்பை எவ்விதம் விவரிப்பேன்

நீங்கள் பார்த்திருக்க முடியாது

அவனுடைய அறையில் இருந்த பல கண்ணாடிகளை

நாங்கள் அணைத்துக்கொண்டபோது

நாங்கள் அவற்றின் வெளிர் நீலக்குளத்தில்

விழுந்தோம் திரும்பத் திரும்ப

இறப்பில்லாத திரும்பத்திரும்ப பிரதிபலிக்கும் சித்திரங்கள் போல்

பிரதிபலிப்பு மீண்டும் பிரதிபலிப்பு

நிழலின் நிழல்

கனவின் கனவு

அவனை அறிந்துகொண்டேன்

என்னை அறிந்துகொண்டபிறகு

அவனை யாரென அறிந்துகொண்டபிறகு

என்னை இன்னும் அறிந்துகொண்டேன்

ஆனால் அவன் சொன்னான்

என் பக்கத்திலிருந்து எழுந்து

‘எட்டு மணியாகிறது. எழுந்திரு

என் இனிய மனைவியே

நான் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்.

தமிழாக்கம்: மதுமிதா

Image

Painting Credit: Mohuya Rout

 

மதுமிதா கவிதை

Image

உதறிச் சென்றாய்

 

மீண்டும் வருவேன் உறுதி என்றாய்

கையசைத்துச் சென்றாய்

விரல் நகங்களை வெட்டிவிடுவதாய்

குளவி கூட்டைத் துறந்து செல்வதாய்

வண்ணத்துப்பூச்சி கூட்டை மறந்துவிடுவதாய்

பாம்பு சட்டையைக் கழட்டிவிட்டுத்

திரும்பிப்பார்க்காமல் செல்வதாய்

நடந்து விட்டுத் திரும்புகையில்

கடற்கரை மணலை ஆடையிலிருந்து தட்டிவிடுவதாய்

உதறிச் சென்றுவிட்டாய்

 

அலைகடலென சீறும் உணர்வுகளின் அழுத்தம்

அமைதியை வாள்போல் கீறி 

சித்தத்தை சில்லுச்சில்லாய் சிதறச் செய்கிறது

 

மேகத்தை எவ்விதம் கட்டி வைப்பேன்

நிலவின் கற்றையை எவ்விதம் கைகளில் பிடிப்பேன்

காற்றினை எவ்விதம் சொந்தமென்பேன்…

Image

Painting  Credit:Patricia Velasquez de Mera

 

கவிதையும் கவிதையும் – 6

கமலா தாஸ் கவிதை

kamala-das1

குளிர்காலம்

புதுமழையின் வாசனை

மெல்லிய தாவரத் தண்டுகளின் வாசனை

அதன் வெம்மை

வேர்களைத் தீண்டும் பூமியின் வெம்மை

எனது ஆன்மா தனது வேர்களை

எங்கேனும் நிறுத்தவேண்டுமென நினைக்கிறேன்.

அவனது உடலை நேசிக்கிறேன் வெட்கமேயின்றி

குளிர்கால மாலைகளில்

குளிர்காற்று

ஜன்னலின் கதவுகளில் மோதும்போது…

தமிழாக்கம்: மதுமிதா

set-fire-to-the-rain-painting

Painting credit: nikhelbig.com

மதுமிதா கவிதை

857357_10200849761474153_1034327492_o

காலம் வரையும் ஓவியம்

வண்ணம் புதிதாய் அளித்தாய்
கண்டுகொண்டது
கானகக் குயில்

வண்ணங்களை வாரி வாரி தெளித்தாய்
கானகக் குயில் கானமிசைத்தது

வண்ணங்கள் மறைய
அதிர்ந்த குயில்
கானம் மறந்து
வண்ணம் தேடித்தேடி
அலைந்து ஓய்ந்தது

வானவில்லாய் ஒளிர்ந்தாய்
கானம் பிறந்தது
இசைத்த கணம் மறைந்தாய்

மஹாமௌனம் நிலவ
மறுபடி ஒளிர்ந்தாய்
நிறம் பிரியும் வண்ணங்களுடன்
குயிலும் இசைத்தது
இனித்தும்
சோககீதம் சுமந்தும்

வண்ணமும் இசையும்
இணைந்தும் நீங்கியும்
நீங்கியும் இணைந்தும்
இழையும் ஓவியத்தை
வேதனையோ வேட்கையோ அறியா
காலம் வரைந்து கொண்டிருக்கிறது
இன்னும் இன்னும் இயல்பாய்

pajaro-bobo-mayor-puerto-rican-lizard-cuckoo-yiries-saad

Painting Credit: Yiries Saad

 

கவிதையும் கவிதையும் – 5

கமலா தாஸ் கவிதை

Image

சிறைக்கைதி

கைதி

அவனுடைய சிறையின்

புவியியலைப் படிப்பதைப்போல்

நான் படிக்கிறேன்

உனது தேகத்தின் ஆபரணங்களை என் அன்பே

ஒருநாள் எப்படியும் கண்டுபிடிப்பேன்

அதன் பொறியிலிருந்து தப்பிக்க

தமிழாக்கம்: மதுமிதா

Image

மதுமிதா கவிதை

Image

ஒற்றைச் சாளரமும் மூடிக்கொண்ட பொழுது

எல்லா கதவுகளும்
அடைக்கப்பட்டு மூச்சுமுட்ட
அடைபட்டுக் கிடந்த பொழுது

திறந்த ஒற்றைச் சாளரமும்
திறந்தது மூடிக்கொள்ளவே என
சாத்திக்கொண்ட  பொழுது

சாளரம் வழி கண்ட
புது உலகின்
காட்சியும் கானமும்
நினைந்து நினைந்து
கடைசி மூச்சாய்
பிடித்துக் கொண்டு
கரைசேர்ந்திடும் துடிப்பில்
உயிர் துடிதுடித்துக் கிடக்கும்

தப்பித்துவிடும் துடிப்பில்
கதவின் இடுக்கில் அகப்பட்டு
நைந்து போன
கரப்பான் பூச்சியின் தவிப்பாய்

Image

கவிதையும் கவிதையும் – 4

கமலா தாஸ் கவிதை

Image

காதல்

உன்னைக் காணும்வரை

நான் கவிதை எழுதினேன்

படங்கள் வரைந்தேன்

தோழிகளுடன் வெளியே நடக்கச் சென்றேன்

இப்போது உன்னை நேசிப்பதால்

சாமான்ய நாயைப்போல்

சுற்றிச் சுற்றிக் கிடப்பதால்

என் வாழ்க்கை கிடக்கிறது

உன்னுள் திருப்தியுடன்

தமிழாக்கம்: மதுமிதா

Image

painting credit: Ruth Batke Art Abstract art Emotions: Love

மதுமிதா கவிதை

Image

ஆதிமனுஷ வேட்கை

எதனாலும் நிறுத்த இயலாது

சுழலாய்ச் சுழித்துக் கொண்டு

பொங்கிப் பெருகி ஓடியது ஆறு.

எங்கும் பரவியது நீரின் குளுமை

மணலில் பதிந்த தொடர் பாதச் சுவடுகள்

கரையில் சற்றே தள்ளியிருக்கும்

மறைவிடம் நோக்கி நகர்ந்தன.

கானமிசைக்க மறந்து

கண்பொத்தி மறைந்தன ககனப்பறவைகள்.

வானமே கூரை

மேகமே ஆடை

காற்றே அரண்

இணைபிரியவியலா ஆதிமனுஷ வேட்கை.

மண் வாசனை எழ மழை பொழிய

நீரில் இறங்கி ஆடின

இன்னுமொருமுறை

இரு இணை மீன்கள்.

எதனாலும் நிறுத்த இயலாது

சுழலாய்ச் சுழித்துக் கொண்டு

பொங்கிப் பெருகி ஓடுகிறது ஆறு.

Image

photo credit: firewaterphotography

கவிதையும் கவிதையும் – 3

கமலா தாஸ் கவிதை

Image

புழுக்கள்

அந்திப்பொழுதில்

ஏரிக்கரையில்

காதல் புரிந்த கண்ணன்

அவளைக் கடைசியாய்ப் பிரிந்து சென்றான்.

 செத்தவள் போல் கிடந்தாள் ராதா

அன்றைய இரவு கணவனின் கரங்களில்.

அவன் கேட்டான்

என்ன தவறானது

எனது முத்தத்தில் மனம் இல்லையா அன்பே?

 அவள் சொன்னாள்

இல்லை. அப்படி எதுவும் இல்லை.

ஒரு எண்ணத்தைத் தவிர

புழுக்கள் கடித்தால்

பிணத்துக்கு என்ன?

தமிழாக்கம்: மதுமிதா

Image

மதுமிதா கவிதை

Image

இலக்கு நோக்கி

இந்தப் பிணைப்பு வேண்டாம்

இனியும் பாதுகாப்பு வேண்டாம்

அகண்ட வானில்

அந்தப் பறவை போல் மிதந்து

இறகசைத்து

லட்சியத்திற்காக பறக்க வேண்டும்

காற்றுப் பெருவெளியில்

இலக்கு நோக்கி

Image

கவிதையும் கவிதையும் – 2

கமலா தாஸ் கவிதை

Image

கிருஷ்ணா

உன்னுடைய உடல்
என்னுடைய சிறை கிருஷ்ணா
அதைக் கடந்து என்னால் பார்க்க முடியவில்லை
உன்னுடைய கருமை
எனது பார்வையை
இழக்கச் செய்கிறது
உன்னுடைய அன்பான வார்த்தைகள்
அறிவுலகத்தின் இரைச்சலை
நிறுத்தச் செய்கிறது

Image

painting credit: vishalmisra

தமிழாக்கம்: மதுமிதா

மதுமிதா கவிதை 
Image

விதியின் கைகளின் வழியே

ஒரே மேடை
ஒளியாகவும் இருளாகவும்

உன்னை என்னில் விதைத்து
என்னை உன்னில் விலக்கி வைத்து
என்னில் உன்னை பிணைத்து
உன்னில் என்னை பிணங்கச் செய்து

ஆட்டுவிக்கும்
விதியின் கைகளின் வழியே
வழியும் நூலில்
கட்டுண்டிருக்கிறோம்
விளையாட்டு பொம்மைகளாய்

Image

 

மேலும் படிக்க…

கவிதையும் கவிதையும் – 1